Saturday, November 10, 2012

க்யூ பிராஞ்ச் வயிறு வளர்க்க


தமிழ்நாட்டின் காவல்துறையின் ஓர் அங்கமாக இயங்கி வருவது க்யூ ப்ராஞ்ச், இவர்கள் வைத்தது தான் சட்டம் என்று சென்று கொண்டிருக்கிறது நமது நிலை. சமீப காலமாக பலரை கைது செய்கிறார்கள் பல காரணங்களை சொல்லி, நேற்று கூட ஒரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு ஆவணப்பட இயக்குனரை கைது செய்யப்பட்டதாக தகவல் வந்தது. இவர்கள் கைது செய்பவர்களை நக்சலைட் இந்தியாவுக்கு எதிராக சதி செய்தார்கள் என்று காரணம் சொல்லி தான் கைது செய்வது இவர்களின் வாடிக்கை. ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் சட்டபூர்வமாக பல வழிமுறைகள் உண்டு ஆனால் அவற்றை எல்லாம் கடந்து தங்கள் விருப்பபடி இவர்கள் யாரை வேண்டும் என்றாலும் கைது செய்வார்கள் இவர்களுக்கு இந்த உரிமை எப்படி வந்தது.

1973ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் தான் முதன் முதலில் இந்த பிரிவு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது, காரணம் நக்சல் பாரி இயக்கங்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இயக்கங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் க்யூ பிராஞ்ச். இது தனது முழு செயல்பாட்டை எம்.ஜி.ஆரின் ஆட்சிகாலத்தில் தமிழகத்தில் காட்டி பலரை ஒழித்துக் கட்டியது. மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்கவே உருவாக்கப்பட்ட பிரிவு தான் இது. ஆனால் இதே போன்ற ஒரு பிரிவு சட்டவிரோதமாக ரவுடிதனம் பண்ணும் சிலருக்கு எதிராக பயன்படுத்தியிருந்தால் இன்று அமைச்சர்களாக இருந்த இருக்கும் பலர் அமைச்சர்கள் ஆகாமல் என்றோ சவக்குழிக்குள் சென்றிருப்பார்கள். மக்களை மிரட்டி கொள்ளை அடிப்பவர்களுக்கு எதிராக இப் பிரிவு உருவாக்கப்படாமல் மக்களுக்கு ஆதரவாக போராடும் தோழர்களை ஒடுக்கும் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

70கள் 80களில் நக்சல் பாரி இயக்கங்கள் தமிழகத்தில் இருந்தன அதனால் இந்த பிரிவின் தேவை இருந்தது ஆனால் அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் படியான  இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை. மக்கள் அரசின் எந்த விதமான மக்கள் விரோத திட்டங்களையும் புரிந்து கொள்ளாமல் அதன் கீழாக வாழப் பழகிவிட்டனர், இந்த பிரிவு தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது ஆனால் அதன் பிறகு இந்த பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு என்று தனியாக அரசில் இருந்து பணம் ஒதுக்கப்படும் மேலும் எல்லையற்ற அதிகாராங்களும் இருந்தது இதை இழக்க விரும்பாத இவர்கள் 1991க்கு பிறகு ஈழத்தமிழர்களின் பெயரை சொல்லி பிழைக்க ஆரம்பித்தனர். ஆமாம் அவர்கள் இங்கு தீவிரவாதத்தை உருவாக்குகிறார்கள், ஆயுத கலாச்சாரத்தை உருவாக்குகிறார்கள் என்று கதை கட்டி தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொண்டனர்.



நமக்கு அனைவருக்கும் தெரியும் தங்களின் தேசிய விடுதலைகாக போராடிய தோழர்கள் அதற்கான பணத்தேவைகளை நிறைவு செய்துகொள்ளவே நிறைய சிரமப்பட்டார்கள் அவர்கள் பணம் செலவழித்து தமிழகத்தில் ஒரு போராட்டத்தை வளர்க்கும் நிலையில் இல்லை. ஆனால் அவர்கள் எதோ பெரும் பணக்காரர்கள் போலவும் அவர்கள் இங்கு ஒரு ஆயுதப்போராட்டத்தை ஊக்குவிக்க முயன்றனர் என்று சொல்லி க்யூ ப்ராஞ்ச் என்று பிரிவு தனது இயக்கத்தை தக்க வைத்துக் கொண்டது. ஒரு ஆயுதப்போராட்டத்தை ஒரு நாடே உருவாக்க முடியும் 1980களில் ஈழத்தில் ஆயுதப்போராட்டதை இந்தியா ஊக்குவித்தது போல்,  அமெரிக்கா பின்லேடனை தனது தேவைகாக ஆதரித்து ஊக்குவித்து விட்டு பின்னர் அவர் தங்களுக்கு எதிராக திரும்பியபொழுது அழித்தது. இவ்வாறு ஒரு நாடு தான் அடுத்த நாட்டில் ஆயுதப்போராட்டத்தை ஊக்குவிக்க முடியும். ஆனால் தமிழகத்தில் ஆயுதபோராட்டத்தை தனது தேசத்தின் விடுதலைகாக போராடிய விடுதலை போராளிகள் ஊக்குவித்ததாக சொல்லி தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது க்யூ ப்ராஞ்ச்.

இப்பொழுது 2009க்கு பிறகு அந்த பிரச்சனையும் இல்லை என்று ஆன பிறகு இந்த க்யூ ப்ராஞ்ச் தொடருவதற்காக உருவாக்கப்பட்டதே ஈழ அகதிகள் சிறப்பு முகாம். இவர்கள் மேல் பதியப்படும் வழக்குகள் ஒன்றுக்கும் உதவாத விசா, பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பது. உலகில் இல்லாத எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை இது அகதியாக அதாவது தனது சொந்த நாட்டில் வாழ வழி இல்லை என்று அரசியல் தஞ்சம் கேட்டு வருபவர்களிடம் ஆவணங்களுடன் வரவேண்டும் என்று கேட்கும் கொடுமை. எந்த அரசு தன்னை அழிக்க முயல்கிறதோ அந்த அரசிடம் அனுமதி பெற்று வரவேண்டும் என்று சொல்கிறது இந்த க்யூ ப்ராஞ்ச் நீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்தாலும் இவர்கள் மீது வேறு வழக்குகள் பதிவு செய்து திரும்பவும் இந்த சிறப்பு சிறைகளிலேயே வைக்கின்றனர். இதை தவிர நமது ஊரில் பலருக்கு போடப்படும் பொய் வழக்கான கஞ்சா கடத்தினார்கள் என்ற வழக்கும் போடப்பட்டுள்ளது, ஏன் உயிர்காக்கும் மருந்துகளை கடத்தினார்கள் என்று கூட வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஒரு தோழர் 2010ம் ஆண்டு ஈழத்திலிருந்து தமிழகம் வருகிறார் அவரை கைது செய்து ஆவணங்கள் இல்லாமல் வந்தார் என்று இந்த சிறப்பு சித்திரவதை முகாமுக்கு அனுப்புகிறார்கள். வழக்கு நடக்கிறது வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராது என்பதை உணர்ந்து கேரளாவில் ஆஸ்த்ரேலியாவுக்கு செல்ல முயன்ற பொழுது பிடிக்கப்பட்ட அகதிகளுடன் கொண்டு சேர்த்து கேரளாவில் போலிஸிடம் ஒப்படைக்கிறார்கள், அங்கும் நீதிமன்றத்தில் எதிராக தீர்ப்பு வந்தபின் விடுதலை செய்யபப்ட்டவரை சிறை வாசலில் திரும்பவும் கைது செய்து கொண்டு வந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கிறார்கள். இப்படி சட்டபூர்வமில்லாத கட்டுபாட்டில் சிறப்பு முகாமில் வைக்கிறார்கள். இந்த சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு என்று தனியாக இவர்களுக்கு நிதி ஆதராமும் கேட்டு அதை இவர்கள் உபயோகித்து வருகிறார்கள்.

