Tuesday, November 15, 2011

சலாம் போடும் கலாம் தாத்தா காண சொல்லும் கனவு !!!!




அன்புள்ள கலாம் தாத்தாவிற்க்கு, 

இடிந்தகரை சார்ந்த சுள்ளான் எழுதுவது. நான் வளர்ந்து பெரியவனாகி ஒரு விஞ்ஞானி ஆக ஆசை படுகிறேன், தாங்கள் சொன்னது போலவே கனவும் காண்கிறேன், ஆனால் அது மெய்ப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இப்பொழுது சிறிதளவும் இல்லை. 

கடலில் மீன் பிடிக்க அப்பா செல்லும்போது, நானும் அம்மாவும் கரையில் அமர்ந்து கடலின் நீல நிறத்தில் சூரிய கதிர் பட்டு எழும் வெள்ளி அலைகளை ரசித்திருப்போம். படகு திரும்பி வரும் சத்தம் கேட்டதும், என் தாய் கண்களில் ஒரு சந்தோஷ களை பீரிட்டு வெளிப்படும், மனதில் மீன்களை எப்படி விற்கலாம்? வீட்டிற்கும் எனக்கும் என்ன என்ன வாங்கலாம் என்று எண்ணி கொண்டே அவள் நடை போடுவாள். 

இப்படி இருந்த துள்ளி விளையாடி திரியும் எம் போன்ற சுள்ளான்களை ஒரு நாள் தீடிரென ஓடச் சொன்னார்கள், அணு உலை வர இருக்கிறதாம், அதிலிருந்து முதல் முறை அபாய மணி அடித்தால் பக்கதில் எந்த வீடு இருக்கிறதோ அதில் நுழைய வேண்டுமாம், இரண்டாவது மணிக்கு ஈர துண்டை மூக்கில் கட்ட வேண்டுமாம், மூன்றாவது அபாய மணி அடிக்கையில் நாங்கள் கிராமத்தை விட்டே ஓடிப்போய் விட வேண்டுமாம். 


இந்த செய்முறை விளக்கத்தின் போது எனக்கு மனதில் சாவு மணி அடிப்பது போல் பயம் வருகிறது தாத்தா. அத்தகைய அணு உலையை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் ஓப்பியது? 

கல்லணை இடிஞ்சா அப்பொழுது ஏற்படும் வெள்ளத்தில் மாட்டிக்கொள்ளும் மக்களுக்கு மட்டும் தான் பாதிப்பு ஆனால் அணு உலை வெடிச்சா பல வருடங்கள் பின்னால் வரும் சந்ததிக்கும் பாதிப்பு. இது தங்களுக்கு தெரியும் தானே கலாம் தாத்தா???

தஞ்சாவூர் கோயில் இடிய வேண்டாம் கலாம் தாத்தா, காளகஸ்தி கோயில் கோபுரம் இடிந்தது அது போதும், அதில் செத்தது இரண்டு குரங்கு தான் ஆனால் நீங்க நல்லதுனு சொல்லுற அணு உலை வெடிச்சா ஏன் கொள்ளு பேரன் வரைக்கும் பாதிக்கப்படுவானே என்ன செய்யலாம் கலாம் தாத்தா???

1983ல் இருந்து 2002 வரை பத்தொன்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டை சேர்ந்த 112 மீனவர்கள் தான் கொல்லப்பட்டார்கள் ஆனால் நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற 2002 க்கு பிறகு இன்று வரை ஒன்பது ஆண்டுகளில் 432 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் ஜனாதிபதி என்பது முப்படைகளின் தளபதி என்று சொல்வார்கள். ஆனால் அடுத்த நாட்டு இராணுவத்திடம் இருந்து உங்கள் சொந்த மாநிலத்து மக்களை கூட காப்பாற்ற நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபொழுது எதுவும் செய்யவில்லை. இதில் இந்தியாவின் வருங்காலத்தை பற்றி எப்படி வல்லரசு கனவு காண்கிறீர்கள். 


கனவு காண சொன்னது எங்களை ஒரேடியாக உறக்கத்தில் ஆழ்த்தத்தானா??

இளைஞர்களை கிராமங்களுக்கு போக சொன்னது இது போன்ற விஷமகரமான தொழில்நுட்பத்தால் எங்களின் வாழ்வாதாரங்களை சிதைபதற்கா??? 

நீங்கள் காணும் கனவில் நாங்கள் எல்லோரும் ஊனமாகவும், முடமாகவும், பார்வையற்றவர்களாகவும், புற்று நோயாளிகளாகவும் தெரிகிறோமா என்ன??? 

நானும் ஒரு நாள் விஞ்ஞானி ஆவேன். மக்களின் உயிருக்கு மதிப்பு கொடுக்கும், வாழ்கை தரத்தை மேம்படுத்தும், துன்பம் தராத தொழில் நுட்ப முறையை கண்டு பிடிப்பேன்!!!! உங்களை போல் மக்களை பாதிக்கும் ஏவுகணையும், அணுகுண்டும் வெடிக்க மாட்டேன்..

அரசியல் சாத்தான் சொன்ன படி சலாம் போடாத கலாமாகி காட்டுவேன். 

தயவு செய்து எங்கள் கனவு மெய்பட எங்களை உயிர் வாழ விடுங்கள்!!!!

இப்படிக்கு 
இடிந்தகரை சுள்ளான்..

நன்றி - பார்கவி தீலிப்குமர்...

Monday, August 8, 2011

பேட்டரி வாங்கினால் தூக்கு தண்டனை இலவசம்

இன்றைய இலவச கலாச்சாரத்தில் அது வாங்கினால் இது இலவசம், இது வாங்கினால் அது இலவசம் என்பது போல். 1991ல் பேட்டரி வாங்கினால் தூக்கு தண்டனை இலவசம் என்று இந்திய தண்டனைச் சட்டம் சொல்லி இருக்கிறது.. 



1991ல் திரும்பெரும்புதூரில் ஒரு வெடிகுண்டு வெடித்தது அப்பொழுது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் முதற்கொண்டு 18 பேர் மரணமடைந்தார்கள். இந்த வழக்கை மத்திய குற்றப்புலாணாய்வு அமைப்பு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது, இதன் தலைவராக கார்த்திகேயன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் அப்பொழுது ஐதராபாத்தில் இருந்தார். விசாரனைகுழுவிற்கான தலைவர் பொறுப்பை டெல்லி சென்று ஏற்றுக்கொண்டார். அதை பற்றி 1999ல் Rediff.com எனும் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்த கருத்து

""In fact, let me tell you that when I was asked by the (Union) government to take on the investigation on May 22, 1991 (the day after Gandhi's assassination), I was heading the Central Reserve Police Force in Hyderabad. As I was flying from Hyderabad to Delhi, there was only one thought in my mind, that please, let it not be the LTTE. Because, I had dealt with them before, and I knew how difficult it would be to catch any suspects alive."" 

தலைமை பொறுப்பை ஏற்கும் முன்பே அவர் முடிவு செய்துவிட்டார் இது LTTE செய்த ஒரு செயலாக இருக்க கூடாது என்று.. ஏன் என்றால் அவர்களாக இருந்தால் குற்றவாளிகளை உயிருடன் பிடிக்க முடியாது என்பதால்.. இத்துடன் முடிக்கவில்லை 





""But when I reached the scene at Sriperumbudur, I realised fairly soon that it was in fact the LTTE that had killed Rajiv, and at the end of my investigations, I also concluded that it was only the LTTE and nobody else that was involved.""

இவர் வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்த்தவுடன் முடிவு செய்துவிட்டார் இந்த கொலை விடுதலைபுலிகள் செய்தது தான் என்று. எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் இவர். ஒரு விசாரணை அதிகாரி சாட்சியங்கள் அனைத்தையும் விசாரிக்காமல் ஒரு இடத்தை பார்த்தவுடன் இப்படி முடிவெடுக்க காரணம் என்ன. அதற்கு முன்பாக எத்தனை வெடிகுண்டு தாக்குதல்களை புலிகள் நடத்தியிருக்கிறார்கள் அதை எல்லாம் இவர்தான் விசாரித்தாரா.. ஏன் இந்தியாவில் இல்லை தமிழகத்தில் முதன் முதலாக ஒரு அரசியல் மேடையில் வெடிகுண்டு வெடிப்பது என்பது அது தான் முதல் முறை. அப்படி இருக்கும் பொழுது புலிகள் என்னவோ தமிழகத்தில் வாரம் ஒரு குண்டு வெடித்தது போலவும் அதை பார்த்து இருந்ததால் இந்த வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்த்தவுடன் இவர் புலிகள் தான் இதை செய்திருப்பார்கள் என்று முடிவெடுத்தது போலவும் இருக்கிறது இவரின் முடிவெடுக்கும் திறமை.

இங்கு ஆரம்பிக்கிறது கதாசிரியர் கார்த்திகேயனின் திரைக்கதை எழுதும் பணி இந்த பணியில் திறம்பட செயல்படுவதாக நினைத்து, நமது தமிழ்பட திரைகதை ஆசிரியர்கள் போல் ஏகப்பட்ட ஓட்டைகளை விட்டிருக்கிறார். இதை புரிந்து கொள்ள பேரறிவாளன் விசயத்தில் இவர் எழுதிய திரைகதையில் அறிந்து கொள்ளலாம். கதாசிரியராக மே 22ம் தேதி பொறுப்பெற்றுக்கொண்ட இவர் விசாரணையின் கீழ்நடவடிக்கையாக ஜூன் 14ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் நளினியும் அவரது கணவர் முருகனும் கைது செய்யப்பட்டனர். அதே நாளில் பேரறிவாளனும் கைது செய்யப்பட்டதாக சிபிஐயின் தகவல் தெரிவிக்கிறது. 


ஆனால் சூன் 10ம் தேதி ஜோலார்பேட்டையில் விசாரணை என்ற பெயரில் தமிழீழ ஆதரவாளர்கள், திராவிட கழகத்தவர்கள் வீடுகளில் ஏறி இறங்கியவர்கள் பேரறிவாளனின் வீட்டிற்கும் சென்று வந்திருக்கின்றனர். அப்பொழுது அவரின் தந்தை மற்றும் தாய் மூலமாக இவர் பெரியார் திடலில் கணீணி பிரிவில் வேலை செய்வதையும் அங்கு தங்கியிருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு அவரது பெற்றோரையும் அழைத்துக்கொண்டு சென்னை வந்தவர்கள் சூன் 11 அன்று இரவு 10.30க்கு விசாரணைக்கு அழைத்து செல்கிறோம் என்ற பெயரில் திராவிடர் திடலில் இருந்து அழைத்து சென்று இருக்கிறார்கள். 






அதன் பிறகு சட்ட விரோதமாக 14ம் தேதி வரை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக 26 பேரை அறிவிக்கிறார்கள். ஆனால் காவலறிக்கையில் 19.06.1991 அன்று பேரறிவாளனை கைது செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் பேரறிவாளன் அவர்களிடம் வாங்கிய வாக்குமூலம் 18.06.1991 என்று கூறப்படுகிறது. 19ம் தேதி கைது செய்தவரிடம் 18ம் தேதி எப்படி வாக்குமூலம் பெற்றார்கள் என்பது தெரியவில்லை. மேலும் ஒட்டுமொத்தமாக 26பேரை கைது செய்ததாக் 14ம் தேதி என்று குறிப்பிடுகிறார்கள். 11ம் தேதி இரவு கைது செய்தப்பட்ட பொழுது கூடவே பேரறிவாளனின் தாயாரும் தந்தையும் இருந்து இருக்கின்றனர். பெரியார் திடலிலும் ஆப்பொழுது நிறைய பேர் அங்கு இருந்து இருக்கின்றனர். இப்படி ஏகப்பட்ட ஓட்டைகளுடன் ஒரு வாக்குமூலம். 


