Thursday, May 8, 2014

மாட்டுப் பொங்கல் எனும் திட்டி சுத்துதல்


காரைக்குடி பக்கத்தில் கண்டனூர் கிரமம் என்று சொல்ல முடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு ஊர். எனென்றால் கிராமம் என்பதற்கு அடையாளமாக நமக்கு மனதில் பதிந்து இருப்பது எல்லாம் ஓட்டுவீடுகளும் குடிசைவீடுகளும் நிறைந்த சாலைகள் தான் ஆனால் இந்த காரைக்குடியில் கிராமங்கள் என்று அழைக்கப்படும் அத்தனை ஊரிலும் மச்சுவிட்டில் இருந்து குச்சுவீடு வரை அனைத்தும் இருக்கும், அதிலும் ஒவ்வொன்றும் அரண்மனை போன்ற தோற்றத்தடுன் மூன்று கட்டு வீடுகள் என்பது குறைந்த பட்ச அளவீடாக இருக்கும் இதை கிராமம் என்ற சொல்ல முடியும் இருந்தாலும் கிராமமே இவைகள். முதன் முறையாக நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது தான் ஊருக்கு கூட்டிச் சென்றார்கள், தரையோடு இருக்கும் கிணறுகளின் தயவால், அது வரை ஊருக்கு கூட்டிச் சென்றது இல்லை.  ஒரு பொங்கல் அன்று மதுரையில் வீட்டில் பொங்கல் வைத்து மதியம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மாலைக்குள் ஊர் போய் சேர்ந்தோம் சின்ன ஆயாவின் வீட்டில் தான் இரவு தங்கல் அது ஒரு குடிசை வீடு, சாணி மொழுகுவது என்றால் என்ன என்று அந்த வீட்டில் தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.


இரவு வீட்டின் வாசலிலேயே பாய் போட்டு படுத்து உறங்கினார்கள் என்னை மட்டும் வீட்டுக்குள் படு, காலை பனி உனக்கு ஆகாது என்று வீட்டுக்குள் தள்ளிவிட்டனர், வீட்டுக்கு கடைகுட்டியா பிறந்தால் இது ஒரு தொல்லை. மின்விசிறியோ மின் விளக்கோ எதுவும் இல்லாத ஒரு வீடு, ஆனால் காற்றோட்டத்திற்கு எந்த குறையும் இல்லை. காலையில் 5 மணிக்கு எல்லாம் உருட்டும் சத்தங்கள் எழுந்து உட்கார்ந்தேன், பல்லு விளக்கும் முன்பே காப்பிதண்ணி குடி என்று கையில் டம்ளரை திணித்தார் அழகு சித்தி. குடித்துக் கொண்டிருக்கும் பொழுது சீக்கிரம் கிளம்பு கம்மாயில் குளிக்க போகலாம் என்றார் அம்மா. முதல் முறை கம்மாய் குளியல் நீச்சல் தெரியாது அம்மா நீச்சல் அடிப்பதை வேடிக்கை பார்த்தேன். அம்மாவே நீச்சலும் கத்து கொடுத்தார் கைகளில் படுக்கப் போட்டு, கற்றுக் கொண்டேனோ இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் நல்லா தண்ணி குடிச்சேன். அதன் பிறகு வீட்டிற்கு வந்தோம் அதற்கு முன்பாக அங்கு எல்லாம் தயராக இருந்தது. வெத்தெலை பாக்கு தட்டு தாம்பாளம், தேங்காய் என்று, ஆயா ஒரு பசு மாடு வளர்க்கிறார் மேலும் அது ஈன்ற காளை கன்னுகுட்டி வேறு இருந்தது. அவைகளை சித்தியும் ஆயாவும் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தனர் கிணற்றில் நீரிறைத்து. சரி கிணத்தில் நீர் இறைக்கலாம் என்று போனால் அந்த பசு மாடு முட்ட வந்தது தான் மிச்சம், நானும் ஓடி தள்ளி வந்து நின்று கொண்டேன்.


