Monday, July 28, 2014

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும்



தமிழ்ஸ் நவ் இணையத்தில் வெளியான கட்டுரை 
http://tamilsnow.com/?p=19259


இந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் வாய்ப்பை வழங்குகிறது. தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வாங்கிய வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் வாழ்வாதரம் என்பது விளையாட்டு வீரனாக இருந்தாலே போதும் என்ற நிலை கிரிக்கெட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது. அத்தகைய நிலையில் விளையாட்டு போட்டிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் நுழைவது வரவேற்கத் தக்கதே. கிரிக்கெட், ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது. 

கபடிக்கு புரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஒரு பெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாண்டாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு, மேலும் கபடிக் கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது, இந்த உலக கோப்பையை 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இவைகளில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் ஒரளவாது இருந்தே வருகிறது, 39 வயது சேரலாதன் மிகச்சிறந்த தற்காப்பு கள ஆட்டக்காரராக இந்திய அணியில் பல்லாண்டுகளாக ஆடிவருகிறார். 

கபடி என்பது தமிழர்கள் விளையாட்டு என்பதை உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விளையாட்டு, கை பிடி என்பதே கபடியாக மாறியது என்பதாக வரலாறு சொல்கிறது, இதை நாம் சடுகுடு என்ற பெயரிலும் நாட்டுப்புற பாடல் வரிகளுடன் விளையாடி வந்த விளையாட்டு. ஏன் இன்று வரை தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட தமிழகத்தின் விளையாட்டாக இருப்பது கபடி தான். (நம்மை தவிர பங்களாதேஷ் தனது தேசிய விளையாட்டாக அங்கீகரித்துள்ளது) இப்படி தமிழக அரசின் விளையாட்டாக இருக்கும் கபடி இந்த புரோ கபடி லீக்கில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 4 அணிகளாவது பங்கேற்று இருக்க வேண்டும் ஆம், ஊர்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து அனைத்து மட்டங்களிலும் கபடிப் போட்டிகள் கோயில் திருவிழா, பொங்கல் விழா என்று எங்கும் நிறைந்தே இருக்கும் கபடிப் போட்டிகள். இபப்டி அனைத்து பகுதியிலும் விளையாண்டு வரும் நமது தமிழகத்தில் இருந்து ஒரு அணி கூட இந்த ப்ரோ கபடி லீக்கில் இல்லை. 


காரணம் அணியை வாங்குவதற்கோ இல்லை அணி ஒன்றை நிறுவுவவோ எந்த நிறுவனமும் தயார் இல்லை என்று சொல்லலாம் ஆனால் நாமே இப்படி ஒரு போட்டி நடப்பதை அறியாதவர்களாகத் தான் இருக்கிறோம், இந்திய கபடி கழகத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்றுள்ளன. இதில் இந்தியன் ப்ரீமியர் லீக் போன்று அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. எட்டு அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது, பெங்கால் வாரியர்ஸ்,  பூனேரி பல்தான், யு மும்பா, தபங்க் டில்லி, பெங்களூர் புள்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரைட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ் இதில் பூனே அணியை அபிசேக் பச்சன் வாங்கியிருக்கிறார். அதிக பட்ச ஏலத்தொகையாக 12,80,000 ரூபாய்க்கும் குறைந்த பட்ச ஏலத்தொகையாக 9,10,000 ரூபாய்க்கும் அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து ஒருவரு கூட இந்த தொகையை முதலீடு செய்யும் அளவிற்கு இல்லையா என்ன.

