Monday, June 30, 2014

With you With out You திரையிடல் நிகழ்வில் நடந்த உண்மைகள்.



நம் தமிழக கிராமங்களில் வீடுகளின் திண்ணையில் ஒரு மண்பானையில் தண்ணீரும் எடுத்து பருக ஒரு டம்ளரும் இருக்கும். யார் வீட்டு கதவை தட்டி தண்ணீர் கேட்டாலும் கொடுப்பார்களே ஏன் இப்படி வெளியில் வைத்திருக்கிறார்கள், இது எதற்காக என்ற கேள்வி சிறு பிள்ளையில் வந்த பொழுது எனது அய்யாவிடம்(தாத்தா) கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் நம்மை பிடிக்காதவர் நம் வீட்டை கடந்து செல்லும் பொழுது அவருக்கு தாகம் ஏற்பட்டால் வீட்டின் கதவை தட்டிக் கேட்க கூச்சப்படுவார், ஆனால் இப்படி வெளியில் வைத்துவிட்டோம் என்றால் அவரே எடுத்து குடித்துவிட்டு போகலாம், நம் வீட்டை கடக்கும் பொழுது அவர் தாகத்துடனே கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றார். இப்படி உலகிற்கே விருந்தோம்பலை கற்று கொடுத்த நமக்கு இன்று விருந்தோம்பல் கற்று கொடுக்கப்படுகிறது. ஆம் பிரசன்ன விதகனேவின் திரைப்படம் அதன் பின்னாலான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இன்றைய இந்துவில் விருந்தோம்பலைப் பற்றி நமக்கு வகுப்பு வேறு எடுத்திருக்கிறார்கள். 

பிரசன்ன விதகனேவின் With You With out you பற்றிய மதிப்பீடுகளை விட அந்த படத்தை வைத்து நடத்தப்பட அரசியலே மிகப் பெரும் அளவில் இருக்கிறது. இந்தபிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்தே இதை பார்த்துக் கொண்டிருந்தவன் என்பதால் இதை பற்றிய தகவல்களை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டியதுள்ளது. இந்த படம் PVR திரையரங்குகளில் 17 ஊர்களில் இந்தியா முழுவதும் ஜூன் 20ம் தேதி வெள்ளிக் கிழமை திரையிடப்பட்டது. சென்னையிலும் திரையிடப்பட்டது ஞாயிற்றுக் கிழமை வரை யாரும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை, 

ஆனால் திடீரென்று தமிழ்தேசிய பாசிசவாதிகள் என்று ஒர் அவலக்குரல் பெருங்குரல் எடுத்துக் கூவியது என்ன படம்? ஏது படம்? யார் படம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே உடனே வளைத்து வளைத்து பாசிச முத்திரையை குத்தியது அந்த குரல். சரி இயக்குனரை அனுகுவோம் என்ன பிரச்சனை என்று பார்ப்போம் என்ற நிலையில் தான் சரவணன் குமரேசன் இயக்குனரை தொடர்பு கொண்டார் அப்பொழுது தான் திரப்படத்தை திரையிட அருண் என்பவர் முயல்வதாக அறிகிறார். அருணை நான் தொடர்பு கொண்டேன் அப்பொழுது இவர்கள் தனி சென்சார் நடத்துகிறார்கள் என்று அந்த அவலக்குரல் திரும்பவும் கூவியது. இது இவர்கள் நடத்தும் நாடகமாக தெரியக்கூடாது என்று இந்த கூக்குரல் அவ்வளவே இது. சரி திரைப்படத்தை பார்க்க போகலாம் என்று சென்றோம் படம் பார்த்தோம் அங்கு யாரும் யாரையும் அடிக்கவில்லை ஒரு சிறு விவாதம் தான் நடந்தது அதுவும் ஒரு தாந்தோன்றித் தனமாக தான் சொன்னால் அதை வேதவாக்கு என்பது போல் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஒருவர் தராதரம் இல்லாமல் குதித்ததாலேயே நடந்தது. அதில் முழுமையாக சம்பந்தப்பட்டவன் என்பதால் அதை முழுமையாகவே எழுதுகிறேன், படத்தை குறித்த அனைத்து சர்ச்சைகளிலில் இதுவும் ஒன்று என்பதால் நான் நேரிடையாகவே திரு. ஜெயபாலனை எதிர்த்து திட்டினேன் என்பதால்.

