Tuesday, October 22, 2013

மாற்று அரசியலும் மாற்ற கிளம்பிய மன்னார்களும் பகுதி - 4

அரசியல் விவாதங்கள் அதற்கான ஆரோக்கியமான போக்கு என்பது வைக்கும் கருத்துகளுக்கு எதிரான தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டு விளக்கங்களே ஆனால் இப்பொழுது நடந்து வரும் விவாதத்தில் வைக்கப்பட்ட கேள்விகள் புறந்தள்ளப்பட்டு இத்தனை நாள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்காமல் இருந்துவிட்டு இன்று வந்து உங்கள் கொள்கை என்ன என்று இப்பொழுது கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ஒரு புறம். மறு புறம் தோழரின் உயிர் முக்கியம் அதனாலேயே சமரசம் செய்து கொண்டோம் 9 கோரிக்கைகளும் நிறைவேற்ற முடியாதவை அதில் ஒரளவாது ஒன்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது அதனாலேயே என்று வியாக்கியானங்களும் முன் வருகின்றன. இப்படி எந்த விதமான அரசியல் தெளிவுமே இல்லாமல் வைக்கப்படும் கருத்துகளுடன் தான் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் கோரிக்கையை நாம் இந்தியாவிற்கு வைத்து அதற்கு தான் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

இங்கு கேட்கப்படும் கேள்விகள் புரிந்தாலும் அதை குறித்த பதிலை அளிப்பதை விட கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடுவதே அரசியல் என்ற நிலையில் இருக்கிறார்கள் சிலர், அவர்களுக்காக திரும்பவும் அதே கேள்விகள். தோழர் தியாகுவின் போராட்டத்தின் முதல் கோரிக்கை கமென்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க கூடாது, அவ்வாறு நடத்துவதை தடுத்து நிறுத்த முடியாவிடில் இந்தியா கலந்து கொள்ள கூடாது, அல்லது இந்தியாவின் தலைமை அமைச்சர் கலந்து கொள்ள கூடாது என்பதே. இதில் கோரிக்கையை முதல்நாள் ஆரம்பித்த அன்றிலிருந்து பேச வேண்டியது கமென்வெல்த் மாநாட்டை நடத்தாதே என்பது தான், இந்திய பிரதமரிடம் இருந்து வந்த கடிதம் இதில் எதையும் உறுதி செய்யவில்லை தமிழர்களின் நலன் கருதி முடிவு செய்வோம் என்று தான் இருந்தது. இது தான் போராட்டம் தொடங்கி முடிந்த வரை நடந்த ஒட்டுமொத்த நிகழ்வு. இதில் யாரும் எந்த குறையும் சொல்லவில்லை ஆனால் இங்கு ஒட்டுமொத்தமாக நிகழ்வு இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என்ற கருத்திற்கு எதிராக செல்ல அனுமதித்தது ஏன் என்பது தான் கேள்வி.

உண்ணாவிரதம் நடந்த பொழுது பல்வேறு போராட்டங்கள் தோழமை இயக்கங்களாலும் எடுக்கப்பட்டது கூட்டமைப்பில் இருக்கும் இயக்கங்களாலும் எடுக்கப்பட்டது அதை ஊடகங்கள் தங்கள் தேவைக்கு திரித்தது எல்லாம் எப்பொழுதும் நடக்க கூடியது. ஆனால் தங்களின் சொந்த இணைய தளங்களில் கூட முதல் கோரிக்கையான கமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்பதை பதியாமல் மாற்றி இந்தியா கலந்துக்க கூடாது என்பதை பதிந்தது ஏன்..

கடைசியாக சென்ற சனிக்கிழமை மாணவர்கள் மெரினாவில் நடத்திய போராட்டத்தில் கூட ஊடக திரிப்பு என்பது அரசுக்கு சாதகமாகவே இருந்தது அதாவது போராட்டம் நடத்தப்பட்டது கமென்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க கூடாது என்பதை வலியுறுத்தி அங்கு பேட்டியளித்த மாணவ மாணவிகளும் தெளிவாக சொன்னார்கள். ஆனால் செய்தி ஒளிபரப்ப பட்டது இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி என்று சொன்னார்கள்.


NewsX News. about Wlakathon


அப்படி ஊடகங்கள் திரித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது, தினத்தந்தியோ, தினமலமோ, தி இந்துவோ செய்தியை தனது நோக்கத்துடனே, அரசுக்கு ஜால்ரா அடித்து தான் வெளியிடும் அதைப் பற்றி கவலையில்லை சமூக ஊடகமான முகநூல் பக்கத்தில் நீங்கள் போராட்டத்தின் நோக்கமாக பதியும் பொழுது இலங்கையில் கமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்று பதிந்து இருக்கலாமே அங்கேயும் நீங்கள் அதை செய்வதில்லை.



இந்த பதிவு உங்களின் சொந்த மாணவர் போராட்ட குழு சென்னையில் நடத்திய இரயில் மறியலைபற்றி உங்கள் பக்கத்தில் தகவலாக பதியும் பொழுது இப்படியா பதிவீர்கள். இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று மட்டும் இந்த போராட்டம் நடந்தது உண்ணாவிரதம் ஆரம்பித்து 11ம் நாள் அன்றே போராட்டத்தின் நோக்கமாக நீங்கள் கூறுவது இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பது தான்.

இன்னும் இருக்கு போராட்டத்தின் 14ம் நாள் கோயம்பேட்டில் போராட்ட குழு மாணவர்கள் தாக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வந்ததாக தெரியவில்லை ஆனால் முகநூலில் பகிர்ந்தீர்கள் பலருக்கும் போய் சேர்ந்தது ஆனால் அதில் திரும்பவும் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற வாசகங்களே இடம் பெற்றுள்ளது. நமது மாற்று ஊடகமான முகநூலில் கூட காமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்பதை வலியுறுத்தும் அளவிற்கு இல்லாமல் போனது ஏனோ? இது இந்த நிகழ்வு மட்டுமல்ல அனைத்து நிகழ்விலும் தொடர்ந்து தங்களுடையை பதிவுகள் இப்படித் தான் இருக்கிறது.

உண்ணாவிரத செய்தியை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யும் பொழுது நாம் நம்புவது மாற்று ஊடகங்களையும், சுவரொட்டிகளும் தான். நமது செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் வேறு வழி நமக்கு இல்லை. ஆனால் அந்த சுவரொட்டிகளில் ஆரம்பம் முதல் எங்கும் “காமென்வெல்த் மாநாட்டை நடத்தாதே” என்று பதிவு இல்லை, இனப்படுகொலை இலங்கையில் காமென்வெல்த் மாநாடா?!!?? என்று பதிந்து கேள்விக் குறியோ ஆச்சரிய குறியோ மட்டும் தான் இருக்கிறது. அதற்கடுத்து இந்தியாவை மறிப்போம் இது தான் அரசியல் தகவலாக மற்றோர் மாற்று ஊடகத்தில் தாங்கள் கொடுக்கும் செய்தியா??