நடிகர்களுக்கு இடையே நடக்கும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி எந்த விதமான விளையட்டு மேம்பாட்டையும் கொடுக்காத வெறும் விளம்பரமாகவும், பொழுது போக்கிற்காகவும் நடக்கும் இந்த போட்டியின் சென்னை அணியை வாங்கிய ராதிகா சரத் குமார் போன்றவர்களுக்கு இந்த 12 லட்சம் பெரிய தொகையா என்ன. தமிழ் நாட்டி மானத்தை கட்டி காப்போம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசுபவர்கள் இங்கு பலர் உண்டு ஆனால் இப்படி ஒரு போட்டி அதை முதலில் முன்னெடுத்து இருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அதுவும் ஒரு முக்கியமான விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதற்கு விளம்பரதாராகவும் நேரடி ஒளிபரப்பும் செய்கிறது இத்தகைய ஒரு போட்டி அதுவும் தமிழர்களின் விளையாட்டை நடத்த தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் தயார் இல்லை. அதாவது பரவாயில்லை தமிழ் நாட்டில் இருந்து ஒரு அணி கூட கிடையாது.
தமிழ் நாடு கபடி கழகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் இரண்டு நபர்களின் பெயரும் எண்ணும் இணையத்தில் இருக்கிறது ப்ரெசிடெண்டாக திரு. சோலை எம். ராஜா மதுரையை சேர்ந்தவரும், செகரட்டரியாக திரு, சைபுல்லா, திருப்பூரை சேர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள் எண்களை தொடர்பு கொண்டால் ஒரு நம்பரில் அப்படிப்பட்ட பெயரில் இங்கு யாருமே இல்லை என்கிறார். அடுத்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. இதில் பிரசிடண்டாக இருக்கும் சோலை எம் ராஜா அனைவரும் அறிந்தவரே ஒரு காலத்தில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், இவரது தந்தை மதுரை காவல் துறையில் துணை ஆணையளாராக ப்ணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பத்தின் அடிதடி கட்டப்பஞ்சாயத்து சாம்ராஜ்யம் மதுரை மாவட்டம் அறிந்ததே ராஜா அவர்களின் தம்பி ரவியும் தந்தை சோலை முத்தையாவும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ரவியின் மீது பல நூற்றுக் கணக்கான கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ராஜாவின் மீதும் பல வழக்குகள் உண்டு. இவர் தான் தமிழ் நாடு கபடி கழகத்தின் தலைவராக இருக்கிறார்.


இங்கு கபடி கழகம் மட்டும் தவறு செய்யவில்லை நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம், தமிழ்நாட்டின் விளையாட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம், இன்னும் பத்து வருடத்தில் இல்லை இந்திய கபடி கழகத்தில் கபடி வரலாறு என்று பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைவரும் விளையாடிய விளையாட்டாக சித்தரித்துள்ளனர். இந்தியா என்ற நாடே 1800களில் தான் உருவானது என்ற வரலாற்றையே மறைத்துவிட்டு. தமிழர் விளையாட்டாக இது எங்கும் அகில இந்திய கபடி கழகத்தின் இணையத்தில் எங்குமே குறிப்பிட படவில்லை. நமது அடுத்த தலைமுறை கபடி என்ற விளையாட்டை எதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாக பார்க்க போகிறது என்பது என்னவோ நிதர்சனமாகத் தெரிகிறது.

Thursday, July 24, 2014

பச்சைமுத்துவின் துரோகம்.. புலிப்பார்வையில்..




திருவாளர் பிரவீன் காந்தி என்ன நினைத்து இப்படிப் பட்ட காட்சிகளை வைத்தார் என்பது தெரியவில்லை. இதில் தோழர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி வாங்கினேன் என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், அப்படி வாங்கியிருக்கலாம் ஆனால் அவருக்கு இத்தகைய காட்சிகள் இருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. இன்னொரு பேட்டியில் இலங்கை தூதரகத்திடம் அனுமதி வாங்கினேன் என்கிறார் அதை தொடர்பு கொண்டு கேட்டால் கண் துடைப்புக்காக என்கிறார்.. இந்த அரசியல் பெரும் அரசியல் இதை கடைசியில் பார்க்கலாம்...

முதலில் பாலச்சந்திரனை கைது செய்யும் பொழுது ஈழ இராணுவ உடையில் இருப்பது போல் சித்தரித்துள்ளனர். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச அரங்கில் தமிழ் சமூகம் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது. சிங்கள இனவாத அரசு பாலச்சந்திரன் Cross Fireல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால் இறந்திருக்கலாம் என்று சொல்லி வருகிறது. அதையும் தாண்டி இங்கு சிங்கள இனவாத அரசுக்கு உதவும் வகையில் பாலச்சந்திரனை ஒரு புலிகள் இராணுவத்தின் போராளியாகவும் சித்தரித்து உள்ளார். இதைத் தான் சுப்பிரமணியன் சுவாமி பாலச்சந்திரன் புகைப்படம் வெளிவந்து மாணவர் போராட்டம் நடந்த பொழுது சொன்னான் “பாலச்சந்திரனும் புலிகள் இயக்கத்தின் ஒரு போராளிஅவன் ஒன்றும் சாதரண பாலகன் இல்லை புலிகள் இயக்க உறுப்பினர் என்று.  இனி இனவாத சிங்கள அரசு சொல்லும் கைது செய்து வைத்திருந்த ஒரு புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுக் கொன்றோம் என்று அடுத்தக்கட்ட புளுகுமூட்டையை அவிழ்த்துவிட வழிவகை செய்கிறீரார் போல் தெரிகிறது. இல்லை சிங்கள தூதரகத்தில் இவர் சென்று கதை சொன்ன பொழுது இப்படி காட்சி அமையுங்கள் எங்களுக்கும் வசதியாக இருக்கும் என்று சொல்லி அதன் படி செய்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.

இது வரை பாலச்சந்திரன் படங்கள் பல இணையத்தில் இருக்கின்றன ஆனால் அதில் எதாவது ஒரு பட்த்திலாவது அவன் தமிழீழ தேசிய இராணுவத்தின் உடையுடன் இருப்பதை ஆதாரமாக காட்ட முடியுமா. ஒரு இராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ ஏன் எந்த ஒரு சீருடை பணியில் இருக்கும் ஒருவரின் குழந்தை தனது தந்தை தாய் போல் ஆடை அணிந்துகொள்ள விரும்புவது இயற்கை அதைப் போன்று நீங்கள் காட்சியை வ்டிவமைத்தது போல் தெரியவில்லை, சிங்கள பேரினவாத அரசுக்கு மிகவும் உதவிகரமாக கை கொடுப்பது போல் சிறுவர் போராளிகள் என்ற குற்றச்சாட்டை மறுபடியும் நிறுவ உதவுவது போலவே உங்கள் காட்சி அமைப்புகள் உள்ளன, அதுவும் பல சிறுவர்களின் நடுவே அனைவரும் ஆயுதங்களுடன் இருப்பதைப் போன்ற உங்களது காட்சி அமைப்பு.


மேலும் 2009ம் ஆண்டு கடைசியாக தமிழீழ தேசிய இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்த ஈழ தேசியத்தில் இருந்து வெளியேறிய அமைப்பு ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பு UNICEF. இந்த அமைப்புடன் இணைந்து புலிகள் பல உடன்பாடுகளை செய்து கொண்டு சிறுவர்களின் மறுவாழ்வுக்காகவும், மற்றும் அவர்களின் படிப்பு முதற்கொண்டு வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செய்த பல காரியங்கள் இருக்கின்றன, ஏன் செஞ்சோலை, காந்தரூபன் போன்ற சிறு குழந்தைகளுக்கான இல்லங்களைப் பற்றி எங்குமே பேசப்படுவதில்லை. ஏன் செஞ்சோலை படுகொலைகளும் தமிழ் சமூகத்தின் நினைவில் இருந்து அகற்ற விரும்புகிற நோக்கத்தில்இங்கு திருவாளர். ப்ரவீன் காந்தி திரும்பவும் சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு உதவ தனது காட்சி அமைப்புகளில் மிகவும் மெனக்கெட்டு நாம் எல்லாம் பெருமை கொள்வது போல் இருக்க செய்து, அதாவது வீர வசனங்களையும் வீரதீர செயல்கள் கயிறு ஏறுவது, மேலிருந்து குதிப்பது என்று பல செயல்களை நம் முன் நிறுத்திவிட்டு, அதில் இருக்கும் வீரத்தை ரசிக்கும் நேரத்தில் சிறுவர் போராளிகள் என்ற இல்லாத கட்டமைப்பை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்த முயல்வது போலவே தெரிகிறது. 

மேலும் தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் அன்பு பிள்ளை பாலச்சந்திரன் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன் இருப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. இவரது விளம்பரப்படத்தில், ஒரு வேளை முழு படத்தில் எங்காவது வரலாம் ஆனால் அதை ஒரு சிறு துளியை இவரது ட்ரைலரிலும் காட்டியிருக்கலாம் ட்ரைலர் முழுவதுமே ஒன்று சீருடையில் இருப்பது போலவும் இல்லாவிடில் கடைசியில் பாலச்சந்திரன் இறந்த உடலில் இருக்கும் உடையுடன்  பாலச்சந்திரனாக நடித்த சிறுவன் இந்த இரண்டு உடைகளை மட்டுமே அணிந்திருந்தாக மட்டுமே காட்டி இருக்கிறார்.   

ஒரு படம் அதுவும் நடந்த சம்பவத்தை ஒட்டி சித்தரிக்கப்படும் பொழுது அதன் கூறுகள் சிறிதாவது நடந்த சம்பவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமையவேண்டும். அதைவிடுத்து சித்தரிப்பு என்ற பெயரில் அதுவும் நமக்கு ஆதரவாக என்ற நிலையில் இருந்தால் கூட அது தவறானதாகவே முடியும். மேலும் இன்றைய காலகட்டத்தில் அதுவும் சர்வதேச நாடுகளின் முன்பு நாம் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயத்தை கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் நிகழ்வு பாலச்சந்திரனின் மரணம் இதை ஒட்டிய கதையை பின்ணனியாக வைத்து ஒருபடம் எடுக்கப்படும் பொழுது பாலச்சந்திரனின் மரணத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிய இந்தியாவை, நாம் விரும்புகிறோம் என்று தனது படத்தின் இடைச்சொறுகலாக வைத்துவிட்டு பிராபகரன் ஈழத்திற்காக இந்தியா பேச வேண்டும் என்று என்றோ விரும்பியதை இன்று கோடிட்டு காட்டுகிறார். அதே போல் இந்தியாவில் ஈழ விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்த பொழுது சென்னை பெசண்ட் நகரில் அனிதா பிரதாப் அவர்கள் எடுத்த பேட்டியில் இன்று பயிற்சி கொடுக்கும் இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும் என்று சொன்னதையோ அதன்பிறகு இந்திய அமைதிப் படையுடன் சண்டையிட்டதையோ அவருடன் பேசிய தோழர்களிடம் எடுத்துக்காட்டி பேசியதாக தெரியவில்லை.. 

இதையெல்லாம் தாண்டி இந்த படத்தின் ஒரு படலை எழுதியவர், இந்த படத்தை வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் தயாரித்த பச்சை முத்து ஈழ விடுதலையை ஒரே ஒருவர் தான் கேட்டார் அவருக்காக 1,50,000 லடசம் பேர் செத்தார்கள் என்று 2014 தேர்தல் நேரத்தில் பத்திரிக்கை பேட்டியில் சொன்னார். இதே பாரி வேந்தரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன தமிழர் மீட்சிக்காக கட்சி நட்த்துகிறேன் என்று சொல்கிறார் தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை தமிழனும் வந்து இவர் கட்சி ஆரம்பிக்க தவம் இருந்தானா என்ன என்று.. இவர் தூக்கி பிடிக்கும் இந்திய தேசிய விடுதலைக்காக இந்தியாவில் இருக்கும் அனைவரும் போராடி சிறை சென்றானா என்ன என்று எல்லாம்.. ஆனால் ஈழ விடுதலைப் போராட்ட்த்தை கொச்சைப் படுத்தி பேசிய அதுவும் தேசியத்தலைவரை சர்வதேச நாடுகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று வைத்த குற்றச்சாட்டை வழிமொழியும் இந்த பச்சைமுத்து தயாரிக்கும் படம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப நாம் என்ன முட்டாளா... 