படம் ஆரம்பித்து விளக்குகள் எல்லாம் அனைத்த பிறகு தான் இவர் திரையரங்கிற்குள் வந்தார் அப்பொழுது நானும் சரவணனும் அருகிலேயே அமர்ந்திருந்தோம். அதன் பிறகு படம் முடிந்தது, திரையரங்கில் சிலர் கை தட்டினார்கள் மற்றவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர் அப்பொழுது ஒரு அவலக்குரலுடன் கூக்குரலிட்டு இயக்குனரை பெயர் சொல்லி அழைத்து படம் சூப்பர் சூப்பர் என்று கூவினார் ஜெயபாலன். இதன் அரசியல் காரணம் உணர்ந்தவனாக அதை விமர்சிக்க கடமைப்பட்டுள்ளேன், அதாவது இவர் படம் நன்றாக இருக்கிறது என்று அங்கு வந்திருந்த அனைவரும் முன்னாலும் அங்கீகரிக்கிறாராம் அதன் பிறகு யாரும் பேசத் தேவையில்லை என்பது போல் ஒரே குரலாக கத்தினார். 

அதன் பிறகு இயக்குனருடன் கலந்துரையாடல் தொடங்கியது, அப்பொழுது இயக்குனரிடம் முதலில் ஒருவர் பாராட்டை தெரிவித்தார், அடுத்து ஒருவர் படத்தின் பின்னனி இசையில் தமிழ் பாடல்களே ஒலிப்பதுபோல் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு இது மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டது என்று ஜெயபாலன் பதில் கொடுத்தார். யார் இந்த உரிமையை கொடுத்தது இயக்குனரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் அதைவிடுத்து இவர் யார், இந்த படத்தில் லைட் பாய் வேலை பார்த்தாரா இல்லை உதவி இயக்குனராக பணிபுரிந்தாரா. 

இயக்குனருடன் கலந்துரையாடல் எனும் பொழுது இயக்குனர் பேசட்டுமே என்று இல்லாமல் இவர் உள்ளே புகுந்து பதில் அளித்தார். அடுத்த கேள்வியை இன்னொரு தோழர் கேட்ட பொழுது மீண்டும் தனது அவலக்குரலை உயர்த்திக் கொண்டு பதில் அளிக்க முற்பட்ட பொழுது தோழர் சரவணன் குமரேசன் இது இயக்குனருடனான கலந்துரையாடல் அவர் பதிலளிக்கட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்றார். அதற்கு நீ யார் வாயை மூடிக்கொண்டு உட்கார் என்றார் இந்த பிதாமகர். இவர் தான் அது ஜனநாயகம் இல்லை இது ஜனநாயகம் இல்லை என்று புலிகள் இயக்கத்தை நோக்கி விமர்சனங்களை வைத்தவர். இவரின் ஜனநாயகம் என்ன என்ற கேள்வி இங்கு பல்லிளித்தது. 

ஒரு திரையிடல் நிகழ்வில் இவரும் படத்தை பார்க்க ஒரு பார்வையாளராக வந்துள்ளார், நாங்களும் சென்று இருக்கிறோம் ஜனநாயகப்பூர்வமாக இயக்குனர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கின்றனர் இத்தகைய ஒரு இடத்தில் தான் தோன்றித் தனமாக நான் சொல்வேன் நீங்கள் எல்லாம் கேட்டே ஆகவேண்டும் விட்டேத்தியாக குதித்த ஜெயபாலனை மிகவும் காட்டமாக திட்டினேன். உடனே என்னை ரவுடி மாதிரி பேசுகிறாய் என்றார், கவனிக்கவும் அனைத்து வாதங்களும் பிரதி வாதங்களும் ஆங்கிலத்திலேயே நடந்தது நான் எந்த நாகரீகமற்ற வார்த்தைகளையும் உபயோகிக்கவில்லை. இந்த சமயத்தில் அதுவரை ஜெயபாலனுடன் நின்ற லீனா காணாமல் போனார் சிறிது நிமிடங்கள், அப்புறம் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் அருண் ஜெயபாலனை உட்காரச் சொன்னார் அப்பொழுது பின்னால் திரும்பி இவரின் சொந்த கதை சோகக் கதை எதையோ குறிப்பிட்டு அதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்டீர்களா என்றார். அதை இங்கு விவாதிப்பது என்றால் விவாதிக்கலாம், உங்கள் சொந்த பிரச்சனையை பேசவா நாங்கள் வந்திருக்கிறோம் என்று சரவணன் பதில் சொன்னவுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். 

