Sunday, November 17, 2013

இந்திய இராணுவம் இலங்கையின் அடியாள்..


இந்தியாவும் இலங்கையும் இனப்படுகொலை பங்காளிகள் என்பதை 2009ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால் இவர்களின் கூட்டு படுகொலைகள் 1971ம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆம் ஜனதா விமுக்தி பெரமுனா எனும் பொதுவுடமை அமைப்பு இலங்கையில் தோன்றி பொதுவுடமை தத்துவத்தை மக்களிடம் பரப்பி வெகு வேகமாக வளர்ந்த அமைப்பு. இந்த அமைப்பினர் தான் முதன் முதலில் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தவர்கள். அப்படி இவர்கள் 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென் இலங்கை பகுதியின் பெரும்பாலன இடங்களை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒரு மாபெரும் புரட்சியை நடத்தினார்கள். 


ஜெவிபி யை துவக்கியவர் விஜயவீரா இவர் முதலில் சிலோன் பொதுவுடமை கட்சியில் இருந்தார். ரஸ்யாவில் மருத்துவம் படிக்க ஸ்காலர்சீப் கிடைத்து சென்று படித்தார், ஆண்டு விடுமுறைக்கு இலங்கை வந்து திரும்ப முயன்ற பொழுது விசா மறுக்கப்பட்டது. இவரது சீன கம்யூனிச ஆதரவின் காரணமாக. படிப்பை தொடர முடியாது என்று தெரிந்த பிறகு புதிதாக் ஆரம்பிக்கப்பட்ட சிலோன் பொதுவுடமை கட்சி சண்முகநாதன் தலைமையில் தொடர்ந்து முழு நேரப் பணியாக தொடர்ந்தார். அதிலிருந்து வெளியேறியே ஜெவிபியை ஆரம்பித்தார். புரட்சிகர போராட்டங்களும் புரட்சியுமே இலக்கை அடைய உண்மையான சாதனங்கள் என்று பெரிதும் நம்பியவர். அதற்காக மக்களையும் தயார் படுத்தியவர் தான் விஜயவீரா...

1971ல் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 37 காவல் நிலையங்களை கைப்பற்றினர், ஜெவிபியினர் தென் இலங்கையில் ஒரு குறிப்பிடதக்க இடங்களில் மிகப்பெரும் புரட்சியை உருவாக்கி அரசிற்கு எதிராக மக்களை நிறுத்தியிருந்தனர். இந்த புரட்சியை ஒடுக்குவது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது, இலங்கையிட சொல்லி கொள்ளும் அளவிற்கு இராணுவ பலம் அப்போது இல்லை, காவல்துறையினர் தான் பெருமளவு இருந்தனர் இராணுவத்தை விட. அதனால் இந்தியாவின் உதவியை நாடினர், அணிசேரக் கொள்கையை தனது நாட்டின் கொள்கையாக கொண்ட இந்தியா இலங்கை இராணுவத்துடன் இணைந்து அவர்களின் நாட்டு மக்களை படுகொலை செய்ய துணை போனது. அரசு இந்த புரட்சியில் 5000 மக்கள் வரை கொல்லப்பட்டனர் என்று தகவல் சொல்கிறது. ஆனால் புரட்சி முடிந்து கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமே 15000க்கும் மேலானோர். கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45000ல் இருந்து 50000 இருக்கும் என்று கணக்கிடுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

1971ல் இந்திய இராணுவ உதவியுடன் ஜெவிபியை நசுக்கினார்கள் என்றும் புரட்சிகர கருத்தகளோ போராட்டங்களோ ஒய்வதில்லை என்பதற்கு சான்றாக மறுபடியும் புரட்சி தொடங்கியது 1980களில் 1987ம் ஆண்டு இந்தியாவை அமைதி படை என்ற பெயரில் கொண்டு வந்து ஈழவிடுதலைகாக போராடியவர்களுடன் சண்டையிடச் செய்துவிட்டு இலங்கை இராணுவம் திரும்பவும் ஜெவிபியினரை மிருக வேட்டையாடியது. 1971ல் இந்தியா இலங்கை ஒரு குழுவாக நின்று மக்களை படுகொலை செய்தனர், 1988 -89 களில் இரு குழுக்களாக நின்று தங்கள் மக்களை கொலை செய்தனர். இந்திய அமைதிப்படை ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொண்று குவித்தது அதே சமயத்தில் தென் இலங்கையில் இலங்கை இராணுவம் ஜெவிபியினரை கொண்று குவித்தது. 