இப்படி ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்தின் மைய நோக்கத்தை சிதைக்கும் விதமாக பதிவுகளும் சுவரொட்டிகளும் நாங்கள் பதிவிடவில்லை ஆனால் தங்களின் பதிவுகள் தான் சொல்கிறது. உண்ணாவிரத போராட்டம் எத்தனையாவது நாள் என்று அறிவிக்கும் சுவரொட்டியில் எதற்கு நடக்கிறது என்று கேட்டால் இந்தியாவை மறிப்போம் என்பது மட்டும் தான் இருக்கிறது எதற்காக மறிப்போம் ஏன் மறிப்போம் என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் கற்பனை செய்து கொள்ளலாம் பாமர மக்கள் தினமும் தன் வாழ்க்கையை நகர்த்த போராடும் மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதை அருகில் இருக்கும் தமிழர் தன்மான பேரவை சுவரொட்டியில் தெளிவாக அதுவும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுவரொட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படி போராட்டத்தின் நோக்கதை சிதைக்கும் விதமாகவே பதிந்து போராட்டம் முடிக்கும் பொழுது இந்தியா பங்கேற்க கூடாது என்று இந்திய ஆளும் அரச வர்கத்தின் சிந்தனையை பிரதிபலிக்கும் கருணாநிதியின் கோரிக்கையின் கீழ் முடிக்கப் படும்பொழுது இத்தனை நாள் தோள் கொடுத்து நின்ற தோழர்களுக்கு எப்படி இருந்து இருக்கும். இத்தனை நாள் போராட்டங்கள் பல நாம் செய்திருந்தாலும் அதன் நோக்கம் மக்களை சென்றடைந்ததா என்று கேட்டால் இல்லை என்பதை தெளிவாக சொல்ல முடியும். எனென்றால் இங்கு மக்களுக்கான அரசியல் என்பது கருணாநிதியின் குரலும் ஜெயலலிதாவின் குரலும் பிரதிபலிப்பது தான் என்ற நிலையில் இருக்கிறோம். இவர்கள் இருவருமே என்றும் ஈழவிடுதலைக்கு ஆதரவானவர்களாக முழுமையாக தங்களை காட்டிக் கொண்டவர்கள் இல்லை.


தமிழக மக்களிடையே நடக்கும் அரசியல் மாற்றங்களுக்காக அவ்வப்பொழுது வேடமிடும் வேடதாரிகள், தமிழக மக்களிடம் ஈழப் படுகொலையை கொண்டு சேர்த்து இந்த வேடதாரிகளுக்கு எதிராக அவர்களின் மனதை மாற்றிய பெரும் பங்கு மாற்று அரசியலை உருவாக்க ஓடிவந்த கூட்டத்தையே சாரும். ஆனால் இங்கு இந்த போராட்டத்தை பொறுத்தவரை அனைத்துமே தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை தெளிவாக இங்கிருக்கும் பதிவுகளால் உணர்ந்து கொள்ளலாம். 

போராட்டம் தோழமை அமைப்புகளின் கோரிக்கையினாலும், பிரதமரின் கடிதத்தாலும் தான் உண்ணாவிரதம் முடிக்கப்பட்டது தோழர் தியாகுவின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதில் மகிழ்ச்சியே. ஆனால் இதை கடந்த ஞாயிற்றுக் கிழமை அத்தனை தோழமை இயக்கங்களும், தலைவர்களும் வந்த பொழுதே அறிவித்திருந்தால் இன்று கோரிக்கை சிதைக்கப்பட்டு இந்தியா பங்கேற்க கூடாது என்ற நிலையில் இருக்கும் நிலையை அடைந்திருக்காது.. இன்று கருணாநிதி மற்றுமொரு இயேசுவாக உருவாகி தோழர் தியாகுவின் உயிரை காப்பாற்றி கொடுத்திருக்கிறார். வாழ்க மாற்று அரசியல் வாழ்க.. கொண்டு செல்லட்டும் இந்த அரசியல் தமிழின மீட்சியின் பாதையில்... 

Thursday, October 17, 2013

மாற்று அரசியலும் மாற்ற கிளம்பிய மன்னார்களும் - பகுதி 3

ஆரம்பக் கட்டுரையிலேயே சொன்னேன் எளியவர்கள் எடுக்கும் ஒரு போராட்டம் அதன் குரல் எப்படி வலியவர்களால் சிதைக்கப்படும் என்று அது இன்று முற்றும் முழுவதும் ஜெயலலிதாவின் கடிதம் மூலமாக பாமர மக்களுக்கு சென்றடைந்து இருக்கிறது. ஆம் தியாகு தோழர் முதன் முதலில் உண்ணாவிரதம் என்று அறிவித்ததை நான் செங்கொடி நினைவு தினம் அன்று காஞ்சிபுரத்தில் வைத்து அறிந்துகொண்டேன் துண்டறிக்கை வாயிலாக. அப்பொழுது கோரிக்கைகளை படிக்கவே இல்லை தியாகு தோழரும் நிகழ்வுக்கு வந்திருந்தார் உடனடியாக சென்று எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். வேறு ஒன்றும் இல்லை இங்கிருக்கும் அரசியல் சக்திகளை நம்பி இந்த போராட்டத்தில் இறங்காதீர்கள் உங்களை சாகடித்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள் வேண்டாம் என்றேன். அவர் அலுவலகம் வாருங்கள் பேசலாம் என்றார் ஆனால் அப்பொழுதே சொன்னேன் உங்களின் வேலை வருங்கால சந்ததிகளை வழிநடத்துவது, சர்வதேச நகர்வுகளை கணித்து எங்களுக்கு உணர்த்துவது, இத்தகைய உண்ணாவிரத செயல்பாடுகள் இல்லை என்று சொல்லி என் எதிர்ப்பை பதிவு செய்து முடித்தேன்.