ஒரு புறம் இந்த பேச்சுகள் நடக்கும் பொழுதே இயக்குனருடனான கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது யாரும் அவரை அடிக்கவோ இல்லை அவரை திட்டவோ செய்யவில்லை தங்களிடம் தோன்றிய ஐய்யப்பாடுகளையே கேள்வியாக கேட்டுக் கொண்டு இருந்தன்ர். இயக்குனர் கெளதமன் சக இயக்குனராக ஒரு கேள்வி இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டார், அதற்கு நான் சிங்களவனாக எனது பார்வையை சொல்லியுள்ளேன், ஆனால் அரசு தமிழ் மக்களின் பார்வையில் நின்று அவர்களுக்காக யோசித்தால் தான் மீள் கட்டமைப்பு என்பது சாத்தியமாகும் என்றார். கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பிரசன்ன அளித்த பதில் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சொன்ன பதிலில் இனப்படுகொலை என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்காமல் இனி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே.  இதன் அரசியல் சர்வதேச அரங்கில் Genocide எனும் வார்த்தையை G Word என்றே உபயோகிப்பார்கள், அதைப் போன்றே இயக்குனர் பிரசன்னாவின் பதிலும் அமைந்தது. 

இதன் பிறகு மேலும் சில தோழர்கள் கேள்விகள் கேட்க முயன்ற பொழுது நேரம் இல்லை என்று விலகிச் சென்றார்கள். அப்பொழுது பின்னால் இருந்து பெண்ணின் கூக்குரல் என்னவென்று பார்த்தால் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர் ஒரு சிலரிடம் என்ன என்று பார்க்கலாம் என்று சென்ற பொழுது அதில் ஒரு பெண் நான் ஜெயபாலனின் மனைவி என்று கூறினார். சரி இதற்கு மேல் அங்கு செல்வது தேவையில்லாதது என்று நானும் சரவணனும் வெளியேறிவிட்டோம். இந்த சமயத்தில் இயக்குனர், லீனா மணிமேகலை, ஜெயபாலனும் வெளியில் வந்தார்கள் சில தோழர்கள் கேள்விகள் எழுப்பினர் அதற்கு பதில் சொன்னாரா இல்லையா என்பது தெரியவில்லை. அனைவரும் கிளம்பிச் செல்வதில் ஈடுபட்டார்கள். வைக்கப்பட்ட கோரிக்கை என்பது புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லும் சப்டைட்டிலை மட்டும் நீக்க முடியுமா என்பது தான் இது படத்தில் இரண்டு இடங்களில் வருகிறது என்பது மட்டும் தான் இது கோரிக்கையாக தான் வைக்கப்பட்டது. அப்படி நீக்காவிட்டால் நாங்கள் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற வசனங்கள் எல்லாம் வரவும் இல்லை. 

மேலும் கேள்வி பதில்கள் நடக்கும் பொழுதே காவல்துறை உள்ளே வந்தது, ஒரு தனியார் இடத்தில் தனியாரின் அனுமதியில்லாமல் காவல்துறை நுழைய முடியாது அப்படியிருந்த பொழுதும் காவல் துறை உள்ளே வந்தது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இது நிகழ்வை நடத்தியவர்கள் அசம்பாவிதம் ஏற்படும் என்று நினைத்து காவல்துறையை அணுகி இருக்க வேண்டும், அல்லது வேண்டும் என்றே வந்திருந்தவர்களை மிரட்டும் நோக்கத்துடன் காவல்துறையை உள்ளே அனுமதித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்த நோக்கத்துடன் செய்திருந்தாலும் சரி இது வரை தமிழ் தேசியக் கூட்டங்களில் எங்கும் எந்த அடிதடியும் ஏற்பட்டதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் பல இடங்களில் பல இயக்கங்கள் ஒருவரின் கருத்துக்கு நேர் எதிராக நிற்கும் இயக்கங்கள் அனைவரும் ஓரிடத்தில் இணைந்து நின்று போராடி இருக்கிறார்கள் எங்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்தது இல்லை ஆனால் இந்த கலை, இலக்கியம், இலக்கணம் என்று வியாக்கியானம் பேசுபவர்கள் நடத்தும் கூட்டங்களில் மட்டும் தான் இத்தகைய கூத்துகள் நடைபெறும், ஏன் பொது மக்களுக்காக நடத்தப்படும் புத்தக கண்காட்சிகளில் கூட கட்டி பிடித்து உருண்டு சண்டை போட்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டு. 

ஆனால் இங்கிருக்கும் பலர் இதை உணராமல் எதோ தமிழ் தேசியர்கள் தான் குற்றமிழைத்தவர்கள் போல் பிதற்றுகிறார்கள், இதை பார்த்து கலையை ஒரு போராட்ட வடிவமாக செய்து வரும் நமது தோழர்களும் இவர்களை நோக்கி எந்த கேள்வியையும் எழுப்பாமல் நம்மை நோக்கியே விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த நிகழ்வில் யாரும் யாரையும் அவமானப்படுத்த வில்லை, வேண்டுமென்றால் நான் ஒருவன் மிகவும் கோபமாக ஜெயபாலனை நோக்கி Who the hell are you to tell us to shut up, You are also guest, I am also a guest என்று கோபமாக கேட்டேன், இதற்கு தான் நான் ரவுடி மாதிரி பேசுகிறேன் என்றார். ஜனநாயகப் பூர்வமாக யாரிடம் கேள்வி கேட்கப்படுகிறதோ அவர் பதில் சொல்லட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று தான் சொல்லப்பட்டது. ஒரு பைத்தியம் போல் அன்றிலிருந்து இன்று வரை அவர் பிதற்றி திரிகிறார் கலை இலக்கிய நண்பர்கள் அவரின் பைத்தியத்திற்கு எதை தின்றால் தெளியும் என்று சொல்லிக் கொடுங்கள். தமிழ் தேசியம் பேசுபவர்கள் நாகரீகத்தையும் விருந்தோம்பலையும் தாங்கள் பேசும் தமிழுடனே வாழ்ந்து உணர்ந்து கொண்டவர்கள். 

(ஜெயபாலனுடன் நடந்த விவாதத்தின் போது எடுக்கப்பட்ட கானொளி, அவர் பக்கத்தில் அடிக்க யாரும் செல்ல வில்லை என்பது தெளிவாக தெரியும்)


கடைசியாக சொல்ல விரும்புவது அடாவடி சென்சார் என்று இவர்கள் கூறுவதற்கான பதில் “தேன்கூடு, எல்லாளன்” போன்ற படங்கள் இவர்களுக்கு கலைவடிவமாக தெரியவில்லையா இந்த படங்களை மக்களுக்கு திரையிடக் கூடாது என்று சென்சார் போர்டு சொல்கிறது அதற்கு எதிர்வினையாற்றுவதில்லை இவர்கள். ஆனால் இந்த அரசு எம் மக்கள் சார்பான தகவல்களை கலை வடிவில் சொன்னால் அனுமதி மறுக்கிறது ஆனால் அரசாங்கத்துக்கு ஆதரவான படங்களை எந்த வடிவில் சொன்னாலும் அனுமதிக்கிறது இந்த நிலை இருப்பதனாலே இங்கே சிலபடங்களை நோக்கியும் அதன் இயக்குனர்களை நோக்கியும் ஏன் எப்படி என்று கேள்வி எழுப்ப வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. உண்மையான கலையை நேசிப்பவர்கள் இதைப் போன்ற எத்தகைய படங்களும் வெளிவர எந்த சென்சாரும் அனுமதிக்க தேவையில்லை என்று போராடட்டும்.  
 

குறிப்பு : ஊடகங்கள் கூறுவது போல் யாரும் யாரையும் அடிக்கவில்லை. 

Sunday, June 8, 2014

வீரமணி எனும் எஜமானன்...

தோழர் அதி அசூரனுக்கு ஒரு திறந்த மடல்...

தோழா..

வீரமணி ஓர் வாக்கியம் சொன்னவுடன் அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு பொங்குகிறீர்கள். நல்லாத் தான் இருக்கு ஆனால் இந்த பொங்கல் இத்தனை ஆண்டுகாலம் தமிழரின் மீட்சி தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டிய தேவை இல்லை என்று பெரியாரை இகழ்ந்தவர்களுடன் கூட நின்ற பெரியாரியவாதிகளை போற்றும் வகையில் இல்லாமல் மற்றவர்களை இகழும் முறையில் இருக்கிறது உங்கள் பதிவு. இப்படி எனக்கு தோன்ற காரணம் ஏன் என்றால் பெரியார் தமிழின மீட்சிக்காக போராடியவர் என்பதை நீங்களும் அறிவீர்கள் நானும் அறிவேன். ஆனால் அவர் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் இந்தியம் பிடித்துக் கொண்டது போல் தெரிகிறது.

தன் கடவுள் மறுப்பு கொள்கையோ இல்லை பகுத்தறிவு கொள்கையோ சுயமரியாதை கொள்கையோ அதற்கு எதிரானவர்களுக்கு நமது பொது எதிரியினால் ஒருவருக்கு பிரச்சனை என்றால் யாரும் கூப்பிடாமல் அவர்களுக்காக ஓடோடிச் செல்வார் பெரியார் அதன் கீழாகவே குன்றக்குடி அடிகளாருக்காக ஓடியதும், அதைப் போலவே சென்னை சர்வகலா சாலையில் தீவிர ஆத்திகரான மறைமலை அடிகளின் புத்தகம் “அறிவுக் கொத்து” எனும் நூலுக்கு எதிராக செயல்கள் நடந்த பொழுதும் யாரும் கூப்பிடமாலேயே ஓடியதும்..

