Sunday, May 11, 2014

மதுரை வீரன் வரலாறும் திரிபுகளும் ஏன்??



மதுரைவீரன் குறித்த வரலாறுகள் பல அவரின் பிறப்பினைப் பற்றி பேசுவதில்லை ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் அவரை ஒரு அரசிளங்குமரனாக தான் சித்தரித்தார்கள். தமிழ் திரைப்படத்தை ஆதாரமாக சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம் பதில் என்ன என்று அருந்ததிய மக்களே சொல்லியதை பின்னால் சொல்கிறேன்.

திருச்சி மாவட்டத்தின் ஒரு பாளையத்தை பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார் அந்த மாவட்டத்தில் சின்னான் மற்றும் செல்லி என்ற அருந்ததிய தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த மகன் தான் வீரன் ஆம் தாய் தந்தையர் வைத்த பெயர் வெறும் வீரன் என்பது மட்டும் தான். வீரன் பெயருக்கு ஏற்றார் போல் வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குகிறான். அப்பொழுது பொம்மண்ணன் மகள் பொம்மி பூப்பெய்துகிறாள், கம்பளத்தார் வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே மந்தையில் குடிசையிட்டு அங்கு தங்க செய்கின்றனர். இப்படி வைக்கப்படும் பெண்களை இரவில் காவல் காப்பது அருந்ததியர்களே, அவ்வழக்கத்தின் படி சின்னான் வயதான காரணத்தால் உடல்நிலை ஒத்துழைக்காததாலும் வீரனை காவலுக்கு அனுப்புகிறார். அங்கு வீரனை கண்ட பொம்மியும், பொம்மியை கண்ட வீரனும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர்.

இந்த விசயம் பொம்மண்ணனுக்கு தெரிய வரும்பொழுது வீரனும் பொம்மியும் பாளையத்தை விட்டு வெளியேறுகின்றனர். பொம்மண்ணன் தனது படை வீரர்களுடன் இருவரையும் துரத்துகிறார் அப்பொழுது நடந்த சண்டையில் பொம்மண்ணன் கொல்லப்படுகிறார். அதன் பிறகு பொம்மியை அழைத்துக் கொண்டு திருச்சி செல்கிறார் திருச்சியில் அப்பொழுது விஜய ரங்க நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். அவரது படையில் வீரனாக இணைந்து தனது திறமையினால் பல பதவிகளை பிடித்து வருகிறார். இதே காலத்தில் தான் திருமலை நாயக்கர் (1623- 1659) மதுரையில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு நடக்கும் திருட்டு வழிப்பறி போன்றவைகளை அடக்க ஒரு நல்ல தளபதி வேண்டும் என்று விஜய ரங்க நாயக்கரிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையை ஏற்று விஜய ரங்கரும் வீரனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்.

பொம்மியுடன் மதுரைக்கு வந்த வீரன் தனக்கு ஒதுக்கப்பட்ட வீரர்களுடன் இணைந்து மதுரையை சுற்றி நடந்த திருட்டு வழிப்பறி கும்பல்களை அடக்குகிறார். இதைக் கண்டு மகிழ்ந்த திருமலை நாயக்கர் மதுரைவீரன் என்று பட்டம் அளித்ததாக சொல்கின்றனர். இந்த வேளையில் தான் திருமலை நாயக்கரின் 200 காமகிளத்திகளில் ஒருவரான வெள்ளையம்மாவை சந்திக்கிறார். இது அரசனின் காதுகளை சென்றடைகிறது அவர் மதுரை வீரனை மாறு கால் மாறு கை வாங்க உத்தரவிடுகிறார். கை கால் வெட்டப்பட்ட மதுரைவீரன் உயிரும் பிரிகிறது இதைக் கேளிவிப்பட்டு வந்த பொம்மியும் வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறுகின்றனர். இது தான் மதுரை வீரன் வரலாறு. இது மதுரை வீரன் குறித்த நாட்டுப்புற பாடல்களில் மட்டும் தொகுக்கப்பட்ட வரலாறு.


ஆனால் இந்த வரலாறு திரிக்கப்பட்டது வீரன் காசிராஜனுக்கு பிறந்ததாகவும் அவன் இருந்தால் நாட்டுக்கு ஆகாது அதாவது கொடி சுற்றி பிறந்த குழந்தை என்று ஆற்றில் விட்டதாகவும் அந்த குழந்தையை எடுத்து சின்னானும் செல்லியும் வளர்த்ததாகவும் சொல்கிறார்கள். இதில் பொம்மண்ணனின் பெண் வீரனுடன் வாழ்ந்தாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சனாதன தர்மத்தினர் அதை உடைக்கும் விதமாக பொம்மியை விட உயர்ந்த சாதியை சேர்ந்தவர் வீரன் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் ஒரு விசயம் என்னவென்றால் காசி ராஜன் காசி ஆற்றில் விட்ட குழந்தை திருச்சி மாவட்ட ஆற்றுக்கு எப்படி வந்தது என்று கேட்க கூடாது, அன்றே இன்று நாம் பேசும் நதி இணைப்புக்கான அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது என்று நாமாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மதுரவீரனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட இடம் இருக்கிறது என்ன இடம் மட்டும் கோயில் சுற்று சுவருக்கு வெளியே. இதே போல் அருந்ததிய மக்களின் பல தெய்வங்கள் பல பிற்படுத்தப் பட்ட மக்களின் கோயிலிலும் இடம் உண்டு ஆனால் கோயிலுக்குள்ளே கிடையாது கோயிலுக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டி தான் சுற்று சுவரே இல்லாவிடினும் கோயில் எனும் பகுதியை தாண்டியாவது தான் வைப்பார்களே தவிர கோயிலுக்குள் இந்த அரச மகன் மதுரை வீரனுக்கு அனுமதி பல இடங்களில் மறுக்கப்பட்டே உள்ளது ஒன்றிரண்டு இடங்களைத் தவிர ஆனால் அது மதுரைவீரன் வாழ்ந்த பகுதியாக இல்லாமல் மிகவும் தள்ளி இருக்கும் பகுதியாக இருக்கும்.
சாதியம் என்பது தனக்கு கீழான சாதியை மட்டும் தான் ஏற்றுக் கொள்ளாது ஆனால் தனக்கு மேற்பட்ட சாதியுடன் உறவு கொள்ள என்றுமே தயராக இருக்கும், அது தான் மதுரைவீரன் கதையில் ஏற்பட்ட திரிபுகள் ஊடாக நமக்கு தெரிவது, அதாவது பொம்மியின் கணவன் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்வது.  ஆனால் இதைப் பற்றி அருந்ததிய மக்களின் நிலை என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்வது "எம்.ஜி.ஆர் பொய் சொல்வாரா, அவர் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்” என்கின்றனர். அருந்ததிய மக்கள் என்றுமே இப்படித்தான் யாரோ என்றோ கொடுத்த வாக்கிற்காக இன்று வரை மற்றொரு சாதியினர் தங்கள் கிராமத்திற்கு வந்தால் அவர்கள் ஊரில் தங்கும் அத்தனை நாளும் அவர்களுக்கு உணவளித்து, அவர்கள் ஊரை விட்டு செல்லும் பொழுது வீட்டுக்கு வரி போட்டு அவர்கள் செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்புவார்கள்.

1 comment: