Thursday, August 16, 2012

கட்டவிழ்த்து விடப்படும் பொய்களுக்கான பதில்கள்



 சகோதர யுத்தம் என்று வர்ணிப்பது ஒரு சிலரின் வழக்கமாகிவிட்டது, அவர்களுக்கு தேவை தாங்களை காப்பாற்றிக் கொள்வதே, ஈழ விடுதலையோ ஈழ தமிழர்களின் நலனோ இல்லை.

கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி வசூலான 2லட்சம் ரூபாயை அனைத்து இயக்கங்களுக்கும் பிரித்து கொடுத்தார். இதையே அனைவரும் இணைக்கும் முயற்சி என்று பறையடித்து வருகின்றனர். இது 1984ல் நடந்தது அப்பொழுது மூன்று குழுக்கள் சென்று அவரிடம் ஆளுக்கு 50,000 என்ற தொகையை வாங்கி வந்தனர். விடுதலை புலிகள் தங்களது ஆதரவு மட்டும் போதும் பணம் தேவை இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். காரணம் கருணாநிதி தமிழக அரழியலில் இவர்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, இதை புலிகள் இயக்கத்திற்கு புரியவைத்தவர் கருணாநிதியே தான், எப்படி புரியவைத்தார் என்பதை பார்க்கலாம்.

அப்பொழுதைய முதல்வர் எம்.ஜி.ஆர் மிகவும் கடினாமான நிலைப்பாடுகளையும், சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானங்களையும் இயற்றினார். அவரின் செல்வாக்கு மிகவும் அதிகமாக வளர்ந்து வந்தது இதை தடுக்கவே டெசோ அமைப்பை எற்படுத்தினார் எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் செய்யவேண்டிய காலகட்டம் அவருக்கு. இது அவருக்கு கைவந்த கலையும் கூட, இல்லையென்றால் 14 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத ஒரு தலைவர் எந்த பதவியை வகிக்காத ஒரு தலைவர், மற்றும் அவரது அரசியல் கட்சி அழிந்து இருக்கும். ஆனால் கருணாநிதி இத்தனை ஆண்டுகளும் தனது பெயரையும் கட்சியின் பெயரையும் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வருமாறு பார்த்துக்கொண்டு அதற்கு ஏற்றார்போல் போராட்டங்களையும் செயல்பாடுகளையும் முன்னிறுத்திய காலம் அது.

அதே சமயத்தில் ஈழத்தில் பல போராட்ட குழுக்கள் இருந்தன இவற்றில் முக்கியமானவையும் பெரியகுழுக்களும் என்றால் டெலோ, விடுதலை புலிகள், இபிஆர்எல்எஃப், ப்ளாட் மற்றும் ஈரோஸ் என்பவைகளே. இவர்களுக்குள் பெரிதாக பிரச்சனைகள் இல்லாவிடினும் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்தன. எம்.ஜி.ஆர் இவர்களை அனைவரையும் இணைத்துவிட வேண்டும் என்று நினைத்து ஒரு கூட்டத்தை அறிவிக்கிறார். உடனடியாக அதற்கு ஒரிரு நாட்கள் முன்பாக  கருணாநிதி ஒரு கூட்டத்தை அறிவிக்கிறார் அதே இயக்கங்களை தன்னை வந்து பார்க்க வரச்சொல்லி. இதில் சகோதர சண்டை என்பது தமிழகத்தில் இருந்த தலைவர்களிடத்தில் இருந்தது தான் அப்பட்டமாக தெரிகிறது. எம்ஜிஆர் பெயர் எடுத்துவிடக்கூடாது என்ற மாபெரும் எண்ணம் மட்டுமே கருணாநிதிக்கு இருந்து இருக்கிறது ஈழமக்களை பற்றிய கவலை என்பது சிறிதும் இல்லை. மேலும் இருக்கும் போராளிகள் எல்லாம் தன்னை வந்து பார்ப்பார்கள் தான் பெயர் வாங்கிவிட வேண்டும் என்ற வேகம் தான் இருந்தது. இதில் சென்று பார்த்தவர்களும் அதற்கு முன்பாகவே ஈழதேசிய விடுதலை முண்ணனி என்ற பெயரில் பத்மநாபாவின் முயற்சியால் ஒன்றிணைந்த EROS / EPRLF / TELO இயக்கத்தினர் சென்று பார்த்தனர், தாங்கள் ஏற்கெனவே ஒன்றிணைந்துவிட்டோம் என்று கருணாநிதியிடம் அறிவித்தனர். அதை படமாகவும் எடுத்துக்கொண்டு கருணாநிதியிடம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளமாட்டோம் என்ற உறுதிமொழியையும் கொடுத்தனர், இதை "ஈழப்போராட்டத்தில் நான்” புத்தகத்தில் புஸ்பராஜா  அவர்கள் இந்த போட்டோ எதற்காக எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார், கருணாநிதியின் முயற்சியால் இணைந்தவர்கள் அல்ல பத்மநாபாவின் முயற்சியால் இணைந்தவர்கள் என்பதை.