தங்களுடைய எல்லையற்ற அதிகார போதைகாகவும், நிதி ஆதாரங்களில் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், மேலும் ஈழ விடுதலை போராட்ட வீரர்கள் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இந்தியாவில் தடை செய்வதற்கு வழிவகை செய்யவே இந்த சிறப்புமுகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பொழுது அரசு உத்தரவின்படி செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்கள் மூடப்பட்டு அவைகள் இரண்டையும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் மாற்றும் ஆணையையும் பெற்று விட்டார்கள். இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்பது ஒன்று தான் க்யூ ப்ராஞ்ச் எனும் அதிகாரிகள் தங்களின் பிழைப்பிற்காக ஈழத்தமிழ் அகதிகளை கொடுமைப்படுத்தி தங்களின் வயிற்றை வளர்ப்பது தான்.


Tuesday, November 6, 2012

உள்ளூர் பொய் ஐநாவில் செல்லுபடியாகுமா

ஐநாவில் தோசை மாநாட்டு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன கொடுத்தார்கள் என்றால் “Beats of Bleeding Hearts" என்ற தலைப்பில் மொத்தம் 48 பக்கத்திற்கு ஓர் ஆவணமும் ஒரு சிடியும்.  ஆவணத்தின் முதல் பக்கம் கருணாநிதியின் படமும் தலைப்பும் அதன்பிறகு மூன்று பக்கத்து சமீபத்திய ஆத்ம நண்பர்கள் ஸ்டாலின், பாலு அவர்க்ள் தங்களின் தலைவரை பற்றி புகழ்ந்து ஒரு கடிதம். அதன்பிறகு 15 பக்கத்துக்கு ஒரு மோமோரண்டம் அதில் 8 பக்கத்துக்கு உங்க சொந்த புராணத்தை பாடிவிட்டு மிச்சம் இருக்கும் 7 பக்கத்தில் ஈழத்தமிழர்கள் மன்னிக்கவும் சிலோன் தமிழர்கள் பிரச்சனையை பேசி இருக்கிறீர்கள்(ஸ்டாலின் இன்று வரை சிலோன் தமிழர்கள் என்று தான் சொல்லுறாருப்பா). அதன் பிறகு ஐ.நா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்று நான்கை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

இதில் எது பொதுவாக்கெடுப்பை குறிக்கிறது என்று தெரியவில்லை. கொடுக்கிற அத்தனை பேட்டியிலும் ஐநாவிடம் பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தினோம் என்கிறீர்கள். என்ன மாயமோ தெரியலை எங்க கண்ணுக்கு தெரியாதா பொதுவாக்கெடுப்பு ஐநா கண்ணுக்காவது தெரியுமா???

அதன் பிறகு ஒரு 14 பக்கத்துக்கு அடி தகவல்களாக நீங்கள் மெமோரண்டத்தில் சொன்ன விசயங்களுக்கு ஆதாரங்களாக பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். அதில் இலங்கையில் பாதிக்கப்பட்ட ஊடகத்துறையினர், அரசு சாரா மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கொடுத்து இருக்கிறீர்கள், இது தான் ஆவணத்தில் இருக்கும் உருப்படியான ஒரே விசயம்.

மொமோரண்டத்தில் உங்களின் வீரபிராதபங்களை வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள் அதில் தோசை மாநாட்டில் 14 தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு Beats of Bleeding Hearts ஆவணத்தில் தோசை மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களையும் 12 பக்கத்துக்கு இணைத்துள்ளீர்கள் அதில் நீங்கள் சொன்ன 14 தீர்மானத்துக்கு பதிலாக 11 தீர்மானம் தான் இருக்கிறது. இதில் மூன்றை ஏன் நீக்கியிருக்கிறீர்கள் என்பதை பார்த்தாகிவிட்டது. 


ஆனால் ஆவணத்தின் தொடக்கத்தில் நீங்கள் சொன்ன 14 தீர்மானம் எங்கே என்று ஐநா அதிகாரிகள் தேடப் போகிறார்கள், பார்த்து அவர்களிடம் இந்த திருத்தத்தை சொல்லிவிடுங்கள், இல்லாவிடில் நீங்கள் இணைத்திருக்கும் தோசை தீர்மானம் தவறாக வேறு எதோ ஊசிப்போன உப்புமா தீர்மானத்தை இணைத்துள்ளீர்கள் என்று நினைத்துவிடப் போகிறார்கள் ஐநா அமைப்பினர்.  


தமிழகத்தில் நீங்கள் காலம் காலமாக சொல்லிவரும் பொய் பித்தலாட்டாங்களை ஐநா வரை கொண்டு போயிருக்கிறீர்கள். அவைகள் என்ன என்று விலாவரியாக பார்க்கலாம். 

இந்த ஆவணத்தில் நீங்கள் 1956ம் ஆண்டிலிருந்து ஈழமக்களுக்காக போராடி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு பெயர் போராட்டம் இல்லை, ஈழமக்களுக்கான ஆதரவு என்று சொல்லலாம். உங்களை பற்றி சொல்லும் பிரமான பத்திரத்தில்  "Dr. Kalaignar M. Karunanidhi, who has been raising his voice consistently for the rightful cause of Eelam Tamils from the year 1956, is also the Chairman of TESO (Tamil Eelam Supporters’ Organisation), started to mobilize national and international support for Eelam Tamils." (page 3 last para) இவ்வாறு கூறப்பட்டுள்ளது இதன் அர்த்தம் என்ன. டொசோ அமைப்பு 1956ல் ஆரம்பிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா. டெசோ ஆரம்பிக்கப்பட்டதையும் அதை இழுத்து மூடியதையும் அதன் பிறகு இப்பொழுது உங்களின் சொந்த தேவைக்காக இப்பொழுது உயிர் கொடுத்ததையும் ஏன் சொல்லவில்லை?


மெமோரண்டத்தின் ஐந்தாம் பக்கத்தின் கடைசி பத்தியில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள். 1976ம் ஆண்டு உங்கள் ஆட்சி பறிபோனதற்கு காரணம் ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் ஆதரவாக நின்றதால் தான் என்று. அப்படி என்றால் பாளையங்கோட்டை சிறையில் பாம்புக்கு பல்லிக்கும் நடுவில் இருந்தது மிசாவினால் இல்லையா, இல்லை மிசாவில் ஜெயிலுக்கு போன ஸ்டாலின் அவர் இவர் என்று பலர் மிசாவை தங்கள் பெயருக்கு முன்னால் சேர்த்து  மிசா சோத்துமூட்டை, மிசா முட்டைகோசு, மிசா பொரிச்ச வெங்காயம், என்று போட்டு கொண்டு அழைகிறார்களே அது எல்லாம் பொய்யா. 1975ல் உங்கள் ஆட்சியை கலைத்தற்கு காரணமாக மத்திய அரசு ஊழல் என்று சொன்னதே அதுவும் உண்மையில்லையா?? மிசா அமுல்படுத்தப்பட்டது அதற்கு மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமல் இருந்தது அப்புறம் மிசாவினால் அடிபட்டது, ஏன் சிட்டிபாபு உயிரிழந்தது என்று அனைத்தும் நடக்கவில்லை என்பதால் தான் 1980 தேர்தலில் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்தீர்கள் அல்லவா, நாங்கள் தான் மறந்துவிட்டோம், மிசா என்றால் அது எதோ பிசா என்ற சாப்பிடும் பொருள் என்பதை...

1991ம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது மத்திய அரசு விடுதலை புலிகளை தடுக்க தவறியதாக காரணம் சொல்லியது என்னவோ உண்மை தான். ஆனால் அன்று நீங்கள் கொடுத்த பத்திரிக்கை அறிக்கைகளில் ஜெயலலிதாவும், ராஜிவ் காந்தியும் சேர்ந்து தான் என் ஆட்சியை கலைத்தார்கள் என்று சொல்லியிருக்கிறீர்களே. அப்படியென்றால் அன்று பொய் சொன்னீர்களா இல்லை இப்பொழுது பொய் சொல்கிறீர்களா. எனென்றால் உங்கள் ஆட்சிகலைக்கப்பட்ட பொழுது, ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா தனது பதவியை தூக்கி எறிந்தார், மத்திய அரசு தன்னை கேட்காமல் பொய் காரணம் சொல்லியது என்று அவருக்கு இருக்கும் நேர்மை உங்களிடம் இல்லையே. ஜெயலலிதாவும் ராஜிவ் காந்தியும் பிரதமர் சந்திரசேகரை மிரட்டி உங்கள் ஆட்சியை கலைத்தார்கள். அதுவும் நீங்கள் 1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியை இந்திராகாந்தியுடன் சேர்ந்து கலைத்தீர்களே அதே போல் தானே 1991ல் ஜெயலலிதா சந்திரசேகருடன் கூட்டு சேர்ந்து உங்கள் ஆட்சியை கலைத்தது நடந்தது. இதை நீங்களே அன்று அறிக்கையில் ஜெயலலிதா தான் காரணம் என்று சொல்லிவிட்டு, இன்று ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று வாய்கூசாமல் எப்படி பொய் சொல்ல முடிகிறது உங்களால்???


1983 ஜூலை கலவரத்திற்கு பிறகு தேசிய அளவில் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக நீங்களும், பேராசிரியர் அன்பழகனும் சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக சொல்கிறீர்கள், அப்பொழுது சட்டசபையின் உங்களுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் தான் இருந்தார்களா என்ன? மொத்தம் 37பேர் அல்லவா இருந்தார்கள். 1980 நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டீர்கள் அதில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அந்த தெம்பில் தானே சட்டசபைக்கு தேர்தல் வைத்தால் ஜெயித்துவிடலாம் என்று 1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கலைத்தீர்கள். அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆரே வெற்றி பெற்றார்,  ஆனாலும் உங்களுக்கு 1983ம் ஆண்டு மொத்தம் 37 சட்டசபை உறுப்பினர்களும், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்த பொழுது நீங்களும் பேராசிரியர் அன்பழகன் மட்டும் பதவியை இராஜினாமா செய்ததால் எந்த மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தீர்கள். ஒட்டுமொத்தமாக சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் இருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் இராஜினாமா செய்ய சொல்லியிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்த்து இருக்கும் இல்லையே அதை செய்யாமல் நீங்களும் அன்பழகனும் மட்டும் இராஜினாமா செய்துவிட்டு கொல்லை புற வழியாக சட்டமேலவை உறுப்பினராக அதே 1983ம் ஆண்டு பதவி ஏற்றுக் கொண்டீர்களே. இதை எல்லாம் அனைவரும் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தீர்களா என்ன??



ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக செய்துள்ளீர்கள் ஐ.நாவுக்கு கொடுத்த ஆவணத்தில் மனித சங்கிலி நடத்தியதை சொன்ன நீங்கள், நீங்க இருந்த கின்னஸ் சாதனை உண்ணாவிரதத்தை கூறிப்பிடவில்லை, வாழ்க உண்ணாவிரதம் வளர்க உங்கள் குடும்பம்.

Monday, November 5, 2012

ஊசிப்போன தோசை தீர்மானம் ஐநாவில் ஓப்படைப்பு



தலிவரே நீங்க டெசோ மாநாடு நடத்துனப்பவே தெரியும் வழக்கம் போல தயிர்சாதத்துக்கு தொட்டுக்க புடலங்கா கூட்டு வைச்சு சாப்பிட சொல்ல போறீங்கனு. டெசோ மாநாட்டில் பலநாட்டு தலைவர்களை அழைத்து வந்தீர்கள் ஏன் அம்ன்ஸ்டியில்  இருந்து கூட ஆளை கூட்டிட்டு வந்தீங்க ஆனால் இயற்றின தீர்மானம் தான் ஒன்றும் சரியில்லாமல் இருக்கு. அதாவது ஊரை கூட்டி தலைவாழை இலை போட்டு விருந்தில் சரியாக சாப்பாடு போடாமல் சட்டிய கவுத்துட்டீங்க தலீவரே.

சரி போனா போகுது ரொம்ப நாள் கழிச்சு ஈழதமிழர் விசயத்தை பேசுறீங்களே நல்லது என்று நினைத்து விட்டால். அந்த தீர்மான்ங்களை ஐ.நாவின் பொது செயலாளர் பான்கீ மூனிடம் கொடுக்க போறோம் என்று சொன்னீர்கள். சரி அதையாவது முழுமையாக செய்வீர்கள் என்று பார்த்தால் அதிலும் திருகுதாளம் போட்டிருக்கிறீர்கள். அத்தனையும் செய்துவிட்டு தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொதுவாக்கெடுப்பு(Referendum) வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறீர்கள். ஆனால் ஐநாவில் கொடுக்கப்பட்ட அறிக்கையிலோ இல்லை தீர்மானத்திலோ பொதுவாக்கெடுப்பு எனப்படும் Referendum என்ற வார்த்தையாஇயே காணோம்.

நான்காவது தீர்மானத்தில் இந்திய அரசை நோக்கி ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் தீர்வை தேர்ந்தெடுத்துக்கொள்ள ஐநாவில் இந்தியா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறீர்கள். இதில் பொதுவாக்கெடுப்பு என்று சர்வதேச அரசியலில் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை பிரயோகம் இல்லை. ஐநாவிடம் நேரடியாக கூட இந்த கோரிக்கையை வைத்திருக்கலாம் ஆனால் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வைக்கிறீர்கள். இந்தியா இலங்கை தனது நட்பு நாடு அதற்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பட்டவர்த்தனமாக அறிவித்த பிறகும் நீங்கள் இந்த கோரிக்கையை இந்தியாவிடம் வைக்கிறீர்கள். இப்படி டெசோ மாநாட்டில் 14 தீர்மான்ங்களை இயற்றிவிட்டு அதையும் Beats of Bleeding Hearts எனும் ஐநாவிடம் கொடுத்த ஆவணத்தில் 14 தீர்மான்ங்கள் என்று தம்பட்டம் அடித்துவிட்டு தீர்மான இணைப்பில் 11 தீர்மான்ங்களை தான் ஐநாவிடம் கொடுத்திருக்கிறீர்கள். மீதம் உள்ள மூன்றும் பயண வழியில் தொலைந்திருக்க வாய்ப்பில்லை, அவை தேவையில்லாத தீர்மான்ங்கள் என்று முடிவெடுத்து இப்பொழுது நீக்கியிருக்கிறீர்கள் இப்படி தேவையில்லாத தீர்மான்ங்களை ஏன் சர்வதேச தலைவர்களை கூப்பிட்டு நிறைவேற்றினீர்கள்.

அவைகளில் ஒன்று உங்கள் சொந்த தேவையான(இதை தான் தமிழின அரசியல் என்று சொல்கிறீர்கள்) ஜெயலலிதாவை கண்டித்த தீர்மானம், இரண்டாவது இந்தியா இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது என்று வலியுறுத்திய தீர்மானம். இவை இரண்டும் தேவையில்லாதது தான் எனபதை அன்று சர்வதேச தலைவர்கள் இருக்கும் பொழுது உணராத நீங்கள் இன்று உணர்ந்து நீக்கியிருக்கிறீர்கள். ஆனால் மூன்றாவதாக ஐக்கிய நாடுகள் அவையினால் வரையறுக்கப்பட்ட அகதிகள் நடைமுறையை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தும் தீர்மானத்தை எடுத்துவிட்டீர்கள். இந்தியா ஐ.நாவின் அகதிகள் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது ஐநாவுக்கு தெரியும் ஆனால் இந்தியாவில் பன்னாட்டு அகதிகள் எப்படி நட்த்தப்படுகிறார்கள் என்பது தெரியவாய்ப்பில்லை. ஆனால் அதை தெரியப்படுத்தும் தீர்மானத்தை இந்தியாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டும் தீர்மானத்தை ஏன் மறைத்துவிட்டீர்கள், இப்படி மறைப்பதற்கு சர்வதேச தலைவர்களை கூப்பிட்டு இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டாமே. நீங்கள் உங்களின் சொந்த தேவைக்காகவும் சொந்த அரசியலுக்காகவுமே இதுவரை அரசியல் செய்து வந்திருக்கிறீர்கள் அதுவும் இந்தியாவின் சர்வதேச வல்லாதிக்க போக்கிற்க்கு தலைகுனிந்தே பணிவிடை செய்திருக்கிறீர்கள் என்பதை சுட்டிகாட்ட இது ஒன்று போதுமே தலீவரே.