பச்சைமுத்துவின் ஊடக பேட்டி... ஈழத்தைப் பற்றி...

https://www.youtube.com/watch?v=-lC4FvzpFDk

Thursday, July 10, 2014

மா.பொ.சியும் ஈழத் தமிழர்களும்


தமிழ் தமிழர் தமிழ்நாடு என்றாலே பல பிரச்சனைகள் முன்வைக்கப்படுகிறது, அதுவும் திராவிட எதையும் தமிழருக்காக சாதிக்கவில்லை என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது தார் கொண்டு இந்தி எழுத்துகளை அழித்தால் பின்னாலேயே மண்ணெண்ணெய்யுடன் சென்று தாரை சுத்தம் செய்து இந்தியை வெளிக்கொணர்ந்த மா.பொ.சியை தமிழ் தேசிய அடையாளமாக முன்னிருத்துகிறார்கள் நவீன தமிழ்தேசியவாதிகள். தனது கொள்கையாக மா.பொ.சி சொன்னது.. 


உரிமைக்கு எல்லை வேங்கடம்
உறவுக்கு எல்லை இமயம்
நட்புக்கு எல்லை உலகம்

என்று முழங்கினார். இப்படி இந்திய தேசியத்தின் கீழ் தான் தமிழ்நாட்டின் விடிவைத் தேடினார் இப்படி இந்திய தேசியத்தின் கீழ் விடிவு தேடியவர்களே இங்கு தமிழ் தேசியத்தின் மண்ணுரிமை போராளியாகவும், தமிழ்தேசியத்தின் வழிகாட்டியாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
மா.பொ.சி ஒரு விடுதலை போராட்ட காலத் தலைவர் அவரின் இந்தியப் பாசம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கீழாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நமக்கு, ஆனால் தமிழர்களுக்கான தீர்வுகளாக அவரின் போராட்டங்கள் என்பது இந்திய தேசியத்தின் கீழாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ஈழப் பிரச்சனைகளில் பல வேலைகளை செய்துள்ளார் என்று மார்தட்டுவார்கள். அவரின் ஈழப்பிரச்சனையின் பார்வை எனபது தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் ”அது சிங்களவர்களின் செயல்பாட்டை பொறுத்து இருக்கிறது ஈழத் தமிழ்மக்களின் விருப்பம் நான் அன்னியன் என்னால் எதுவும் சொல்ல இயலாது” என்றே கூறுவார். அதாவது இன்றைய காங்கிரஸும் பிஜேபியும் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழம் என்பது அந்நிய நாட்டு பிரச்சனை அதில் நாங்கள் எப்படி தலையிடுவது என்று கைகழுவும் பழக்கத்தை முன்மாதிரியாக நின்று சொல்லிக் கொடுத்தவர் மா.பொ.சி தான். 