அணிசேரக் கொள்கை என்று சொன்ன இந்தியா இலங்கை இராணுவத்துடன் மட்டும் அணிசேருவது என்ன கொள்கை என்று யாரும் கேட்க கூடாது. இந்திய இராணுவத்தின் துணையுடன் 1971ல் 50000 மக்களை படுகொலை செய்துள்ளனர் இதில் சிங்களவன் தமிழர் என்பது எல்லாம் கிடையாது ஜனத விமுக்தி பெரமுனாவின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடை அளித்தவர்கள் என்று அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். இதற்கு இந்தியாவில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர்வில் இருந்து இராணுவத்தினரையும் 5 ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இங்கு இருந்து சென்ற ஹெலிகாப்டர்களும் வீரர்களும் காட்டுநாயகா விமான நிலையத்தில் தரையிறங்கி இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஒரு மனித படுகொலையை நடத்தியிருக்கின்றனர் 1971ல். 80களின் இறுதியில் இந்திய அமைதிபடை என்ற பெயரில் நடத்திய படுகொலை நாம் அறிந்ததே.. இந்திய இலங்கைக்கு ஒரு அடியாளாக செயல்பட்டு வருகிறது ஓவ்வொரு முறையும்... 

தன் சொந்த நாட்டு மக்களை கொலை செய்யும் இந்தியா மற்றும் இலங்கை போன்ற அரசுகள் மக்களுக்கான ஜனநாயக நாடுகள் என்று இறையாண்மை உள்ள நாடுகள் என்று கூறுவது அறுவெருப்பாக உள்ளது.

1971ல் இந்திய படை இலங்கைக்கு சென்றதற்கான ஆதாரம்
http://vayu-sena.indianmilitaryhistory.org/other-coin-1971-ceylon.shtml

Thursday, November 14, 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் நெறுஞ்சி முள்???


ராஜ ராஜன் ஒரு மாபெரும் கற்றாளியை உருவாக்கினான் கிபி 10ம் நூற்றாண்டில் அது விவாதத்தின் கருப்பொருளாக இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக உலகின் முன்னாள் தன் பணியை செய்கிறது. அதே போல் முள்ளி வாய்க்கால் முற்றம் எனும் ஈழத்தில் 2009ல் நடந்த இனப்படுகொலையை எடுத்து இயம்பும் சின்னத்தை நோக்கிய விமர்சனமும் நீண்டு கொண்டே செல்கிறது ஆனால் ராஜ ராஜனின் கற்றாளியைப் போல் முற்றமும் தன் பணியை செவ்வனே செய்து கொண்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் ஆள்பவர்களுக்கும் ஆண்டவர்களுக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்க போகிறது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை 1980களில் இருந்து ஆரம்பித்து இன்று வரை அனைத்தையும் தன்னுள்ளே வரித்துக் கொண்டுள்ளது அங்கிருக்கும் கலை ஆவணங்கள்.


ஈழத் தமிழ் சொந்தங்களின் அமைதியான இயற்கை சார்ந்த வாழ்க்கையை பனைமரக் காட்டினுடாக வடித்த சிற்பத்தில் தொடங்கி, 1983ம் ஆண்டு குட்டி மணி தன் கண்களுக்கு கொடுக்க விரும்பிய பாக்கியமான சுதந்திர தமிழீழத்தை பார்க்க கூடாது என்று நோண்டி எடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட கண்களை வடித்த சிற்பமாகட்டும் பேசாமல் பேசும் கதைகள் பல. யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பு சம்பவத்தையும் தமிழன் கறி இங்கு கிடைக்கும் என்று நடத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிகாட்டுவது ஆகட்டும் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக கலை ஆவணமாக வடிக்கப்பட்டுள்ளது.
(யாழ்ப்பாண நூலக எரிப்பு, தமிழன் கறி நிகழ்வுகள் கலை வடிவில்)

(முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் 2009ல்)

முள்ளிவாய்க்காலில் 2009ல் நடந்த கொடூரங்களை தனி தனி சிற்பங்களாக ஒரு சுவராக ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருந்தது. கொத்துக் குண்டுகள்,  மனித உரிமை மீறல்கள் மற்றும் முள்வேலி முகாம் என்று 2009ல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடத்திய அனைத்து கொடூரங்களையும் சிற்ப ஆவணங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பின்னால் முற்றத்தின் ஜோதியாக பாலச்சந்திரன் படுகொலையும் சார்லஸ் ஆண்டணியின் மரணமும் ஒரே சிற்பமாக இருவரின் உயிருடனான உருவமும் உயிரற்ற உடல்களும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
பாலசந்திரன், சார்லஸ் ஆண்டனி சிற்பங்கள்

ஈகியர்கள் சிற்பங்கள்

இதைத் தவிர முள்ளிவாய்க்கால் அவலங்களை சித்தரித்த சிற்பங்களுக்கு நேரெதிராக முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று தங்கள் இன்னுயிரை ஈந்து போராடிய தோழர்களின் சிற்பங்களும், மாவீரன் முத்துகுமார் நடுநாயகமாக இருக்க முருகதாஸன் வரை அனைவரும் சிற்பங்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.  


மாவீரர்கள் மண்டபத்தில் சிவகுமரன், சங்கர் தொடங்கி அனைத்து மாவீரர்கள் படங்களும் வைக்கப்பட்டுள்ளது அவர்களின் சிறு வரலாற்று குறிப்புடன். இதை படிப்பவர்கள் அனைவருக்கும் ஈழப்போராட்ட வரலாறு முற்றிலுமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் உள் மண்டபத்தில் அனைத்து தமிழறிஞர்கள் படங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. பெயர் மட்டுமே தெரிந்த பல அறிஞர்களின் புகைப்படங்கள் இங்கு அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முற்றத்தில் ஈழ வரலாறு பற்றி நிறைய சந்தேகங்கள் எழுப்பப்பட்டது என்னால் முடிந்த அளவிற்கு கேட்ட தோழர்களுக்கு விளக்கம் சொன்னேன்.. ஆனால் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத விசயம் மாணவத் தோழன் சிபி லெக்சுமணனிடம் வந்திருந்த ஒருவர் கேட்டிருக்கிறார். ”பாலச்சந்திரன் செத்துட்டானா?” என்று ஆம் இத்தனை வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை கூட அறியாதவராக ஒருவர் மட்டும் அல்ல இன்னும் பலர் உள்ளனர், இவர்களை தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். 2009க்கு பிறகு வந்த குபீர் உணர்வாளர்கள் என்று விமர்சிப்பவர்களும்,  திராவிட இயக்கம் என்று வியாக்கியானம் பேசி பலவருடங்களாக இயக்கம் நடத்துபவர்களும் தங்களின் திறமையை அனுபவத்தையும் வைத்து ஏன் பாலச்சந்திரன் மரணத்தை இந்த கடைசி குடிமகன் வரை கொண்டுசேர்க்க முடியவில்லை இத்தனை வருடமாக எப்படி மக்களை சென்றடைவது என்று யோசிப்பது இல்லை, தனக்கான அங்கீகாரத்தையும், தனக்கான மரியாதையையும் தான் எதிர் பார்க்கிறார்கள் இந்த பழம் திண்ணு கொட்டை போட்ட பழுத்த அரசியல்வியாதிகள்.

இந்த முற்றம் அமைய உதவியவர்கள் ம.நடராசனாகட்டும் அல்லது வேறு யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் ஆனால் முற்றம் தஞ்சையின் நட்டநடுவே உலகிற்கு தன் கதையை சொல்ல தொடங்கிவிட்டது முற்றமும் அதை பார்க்க வரும் மக்களும் சொல்லட்டும் என்ன தேவை என்று… முற்றம் இனி எட்டு திக்கும் முரசறிவிக்கும் ஈழத் தமிழ் சொந்தங்களின் விடிவிற்கு வழி வகுக்கும்.