காவல் துறையினர் ஒருவரை கைது செய்தால் அவரை நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் ஆனால் தடா சட்டத்தின் கீழ் செய்யப்பட்டவர்களுக்கு இந்த விதிமுறை கிடையாது.அதே போல் அனைவரையும் 60 நாட்கள் தடா சட்டத்தில் வைத்திருந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 17 பேர் விசாரணை முடியும் ஒரு நாளுக்கு முன்பாகதான் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். நடுவில் ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவல் நீடிப்பு எனும் நாடகம் நடத்தப்பட்டது . கார்த்திகேயனுக்கு தேவைப்பட்டது திரைகதையை வடிவமைக்க கால அவகாசம் தான் அந்த அறுபது நாட்கள். எனென்றால் அவரின் கூற்றுப்படி இது புலிகளின் செயல், அப்படி புலிகளாக இருக்கும் பொருட்டு இந்த செயலை செய்தவர்களை உயிருடன் பிடிக்க முடியாது என்பதும் தெரியும் அவருக்கு, அவ்வாறு நடந்து ஒரு குற்றவாளியை கூட நாட்டிற்கு அடையாளம் காட்டமுடியாமல் போய்விட்டால் இந்தியாவின் புலாணாய்வு திறமைக்கு பெருத்த அவமானமாக போய்விடுமே எனவே தான் இந்த முன்னெடுப்புகள் அனைத்தும் கிடைத்த அப்பாவிகளை குற்றவாளிகளாக மாற்றி தண்டனை வாங்கி கொடுத்தால் இந்தியாவின் காவல் துறையை ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு நிகராக கூறுவதை நிருபித்துவிடலாமே.


நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளி தான் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தை மறுக்கலாம். இதை பல வழக்குகளில் பார்த்து வருகிறோம், இப்பொழுது கூட தில்ஷான் வழக்கில் ராமராஜ் தான் கொடுத்த வாக்குமூலத்தை மறுத்துள்ளார். இது குற்றவாளியிடம் காவல்துறையினர் பலவந்த படுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் நடைமுறையில் உள்ள ஒரு விதிமுறை. ஆனால் இந்த ராஜிவ் வழக்கு தடா சட்டத்தின் கீழாக போடப்பட்டதால் அவ்வாறு மறுக்க இயலாது இதற்கென தனியாக மனு செய்து மறுக்க வேண்டும். அப்படி இரண்டு முறை காவல்துறையினர் பலவந்தபடுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி வாக்குமூலம் வாங்கினார்கள் என்று 11.2.1992 மற்றும் 26.8..1992 ஆகிய தேதிகளில் மனுக்களாகவும், சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசனிடம் குறுக்கு விசாரணை செய்யும் பொழுதும். 313 குற்றவியல் நடைமுறைச்சட்டம். கேள்விகளின் போதும் எவ்வாறு துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர் எனபதை சொல்லியுள்ள போதும். நீதிபதி வாத்வா உடபட மூன்று பேர் பெஞ்சின் தீர்ப்பில் இவ்வாறு எந்த குற்றவாளியும் வாக்குமூலத்தை மறுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எந்த உலக நீதிமன்றத்திலும் இல்லாத 26 பேருக்கு ஒட்டுமொத்தமாக தூக்கு என்று சிறப்பு தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நல்லவேளை இந்த தீர்ப்பு மட்டும் அமுல் படுத்தப்பட்டிருந்தால் அது இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்ற படுகொலையாக கருத்தப்பட்டிருக்கும். 


இதன் பிறகு இப்படி திரைகதை எழுதபட்டு வரலாறு காணத 26 பேருக்கு தூக்கு எனும் தீர்ப்பு வழங்கப்பட்டபின் இந்த தீர்ப்பு தடா நீதிமன்றத்தால்  வழங்கப்பட்டதால், இதை மேல் முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் செல்ல முடியாமல் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அங்கு எழுதப்பட்ட திரைகதையில் ஓட்டைகளை பார்த்தார்களா என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 19பேரை விடுவித்து அதாவது தூக்கு தண்டனை மட்டும் அல்ல ஒட்டுமொத்தமாக அவர்களுக்கும் குற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று விடுவித்தனர். அதாவது 26 பேர் குற்றம் சாட்டப்பட்டு அதில் 19 பேர் குற்றவாளிகள் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். ஒரு நீதிமன்றத்தில் 26 பேர் குற்றவாளிகள் என்று தண்டனை விதிக்கப்பட்டு அதுவும் ஒரே வழக்கில் மட்டும் தண்டனை பெற்றவர்களில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றால் அந்த வழக்கு எந்த அளவிற்கு பொய்யாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் 7 பேரின் தண்டனை உறுதி செய்யப்பட்டது அதுவும் 4 பேருக்கு தூக்கு மூவருக்கு ஆயுள் தண்டனை என்று. ஒரு திரைக்கதையில் எத்தனை எத்தனை ஓட்டைகள் என்பது போல் அத்தனை ஓட்டைகள் இந்த வழக்கில்.. இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக வழக்கின் ஓட்டைகள். 


பேரறிவாளன் 19 வயதில் பட்டயபடிப்பை முடித்த ஒரு இளைஞன் அதுவரை காவல்நிலைய அலுவலகத்திற்கு தனது சைக்கிள் தொலைந்து போய்விட்டது என்று கூட புகார் கொடுக்க கூட செல்லாத ஒரு இளைஞனை கைது செய்து அவரின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக மாற்றி இவ்வழக்கில் ஒரு குற்றவாளியாக மாற்றியிருக்கின்றனர். அதுவும் ஒரு பேட்டரி வாங்கியதற்காக ஒருவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது. அதுவும் அவர் பட்டய படிப்பில் மின்னணுவியலை ஒரு பாடமாக எடுத்து படித்தார் என்பதற்காக வெடிகுண்டு தயாரிப்பில் அவர் உதவியிருக்கிறார் என்று திரைகதை எழுதி அதற்கு வசனமாக இவரிடம் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அதுவும் கையெழுத்து போடாவிட்டால் தப்பி செல்ல முயன்று சுட்டு கொன்றதாக கதை கட்டுவோம் எனவே கையெழுத்து போடு என்று கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டு கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அந்த வாக்குமூலத்தை மறுத்து நீதிமன்றத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டாலும் அதையும் மறைத்து தூக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார் திரைகதை வசன கர்த்தா கார்த்திகேயன்.

அந்த திரைகதையிலும் பெரிய ஓட்டை இவர் பேட்டரி வாங்கியதாகவும் அதற்கான ரசீதை பேரறிவாளனிடம் இருந்து கைப்பற்றியதாகவும் கதை எழுதியுள்ளார்கள். எந்த கடையில் பேட்டரி வாங்கியதற்கு ரசீது கொடுக்கிறார்கள் என்று சொன்னால் நாமும் சென்று வாங்கி வருமானவரி கணக்கில் சமர்ப்பிக்கலாம். சரி அந்த ரசீதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் பேட்டரிக்கு இத்தனை காலம் உத்தரவாதம் அது வரை அதில் பிரச்சனை வந்தால் மாற்றி தருவோம் என்பதற்கா அந்த ரசீது. அப்படி ஒரு உத்தரவாதத்துடன் எங்குமே பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்கள் பேட்டரி விற்பதில்லை (வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கு உத்தரவாதம் உண்டு, ஆனால் அதை இடுப்பில் கட்டும் வெடிகுண்டுக்கு பயன் படுத்த முடியுமா??) அப்புறம் எதற்கு ரசீது. இந்த ரசீது மே மாதம் முதல் வாரத்தில் வாங்கியதாகவும் அதை பேரறிவாளன் அவருடைய வாக்குமூலத்தில் மே முதல் வாரமே வாங்கியதாக ஒப்புகொண்டுள்ளதாகவும் காட்டுகிறார்கள் திரைகதையில். ஆனால் பேட்டரியை விற்ற கடைக்காரர் அவரது சாட்சி வாக்குமூலத்தில் மே மாதம் இரண்டாம் வாரம் வாங்கியதாக சாட்சியம் அளித்துள்ளார். அது எப்படி ரசீது போட்டவர் அதன் நகல் அவரிடம் இல்லையா, மே மாதம் முதல் வார வாங்கியதை இரண்டாம் வாரம் என்று சொன்னார் நகலை சரியாக பார்க்கவில்லையா. நீதிமன்றங்களும் ஏன் இந்த வித்தியாசத்தை பார்க்கவில்லை.

அப்படியே பேரறிவாளன் பேட்டரி வாங்கி கொடுத்தார் என்று எடுத்துக்கொண்டால் கூட. ஒரு கொலையில் நேரடியாக பங்கு பெற்றவருக்கு தூக்கு என்றால் கூட பரவாயில்லை. கொலை குற்றம் நடக்க காரணமாக இருந்த வெடிகுண்டிற்கான பேட்டரி வாங்கி கொடுத்தார் இவருக்கு பேட்டரி வாங்கி கொடுக்கும் பொழுதே இப்படி ஒரு குற்றம் நடக்க போகிறது என்று தெரியுமா என்ன. அதற்கு வழிவகை இல்லாமல் செய்துள்ளனர் விசாரணையில் இந்த கொலை பற்றிய விவரம் சிவராசன் எழுதிய ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்ததாகவும் அதில் இந்த சதியை பற்றி மொத்தமே 3 பேருக்கு தான் தெரியும் அவர்கள் சிவராசன், தனு மற்றும் சுபா என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மூவருமே உயிருடன் இல்லை எனவே அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது எனும் பொழுது எப்படி இவர்களுக்கு தெரிந்து இருக்கும். ஒரு கொலை சதியில் நேரடியாக பங்கு எதுவும் இல்லாதவர்களுக்குமா தூக்கு தண்டனை.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இந்த கொலை குற்றத்தில் இருக்கும் ஓட்டைகளை.. இல்லை இல்லை இந்த திரைகதையில் வசனகர்த்தா கார்த்திகேயன் சரியான அனுபவம் இல்லாததால் விட்ட ஓட்டைகளை.. ஆனால் நாம் எல்லாம் இனிமேல் சிறிது எச்சரிக்கை உணர்வுடனே இருக்க வேண்டும் வீட்டில் இருக்கு டார்ச் லைட்டுக்கு பேட்டரி வாங்குவதாக இருந்தால் கூட ரசீது மற்றும் அதில் இருக்கும் குறியீட்டு எண்ணை குறிப்பிட்டு வாங்க வேண்டும் இல்லாவிடில் நமக்கும் இலவசமாக தூக்கு தண்டனை வழங்கிவிடுவார்கள் இந்திய நீதிமான்கள்..


http://perarivalan.blogspot.com/



Wednesday, August 3, 2011

இனப்படுகொலையும் இந்தியாவும் - போபால்


ராஜிவ் காந்தி என்பவர் ரத்தமும் சதையுமாக பிறந்த ஒரு மனிதன் என்றாலும் பதவிக்கு வந்ததில் இருந்து ரத்தத்தை குடித்த ஒரு ரத்த காட்டேரி என்றே சொல்லலாம். ஆம் பதவிக்கு வந்த முதல் மூன்று நாட்களில் 4000த்துக்கும் மேலான சீக்கியர்களின் ரத்தத்தை குடித்த இவர். அடுத்த ஒரு மாதத்தில் டிசம்பர் 2ம் தேதி போபாலில் பல்லாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தை குடித்தான்.. 

போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த கோரம் ஒரு விபத்து என்றாலும் அதன் பிறகு அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் தண்டனைகள் என்ற பெயரில் கண்துடைப்பாக தப்பிக்க காரணமாக இருந்தவன் இந்த ரத்தகாட்டேரி ராஜிவ். அதுவும் பதவிக்கு வந்த 32ம் நாளே இவனது இரத்த பசியை போக்கும் வகையில் அமைந்தது போபால் விவகாரம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முதலாளி வாரன் ஆண்டர்சன் விபத்து நடந்தபிறகு இந்தியாவிற்கு வந்து மத்தியபிரதேசத்தில் போபாலுக்கும் சென்று தனது நிறுவனத்தை பார்வையிட்டான். அப்படி பார்வையிட வந்த பொழுது இந்தியா இவனை சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்றது, தன் நாட்டு மக்கள் 20000 பேர் இறப்பதற்கு காரணமானவனை வரவேற்று உபசரித்து திரும்பவும் அமெரிக்கா அனுப்பி வைத்தது.

