Tuesday, August 28, 2012

செங்கொடி


செங்கொடி இந்த பெயர் என்னால் மறக்க முடியாது இனி எப்பொழுதும். சென்ற வருடம் ஜுன் மாதம் நினைவேந்தல் முடித்த பிறகு சிறிது சொந்த வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். அப்பொழுது தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் கருணை மனு நிராகரிக்கப் பட்டது. தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தோம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி பேச ஒரு அலோசனை கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்க முடிவு செய்தோம். அதே போல் செ.தெ. நாயகம் பள்ளியில் ஒன்று கூடினோம், பல போராட்ட வடிவங்களை விவாதித்தோம். அப்பொழுது தோழர் சினிவாசன் (பூவுலகின் நண்பர்கள்) சொன்னது தான் வாகன பிரசார பயணம். 

வாகனபிரசார பயணம் சென்னையிலிருந்து வேலூர் செல்வது செல்லும் வழியில் பிரசாரம் செய்து கொண்டே செல்வது என்பதை முடிவுசெய்து அதற்கான வேலைகளில் இறங்கினோம். 17ம் தேதி காவல் துறை அனுமதி மறுத்தது ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் திட்டமிட்டபடி பிரசார பயணத்தை தொடர்வது என்று முடிவு செய்து தொடங்கினோம். அது வரை எனக்கு காஞ்சி மக்கள் மன்றம் அமைப்பை பற்றி தெரியாது, காஞ்சிபுரத்தை அடைந்த பொழுது பறை அடித்து எங்களை வரவேற்றனர், அதன் பிறகு அவர்களும் எங்களுடன் வாகனபயணத்தில் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் தாண்டிய பிறகு நான் பின் தங்கினேன், வாகனங்கள் பழுதடைந்தால் அதை சரி செய்ய மெக்கனிக்குகள் இருவரை கூட அழைத்து சென்றிருந்தோம் அவர்கள் ஒரு ஆட்டோவில் இருந்தார்கள். நான் கடைசியாக வருவது யாரின் வாகனம் பழுதடைந்தாலும் மெக்கானிக்குகளுக்கு தகவல் கொடுப்பது எனது பொறுப்பு. அதனால் பின்தங்கி அனைவருக்கும் பின்னால் வர தொடங்கினேன்.

அப்பொழுது தான் கவனித்தேன் இரு பெண் தோழர்கள் டிவிஎஸ் 50 வாகனத்தில் வருவதை காஞ்சிபுரத்தில் இருந்து வேலூருக்கு கிட்டதட்ட மூன்று மணி நேர பயணம் 200 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டும். ஒரு டிவிஎஸ் 50 அவ்வளவு தூரம் வருமா என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது. வண்டி சிறிது புதிதாக இருந்ததால் வண்டி வேலூர் வரை வரும் என்று நினைத்து கொண்டு செல்ல தொடங்கினேன், அனைவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலூர் சென்று சேர்ந்தோம். சிறைசாலைக்குள் அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற பொழுது சிறைசாலையின் வெளியில் அனைவரும் கோசமிட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது செங்கொடி மிகவும் வேகமாக கோசமிட்டுக் கொண்டிருந்தார். 



அப்பொழுதெல்லாம் தெரியாது இவர் தான் செங்கொடி என்பது ஆனால் அதன் பிறகு தூக்கு தண்டனைகான தேதி அறிவிக்கப்பட்டு மூன்று வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை அறிவித்த பிறகு கோயேம்பேட்டில் இருந்து அங்கு நிகழ்வுகளை ஒழுங்கமைத்துக் கொண்டு ஊடகத்துறையினருக்கு தகவல் கொடுப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது தான் ஆகஸ்டு 28ம் தேதி மாலை செங்கொடியின் தீக்குளிப்பு செய்தி வந்தது. 

அப்பொழுது ஒரு தோழர் சொன்ன பொழுது தான் தெரியும் டிவிஎஸ் 50யில் அன்று வந்த பெண் தான் தோழர் செங்கொடி என்பது. அதன் பிறகு வாகன பிரசார படங்களை தேடி பார்த்த பொழுது தான் செங்கொடி யார் என்பதை அடையாளம் காண முடிந்தது. ஆகஸ்டு 28 நான் கோயம்பேட்டில் இருக்க வேண்டியதாகிவிட்டது அனைவரும் கிளம்பி காஞ்சிபுரம் சென்றனர். கோயம்பேட்டில் சென்கொடியின் உடலை எடுத்து வந்து வைப்பதற்கும் மக்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கான வசதிகளை செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருந்தேன். ஆனால் மனம் ஓர் நிலையில் இல்லாமலே அனைத்தையும் செய்து கொண்டிருந்தேன் மறு நாள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு வருகிறது அது என்ன ஆகும் என்ற ஒரு பதைபதைப்புடனே இருந்தேன். 

ஆனால் மறுநாள் நீதிமன்றதிற்கும் நான் செல்லவில்லை, கோயம்பேட்டில் தன இருந்தேன் அப்பொழுது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் வந்தது, அதற்கடுத்து இடைகால தடை என்ற தீர்ப்பும் நீதிமன்றத்தில் இருந்து வந்தடைந்தது. அனைத்தும் மகிழ்ச்சியை கொடுத்தது ஆனால் உள்ளே ஒன்று மட்டும் உறுத்திக்கொண்டிருந்தது செங்கொடி என்ற பெயர் மட்டும். அன்று ஒரு தற்காலிக வெற்றியாக கிடைத்த தீர்ப்பும் சட்டமன்ற தீர்மானமும் செங்கொடியின் உயிர் தியாகத்திற்கான விலையா? என்று கேட்டால் இல்லை 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை என்று செங்கொடியின் நினைவிடத்தில் கொண்டுவந்து தாயே இதோ உந்தன் பிள்ளைகள் என்று ஒப்படைக்கும் பொழுதே நமது வெற்றியை அடைவோம். 

No comments:

Post a Comment