முற்றம் நெரிஞ்சி முள்ளாக ஆளவிரும்பும், ஆண்டுகொண்டிருக்கும் அனைத்து ஆதிக்கவாதிகளுக்கும் ஆப்பாக இருக்க போகிறது. 

குறிப்பு :- முற்றத்தின் திறப்பு நிகழ்விற்கு பாஜகவை அழைத்தது தேவையில்லாத ஒன்று தவிர்த்திருக்கலாம்.

பாராட்டப்பட வேண்டிய விசயம் பெரியார், காமராஜர் படங்களை வாஞ்சிநாதன் படம் வைத்த முற்றத்தில் வைக்காமல் விட்டதற்கு கோடான கோடி நன்றிகள். 


Monday, November 4, 2013

ஊதாரய்யா உதாரு நிலவரசு உதாரு...


நிலவரசு கண்ணன் இவர் நேற்றில் இருந்து விட்டுக்கொண்டு இருக்கும் உதாரு உங்கவூட்டு உதாரு எங்கவூட்டு உதாரு இல்ல, மாபெரும் உதார்கள். இவரை கொலை செய்ய போவதாக மிரட்டல் வருகிறதாம், அப்படி இப்படினு பல உதார்கள். இது வரை கேணை கிருக்கன் ஒருவனை பார்த்து வந்தோம் அதே அளவிற்கு அடுத்து ஒரு ஆள் உருவாகி இருக்கிறார். இவரை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இந்த பதிவு. 

நமது போராட்டங்களின் நோக்கங்கள் அரசு பலவிதமாக திருப்பும், அதில் ஒன்று தான் இன்று ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் செய்தியான 4 மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் பிரதமர் காமென்வெல்த் மாநாட்டுக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று வரும் செய்திகள். ஆனால் களத்தில் போராடி கொண்டிருப்பவர்களையும் திசை திருப்ப வேண்டும் போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க வேண்டும் என்று ஊடகங்கள் மட்டும் அல்ல பல்வேறு உத்திகளை கொண்டு நிறைவேற்றும். இந்த நிலவரசு கண்ணன் அந்த அளவிற்கு ஒர்த் கிடையாது ஆனால் இவரால் முடிந்த அளவு இங்கு போராடிய ஒரு இயக்கத்தின் நோக்கத்தை சிதைத்து இருக்கிறார். 

திராவிடர் விடுதலை கழகம் காமென்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று போராடியதாக திரிக்கிறார். ஆனால் அவர்கள் 20-10-2013 அன்று சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரியில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் தெளிவாக தங்கள் கோரிக்கையை முன்னுறுத்தி இருக்கின்றனர். 


இந்த துண்டறிக்கையில் மிகத் தெளிவாக தங்கள் கோரிக்கையை அதுவும் முதன்மை கோரிக்கையை மிகவும் சரியாக இனப்படுகொலை நடந்த இலங்கையில் கமென்வெல்த் மாநாட்டை நடத்தாதே என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.  இது மட்டுமல்ல அவர்கள் நிகழ்வில் எடுத்த படத்தில் பின்னால் இருக்கும் பேனரிலும் அவர்கள் கோரிக்கையை தெளிவாக வலியுறுத்தியுள்ளனர். பேனரில் கோரிக்கை தான் மிக முக்கிய இடம் வகிக்கிறது அவர்கள் இயக்கத்தின் பெயர் கீழே ஒரு மூலையில் உள்ளது.


இப்படி அவர்கள் தங்கள் கோரிக்கையில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர். அவர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்படி அவர்கள் கோரிக்கையில் தெளிவாக இருக்கும் பொழுது. நிலவரசு கண்ணன் திராவிடர் விடுதலை இயக்கம் கோரிக்கையை திரிக்கிறது போராட்டத்தை திசை திருப்புகிறது என்று ஒப்பாரி வைக்கிறார். அதாவது அவர்கள் செய்யாத ஒன்றை அதுவும் முழுப் பொய்யை திரும்ப திரும்ப வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து தான் சொல்லும் பொய்யை உண்மை என்று நம்ப வைக்க முயற்சிக்கிறார். 