டெசோ தீர்மானத்தில் 9வது தீர்மானமாக மிக அழகாக This Conference also urges that U.N.Protocol on Refugees should be followed in India.  தெளிவாக குறிப்பிடும் இந்த தீர்மானத்தை நீக்க வேண்டிய தேவை என்ன என்பது புரியவில்லை தலீவரே. உலகநாடுகள் முன்பாக இந்தியாவின் ஈழ அகதிகள் குறித்தான துரோகத்தை சுட்டி காட்ட விரும்பவில்லையா. ஒரு நாட்டின் குடிமகன் என்பவன் அந்நாடு செய்யும் தவறுகளை சுட்டிகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான கிருஸ்ணய்யர் அவர்களே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உங்களுக்கு ஏனோ ஈழ தமிழ் அகதிகளை பிச்சைகாரர்களை விட கேவலமாக நடத்துவதை உலக அரங்கில் சொல்ல முடியவில்லை. இதை தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம் அண்ணா திரவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக தள்ளி வைத்தார் ஆனால் நீங்களே அதை ஊத்திமூடி புதைத்து விட்டீர்கள். அதே போல் ஈழப்பிரச்சனை மிகவும் அதிகமாக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படுத்திய பொழுது எல்லாம் இந்திய தேசியத்தின் அடிமையாக அதுவும் நீங்கள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றிய பொழுது எப்படியெல்லாம் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சிகளை அடக்கி இந்திய தேசியத்திற்கு சேவை செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.



டெசோ மாநாட்டு தீர்மான்ங்களில் 7 ஐநாவை நோக்கியும், 5 இந்தியாவிடம் நோக்கியும், மீதம் இரண்டில் ஒன்று இலங்கை அரசு டெசோ மாநாட்டை பார்த்து பயந்து, ஈழத்தமிழ் தலைவர்களை வரவிடாமல் செய்துவிட்டது என்றும், கடைசியக உங்கள் சொந்த அரிப்புக்கு சொரிந்து கொள்ள ஜெயலலிதாவை கண்டித்த்தை தவிர வேறு என்ன இருக்கிறது தலீவரே. ஏன் ஐநாவிடம் கொடுத்த முகப்பு கடித்த்தில் கூட பொதுவாக்கெடுப்பை பற்றி பேசாமல் இன்று ஊடகங்களுக்கு பேட்டிகொடுப்பது மட்டும் பொதுவாக்கெடுப்பு என்று சொல்லிகொண்டு. உப்பு சப்பு இல்லாத ஒரு ஆவணத்தை ஐநாவிடம் கொடுக்கப்பட்ட்தால் என்ன பயன் இதற்கு உங்கள் பிள்ளையும் அவரின் சமீபத்திய ஆத்ம நண்பரும் ஒரு சுற்றுலா சென்று வந்தார்கள் என்று சொன்னாலும் சரி என்று ஏற்றுக் கொள்ளலாம்.

Friday, October 26, 2012

கடலைக்குதான்யா...



கடலை போடுவது என்பது எனது பள்ளி, கல்லூரி நாட்களில் மிகவும் பிரபலமான ஒன்று. யாராவது ஒரு நண்பனை எங்கே என்று கேட்டால் அவன் அங்க உட்கார்ந்து கடலை போட்டுக்கிட்டு இருப்பாண்டா என்பார்கள் நண்பர்கள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக எனது இளமைகாலத்தில் கூடவே வந்தது கடலை போடுவது என்ற ஒன்று. நான் சத்தியமாக இதுவரை கடலை போட்டதில்லைங்க, வாய்ப்பு கிடைச்சவன் கெட்டவன், வாய்ப்பு கிடைக்காதவன் உத்தமன் எனும் வாக்கிற்கிணங்க இன்று வரை வாய்ப்பு கிடைக்காத உத்தமனுங்க.

அப்படி கடலை போடுவது என்றால் என்ன தான் பண்ணுவாங்க, நான் படித்தது மாலை நேரக்கல்லூரியில், சனிக்கிழமை மட்டும் காலை 7.30லிருந்து 9மணிவரை வகுப்பு. அப்படி ஒரு சனிக்கிழமை காலையில் கல்லூரிக்குள் நுழைந்தேன், கல்லூரி படியில் அந்த அதிகாலை வேலையில் இருவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நான் அவர்களை தாண்டி எனது வகுப்புக்கு சென்றேன் அவர்கள் யார் எந்த வகுப்பு என்பதெல்லாம் தெரியாது. எனது வகுப்பு ஆரம்பித்து பேராசிரியர் அறு அறுனு அறுத்துட்டு எங்களை ஒரு 9மணிக்கு வகுப்பை முடித்து வெளியில் அனுப்பினார். வகுப்பை விட்டு வெளியில் வந்து பார்த்தால் அதுவரை அந்த இருவரும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் பேசிக்கொண்டே இருந்தனர். பேராசிரியரின் அறுவையில் வெறுத்துப் போன நானும் எனது வகுப்பு தோழர்களும் வெளியில் செல்ல அவர்களை நோக்கி நடந்தோம். அப்பொழுது அவர்களை கடக்கும் பொழுது நற, நறவென சத்தம் எழுப்பிவிட்டு “மாநகராட்சிக்கு போன் பண்ணுங்கடா.. ஒரே கடலை தொலி நடக்க முடியவில்லைஎன்று சொல்ல. கூட வந்த அனைவரும் நான் எதை சொல்கிறேன் என்று புரிந்து சிரித்துவிட்டார்கள். அவர்கள் சிரித்தவுடன் அமர்ந்திருந்த இருவரும் அந்த இடத்தை காலி செய்துவிட்டு ஓடினார்கள் ஓடினார்கள் கல்லூரியை விட்டு வெளியே ஒடினார்கள். இதனால் தான் என்னமோ நான் இன்னும் உத்தமனாகவே இருக்கிறேன்.

இப்படி கடலை போடுவது என்பதை எனது விடலை பருவத்தில் இருந்து பார்த்து வளர்ந்து வந்தவன் ஆனால் அப்படி என்ன பேசுவார்கள் என்று கேட்டால் ஒன்றுமே இல்லாத விசயத்தை ஒன்றரை மணிநேரம் இரண்டுமணி நேரம் என்று பேசி தீர்த்து இருப்பார்கள் நேரத்தை. நண்பன் ஒருவன் இதே போல் மதுரை பாண்டியன் ஹோட்டல் பின்புறம் இருக்கும் ஒரு கடையில் கிட்டத்தட்ட ஒரு மூணு மணி நேரம் கடலை போட்டுவிட்டு வெளியில் வந்தான் அவனுகாக காத்துக் கொண்டிருந்த நான் ஒரு பாக்கெட் சிகரெட் குடித்து முடித்தது தான் மிச்சம். வெளியில் வந்தவுடன் என்னடா எல்லாம் பேசி முடிச்சாச்சா எப்ப போய் பொண்ணு கேக்கனும் அந்த பெண்ணின் அப்பாவிடம் என்றால் போட்டான் பாருங்க ஒரு போடு. இது காதல் எல்லாம் இல்லை சும்மா நட்பு தான், நீ தப்பா எல்லாம் கற்பனை பண்ணாதே என்றான். சரி நம்ம தான் தப்பு பண்ணிட்டோமோ என்று சரி அப்ப என்ன படிப்பை பத்தி பேசினிங்களாடா என்று கேட்டால் என்னமோ வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஐந்துவை பார்ப்பது போல் பார்த்தான். இதெல்லாம் உனக்கு புரியாது பேசாம வண்டியை எடு வீட்டுக்கு போகலாம் என்றான்.

