Saturday, May 17, 2014

2014 தேர்தல் ஓர் பார்வை

2014 தேர்தலுக்கு முன்பாகவும் சரி அதன் பின்னும் சரி யாரும் இப்படி ஒரு முடிவு வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அனைத்து கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆதிமுகவிற்கு 20, 25, 27 தொகுதிகள் என்று தான் கூறிவந்தன. ஆனால் அனைத்தையும் தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்தமாக 37 தொகுதிகளில் ஆதிமுக வெற்றிப் பெற்றுள்ளது என்றால் அதன் பின்னான கரணங்கள் ஆராயப்பட வேண்டும். முதலில் அனைத்து கட்சிகளும் வாங்கிய வாக்கு சதவீதம் 

ஆதிமுகவின் ஓட்டு சதவீதம் 44%
திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 26.3%
பாஜக கூட்டணி 20.6%.

மேலே குறிப்பிட்டு இருப்பது 2014ன் வாக்கு விகிதம். ஆனால் எப்பொழுதுமே திமுகவின் வாக்கு வங்கி 26% ஆதிமுகவின் வாக்கு வங்கி 29% இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக தமிழக தேர்தலில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு சதவீதம். இதில் இந்த வாக்கு வங்கியை சேராத மக்கள் ஒவ்வொரு முறையும் தங்களது வாக்குகளை அடுத்து நமக்கு யார் நல்லது செய்வார் என்று முடிவெடுத்து வோட்டுபோடுவார்கள் அதனடிப்படையில் வெற்றி பெறுபவர் மாறி மாறி வந்தனர். ஆனால் இந்த முறை ஆதிமுக எந்த கூட்டணியும் இல்லாமல் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. திமுகவும் மிகப்பெரிய கூட்டணி என்ற ஒன்றில்லாமல் போட்டியிட்டது.

இதில் ஆதிமுகவின் வாக்கு வங்கி என்பது 29% தான் ஆனால் அதை தாண்டி 44% வாக்கு வாங்கி வெற்றி பெற்றுள்ளார். இது வாக்கு வங்கி சேராத மக்களின் வாக்குகள். மேலும் சட்டசபை தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் பெரும்பாலும் ஆட்சிகலைப்பு போன்றவைகள் நடைபெற்றால் ஒழிய 1996வரை ஒரே சமயத்தில் தான் வரும். ஆனால் அது உடைந்து இரண்டும் வெவ்வேறு காலங்களில் நடக்க ஆரம்பித்த பிறகு ஆளும் மாநில அரசின் செயல்பாட்டை வைத்து தேர்தலில் வாக்குகள் மாறி வந்தது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக   1991-96ல் ஜெயலலிதாவின் ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கருணாநிதி 96ல் பெரும்பான்மை பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். அதே சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் United Front எனும் கூட்டணியாக திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), மற்றும் சிபிஐ ஆகியோர் அடங்கிய கூட்டணியில் தமிழக பாரளுமன்ற தொகுதிகள் 39 இடங்களையும் கைப்பற்றினர். ஆனால் 1996 இவர்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தேவகவுடா தலைமையிலான அரசு ஒரு வருடம் அதன் பிறகு ஐ.கே குஜ்ரால் தலைமையில் ஒருவருடமும் ஆட்சியில் இருந்து, அதன் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டது. 1998ல் பாராளுமன்ற தேர்தல் மறுபடியும் நடந்தது. 1996க்கு பிறகு சட்டமன்றம் பாராளுமன்ற தேர்தல்கள் இருவருட இடைவெளியில் தான் நடக்கிறது. 

1996 தேர்தலில் ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழாக தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தார், அதாவது போட்டியிட்ட 160 தொகுதிகளில் 4 தொகுதிகள் மட்டுமே வெற்றியடைந்தார். இப்படி மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து நின்ற ஜெயலலிதா இரண்டே ஆண்டுகளில் 1998 பாராளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் வெற்றிபெற்றார், இதன் காரணம் அன்று ஆண்டு கொண்டிருந்த திமுக அரசின் மீதான வெறுப்பு. 1998 தேர்தலில் ஜெயலலிதா இருந்த பிஜேபி கூட்டணி ஆட்சி அமைத்து ஜெயலலிதாவாலேயே கவிழ்க்கப்பட்டது, மறுமுறை 1999ல் தேர்தல் நடந்தது இதில் திமுக, பாஜக ஒரே கூட்டணியில் நின்றன இதில் 26 இடங்கள் பிஜேபி, திமுக கூட்டணியும் 13 இடங்கள் அதிமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும் கிடைத்தது. இதன் பிறகு தேர்தல் என்பது மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அது 2001ம் ஆண்டு நடைபெற்றது இதில் ஜெயலலிதாவின் ஆதிமுக கட்சி ஆட்சியை கைப்பற்றியது.