திராவிடர் விடுதலை கழகம் தாங்கள் நடத்திய போராட்டத்தில் மட்டுமில்லை மே 17 இயக்கம் இங்கிலாந்து, இந்திய அலுவலகங்களை முற்றுகையிட்ட போராட்டத்திலும் கலந்து கொண்டனர். இந்த போராட்டமும் காமென்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி நடத்தப்பட்டது தான். இப்படி எந்த போராட்டத்திலும் தங்கள் கோரிக்கையை மாற்றிக் கொள்ளாத திராவிடர் விடுதலை கழகம் போராட்ட நோக்கத்தை திசை மாற்றுகிறது வடுகர்கள் அது இது என்று ஒரு படத்தை தரவேற்றுகிறார். அந்த படம் 


இதில் இடது புறம் இருப்பது தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய இரயில் மறியல் இரண்டாவதாக வலது புறம் இருப்பது திராவிடர் விடுதலை கழக தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை எந்த உயிர்சேதமோ, காயமோ யாருக்கும் ஏற்படாவண்ணம் தாக்கிய பிறகு அவர்கள் காவல் துறையினர் மத்திய புழல் சிறைக்கு அழைத்து செல்லும் முன்பாக எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை திராவிரடர் விடுதலை கழக நண்பர்கள் முகநூலில் நவம்பர் ஒன்றாம் தேதியே பதிவேற்றி இருக்கின்றனர்ர் அங்கிருந்து தான் இவரும் எடுத்திருப்பார். அதில் மிகவும் தெளிவாக போராட்டம் எதற்கு என்று குறிப்பிட்டுள்ளனர். 


இப்படி நவம்பர் ஒன்றாம் தேதி தரவேற்றப்பட்ட படத்தை எடுக்கும் பொழுது படத்தின் மேல் சொல்லப் பட்ட செய்தியை படிக்கவில்லையா இவர் என்று தெரியவில்லை. ”சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில் இலங்கையில் காமென்வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்று எதிர்வினையாற்றினார்கள் என்பதால் கைது செய்யப்பட்ட திராவிட விடுதலை கழகத்தின் தோழர்களின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர் போராட்டத்தை திராவிட இயக்கமான இவர்கள் திசை திருப்புவதாகவும் அவர்கள் பெயர் எடுக்க முயல்வதாகவும் ஓவென்று கூக்குரலிட்டு அழுகிறார். நேற்று இரவு வரை முதல் இன்று முழுவதும் இவர்களை அம்பலப்படுத்திவிட்டேன் என்று அடை மொழி வேறு, இவர் இப்படி அம்பலப்படுத்தியதால் கொலை மிரட்டல் வருவதாக செய்தி தொடர்ந்து பதிந்து வருகிறார். இப்பொழுது கூட தன் நிலைத்தகவலில் பதிந்துள்ளார். 

https://www.facebook.com/nilavarasu/posts/561431063909944

இதில் இவர் திராவிடர் விடுதலை கழகத்தினர் மத்திய அரசு அலுவலகத்திற்கு எதிரான போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் முயன்றார், போராட்டத்தை மட்டுமல்ல போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளையும் அசிங்கப்படுத்தினார். அதையும் இங்கு பலர் பகிர்ந்துள்ளீர்கள் இது மாபெரும் வெட்க கேடு. திராவிடர் விடுதலை கழக தோழர்களுடன் இந்த போராட்ட களத்திற்கு வந்தது முதல் பழகி வருகிறேன், அவர்கள் ஆட்டு மந்தை கூட்டமல்ல தலைமை சொல்வதை கேட்பது மட்டும் தங்கள் வேலை என்று செய்ய. தலைமையின் கருத்து தங்களுக்கு பிடிக்காவிடில் நேரடியாகவே விவாதிப்பார்கள், அதே போல் தாங்கள் முன்னெடுக்க விரும்பும் போராட்டங்களை தலைமையின் அனுமதிக்காக காத்திருந்து செய்பவர்கள் இல்லை தங்கள் மனதிற்கு சரி எனப்பட்டதை செய்யும் போராளிகள். அங்கிருக்கும் தோழர்கள் தங்களுடைய வாழ்க்கையையும் சரியாக வழி நடத்திக்கொள்வார்கள். அவர்கள் போராடுவதற்காக வந்தவர்கள் இல்லை வாழ்க்கையை போராட்டமாக அமைத்துக் கொண்டவர்கள். தலைமையில் இருந்து கடைசி தொண்டர் வரை சொல்வார்கள் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று.. 