இந்த விபத்தினால் பழியானவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நிறுவனத்தின் தலைவர் மீது எந்த விதமான சட்ட முறையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வளவு ஆபத்தான ஒரு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவி அதன் மூலம் உற்பத்தி செய்து சம்பாதித்தவன் மிகவும் அழகாக எதோ ஒரு இழவு வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு செல்வது போல் வந்து சென்றான். இந்த விபத்திற்கு பலகாரணங்கள் சொல்லப்பட்டன ஏன் வேலை பார்த்த சாதரண சுத்தம் செய்யும் தொழிலாளி அஜாக்கிரதையாக தண்ணீரை உபயோகித்ததால் அங்கிருந்த வேதிபொருள் சேகரிப்பு தொட்டியில் தண்ணீர் புகுந்து விபத்து ஏற்பட்டது என்று கூட சொன்னார்கள். 

இந்திய அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைப்படி நான்கு காரணங்களை பட்டியலிட்டது.

* அறிவுறுத்தப்பட்ட அளவிற்கு அதிகமாக வேதியல் பொருளை சேர்த்து வைத்திருந்தனர். 
*  மிகவும் மோசமான பராமரிப்பு
* பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வேலை செய்யவில்லை சரியாக பராமரிக்காததால்.
* பாதுகாப்பு உபகரணங்கள் அணைத்துவைக்கப்பட்டன மின்சார செலவை குறைப்பதற்காக. 

இந்த நான்கு காரணங்களும் நமக்கு உணர்த்துவது நிறுவனத்தின் லாபநோக்குடன் இவைகளுக்கு ஆகும் செலவுகளுக்காக இந்த அத்தியாவசிய தேவைகளை கவனிக்காமல் விட்டிருக்கின்றனர். இப்படி மிச்சப்படுத்துகிறேன் என்று வேதியல் பொருள் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு கொள்கலனை குளிர்விக்கும் குளிர்சாதனத்தைக்கூட நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதனாலேயே வெப்ப நிலை அதிகமாகி வேதிப்பொருள் காற்றுடன் கலந்து மிகப்பெரிய ஒரு படுகொலையை நடத்தியது. ஆனால் ரத்தகாட்டேறி ராஜிவ் காந்தியின் அரசு இந்நிறுவனத்தை இங்கு நடத்தி லாபத்தை சம்பாதித்து கொளுத்த பணமுதலையை ரத்தின கம்பளம் விரித்து அவன் நாட்டுக்கு தப்பித்து செல்ல அனுமதித்தான். 


இப்படி தன் நாட்டுமக்கள் பல்லாயிரக் கணக்காணோர் மரணம் அடைந்தும் நிரந்தரமான ஊணமாக்கப்பட்டும், ஏன் இன்னும் சொல்லப்போனால் அதன் பிறகு பல வருடங்கள் இந்த நச்சுவாயுவின் பாதிப்பின் காரணமாக இறந்தவர்கள் கிட்டத்தட்ட 8000க்கும் அதிகமானவர்கள் என்று அரசு தகவலே கூறுகிறது. இப்படி அத்தியாவசிய பாதுகாப்பைக்கூட சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கவனிக்காமல் இருந்ததால் கிடைத்த லாபத்தை எல்லாம் சுருட்டிய அந்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய நிவாரணம் வெறும் 500$ தான். ஏன் அந்த நிறுவனத்தில் மேலாண்மையில் இருந்த இந்தியர்களுக்கு கூட கிடைத்த தண்டனை 2 வருடம் அதுவும் 2006ம் வருடம். இடைப்பட்ட காலத்தில் விசாரணைக்காக இவர்களை சிறையில் வைத்திருந்த காலம் போக ஒரு மாதம் கூட இவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்காமல் விடுதலை செய்யப்பட்டனர். 

1984ல் நடந்த விபத்திற்கு 2006ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, தமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதி தான். இப்படி தன் நாட்டுமக்களின் நலன்களை வெளிநாட்டு முதலாளிக்கு அடகுவைத்தவனை தான் நாம் இன்று நவீன இந்தியாவை நிர்மாணித்தாவன் என்கிறோம்.. 


இத்துடன் இவனது ரத்த வேட்கை குறைந்ததா என்றால் இல்லை மேலும் தொடர்ந்தது இந்த ரத்தகாட்டேரி உயிருடன் இருந்த வரை.. அடுத்து அவைகளைப் பற்றி பார்ப்போம்..

Friday, July 29, 2011

இனப்படுகொலையும் இந்தியாவும்

நாம் அனைவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு இனப்படுகொலைக்கு நியாயம் யாராவது வழங்க மாட்டார்களா என்று ஏங்கி நின்று கொண்டு இருக்கிறோம்.. இதில் சிலர் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கையுடன் கூடிய உறவை மாற்றிவிட்டால் அனைத்தும் நடந்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்.. சிலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைக்கு வாழ தேவையான ஒரு அரசியல் தீர்வை இந்தியா முயன்று கொண்டிருக்கிறது அது கிடைத்தாலே போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள். 

இதற்கு சாட்சியம் சொல்வது போல் சில அரசியல் கட்சிகள் தங்களது கட்சி தீர்மானத்தில் அரசியல் தீர்வை வழியுறுத்தி வருகின்றன. ஆனால் இவர்கள் அனைவருக்கும் தெரியாதது இல்லை இந்தியாவே ஒரு இனப்படுகொலை செய்த நாடு என்பது. அப்படி தெரிந்திருந்தும் இவர்கள் இப்படி ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள் ஏன் அவர்களின் வாழ்வாதரம் என்பது ஒன்றுபட்ட ஓர் இந்தியாவில் தான் இருக்கிறது பிரிந்து கிடக்கும் மக்களைக்கொண்டு பதவிகளை பிடித்து அதை வைத்து தனக்கும் தன் குடும்பத்திற்குமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது தான். இந்த கட்சிகள் அனைத்தும் பல வருடங்களாக இந்தியாவில் அரசியல் நடத்திக்கொண்டுள்ளன இவைகள் மக்களுக்கான ஓர் கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளன. ஆனால் இவைகள் எவையும் இந்தியாவில் நடந்த ஒரு இனப்படுகொலையையே தட்டி கேட்காதவை. மனிதம் என்பதை மீறி 5000க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்ட பொழுது வேடிக்கை பார்த்தனர், ஏன் இன்று வரை அந்த இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நியாயமும் கிடைக்காமல் இருப்பதையும் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும் கூட்டத்தினர்.




இந்த படங்கள் வேறு எங்கோ எடுக்கப்பட்டவை அல்ல இதே இந்தியாவில் தான் அதுவும் அதன் தலைநகரான டில்லியில் எடுக்கப்பட்டவை. இனப் படுகொலை நடந்து முடிந்த பிறகு இறந்தவர்களின் உடலுக்கு கிடைக்க வேண்டிய இறுதி மரியாதை கூட கிடைக்காமல் சாலையில் கிடந்த உடல்களை நாய்கள் உண்ணும் கேவலமும் நடந்தது. இது வேறு எப்போதோ நடந்தது அல்ல 1984ம் வருடம் இந்திராகாந்தியின் கொலைக்கு பிறகு நடந்த கோர தாண்டவமே.. 

1984ல் இந்திரா கொலை செய்யப்பட்டவுடன்.. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் சீக்கிய மதத்தை சார்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடிதனமான தாக்குதலில் 5000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் டில்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் பலர் நான்கு நாட்கள் தொடர்ந்து விரட்டிவிரட்டி கொல்லப்பட்டனர். இந்திரா இறந்த அன்று ராஜிவ் காந்தி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டிருந்தார், அங்கிருந்து திரும்பி டில்லி மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது வெளிநாடு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த ஜெயில் சிங் 5.30 மணிக்கு வந்தார். அவர் டில்லியில் AIIMS மருத்துவமனைக்கு வந்தபொழுது கற்களால் தாக்கப்பட்டது அவர் வந்த வாகனம். 



அதன்பிறகு ராஜிவ் பிரதமராக பதவியேற்றார் அன்று மாலையே. மாலை 5.30க்கு நாட்டின் ஜனாதிபதியின் வாகனத்தையே தாக்கிய கொலைவெறி காங்கிரஸ் கூட்டம் மருத்துவமனைக்கு அருகில் இருந்த பகுதிகளில் இருந்த சீக்கியர்களை தாக்கினர், அன்று இரவு முழுவதும் அங்காங்கே தாக்குதல்கள் நடந்தன. பிரதமராக பதவியேற்றவுடன் ராஜிவ் அளித்த பேட்டியில் இந்திராவின் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பேட்டி கொடுத்தார். அதை எடுத்து கொண்ட காங்கிரஸ் காட்டுமிராண்டி கூட்டம் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது.



நவம்பர் 1ம் தேதி காலை 9 மணிக்கு அலுவலகம் செல்வது போல் கொலைகள் தொடங்கியது. இம்முறை மிகவும் நேர்த்தியாக வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொண்டு தேடி தேடி சீக்கியர்களின் வீட்டிற்கு சென்று வெளியில் இழுத்துவந்து அடித்து, உயிருடன் எரித்து கொலை செய்தனர். ஏன் பஞ்சாப்பில் இருந்து வந்த ஒரு இரயிலில் 56 சீக்கியர்களின் உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இரயில்வே நிர்வாகம் பஞ்சாப்க்கான இரயிலகளை நிறுத்திவிட்டது. இது காங்கிரஸ் கலவரக்காரர்களுக்கு மேலும் வசதியாக போனது யாரும் டில்லியை விட்டு தப்பி செல்ல இயலாமல் சீக்கியர்கள் மாட்டிக்கொண்டனர். டில்லியில் ஒரு இடத்தில் மட்டும் 96 பேர் கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறை என்பது இருந்ததா என்ற சுவடே தெரியவில்லை.

நவம்பர் 2 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆனால் நடைமுறைப்படுத்த படவில்லை. இராணுவம் டில்லி முழுவதும் காவலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் இராணுவத்தினர்க்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இராணுவத்தினர் கலவரத்தை அடக்க சுடவேண்டும் என்றால் காவல்துறையினரோ அல்லது மாஜிஸ்ட்ரேட்டோ அனுமதி அளிக்கவேண்டும். அப்படி பட்ட அனுமதி எதுவும் இராணுவத்தினருக்கு வழங்கப்படவில்லை. இதை பயன்படுத்தி காங்கிரஸ் காட்டுமிராண்டி கும்பல் சீக்கியர்களை படுகொலை செய்தனர். அவர்கள் கடைகள் அலுவலகங்கள் வீடுகள் என்று அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது. 

நவம்பர் 3 இரவு வரையில் சீக்கியர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது இந்தியா முழுவதுமாக பரவலாக நடந்தது, டில்லியில் மட்டுமே 5000 பேர் இறந்திருப்பார்கள். இதன் பிறகே காவல்துறையும் இராணுவமும் இணைந்து கலவரத்தை அடக்கினார்கள். இப்படி 3 மூன்று நாட்கள் ஒரு பெரும் இனப்படுகொலை நடந்து முடிந்தது. ஆனால் இதன் பின்னால் இருந்தவர்கள் செய்த விசயங்கள் தான் மிகவும் கொடூரமானது. இதில் காங்கிரஸை சேர்ந்த பல தலைவர்கள் சம்பந்தபட்டிருந்தாலும் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. 



வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு சிலர் சீக்கியர்கள் இருக்கும் வீடுகளின் சுவற்றில் X குறியீடு இட்டு செல்வார்கள் அவர்கள் பின்னாலேயே ஒரு காங்கிரஸ் காட்டுமிராண்டி கும்பல் வந்து அந்த வீட்டில் இருப்பவர்களை தெருவில் இழுத்து போட்டு வெட்டி படுகொலை செய்தது. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இவை அனைத்தையும் தடுத்து காப்பாற்றவேண்டிய அரசு வேடிக்கை பார்த்தது. உச்ச நீதிமன்றம் " உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் 1984ல் நடந்த சீக்கிய இனத்தை அழிக்கும் கலவரத்தில் தலைநகரத்தின் காவல்துறையும் மாநில அரசு இயந்திரமும் உலகத்தின் முன்னால் நாம் தலைகுனிய வேண்டிய நிலையில் நிறுத்திவிட்டன" என்று சொல்லியது. 