2004ல் பாராளுமன்ற தேர்தல் இதில் கருணாநிதி 40ம் நமக்கே என்று பாண்டிச்சேரிஉட்பட அனைத்து எம்பி தொகுதிகளையும் அறிவித்து. 40 இடங்களில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தமாஅன் 39 தொகுதிகளை வெற்றி பெற்றார். இதற்கு அன்றைய ஆளும் அதிமுகவின் மீதான வெறுப்பே காரணம்.  அதாவது 2001 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சியின் மீதான வெறுப்பாக 2004 தேர்தலில் அதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சர் பதவியெல்லாம் வகித்த திமுக அந்தர் பல்டி அடித்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 2004 தேர்தலில் 39 தொகுதியையும் கைப்பற்றியது. இப்படி தொடர்ந்து ஆளும் மாநிலக் கட்சியின் வெற்றியாக இல்லாமல் எதிர்கட்சியாக இருப்பவர்களே 1998லிருந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் மத்தியில் யார் ஆட்சி என்பதை தமிழக மக்கள் கவலைப்படுவதில்லை தமிழகம் சார்பாக யார் பாராளுமன்றம் போவது என்பதையே பார்த்து வருகின்றனர்.

2009 தேர்தலிலும் இதே தான் நடந்தது அதற்கு முதல் தேர்தலில் 40ம் நமக்கே என்று வெற்றி பெற்றவர்கள் இப்பொழுது 2006 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது, அதற்கு முதல் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தக்கவைத்திருந்த கட்சி மிக எளிதாக 2009 தேர்தலில் அதே நிலையில் வெற்றிபெற்று இருக்கலாம் ஆனால் இந்த தேர்தலில் 27 இடங்கள் திமுகவிற்கும் 12 இடங்கள் அதிமுகவிற்கும் என்று மாறியது. இப்படி ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மை ஏற்படுவதும் அதன் கீழாக பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பொறுத்து அமையும் ஆனால் அதை ஒட்டுமொத்தமாக உடைத்து கூட்டணிகள் என்பது கூட முக்கியம் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் ஒரே கட்சி தமிழக வரலாற்றில் இது வரை யாருமே பெறாத வெற்றியை தமிழக மக்கள் கொடுக்க என்ன காரணம் என்பது கவனிக்க பட வேண்டிய ஒன்று.

                                                         
எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் மக்களின் மனதில் நிறைந்து இருந்த காலத்தில் கூட இவ்வாறான ஒரு முடிவு எப்பொழுதும் மக்கள் கொடுத்தது இல்லை, 1980ம் ஆண்டு சரண் சிங்கின் அரசு கவிழ்ந்து நடந்த தேர்தலின் போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார் ஆனால் அப்பொழுது நடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பிறகு ஆட்சி அமைத்த காங்கிரஸை வைத்து மக்களின் நம்பிக்கையை எம்.ஜி.ஆர் இழந்துவிட்டார் என்று 1980ல் தமிழக எம்.ஜிஆரின் ஆட்சியை கருணாநிதியும் இந்திரா காந்தியும் கலைத்தனர். ஆனால் காமராஜருக்கு பின்னர் மறுபடியும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர் ஆனால் அவர்கூட இப்படி தனியாக நின்று பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களை கைப்பற்றியதாக எந்த சரித்திரமும் இல்லை.

2014 தேர்தல் என்று இல்லை எந்த தேர்தலிலும் தமிழக மக்களைப் பொறுத்த வரையில் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்து வாக்களித்தது இல்லை. தமிழ்நாட்டில் இருந்து யார் போகவேண்டும் யார் பேசினால் போதும் என்று நினைக்கிறார்களோ அவர்களையே தேர்ந்து எடுக்கிறார்கள் அதுவும் தங்களின் மாநிலத்தில் நலனை சார்ந்து மட்டுமே. இங்கு ஆட்சியில் இருக்கிறவர் அங்கு போய் பேச வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை எதிர்கட்சியாக நின்றவர்களை வெற்றி பெறச்செய்து அனுப்பியுள்ளனர்.

இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கு மேலும் ஒரு வேலையைக் கொடுத்துள்ளது, இது தமிழர் நலன் சார்ந்து தமிழக சட்டசபையில் தமிழக மக்களின் தீர்மானமாக இயற்றப் பட்ட தீர்மானங்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது இது வரை மத்திய அரசில் பங்கு பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை இனி தமிழகத்தில் தமிழ் மக்களின் தீர்மானங்களை பேசும் பெரும் பொறுப்பையும் கொடுத்து அனுப்பியதாகவே தோன்றுகிறது. 

No comments:

Post a Comment