Wednesday, March 13, 2013

ஆமெரிக்க தீர்மானமா அயோக்கிய தீர்மானம்



அமெரிக்க தீர்மானத்தில் ஒன்றுமே இல்லை என்றாலும் இங்கு சிலர் அதை ஆதரித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக பாடுபட்டு வருகிறார்கள். அவர்களின் இந்த நோக்கமே மிகத்தெளிவாக அவர்களை யார் என்று காட்டுகிறது. ஆனால் இதை மறைத்து மற்றவர்களை குறை சொல்ல வீடியோ கேமிலிருந்து கூட உதாரணம் எடுக்கிறார்கள். 60 ஆண்டுகால சுதந்திர போராட்டத்தை மறந்துவிட்டு தங்களின் நோக்கமான அமெரிக்காவின் தீர்மானத்தை கடுகளவும் உணர்ந்து கொள்ளாமல் அதை சணலாக உபயோகிக்க போகிறோம் அதை பிடித்துக் கொண்டு மேலே செல்ல முடியும் என்றும் வியாக்கினாங்கள் வைக்கப்படுகின்றனர், அது பத்தாம் நம்பர் நூல்கண்டு கூட இல்லை என்பதை புரிந்து கொள்ள இவர்களுக்கு எத்தனாவது அறிவு வேலை செய்யவேண்டும் என்பது நமக்கும் புரியவில்லை.

அமெரிக்க தீர்மானம் ஐ.நாவின் மனித உரிமை அமைப்பின் தலைமைச் செயலாளர் நவநீதம் பிள்ளையால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை பாராட்டுகிறது அதில் சொல்லப்பட்டிருக்கும் சில விசயங்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறது ஆனால் அதே அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ள சர்வதேச போர் குற்ற விசாரணையை கவனத்தில் கொள்கிறோம் என்று மட்டுமே பேசுகிறது. தீர்மானம் பல விசயங்களை அதாவது குற்றவாளியே குற்றத்தை விசாரித்து தயாரித்த கற்றுகொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க அணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் தேவைப்பட்டால் சர்வதேசம் உதவிகளை இதற்காக செய்யலாம் என்று சொல்கிறது. ஆனால் அவர்கள் உதவுவது இலங்கையின் ஒப்புதலை பெற்றே உதவ வேண்டும் என்கிறது. இது வரை ஐ.நாவின் பிரதிநிதிகளையே அனுமதிக்காத இலங்கை அரசு மனித உரிமை ஆணைய கூட்டம் வருகிறது என்றவுடன் ஒரு சில அதிகாரிகளை மட்டும் தன் நாட்டுக்குள் வர அனுமதித்தது. இப்படி நடந்து கொள்ளும் இலங்கை அரசை நிர்பந்திக்கும் வகையில் இந்த தீர்மானத்தில் எதுவும் இல்லை. 

மேலும் இந்த் தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோருகிறது, மிக அதிகமான நிர்பந்தம் என்றால் இலங்கை சர்வதேச சட்டங்களுக்கு நிகராக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான். இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் என்பது தோல்வி அடைந்த ஒரு சட்டம் என்பது நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதன் கீழாகவே தமிழர்களுக்கு தீர்வு என்று அமெரிக்க தீர்மானம் வலியுறுத்துகிறது. 1950களில் மலையகத்தமிழர்களின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கை தனது அரசியலமைப்பு சட்டமும் இறையாண்மையும் தோல்வி அடைந்த ஒன்று என்று நிருபித்தது. 1700களிலிருந்து இலங்கையில் குடியேறி அந்த நாட்டின் தேயிலை வளத்தை பெறுக்கி இன்று தேயிலை ஏற்றுமதியில் உலகின் முன்னனி நாடுகளில் ஒன்றாக வருவதற்கு காரணமாக இருந்த மலையகத் தமிழர்களின் குடியுரிமையை ரத்து செய்து தான் ஒரு இனமக்களின் சார்பான நாடு என்பதை உறுதி செய்தது. 

ஒரு நாடு என்பது தனது குடிமக்கள் அனைவரையும் சரி சமமாக கருதவேண்டும் அவ்வாறு கருதாதபொழுது அந்த நாட்டின் இறையாண்மை என்பது சரியான நோக்கில் இல்லை எனப்தை சர்வதேச சமூகம் வலியுறுத்துகிறது ஆனால் இலங்கை விசயத்தில் இதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஏன் மலையக தமிழர்களை தன் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை வெளியேற்றுவதுடன் நிற்காமல் 1970களில் கல்வியை தரப்படுத்துகிறோம் என்று சட்டம் கொண்டு வந்து சிங்கள மாணவன் 30 சதவீத மதிப்பெண் எடுத்தாலே மேல் படிப்பு படிக்கலாம் ஆனால் தமிழ் மாணவர்கள் 80 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் மேல் படிப்பு படிக்கலாம் என்று தன் நாட்டு குடிமகனின் அடிப்படை உரிமையான படிப்பதை கூட தடைசெய்த இறையாண்மை அரசு தான் இலங்கை. இவை அனைத்தையும் மறந்துவிட்டு இன்று எதோ இலங்கை ஒரு உத்தமமான ஜனநாயக நாடு என்ற போர்வையில் இறையாண்மை பொறையாண்மை என்று சொல்லி அதனுள் தலையிட முடியாது என்று கூறிவருகின்றனர் சர்வதேச சமூகம். 