பிறகு என் அறைக்கு வந்த பிறகு தான் கோரிக்கைகளை படித்தேன் அதில் முதலாவதான கோரிக்கை காமென்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்பது, மிகவும் அரசியல் பூர்வமான கோரிக்கை இப்பொழுது இந்த மாநாட்டை அனுமதித்தால் அடுத்து ராஜபக்சே உலக அரங்கில் மிகப்பெரும் தலைவராக மதிக்கப்படுவார். காமென்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த இரண்டு ஆண்டுகள் இவர் தான் தலைவராக இருப்பார் இது இனப்படுகொலை நடத்திய இவரை உலக அரங்கின் முன்பு நாம் குற்றவாளியாக நிறுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு தடைக் கல்லாக அமையும் என்பதால் வைக்கப்பட்ட கோரிக்கை ஆனால் இன்று அந்த கோரிக்கை முழுவதுமாக சிதைந்துவிட்டது. இதற்கு காரணம் தோழர் தியாகுவும் தான்.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் 18ம் தேதியே கருணாநிதி காமென் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்றார், எப்பொழுதும் இவருக்கு எதிராக பேசுவதை தமிழக மக்களுக்கு செய்யும் சேவையாக கருதும் ஜெயலலிதாவும் இன்று காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்கிறார். ஆகமொத்தம் இந்தியாவின் ஆசையை இவர்கள் இருவரும் பிரதிபலிக்கிறார்கள் ஒருமித்த குரலில். இதில் எளியவர்களாகிய நமது போராட்டம் காமென்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி இலங்கைக்கு அங்கிகாரம் கொடுக்காதே என்ற குரல் இப்பொழுது மங்கி மறைந்துவிட்டது. இதை கருணாநிதியும் ஜெயலலிதாவின் உரத்த குரல்கள் அதுவும் பாமரனுக்கு தெரிந்த குரல்களால் மட்டும் மங்கவில்லை. தியாகுவின் போராட்டத்தை பாதுகாத்து வழிநடத்திய கூட்டமைப்பும் சேர்ந்தே இருட்டடிப்பு செய்துள்ளன. இந்த கூட்டமைப்பின் முக்கிய அங்கத்தினர் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் இந்த அமைப்பில் இருந்து அருண் சோரி தான் அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்பவர், கட்சியின் செய்தி தொடர்பாளர். இவருக்கு ஒரு வார்த்தையை மாற்றி கூறினால் தவறான பொருள் படும் என்பது புரியாமல் போனது தான் அதிசயமாக உங்களுக்கு இருக்கும் ஆனால் கடந்த பல வருடங்களாக இவரை பார்த்து வரும் எனக்கு அதிசயமாக தெரியவில்லை.

இந்த பதிவில் தோழர் தியாகு போராட்டத்தை முடித்துக் கொண்டது இந்தியா காமென்வெல்த் மாநாட்டில் பங்கு கொள்ள கூடாது என்ற நோக்கத்துடன் மட்டுமே என்று அவரின் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டத்தை அறிவிக்கும் பொழுது அறிக்கையாக சமர்ப்பிக்கின்றனர். 

சரி இவர்களின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவும் சரி நடத்திய போராட்டங்களில் காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கை தான் முன்னிறுத்தப் பட்டுள்ளதை நாம் தெளிவாக இங்கு இருக்கும் தரவுகளில் தெரிந்து கொள்ளலாம். தோழர் தியாகுவின் காமென் வெல்த் மாநாடு நடக்க கூடாது அப்படி மாநாடு நடந்தால் இந்தியா பிரதமர் பங்கு ஏற்க கூடாது என்று ஒரு தேர்வாக தான் கோரிக்கை வைத்தார். ஆனால் முதன்மை கோரிக்கையை விடுத்து தேர்வாக (Choice) வைத்த கோரிக்கையை தான் தமிழ்நாடு மக்கள் கட்சி முன்னிறுத்தி போராடி வருகிறது, கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையை தான் சொல்கிறார்கள்.

இந்திய பிரதமரின் கடிதமும் கலந்து கொள்வதை பற்றி ஆலோசனை செய்வோம் என்கிறதே ஒழிய, காமென்வெல்த் மாநாட்டை இனப்படுகொலை செய்த இலங்கையில் நடத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்வோம் என்று சொல்லவில்லை. தமிழ்நாடு மக்கள் கட்சி இப்படி கோரிக்கைகளை திசை திருப்புவதும் போராட்டங்களை திசை திருப்புவதையும் தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு தடையாக யாராவது இருப்பார்கள் என்றால் அவர்களை ஓரங்கட்டும் பணியை தெளிவாக செய்யும். அருண் சோரி இன்று தான் தமிழ்நாடு மக்கள் கட்சி எனும் பெயரில் இயங்குகிறார் இதற்கு முன்பாக தமிழர் இளைஞர் எழுச்சி பாசறையாக செயல் பட்ட பொழுது அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது அதில் மே 17 திருமுருகனுக்கும், திருநெல்வேலி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளருக்கும் பொறுப்புகள் முதலில் வழங்கப்பட்டது ஆனால் அது யாரை கேட்டார்கள் இல்லை பொறுப்புகளை அறிவித்த பிறகு எப்படி மாற்றினார்கள் என்பது யாருக்குமே தெரியாது அடுத்து வந்த அறிக்கைகளில் இவர்கள் பெயர் மாயம் ஆனது.
கூட்டமைப்பு என்று ஒன்றை ஏற்படுத்தி அதில் தங்களுக்கு பிரச்சனை கொடுப்பவர்களை அதாவது கூட்டமைப்பு எதற்காக ஏற்படுத்தப் பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகும் பொழுது பிரச்சனை கொடுப்பவர்களை ஒதுக்கி வைப்பது இந்த அருண்சோரிக்கு கைவந்த கலை. ஒவ்வொரு கூட்டமைப்பிலும் பெரிய ஆட்கள் கொளத்தூர் மணி, பாவேந்தன் போன்றவர்களை முன்னிறுத்தி தனது வேலைகளை பின்னால் இருந்து செய்துவிட்டு செல்வார் இந்த அருண்சோரி. அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பிலும் இப்படியே செய்தார்கள், இதில் மேலும் நகைப்புக் குரிய விசயம் என்றால் இடிந்தகரைக்கு சென்று அங்கு போராடி கொண்டிருப்பவர்களிடம் தலைமை சரியில்லை மாற்ற வேண்டும் என்று சொன்னது தான். இப்படி இவர் செய்த தகிடுதித்தங்கள் பல. ஆனால் முதன் முதலாக ஜுன் 26 நினைவேந்தலுக்காக இவரை அனுகி கேட்டபொழுது கூட்டமைப்புகள் மீது நம்பிக்கை இல்லை என்று என்னிடமே நேரடியாக சொன்னவர் தான் இவர்.

முத்துகுமாரின் மறைவிற்கு பின் முத்துகுமார் இளைஞர் எழுச்சி பாசறை என்று தமிழகம் முழுவது 120 பேர் இணைந்து உருவாக்கி 2009 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக வேலை பார்த்தனர். ஏன் காரைக்குடியில் இன்று நாம் தமிழரில் இருக்கும் ராஜிவ்காந்தி அவர்களை வேட்பாளராக சிதம்பரத்திற்கு எதிராக நிறுத்தி காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் செய்தார்கள். அப்பொழுது அருண்சோரி, சதீஸ், பாலன் போன்றோர் ஒட்டரசியல் நமது நோக்கம் அல்ல என்று சொல்லி ராஜிவ்காந்தியின் சின்னத்தை சொல்லாமல் சிதம்பரத்திற்கு எதிராக மட்டும் பிரசாரம் செய்யவேண்டும் என்று சொல்லி செயல்பட்டார்கள். ராஜிவ்காந்தியின் சின்னம் என்ன என்று யாருக்குமே தெரியாமல் தான் இருந்தது கடைசிவரை. இப்படி நடைபெற்ற பிரசாரத்தின் வாயிலாக தான் அன்று தோல்வியுற்ற சிதம்பரம் குறுக்குவழியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இன்று அமைச்சராக இருக்கிறார். இப்படி மிகப்பெரும் சாதனை செய்த முத்துகுமார் இளைஞர் எழுச்சி பாசறையும் அதன் உறுப்பினர்களும் இன்று எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாமல் போனது அருண்சோரியின் ஆக மிகச்சிறந்த பணியாகும்.