ஆனால் நீங்கள் இன்று பெரியாரை ஒரு ரசிக மன்ப்பான்மையுடன் நெருங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன். பெரியாரிய கொள்கை தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று பேசியது போல் இருக்கிறது தங்களின் திராவிட மூலசூத்திர கட்டுரை.. உங்களைப் போன்ற சமயத்திற்கு ஏற்றார்போல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடினால் தான் இன்று திராவிடம் கேள்விக்குள்ளாகி உள்ளது.

பெரியார் தனது கருத்திற்கு எதிரானவர் என்றால் கூட அவருக்கு தனது பொது எதிரியால் பிரச்சனை என்றால் ஓடோடிச் செல்வார் அவர்களுக்காக போராடுவார். ஆனால் அந்த பழக்கத்தில் ஒரு சதவீதம் கூட ஒப்புமை செய்ய இயலாத இந்த வீரமணி அதுவும் பேரறிவாளன் திராவிடர் கழக உறுப்பினர் இல்லை என்று அறிவித்தார் மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளான காலகட்டத்தில்.. அதுவும் வக்கீல் வீரசேகரன் அதே வழக்கில் கைது செய்யப்பட்ட பொழுது 1000 வழக்கறிங்கர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தியவர் இவர்,  ஆனால் பேரறிவாளன் எங்கள் இயக்கத்தினர் இல்லை என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது இவரால்.. பேரறிவாளனின் ஒட்டுமொத்த குடும்பமும் இன்றுவரை பெரியரை விடாமல் தொடர்ந்து கொண்டுள்ளது... பரவாயில்லை இது நடந்து பலகாலம் ஆகிவிட்டது..

ஆனால் தற்சமயம் தோழர் கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டபொழுது ஓடோடி வந்தாரா இந்த வீரமணி. நீங்கள் ஒத்த கருத்துள்ளவர்கள் என்று கூறுகிறீர்கள் இவர்களை ஆனால் பெரியாரின் பொது எதிரிக்கான போராட்டத்தில் நமது எதிரிக்கு துன்பம் என்றால் கூட ஓடோடிப் போகும் பெரியாரின் குணம் எங்கு போனது கொளத்தூர் மணி தோழர் கைது செய்யப்பட்ட பொழுது வீரமணிக்கு, நீங்கள் கூறும் ஒற்றுமையான கருத்தின் கீழ் கூட வரவில்லையே. ஜெயலலிதாவின் ஆட்சியில் கொளத்தூர் மணி தோழர் கைது மட்டுமில்லை, கருணாநிதியின் ஆட்சியில் சீமான், வைகோ போன்றவர்கள் 2009ம் ஆண்டும் அதற்கு பிறகும் கைது செய்யப் பட்ட நமது தோழர்கள் முதற்கொண்டு யாருக்காகவும் வரவில்லையே.. நமது தமிழருக்காக  ஒடுக்கப்படுவர்களுக்காக ஓடோடி செல்லும் பெரியாரின் குணம் இந்த வீரமணியிடம் வெளிப்பட்டதா எங்காவது.. இல்லையே???

அப்படியிருக்கும் பொழுது எப்படி இவரை ஒத்த கருத்துள்ளவர் என்று சொல்கிறீர்கள். இத்தனை வருடமும் தமிழ்தேசியம் என்று சொல்லி பெரியாரை தூற்றுபவர்களுடனும் சேர்ந்து நாம் நின்றது பெரியாரை விட தமிழினம் முக்கியம் என்பதால் ”தமிழ்நாடு தமிழருக்கே” என்பதால். ஆனால் அதை எல்லாம் நகைப்புள்ளாக்கி இன்று பெரியார் திடலின் எஜமான் தன் எஜமான புத்தியை விடாமல். அதாவது பிரச்சனையின் போது ஓடோடி வந்து ஒன்றிணைந்து தமிழினத்திற்காக நிற்காமல் ஓடி ஒளிந்த ஒருவரை ஒத்த கருத்துள்ளுவர் என்று சொலவது நகைப்பிற்கு இடமளிக்கிறது..

