Friday, October 26, 2012

கடலைக்குதான்யா...



கடலை போடுவது என்பது எனது பள்ளி, கல்லூரி நாட்களில் மிகவும் பிரபலமான ஒன்று. யாராவது ஒரு நண்பனை எங்கே என்று கேட்டால் அவன் அங்க உட்கார்ந்து கடலை போட்டுக்கிட்டு இருப்பாண்டா என்பார்கள் நண்பர்கள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக எனது இளமைகாலத்தில் கூடவே வந்தது கடலை போடுவது என்ற ஒன்று. நான் சத்தியமாக இதுவரை கடலை போட்டதில்லைங்க, வாய்ப்பு கிடைச்சவன் கெட்டவன், வாய்ப்பு கிடைக்காதவன் உத்தமன் எனும் வாக்கிற்கிணங்க இன்று வரை வாய்ப்பு கிடைக்காத உத்தமனுங்க.

அப்படி கடலை போடுவது என்றால் என்ன தான் பண்ணுவாங்க, நான் படித்தது மாலை நேரக்கல்லூரியில், சனிக்கிழமை மட்டும் காலை 7.30லிருந்து 9மணிவரை வகுப்பு. அப்படி ஒரு சனிக்கிழமை காலையில் கல்லூரிக்குள் நுழைந்தேன், கல்லூரி படியில் அந்த அதிகாலை வேலையில் இருவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நான் அவர்களை தாண்டி எனது வகுப்புக்கு சென்றேன் அவர்கள் யார் எந்த வகுப்பு என்பதெல்லாம் தெரியாது. எனது வகுப்பு ஆரம்பித்து பேராசிரியர் அறு அறுனு அறுத்துட்டு எங்களை ஒரு 9மணிக்கு வகுப்பை முடித்து வெளியில் அனுப்பினார். வகுப்பை விட்டு வெளியில் வந்து பார்த்தால் அதுவரை அந்த இருவரும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் பேசிக்கொண்டே இருந்தனர். பேராசிரியரின் அறுவையில் வெறுத்துப் போன நானும் எனது வகுப்பு தோழர்களும் வெளியில் செல்ல அவர்களை நோக்கி நடந்தோம். அப்பொழுது அவர்களை கடக்கும் பொழுது நற, நறவென சத்தம் எழுப்பிவிட்டு “மாநகராட்சிக்கு போன் பண்ணுங்கடா.. ஒரே கடலை தொலி நடக்க முடியவில்லைஎன்று சொல்ல. கூட வந்த அனைவரும் நான் எதை சொல்கிறேன் என்று புரிந்து சிரித்துவிட்டார்கள். அவர்கள் சிரித்தவுடன் அமர்ந்திருந்த இருவரும் அந்த இடத்தை காலி செய்துவிட்டு ஓடினார்கள் ஓடினார்கள் கல்லூரியை விட்டு வெளியே ஒடினார்கள். இதனால் தான் என்னமோ நான் இன்னும் உத்தமனாகவே இருக்கிறேன்.

இப்படி கடலை போடுவது என்பதை எனது விடலை பருவத்தில் இருந்து பார்த்து வளர்ந்து வந்தவன் ஆனால் அப்படி என்ன பேசுவார்கள் என்று கேட்டால் ஒன்றுமே இல்லாத விசயத்தை ஒன்றரை மணிநேரம் இரண்டுமணி நேரம் என்று பேசி தீர்த்து இருப்பார்கள் நேரத்தை. நண்பன் ஒருவன் இதே போல் மதுரை பாண்டியன் ஹோட்டல் பின்புறம் இருக்கும் ஒரு கடையில் கிட்டத்தட்ட ஒரு மூணு மணி நேரம் கடலை போட்டுவிட்டு வெளியில் வந்தான் அவனுகாக காத்துக் கொண்டிருந்த நான் ஒரு பாக்கெட் சிகரெட் குடித்து முடித்தது தான் மிச்சம். வெளியில் வந்தவுடன் என்னடா எல்லாம் பேசி முடிச்சாச்சா எப்ப போய் பொண்ணு கேக்கனும் அந்த பெண்ணின் அப்பாவிடம் என்றால் போட்டான் பாருங்க ஒரு போடு. இது காதல் எல்லாம் இல்லை சும்மா நட்பு தான், நீ தப்பா எல்லாம் கற்பனை பண்ணாதே என்றான். சரி நம்ம தான் தப்பு பண்ணிட்டோமோ என்று சரி அப்ப என்ன படிப்பை பத்தி பேசினிங்களாடா என்று கேட்டால் என்னமோ வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஐந்துவை பார்ப்பது போல் பார்த்தான். இதெல்லாம் உனக்கு புரியாது பேசாம வண்டியை எடு வீட்டுக்கு போகலாம் என்றான்.