இப்படி பல கூட்டமைப்புகளை சரியான முறையில் செயல்படவிடாமல் முன்னின்று அந்த கூட்டமைப்புகளை இழுத்து முடுவது, அதில் மே 17 இயக்கம் இருந்தால் அவர்களை எப்படியாவது ஓரம் கட்டுவது. தியாகு தோழர் உண்ணாவிரதம் ஆரம்பித்த பொழுது கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கவில்லை தியாகு தோழர் முதல் முறை கைது செய்யப் பட்ட அன்று ஒரு அலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் ம.ஜ.க அமைப்பை சேர்ந்த தோழர் டெசோ அமைப்பினர் வந்தால் அவர்களை கூட்டமைப்பில் சேர்ப்பீர்களா என்று கேட்ட பொழுது சேவ் தமிழ்ஸ் செந்தில் கோரிக்கை தான் முக்கியம் யார் வந்தாலும் இணைத்துக் கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு முன்பாகவே 3ம் தேதி டிகேஎஸ் இளங்கோவனும் பொன்முடியும் தியாகுவின் உண்ணாவிரதத்திற்கு எழுந்தருளி ஆசிர்வாதம் செய்து சென்றனர்..

டெசோவின் தலைவர் ஆகஸ்ட் 18ம் தேதியே தோழர் தியாகுவின் முதன்மை கோரிக்கையை கேட்காமல் இந்தியா பங்கேற்க கூடாது என்ற தேர்வு(choice) கோரிக்கையை தான் முன்னிறுத்தினார். அவர்கள் எப்படி ஒத்த கருத்துடையவர்களாக இவர்களுக்கு தெரிந்தது என்பது யாருக்கும் புரியாத புதிர். இப்படி தோழர் தியாகுவின் போராட்ட நோக்கத்தை கருணாநிதியிடம் அடகு வைத்தார்கள், ஆனால் வட்டியை ஜெயலலிதா இவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ இன்று தனது பிரதமருக்கு எழுதிய கடிதம் மூலமாக வசூலித்து விட்டார்.

அருண் சோரியின் சில நடவடிக்கைகள் அதுவும் இங்கு கோரிக்கை சார்ந்த நடவடிக்கைகளை அதில் நடத்திய தில்லாங்கடிகளை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன். தமிழினம் சார்ந்த பலவற்றில் இவருடன் சேர்ந்து தமிழனாக நிற்க முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன அது மற்றொரு சமயத்தில்..

இப்பொழுது நெடுமாறன் அய்யாவின் முள்ளிவாய்க்கல் முற்றம் நிகழ்விலும் உள்ளே நுழைந்து இருப்பதாக அறிகிறேன்.. அதுவும் மாணவர்கள் பங்கேற்கும் சுடர் பயணத்தில் இவருக்கு என்ன வேலை என்பது எனக்கும் புரியவில்லை. இவர்களுடன் சேர்ந்து கொண்டு தான் மாணவர் போராட்டத்தில் இயக்கங்கள் தலையிடுகின்றன என்று சில காலம் முன்பாக நடந்த மாணவர் போராட்டத்தின் போது குற்றம் சாட்டினர். ஆனால் அன்று அங்கு மாணவர் போராட்டத்தில் உதவி செய்த மற்ற இயக்கத்தினர் யாரும் மாணவர் அமைப்பை தங்கள் இயக்கத்துடன் இணைத்துக் கொள்ளவில்லை. தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு இன்று தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாணவர் கிளையாக செயல்படுகிறது..

கடைசியாக கொசுறு செய்தி… ஒரு பக்கம் நெடுமாறன் அய்யாவை விமர்சித்துக் கொண்டே மறுபக்கம் இவர்கள் சுடர் பயணத்தை முன்னெடுக்கிறார்கள் வாழ்க இவர்களின் மாற்றத்திற்கான மாற்று அரசியல்…..
இதை பார்த்துவிட்டு மக்கள் இயக்கங்களின் ஒற்றுமையே என்று சொல்பவர்கள் ஏன் அனைத்து இயக்கங்களையும் தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தில் இணைக்கவில்லை என்று கேள்வி கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது... அவர்களாலும் பதில் சொல்ல முடியாது இதை தான் பாவேந்தன் அய்யாவிடம் கேள்வியாக வைத்தேன் இன்று வரை பதில் இல்லை... 

Wednesday, October 16, 2013

மாற்று அரசியலும் மாற்ற கிளம்பிய மன்னார்களும் - பகுதி 2

பகுதி 2..


முதலில் பழைய விசயங்களை திரும்ப பார்ப்போம் தோழர் தியாகு மிகப் பெரிய அறிவுஜிவியாக தமிழ் தேசிய கருத்தியலாக்கத்தில் உலாவியவர். அவர் ஒரு உண்ணாவிரதத்தை இங்கு இருக்கும் பல தமிழர் நலன் சார்ந்த இயக்கங்களும் கட்சிகளும் ஏன் தீவிர தமிழ் தேசிய இயக்கங்களும் கேட்டு கொண்டபொழுது உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். நான் ஆரம்பித்த போராட்டத்தை நீங்கள் கையில் எடுத்து வீரிய படுத்துங்கள் என்றார் அனைவரும் செவி சாய்த்து அதற்கான வேலையில் ஈடுபட்டோம் ஆனால் அவர் இவர்கள் எல்லாம் தேவையில்லை என்று அவரின் முதல் கோரிக்கையான. “இலங்கையில் காமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது” என்ற கோரிக்கையை தொலைத்துவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது இன்று எனென்றால் உங்கள் கோரிக்கையை சிரமேற்கொண்டு நாங்கள் போராடுகிறோம் என்ற சொன்ன இயக்கங்களின் கோரிக்கையை மறுத்துவிட்டு.

ஒரு கடிதம் வந்த பிறகு தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார் மகிழ்ச்சியே எதோ ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறதே இது வரை. எனென்றால் முத்துகுமாரில் இருந்து விஜயராஜ் வரை இழப்புகளேயே சந்தித்து வந்த நமக்கு இது மகிழ்வான விசயமே. ஆனால் முடித்து கொண்ட உண்ணாவிரதத்தை இத்தனை நாள் தன்னுடன் இரவும் பகலும் உடன் இருந்தவர்களை வைத்து முடித்துக் கொள்ளவில்லை, திமுக கூட்டணி உறுப்பினர்களை முன்னிறுத்தி முடித்துக் கொண்டார். இது நன்றாகவே இருக்கிறது தொடரட்டும் அவரது பணி திமுகவுடன்.