கொஞ்சம் வரலாற்றை பெரியாரின் ரசிகராக இல்லாமல் தமிழர்களின் மீட்சியின் கீழாக பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களின் போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லாமல் இதோ என் இடம் பெரியார் திடல் இருக்கிறது வாருங்கள் என்று விடும் எஜமான அரசியலின் அரைகூவல் கண்ணுக்கு தெரியும் அவரின் எஜமானிய புத்தியும் புலப்படும். அதுவும் ஈழவிடுதலையில் இருந்து தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டம் அனைத்திலும் கள்ள மெளனம் சாதித்த ஒருவர் இன்று அடுத்த கட்டத்திற்கு காலை எடுத்து வைக்க ஒரு அங்குல இடம் கூட இல்லாமல் வெற்றிகரமான ஒரு போராட்டத்தை நாம் அனைவரும் இணைந்து நடத்தி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அது இவரின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை புரிந்து இவர் விடுத்த அரைகூவலை படிக்கும் பொழுதே புரியும்.. நாம் இதுவரை இணைந்து நின்று நடத்திய போராட்டங்கள் இனி நடை பெறக்கூடாது நம்மை பிரிக்கவேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் கீழாகவே இந்த அரைகூவல்..

நம்மை பிறித்தாளும் சூழ்ச்சியே இவர் விடுத்திருக்கும் அரை கூவல் என்னை பொறுத்தவரை ஒரு பகுத்தறிவு வாதியாக, பெரியாரின் கருத்துகளை புரிந்து கொண்டவனாக இவரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நான் உட்பட மாட்டேன்.. பெரியாரை தூற்றுகிறவர்களுடன் இணைந்து நிற்கலாம் எனென்றால் அவர்கள் நாம் அமைக்கும் களத்தில் வந்து நின்று போராடுகிறார்கள், அவர்கள் அமைக்கும் களத்திலும் நமக்கான இடத்தை ஒதுக்குகிறார்கள்.. என்றாவது ஒரு நாள் அவர்கள் பெரியாரை புரிந்து கொள்வார்கள்,  ஆனால் வீரமணி நமக்கு பல துன்பங்கள் வந்த பொழுதும் வேடிக்கை பார்த்தவர் எனபதை மறந்துவிடாதீர்கள். பெரியாரிய கொள்கை என்பது அய்யகோ நம்மவர் பெரியாரை ஏற்றுக் கொண்டவர் அதனால் அவர் உணர்ந்துவிட்டார் என்று கழிவிரக்கம் கொளவது அல்ல... இன்று அரைகூவலிட்டவர்  நம் தோழர்கள் உமாபதி உட்பட இன்னும் பலர் சிறையில் இருக்கிறார்கள் அதற்காக ஏன் வந்து போராடவில்லை என்ற கேள்வியை எழுப்புங்கள், அது தான் பகுத்தறிவு.

தமிழினத்தின் மீட்சி என்பது வீரமணியை வெளியேற்றி பெரியார் திடலை தமிழர்களுக்கு சொந்தமாக்குவதே.. வீழ்ந்துவிடாதீர்கள் கொஞ்சம் பெரியாரின் ரசிகராக இல்லாமல் பெரியாராக சிந்தியுங்கள் Feel your self in Periyar's shoes...

ஒரு போராளி களத்துக்கு வருவான் ஆனால் என்றும் இதோ எனக்கு சொந்தமான இடம் இருக்கிறது அதை களமாக மாற்று என்று சொல்ல மாட்டான்.. அப்படி ஒருவர் சொன்னான் என்றால் அவன் எஜமானன்...

Wednesday, June 4, 2014

கம்பெனியாம் கம்பெனி மும்மூர்த்திகள் கம்பெனி


1948ம் வருடம் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள், ஆரம்பிக்கும் பொழுது பங்கு தாரர்கள் எல்லாம் ஒரே முடிவுடன் இருந்தார்கள் அது தான் தேர்தல் கலாட்டாவில் குத்தாட்டம் போட்டு அதன் மூலமாக பேட்டை ரவுடி ஆகி தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று கம்பெனியின் லாபமாக சொன்னார்கள். கொசுறாக தேசிய அளவில் கல்லா கட்டும் தேசிய தாதாவை தமிழ்நாட்டுக்குள் அழித்துவிடப் போகிறோம் என்று உதார் விட்டார்கள்.  