எனக்கோ காதலும் இல்லை, படிப்பும் இல்லை அப்புறம் என்ன தான் பேசியிருப்பார்கள் மூணு மணி நேரம் என்ற தேடல் முடியவில்லை. வீட்டுக்கு போகும் முன் ஒரு டீக்கடையில் வண்டியை நிப்பாட்டிவிட்டு, என்ன தாண்டா பேசினீங்க என்றேன். ஒன்னும் இல்லை மச்சான் சும்மா தான் பேசிக்கொண்டிருந்தோம் என்றான். எனக்கு தலை சுற்றியது சும்மா என்னடா முணு மணி நேரம் பேசின என்று கேட்டேன். கல்லூரியில் படிக்கும் சக நண்பர்களை பற்றி பேசினோம், வாத்தியார்களை பற்றி பேசினோம், அப்புறம் அழகர் கோயிலை பற்றி பேசினோம் என்றான். சரி நண்பர்களை பற்றி பேசுவதில் எந்த சுவரசியமும் இருக்காது யாரு யாரை சைட்டடிக்கிறான் என்பது தான் இருக்கும் அதை விட்டுடலாம், ஆசிரியர்களை பற்றியும் ஒன்றும் இருக்காது யார் நல்லா அறுக்குறாங்க என்பதாக தான் இருக்கும் என்று,  அழகர் கோயிலை பற்றி பேசினேன் என்று சொன்னானே எதாவது ஆக்கபூர்வமாக இருக்கும் என்று, அழகர் கோயிலை பற்றி என்னடா பேசினீங்க மாப்பு என்றேன். வச்சான் பாருங்க ஒரு ஆப்பு “அங்க எத்தனை குரங்குகள் இருக்கும் என்று தோராயமாக ஒரு கணக்கு போட்டோம் என்றான். இப்ப நான் எதோ வேகமாக தட்டாமலை சுற்றிவிட்டு தரையில் கால்பட்டும் படாதது போல் இருக்கும் ஓர் நிலைக்கு சென்றுவிட்டேன். சரி நம்ம நேரம் சரியில்லை என்று டீக்கு காசு கொடுறா என்று சொன்னால். மச்சான் காசில்லை மச்சான் அங்க கடையிலேயே 120ரூபாய் செலவாயிருச்சுனு சொன்னான். அவனை விரட்டி விரட்டி அடிக்கணும் போல இருந்தது இவனுக்காக முணு மணி நேரம் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதி தள்ளிட்டு ரோட்டையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு வந்த ஆத்திரத்துக்கு என்ன செய்யுறதுனே தெரியவில்லை. நண்பனாக போயிட்டானே என்ன செய்வது டீக்கு காசை கொடுத்துட்டு வாடா மாப்பிள்ளை என்று வண்டியில் ஏற்றிக்கொண்டு அவன் வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டுக்கு வந்தேன். வந்தவுடன் வீட்டில் அர்சனை ஆரம்பமாகியது சாப்பிடற நேரத்தில் எங்கடா போய் ஊர் சுத்திட்டு வருகிறாய் என்று. நேரத்தை பார்த்தால் மணி மூணு, சாப்பாட்டை கூட மறந்திருந்தேன்.

இப்படி ஒரு பாரம்பரியமிக்க கடலை போடும் பழக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் இந்த கடலை போடுவது காதலர்களுக்குள்ளும் உண்டு, நண்பர்களுக்குள்ளும் உண்டு, ஏன் பேராசிரியரிடம் கடலை போட போகிறேன் என்று சொன்ன பெண்கள் கூட உண்டு. இப்படி வயது வித்தியாசம், பெரியவர் சிரியவர் பாகுபாடு என்று எந்த வகை தொகையும் இல்லாமல் யாருக்கும் எந்தவித தீங்கும் இல்லாமல் போடப்படுவது தான் கடலை போடுவது. தாங்கள் கடக்க வேண்டிய நேரத்தை மிகவும் உற்சாகமாக கடப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது தான் கடலை போடுவது. இதே கடலை போடும் பழக்கம் தான் இன்று முகநூலிலும், கீச்சுலகத்திலும், இணையத்திலும் சில பரிணாம மாற்றங்களுடன் உலாவருகிறது.

இதை போன்று யாருக்கும் எந்த தொந்தரவும் விளைவிக்காத கடலைபோடுவது என்பது தப்பாங்க நீங்களே சொல்லுங்க.. 

Tuesday, August 28, 2012

செங்கொடி


செங்கொடி இந்த பெயர் என்னால் மறக்க முடியாது இனி எப்பொழுதும். சென்ற வருடம் ஜுன் மாதம் நினைவேந்தல் முடித்த பிறகு சிறிது சொந்த வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். அப்பொழுது தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் கருணை மனு நிராகரிக்கப் பட்டது. தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தோம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி பேச ஒரு அலோசனை கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்க முடிவு செய்தோம். அதே போல் செ.தெ. நாயகம் பள்ளியில் ஒன்று கூடினோம், பல போராட்ட வடிவங்களை விவாதித்தோம். அப்பொழுது தோழர் சினிவாசன் (பூவுலகின் நண்பர்கள்) சொன்னது தான் வாகன பிரசார பயணம். 

வாகனபிரசார பயணம் சென்னையிலிருந்து வேலூர் செல்வது செல்லும் வழியில் பிரசாரம் செய்து கொண்டே செல்வது என்பதை முடிவுசெய்து அதற்கான வேலைகளில் இறங்கினோம். 17ம் தேதி காவல் துறை அனுமதி மறுத்தது ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் திட்டமிட்டபடி பிரசார பயணத்தை தொடர்வது என்று முடிவு செய்து தொடங்கினோம். அது வரை எனக்கு காஞ்சி மக்கள் மன்றம் அமைப்பை பற்றி தெரியாது, காஞ்சிபுரத்தை அடைந்த பொழுது பறை அடித்து எங்களை வரவேற்றனர், அதன் பிறகு அவர்களும் எங்களுடன் வாகனபயணத்தில் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் தாண்டிய பிறகு நான் பின் தங்கினேன், வாகனங்கள் பழுதடைந்தால் அதை சரி செய்ய மெக்கனிக்குகள் இருவரை கூட அழைத்து சென்றிருந்தோம் அவர்கள் ஒரு ஆட்டோவில் இருந்தார்கள். நான் கடைசியாக வருவது யாரின் வாகனம் பழுதடைந்தாலும் மெக்கானிக்குகளுக்கு தகவல் கொடுப்பது எனது பொறுப்பு. அதனால் பின்தங்கி அனைவருக்கும் பின்னால் வர தொடங்கினேன்.

அப்பொழுது தான் கவனித்தேன் இரு பெண் தோழர்கள் டிவிஎஸ் 50 வாகனத்தில் வருவதை காஞ்சிபுரத்தில் இருந்து வேலூருக்கு கிட்டதட்ட மூன்று மணி நேர பயணம் 200 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டும். ஒரு டிவிஎஸ் 50 அவ்வளவு தூரம் வருமா என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது. வண்டி சிறிது புதிதாக இருந்ததால் வண்டி வேலூர் வரை வரும் என்று நினைத்து கொண்டு செல்ல தொடங்கினேன், அனைவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலூர் சென்று சேர்ந்தோம். சிறைசாலைக்குள் அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற பொழுது சிறைசாலையின் வெளியில் அனைவரும் கோசமிட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது செங்கொடி மிகவும் வேகமாக கோசமிட்டுக் கொண்டிருந்தார். 



அப்பொழுதெல்லாம் தெரியாது இவர் தான் செங்கொடி என்பது ஆனால் அதன் பிறகு தூக்கு தண்டனைகான தேதி அறிவிக்கப்பட்டு மூன்று வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை அறிவித்த பிறகு கோயேம்பேட்டில் இருந்து அங்கு நிகழ்வுகளை ஒழுங்கமைத்துக் கொண்டு ஊடகத்துறையினருக்கு தகவல் கொடுப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது தான் ஆகஸ்டு 28ம் தேதி மாலை செங்கொடியின் தீக்குளிப்பு செய்தி வந்தது. 

அப்பொழுது ஒரு தோழர் சொன்ன பொழுது தான் தெரியும் டிவிஎஸ் 50யில் அன்று வந்த பெண் தான் தோழர் செங்கொடி என்பது. அதன் பிறகு வாகன பிரசார படங்களை தேடி பார்த்த பொழுது தான் செங்கொடி யார் என்பதை அடையாளம் காண முடிந்தது. ஆகஸ்டு 28 நான் கோயம்பேட்டில் இருக்க வேண்டியதாகிவிட்டது அனைவரும் கிளம்பி காஞ்சிபுரம் சென்றனர். கோயம்பேட்டில் சென்கொடியின் உடலை எடுத்து வந்து வைப்பதற்கும் மக்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கான வசதிகளை செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருந்தேன். ஆனால் மனம் ஓர் நிலையில் இல்லாமலே அனைத்தையும் செய்து கொண்டிருந்தேன் மறு நாள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு வருகிறது அது என்ன ஆகும் என்ற ஒரு பதைபதைப்புடனே இருந்தேன். 