நாம் நம் பணியை தொடருவோம் தமிழ் தேசியத்திற்கான பாதையில்…

அடுத்த ஆள் அருண் சோரி இவருடன் எனது முதல் சந்திப்பு நியாபகம் இல்லை மிகவும் அருமையான தோழர். தனது சொந்த வாழ்க்கையை பணையம் வைத்து இன்றுவரை களம் காண்பவர். ஆனால் எனக்கு புரியாதது ராஜ்குமார் பழனிசாமி மே 17 அன்று நடத்திய நினைவேந்தல் நிகழ்வில் எந்த கட்சி மதம் சாதி பார்க்காமல் கலந்து கொண்டோம் பலர். அது திருமுருகனுக்கும் உத்வேகமாக அமைந்தது அன்று அடுத்த வருடம் இதே நாளில் மிகப்பெரிய ஒன்றுகூடலை ஈழத்தமிழ் மக்களுக்கு நினைவேந்தலாக சமர்பிக்க வேண்டும் என்று வெளியிட்டார். ஆனால் மறு நாள் காட்சிகள் மாறியது வெகு சீக்கிரத்தில் அதை நடத்த வேண்டும் என்று அவர் அழைத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கலந்தாய்வுக்கு வந்த ஒரு 15 பேர் ஏற்றுக் கொண்டோம். ஆனால் அவர்களின் முகம் எனக்கு நியாபகம் இல்லை அவர்களை அன்று தான் கடைசியாக பார்த்தோம், ஆனால் பணி தொடர்ந்தது. அன்று நான் மே 17 இயக்க உறுப்பினர் கிடையாது.

ஆனால் இப்படி ஒரு நிகழ்வு தேவை தமிழ் சமூகத்திற்கு அதுவும் பொது மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக நடத்தவேண்டும் என்ற வெறி இருந்தது அனைத்து இயக்கங்களையும் இதில் பங்குகொள்ள முதலில் அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதில் பேச வேண்டிய பொறுப்பை செய்து கொண்டிருந்த பொழுது மே 17 இயக்கம் நடத்திய ஒரு கருத்தரங்கில் தற்செயலாக இல்லை, அதற்கு முன்பே நான் அருண் சோரியை அவரின் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட பொழுது அந்த கருத்தரங்கம் வருகிறேன் அங்கு பேசலாம் என்றார். அன்று அவரின் இயக்கத்தின் பெயர் தமிழர் இளைஞர் எழுச்சி பாசறை.. இதற்கு முன்பு முத்துகுமார் இளைஞர் எழுச்சி பாசறையை காயடித்த இதே அருண்சோரியின் கதையெல்லாம் எனக்கு தெரிந்தாலும் இவரையும் இணைத்து மேற்கொள்ளுவோம் என்று அழைக்க போன பொழுது தான் இது நடந்தது.

ஆம் மே 17 இயக்க கருத்தரங்குக்கு சொன்னது போல் வந்தார் அப்பொழுது ஜூன் 26ம் தேதி நினைவேந்தல் நடத்தலாம் என்று இருக்கிறோம் நீங்களும் இணைய வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அருண் சோரி சொன்னார் மே 17 இயக்கம் இதை நடத்தப்போகிறது இதில் நான் ஏன் இணைய வேண்டும் என்று கேட்டார். அதற்கு நானும் மே 17 இயக்கம் கிடையாது காரியத்தை மட்டும் பார்ப்போம் என்றேன், இல்லை சரிவராது என்றார். சரி மே 17 என்பதற்கு பதிலாக ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தி அதன் கீழ் பணி புரிவோம் என்றேன். அப்பொழுது அருண் சோரி நான் ஏகப்பட்ட கூட்டமைப்பு பார்த்துவிட்டேன் அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். இது நடந்தது மே மாதம் 2011ம் ஆண்டு அதன் பிறகு தமிழகத்தில் பல கூட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது அனைத்திலும் இவர் தான் முதல் ஆளாக இருப்பார் மைக்கை பிடித்துக் கொண்டு.

2011 மே மாதம் கூட்டமைப்பில் நம்பிக்கை இல்லாத இவர் அதன் பிறகு எப்படி கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்து அனைத்து கூட்டமைப்பு போராட்டங்களில் மைக்கை பிடிக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் எனக்கு தெரிந்தது வேறு ஏனென்றால் இதை போன்ற கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கு கொண்டவன் அதுவும் சென்னையில் இருந்து திருச்சி வரை சென்று இவர்கள் நடத்திய கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கு கொண்டவன் ஒவ்வொரு கூட்டமைப்பிலும் ஒரு காலம் வரை அதாவது தியாகு உண்ணாவிரதத்திற்கு முன்பு அனைத்து கூட்டமைப்பிலும் மே 17 இயக்கம் கூப்பிட்டு கலந்துரையாடுவார்கள். ஆனால் இந்த தியாகு உண்ணாவிரதத்தில் மே 17 இயக்கம் இல்லை…

ஆம் முதலில் தியாகு அவர்கள் உண்ணாவிரதம் இருக்க போகிறேன் அறுவித்தது தமிழ் தேசிய விடுதலை இயக்கதின் பெயரில்.. அப்படியே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் அதன் பிறகு இலங்கையில் காமென்வெல்த் மாநாட்டை நடத்தாதே என்று சொல்லி ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது ஆனால் அந்த இயக்கம் இந்த கோரிக்கையில் நிலையாக நிற்கிறதா என்றால் இல்லை…


இன்னும் தொடரும்..

மேலே இருக்கும் படத்தில் இருப்பது தமிழ்நாடு மக்கள் கட்சியின் ஒருவரான திவ்யா நடத்தும் மாணவர் இயக்கம். அதில் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்திய புறக்கணிக்க வேண்டும் என்று தான் இருக்கிறது. இதில் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சுக்கும் ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் மாநாடு நடக்க கூடாது இலங்கையில் என்பதற்கு வேறுபாடுகள் உள்ளது.

அனைத்தையும் தாண்டி மாநாடு நடந்தால் அடுத்த இரண்டு வருடத்திற்கு ராஜபக்சே தான் தலைவர், இனப்படுகொலை செய்த ஒருவரை அனைத்து நாடுகளும் வரவேற்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். இதை உணர்ந்தவர்கள் தான் நாம் ஆனால் ஆதரிக்க கோருபவர்களை பிறகு பார்க்கலாம்..

இவர்களின் கோரிக்கை இந்தியா கமென்வெல்த் மாநாடை புறக்கணிக்க வேண்டும் என்பது தான்.. கருணாநிதியும் அதையே தான் வலியுறுத்தி வருகிறார் இவர்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம்... 