இதில் இவர்கள் வேறு இந்த தேர்தல் கலாட்டாவில் அடித்த கூத்து இருக்கே அது தான் இந்த கம்பெனியின் நகைச்சுவையை நமக்கு உணர்த்தும். 1952ம் வருட தேர்தலில் எங்கள் ஆதரவு வேண்டும் என்றால் தனித் தமிழ்நாடுக்கு ஆதரவு கொடுப்பவருக்குத் தான் எங்க ஆதரவு என்றார்கள். தேர்தல் கலாட்டாவில் கலந்துக்க போறோம் அப்படி கலாட்டா பண்ணி பேட்டை ரவுடியா வந்தால் தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று சொன்னவர்கள் மத்தவங்க எல்லாம் கலாட்ட பண்ணுங்க நாங்க வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறோம் என்று தங்கள் வீரதீர சொரூபத்தை வெளிக் காட்டினார்கள். தேர்தலில் பங்கு கொள்ளும் தைரியமும் இல்லை அதே வேளையில் கலாட்ட பண்ண கட்டை கடப்பாரை மட்டும் கொடுப்போம் என்றார்கள். 

இந்த தனித் தமிழ்நாடு நிபந்தனைக்கு சில கம்பெனிகள் ஒத்து கொண்டு இவர்களிடம் தனி தமிழ்நாட்டை ஆதரிக்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவுடன் இவர்கள் எந்த தேசிய தாதாவை அழிக்க கிளம்பினார்களோ அந்த தேசிய தாதாவிடம் சரணடைந்து அமைச்சர் பதவி எல்லாம் வாங்கினார்கள் அந்த சில்லு வண்டுகள். அந்த சில்லு வண்டுகளை கண்டிக்க கூட வக்கில்லாமல் கலாட்டா பண்ன வீர பராக்கிரமர்கள், அதற்கு அடுத்தும் பெரிய கலாட்டக்கல் எல்லாம் செய்யவில்லை 1967 வரை அதாவது கம்பெனி ஆரம்பித்து 1948ல் இருந்து 67 வரை 19 ஆண்டு காலம் உள்ளே இவர்களுக்கிடையே கச்சை கட்டி சண்டை போட்டு பங்கு தாரர்கள் பலர் தனியாக கம்பெனி ஆரம்பித்தது தான் மாபெரும் சாதனையாக இருந்தது.


1967ல் தேசிய தாதா தமிழ்நாட்டு மக்களை நீ என் மொழியை கத்துக்கணும் இல்லாவிடில் உன்னை உதைப்பேன் என்ற பொழுது தன்னெழுச்சியாக எழுந்த போராட்டத்தையும் போராட்ட மாணவர் தலைவர்களையும் வளைத்துப் போட்டு கண்ணீர் விட்டு அழுத்தது இந்த கம்பெனி உரிமையாளர்கள். நம்ம மக்களும் இவர்களின் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்து தேர்தல் கலாட்டாவில் இவர்களோடு சேர்ந்து நின்று தொலைத்தார்கள். அன்று பிடித்தது தமிழ் நாட்டுக்கு சளி.. அன்னைக்கு பிடிச்ச சளிதான் இன்னைக்கு வரைக்கும் எத்தனை கசாயம் குடிச்சாலும் விடமாட்டேன் என்கிறது.

நாம சளியோட அலைவது முடியாது என்று தான் இந்த டூபாக்கூர் கம்பெனியில் கணக்கு கேட்டு கொடுக்கலை என்று மூக்கை சிந்திட்டு வெளியில் ஓடி வந்தவங்களை எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று ஆதரித்து தேர்தல் கலாட்டா செய்து பேட்டை ரவுடி ஆக்கினோம். இதையெல்லாம் மறந்து தன்னால மக்களுக்கு ஏற்பட்ட சளியினால் தான் நம்மை மூக்கை சிந்தி தூக்கி போடுவது போல் தூக்கிப் போடுகிறார்கள் என்பதை உணராமல் இன்னைக்கு வரைக்கும் மக்களைப் பார்த்து நீ சளி வேண்டாம் என்று மஞ்சள் காமலையிடம் மாட்டிக்கிட்டாய், வாந்தி பேதி உனக்கு வரப்போகுது என்று சாபம் விடுகிறார்களே தவிர இது வரை எதாவது நல்லது பண்னுவார்கள் என்று பார்த்தால், 2009ல் பேட்டை ரவுடியாகவும் தேசிய தாதாவிற்கு அல்லக்கையாகவும் இருந்து 1,50,000 மக்களை தங்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டு காவு கொடுத்தனர்.