இப்படி ஒரு இனத்தை அடையாளம் காட்டி அவர்களை ஒடுக்க எப்பொழுது இலங்கையின் அரசியல் சாசனம் துணை போனதோ அந்த அரசியல் சாசனமும் சனநாயகமும் தோல்வியில் முடிந்து போகிறது ஆனால் அமெரிக்கா தீர்மானம் இந்த அரசியல் சாசனத்தின், தோல்வியுற்ற ஜனநாயகத்தின் கீழ் தீர்வை தேடுகிறது. மேலும் இந்த தீர்மானம் 60 ஆண்டுகால சுதந்திர போராட்ட வரலாற்றை மறுபடியும் பயங்கரவாதம் என்று சித்தரித்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு தேடச் சொல்கிறது. இதை எல்லாம் நம் அறிவு சீவிகள் உணர்கிறார்களா என்று தெரியவில்லை ஒட்டுமொத்தமாக தீர்மானத்தை ஆதரிக்க குரல் கொடுக்கிறார்கள். இந்த தீர்மானத்தை ஏற்றால் நமக்கு ஏற்படும் தீமைகள்.
  1. 60 ஆண்டுகால சுதந்திர போராட்டத்தை பயங்கரவாதம் என்று நாம் ஒத்துக் கொள்கிறோம் 
  2. LLRC என்பதன் மூலமாக நியமிக்கபப்ட்ட இராணுவ நீதிமன்றம் பிப்ரவரி 15ம் தேதி 2013 அன்று வெளியிட்ட தீர்ப்பில் இராணுவம் எந்தவிதமான முறையிலும் மக்களை கொலை செய்யவில்லை என்று தீர்ப்பு எழுதியுள்ளது. இதையே தொடர்ந்து செய்து ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களை அழிக்க உதவும்.
  3. தீர்மானம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமெரிக்காவின் சுயதேவைக்காக தீர்வை தேடுகிறது, ஆனால் தமிழ் மக்கள் நலன் சார்ந்து எடுக்கும் முயற்சிகள் என்பது அந்த நாட்டில் மிகச்சிறந்த முறையில் உழைத்து முன்னேறிய இனத்தை கண்டு வெறுப்படைந்த கையாலாகத சிங்கள இனம் அழித்ததால் தான் இப்பொழுது ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ளது என்பதை மறந்து. அவர்களை பிச்சைகாரர்களாக மாற்ற நினைக்கிறது. நமது தமிழ் மக்களுக்கு உழைக்கும் திறன் இருக்கிறது அவர்களுக்கு தேவை பிச்சை இல்லை உழைத்து வாழ சுதந்திரம் என்பதை புரியவைக்க வேண்டும். தமிழர்கள் பிச்சையெடுத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.
  4. ஒவ்வொரு 5 தமிழருக்கும் ஒரு இராணுவ வீரன் என்ற கணக்கில் தமிழ் மக்கள் ஆயுதங்களின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்த அவல நிலையை தீர்ப்பதற்கு எந்தவிதமான அலோசனையையும் சொல்லவில்லை இந்த தீர்மானம். 
  5. போரினால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு பிச்சையிடுவது மட்டும் தான் இந்த தீர்மானத்தின் நோக்கம் ஆனால் அந்த பிச்சையும் எவன் போரை நடத்தி தன் மக்களை கொன்றழித்தானோ அவனை வைத்தே பிச்சையிட வேண்டும் என்று இலங்கையின் ஒப்புதலுடன் இலங்கை அரசே செய்ய வேண்டும் என்று கூறுகிறது. 
  6. இதுவரை சர்வதேச சமூகம் அளித்த உதவிகள் சென்றடைந்தனவா எனப்தற்கு உறுதியான சான்றுகள் இல்லை ஆனால் மேலும் உதவ வேண்டும் என்பது முட்டாள் தனம்.
  7. இலங்கையின் நீதித்துறை சரியாக செயல்பட்வில்லை என்பது ஒரு மாதத்திற்கு முன்னால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் உறுதி செய்கிறது. அதை பற்றி விசாரிக்க சென்ற சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்காமல் தடை செய்துள்ளது இலங்கை. இப்படிப் பட்ட ஒரு அரசிடம் தான் நீதியை நோக்கி கையேந்தி நிற்கவேண்டும் தமிழர்கள் என்று வலியுறுத்துகிறது அமெரிக்க தீர்மானம். 
இப்படி ஒரு விதத்திலும் சரியான படிசெயல்படாத இலங்கையை காப்பாற்றுவதே ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் அடிப்படை நிலை. இதை ஒத்துக் கொண்டால் ஒரு சுதந்திர போராட்டத்தை நாமே முடித்து வைக்கும் ஒரு அவலநிலையை அடைவோம். இதைப் புரியாமல் சிலர் விசிலடிச்சான் ரசிக குஞ்சுகள் தங்கள் தலைவர் சொல்லிவிட்டார் என்பதற்காக இங்கு விசிலடித்து அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க கோருகின்றனர். இவர்கள் ரசிகர்களாக இருப்பது என்றால் அவர்கள் இடத்தில் இருக்கட்டும் பொது மக்களின் பிரச்சனையில் தலையிட வேண்டாம். பொது மக்களின் பிரச்சனையை ரசிகத்தன்மை உணர்ந்து கொள்ளாது அதற்கு வாய்ப்பும் இல்லை.