மாற்று அரசியலும் மாற்ற கிளம்பிய மன்னார்களும்..பகுதி 1


எளியவர்களில் சொல் அம்பலம் ஏறாது என்பது ஒரு பழைய வழக்கு, இந்த வழக்கின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டு அரசியலும் பல்லாண்டுகளாக நடந்து கொண்டுள்ளது. அதுவும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பழைய வழக்கு திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மிகவும் அருமையான வாய்ப்பாக மாறியது. அதாவது இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள்,

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த வரை அதாவது அவர் ஆட்சியை கைப்பற்றி சாகும் வரை கருணாநிதிக்கு எதிர் அரசியல் என்பது வெறும் அறிக்கைகள் மட்டுமே. அதாவது தமிழகத்தின் தன்னையும் தன் கட்சியையும் தக்கவைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர் காலையில் எழுந்து காலை கடன் கழிக்கவில்லை என்று செய்தி வந்தால் கூட அதற்கும் அறிக்கை விடுவார். ”ஒரு மாநில முதல்வர் வாங்கிய கடனை காலையில் திரும்ப கொடுக்கவிடீல் நாட்டில் எப்படி சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்” என்று. இது செய்தி தாள்களில் ஊடகங்களில் வெளிவரும் பாவம் அவர்களும் என்ன செய்வார்கள் இவர்களை தவிர வேறு அரசியல் தலைவர்கள் இல்லாத நேரத்தில் அதுவும் எம்.ஜி.ஆர் தன்னை எதிர்க்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தாலே ஒன்று வளைத்துப் போடுவார், இல்லையென்றால் போட்டுவிட்டு வளைப்பார் அவர் குடும்பத்தை.

இத்தகைய கட்டத்தில் அறிக்கைகள் தான் மக்களுக்கு தமிழகத்தின் வருங்காலத்தை நோக்கிய அரசியலாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவும் இதே அரசியலை தான் கையில் எடுத்தார். ஜானகியும் இவரும் சேர்ந்து அடித்த கூத்துகள் முடிந்து ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கருணாநிதி அரியணை ஏறினார். இவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பதே தமிழக மக்களுக்கான அரசியல் என்று கடைசி வரை எதிர்கட்சியாக இருந்தபொழுது எந்த விதமான போராட்டங்களை முன்னெடுக்காமல், வெறும் அறிக்கை போரிலும், ராஜிவ் காந்தியின் மரணம் எனும் சித்துவிளையாட்டால் கிடைத்த அனுதாபத்தையும் தனதாக்கிக் கொண்டு முதல்வர் ஆனார் அதுவும் ஆகப்பெறும் எதிர்கட்சியாக இருந்த திமுக இரண்டு இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது, ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சி எதிர்கட்சியாக அமர்ந்தது.

இதன் பிறகு கருணாநிதியும் அவர் கட்சியின் இருப்பும் திரும்பவும் சந்தேகத்துக்கு இடமானது தோழர் வைகோ அவர்களை வெளியேற்றியதால் ஆனால் அசராமல் அறிக்கை போரை மட்டும் திரும்பவும் நடத்தி மறுபடியும் ஆட்சியை பிடித்தார், ஜெயலலிதாவை தோற்கடித்தார். இப்படி தான் கடந்த 22 ஆண்டு காலமாக தமிழக அரசியல் ஒருவர் கையை விட்டு அடுத்தவர் கைக்கு என்று மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி அறிக்கை விடுவதையே அரசியலாக மாறிய பின் மக்களும் இந்த தலைவர்களின் அறிக்கைகள் தான் தங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது என்று இவர்களின் குரல்களை அறிக்கை வாயிலாக கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

அப்படித்தான் ஈழத்தில் 2009ல் ஒரு இனப்படுகொலை நடந்த பொழுது அன்று முதல்வராக இருந்தவர் ஈழத் தமிழ் மக்கள் மீது அக்கரை இருந்தால் இராமஸ்வரம் சென்று நீந்தி போய் அங்கு போராடுங்கள் என்றார். ஜெயலலிதாவும் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஒரு இனப்படுகொலையை நியாயைப் படுத்தினார். சாதரண அப்பாவி மக்களுக்கு என்ன புரியும் அவர்கள் தான் இங்கிருக்கும் தொலைகாட்சியில் வரும் செய்திகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கணிணி மற்றும் இணைய வசதி படைத்த இளம் தலைமுறை அங்கு நடந்த கோரங்களை பார்த்து வெறுப்புற்று மாற்று அரசியல் படைக்க கிளம்பிற்று. ஆனால் அப்படி கிளம்பிய இளைஞர் கூட்டம் இன்று தறிகெட்டு தள்ளாடி நிற்கிறது. இதே வல்லவன் வகுத்ததே சட்டம் என்பது போல் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கொடுக்கும் அறிக்கைகளினால் தான் எடுக்கும் நடவடிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல்.

தோழர் தியாகு அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் இதையே தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை அனைவரும் விரும்பினோம் அவரிடமும் சொன்னோம் ஆனால் அதையெல்லாம் கேட்கவில்லை அவர். போராடுங்கள் மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுங்கள் என்று தான் கொண்ட கொள்கையில் விடாமல் நின்றார். ஆமாம் அவர் வைத்த முதலும் முக்கியமான கோரிக்கை “இலங்கையில் காமென் வெல்த் மாநாடு நடத்தக் கூடாது இதை இந்திய மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” ஆனால் இந்த கோரிக்கையை திரிக்கும் வேலை சரியாக செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் அறிக்கையை தமிழர்களின் அரசியலாக பார்த்த மக்கள் கடந்த மார்ச் மாதமும் அதற்கு சரியாக ஒரு வருடம் முன்பாக நடந்த ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றார்கள். ஆதாவது அந்த அறிக்கை இலங்கை அரசை கண்டிக்கிறது தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வலியுறுத்துகிறது என்ற போலி பிம்பம் உருவாக்கியது. கருணாநிதியின் இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரி வைத்த வேண்டுதல் அறிக்கை.

ஆனால் அந்த அமெரிக்க தீர்மானம் நமக்கு தேவையில்லை அது அங்கிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையை கொடுக்காது என்று சென்றவருடமும் சரி இந்த கடந்த மார்ச் மாதமும் சரி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மே 17 இயக்கும் தோழர் தியாகு அவர்களும் தான். கடந்த வருடம் பெரிய அளவில் இவர்கள் இருவரின் கருத்துக்கள் எடுபடவில்லை எனினும் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கிறேன் என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை வெற்றி பெறச்செய்தது. அது இந்த வருடமும் அதே போல் செய்ய நினைத்த பொழுது திரும்பவும் கடுமையாக அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்தவர்கள் மே17 இயக்கமும் தோழர் தியாகுவும் தான். அப்பொழுது தான் மாணவர் போராட்டமும் வெடித்தது அப்பொழுது கருணாநிதி அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று தனது பேச்சை மாற்றி தானே தனது வேட்டியை அவிழ்த்துக் கொண்டு அம்பலம் ஆனார்.