1984க்கு பிறகு 27 வருடங்கள் கடந்துவிட்டது இந்த 27 வருடங்களில் இந்தியாவின் மக்களாட்சி இக்கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் காட்டுமிராண்டிகளை என்ன செய்தது. இதை விசாரிக்க இது வரை 10 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது.. 

மார்வா கமிஷன் 
மிஸ்ரா கமிஷன்
கபூர் மிட்டல் கமிட்டி
ஜெயின் பானர்ஜி கமிட்டி
பொட்டி ரோசா கமிட்டி
ஜெயின் அகர்வால் கமிட்டி
அஹுஜா கமிட்டி
தில்லான் கமிட்டி 
நரூலா கமிட்டி
நானாவதி கமிஷன் 

என்று 2005 வரை கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் விசாரணை மட்டுமே நடந்தது. 2007ல் நீதிமன்றத்தில் ஜகதீஸ் டைட்லர் மேல் இருந்த குற்றாசாட்டுகள் அனைத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டர். இதன்பிறகு 2009 தேர்தலின் போது இதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஸ் டைட்லர், சஜன் குமார் இவர்களுக்கு தேர்தலில் கொடுக்கப்பட்ட சீட்டு விளக்கிக் கொள்ளப்பட்டது மட்டுமே மிகப்பெரிய தண்டனையாக உள்ளது. அது கூட ராஜேஸ் டைட்லர் தானாகவே தேர்தலில் இருந்து விலகுவதாக சொன்னார். அதுவும் கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக. இது தான் ஒரு இனப்படுகொலைக்கு இந்தியா எனும் நாடு கொடுத்த மிகப்பெரிய தண்டனை.

இன்னும் கொடுமைகள் எல்லாம் உண்டு இந்த கலவரத்தில் எறிக்கப்பட்ட கடைகள் அலுவலகங்களுக்கு காப்பீடு கேட்டபொழுது காப்பீடு கிடையாது. எனென்றால் கலவரத்தினால் எரிக்கப்பட்டால் காப்பீடு கிடையாது. தீவிபத்திற்கு மட்டும் தான் காப்பீடு என்று சொன்னது நிறுவனங்கள். சீக்கிய மக்கள் அரசிடம் இதை கொண்டு சென்றனர், அவர்களை கொன்றழிக்க நினைத்த இந்திய அரசா இதற்கு செவிமடுக்க போகிறது அவர்களும் காப்பீடு இல்லை என்று சொல்லிவிட்டனர்.

(நன்றி தமிழ்குரல்)
இப்படி உயிர் உடமை என்று இழந்தது மட்டும் போதாது என்று இது வரை நாட்டுக்காக இராணுவம், காவல்துறை என்று பல சேவைகளை செய்த இனமான சீக்கிய இனத்தின் இந்த இனப்படுகொலைகள் நடந்து முடிந்த 16ம் நாள் வந்த நவம்பர் 19ம் தேதி இந்திராவின் பிறந்தநாளிற்காக டில்லி போட் கிளப் சாலையில் நடந்த ஊர்வலத்தில்

"Some riots took place in the country follwing the murder of Indiraji. We know the people were very angry and for few days it seemed that India had been shaken. But, when a mighty tree falls, it is only natural that the earth around it does shake a little."

"ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்"

இப்படி தன் நாட்டு மக்களின் மரணம் ஒரு நில அதிர்வு என்று கேவலமாக சித்தரித்தார் ஒரு பிரதமர். இதை விட பெரிய அடி அந்த சீக்கிய மக்களுக்கு வேறு என்ன இருக்க முடியும்.. மேலும் இந்த இனப்படுகொலையை இந்து மக்களுக்கும் சீக்கிய மக்களுக்கும் இடையில் நடந்த கலவரங்களாக சித்தரித்துவிட்டனர். எங்கும் காங்கிரஸ் காட்டுமிராண்டி கும்பலின் பெயரை சொல்லாமல் எதோ ஒரு இந்துமத தலைவர் மரணத்திற்காக சீக்கிய மக்களை கொன்றது போல் சித்தரித்துள்ளனர் அனைத்து அரசாங்க ஆவனங்களிலும்.



இப்படிப்பட்ட உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நடக்கும் நாட்டிடம் தான் இன்று சிலர் கையேந்தி நிற்கிறார்கள், எங்கள் இனத்திற்கு கொடுமை இழைக்கப்பட்டுவிட்டது அதற்கு நியாயம் தாருங்கள் என்று.

Friday, July 15, 2011

நிலா அம்மா - சூன் 26



சூன் 26 மெழுகுதிரி ஏந்தும் நினைவேந்தல் நிகழ்வை முடிவு செய்து அனைவரும் அவர்களுக்கு தெரிந்த இயக்கங்களை தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவையும் பங்களிப்பையும் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து தோழர்களும் அவர்களுக்கு தெரிந்த அமைப்புகளையும் தனிபட்ட மக்களையும் தொடர்பு கொண்டு நிகழ்வை பற்றியும் அதன் தேவையையும் உணர்த்தினோம். அப்படி தோழர் ராசராசன் அவருக்கு தெரிந்த ஊழலுக்கு எதிரான ஒர் அமைப்பான ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பில் இருந்த நிலா அம்மாவை தொடர்பு கொண்டார். அவர் ஆதரவை மட்டுமல்ல அவரும் எங்களுடன் சேர்ந்து களப்பணியில் பங்கு கொண்டார். 

இங்கு 20 இளைஞர்கள் சேர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவர் கொடுக்கும் யோசனையை செயல்படுத்திக் கொண்டிருந்தோம். அப்படி பின்பற்றிய வழிகளில் எந்தளவு நம்முடைய நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப்போகிறது என்பது தெரியாமலேயே.  அந்த சமயத்தில் தான் நிலா அம்மா எங்களுடன் கைகோர்த்தார் அவர் எங்களின் தாயரின் வயதினர் என்றாலும் ஒரு சக தோழி போல் ஓடி ஓடி உழைத்தார். சைதாப்பேட்டையில் தனி ஆளாக ஒவ்வொரு கடையிலும், ஆட்டோ ஸ்டாண்ட்களிலும் துண்டறிக்கை கொடுத்து பிரசாரம் செய்தார். 

ஒரு நாள் திநகர் பேருந்து நிறுத்தத்தில் களப்பணி செய்வது என்று முடிவு செய்து ஒரு 6 பேர் ஒன்று கூடினோம். நிலா அம்மாவும் வந்தார்கள் எங்களுடன் இணைந்து களப்பணி செய்ய. அனைவரும் ஒரு தேநீர் கடையில் கூடியபொழுது வந்து இறங்கிய நிலா அம்மா நேராக கடை முதலாளியிடம் சென்று துண்டறிக்கையை கொடுத்து அவரை நிகழ்வுக்கு அழைத்துவிட்டு வந்து தான் வாங்கி வைத்திருந்த தண்ணீரை குடித்தார். 

அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு அரை மணிநேரம் பேருந்து நிறுத்ததிற்கு உள்ளே பணியாற்ற சென்ற பொழுது அனைவரும் துண்டறிக்கை கொடுத்து கொண்டிருந்தோம். அங்கிருந்த போக்குவரத்து துறை பணியாளர்கள் நாங்கள் அவ்வாறு உள்ளே துண்டறிக்கை கொடுக்க கூடாது என்று சொன்ன பொழுது அனைவரையும் ஒருங்கிணைத்து வெளியில் செல்லலாம் என்று இவரை தேடியபொழுது இவரை கண்டுபிடிக்கவே ஒரு 10 நிமிடத்திற்கு மேல் ஆனது. நாங்கள் கொடுத்து கொண்டிருந்த இடத்தில் இருந்து பேருந்து வெளியில் செல்லும் வாயில் அருகே நின்று துண்டறிக்கை கொடுத்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு பனகல் பூங்கா அருகே சென்று துண்டறிக்கை விநியோகத்தை தொடர்ந்தோம் இது அனைத்தும் மதியம் 1 மணியில் இருந்து கொளுத்தும் வெயிலில் எந்தவித அயர்ச்சியும் இல்லாமல் எங்களின் சகதோழியாகவே முழு வேகத்துடன் பணி புரிந்தார். 

நிகழ்வுக்கான நாளும் வந்தது மெரினாவில் அனைவரும் ஒன்று கூடினோம். அப்பொழுது நாங்கள் ஏற்கெனவே தயராக வைத்திருந்த ஆடையை அணிந்து கொண்டு அவரும் ஒரு தன்னார்வதொண்டராக கூட்டத்தை ஒழுங்கபடுத்த எங்களுடன் கைகோர்த்தார். ஆயிரக்கணக்கான மக்கள் வந்த பொழுதும் கடைசிவரை அசராமல் எங்களுடன் இணைந்து பணியாற்றினார். முழக்கங்கள் இட்டபொழுது தனது முழு உணர்வுடனும் வேகத்துடனும் முழக்கமிட்டார். 

இந்த நிகழ்வில் எங்கள் அனைவருக்கும் பலவிதமான அனுபவங்கள் கிடைத்தது. ஆயிரக்கணக்கான மக்களை ஒரு இடத்தில் திரட்டுவதற்கு பிரபலங்களால் தான் முடியும் என்ற மாயை எங்களை விட்டு ஓடியது. அதையும் தாண்டி நிலா அம்மா போன்ற ஓர் தோழி இருந்தால் போதும் இவ்வுலகில் நாம் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.. ஒவ்வொரு இடத்திலும் இவரின் வேகம், உணர்வுப்பூர்வமான பேச்சுக்கள் என்று அனைத்தும் என்னையும் தோழர்களையும் மேலும் வேகமாக வேலை செய்ய தூண்டிய தூண்டுகோலாகவே அமைந்தது..

Thursday, June 30, 2011

எமது வருங்காலம் இவர்கள் கையில் - சூன் 26


சூன் 26 மாபெரும் ஒரு நிகழ்வை எங்கள் குறிக்கோளான ஒரு லட்சம் பேர்களை திரட்டுவது என்பது நடக்காவிடினும். திரண்டமக்கள் கூட்டம் நாங்கள் இன்னும் எங்கள் ஈழ சகோதரர்களை மறக்கவில்லை என்று கட்டியம் கூறியது.
ஆனால் நிகழ்விற்கு பின் எத்தனை எத்தனை விமர்சனங்கள், இது ஒரு சம்பிரதாய நிகழ்வு இதற்கு பின்னர் மக்களின் வேதனை வடிந்துவிடும். இந்நிகழ்வினால் எந்த ஒரு உதவியும் தமிழினத்திற்கு இல்லை என்று திரும்பிய பக்கம் எல்லாம் எகத்தாளங்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.


Posted Image

Posted Image

Posted Image
Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

உங்களை எங்களையும் போல் சுரணை கெட்ட பிறவிகளாக இதோ மேலே இருக்கும் படங்களில் உள்ள குழந்தைகள் இருக்காது. இனி வரும் எமது சந்ததி நடந்த கொடூரத்தை மறக்காது தனக்கு அப்படி ஒரு நிலை வர என்றும் விடமாட்டார்கள்.


Flickr தோழர்களுக்கு நன்றி..

Monday, June 27, 2011

இணையப்புலிகளின் வெற்றி

இணையப்புலிகள் இது கருணாநிதியை எதிர்த்தவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட பட்டம். ஏன் இது மட்டுமா இவ்வளவு ஆத்திரப்பட்டு கருணாநிதியை திட்டும் நீங்கள் இராமேஸ்வரம் சென்று கடலை நீந்தி கடந்து ஆயுதம் ஏந்தி போராட வேண்டியது தானே? இதைப் போல் இன்னும் எத்தனையோ கிண்டல்கள் அடித்தனர். தமிழக மக்களுக்கு ஈழப்பிரச்சனை மேல் அக்கறை இல்லை அதனாலேயே 2009 ம் ஆண்டு தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது நாம் தான் ஏதோ பைத்தியம் பிடித்தது போல் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி திரிந்தார்கள்.. நாம் ஒவ்வொரு முறையும் கருணாநிதி செய்த தவறை சுட்டிகாட்டிய பொழுது நமக்கு மிஞ்சியது அடிவருடி, இணையபுலிகள் என்ற பட்டம் தான்..

