Tuesday, August 14, 2012

வந்தே மாதரம்....



எனது பள்ளி நாட்கள் கிண்டலாக நக்கலாக பாடிய பாடல், யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்ற நினைவில்லை ஆனால் இன்று அந்த பாடலை திரும்பவும் பாடத்தோன்றுகிறது...

வந்தே மாதரம்
வருதே மூத்திரம் 
கொண்டுவா பாத்திரம்
பிடிச்சுக்கோ சீக்கிரம்
குடிச்சுக்கோ நீமாத்திரம்..

இந்த பாடலை அன்று பாடி திரிந்தாலும் நான் தீவிர இந்திய தேசிய அபிமானியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை. இருந்தேன். ஆனால் இன்று இந்தியா என்பது அரசியல்வியாதிகளாலும், அதிகார வர்க்கத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு மாயை. இந்தியா என்பது பல்வேறு இனம், மொழி மக்களை கொண்ட நாடு. இவர்கள் அனைவரும் எத்தனை வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை எங்கும் சொல்வேன். 

தமிழ் நாட்டு பிரச்சனைகள் கர்நாடகத்தில் பேசப்படுவதில்லை, கர்நாடகத்தின் பிரச்சனைகள் அஸ்ஸாமில் பேசப்படுவதில்லை காரணம் அந்த பிரச்சனைகளை பற்றிய செய்திகள் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு சொல்லப்படுவதில்லை. தமிழ் நாட்டு தமிழ் ஊடகங்கள் தமிழ்நாட்டின் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசுகின்றன, அதே போல் அஸ்ஸாம், ஒடிசா, மேற்கு வங்காளம் என்று அவர்களின் ஊடகங்கள் அவர்களின் பிரச்சனைகளை மட்டுமே தங்கள் மக்களிடம் செய்தியாக கொண்டு சேர்க்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சனையாக இவைகள் பேசுவது ஒரு குண்டு வெடித்தாலோ, இரயில் விபத்து ஏற்பட்டாலோ, விமான விபத்து ஏற்பட்டாலோ, மற்றும் பாலியல் சம்பந்தமான வழக்குகள் போன்றவைகள் நடந்தால் தான் ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடகங்களும் அவற்றை பற்றி பேசுகின்றன.

பெங்களூரில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்கள் தோழர்கள். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டின் பிரச்சனைகாகவே ஏற்பாடு செய்யபட்டது. அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்வி இது தமிழ்நாட்டுப் பிரச்சனை எதற்காக இங்கு பேசுகிறீர்கள் என்பது தான். ஒரு மாநிலத்தின் பிரச்சனை என்பது அந்த நாட்டின் பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை என்பதற்கு இதைவிட எந்த சான்றும் தேவையில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சனையும் அடுத்தவருக்கு தெரியவேண்டும் அப்பொழுது தான் ஒரு முழுமையான இந்தியாவின் பிரச்சனைகளை மக்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க முடியும். இங்கு நல்லவிதமாக தெரியும் ஒரு கட்சி மற்றைய மாநிலத்தில் கொடூரங்களை செய்திருக்கலாம், அது தெரியாமல் அவர்களை ஆட்சியில் அமர்த்தினால் அதே கொடூரங்கள் புதிய மாநிலத்திலும் நடக்க வழி வகை செய்து கொடுத்ததாக அமைந்துவிடும்.  ஏன் மத்தியிலும் ஆளும் கட்சியை தேர்ந்தெடுக்க இந்த செய்திகள் அனைத்தும் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நமது ஊடகங்களோ இல்லை அரசுகளோ இதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை, அரசுகள் எடுப்பதில்லை எனென்றால் அவர்களுக்கு இவ்வாறு பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் இருப்பதே அவர்களின் அரசியலை நடத்தி செல்ல வசதியாக இருக்கும் என்பதால். 

பள்ளிபருவத்தில் சுதந்திர தின அணிவகுப்பை பார்க்க வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் உட்கார்ந்து இருப்பேன். இன்று அதை நினைத்தால் அந்த அணிவகுப்பு நடக்கும் ராஜ்பத் ரத்த ஆறாக பெருக்கெடுத்து ஓடிய பாதையாக கண்ணுக்கு முன் தெரிகிறது. எத்தனை எத்தனை கோரங்கள், சீக்கிய இன அழிப்பு, காஸ்மீர மக்கள் இன அழிப்பு, சிறுபான்மை இஸ்லாமிய சகோதரர்கள் இன அழிப்பு, ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தியா முழுவதுமே ஒடுக்கப்படும் கொடூரம், வடகிழக்கு மாநிலங்களில் கருப்பு சட்டத்தின் பெயரால் செய்யப்படும் பாலியல் வன்கொடுமைகள், உயிர் பறிப்புகள் என்று எத்தனை எத்தனை பிரச்சனைகள். இவைகள் அனைத்தையும் பற்றி படித்த பிறகு அணி வகுப்பு நடக்கும் பாதை ராஜ்பத்(அரசபாதை) யாக தெரியவில்லை இந்திய குடிமகன்களில் இரத்ததால் நிறைந்த ஒரு ஆறாகவே தெரிகிறது. 