இப்படி சாதனைகள் படைக்க காரணமாக ஒரு காரணியாக இருந்த தியாகுவே இன்று பலிகடாவாகி போனார். ஆம் ஞாயிற்றுக் கிழமை அனைத்து இயக்கங்கள் கட்சிகள் வேண்டுகோள் வைத்து கேட்ட பொழுது பரிசீலிக்கிறேன் போராட்டங்களை தொடருங்கள் என்றவர். மறுநாளும் அதற்கடுத்த நாளும் கருணாநிதியின் நாடகத்தில் ஒரங்க கதாபாத்திரமாக மாறிவிட்டார். ஆம் உண்ணாவிரதம் முடித்தது தாய் தமிழ் பள்ளிக் குழந்தைகள் கொடுத்த பழரசத்தை அருந்தி தான் என்றாலும் இருபக்கமும் திமுக கூட்டணி அங்கத்தினர்களே காட்சியளித்து பாமர மக்களிடம் எதோ கருணாநிதி பிரதமரிடம் சொல்லி, பிரதமர் கருணாநிதியிடம் வேண்டுகோள் வைத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது போல் இந்த புகைப்படம் பல நூற்றாண்டுகளுக்கு கதை சொல்லும் என்பதை உணராமல் போய்விட்டாரா தோழர் தியாகு.

ஆம் இவரின் தூக்கு கயிற்றை அறுக்க பல போராட்டங்களை நடத்தினர் இவரின் சகோதரி காந்திமதி, மேலும் பலரும் இவருடன் நின்று போராடினார்கள். அவர்களில் ஒருவர் தான் (நாளை இவரின் பெயரை பதிகிறேன், நியாபகம் இல்லை சில புத்தகங்களை பார்க்க வேண்டியது உள்ளது.. ஆனால் இந்த கட்டுரையை பதிய வேண்டிய தேவை உள்ளது) அன்று ஒரு லட்சம் மக்களை கூட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கி அதை கருணை மனுவாக சமர்ப்பித்தனர் அந்த கருணை மனுவின் அடிப்படையிலேயே மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதை அப்பொழுது இருந்த முதல்வருக்கு தான் மரணதண்டனையை ரத்து செய்ய தகுதி இருக்கிறது என்று பொய்யான பரப்புரையை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதையெல்லாம் மேடைகளில் பேசிய தியாகு இன்று இதற்கே அடிமையாகிவிட்டாரோ… (இதில் தோழர் தியாகு கருணை மனு அனுப்பினார் என்பது கொசுறு தகவல்.. இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் அப்படி அனுப்பாமல் இருந்தது புலவர் கலியப்பெருமாள், செவ்வணக்கம் அவருக்கு)

இன்னும் தொடரும்…

இந்த உண்ணாவிரதம் ஒரு மைல் கல் நடந்து முடிந்த வரலாற்றை அதுவும் பலருக்கு தெரியாத வரலாற்றை சொல்லும்… அது மட்டுமல்ல நாம் நம்புவர்கள் கழுத்தறுக்கும் வரலாற்றை சொல்லும்…

இன்னும் வர இருப்பவர்கள்..
தோழர் அருண் சோரி
தோழர் மதியவன்
தோழர் ஜெயபிரகாசு நாரயணன்
தோழர் குணா
தோழர் செந்தில்

தோழர் தோழர் என்று மற்றும் பலர்… 

மருதுபாண்டியன் உட்பட… இந்த கடைசி நபரை தோழர் என்று கூப்பிட மாட்டேன்.. 

Tuesday, October 15, 2013

தோழர் பா வேந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..


தோழர் பா.வேந்தனுக்கு ஒரு திறந்த மடல்….

நேற்று முன் தினம் (13/10/2013) உங்களை உங்கள் வீடு வரைக்கும் கொண்டு வந்து விடும் உதவி செய்தமைக்கு தோழர் செல்வராஜிற்கு நன்றி செலுத்த கடமை பட்டுள்ளேன். ஆனால் அதே சமயத்தில் நேற்றைய கூட்டத்தில் நீங்கள் நடந்து கொண்ட முறையை பார்க்கும் பொழுது் வெட்கப் படுகிறேன்.

நேற்று முன் தினம் இரவு இந்திய நண்டு கதையை அதாவது அதை விட மோசமான தமிழக இயக்க நண்டுகள் கதையை விளக்கினார் உங்களிடம் அதைவிட மோசமனவை நான் பார்த்தது. பேச துடித்தாலும் அடக்கி கொண்டேன். ஆனால் காமன்வெல்த் கூட்டமைப்பில் பலரை இணைக்கவில்லை நாளை அனைவரையும் இணைக்க கூட்டம் நடைபெறவுள்ளது என்று சொன்ன நீங்கள் நேற்றைய கூட்டத்தின் பொழுது அப்படி ஒரு இணைப்பை பற்றி் பேசவில்லையே ஏன்????.

நானும் பலவருடங்களாக பார்த்து வருகிறேன் கூட்டமைப்பு என்ற விசயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்ன அருண்சோரி தான் அனைத்து கூட்டமைப்புகளிலும் தலைமை தாங்குகிறது அது எப்படி.. மே 17 இயக்கம் முதல் முறையாக நினைவேந்தல் நடத்த முயன்ற பொழுது அன்று இதே அருண்சோரி கூட்டமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார் ஆனால் அன்றிலிருந்து அதாவது 2011 மே மாதத்திலிருந்து இன்று வரை அமைந்த அனைத்து கூட்டமைப்பின் முக்கிய அங்கத்தினராக இவர் இருக்கிறார் ஏன் என்று எனக்கு புரியவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு இடத்திலும் உங்களை தலைமை என்று மற்றொரு இடத்தில் இன்னொருவரை தலைமை என்றும் சொல்லிவிட்டு தனக்கான அங்கீகாரத்தை தேடிக் கொள்கிறான். இதற்கு காரணம் தங்களை போன்றவர்களின் அங்கீகார போதை…

ஆம் இத்தனை நாள் போராடினோம் எனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்ற உங்களின் நினைப்பும் அங்கிகாரத்திற்கு அழையும் மனப்போக்குமே இவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது.. இந்த பதிவிற்கு நீங்கள் பதில் அளித்தால் வரவேற்பேன் தமிழனின் மீட்சிக்காக போரடுபவர்கள் என்ற வகையில் இன்னும் பல தகவல்களுடன்….