ஆனால் மறுநாள் நீதிமன்றதிற்கும் நான் செல்லவில்லை, கோயம்பேட்டில் தன இருந்தேன் அப்பொழுது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் வந்தது, அதற்கடுத்து இடைகால தடை என்ற தீர்ப்பும் நீதிமன்றத்தில் இருந்து வந்தடைந்தது. அனைத்தும் மகிழ்ச்சியை கொடுத்தது ஆனால் உள்ளே ஒன்று மட்டும் உறுத்திக்கொண்டிருந்தது செங்கொடி என்ற பெயர் மட்டும். அன்று ஒரு தற்காலிக வெற்றியாக கிடைத்த தீர்ப்பும் சட்டமன்ற தீர்மானமும் செங்கொடியின் உயிர் தியாகத்திற்கான விலையா? என்று கேட்டால் இல்லை 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை என்று செங்கொடியின் நினைவிடத்தில் கொண்டுவந்து தாயே இதோ உந்தன் பிள்ளைகள் என்று ஒப்படைக்கும் பொழுதே நமது வெற்றியை அடைவோம். 

Thursday, August 16, 2012

கட்டவிழ்த்து விடப்படும் பொய்களுக்கான பதில்கள்



 சகோதர யுத்தம் என்று வர்ணிப்பது ஒரு சிலரின் வழக்கமாகிவிட்டது, அவர்களுக்கு தேவை தாங்களை காப்பாற்றிக் கொள்வதே, ஈழ விடுதலையோ ஈழ தமிழர்களின் நலனோ இல்லை.

கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி வசூலான 2லட்சம் ரூபாயை அனைத்து இயக்கங்களுக்கும் பிரித்து கொடுத்தார். இதையே அனைவரும் இணைக்கும் முயற்சி என்று பறையடித்து வருகின்றனர். இது 1984ல் நடந்தது அப்பொழுது மூன்று குழுக்கள் சென்று அவரிடம் ஆளுக்கு 50,000 என்ற தொகையை வாங்கி வந்தனர். விடுதலை புலிகள் தங்களது ஆதரவு மட்டும் போதும் பணம் தேவை இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். காரணம் கருணாநிதி தமிழக அரழியலில் இவர்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, இதை புலிகள் இயக்கத்திற்கு புரியவைத்தவர் கருணாநிதியே தான், எப்படி புரியவைத்தார் என்பதை பார்க்கலாம்.

அப்பொழுதைய முதல்வர் எம்.ஜி.ஆர் மிகவும் கடினாமான நிலைப்பாடுகளையும், சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானங்களையும் இயற்றினார். அவரின் செல்வாக்கு மிகவும் அதிகமாக வளர்ந்து வந்தது இதை தடுக்கவே டெசோ அமைப்பை எற்படுத்தினார் எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் செய்யவேண்டிய காலகட்டம் அவருக்கு. இது அவருக்கு கைவந்த கலையும் கூட, இல்லையென்றால் 14 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத ஒரு தலைவர் எந்த பதவியை வகிக்காத ஒரு தலைவர், மற்றும் அவரது அரசியல் கட்சி அழிந்து இருக்கும். ஆனால் கருணாநிதி இத்தனை ஆண்டுகளும் தனது பெயரையும் கட்சியின் பெயரையும் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வருமாறு பார்த்துக்கொண்டு அதற்கு ஏற்றார்போல் போராட்டங்களையும் செயல்பாடுகளையும் முன்னிறுத்திய காலம் அது.

அதே சமயத்தில் ஈழத்தில் பல போராட்ட குழுக்கள் இருந்தன இவற்றில் முக்கியமானவையும் பெரியகுழுக்களும் என்றால் டெலோ, விடுதலை புலிகள், இபிஆர்எல்எஃப், ப்ளாட் மற்றும் ஈரோஸ் என்பவைகளே. இவர்களுக்குள் பெரிதாக பிரச்சனைகள் இல்லாவிடினும் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்தன. எம்.ஜி.ஆர் இவர்களை அனைவரையும் இணைத்துவிட வேண்டும் என்று நினைத்து ஒரு கூட்டத்தை அறிவிக்கிறார். உடனடியாக அதற்கு ஒரிரு நாட்கள் முன்பாக  கருணாநிதி ஒரு கூட்டத்தை அறிவிக்கிறார் அதே இயக்கங்களை தன்னை வந்து பார்க்க வரச்சொல்லி. இதில் சகோதர சண்டை என்பது தமிழகத்தில் இருந்த தலைவர்களிடத்தில் இருந்தது தான் அப்பட்டமாக தெரிகிறது. எம்ஜிஆர் பெயர் எடுத்துவிடக்கூடாது என்ற மாபெரும் எண்ணம் மட்டுமே கருணாநிதிக்கு இருந்து இருக்கிறது ஈழமக்களை பற்றிய கவலை என்பது சிறிதும் இல்லை. மேலும் இருக்கும் போராளிகள் எல்லாம் தன்னை வந்து பார்ப்பார்கள் தான் பெயர் வாங்கிவிட வேண்டும் என்ற வேகம் தான் இருந்தது. இதில் சென்று பார்த்தவர்களும் அதற்கு முன்பாகவே ஈழதேசிய விடுதலை முண்ணனி என்ற பெயரில் பத்மநாபாவின் முயற்சியால் ஒன்றிணைந்த EROS / EPRLF / TELO இயக்கத்தினர் சென்று பார்த்தனர், தாங்கள் ஏற்கெனவே ஒன்றிணைந்துவிட்டோம் என்று கருணாநிதியிடம் அறிவித்தனர். அதை படமாகவும் எடுத்துக்கொண்டு கருணாநிதியிடம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளமாட்டோம் என்ற உறுதிமொழியையும் கொடுத்தனர், இதை "ஈழப்போராட்டத்தில் நான்” புத்தகத்தில் புஸ்பராஜா  அவர்கள் இந்த போட்டோ எதற்காக எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார், கருணாநிதியின் முயற்சியால் இணைந்தவர்கள் அல்ல பத்மநாபாவின் முயற்சியால் இணைந்தவர்கள் என்பதை.

அப்பொழுது எடுத்த படம்



விடுதலை புலிகள் அமைப்பு இதிலும் கருணாநிதியின் அரசியல் நரிதந்திரத்தை புரிந்து கொண்டு சென்று பார்க்கவில்லை ஆனால் பத்மநாபாவால் ஏற்படுத்தப்பட்ட ENLF - ஈழ தேசிய விடுதலை முன்னனியில் தங்களை 1985ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி தங்களையும் இணைத்துக் கொண்டனர். இது இந்த அமைப்பை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் விடுதலைபுலிகளும் இந்த முண்ணனியில் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.அதாவது கருணாநிதியை சந்திக்க செல்லும் பொழுது செல்லாமல் அதன் பின்னால் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அதோ போல் எம்.ஜி.ஆர் கூட்டிய கூட்டத்திலும் பங்கெடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தனர் விடுதலை புலிகள் அமைப்பு. அவர்கள் தங்கள் நிலைப்பாடான ஈழமக்களின் விடுதலையே முக்கியம் என்பதில் தெளிவாக இருந்தனர். தமிழக அரசியல் சுழலுக்குள் தங்களை ஆட்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. 

இதன் பிறகு 1985ல் ஜூலை 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் அனைத்து இயக்கங்களும் ஒன்றாக இணைந்து ஒரே குரலில் தங்களின் கோரிக்கையை வைத்தனர். இந்தியாவின் நிர்பந்தத்தை முற்றிலுமாக நிராகரித்தனர். தனி ஈழக் கோரிக்கையை ஒற்றுமையாக திம்பு பேச்சுவார்த்தையில் வைத்தனர் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு திரும்பவும் இந்தியாவின் நிர்பந்தத்தால் மறுபடியும் ஆகஸ்டு மாதம் 12ம் தேதி முதல் 17ம் தேதிவரை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது அப்பொழுதும் இந்தியாவின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் அனைத்து போராளி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றாகவே இருந்தனர். அந்த சமயத்தில் தான் அகஸ்டு 16ம் தேதி வவுனியா நூலகம் தாக்கப்பட்டது 200க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திம்பு பேச்சுவார்த்தையின் கடைசி நாளன்று பேச்சுவார்த்தையை புறக்கணித்து அனைவரும் வெளியேறினர். இதை தான் காங்கிரஸ் காரர்கள் நாங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க விரும்பினோம் அவர்கள் கேட்கவில்லை என்றார்கள். பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளபோதே 200 பேரை கொண்று குவிக்கும் இலங்கையின் பேரினவாத அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும், இலங்கை மக்களை கொண்றுகுவித்துக் கொண்டே இருக்கும் என்பது தான் காங்கிரஸ் காரர்களின் நிலைப்பாடு. 

இப்படி அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையாகவே இருந்து வந்தன. இதைவிட இன்னும் சொல்வதென்றால் 70களில் முதன்முதலாக பண்ணைகள் அமைத்து பயிற்சி பெற்று வந்த பொழுது ஒருவரின் பண்ணைக்கு மற்றவர்கள் போவதுண்டு பயிற்சி எடுத்துக்கொள்வது அரசியல் பேசுவது என்பது இருந்து வந்தது அப்பொழுது ஈரோஸ் அமைப்பை சார்ந்தவர்கள் பாலஸ்தீனம் போய் பயிற்சி பெற்று வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு துப்பாக்கியை கொடுத்து இலக்கை நோக்கி சுடச் சொல்லியிருக்கிறார், பிராபாகரன் ஆனால் அவர்கள் சுட்டபொழுது இலக்கை தவற விட்டனர். ஆனால் அது வரை எந்த பயிற்சிக்கும் எங்கும் செல்லாத பிராபகரன் துப்பாக்கியை வாங்கி இலக்கை சரியாக சுட்டி காட்டியிருக்கிறார்ம், ஈரோஸ் அமைப்பினரும் வியந்து பாராட்டி இருக்கின்றனர். அதன் பிறகு விடுதலை புலிகள் திருநெல்வேலி வங்கி கொள்ளையில் 10லடசத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்தனர், அதில் தான் இயக்கத்தை கட்டமைத்தனர். அந்த பணத்தில் ரூபாய் 50000த்தை புலிகளின் மத்திய குழு கூடி முடிவெடுத்து ஈரோஸ் அமைப்பிற்கு கொடுத்தனர். இப்படி சக இயக்கங்களுக்கும் தங்கள் இயக்கத்தை நடத்த வைத்திருந்த பணத்தில் இருந்து எடுத்து கொடுத்தவர்கள் தான் சகோதர யுத்தம் புரிந்ததாக சொல்லி வருகின்றனர்.



1986ம் ஆண்டும் ஜுலை 28ல் நடந்த யாழ்பாணம் கோட்டை தாக்குதலில் விடுதலை புலிகள் அமைப்பும் EPRLF பத்மநாபாவின் அமைப்பும் சேர்ந்தே தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றனர். இப்படி களமாடிய பொழுது ஒன்றாக களமாடி வெற்றி பெற்றவர்கள் தான் சகோதர யுத்தம் செய்தார்கள் என்று வர்ணித்து வருகிறார்கள் சிலர். 

அதே போல் கருணாநிதியின் கூற்றுப்படி 1984க்கு பிறகு ஈழ இயக்கங்களை ஒன்றிணைக்கும் பணி நடக்கவில்லை அதற்கு முன்பாகவே இணைந்து போராடும் முடிவுகளை எடுத்து இணைந்து நின்று இருக்கிறார்கள். 1982ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் CEL - Commite for Eelam Liberation   (ஈழ விடுதலை குழு) என்ற பெயரில் ஒன்றாக இணைந்து நின்றவர்களே ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள். இப்படி ஒன்றாக இருந்தவர்கள் முரண்பட்டவர்களாக மாறிய காரணங்கள் பல சமயங்களில் நடந்துள்ளது. ஆனால் விடுதலை புலிகளின் மீது சொல்லப்படும் அவர்கள் மட்டுமே இருக்க விரும்பினார்கள் மற்றவர்களை அழித்து ஒழிக்கவே விரும்பினர் என்பது எல்லாம் சுத்தமான பொய் என்று சொல்லவியலாது. ஆனால் அனைத்து இயக்கங்களும் மற்றைய இயக்களை தங்களின் முரண்பாடுகள் காரணமாக அழித்தொழிக்க விரும்பின என்பது அவர்கள் ஓவ்வொருவரின் பதிவுகளையும் படிக்கும் பொழுது தெளிவாக உணர முடிகிறது. அனைத்து இணைப்பு முயற்சிகளிலும் அனைத்து இயக்கங்களுக்கும் உதவவும் தயாராகவே இருந்தனர். 

அதே போல் கருணாநிதி நான் முயற்சித்தேன் தோற்றுவிட்டேன் என்று சொல்லும் காலகட்டமான  1984, 85ம் ஆண்டு காலகட்டத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றாகவே இருந்தன. 1986ம் ஆண்டு டெசோ அமைபப்பை கலைத்துவிட்டார் ஆனால் அதன் பிறகும் ஒன்றாக இணைந்து தான் ஜுலை 28ம் தேதி யாழ்பாண தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றனர். ஆனால் சகோதர யுத்தம் என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார், இவருடைய வருத்தம் எல்லாம் ஒன்று தான், இவரின் தமிழக அரசியலுக்கு பலிகடா ஆகாமல் துணிந்து நின்று புலிகள் மறுத்தது தான்.


(தொடரும்....)

இதுவரை நான் படித்த நூல்களில் இருந்து தெரிந்து கொண்டவை வைத்தே இதை தொகுத்துள்ளேன். 
ஈழபோராட்டத்தில் நான் - புஸ்பராஜா (இ.பி.ஆர்.எல்.எஃப்)
ஈழபோராட்டத்தில் நான் - கணேஸ் அய்யர் (விடுதலை புலிகள், புதியபாதை)
The will to freedom - Adel Balasingam
War and Peace - Anton Balasingam
இலங்கையில் தமிழர் - முனைவர். முருகர் குணசிங்கம்
The History of Thamirabarani - Raja rathinam 
மேலும் பல இணைய தொகுப்புகள் அவைகளில் இருந்து எடுத்து எழுதினால் அதன் தொகுப்பை அந்த பதிவில் குறிப்பிடுகிறேன். 

Tuesday, August 14, 2012

வந்தே மாதரம்....



எனது பள்ளி நாட்கள் கிண்டலாக நக்கலாக பாடிய பாடல், யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்ற நினைவில்லை ஆனால் இன்று அந்த பாடலை திரும்பவும் பாடத்தோன்றுகிறது...

வந்தே மாதரம்
வருதே மூத்திரம் 
கொண்டுவா பாத்திரம்
பிடிச்சுக்கோ சீக்கிரம்
குடிச்சுக்கோ நீமாத்திரம்..

இந்த பாடலை அன்று பாடி திரிந்தாலும் நான் தீவிர இந்திய தேசிய அபிமானியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை. இருந்தேன். ஆனால் இன்று இந்தியா என்பது அரசியல்வியாதிகளாலும், அதிகார வர்க்கத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு மாயை. இந்தியா என்பது பல்வேறு இனம், மொழி மக்களை கொண்ட நாடு. இவர்கள் அனைவரும் எத்தனை வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை எங்கும் சொல்வேன். 

தமிழ் நாட்டு பிரச்சனைகள் கர்நாடகத்தில் பேசப்படுவதில்லை, கர்நாடகத்தின் பிரச்சனைகள் அஸ்ஸாமில் பேசப்படுவதில்லை காரணம் அந்த பிரச்சனைகளை பற்றிய செய்திகள் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு சொல்லப்படுவதில்லை. தமிழ் நாட்டு தமிழ் ஊடகங்கள் தமிழ்நாட்டின் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசுகின்றன, அதே போல் அஸ்ஸாம், ஒடிசா, மேற்கு வங்காளம் என்று அவர்களின் ஊடகங்கள் அவர்களின் பிரச்சனைகளை மட்டுமே தங்கள் மக்களிடம் செய்தியாக கொண்டு சேர்க்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சனையாக இவைகள் பேசுவது ஒரு குண்டு வெடித்தாலோ, இரயில் விபத்து ஏற்பட்டாலோ, விமான விபத்து ஏற்பட்டாலோ, மற்றும் பாலியல் சம்பந்தமான வழக்குகள் போன்றவைகள் நடந்தால் தான் ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடகங்களும் அவற்றை பற்றி பேசுகின்றன.