அப்பொழுது எடுத்த படம்



விடுதலை புலிகள் அமைப்பு இதிலும் கருணாநிதியின் அரசியல் நரிதந்திரத்தை புரிந்து கொண்டு சென்று பார்க்கவில்லை ஆனால் பத்மநாபாவால் ஏற்படுத்தப்பட்ட ENLF - ஈழ தேசிய விடுதலை முன்னனியில் தங்களை 1985ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி தங்களையும் இணைத்துக் கொண்டனர். இது இந்த அமைப்பை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் விடுதலைபுலிகளும் இந்த முண்ணனியில் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.அதாவது கருணாநிதியை சந்திக்க செல்லும் பொழுது செல்லாமல் அதன் பின்னால் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அதோ போல் எம்.ஜி.ஆர் கூட்டிய கூட்டத்திலும் பங்கெடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தனர் விடுதலை புலிகள் அமைப்பு. அவர்கள் தங்கள் நிலைப்பாடான ஈழமக்களின் விடுதலையே முக்கியம் என்பதில் தெளிவாக இருந்தனர். தமிழக அரசியல் சுழலுக்குள் தங்களை ஆட்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. 

இதன் பிறகு 1985ல் ஜூலை 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் அனைத்து இயக்கங்களும் ஒன்றாக இணைந்து ஒரே குரலில் தங்களின் கோரிக்கையை வைத்தனர். இந்தியாவின் நிர்பந்தத்தை முற்றிலுமாக நிராகரித்தனர். தனி ஈழக் கோரிக்கையை ஒற்றுமையாக திம்பு பேச்சுவார்த்தையில் வைத்தனர் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு திரும்பவும் இந்தியாவின் நிர்பந்தத்தால் மறுபடியும் ஆகஸ்டு மாதம் 12ம் தேதி முதல் 17ம் தேதிவரை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது அப்பொழுதும் இந்தியாவின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் அனைத்து போராளி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றாகவே இருந்தனர். அந்த சமயத்தில் தான் அகஸ்டு 16ம் தேதி வவுனியா நூலகம் தாக்கப்பட்டது 200க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திம்பு பேச்சுவார்த்தையின் கடைசி நாளன்று பேச்சுவார்த்தையை புறக்கணித்து அனைவரும் வெளியேறினர். இதை தான் காங்கிரஸ் காரர்கள் நாங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க விரும்பினோம் அவர்கள் கேட்கவில்லை என்றார்கள். பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளபோதே 200 பேரை கொண்று குவிக்கும் இலங்கையின் பேரினவாத அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும், இலங்கை மக்களை கொண்றுகுவித்துக் கொண்டே இருக்கும் என்பது தான் காங்கிரஸ் காரர்களின் நிலைப்பாடு. 

இப்படி அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையாகவே இருந்து வந்தன. இதைவிட இன்னும் சொல்வதென்றால் 70களில் முதன்முதலாக பண்ணைகள் அமைத்து பயிற்சி பெற்று வந்த பொழுது ஒருவரின் பண்ணைக்கு மற்றவர்கள் போவதுண்டு பயிற்சி எடுத்துக்கொள்வது அரசியல் பேசுவது என்பது இருந்து வந்தது அப்பொழுது ஈரோஸ் அமைப்பை சார்ந்தவர்கள் பாலஸ்தீனம் போய் பயிற்சி பெற்று வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு துப்பாக்கியை கொடுத்து இலக்கை நோக்கி சுடச் சொல்லியிருக்கிறார், பிராபாகரன் ஆனால் அவர்கள் சுட்டபொழுது இலக்கை தவற விட்டனர். ஆனால் அது வரை எந்த பயிற்சிக்கும் எங்கும் செல்லாத பிராபகரன் துப்பாக்கியை வாங்கி இலக்கை சரியாக சுட்டி காட்டியிருக்கிறார்ம், ஈரோஸ் அமைப்பினரும் வியந்து பாராட்டி இருக்கின்றனர். அதன் பிறகு விடுதலை புலிகள் திருநெல்வேலி வங்கி கொள்ளையில் 10லடசத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்தனர், அதில் தான் இயக்கத்தை கட்டமைத்தனர். அந்த பணத்தில் ரூபாய் 50000த்தை புலிகளின் மத்திய குழு கூடி முடிவெடுத்து ஈரோஸ் அமைப்பிற்கு கொடுத்தனர். இப்படி சக இயக்கங்களுக்கும் தங்கள் இயக்கத்தை நடத்த வைத்திருந்த பணத்தில் இருந்து எடுத்து கொடுத்தவர்கள் தான் சகோதர யுத்தம் புரிந்ததாக சொல்லி வருகின்றனர்.