நன்றி

இப்படிக்கு

நேற்று முன் தினம் என் பெயரை சொல்லி நீயும் ஏன் ஹரி வரவில்லை என்று நீங்கள் கேட்டதால் நானும் ஒரு சில விசயங்கள் இந்த தமிழ் சமுதாயத்துக்கு செய்ய முயற்சி செய்திருக்கிறேன் என்ற வகையில் என்னை நியாபகம் வைத்திருக்கிறீர்கள் என்று பெருமிதம் கொண்ட வகையில்…
ஹரிஹரன்…
15/10/2013 

இண்டியானா தாயும் இந்தியத் தாயும்



இந்தியாவாக இருந்தாலும் சரி இண்டியானாவாக இருந்தாலும் சரி சட்டம் தனது கடமையை சரியாக செய்யும். ஆம் அப்பாவிகளை தூக்கு கயிற்றின் நிழலில் நிறுத்தும் என்பதற்கு ஜஸ்டின் ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஆம் இங்கு அற்புதம் என்ற ஒரு தாய் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார், இண்டியானாவில் ஸ்டெய்ண்பெர்க் எனும் தாய் கடந்த 11 ஆண்டுகளாக போராடி வருகிறார் தன் நிரபராதி மகனை தூக்கு கயிற்றின் நிழலிருந்து வெளிக் கொணர.

ஆம் நான்கு குழந்தைகளை பெற்று,  தனது கடின உழைப்பால், மினிவேன் ஓட்டி தன் குழந்தைகளை காப்பாற்றிய, தாய் தான் ஸ்டெய்ன் பெர்க், அவரின் மூத்த மகன் தான் ஜஸ்டின். இந்த ஜஸ்டின் 2002ம் ஆண்டிலிருந்து மின்சார நாற்காலியில் உட்கார காத்துக் கொண்டிருக்கிறார் நாட்கள் குறிக்கப்பட்டு பலமுறை தள்ளிவைக்கப்பட்டு.

மார்ச் 15, 2001ம் ஆண்டு டானி பெட்ரோலே என்பவர் ஓவன் பார்பர் என்பவரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். டானி பெட்ரோலே மிகப்பெரிய கஞ்சா வியாபாரி, இவரை 9 முறை சுட்டு கொலை செய்த ஓவன் பார்பரும் ஒரு கஞ்சா வியாபாரி தான். ஆனால் டானி மிகப்பெரிய அளவில் செய்து வருபவர், ஓவன் சிறிய அளவில் வியாபரத்தை நடத்தி வந்தவர். இந்த தொழில் போட்டியே கொலையில் முடிந்திருக்கிறது. இண்டியானாவில் கொலைக் குற்றத்திற்கு மட்டும் தான் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அந்த மரண தண்டனையில் இருந்து தப்பிக்க இவர் செய்த தந்திரமே ஜஸ்டினை இன்று மின்சார நாற்காலியில் அமர வைத்திருக்கிறது.

ஆம் கொலை செய்து போலீசாரிடம் மாட்டிய பிறகு, இவர் ஜஸ்டின் தான் தனக்கு பணம் கொடுத்து டானியை கொலை செய்ய சொன்னதாக சொல்லிவிட்டார். இதை தவிர வேறு ஆதாரம் என்பது கொலை நடந்த அன்று ஓவன் ஜஸ்டினுக்கு பல முறை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்பதும், இதே போல் சக கஞ்சா வியாபாரிகள் நான்கு பேரின் சாட்சியங்கள் இதில் ஓவன் பார்பரின் சாட்சியமும் இருக்கிறது. இதை தவிர காசு கொடுத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் கொலை செய்த ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜஸ்டினுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஓவனுக்கு 60 வயது வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை விதிக்கப்படுகிறது. ஓவன் 2040ல் சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார். ஆனால் ஜஸ்டின் கடந்த பதினோரு ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கிறார் தான் நிரபராதி என்பதை நிருபிக்க.

நீதிமன்றம் ஓவன் பார்பர் ஜஸ்டினுக்கு மொபைலில் தொடர்பு கொண்டு பல முறை பேசினார் என்பதை வைத்தும், தொழில் போட்டி காரணமாக நடந்த இந்த கொலையில் சாட்சியங்களும் இதே தொழிலை செய்பவர்கள் அவர்கள் ஜஸ்டினையும் தொழிலிருந்து ஒழித்துக் கட்ட பொய் சொல்லலாம் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் இவர்களின் வாக்குமூலங்களை ஏற்று ஒரு உன்னதமான உயிரை பறிக்க துடித்துள்ளது. நல்ல வேளை இன்னும் ஜஸ்டினின் உயிர் பறிக்கப்படவில்லை, போராடிக் கொண்டிருக்கின்றனர் தாயும் மகனும்...

2007ம் ஆண்டு சிறையில் தன்னுடன் இருந்த சக கைதியான கார்ல் ஹாப் என்பவரிடம் ஓவன் தான் நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை ஒப்புக் கொண்டார். ஆம் மரணதண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக ஜஸ்டினை இந்த வழக்கில் சம்பந்தபடுத்தி அவர் தான் டானியை கொலை செய்ய சொன்னதாக சொல்லி தான் மரண தண்டனையிலிருந்து தப்பித்த கதையை சொல்லிவிட்டார். கார்ல் ஹாப் உடனடியாக ஜஸ்டினின் வழக்குரைஞர்களை தொடர்பு கொண்டு இந்த தகவலை தருகிறார், அவர்களும் உரிய முறையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதே வேளையில் ஓவன் பார்பரும் தான் நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை தனியாக ஒரு மனுவாக சமர்ப்பிக்கிறார்.

இதனால் இப்பொழுது இந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது ஆனால் இதற்கு நடுவில் பல முறை ஜஸ்டினின் மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தாயும் விடாமல் போராடி வருகிறார் இண்டியானாவில். இந்தியாவிலும் ஒரு தாய் போராடி வருகிறார், அமெரிக்க சட்டமாவது மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டது ஆனால் இந்திய சட்டம் எத்தனை முறை கதவை தட்டினாலும் கிணற்றில் போட்ட கல்லாக தான் இருக்கின்றது. இன்று தூக்கு கயிற்றின் நிழலில் இருக்கும் அனைவரையும் குற்றவாளியாக மாற்ற பதியப்பட்ட சாட்சியங்களில் ஒன்றை கேட்டால் கூட வெளிநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் என்று பதில் கொடுக்கிறது இந்திய அரசாங்கம். இவர்களின் வெளிநாட்டு உறவுக்காக நம் சொந்தங்களை பலி கொடுக்க கேட்கிறது இந்திய அரசு...

இந்த இரண்டு தாய்மார்களிடம் இன்னுமொரு ஒற்றுமை மரண தண்டனை தங்கள் மகனுக்கு மட்டும் வேண்டாம் என்று போராடவில்லை இருவரும் ஒட்டுமொத்தமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.. ஒருவர் இண்டியானாவில் மற்றொருவர் இந்தியாவில்...