இது மட்டுமல்ல ஈழ போராட்ட இயக்கங்கள் அனைவரும் இந்தியா சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற ஊதுகுழலாக செயல்பட்டவர் தான் மா.பொ.சி. ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது இந்திய அரசும் அமைச்சர்களுக்கு கேட்டு கொண்டதற்கிணங்க ஈழப் போராட்ட தலைவர்களுடன் பேசி ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்ள வேலை பார்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மா.பொ.சி அவர்கள் தான். ஈழத்தைச் சார்ந்த யாருமே இல்லாத ஒப்பந்தத்தை இந்தியாவின் நலனுக்காகவும் சிங்களவரின் நலனுக்காகவும் போடப்பட்டபொழுது அதற்கு பிரசார பிரங்கியாக செயலாற்றியவர் மா.பொ.சி. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் கைப்பாவைகளாக இருந்த பல ஈழ போராட்ட இயக்கங்கள் ஏற்றுக் கொண்டன இந்தியாவின் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற தங்களின் இயலாமையின் கீழாக. ஈழத் தமிழர் நலனை பிரதிபலிக்காத ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இது எங்களுக்கு தேவை இல்லை என்று சொன்னவர்களே கடைசி வரை போராட்டத்தை காப்பாற்றினர், அன்று இந்தியாவிற்காக வளைந்து கொடுத்து இருந்தால் இன்று ஈழத் தமிழினத்தை நாம் தேட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும்.

இப்படி வருங்கால நோக்கம் எதுவும் இல்லாமல் இந்திய அரசின் பிராசார பிரங்கியாக செயல்பட்டவர் மா.பொ.சி அதே காலகட்டத்தில் யாழ்ப்பாண பல்கலையில் இருந்த பேராசிரியர்கள் அனைவரையும் இவருக்கு தெரியும் அவர்கள் அனைவருமே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவியலாது என்றார்கள். ராஜிவ் ஜெயவர்தனா ஒப்பந்தம் ஜூலை 29, 1987 அன்று கை சாத்திடப்பட்டது. ஆனால் ஜுலை 19ம் தேதி யாழ்ப்பாணப் பல்கலையில் நடத்தபப்ட்ட கருத்தரங்கில்

திரு க.சிற்றம்பலம் அவர்கள் பேசியது  “திம்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை என்பனவும் அங்கீகரிக்கபப்ட வேண்டும், மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் இதனடிப்படையில் தான் பேச்சுவார்த்தைக்கு போகலாம். இதற்கும் குறைந்த தீர்வுக்கு நாம் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடாது என்று கூறினார்.  

மு. திருநாவுக்கரசு அவர்கள் பேசியது “சில நியாயங்களை சுட்டி காட்டி போராட்டத்தை அழித்துவிடுவது சரியல்ல, எமக்குள்ளே சில முரண்பாடுகளுக்காக சரணாகதி அடையக் கூடாது. எமது தேசிய இனத்தின் சுயாதீனதிற்கான வாய்ப்புகளை செயலுருப்படுத்த வேண்டும். அதற்காக ஒர் அரசியல் தளம் வளர வேண்டும். அந்த அடித்தளத்தில் சரணாகதியற்ற தீர்வுக்கே நாம் போக வேண்டும்” என்று கூறினார். 



பேராசிரியர் கா.சிவத் தம்பி அவர்கள் பேசியது ”எமது போராட்டத்தின் தன்மை சர்வதேசரீதியில் நியாய முக்கியத்துவம் பெற்றுவரும், முகிழ்விடும் இக்காலகட்டத்தில் இப்படிப்பட்ட இடைக்கால தீர்வுகள் ஆபாத்தானவை, மேலும் இவ்வளவு அழிவுகள், உயிர்சேதங்கள், உடமை இழப்புகள் பின்னரும் நிச்சயமற்ற தீர்வினை விட நாம் தொடர்ந்து அல்லல் படுவதே மேல், எமது துன்பத்தின் மூலமாகவேனும் எதிர்காலச் சந்ததியின் இன்பத்துக்கும் வழி கோலலாம்” முரசொலி (26-7-1987)

இந்த கருத்தரங்கத்தில் மேலும் கலைபீடாதிபதி பேராசிரியர் என். பாலகிருஷ்ணன், கலாநிதி எஸ். கிருஷ்ண ராஜா, கலாநிதி. வ. நித்தியானந்தன், திரு. எஸ். சத்தியசீலன் போன்றவர்களும் கலந்து கொண்டு ஒப்பந்தத்தின் கூறுகள் எந்த தீர்வையும் தரவில்லை என்பதை வலியுறுத்தினர்.