நிலவரசு கண்ணன் முதலில் எந்த இயக்கத்திலும் இல்லாமல் இருந்தார் பின்னால் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார் இவருக்கு ஊடக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று முகநூலில் பதிந்திருந்தார் அவர்கள் கொடுத்தார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதன் பிறகு அங்கிருந்து நீக்கப்பட்டார் என்று தகவல் வந்தது. இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை ஆனால் தன்னை தமிழ் தேசியவாதி, தமிழ் உணர்வாளர் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் இவர் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை, சிறிது காலம் தலித்தியமும் பேசினார். நானும் இவரும் பல விவாதங்களில் ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக விவாதித்து இருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு இயக்கத்தின் ஒட்டுமொத்த கொள்கையும் அதன் போராட்ட நோக்கத்தையும் திசை திருப்பும் இவரைப் போன்ற புல்லுறுவிகள் நமக்கு தேவையா என்று சிந்திக்க வேண்டும். 

இவர்களைப் போன்றவர்கள் பேசுவதை உண்மை என்று எண்ணிக் கொண்டு உண்மையிலேயே திராவிடர் விடுதலை கழகத்தின் போராட்ட நோக்கம் என்ன என்பதை தெரியாமல், விசாரித்து தெரிந்து கொள்ளாமல் இருப்பதனால் ஏற்படும் அநாகரீக தகவல்களை மற்றவர்களுக்கும் பகிர்வதை செய்து வருகிறோம். இனிமேலாவது இவரை போன்றவர்கள் மட்டுமல்ல நான் பதிவு செய்தால் கூட என்ன ஏது என்பதை ஆதாரம் இல்லாமல் பதிந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இங்கு நான் அனைத்து ஆதாரங்களையும் தேதி வாரியாக பதிவு செய்துள்ளேன். எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும் தகவல்களை தர தயாராக உள்ளேன்.. 

Sunday, November 3, 2013

கொளத்தூர் மணி தோழர்கொளத்தூர் மணி தோழரை முழுதாக அறிந்தவன் இல்லை, அவர் செய்த சில விசயங்கள் மட்டும் தான் எனக்கு தெரியும். காரணம் அவர் என்றும் தான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று எங்கும் தன்னை விளம்பரப் படுத்திக் கொண்டதில்லை. 

ஈழ விடுதலைப் போராட்டமும் அதில் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பங்கும் அனைவரும் ஒரளவு அறிந்ததே. பொன்னம்மான் பயிற்சியின் தலைவராக இருந்து கொளத்தூரில் நடந்த முகாமை பற்றியும் இன்றும் அந்த ஊர் மக்கள் பொன்னமானுக்கும் புலிகள் அமைப்பிற்கும் அளித்து வரும் மரியாதையும். ஆம் புலியூர் என்று பெயரை தாங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளை தொடர்ந்து நடத்தி வருபவர்கள் அவர்கள் என்பது நாம் அறிந்ததே. இப்படி தன் இடத்தை கொடுத்து பயிற்சி முகாம் நடத்திக் கொள்ள அனுமதி அளித்தவர் தான் கொளத்தூர் மணி தோழர். இதை விட அதிகமாக என்னால் எதுவும் சொல்ல இயலாது இதற்கு மேல் சொல்ல வேண்டியது இயக்கம் தான், இயக்கமே இவரை அங்கீகரித்து இவரைப் பற்றி வெளியில் சொல்ல வேண்டும் அது தான் சரியான ஒரு மரியாதையாக இருக்கும். 

வீரப்பன் பிரச்சனையில் நக்கீரன் கோபால் பேச்சு வார்த்தை நடத்த சென்ற பொழுது இவரையும் அழைத்து சென்றார்கள். அது மட்டுமே ஊடக வாயிலாக இவரைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட ஒரே நடவடிக்கை. ஆனால் அப்பொழுது வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிரடிப் படையினரால பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை, எவையும் ஊடகங்களால் நமக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டதில்லை. 