ஆங்கிலேயன் நம்மை சுரண்டுவதற்காக பிரித்தாளும் சுழ்ச்சியை மேற்கொண்டான் என்று படித்திருக்கிறோம். அதையே இன்று இந்தியா எனும் அரச வர்க்கமும் செய்து வருகிறது இதில் அனைவரும் அடங்குவார்கள், மதசார்பற்ற கட்சிகள், பொதுவுடமை பேசும் கட்சிகள், மதசார்புடைய கட்சிகள் என்று அனைத்துமே இந்த பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்தே மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாண்டு தங்களின் அதிகார போதையை, பதவி மோகத்தை தணித்துக் கொள்கிறார்கள். ஒரு நாட்டின் குடிமகனுக்கு அந்த நாட்டின் பிரச்சனைகள் அனைத்திலும் பங்கு உண்டு, அதை தனது பிரச்சனையாக பார்க்க வேண்டும் இந்த நிலை என்று ஏற்படுகிறதோ அன்று தான் அந்த நாடு ஒரு சுதந்திரநாடாக கருத முடியும். 

இந்தியா என்றுமே அந்த ஒரு இடத்துக்கு செல்லாது, பகத்சிங்கை பற்றி நாம் இங்கு நமது பள்ளி பாடங்களில் படிக்கிறோம் ஆனால் பஞ்சாப்பில் ஒருவரிடம் நமது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியை பற்றி கேட்டால் தெரியாது. ஏன் செண்பகராமன் பிள்ளையையும் அவர் ஏற்படுத்திய இந்திய தேசிய ராணுவத்தையும் நமக்கு தெரியாது ஆனால் நேதாஜியையும் அவரின் இந்திய தேதிய இராணுவத்தை பற்றி மட்டுமே நமக்கு தெரியும். இதிலும் கொடுமை நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள் தமிழர்கள் ஆனால் அவர்கள் யார் என்ன என்று இன்று வரை நமக்கு தெரியாது. இந்திய சுதந்திர போராட்டத்தின் வீராங்கனை என்று ஜான்சி ராணி லட்சுமி பாயை சொல்கிறார்கள், ஆனால் வெள்ளையனை அடிபணிய வைத்து மன்னிப்பு கடிதம் எழுதிவாங்கிய வேலுநாச்சியாரை நம்மில் பலருக்கே தெரியாது. இதே போல் தான் கேரளாவில் போராடியவர்கள் யார் யார் என்பது நமக்கு தெரியவில்லை. 

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாடு அவர்களின் உரிமைகளை பறிக்கும் வரை அந்த நாட்டின் ஒற்றுமை என்பது எட்டாக்கனியாக தான் இருக்கும், அடக்குமுறையின் மூலம் ஒரு நாட்டின் குடிமக்களை மற்றொரு இனமாக கருத வைக்க முடியாது. அவர்களின் பிறந்த இனம் அவர்களின் அடையளமாக, கலாச்சாரமாக, பண்பாடாக அவர்களிடம் இருக்கு இவைகளை என்றும் பிரித்துவிட இயலாது. 



இந்த சுதந்திரதினத்தில் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டியது, இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின் நடைபெற்ற கொடூரங்களை தான். இந்தியாவின் மக்களாட்சி முறைக்கு அடித்தளமாக இருக்கு தேர்தல் வாக்காளர்கள் பட்டியலை வைத்து டில்லியில் எந்த வீட்டில் எல்லாம் சீக்கியர்கள் இருக்கிறார்கள் என்று தேடி தேடி கொலை செய்த கொடூரத்தை தான். ஒரு குழு வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு முன்னால் சென்று சீக்கியர்களின் வீட்டு வாசலில் குறியிட்டு செல்லும் பின்னால் வந்த காங்கிரஸ் கட்சியின் வன்முறை கும்பல் அவர்கள் வீட்டு கதவை உடைத்து விட்டில் இருந்தவர்களை எல்லாம் வெட்டி கொன்று தெருவில் உடல்களை வீசி எரிந்து தீயிட்டு கொளுத்திய கொடூரம். இத்தகைய கொடூரங்களை செய்தவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை என்றால் கூட பரவாயில்லை அவர்களுக்கு அரசு செலவிலேயே அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன என்று கேள்விப்படும் பொழுது இந்தியனாக பெருமை பட முடியவில்லை, 

இது இவர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் ஓவ்வொரு பகுதியிலும் பல்வேறு பிரச்சனைகள் பல்வேறுவிதமான அடக்குமுறைகள் என்று தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன ஒவ்வொன்றுக்கும் அரசுகள் வெவ்வேறு சாயங்களை பூசுகின்றன. முக்கியமாக சொல்வது இந்தியாவின் பாதுகாப்பு, வெளிநாட்டு சக்திகளின் ஊடுறுவல் என்று ஆனால் இவை அனைத்தும் உண்மையாக கூட இருந்தாலும். தன் நாட்டின் குடிமகனிடம் காந்திய தேசம் என்றும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. இந்த அரச பயங்கரவாதத்தை மக்கள் என்றும் சகித்து கொண்டு இருக்க மாட்டார்கள், அவர்கள் பொங்கி எழும் நாளில் மேலும் பல கொடூரங்களை சந்திக்க வேண்டியது வரும்.

இந்தியாவின் சுதந்திரம் என்பது அதன் பல்வேறு தேசிய இன மக்களின் சாம்பலின் மேல் கொண்டாடப்படும் பண்டிகையாக தான் பார்க்க தோன்றுகிறது. 

குறிப்பு: 
இதற்கு அரசியல்வாதிகள் தான் காரணம் அவர்களை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சப்பை வாதங்களை முன்வைக்காமல் விவாதிப்பது நன்றாக இருக்கும் தோழர்களே.

ஒரு நாட்டின் குடிமகன் என்பவன் அந்த நாடு செய்யும் தவறுகளை தட்டி கேட்பவனாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் அவன் அந்த நாட்டின் சிறந்த குடிமகனாக கருத முடியும் - நீதியரசர் கிருஸ்ணய்யர். 

No comments:

Post a Comment