எனக்கோ காதலும் இல்லை, படிப்பும் இல்லை அப்புறம் என்ன தான் பேசியிருப்பார்கள் மூணு மணி நேரம் என்ற தேடல் முடியவில்லை. வீட்டுக்கு போகும் முன் ஒரு டீக்கடையில் வண்டியை நிப்பாட்டிவிட்டு, என்ன தாண்டா பேசினீங்க என்றேன். ஒன்னும் இல்லை மச்சான் சும்மா தான் பேசிக்கொண்டிருந்தோம் என்றான். எனக்கு தலை சுற்றியது சும்மா என்னடா முணு மணி நேரம் பேசின என்று கேட்டேன். கல்லூரியில் படிக்கும் சக நண்பர்களை பற்றி பேசினோம், வாத்தியார்களை பற்றி பேசினோம், அப்புறம் அழகர் கோயிலை பற்றி பேசினோம் என்றான். சரி நண்பர்களை பற்றி பேசுவதில் எந்த சுவரசியமும் இருக்காது யாரு யாரை சைட்டடிக்கிறான் என்பது தான் இருக்கும் அதை விட்டுடலாம், ஆசிரியர்களை பற்றியும் ஒன்றும் இருக்காது யார் நல்லா அறுக்குறாங்க என்பதாக தான் இருக்கும் என்று,  அழகர் கோயிலை பற்றி பேசினேன் என்று சொன்னானே எதாவது ஆக்கபூர்வமாக இருக்கும் என்று, அழகர் கோயிலை பற்றி என்னடா பேசினீங்க மாப்பு என்றேன். வச்சான் பாருங்க ஒரு ஆப்பு “அங்க எத்தனை குரங்குகள் இருக்கும் என்று தோராயமாக ஒரு கணக்கு போட்டோம் என்றான். இப்ப நான் எதோ வேகமாக தட்டாமலை சுற்றிவிட்டு தரையில் கால்பட்டும் படாதது போல் இருக்கும் ஓர் நிலைக்கு சென்றுவிட்டேன். சரி நம்ம நேரம் சரியில்லை என்று டீக்கு காசு கொடுறா என்று சொன்னால். மச்சான் காசில்லை மச்சான் அங்க கடையிலேயே 120ரூபாய் செலவாயிருச்சுனு சொன்னான். அவனை விரட்டி விரட்டி அடிக்கணும் போல இருந்தது இவனுக்காக முணு மணி நேரம் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதி தள்ளிட்டு ரோட்டையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு வந்த ஆத்திரத்துக்கு என்ன செய்யுறதுனே தெரியவில்லை. நண்பனாக போயிட்டானே என்ன செய்வது டீக்கு காசை கொடுத்துட்டு வாடா மாப்பிள்ளை என்று வண்டியில் ஏற்றிக்கொண்டு அவன் வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டுக்கு வந்தேன். வந்தவுடன் வீட்டில் அர்சனை ஆரம்பமாகியது சாப்பிடற நேரத்தில் எங்கடா போய் ஊர் சுத்திட்டு வருகிறாய் என்று. நேரத்தை பார்த்தால் மணி மூணு, சாப்பாட்டை கூட மறந்திருந்தேன்.

இப்படி ஒரு பாரம்பரியமிக்க கடலை போடும் பழக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் இந்த கடலை போடுவது காதலர்களுக்குள்ளும் உண்டு, நண்பர்களுக்குள்ளும் உண்டு, ஏன் பேராசிரியரிடம் கடலை போட போகிறேன் என்று சொன்ன பெண்கள் கூட உண்டு. இப்படி வயது வித்தியாசம், பெரியவர் சிரியவர் பாகுபாடு என்று எந்த வகை தொகையும் இல்லாமல் யாருக்கும் எந்தவித தீங்கும் இல்லாமல் போடப்படுவது தான் கடலை போடுவது. தாங்கள் கடக்க வேண்டிய நேரத்தை மிகவும் உற்சாகமாக கடப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது தான் கடலை போடுவது. இதே கடலை போடும் பழக்கம் தான் இன்று முகநூலிலும், கீச்சுலகத்திலும், இணையத்திலும் சில பரிணாம மாற்றங்களுடன் உலாவருகிறது.

இதை போன்று யாருக்கும் எந்த தொந்தரவும் விளைவிக்காத கடலைபோடுவது என்பது தப்பாங்க நீங்களே சொல்லுங்க.. 

No comments:

Post a Comment