அப்புறம் தெருவில் மூன்று வீட்டிலோ நான்கு வீட்டிலோ தான் மாடு வளர்த்தார்கள் ஒவ்வொரு வீடாக திட்டி சுத்த போகிறோம் என்று சிறுவர்கள் இளைஞர்கள் என்று ஒரு கூட்டமாக கிளம்பினார், என்னை அவர்களுடன் போகச் சொன்னார்கள் முதல் நாள் மாலையே எதிர்த்த வீட்டில் இருந்த செல்லப்பன் நட்பாகிவிட்டான், சரியென்று அவனுடன் ஒட்டிக் கொண்டேன் முதலில் ஒரு விட்டுக்கு சென்றோம் அவர்கள் சூடம் கொளுத்தி மாட்டிற்கு காட்டினார்கள் அப்புறம் அங்கு வைத்திருந்த பொங்கப்பானையில் இருந்து கூட்டாஞ்சோறை மாட்டிற்கு கொடுத்தார்கள் அதன் பிறகு அனைவரும் கையில் வைத்திருந்த தப்படித்துக் கொண்டு, சங்கு ஒன்றை ஊதிக்கொண்டு மாடுகளை சுற்றி வந்தோம் அப்பொழுது மாடுகள் மிரண்டு கொழுவில் இருந்து அறுத்துக் கொள்ள முயன்றன் வீட்டினர் மூன்று சுற்றுகள் முடிந்ததும் மாட்டை அவிழ்த்துவிட்டனர். மாட்டின் கழுத்தில் கரும்புத் துண்டுகள், பனங்கிழங்கு துண்டுகள் போன்றவை கட்டி விடப் பட்டிருக்கும் வாசல் வழியை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் சுற்றி நின்ற பொழுது வாசலை நோக்கிய மாட்டின் கழுத்தில் இருந்த இந்த பனங்கிழங்கு மாலையை பறித்தெடுத்தனர் அத்தனை பேரும் நானும் எங்கிட்டு ஓடுவது என்று தெரியாமல் ஓடி வந்த கன்னுகுட்டி கழுத்தில் இருந்து உருவினேன். அடுத்து சின்ன ஆயா வீட்டில் அங்கு திட்டி சுத்தி முடிச்சு மாட்டை அவிழ்த்து விடும் பொழுது பலர் விலகினர், ஒருத்தர் வேறு டே அதுகிட்ட போகாதீங்கடா முட்டி தூக்கிப்புடும் மூணு நாளைக்கு எந்திரிக்க முடியாது என்று வேறு குரல் கொடுத்தார். அப்படியும் ஒரு பையன் வாசலில் நின்று கழுத்தில் இருந்த பனங்கிழங்கு மாலையை உருவிட்டான்.

பிறகு கடைசியாக செல்லப்பன் வீட்டில் திட்டி சுற்றினோம், ஆரம்பிக்கும் முன்பே செல்லப்பன் காதை கடித்தான் ஏய் ஹரி ஜாக்கிரதை திட்டி சுத்தி முடிச்சவுடனே சிட்டாக் கிளம்பிடும் மஞ்சள் தண்ணி ஊத்த ஆரம்பிச்சுடுவாளுகடா ஜாக்கிரதை என்றான். அன்று நான் வேற அழகா வெள்ளை டீசர்ட் வேறு போட்டிருந்தேன் என் வீட்டுக்கு ஓடிறலாம் என்று பார்த்தால் அங்க என் சித்திகள் அண்டவை தூக்கிட்டு வந்து வாசலில் வைத்தார்கள், பார்த்தவுடன் புரிந்தது முடிந்தது நம்ம கதை போய் சட்டையை மாத்த கூட நேரம் இல்லையே என்று யோசிக்கும் பொழுது நண்பனின் தங்கை அண்ணே இன்னைக்கு என்னிடம் மாட்டினீங்க என்று நின்று கொண்டிருந்தவள் கிழே குணிந்து ஒரு சிறிய பானையை எடுத்து காண்பித்தாள் முடிஞ்சது நம்ம டீசர்ட் கதி அதோ கதி தான் என்று நினைத்தேன். மூன்றாவது சுத்து சுத்தும் பொழுதே செல்லம்மா பானையை எடுப்பதை பார்த்தவன் விவரமாக மெதுவாக பசங்க பின்னாடி தங்கி மாட்டை அவிழ்த்து விட்டவுடன் மாடு ஓடியாதா இல்லையா என்று எனக்குத் தெரியாது வயக்காட்டில் இருக்கும் பிள்ளையார் வடத்தை நோக்கி ஓடினேன் அப்படியும் யார் மீதோ ஊற்றிய தண்ணீர் என்னை குளிப்பாட்டியது சரிடா ஹரி விடு என்று மனசை தேத்திக் கொண்டாகிவிட்டது.

இது தான் நான் பார்த்த முதல் மஞ்சுவிரட்டு, அன்று மதிய உணவின் போது பெரியய்யாவிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அவருக்கு ஊருக்குள் பெயர் சுள்ளான் அய்யா, சுள்ளான் என்றால் எறும்பு அவரை யாரும் எதுவும் சொல்ல முடியாது. சொல்வதற்குள் வேலையை முடித்துக் கொண்டு வந்து நிற்பார், ஆயா ஹரி வந்திருக்கான் நண்டு என்று பேச ஆரம்பிப்பார் அதற்குள் சைக்கிளை எடுத்திருப்பார் 3கி.மீ தள்ளியிருக்கும் சாலையை நோக்கிச் சென்றிருப்பார் அதனாலேயே அவருக்கு சுள்ளான் அய்யா என்று பெயர் வந்தது என்று செல்லப்பன் சொன்னான். மதியம் சாப்பிடும் பொழுது அய்யாவிடம் என்னய்யா இது தான் ஜல்லிக்கட்டா சினிமாவில் எல்லாம் என்னவோ ஹிரோவும் மாடும் மட்டும் நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதாக காட்டுவார்களே அந்த மாதிரி எல்லாம் கிடையாதா என்று கேட்ட பொழுது தான் சொன்னார். மாடு பிடிப்பதில் இருக்கும் வித்தியாசங்களை.