ஆனால் இணையபுலிகள் என்று அவர்கள் சொன்னதை இன்று நிருபித்து காட்டிவிட்டோம். ஆம் இந்த மெழுகுதிரி நினைவேந்தல் சூன் 26, கண்ணகி சிலை அருகில் மெரினாவில் நடக்க காரணம் இணையம் தான். கடந்த மே மாதம் 18ம் தேதிக்கு சிலநாட்கள் முன்பு முகநூலில் ஈழமக்களுக்காக என்ன செய்யலாம் என்று ஒரு கேள்வி எழுந்த பொழுது மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தலாம் என்று முடிவு செய்து ராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள் முகநூலில் மட்டும் அறிவித்து மே 18 அன்று அனைவரும் கூடினோம் அன்று முகநூலில் மட்டும் தெரியப்படுத்தப்பட்ட நிகழ்விற்கு 200க்கும் மேலான தோழர்கள் ஒன்று கூடினர்..


இதை முன்னுதரனமாக கொண்டே அடுத்த நிகழ்வை பற்றி பேசக் கூடினோம். இது வரை இரண்டு வருடங்களாக அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் இந்த கொடூரங்களை கண்டித்து எத்தனையோ போராட்டங்களும் கூட்டங்களும் நடத்தியிருந்தாலும். மக்களுக்கு என்று ஒரு மேடை அமைத்து கொடுக்கவில்லை, மக்களும் கட்சிகளின் போராட்டத்தில் தங்களை ஒருங்கிணைக்கவில்லை அவர்களை குறை சொல்ல முடியாது அவர்கள் தங்கள் மேல் ஒரு நிழல் படிவதை விரும்பவில்லை. அவர்களுக்கான ஒர் களமாக மே 18 அன்று நடத்திய நிகழ்வை மேலும் சீர்படுத்தி பெரும்பான்மையான மக்களுக்கான ஓர் நிகழ்வாக மாற்ற வேண்டும் என்று திருமுருகன், மே 17 கூற அனைவரும் முடிவு செய்து இதற்காக உழைக்கவேண்டும் என்று முடிவு செய்து நடத்தப்பட்டதே இந்நிகழ்வு. மே 19ம் தேதி தி.நகரில் ஒரு கூட்டத்தில் இந்த முடிவை எடுத்து அன்றிலிருந்து ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொண்டு பரப்புரை செய்வது என்று முடிவெடுத்து ஜுன் 26ம் தேதி என்ற தேதியை முடிவு செய்தோம். 

இணையத்தில் வெட்டிபேச்சு, வீராப்பு, வீண்வாதம் என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒன்று இன்று மெரினாவில் அலைகடலேன மக்கள் கூடும் ஓர் நிகழ்வாக மாறியுள்ளது.. இது இணையபுலிகளின் சாதனையே...


இணையப்புலிகள் என்று அவர்கள் கூறியதை மெரினாவின் மணலில் மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து எங்களை இணையப்புலிகள் தான் என்று அடித்து சொல்லிவிட்டனர்... ஆனால் எங்களை இப்படி சொன்னவர்கள் இன்றும் சொல்வது தான் மொத்தமே 3000 மக்கள் தான் கூடினார்கள், பீச்சுக்கு வந்த கூட்டம் தான் படங்களில் இருப்பது என்று கூறி திரிகிறார்கள். இந்த கூட்டத்திற்கு ஐம்பதாயிரம் (50000) மெழுகுதிரிகளை வாங்கி வைத்திருந்தோம். அதில் 27000 மெழுகுதிரிகளை விநியோகித்தோம். இதில் 17500 மெழுகுவர்த்திகளை சின்னப் பைகளில் போட்டு வந்திருந்த அனைவரும் கைகளில் எடுத்துக் கொண்டு சென்றனர், ஒரு மூன்று மூடைகளை நண்பர் ஒருவரின் காரில் கொண்டு சென்று பார்க் செய்து வைத்திருந்தோம், இதைத் தவிர இன்னொரு நண்பர் 7500 மெழுகுதிரிகளை இன்னொரு வாகனத்தில் கொண்டுவந்திருந்தார். ஆம் காவல் துறையின் ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்தனர், சர்விஸ் ரோட்டில் தான் நடத்தவேண்டும், 200 பேருக்கு மேல் ஆட்கள் கூடக் கூடாது, மணலில் இறங்க கூடாது, மெழுகு திரி கொழுத்தக் கூடாது தீவிபத்து ஏற்படலாம் என்று ஏகப்பட்ட கட்டுபாடுகள். காவல்துறையின் கட்டுபாடுகளுக்கு நடுவே காவல் துறையினருக்கு தெரியாமல் மெழுவர்த்திகளை உள்ளே கொண்டு சென்று விநியோகித்தோம். அதுவும் மக்கள் வந்து அமர அரம்பித்த சமயத்தில் இருந்து. ஆனால் அவர்கள் சொல்வதோ 3000 மக்கள் தான் வந்திருந்தனர். கேட்டால் இதற்கு முன்னால் நீங்கள் கூட்டம் நடத்தியதில்லை உங்களுக்கு கணக்கு தெரியாது. மதுரை மங்கையர்கரசி பள்ளியில் 10000 மாணவர்களுள் ஒருவராக படித்தவனுக்கு கூட்டம் தெரியாதாம்.


இவர்களுக்கு தேவை ஒன்று தான் இவர்கள் ஒரு காரியத்தை முன்னின்று நடத்தமாட்டார்கள் அப்படியே ஒருவன் நடத்தினாலும் அதில் அது நொட்டை இது நொட்டை என்பார்கள்.. மக்களுக்காக ஒரு அரங்கம் அமைத்து தராமல் இரண்டு குளிர்சாதன பெட்டியை வைத்துக்கொண்டு காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு அடிவருடவதை மட்டும் செய்பவர்கள். ஆம், இந்த பட்டத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும் இதை நிருபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை...

இதோ இந்த தாய் சுற்றி அடிக்கும் கடற்கரை காற்றில் மணல் கலந்து அடித்தாலும் தன் குழந்தையை தன் மடியில் எந்தவித தீங்கும் அணுகாமல் தூங்க வைத்துக்கொண்டே ஈழத்தில் நடந்த கொடூரங்களை விளக்கும் புத்தகத்தை பார்த்துக்கொண்டு தன் இனத்திற்காக வந்து அமர்ந்திருக்கிறாரே எங்களுக்கு இது போதும்.. ஏன் இத்தனை மக்கள் கூடாமல் இவர் மட்டுமே வந்திருந்தாலும் அதுவும் எங்களுக்கு வெற்றி தான்.. எண்ணிக்கைகள் எதையும் பேசப்போவதில்லை எதையும் சாதிக்க போவதில்லை இந்த தாயை போன்றவர்களின் உண்ர்வுகள் தான் நாளை பேசும். இவரை போன்ற தாய்மார்களின் மடியில் உறங்கும் குழந்தைகள் நாளை தன் தாயின் உணர்வுகளை உண்மை நிகழ்வாக மாற்றி காட்டுவார்கள்.....

Saturday, June 11, 2011

முகமற்ற நாம் முகமற்றவர்களுகாக ஒன்று கூடுவோம்


நண்பர்களே.. உங்கள் அனைவருக்கும் திரும்பவும் ஓர் நினைவு படுத்தும் பதிவு.. சூன் 26 அன்று கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் சிங்களபேரினவாதத்தால் இறந்த நமது சொந்தங்களுக்காக நினைவேந்தவும், 1983ல் இருந்து கொல்லப்பட்ட தமிழக மீனவர் 532 பேருக்காகவும் ஒன்று கூடுவோம். இந்த நிகழ்வு எந்த அரசியல் கட்சி சார்பான ஓர் நிகழ்வு அல்ல. அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.

உலகம் முழுவதும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் கைகோர்த்து போராடும் இந்த வேளையில் நாம் தொலைத்துவிட்ட சொந்தங்களுக்காக ஒன்று கூடுவோம்..

இன்னார் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத முகமற்ற நாம் அனைவரும் அடக்குமுறையில் இறந்த முகமற்றவர்களுகாக ஒன்று கூடுவோம்..

Thursday, June 2, 2011

முப்பெரும் விழா - ஜூன் 3

எனது கடைசி பதிவில் நண்பர் ஒருவரின் பின்னூட்டம்.. பிறந்த நாள் விழா சென்னையில் நடப்பதால் சிறு திருத்தங்களுடன்..



நமது கழகத்தின் முப்பெரும் விழாவினை இம்முறை சென்னையில் ஜூன் 3 அன்று என் பிறந்தநாள் அன்று நடத்தலாம் என்று நானும், பேராசிரியர் எனும் உதவி ஆசிரியரும் முடிவு செய்து உள்ளோம். அது என்ன முப்பெரும் விழா ?


ஒன்று - திகார் சிறையில் "தகத்தாய கதிரவனின்" 100 நாட்கள் நிறைவு விழா.

இரண்டு - கழகத்தின் குல விளக்கு ஒப்பில்லா "கவி" அவர்களின் திகார் சிறை நுழைவு விழா.

மூன்று - நமது கழகத்தின் டில்லி பிரதிநிதியாக அனுப்பப்பட்ட எனது "பேரன்" அவர்களின் திகார் சிறை வழியனுப்பு விழா .

ஆக கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் இன்றே முன்பதிவு செய்து சென்னை நோக்கி வரும்படி அக மகிழ்வுடன் அழைக்கின்றேன்.

anbudan,
Duriyal......

Wednesday, June 1, 2011

மெல்லிதயம் படைத்தோரே மெழுகுதிரி ஏந்திட மெரினா நோக்கி வாரீர்..



Torture seeks to annihilate the victim’s personality and denies the inherent dignity of the human being. The United Nations has condemned torture from the outset as one of the vilest acts perpetrated by human beings on their fellow human beings.

Torture is a crime under international law. According to all relevant instruments, it is absolutely prohibited and cannot be justified under any circumstances. This prohibition forms part of customary international law, which means that it is binding on every member of the international community, regardless of whether a State has ratified international treaties in which torture is expressly prohibited. The systematic or widespread practice of torture constitutes a crime against humanity.

“The International Day in Support of Victims of Torture is an occasion to underscore the internationally recognized right of all men and women to live free from torture. It is an opportunity to reaffirm our collective commitment to prohibit torture and all cruel, inhuman and degrading treatment or punishment.”

Secretary-General Ban Ki-moon
Message for the International Day in
Support of Victims of Torture 2010



இலங்கையில் கடந்த 2009ம் வருடம் சிங்கள பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட (1,46,000) ஒரு லட்சத்து நாற்பாத்து ஆராயிரம் தமிழர்களுக்காகவும், இதில் பாதிக்கப்பட்ட 30000க்கும் மேற்பட்ட படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளுக்காகவும், 80000 க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக மாற்றாப்பட்ட கொடுமைக்காகவும்.

இலங்கை கடற்படையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காணம்ல்போன 700க்கும் மேற்பட்ட மீனவர்களுக்காவும், சிங்கள கடற்படையால் உடல் ஊனமுற்ற 2000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அவர் அவர் குடும்பத்துடன் ஒன்று கூடுவோம்..

மெல்லிதயம் படைத்தோரே
மெழுகுதிரி எந்தி அஞ்சலி செலுத்த
மெரினா நோக்கி வாரீர்..