அரசு இயந்திரத்தினால் மனித உரிமை மீறல்கள் நடக்கும் பொழுது அதற்கு எதிர்த்து குரல் கொடுத்து வெற்றி பெறுவது என்பது மிகவும் சொற்பமாகவே நடக்கும். அதுவும் அதிரடைப்படையின் அட்டகாசங்களுக்கு எதிராக போராடி வெல்வது என்பது மிகப்பெரிய சாதனை, அப்படி 1983 ஜூன் மாதம் கொளத்தூர் பகுதியில் இருந்து விரப்பனின் கூட்டாளிகள் என்று பதினோரு பேர்கள் காவல்துறையினரால் கடத்த்ப்பட்டனர். காவல் துறை கைது செய்திருந்தால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும் ஆனால் காவல் துறையினரால் கைது என்று சொல்லி அழைத்து செல்லப்பட்டவர்கள் எங்கே என்று தெரியாத அளவிற்கு எந்த சட்ட நடைமுறையும் பின்பற்ற படவில்லை எனில் அதை காவல்துறையினர் நடத்திய கடத்தலாகவே நாம் பார்க்க முடியும். அப்பொழுது சென்னை உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்து, கடத்தப்பட்ட 11 பேரில் 9 பேரை உயிருடன் மீட்க காரணமாக இருந்தவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தான். இது தான் அதிரடிப்படையின் மனித உரிமை மீறலுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற முதல் போராட்டம் ஆகும். 

இதைப் போல் தொடர்ந்து அதிரடிப்படையின் அனைத்து மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொணரும் அனைத்து களத்திலும் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் முன்னின்று போராடியுள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத்தால் சதாசிவம் கமிசன் அமைக்கவும் காரணமானவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தான். தமிழக கர்நாட கூட்டு அதிரடிப்படையின் மனித உரிமை மீறல்கள், வன்புணர்ச்சிகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர தமிழ்நாடு பழங்குடியினர் சங்கம், தமிழ்நாடு சிவில் உரிமை கழகம், கர்நாடக மக்கள் சிவில் உரிமை கழகம், சோகோ அறக்கட்டளை, மக்கள் கண்காணிப்பகம் மற்றும் தோழர் கொளத்தூர் மணி இணைந்து முதன் முதலாக அதிரடைப்படையினரால் பாதிக்கப்பட்டோர் மாநாட்டை 27.4.1998 அன்று நடத்தினர். இதை தொடங்கி வைத்தவர் தமிழக மனித உரிமை கழகத்தின் அன்றைய உறுப்பினர் இரத்தினசாமி. 

இதன் பிறகே தேசிய மனித உரிமை ஆணையம் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி ஒய்வுபெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் விசாரணை கமிசன் ஆரம்பித்தது. இந்த கமிசனின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு இது வரை அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை, தொடர்ந்து இதற்கான முன்னெடுப்புகளை நடத்தி வருபவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள். இன்று கர்நாடக சிறையில் தூக்கு கயிற்றின் நிழலில் வாடிக் கொண்டிருக்கும் சைமன், பிலவேந்திரன், ஞானசேகரன், மற்றும் மாதையன் அவர்களின் தூக்கு கயிற்றை அறுத்து எரியும் போராட்டத்தில், இங்கு எப்படி மூவர் உயிர் காக்கும் போராட்டத்தில் முன்னின்று போராடிக் கொண்டிருக்கிறாரோ அதே போல் கார்நாடகத்தில் இருக்கும் தமிழர் நால்வர் உயிர்காக்கவும் தன்னால் இயன்ற அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருப்பவர் தான் தோழர் கொளத்தூர் மணி. 

எனக்கு தெரிந்து இவர் செய்த பணியை பட்டியலிட்டிருக்கிறேன், இதை தவிர அவர் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் ஒருங்கிணைப்பது, மூவர் விடுதலை போராட்டங்களில் ஒருங்கிணைப்பது என்று அனைத்து தலைவர்களையும் எந்த பேதமும் இன்றி ஒரிடத்தில் ஒருங்கிணைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருபவர். அனைவரையும் ஓரணியில் திரட்டி போராட தொடர்ந்து முயன்று வருபவர் தொடர்ந்து போரடி வருபவர்.