மதுரையில் டெசோ மாநாடு நடந்தது அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று சொல்பவர்கள் மே 4ம் தேதி 1986ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் டெலோ இயக்கத்திற்கு இடையில் எதனால் பிரச்சனை என்பதை சொல்வதில்லை.
1986ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி விடுதலை புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் நடந்த ஒரு சண்டையில் புலிகள் இயக்கத் தளபதி அருணன் மரணம் அடைந்துவிட்டார். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக் ஏப்ரல் 28ம் தேதி யாழ்குடாவில் கடையடைப்பு நடைபெற்றது. அதாவது மதுரையில் டெசோ மாநாடு கூடுவதற்கு சரியாக 7 நாட்கள் முன்பு நடந்தது அருணன் மரணம் அதை ஒட்டி 28ம் தேதி கடையடைப்பு நடந்தது. ஆனால் ஏப்ரல் 23ம் தேதி டெலோ அமைப்பை சேர்ந்த 11பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர். விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர் இறந்தமைக்காக கடையடைப்பு நடத்துகிறீர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள் மதிப்பு இல்லையா என்று சொல்லி, டெலோ அமைப்பினர் 29ம் தேதியும் கடையடைப்பு நடத்த சொல்கிறார்கள். அதில் பங்கு கொள்ளாத கல்வியங்காட்டு பகுதி மக்கள் மீது, அதாவது எந்த மக்களுக்காக போராட வந்தார்களோ அவர்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அப்பொழுது அங்கு இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்த மேஜர் பஷிர் காக்கா மற்றும் லெப்டினண்ட் முரளி டெலோ இயக்கத்தினரை தடுக்கின்றனர். அவர்களை கைது செய்து டெலோ முகாமிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
இதுவே டெலோ அமைப்பிற்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் டெசோ மாநாடு மதுரையில் நடந்த பொழுது நடந்த பிரச்சனை. இந்த பிரச்சனையை முழுவதுமாக சொல்லாமல் மூடி மறைக்கின்றனர். இங்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதாக சொன்னவர்கள், ஈழத்தில் அதை கடைபிடிக்கவில்லை. சபாரத்தினத்தின் பழைய நண்பரான தளபதி லிங்கம் டெலோ இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றார். ஆனால் அவரை கொலை செய்தது மட்டுமில்லாமல் அவரின் கண்களையும் தோண்டி எடுத்துவிட்டனர். ஒரு சிங்கள இராணுவத் தளபதியை பிடித்து அவரின் கண்ணை நோண்டியிருந்தால் கூட குட்டிமணி, ஜெகன் படுகொலைக்கு பழிவாங்குவதாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் சகபோராளி இயக்கத்தின் தோழரை அதுவும் தங்கள் தலைவரின் நண்பரின் கண்களை இறந்த உடம்பிலிருந்து பிடுங்கும் சிங்கள இனவெறியர்கள் போன்று நடந்து கொண்டனர். இதன் பிறகே புலிகள் இயக்கமும் டெலோவுக்கும் இடையிலான மோதல் பெருமளவில் நடக்கிறது இதில் தான் சபாரத்தினம் கொல்லப்படுகிறார்.
இது ஒரு நடவடிக்கை புலிகள் இயக்கத்திற்கு எதிரானது, ஆனால் மக்களுக்கு எதிராக ஆயுதத்தை உபயோகித்ததை மறந்துவிடுகிறார்கள், மறைத்தும் விடுகிறார்கள். அதுவும் சக போராளி இயக்கத்தில் மரணம் அடைந்த ஒரு தோழருக்காக கடையடைப்பு நடத்தும் மகக்ளை, தங்கள் இயக்கத் தோழர்களுக்காக கடையடைப்பு நடத்தவில்லை என்ற பொறாமையின் கீழ் கோரிக்கை விடுத்து அதை செயல் படுத்தாத ஒரு பகுதி மக்களின் மீது தாக்குதலை நடத்தியதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். மேலும் டெலோ அமைப்பினர் சொந்த மக்கள் மீது ஆயுத பிரயோகம் செய்தது இது முதல் முறை அல்ல.