தேதி : ஜூன் 26, மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை

மே 17 இயக்கம்


ஜூன் 26 - சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் (International Day in Support of Victims of Tortured)

குறிப்பு :- இதில் அனைத்து தமிழுணர்வாளர்களும் கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்ள வேண்டும், இது நம் தமிழ் மக்களுக்கு நமது ஆதரவை தெரிவிக்க செய்யும் ஓர் நிகழ்வு. தங்களுக்கு இதற்கு தேவையான விளம்பர பேனர்கள் போன்றவற்றை தயாரிக்க நிகழ்வின் குறியீடான லோகோ போன்றவைகளை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும். இந்த நிகழ்வு யாரால் நடத்தப்படுகிறது என்பதை பற்றி எந்தவிதமான சர்ச்சையும் தேவையில்லை அனைவரும் இந்த நிகழ்வை தங்களின் நிகழ்வாக எண்ணி செயல்பட வேண்டும்.. ஒரே ஒரு வேண்டுகோள் வாழ்க ஒழிக கோஷங்கள் இல்லாமல், கொடிகள் போன்றவைகளை கொண்டு அரசியல் நிகழ்வாக ஆக்காமல் நம் மக்களுக்கு அமைதியான முறையில் ஆதரவையும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அமைதியான நிகழ்வாக நடத்தவேண்டும்.

Friday, April 8, 2011

ஓட்டு போடுங்க இதை பார்த்துவிட்டு

Posted Image

நம்ம அரசியல்வியாதிகள் எப்ப யாரு கேட்டாலும் தன் சொத்து எவ்வளவுனு யாருக்கும் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்லுவது ஒரிடத்தில் மட்டும் தான் அது தேர்தல் நடக்கும் பொழுது மட்டும் தான். அதுவும் பாதி உண்மை இருக்காது எனென்றால் எல்லாத்தையும் சொன்ன அவனுங்க வச்சிருக்க பொண்டாட்டிகள் அத்தனைபேரும் அதை கொடு என்று பிச்சு எறிந்துவிடுவார்கள்.

இங்க அனைவரின் தகவல்களும் சொத்து தகவல்களும் உள்ளன உங்கள் தொகுதில் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து, கடன் அவர்கள் திரும்ப செலுத்தவேண்டியது என்று எல்லாமும். ஏன் அவர்கள் பெயரில் எந்த எந்த செக்ஷனில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது வரை. அனைத்தையும் படியுங்கள் படித்துவிட்டு ஓட்டு போடுங்கள்.

மொத்த தகவலையும் பார்க்க முதலில் தொகுதியை தேர்ந்தெடுக்கவும் அதன்பின் வேட்பாளர்கள் பெயர்கள் ஒரு சுருக்க விவரம் வரும் விரிவாக பார்க்க வேட்பாளரின் பெயரி சொடுக்கினீர்கள் என்றால் சடுதியில் அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும்..

தமிழக வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற விவரங்கள் (இங்கே சொடுக்கவும்)

எல்லாத்தையும் பார்த்துவிட்டு 49-0 என்று முடிவெடுக்காதீர்கள், அதனால் எந்த பலனும் இல்லை, ஒரு தொகுதியில் வெற்றிபெரும் வேட்பாளர் 10000 ஓட்டுகள் வாங்கி 49-0வில் 15000 ஓட்டுகள் விழுந்து இருந்தாலும் 10000 ஓட்டுகள் வாங்கிய வேட்பாளரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார். வேட்பாளர் தடை மறுபடியும் தேர்தல் என்பது வெறும் புரளி. இந்தியாவின் 1961ல் தேர்தல் நடைமுறை விதியிலோ அல்லது அதற்கு பிறகு நடந்த மாற்றங்களிலோ எங்கும் இப்படி கூறப்படவில்லை.. ஏன் ஒரு வேட்பாளர் ஒரு ஓட்டு தான் வாங்கியிருந்தார் மற்றவர்கள் ஓட்டு பெறவில்லை அனைத்தும் 49-0 என்றால் கூட ஒரு ஓட்டு வாங்கிய வேட்பாளரே வெற்றி பெற்றதாக் அறிவிக்கப்படுவார். இதை எடுத்துக்கொண்டு அதன் பிறகு நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்..

வாழ்க பணநாயகம்..

Wednesday, March 23, 2011

சூரிய நாரயாணன் என்ற புறம்போக்கு



காலச்சுவட்டில் ஒரு பெரிய பேட்டி சூரிய நாரயணன் என்ற புறம்போக்கின் காலச்சுவடு நேர்காணல்.



இந்த பேட்டியின் ஆரம்பித்திலேயே இவரின் விளையாட்டு ஆரம்பம் ஆகிவிடுகிறது, 1974 மற்றும் 76ல் போடப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தங்களால் எந்த பாதிப்பும் இல்லை மீனவர்கள் இரண்டு நாட்டிற்கிடையேயான பகுதியை இரண்டுநாட்டு மீனவர்களும் பொதுவாகவே கருதியிருக்கின்றனர் என்பதை நேரடியாக சொல்லாமல் இந்த ஒப்பந்தங்களால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொதுப்படையாக பேசுகிறார். ஆனால் கச்சத்தீவை பயன்படுத்துவதை பற்றி போடப்பட்ட ஒப்பந்தப்படி அதை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று சூசகமாக சொல்கிறார் எப்படி என்றால் பருத்தி வலை பயன்படுத்துவதில்லை அதனால் அதை காயவைக்க வேண்டிய தேவை இல்லை என்று. என்னமோ கச்சதீவுக்கு வலையை காய வைக்கமட்டும் தான் போனது போல் சொல்கிறார்.

இவருக்கு என்ன காலையில் எழுந்து குளித்து முடித்து குண்டி கழுவுவாறோ இல்லையோ சந்தியாவந்தனம் சொல்லி சுத்தபத்தமாக அலுவலகம் சென்று மாலையில் விடு திரும்பி அவுத்து போட்டு படுப்பதற்கு முன்னால் இன்னொரு குளியல் போட்டுவிட்டு குப்புற படுத்து தூங்கிவிடுவார். மீனவர்கள் அப்படி இல்லை அய்யா 3 நாள் 4 நாள் என்று நடுக்கடலில் உப்பு காற்றில் அடிக்கும் வெயிலில் வியர்வை சிந்தி உழைப்பவர்கள். அந்தோணியர் கோயில் அருகே இருக்கும் கிணற்றடி தான் அவர்களுக்கு குளியலறை. அதன் அருகே தான் அவர்களுக்கு சமையலறை, சமைக்க தண்ணீர் அந்த கிணற்றிலேயே எடுத்துக் கொள்வார்கள். மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி மூனு விரலை மடக்கி காசு கொடுத்து வாங்கிய தண்ணிரை சாப்பாட்டு தட்டை சுற்றி தரையில் ஊற்றி வீணடிக்கும் இவருக்கு கடல் தண்ணீருக்கும் சாப்பாடு சமைக்கும் தண்ணீருக்கும் எங்கு வித்தியாசம் தெரியபோகிறது. உமக்கு தெரிந்தது எல்லாம் வலை காய வைக்க வேண்டும், பருத்தி வலை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் நைலான் வலை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று இவருக்கு எங்கு தெரியபோகிறது. கடலுக்குள் என்ன குளிர் சாதன வசதியா கடவுள் செய்து கொடுத்திருக்கிறார்கள் குளிக்காமல் கொள்ளாமல் நான்கு நாட்கள் உட்கார்ந்து இருப்பதற்கு. கடலுக்கு சென்று தொழில் பார்த்தால் அவர்கள் படும் துன்பங்கள் இவருக்கு தெரிந்திருக்கும்.

காஞ்சிபுரம் பட்டுபுடவையை ஈழத்தில் மிகவும் விரும்புவார்களாம், அதுவும் மணப்பெண்ணுக்கு கொடுக்க விரும்புவார்களாம், இதை இங்கிருந்து தமிழக மீனவர்கள் கடத்திக்கொண்டு சென்றனராம். இது வந்து இந்த மீனவர்களுக்கு தொழிலாம் ஆனால் அவருக்கு கடத்தலாம். 83க்கு முன்பு வரை அல்ல இன்று வரை அவர்களை எங்களில் ஒருவராக நினைக்கிறோம் அவர்களும் அப்படி தான் பெண்ணு கொடுத்து பெண்ணு எடுக்கும் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. ஏன் இரு நாட்டுக்கு இடையில் பெரிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட பிறகு கணவன் அங்கேயும் மனைவி இங்கேயுமாக வாழ்ந்தவர்கள் அந்தோணியார் கோயில் திருவிழாவில் சந்தித்து கொள்வார்கள் அதற்கு பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்த கதை கூட உண்டு. இவ்வளவு தெளிவாக பட்டு புடவை கடத்தினார்கள் என்பவர் 1983க்கு முன்பு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டுவிட்டு, கைலி பீடி என்று வாங்கிக் கொண்டு பிரட் ஹார்லிக்ஸ் என்று கொடுத்து செல்வார்களே அது இவருக்கு தெரிந்திருக்காதா. அதுவும் கூட கடத்தல் தான் அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டை வயிற்றை கிழித்து எடுத்து வர வழிவகை செய்ய வேண்டியது தானே. தனுஸ்கோடியில் குழாய் ரேடியோ வைத்து சத்தமாக பாட்டு போட்டால் அந்தபக்கம் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு கேட்கும் அது கூட இவர் பார்வையில் அடுத்து கடத்தலாக தெரியும் போல் தெரிகிறது. இவர் முதலில் பருப்பு சாப்பிடுவதை விட்டால் நல்லது இவர் வெளியிடும் வாயுவை காற்று கடத்தி கொண்டு போய் பக்கத்து வீட்டில் மூக்கை மூட வைக்கிறதாம்..

அடுத்த சப்பைகட்டு இலங்கை கடற்படைக்கு கட்டுகிறார், எப்படி போராளிகளா மீனவர்களா என்பது தெரியவில்லை அதனால் தான் படகுக்கு பக்கத்தில் வருவதற்கு முன்பே பயத்தில் சுட்டுக்கொண்டே வருவார்கள் என்று. அவர்களிடம் மிகச்சிறந்த ஆயுதங்கள் இல்லை படகுகள் இல்லை ஆனால் இந்திய கடற்படை அனைத்து வசதிகளுடன் தானே இருந்தது 91க்கு முன்போ இல்லை பின்போ எத்தனை போராளிகள் படகுகளை பிடித்தது. போராளிகள் இங்கு வந்தார்கள் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றனர் இல்லை என்று சொல்லவில்லை, ஈழத்தின் மீது பொருளாதர தடை விதிக்கப்பட்டு அங்கு எந்த அத்தியாவசிய தேவைக்கான பொருட்களும் கிடைக்கவில்லை எனவே தங்களுக்கு தேவையான பொருட்களையும் தன்னை நம்பி இருக்கும் மக்களூக்கும் தேவையான பொருட்களை கடத்தி சென்றனர். ஆனால் அவர்களில் எத்தனை பேரை அதிநவீன படகுகள் ஆயுதங்கள் கொண்ட இந்திய கடற்படை பிடித்தது. அப்படி ஒருவரையும் பிடிக்காத பொழுது இலங்கை கடற்படையினர் அதுவும் இவரின் கூற்றுபடி 80களுக்கு பிறகு தான் கடற்படையே வந்தது எனும் பொழுது போராளிகளை பிடித்துவிட்டோம் என்று நினைத்து சுட்டார்களாம் இதை நாம் நம்பவேண்டுமாம். கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய்வடிகிறது என்று சொல்லலாம்.



அடுத்த பொய் அங்கிருந்து அகதிகளாக வந்தவர்கள் அவர்கள் நாட்டின் எல்லைபகுதியில் எங்கு மீன் கிடைக்கும் என்று காட்டி கொடுத்தார்களாம். அகதிகள் முகாமில் இருந்து ஒருவர் வெளியில் வர வேண்டும் என்றால் அனுமதி வாங்க வேண்டும் அதுவும் இரவு வராமல் வெளியில் தங்க வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி மூன்று நாட்களுக்கு மேல் வெளியில் தங்க வேண்டுமென்றால் அதைவிட சிறப்பு அனுமதி அப்படி இருக்கும் பொழுது அவர்கள் தமிழக மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்களாம் காட்டி கொடுத்தார்களாம். யார் அனுமதி வாங்கி கொடுத்தது மூன்று நாட்கள் நான்கு நாட்கள் வெளியே தங்க. அப்படி வெளியில் தங்க அனுமதி வாங்கினாலும் எங்கு தங்குகிறார்கள் என்ற முகவரியை கொடுக்க வேண்டும் கடலுக்குள் பிளாட் போட்டு யாராவது விற்று இருக்கிறார்களா என்ன முகவரியை கொடுக்க. ஒருவேளை இவர் சென்று அவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி வாங்கி கொடுத்தார் போலும்.