இப்படி ஒரு பல்கலை பேராசிரியர்கள் மற்றும் அங்கிருந்த அறிவியலாளர்கள் என்று அனைவரும் மறுதளித்த ஒப்பந்தத்தினைத் தான் ஈழத் தமிழர்கள் மீது திணிக்க விரும்பினர். இவரைப் போன்றவர்களால் கட்டமைக்கப்பட்ட மாபெரும் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது அதற்கு அங்கு போராடிய சில இயக்கங்களும் துணை போனது. புலிகள் இயக்கம் முதலிருந்தே தனது எதிர்ப்பை தெரிவித்தது, இருந்த போதும் ஒப்பந்தம் திணிக்கபப்ட்ட பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்பு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது புலிகள் இயக்கம். ஆனால் நிபந்தனைகள் மீறப்பட்டு சிங்கள இராணுவம் செய்த அனைத்து விசயங்களையும் இந்திய இராணுவமும் செய்த பொழுது இந்தியா எனும் பெரிய நாடு என்பதைவிட எம்மக்களின் வலிக்கான தீர்வே முக்கியம் என்று எதிர்த்து நின்று போராடினர் புலிகள் இயக்கம். ஆனால் அன்று இந்த ஒப்பந்தத்தை திணித்த மா.பொ.சியோ கடைசிவரை ஒபந்த்திற்கு வக்காலத்து வாங்கவே செய்தார். 1990ல் பத்மநாபாவிற்காக இரங்கல் கூட்டம் நடந்தபொழுது அதிலும் திரும்பவும் ஒப்பந்தத்தை வலியுறுத்தியே பேசினார் (விடீயோ இணைக்கபப்ட்டுள்ளது)
                                     

சிறு குழந்தைகள் கூட படித்தால் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தில் இந்திய நலனும் சிங்களர் நலனும் பேனப்படுவது மட்டுமே இருப்பது தெரியும் ஆனால் அதை தூக்கி பிடித்துக்கொண்டு நின்றவர் தான் மா.பொ.சி, அதுமட்டுமல்லாமல் இந்த ஒப்பந்தத்திற்காக் ஒரு மூவர் அணியாக செயல்பட்டிருக்கிறார் அதில் இருந்த மற்ற இருவர் எழுத்தாளர் ஜெயகாந்தனும் இன்று வரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதா  இரட்டை நாக்கு சோமாறி “சோ”. இப்படி சோவுடன் கூட்டணி அமைத்து ஈழத்தமிழர்கள் நலனைப் பற்றி பேசாத ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாதது புலிகள் இயக்கம் செய்த தவறு என்று பிதற்றி திரிந்தார்.

இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை இன்று வரை முரண்பட்ட இயக்கங்களாக இருந்தாலும் அனைத்து இயக்கங்களும் போராளிகளாகவே ஈழப்போராட்டத்தில் நின்றனர் அதில் புலிகள் இயக்கத்தை புலிப்படை என்று கூறி வேறு முத்திரை வருமாறு பேசியதை இந்த காணொளியில் நன்றாக பார்க்கலாம், இவர்கள் ஒரு 50 பேர் கூட்டத்தில் இப்படி பேசுவதால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இன்று இவர் தான் தமிழ்தேசியத்தின் வழிகாட்டி என்பது தான் நகைப்புக்கு இடமளிக்கிறது.

முதலில் தமிழ் தேசியம் என்பதில் சரியான வரையறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இவர்கள் அனைவரும், ஒரு பக்கம் விடுதலைப் போராட்ட மாவீரர்களான புலிகள் இயக்கத்தை ஆதரித்துக் கொண்டே மா.பொ.சி போன்றவர்களை மண்ணுரிமை, தமிழ் தேசிய வழிகாட்டி என்று கூறுவது சரியான அரசியலா என்பதை சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் நாளை சமூகம் இவர்களைப் பார்த்து சிரிப்பா சிரிக்கும்.