டெலோ அமைப்பில் சபாரத்தினத்திற்கு அடுத்த கட்டத்தில் தாஸ் மற்றும் பாபி இருந்தனர், இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளினால் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர். இவர்களை சமதானப் படுத்தி ஒன்றிணைத்து போராட வைக்க வேண்டிய சபா ரத்தினம் பாபியுடன் இணைந்து தாஸை கொலை செய்தார். ஆம் ஏப்ரல் மற்றும் மேயில் நடந்த பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 1986ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி பேச்சுவார்த்தை என்று யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு வரச் செய்து, அங்கு பாபியுடன் சேர்ந்து சபா ரத்தினம் தாஸ், மோகன் (முல்லை தீவு), காளி (பருத்தி துறை), கிசான்(திரிகோணமலை) பீட்டர் (வதிரி) சுட்டு கொன்றார். மருத்துவமனை மக்கள் இருக்கும் இடம் என்ற நினைப்பு கூட இல்லாமல் இந்திய அமைதிப்படை 1987ல் செய்த அதே அக்கிரமத்தை மருத்துவமனையில் துப்பாக்கிகளை முழங்கசெய்து தங்கள் பகையை தீர்த்துக் கொண்டனர், அதுவும் உள் இயக்கப் பிரச்சனைக்காக. இந்த துப்பாக்கி சூட்டில் முன்னால் நீதிபதி கிருபாகரனும் ஒரு பதின்ம வயது சிறுமியும் மரணம் அடைந்தனர். இதை கண்டித்து மறுநாள் மார்ச் 12ம் தேதி பொதுமக்களும் மாணவர்களும் இணைந்து ஒரு அமைதி ஊர்வலம் நடத்தினர் அங்கு சென்று ஊர்வலம் நடத்தக் கூடாது என்று டெலோ இயக்கத்தினர் மிரட்டினர். தொடர்ந்து செல்ல முயன்ற மக்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தினர், மக்கள் காயங்களுடன் தப்பினர். இப்படி எந்த மக்களின் விடுதலைக்காக போராட வந்தார்களோ அவர்களின் மீதே போர் தொடுத்த இயக்கம் தான் டெலோ அமைப்பு.
இதுமட்டுமல்ல 1985ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்தது டெலோ அமைப்பு தான். இதை அவர்களின் உறுப்பினரான பழனிவேல் தங்கராசா என்பவர் டெலோ புலிகள் மோதல் நடந்த 1986 மே மாதம் கைது செய்யப்படுகிறார். பாபி உத்தரவிட்டார், ஏன் என்று கேட்டபொழுது அரசியல் நகர்வு தலைமையின் உத்தரவு என்று மட்டும் சொல்லியிருக்கிறார். கொலை செய்ய செல்ல ஒரு பழுப்பு நிற மோரிஸ் கார் கொடுக்கப்பட்டுள்ளது சிட்டி பாபு, வாலண்டைன் மற்றும் ரஞ்சித் ஆகியோருடன் நானும் முதலில் ஆலாலசுந்தரம் வீட்டுக் சென்று அவரை பலவந்தமாக காரில் ஏற்றிக் கொண்டு அடுத்து தர்மலிங்கம் வீட்டிற்கு சென்று ஆலாலசுந்தரம் பேச விரும்புகிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றி சென்று முதலில் ஆலாலசுந்தரத்தை பின்னர் தர்மலிங்கத்தையும் சுட்டு கொலை செய்தோம் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். இந்த இரண்டு கொலைகள் நடந்த பொழுது புலிகள் இயக்கத்தின் மீது பலி சொல்லப்பட்டது. ஆனால் பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் புஸ்பராஜாவும் டெலோ இயக்கம் தான் இவர்களை கொலை செய்தது என்பதை தன் புத்தக வாயிலாக உறுதி செய்தார்.
இந்தியாவின் “ரா” அமைப்பு தான் போராளி இயக்கங்களுக்கு பயிற்சி அளித்தது, இந்திராவின் நேரடி காரியதரிசியாக இருந்த ஜி. பார்த்தசாரதி இருந்தவரை இந்திய அமைப்பின் நிலைப்பாடுகள் சரியாகவே இருந்தது. இந்திரா இறந்து அடுத்த மாற்றங்கள் வந்த பொழுது இந்திய அரசின் ஈழம் குறித்த நிலைப்பாடுகள் மாறுகிறது. இதில் போராளி இயக்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேலையை தொடர்ந்து “ரா” செய்துவந்தது, அதற்கு பழிகடாவானவர் பலர், ஈ.பி.ஆர்.எல்.எஃப் தான் கொஞ்சம் பலியாகமல் இருந்தது ஆனால் அதுவும் ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தியாவின் கைப்பாவையாகவே மாறியது, இவையெல்லாம் வரலாறு யாராலும் மறைக்க முடியாது. ஆனால் மேலே குறிப்பிட்ட எந்த மக்களுக்காக போராட வந்தார்களோ அந்த மக்களின் மீது ஆயுதங்களை பயன்படுத்திய அனைத்து சம்பவங்களின் போதும் சபாரத்தினம் ஈழத்தில் களத்தில் தான் இருந்தார் அனால் இந்த சம்பவங்களின் போது பிராபகரன் சென்னையில் தான் தங்கியிருந்தார். களத்தில் நடந்த அனைத்து கொலைகளின் போதும் களத்திலேயே நின்றவர் தான் சபாரத்தினம். இப்ப யார் இந்த சபாரத்தினம் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்..
No comments:
Post a Comment