1986ம் ஆண்டும் ஜுலை 28ல் நடந்த யாழ்பாணம் கோட்டை தாக்குதலில் விடுதலை புலிகள் அமைப்பும் EPRLF பத்மநாபாவின் அமைப்பும் சேர்ந்தே தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றனர். இப்படி களமாடிய பொழுது ஒன்றாக களமாடி வெற்றி பெற்றவர்கள் தான் சகோதர யுத்தம் செய்தார்கள் என்று வர்ணித்து வருகிறார்கள் சிலர். 

அதே போல் கருணாநிதியின் கூற்றுப்படி 1984க்கு பிறகு ஈழ இயக்கங்களை ஒன்றிணைக்கும் பணி நடக்கவில்லை அதற்கு முன்பாகவே இணைந்து போராடும் முடிவுகளை எடுத்து இணைந்து நின்று இருக்கிறார்கள். 1982ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் CEL - Commite for Eelam Liberation   (ஈழ விடுதலை குழு) என்ற பெயரில் ஒன்றாக இணைந்து நின்றவர்களே ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள். இப்படி ஒன்றாக இருந்தவர்கள் முரண்பட்டவர்களாக மாறிய காரணங்கள் பல சமயங்களில் நடந்துள்ளது. ஆனால் விடுதலை புலிகளின் மீது சொல்லப்படும் அவர்கள் மட்டுமே இருக்க விரும்பினார்கள் மற்றவர்களை அழித்து ஒழிக்கவே விரும்பினர் என்பது எல்லாம் சுத்தமான பொய் என்று சொல்லவியலாது. ஆனால் அனைத்து இயக்கங்களும் மற்றைய இயக்களை தங்களின் முரண்பாடுகள் காரணமாக அழித்தொழிக்க விரும்பின என்பது அவர்கள் ஓவ்வொருவரின் பதிவுகளையும் படிக்கும் பொழுது தெளிவாக உணர முடிகிறது. அனைத்து இணைப்பு முயற்சிகளிலும் அனைத்து இயக்கங்களுக்கும் உதவவும் தயாராகவே இருந்தனர். 

அதே போல் கருணாநிதி நான் முயற்சித்தேன் தோற்றுவிட்டேன் என்று சொல்லும் காலகட்டமான  1984, 85ம் ஆண்டு காலகட்டத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றாகவே இருந்தன. 1986ம் ஆண்டு டெசோ அமைபப்பை கலைத்துவிட்டார் ஆனால் அதன் பிறகும் ஒன்றாக இணைந்து தான் ஜுலை 28ம் தேதி யாழ்பாண தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றனர். ஆனால் சகோதர யுத்தம் என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார், இவருடைய வருத்தம் எல்லாம் ஒன்று தான், இவரின் தமிழக அரசியலுக்கு பலிகடா ஆகாமல் துணிந்து நின்று புலிகள் மறுத்தது தான்.


(தொடரும்....)

இதுவரை நான் படித்த நூல்களில் இருந்து தெரிந்து கொண்டவை வைத்தே இதை தொகுத்துள்ளேன். 
ஈழபோராட்டத்தில் நான் - புஸ்பராஜா (இ.பி.ஆர்.எல்.எஃப்)
ஈழபோராட்டத்தில் நான் - கணேஸ் அய்யர் (விடுதலை புலிகள், புதியபாதை)
The will to freedom - Adel Balasingam
War and Peace - Anton Balasingam
இலங்கையில் தமிழர் - முனைவர். முருகர் குணசிங்கம்
The History of Thamirabarani - Raja rathinam 
மேலும் பல இணைய தொகுப்புகள் அவைகளில் இருந்து எடுத்து எழுதினால் அதன் தொகுப்பை அந்த பதிவில் குறிப்பிடுகிறேன். 

No comments:

Post a Comment