அடுத்து நெடுந்தீவு மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வந்தால் அவர்கள் மீன் பிடிக்க வரமாட்டார்களாம் எப்பொழுது இப்பொழுதா இல்லை 83க்கு முன்பாகவா என்பதை தெளிவாக சொல்லாமல் பொத்தம் பொதுவாக சொல்கிறார். அண்ணா இறந்த பொழுது நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்களுக்கு தகவல் சொன்னதே நெடுந்தீவு மீனவர்கள் தான். ஆனால் அவர்கள் தமிழக மீனவர்களை எதிரியாக நினைக்கிறார்கள் என்று சொல்லுவதை கேட்டு எந்த வழியாக சிரிப்பது என்று தெரியவில்லை. அதுவும் இப்பொழுது எத்தனை ஈழத்து மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லுவாரா இவர். அவர்கள் அனுமதிக்கப்பட்டாலும் 3மணி நேரம் நான்கு மணிநேரத்திற்கு தேவையான எரிபொருளே வழங்கப்படுகிறது அந்த எரிபொருளை வைத்துக்கொண்டு இவரே குறிப்பிடும் அந்தமானுக்கு அருகில் சென்று அவர்களுக்கு தேவையான மீனை பிடிக்க முடியுமா. அப்படி இருக்கும் பொழுது அவர்கள் தமிழக மீனவர்களை குறை சொல்லுகிறீரார்கள் என்பது கேணைத்தனமாக இல்லை. ஏமாறுவதற்கு ஆள் இருந்தால் எருமாடு ஏரோப்ளேன் ஓட்டுது என்று சொல்வீர்கள்.

ஈழத்து மீனவர்கள் வாழ்வாதரத்தை காப்பாற்ற எதாவது வழியிருந்தால் சொல்லவும் அவர்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க வழிவகை சொல்லவும் யார் எங்கு மீன் பிடிப்பது என்பதை அவர்கள் ஒன்னா மண்ணா உட்கார்ந்து பேசிக்கொண்டே மீன் பிடிப்பார்கள். இவரோ சுவாமிநாதனோ விவேகானந்தனோ யாரும் இதில் தலையிட தேவையில்லை, பெண் கொடுத்து பெண் எடுத்த உறவினர்களுக்கு நடுவே இந்த நாட்டாமைகளுக்கு வேலை இல்லை. அதுவும் ஆச்சாரமானவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு மீன்பிடிப்பதை பற்றியும் பங்கு போட்டுக்கொள்வதை பற்றியும் பேசத்தேவை இல்லை. யாருக்கு தெரியும் தினமும் மாலையில் ஸ்காட்சை காச்சி குடிக்கும் பொழுது மட்டும் மீன் இவர்களுக்கு சைவமாக தெரியலாம். அதனால் மீன் பிடிப்பதை பற்றி இவர்கள் ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டனர் போலும்.

இப்படி ஒருவரை பேட்டி எடுக்கும் முன்பு அவரிடம் யாரை பற்றி கேட்க போகிறீகளோ அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேட்டி எடுக்கவும் இல்லாவிடில் அவர் சொல்லுவதை எல்லாம் நீங்கள் மட்டும் கேட்டுக்கொள்ளவும் இப்படி பொதுவில் போட்டு உங்கள் மானத்தை இழக்காதீர்கள்.

Monday, March 14, 2011

தேர்தல் ஜுரம் - கலைஞர் காப்பீட்டு திட்டம்





தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தினமும் ஒரு அறிக்கை அதுவும் துறைக்கு ஒன்றாக தினமும் என்று அறிக்கை விட்டுகொண்டிருக்கிறார் ஈனத்தலைவர். இன்று மருத்துவத்துறையை பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அதில் முதலில் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை என்னமோ தானே ஒதுக்கியது போல் சொல்லி இருக்கிறார்.

//2005 2006 ம் ஆண்டு இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1487 கோடி என்பதற்கு மாறாக 2010 2011 ல் நிதி ஒதுக்கீடு ரூ.3889 கோடியாக உயர்ந்துள்ளது. //

இதில் எங்காவது மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்று தவறிப்போய் கூட சொல்லிவிடவில்லை. இவர் சொன்ன அத்தனை நிதியும் மத்திய அரசு மாநிலத்திற்கு சுகாதர மேம்பாட்டுக்காக ஒதுக்குவது.




// இந்தத் திட்டத்தில் ஒரு கோடியே 35 லட்சம் குடும்பங்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் உயர்தர தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகச் சிறப்புச் சிகிச்சைகள் அளிக்க உதவும் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகை முழுவதையும் கழக அரசே செலுத்துகிறது. இத்திட்டத்தில் 7.3.2011 வரை 2,90,291 நோயாளிகளுக்கு ரூ.750.28 கோடி செலவில் அங்கீகரிக்கப்பட்ட 702 மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.//

அடுத்து கலைஞர் காப்பீட்டு திட்டத்தை பற்றிய பீலாவை விட்டிருக்கிறார். இதில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார். இவர் சொல்லுவதன் படி 1 கோடியே 35 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகிறார்களாம். இதன் மூலம் சொல்லுவது ஒரு குடும்பத்திற்கு ரூ 469 ரூபாய் வீதம் காப்பீட்டு தொகையாக தமிழக அரசு ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸுக்கு வழங்குகிறது. அப்படியானால் 633 கோடியே 15 லட்சம் ரூபாய் ஒரு வருடத்திற்கு பீரிமியம் தொகையாக அரசால் செலவழிக்கப்படுகிறது. இது வருடம் ஒரு முறை செலுத்தவேண்டிய தொகையாகும் 2009ம் ஆண்டு 2010 ஆண்டும் தமிழக அரசு ப்ரீமியமாக 1266 கோடியே 30 லட்சம் ப்ரீமியமாக செலுத்தியுள்ளது.

தொடங்கப்பட்ட 2009ம் ஆண்டில் இருந்து 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி வரை இதனால் பயணடைந்தவர்களுக்கு செலவழிக்கப்பட்ட தொகை 750.28 கோடி என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். இதில் மீதம் 500 கோடிக்கும் மேல் இரண்டு வருடத்தில் லாபமாக ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் நிறுவனம் சம்பாதித்துள்ளது. மொத்தம் நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது மொத்தம் 2500கோடி ரூபாய்க்கு மேல் ப்ரீமியம் தொகை செலுத்தப்படும். அரசு விதித்திருக்கும் நிபந்தனை மொத்தமாக இந்த திட்டதின் மூலம் செலவிடப்படும் தொகையைவிட 65% க்கு கீழ் தான் செலவானது என்றால் அந்நிறுவனம் மீதத்தொகையை திரும்ப செலுத்தவேண்டும் என்பது. இதுவரைக்கும் இரண்டாண்டில் செலவழிக்கப்பட்ட தொகை 65% க்கு மேல் சென்று விட்டது அவர்கள் திரும்ப செலுத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால் மிச்சம் உள்ள 500 கோடி அவர்களுக்கு லாபமே.

இந்த திட்டம் மிக அருமையான ஒரு திட்டமே இதை எடுத்து நடத்த இந்த அரசு நிறுவனம் எதுவும் இல்லையா மத்தியரசின் LIC யோ இல்லை மாநில அரசின் ESIC யோ இதற்கான போதுமான முன் அனுபவம் இல்லாதவர்களா. இல்லையே இத்தனை வருடமாக இவர்கள் இருவரும் இதே பணியை தானே செய்து கொண்டுள்ளனர். ஏன் ETA வின் ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் இதே போல் திட்டத்தை எங்கு செயல் படுத்தியுள்ளனர். எந்த முன் அனுபவத்தின் அடிப்படையில் LIC, ESIC இரண்டையும் விட இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தம் உள்ள எடிசாலட் நிறுவனத்திற்கும் ETA நிறுவனத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன?? எடிசாலட் இயக்குனரின் ஒர் நிறுவனமே ETA நிறுவனம் அதன் துணைநிறுவனமே ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் இதிலும் ஸ்பெக்ட்ரம் பணம் விளையாடிருப்பது போல் தெரிகிறது.

அதெல்லாம் விடுங்கள் இது நீங்கள் எப்பொழுதும் செய்யும் அறிவியல் பூர்வமான ஊழல் என்று சர்காரியா எப்பொழுதோ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நான்கு வருடத்திற்கு 2500கோடி ரூபாய் ப்ரீமியமாக செலுத்துவதற்கு பதில் அந்த தொகையை கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையும் புதிதாக அரசு மருத்துவமனைகளை சிறப்பு மருத்துவசேவையுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக எத்தனை மருத்துவமனைகளை நிர்மானிக்க முடியும். திருச்சியில் அரசு சார்பில் மல்டி ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையை நிறுவ 380 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சில நாட்களுக்கு முன்னர் தான் தெரிவித்தார்கள் சேலத்தில் கூட இன்னுமொன்று வரப்போகிறது என்றும் இப்படி 380 கோடி ரூபாயில் மருத்துவமனை நிறுவப் போதுமானது எனும் பொழுது 2500 கோடி ரூபாயில் ஏழிலிருந்து எட்டு மருத்துவமனைகள் நிறுவலாமே அதை அரசு ஏன் செய்யவில்லை. இவ்வாறு செய்தால் எந்த அட்டையும் இல்லாமல் நேரடியாக மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று பயனடைவார்களே.

இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு தனியார் நிறுவனம் அதை நடை முறை படுத்த இன்னொரு தனியார் மருத்துவமனைகள் என்று எல்லாப் பணத்தையும் வாரி இறைத்து தனியார் நிறுவன முதலாளிகள் சம்பாதிக்க மட்டும் தானே இந்த திட்டம் உதவுகிறது.

நீங்களே 166 ஆரம்ப சுகாதர நிலையங்கள் கிராமபுறங்களில் அமைக்க 66.42 கோடி தான் செலவானது என்று சொல்லியிருக்கிறீர்கள் . இந்த 2500 கோடியில் ஒரு 300 கோடி செலவழித்தால் இன்னும் 500 மேற்பட்ட ஆரம்ப சுகாதர நிலையங்களை நிறுவியிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்தால் ஓட்டு கேட்க போகும் பொழுது கலைஞர் காப்பீட்டு திட்டம் என்று சொல்ல முடியாது. மேலும் அட்டை வைத்திருக்கும் மக்களும் ஒவ்வொரு முறை அட்டையை பார்த்து கலைஞர் தான் தன் சொந்த காசை செலவழித்து நமக்கு வைத்தியம் பார்த்தார் என்று நினைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு, சுகாதரம் என்பது ஒரு அரசு மக்களுக்கு செய்து தரவேண்டிய அடிப்படை கடமையை கூட தங்கள் ஓட்டரசியலுக்கு ஓட்டு சேகரிக்கும் ஓட்டு வங்கியாக மாற்றிவிட்டார்.

2500 கோடியில் நான்கு வருடங்களுக்கு மட்டும் உயிர்காக்கும் சிகிச்சை தொலை நோக்குடையதா இல்லை அதே தொகையில் பல வருடங்களுக்கு சேவை தரக்கூடிய ஏழு எட்டு அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனையின் தரத்திற்கு கட்டுவது தொலைநோக்கு திட்டமா..

தமிழின தலைவன் Vs ஈழத்தாய்





யாராவது கருணாநிதி ஈழவிசயத்தில் செய்தது தவறு என்று சொன்னால் ஒன்றை சொல்லுகிறார்கள். அது ஈழதாய் என்று சொன்னீர்களே போய் ஈழத்தை அவரிடம் கேளுங்கள் என்று..