மஞ்சுவிரட்டு என்பது வீடுகளில் நம் உபயோகத்திற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தும் மாடுகளை அன்று அவை நமக்கு செய்த உதவியை நினைவு கூர்ந்து அவைகளை அலங்கரித்து வணங்கி, அவை சுதந்திரமாக திரிய விரட்டி விடுவது. இது பெரும்பாலும் மந்தைகளில் நடந்தது பிறகு ஒவ்வொரு வீட்டின் தொழுவத்தில் நடைபெற ஆரம்பித்தது. மாடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட பிறகு மாட்டுத் தொழுவத்திற்கு மாற்றிக் கொண்டனர். விவசாய உபகரணங்கள் அதிகரித்து மாடுகளின் தேவை குறைந்த பிறகு இத்தகைய நிலைக்கு சென்றது.

ஏறு தழுவுதல் இதற்கான மாடுகள் தனியாக வளர்க்கப்படுபவை இவைகள் பெரும்பாலும் பெண்களே வளர்ப்பார்கள், ஆண்களை அருகில் விடாமல் வளர்ப்பார்கள். இவை ஏறுதழுவுதல் என்ற விளையாட்டின் நோக்கிற்காக மட்டுமே வளர்க்கப்படுபவை இதை விவசாயத்திற்கோ அல்லது போக்குவரத்திற்கோ பயன்படுத்துவதில்லை. இவைகளை கோயிலுக்கு அருகே வாடிவாசல் என்ற பகுதி இருக்கு இலை அல்லது அமைப்பார்கள் அந்த வாடிவாசலை விட்டு வெளியில் வந்தால் ஒரு பெரிய தெரு ஊருக்கு வெளியே செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த வாடிவாசலை விட்டு வெளியில் வரும் காளைகளை இளைஞர்கள் அதன் திமிலை தழுவிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும் அப்படி சென்றார்கள் என்றால் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதையே ஏறு தழுவுதல் என்பார்கள்.

ஜல்லிகட்டு என்பது ஊர் மைதானத்தில் சுற்றிவர தடுப்புகள் அமைத்து அதில் காளையை அவிழ்த்து விடுவார்கள் அப்படி வரும் காளையை இளைஞர்கள் அடக்க வேண்டும் ஆனால் இந்த முறை இப்பொழுது பெரும்பாலும் குறைந்துவிட்டது பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் சிராவயலில் மட்டும் நடக்கிறது, மேலும் வேறு எந்த ஊரிலாவது யாராவது முன்வந்து இத்தகைய போட்டிகளை நடத்தினால் தான் உண்டு அது எப்பொழுதாவது நடைபெறும் என்றார். அது தான் உங்க சினிமாவில் வருவது ஆனால் அது ஒத்தைக்கு ஒத்தை எல்லாம் கிடையாது 10 பேருக்கு மேல் கூட களத்தில் சுற்றி நின்று காளையை விரட்டி அதன் திமிலை பிடிக்க முயற்சிப்பார்கள் திமிலை பிடித்து அது அந்த சுற்று அரணை தாண்ட வலியில்லாமல் பிடித்தவரை உதறித் தள்ள முயற்சிக்கும் அந்த முயற்சியை முறியடித்து காளை களைத்துப் போகும் வரை பிடித்து நிற்பவரே வெற்றிபெற்றவர் என்று அறிவிக்கப்படுவார் என்றார்.

இந்த விளையாட்டுகள் அனைத்தும் விவசாயத்தை முடித்துவிட்டு அறுவடையை வீட்டுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது மட்டுமில்லை தனக்கு இந்த விளைச்சலில் உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாகவும். உழைத்து உரமேறிய தனது தினவெடுத்த தோள்களை போருக்கு தயார் செய்யும் நோக்கிலுமே நடந்து வந்துள்ளது, அதாவது உழைப்பின் வேகத்தில் எதிரியுடன் மல்லுக்கட்டும் தைரியத்தை இழந்துவிட்டோமா இல்லை இன்னும் தைரியம் இருக்கிறதா என்பதை பரிசோதனையாக தெரிந்துகொள்வது, தன்னை விட பல மடங்கு ஆற்றல் வாய்ந்த காளையை தழுவிக்கொண்டு பயணிப்பது என்பது இதன் அடிப்படையிலேயே. அதன் ஆற்றலுக்கு ஈடுகொடுத்து விடாப்பிடியாக நிற்கும் தன் மனதைரியத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரு போருக்கான தயாரிப்பு முறையே ஜல்லிக்கட்டு என்று சொன்னார்.

ஆனால் இன்று நாம் ஜல்லி கட்டு என்று ஏறுதழுவுதலையே அழைத்துக் கொண்டிருக்கிறோம், அலங்காநல்லூர், பாலமேடு என்று அனைத்துமே ஏறு தழுவுதல் என்ற அடிப்படையிலேயே நடைபெறுகிறது. சிராவயலில் ஜல்லிகட்டு நடப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அரண் அமைத்து நடக்கிறதா இல்லை ஏறுதழுவுதல் முறையில் நடக்கிறதா என்பது தெரியவில்லை. 

No comments:

Post a Comment