Tuesday, November 6, 2012

உள்ளூர் பொய் ஐநாவில் செல்லுபடியாகுமா

ஐநாவில் தோசை மாநாட்டு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன கொடுத்தார்கள் என்றால் “Beats of Bleeding Hearts" என்ற தலைப்பில் மொத்தம் 48 பக்கத்திற்கு ஓர் ஆவணமும் ஒரு சிடியும்.  ஆவணத்தின் முதல் பக்கம் கருணாநிதியின் படமும் தலைப்பும் அதன்பிறகு மூன்று பக்கத்து சமீபத்திய ஆத்ம நண்பர்கள் ஸ்டாலின், பாலு அவர்க்ள் தங்களின் தலைவரை பற்றி புகழ்ந்து ஒரு கடிதம். அதன்பிறகு 15 பக்கத்துக்கு ஒரு மோமோரண்டம் அதில் 8 பக்கத்துக்கு உங்க சொந்த புராணத்தை பாடிவிட்டு மிச்சம் இருக்கும் 7 பக்கத்தில் ஈழத்தமிழர்கள் மன்னிக்கவும் சிலோன் தமிழர்கள் பிரச்சனையை பேசி இருக்கிறீர்கள்(ஸ்டாலின் இன்று வரை சிலோன் தமிழர்கள் என்று தான் சொல்லுறாருப்பா). அதன் பிறகு ஐ.நா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்று நான்கை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

இதில் எது பொதுவாக்கெடுப்பை குறிக்கிறது என்று தெரியவில்லை. கொடுக்கிற அத்தனை பேட்டியிலும் ஐநாவிடம் பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தினோம் என்கிறீர்கள். என்ன மாயமோ தெரியலை எங்க கண்ணுக்கு தெரியாதா பொதுவாக்கெடுப்பு ஐநா கண்ணுக்காவது தெரியுமா???

அதன் பிறகு ஒரு 14 பக்கத்துக்கு அடி தகவல்களாக நீங்கள் மெமோரண்டத்தில் சொன்ன விசயங்களுக்கு ஆதாரங்களாக பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். அதில் இலங்கையில் பாதிக்கப்பட்ட ஊடகத்துறையினர், அரசு சாரா மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கொடுத்து இருக்கிறீர்கள், இது தான் ஆவணத்தில் இருக்கும் உருப்படியான ஒரே விசயம்.

மொமோரண்டத்தில் உங்களின் வீரபிராதபங்களை வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள் அதில் தோசை மாநாட்டில் 14 தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு Beats of Bleeding Hearts ஆவணத்தில் தோசை மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களையும் 12 பக்கத்துக்கு இணைத்துள்ளீர்கள் அதில் நீங்கள் சொன்ன 14 தீர்மானத்துக்கு பதிலாக 11 தீர்மானம் தான் இருக்கிறது. இதில் மூன்றை ஏன் நீக்கியிருக்கிறீர்கள் என்பதை பார்த்தாகிவிட்டது. 


ஆனால் ஆவணத்தின் தொடக்கத்தில் நீங்கள் சொன்ன 14 தீர்மானம் எங்கே என்று ஐநா அதிகாரிகள் தேடப் போகிறார்கள், பார்த்து அவர்களிடம் இந்த திருத்தத்தை சொல்லிவிடுங்கள், இல்லாவிடில் நீங்கள் இணைத்திருக்கும் தோசை தீர்மானம் தவறாக வேறு எதோ ஊசிப்போன உப்புமா தீர்மானத்தை இணைத்துள்ளீர்கள் என்று நினைத்துவிடப் போகிறார்கள் ஐநா அமைப்பினர்.  


தமிழகத்தில் நீங்கள் காலம் காலமாக சொல்லிவரும் பொய் பித்தலாட்டாங்களை ஐநா வரை கொண்டு போயிருக்கிறீர்கள். அவைகள் என்ன என்று விலாவரியாக பார்க்கலாம். 

இந்த ஆவணத்தில் நீங்கள் 1956ம் ஆண்டிலிருந்து ஈழமக்களுக்காக போராடி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு பெயர் போராட்டம் இல்லை, ஈழமக்களுக்கான ஆதரவு என்று சொல்லலாம். உங்களை பற்றி சொல்லும் பிரமான பத்திரத்தில்  "Dr. Kalaignar M. Karunanidhi, who has been raising his voice consistently for the rightful cause of Eelam Tamils from the year 1956, is also the Chairman of TESO (Tamil Eelam Supporters’ Organisation), started to mobilize national and international support for Eelam Tamils." (page 3 last para) இவ்வாறு கூறப்பட்டுள்ளது இதன் அர்த்தம் என்ன. டொசோ அமைப்பு 1956ல் ஆரம்பிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா. டெசோ ஆரம்பிக்கப்பட்டதையும் அதை இழுத்து மூடியதையும் அதன் பிறகு இப்பொழுது உங்களின் சொந்த தேவைக்காக இப்பொழுது உயிர் கொடுத்ததையும் ஏன் சொல்லவில்லை?