பெங்களூரில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்கள் தோழர்கள். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டின் பிரச்சனைகாகவே ஏற்பாடு செய்யபட்டது. அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்வி இது தமிழ்நாட்டுப் பிரச்சனை எதற்காக இங்கு பேசுகிறீர்கள் என்பது தான். ஒரு மாநிலத்தின் பிரச்சனை என்பது அந்த நாட்டின் பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை என்பதற்கு இதைவிட எந்த சான்றும் தேவையில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சனையும் அடுத்தவருக்கு தெரியவேண்டும் அப்பொழுது தான் ஒரு முழுமையான இந்தியாவின் பிரச்சனைகளை மக்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க முடியும். இங்கு நல்லவிதமாக தெரியும் ஒரு கட்சி மற்றைய மாநிலத்தில் கொடூரங்களை செய்திருக்கலாம், அது தெரியாமல் அவர்களை ஆட்சியில் அமர்த்தினால் அதே கொடூரங்கள் புதிய மாநிலத்திலும் நடக்க வழி வகை செய்து கொடுத்ததாக அமைந்துவிடும்.  ஏன் மத்தியிலும் ஆளும் கட்சியை தேர்ந்தெடுக்க இந்த செய்திகள் அனைத்தும் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நமது ஊடகங்களோ இல்லை அரசுகளோ இதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை, அரசுகள் எடுப்பதில்லை எனென்றால் அவர்களுக்கு இவ்வாறு பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் இருப்பதே அவர்களின் அரசியலை நடத்தி செல்ல வசதியாக இருக்கும் என்பதால். 

பள்ளிபருவத்தில் சுதந்திர தின அணிவகுப்பை பார்க்க வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் உட்கார்ந்து இருப்பேன். இன்று அதை நினைத்தால் அந்த அணிவகுப்பு நடக்கும் ராஜ்பத் ரத்த ஆறாக பெருக்கெடுத்து ஓடிய பாதையாக கண்ணுக்கு முன் தெரிகிறது. எத்தனை எத்தனை கோரங்கள், சீக்கிய இன அழிப்பு, காஸ்மீர மக்கள் இன அழிப்பு, சிறுபான்மை இஸ்லாமிய சகோதரர்கள் இன அழிப்பு, ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தியா முழுவதுமே ஒடுக்கப்படும் கொடூரம், வடகிழக்கு மாநிலங்களில் கருப்பு சட்டத்தின் பெயரால் செய்யப்படும் பாலியல் வன்கொடுமைகள், உயிர் பறிப்புகள் என்று எத்தனை எத்தனை பிரச்சனைகள். இவைகள் அனைத்தையும் பற்றி படித்த பிறகு அணி வகுப்பு நடக்கும் பாதை ராஜ்பத்(அரசபாதை) யாக தெரியவில்லை இந்திய குடிமகன்களில் இரத்ததால் நிறைந்த ஒரு ஆறாகவே தெரிகிறது. 

ஆங்கிலேயன் நம்மை சுரண்டுவதற்காக பிரித்தாளும் சுழ்ச்சியை மேற்கொண்டான் என்று படித்திருக்கிறோம். அதையே இன்று இந்தியா எனும் அரச வர்க்கமும் செய்து வருகிறது இதில் அனைவரும் அடங்குவார்கள், மதசார்பற்ற கட்சிகள், பொதுவுடமை பேசும் கட்சிகள், மதசார்புடைய கட்சிகள் என்று அனைத்துமே இந்த பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்தே மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாண்டு தங்களின் அதிகார போதையை, பதவி மோகத்தை தணித்துக் கொள்கிறார்கள். ஒரு நாட்டின் குடிமகனுக்கு அந்த நாட்டின் பிரச்சனைகள் அனைத்திலும் பங்கு உண்டு, அதை தனது பிரச்சனையாக பார்க்க வேண்டும் இந்த நிலை என்று ஏற்படுகிறதோ அன்று தான் அந்த நாடு ஒரு சுதந்திரநாடாக கருத முடியும். 

இந்தியா என்றுமே அந்த ஒரு இடத்துக்கு செல்லாது, பகத்சிங்கை பற்றி நாம் இங்கு நமது பள்ளி பாடங்களில் படிக்கிறோம் ஆனால் பஞ்சாப்பில் ஒருவரிடம் நமது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியை பற்றி கேட்டால் தெரியாது. ஏன் செண்பகராமன் பிள்ளையையும் அவர் ஏற்படுத்திய இந்திய தேசிய ராணுவத்தையும் நமக்கு தெரியாது ஆனால் நேதாஜியையும் அவரின் இந்திய தேதிய இராணுவத்தை பற்றி மட்டுமே நமக்கு தெரியும். இதிலும் கொடுமை நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள் தமிழர்கள் ஆனால் அவர்கள் யார் என்ன என்று இன்று வரை நமக்கு தெரியாது. இந்திய சுதந்திர போராட்டத்தின் வீராங்கனை என்று ஜான்சி ராணி லட்சுமி பாயை சொல்கிறார்கள், ஆனால் வெள்ளையனை அடிபணிய வைத்து மன்னிப்பு கடிதம் எழுதிவாங்கிய வேலுநாச்சியாரை நம்மில் பலருக்கே தெரியாது. இதே போல் தான் கேரளாவில் போராடியவர்கள் யார் யார் என்பது நமக்கு தெரியவில்லை. 

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாடு அவர்களின் உரிமைகளை பறிக்கும் வரை அந்த நாட்டின் ஒற்றுமை என்பது எட்டாக்கனியாக தான் இருக்கும், அடக்குமுறையின் மூலம் ஒரு நாட்டின் குடிமக்களை மற்றொரு இனமாக கருத வைக்க முடியாது. அவர்களின் பிறந்த இனம் அவர்களின் அடையளமாக, கலாச்சாரமாக, பண்பாடாக அவர்களிடம் இருக்கு இவைகளை என்றும் பிரித்துவிட இயலாது. 



இந்த சுதந்திரதினத்தில் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டியது, இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின் நடைபெற்ற கொடூரங்களை தான். இந்தியாவின் மக்களாட்சி முறைக்கு அடித்தளமாக இருக்கு தேர்தல் வாக்காளர்கள் பட்டியலை வைத்து டில்லியில் எந்த வீட்டில் எல்லாம் சீக்கியர்கள் இருக்கிறார்கள் என்று தேடி தேடி கொலை செய்த கொடூரத்தை தான். ஒரு குழு வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு முன்னால் சென்று சீக்கியர்களின் வீட்டு வாசலில் குறியிட்டு செல்லும் பின்னால் வந்த காங்கிரஸ் கட்சியின் வன்முறை கும்பல் அவர்கள் வீட்டு கதவை உடைத்து விட்டில் இருந்தவர்களை எல்லாம் வெட்டி கொன்று தெருவில் உடல்களை வீசி எரிந்து தீயிட்டு கொளுத்திய கொடூரம். இத்தகைய கொடூரங்களை செய்தவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை என்றால் கூட பரவாயில்லை அவர்களுக்கு அரசு செலவிலேயே அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன என்று கேள்விப்படும் பொழுது இந்தியனாக பெருமை பட முடியவில்லை, 

இது இவர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் ஓவ்வொரு பகுதியிலும் பல்வேறு பிரச்சனைகள் பல்வேறுவிதமான அடக்குமுறைகள் என்று தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன ஒவ்வொன்றுக்கும் அரசுகள் வெவ்வேறு சாயங்களை பூசுகின்றன. முக்கியமாக சொல்வது இந்தியாவின் பாதுகாப்பு, வெளிநாட்டு சக்திகளின் ஊடுறுவல் என்று ஆனால் இவை அனைத்தும் உண்மையாக கூட இருந்தாலும். தன் நாட்டின் குடிமகனிடம் காந்திய தேசம் என்றும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. இந்த அரச பயங்கரவாதத்தை மக்கள் என்றும் சகித்து கொண்டு இருக்க மாட்டார்கள், அவர்கள் பொங்கி எழும் நாளில் மேலும் பல கொடூரங்களை சந்திக்க வேண்டியது வரும்.

இந்தியாவின் சுதந்திரம் என்பது அதன் பல்வேறு தேசிய இன மக்களின் சாம்பலின் மேல் கொண்டாடப்படும் பண்டிகையாக தான் பார்க்க தோன்றுகிறது. 

குறிப்பு: 
இதற்கு அரசியல்வாதிகள் தான் காரணம் அவர்களை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சப்பை வாதங்களை முன்வைக்காமல் விவாதிப்பது நன்றாக இருக்கும் தோழர்களே.

ஒரு நாட்டின் குடிமகன் என்பவன் அந்த நாடு செய்யும் தவறுகளை தட்டி கேட்பவனாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் அவன் அந்த நாட்டின் சிறந்த குடிமகனாக கருத முடியும் - நீதியரசர் கிருஸ்ணய்யர்.