இரண்டும் சாக்கடை ஆனால் ஜெயா சாக்கடையை விட கருணா சாக்கடை நாற்றம் எங்களுக்கு வாசனையாக உள்ளது என்று அள்ளி பூசிக்கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் திரிவது மட்டுமின்றி அனைவரையும் அதையே செய்ய வேண்டும் என்கிறீர்கள் இவரிடம் என்ன நியாயத்தை கண்டுவிட்டீர்கள் என்று தெரியவில்லை..

ஜெயா பேர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று சொன்னார் என்றால் இவர் மழை விட்டுவிட்டது தூவானம் விடவில்லை என்றார் இதில் என்ன நியாயத்தை கண்டுவிட்டீர்கள். இரண்டு பேரும் நம் மக்கள் சாவதை சாதரணமாகத்தான் எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால் கருணா சொன்னதில் என்ன பெரிய நியாயம் இருக்கிறது. அதுவும் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று ஒரு நான்கு மணிநேரம் கடற்கரையில் அடிக்கும் காற்று பத்தாது என்று ஏர் கூலர் ஒன்னுக்கு இரண்டாக வைத்துக்கொண்டு பேரனின் நேரடி வர்ணணையில் காற்றுவாங்கிவிட்டு என்னால் தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று மார்தட்டி கொண்டார் அதன் பிறகும் போர் தொடர்ந்ததை சுட்டி காட்டினால் மழைவிட்டுவிட்டது தூவானம் விடவில்லை என்றார். எதையும் எதையும் உவமானமாக எடுத்துக்கொள்வது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் சொல்லுகிறார் அதையும் நீங்கள் ஆமாம் சாமி தூவானத்தால் தான் மக்கள் செத்தார்கள் என்று எடுத்துக்கொள்கிறீர்கள். மழை அதிகமாக பேயும் சிரபுஞ்சியில் கூட தூவானம் பெயும் பொழுது மழை பெய்து முடிந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் மக்கள் ஆனால் அங்கு நடந்தது என்ன பல உயிர்கள் போனது அதற்கு தூவானத்தை உவமையாக சொன்னவரின் மூஞ்சியில் காறித்துப்பாமல் ஆஹா தூவானம் என்று சிலாகிக்கிறீர்கள்.

நம் தமிழினத்திற்கு என்ன செய்து கிழித்துவிட்டார் இவர், 8 உலகதமிழ் மாநாடுகளை நடத்தியவர்களை பிரித்து தனக்கு என்று உலகதமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்தியதை விட. நம் தமிழ் கவிஞர்களும் எழுத்தாளர்களையும் ஒன்றிணைப்பது கடினமான விசயம். எந்த அரசியல் வியாதியின் உதவியும் இல்லாமல் இத்தனை வருடம் தனித்துவத்துடன் தமிழறிங்கர்கள் மட்டும் விளங்கிய உலகதமிழ் சங்கத்தை அதில் இருந்தவர்களை தனது சொந்த தேவைக்காக பிரித்து உலக தமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்தி தன்னை புகழ் பாடும் ஒரு அரங்கமாக நடத்தியதை தவிர. ஏன் இதே உலகதமிழ் செம்மொழி மாநாட்டை பிரான்ஸிலோ கனடாவிலோ நடத்தி காட்டியிருக்க வேண்டியது தானே இல்லை இனிமேலாவது நடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா. நாம் இருக்கும் நாட்டில் ஒரு மொழிக்கு மாநாடு நடத்துவதை விட மற்ற மொழிகள் பேசும் நாட்டில் நடத்தி அங்கும் நம் மொழியின் பெருமையை உணர்த்தி காட்டியவர்கள் உலகதமிழாராய்ச்சி மையம் அவர்களை துண்டாடியது தான் இந்த உலகசெம்மொழி மாநாடு. இது தான் அவருக்கு கை வந்த கலையாயிற்றே ஏற்கெனவே விடுதலைக்காக போராடிய குழுக்களுக்கும் புகுந்து தனது தேவைக்காக விளையாடியதை பார்த்தவர்கள் தானே நாங்கள். பாவம் சபா கோடாலி காம்பை கண்பார்வை அற்றோர்க்கு வழிகாட்ட உதவும் கம்பாக நினைத்துவிட்டார்.

அன்னை வைத்தியத்திற்காக வந்தார் திருப்பி அனுப்பினது ஏன் என்று கேட்டால் ஜெயலலிதா எழுதிய கடிதம். இதே போல் தான் ஜெயா பாலசிங்கம் அண்ணாவையும் திருப்பி அனுப்பினார் என்கிறீர்கள். அன்னை வந்த பொழுது ஜெயா ஆட்சியில் இல்லை கருணா தான் இருந்தார் காவல்துறை அவரின் அமைச்சகம் ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். ஆனால் விமான நிலையத்தில் ஜாங்கிட்டு மட்டும் எப்படி வந்தார் என்று தெரியவில்லை. புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி கொண்டு ஆனால் இயக்கத்தின் மீதான தடை தொடர்ந்து கொண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டுமுறை தடை நீட்டிக்கப்படுள்ளது அப்பொழுது தமிழக அரசிடம் அறிக்கை கேட்கவில்லையா. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு தானே தடை செய்யவேண்டும் என்று வாதிடுகிறது, அப்பொழுதெல்லாம் எங்கே உட்கார்ந்து திரைகதை வசனம் எழுதிக்கொண்டிருந்தார். அன்னை தமிழகம் வந்தது சிலரின் அரசியல் என்கிறீர்கள் அவர் தன் மகள் இருக்கும் கனடா சென்றிருக்கலாம், மூத்தமகன் இருக்கு ஐரோப்பா சென்றிருக்கலாம் தான் பெற்ற பிள்ளைகள் இருக்கும் ஊர்களை விட்டுவிட்டு தமிழகம் ஏன் வந்தார் என்று கூட யோசிக்க தோன்றவில்லையா உங்களுக்கு. ஏன் திருப்பி அனுப்பிய பொழுதும் கனடாவோ இல்லை ஐரோப்பாவோ செல்லாமல் ராஜபக்சேவின் பிடியில் இருக்கும் ஈழத்திற்கு தானே சென்றார் அதுவும் ஏன் என்று யோசிக்க தோன்றவில்லையா உங்களுக்கு. அவரின் கடைசிகாலத்தை ஈழத்திலோ இல்லை தமிழகத்திலோ கழிக்க விரும்பியவர் தமிழகத்தின் வாயிலுக்கு வந்தபொழுது கதவை சாத்திவிட்டு அவன் காரணம் இவன் காரணம் என்று சொல்லும் கயமைத்தனம் புரியவில்லையா. ஜெயா தான் இவ்வாறு செய்தார் என்றால் இவரும் தடைசெய்ய ஆதரவாக வாதடுகிறார் அது இந்திய இறையாண்மை என்று சொல்லுகிறீர்கள் எனய்யா ஊருக்கொரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா.

கடற்கரையில் காற்றுவாங்கியவர் போரை நிறுத்திவிட்டார் என்று சொல்லும் பொழுது தோழன் முத்துக்குமார் போரை நிறுத்த தன் உயிரையே கொடுத்தான் அதை கூட எந்த அளவிற்கு மூடிமறைக்க முடியுமோ அப்படி செய்தவர் தான் இந்த கருணா. ஏன் கன்னட கவிஞன் ஒருவனுக்கு தமிழகத்தில் சிலை வைப்பார் ஆனால் இனத்துக்காக உயிர் துறந்த முத்துகுமரனுக்கு சிலைவைக்க அனுமதிக்க மாட்டார். எந்த மொழி போராட்ட தியாகிக்கு இவர் சிலை திறந்து வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா. ஊரில் இருப்பவனை எல்லாம் ஆரிய திராவிட போர் தமிழை அழிக்க நினைக்கிறார்கள் என்று சொல்லி ஏற்றிவிட்டு இரயில் வராத தண்டவாளத்தில் மிகவும் சாமர்த்தியமாக தலையை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு. இவரின் பேச்சை கேட்டு தீக்குளித்த மொழி போராட்ட தியாகிகளின் உடலில் எரிந்த தீயில் குளிர்காய்ந்தவர் இன்று வரை எத்தனை மொழி போராட்ட தியாகிக்கு சிலை வைத்திருக்கிறார்.

ஏன் இன்று வரை தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொலை செய்கிறது என்றால் நமது மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று சொல்கிறார். இவரின் பேராசை தான் நன்றாக தெரியும் உயிரை பணயம் வைத்து கடலில் ஒருவேளை கஞ்சிக்காக போராடுபவனை பார்த்து இந்த மாடிவீட்டு ஏழை சொல்கிறார் பேராசை பிடித்தவர்கள் என்று. கனிமொழி கைது என்று நாடகம் ஆடியவர், இனிமேல் பிரச்சனை இருக்காது என்றார், மேலும் தொடர்ந்தால் என்ன செய்வது என்று கேட்டதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன் பிறகும் தொடர்கிறது ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மத்திய அரசையும் நிர்பந்திக்கவில்லை. கூட்டணி அரசியலுக்காக சீட்டு பேரத்திற்காக இராஜினாமா நாடகம் என்று எல்லாம் நடத்த மட்டும் செய்கிறார். அவரின் சொந்த கட்சி நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் ஆனால் நம் தமிழின மீனவர்களின் வாழ்வாதரத்திற்காக இன்று வரை எந்த முடியையும் புடுங்கவில்லை..

இதையெல்லாம் பார்த்த பிறகு இன்னும் நீங்கள் ஜெயாவை விட இவர் மேல் என்று சொல்லுவீர்கள் என்றால் நிச்சயமாக அவருக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழர் நலனைப்பற்றியோ தமிழினத்தை பற்றியோ பேச எந்த அறுகதையும் இல்லை அவர் தன் பெண் கனிமொழியை வைத்து அரசியல் வியாபரம் செய்வது போல் உங்கள் வீட்டில் உள்ளவர்களை வைத்து நீங்களும் செய்யுங்கள் எங்களை பற்றி கவலைப்பட வேண்டாம் எங்களுக்கு கருணாவும் தேவை இல்லை ஜெயும் தேவையில்லை.

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து. - குறள் 828

பொருள் - சிலர் நம்மை நம்பவைப்பதற்கும், நம்மிடம் இரக்கம் பெறுவதற்கும் அழுது கண்ணீர் விடுவார்கள். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஏன் என்றால் அவர்கள் அழுது வடிக்கும் கண்ணீரிலும் கெட்ட எண்ணம் மறைந்திருக்கும், கூப்பிய கையினுள்ளே மறைந்திருக்கும்
கொலைக்கருவியைப் போல. ஆகவே நட்புக்கொள்ளவரும் எல்லோரையும் நம்பாதீர்கள் என்று எச்சரிக்கிறார்.

இது தான் கருணாவின் நிலை, ஜெயா எதிரி, எதிரி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எதிர்த்து நின்று போராடும் வலிமை தமிழர்களுக்குண்டு. ஆனால் துரோகியால் தமிழினம் பட்ட துன்பங்கள் எட்டப்பன் காலத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் துரோகியை நம்பி சோடை போவது கூடாது என்பதை இனிமேலாவது நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

திரும்பவும் சபா இருந்திருக்க வேண்டும் சகோதர யுத்தம் என்று உளறி கொட்டுவதற்கு முன் சென்ற வருடம் சபாவின் தாயார் சென்னையிலே மரணமடைந்தார் அதற்கு தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற தோழனின் தாயார் மறைவிற்கு சென்று இருக்க வேண்டாம், ஒரு இரங்கற்பா பாடினாரா உங்கள் தலைவர் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிடில் தாயாரை வைத்தும் அரசியல் செய்யும் அவரை போல நீங்களும் உங்கள் தொழிலை தொடருங்கள்..

நன்றி - இனியொருவிலிருந்து பாலாவின் கார்டூன்கள் மற்று ஈழம்5.கொம்