மெமோரண்டத்தின் ஐந்தாம் பக்கத்தின் கடைசி பத்தியில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள். 1976ம் ஆண்டு உங்கள் ஆட்சி பறிபோனதற்கு காரணம் ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் ஆதரவாக நின்றதால் தான் என்று. அப்படி என்றால் பாளையங்கோட்டை சிறையில் பாம்புக்கு பல்லிக்கும் நடுவில் இருந்தது மிசாவினால் இல்லையா, இல்லை மிசாவில் ஜெயிலுக்கு போன ஸ்டாலின் அவர் இவர் என்று பலர் மிசாவை தங்கள் பெயருக்கு முன்னால் சேர்த்து  மிசா சோத்துமூட்டை, மிசா முட்டைகோசு, மிசா பொரிச்ச வெங்காயம், என்று போட்டு கொண்டு அழைகிறார்களே அது எல்லாம் பொய்யா. 1975ல் உங்கள் ஆட்சியை கலைத்தற்கு காரணமாக மத்திய அரசு ஊழல் என்று சொன்னதே அதுவும் உண்மையில்லையா?? மிசா அமுல்படுத்தப்பட்டது அதற்கு மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமல் இருந்தது அப்புறம் மிசாவினால் அடிபட்டது, ஏன் சிட்டிபாபு உயிரிழந்தது என்று அனைத்தும் நடக்கவில்லை என்பதால் தான் 1980 தேர்தலில் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்தீர்கள் அல்லவா, நாங்கள் தான் மறந்துவிட்டோம், மிசா என்றால் அது எதோ பிசா என்ற சாப்பிடும் பொருள் என்பதை...

1991ம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது மத்திய அரசு விடுதலை புலிகளை தடுக்க தவறியதாக காரணம் சொல்லியது என்னவோ உண்மை தான். ஆனால் அன்று நீங்கள் கொடுத்த பத்திரிக்கை அறிக்கைகளில் ஜெயலலிதாவும், ராஜிவ் காந்தியும் சேர்ந்து தான் என் ஆட்சியை கலைத்தார்கள் என்று சொல்லியிருக்கிறீர்களே. அப்படியென்றால் அன்று பொய் சொன்னீர்களா இல்லை இப்பொழுது பொய் சொல்கிறீர்களா. எனென்றால் உங்கள் ஆட்சிகலைக்கப்பட்ட பொழுது, ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா தனது பதவியை தூக்கி எறிந்தார், மத்திய அரசு தன்னை கேட்காமல் பொய் காரணம் சொல்லியது என்று அவருக்கு இருக்கும் நேர்மை உங்களிடம் இல்லையே. ஜெயலலிதாவும் ராஜிவ் காந்தியும் பிரதமர் சந்திரசேகரை மிரட்டி உங்கள் ஆட்சியை கலைத்தார்கள். அதுவும் நீங்கள் 1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியை இந்திராகாந்தியுடன் சேர்ந்து கலைத்தீர்களே அதே போல் தானே 1991ல் ஜெயலலிதா சந்திரசேகருடன் கூட்டு சேர்ந்து உங்கள் ஆட்சியை கலைத்தது நடந்தது. இதை நீங்களே அன்று அறிக்கையில் ஜெயலலிதா தான் காரணம் என்று சொல்லிவிட்டு, இன்று ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று வாய்கூசாமல் எப்படி பொய் சொல்ல முடிகிறது உங்களால்???


1983 ஜூலை கலவரத்திற்கு பிறகு தேசிய அளவில் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக நீங்களும், பேராசிரியர் அன்பழகனும் சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக சொல்கிறீர்கள், அப்பொழுது சட்டசபையின் உங்களுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் தான் இருந்தார்களா என்ன? மொத்தம் 37பேர் அல்லவா இருந்தார்கள். 1980 நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டீர்கள் அதில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அந்த தெம்பில் தானே சட்டசபைக்கு தேர்தல் வைத்தால் ஜெயித்துவிடலாம் என்று 1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கலைத்தீர்கள். அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆரே வெற்றி பெற்றார்,  ஆனாலும் உங்களுக்கு 1983ம் ஆண்டு மொத்தம் 37 சட்டசபை உறுப்பினர்களும், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்த பொழுது நீங்களும் பேராசிரியர் அன்பழகன் மட்டும் பதவியை இராஜினாமா செய்ததால் எந்த மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தீர்கள். ஒட்டுமொத்தமாக சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் இருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் இராஜினாமா செய்ய சொல்லியிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்த்து இருக்கும் இல்லையே அதை செய்யாமல் நீங்களும் அன்பழகனும் மட்டும் இராஜினாமா செய்துவிட்டு கொல்லை புற வழியாக சட்டமேலவை உறுப்பினராக அதே 1983ம் ஆண்டு பதவி ஏற்றுக் கொண்டீர்களே. இதை எல்லாம் அனைவரும் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தீர்களா என்ன??ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக செய்துள்ளீர்கள் ஐ.நாவுக்கு கொடுத்த ஆவணத்தில் மனித சங்கிலி நடத்தியதை சொன்ன நீங்கள், நீங்க இருந்த கின்னஸ் சாதனை உண்ணாவிரதத்தை கூறிப்பிடவில்லை, வாழ்க உண்ணாவிரதம் வளர்க உங்கள் குடும்பம்.

2 comments:

  1. வாழ்க உங்கள் உண்ணாவிரதம். வளர்க உங்கள் குடும்பம்.

    ReplyDelete