இதனை எல்லாம் உணர்ந்த மக்கள் மஞ்சள் காமலையோ இல்ல வாந்தி பேதியோ இருந்து தொலையட்டும் உன்னை பேட்டை ரவுடியாக மாற்றி மூக்கை சிந்திக்கிட்டே திரியமுடியாது என்று சொன்னால் இந்த வெங்காய வெண்ணை வெட்டி திருட்டு மும்மூர்த்தி கம்பெனிக்கு புரியவே மாட்டேன் என்கிறது. அது எப்படியா எந்த இடத்திலும் சொல்லாமல் கொள்ளாமல் கம்பெனி பெயரை மாற்றிவிட்டீர்கள்.
திருட்டு 
மும்மூர்த்தி(ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி) 
கம்பெனி என்று...

இனியும் மக்கள் உங்களை சகித்துக் கொள்ள மாட்டார்கள், எனென்றால் சளி தானே என்று அசிங்கமாக பொதுவில் மூக்கை சிந்திக்கிட்டே அலைய விரும்பவில்லையாம். 

Saturday, May 17, 2014

2014 தேர்தல் ஓர் பார்வை

2014 தேர்தலுக்கு முன்பாகவும் சரி அதன் பின்னும் சரி யாரும் இப்படி ஒரு முடிவு வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அனைத்து கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆதிமுகவிற்கு 20, 25, 27 தொகுதிகள் என்று தான் கூறிவந்தன. ஆனால் அனைத்தையும் தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்தமாக 37 தொகுதிகளில் ஆதிமுக வெற்றிப் பெற்றுள்ளது என்றால் அதன் பின்னான கரணங்கள் ஆராயப்பட வேண்டும். முதலில் அனைத்து கட்சிகளும் வாங்கிய வாக்கு சதவீதம் 

ஆதிமுகவின் ஓட்டு சதவீதம் 44%
திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 26.3%
பாஜக கூட்டணி 20.6%.

மேலே குறிப்பிட்டு இருப்பது 2014ன் வாக்கு விகிதம். ஆனால் எப்பொழுதுமே திமுகவின் வாக்கு வங்கி 26% ஆதிமுகவின் வாக்கு வங்கி 29% இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக தமிழக தேர்தலில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு சதவீதம். இதில் இந்த வாக்கு வங்கியை சேராத மக்கள் ஒவ்வொரு முறையும் தங்களது வாக்குகளை அடுத்து நமக்கு யார் நல்லது செய்வார் என்று முடிவெடுத்து வோட்டுபோடுவார்கள் அதனடிப்படையில் வெற்றி பெறுபவர் மாறி மாறி வந்தனர். ஆனால் இந்த முறை ஆதிமுக எந்த கூட்டணியும் இல்லாமல் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. திமுகவும் மிகப்பெரிய கூட்டணி என்ற ஒன்றில்லாமல் போட்டியிட்டது.

இதில் ஆதிமுகவின் வாக்கு வங்கி என்பது 29% தான் ஆனால் அதை தாண்டி 44% வாக்கு வாங்கி வெற்றி பெற்றுள்ளார். இது வாக்கு வங்கி சேராத மக்களின் வாக்குகள். மேலும் சட்டசபை தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் பெரும்பாலும் ஆட்சிகலைப்பு போன்றவைகள் நடைபெற்றால் ஒழிய 1996வரை ஒரே சமயத்தில் தான் வரும். ஆனால் அது உடைந்து இரண்டும் வெவ்வேறு காலங்களில் நடக்க ஆரம்பித்த பிறகு ஆளும் மாநில அரசின் செயல்பாட்டை வைத்து தேர்தலில் வாக்குகள் மாறி வந்தது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக   1991-96ல் ஜெயலலிதாவின் ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கருணாநிதி 96ல் பெரும்பான்மை பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். அதே சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் United Front எனும் கூட்டணியாக திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), மற்றும் சிபிஐ ஆகியோர் அடங்கிய கூட்டணியில் தமிழக பாரளுமன்ற தொகுதிகள் 39 இடங்களையும் கைப்பற்றினர். ஆனால் 1996 இவர்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தேவகவுடா தலைமையிலான அரசு ஒரு வருடம் அதன் பிறகு ஐ.கே குஜ்ரால் தலைமையில் ஒருவருடமும் ஆட்சியில் இருந்து, அதன் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டது. 1998ல் பாராளுமன்ற தேர்தல் மறுபடியும் நடந்தது. 1996க்கு பிறகு சட்டமன்றம் பாராளுமன்ற தேர்தல்கள் இருவருட இடைவெளியில் தான் நடக்கிறது. 

1996 தேர்தலில் ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழாக தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தார், அதாவது போட்டியிட்ட 160 தொகுதிகளில் 4 தொகுதிகள் மட்டுமே வெற்றியடைந்தார். இப்படி மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து நின்ற ஜெயலலிதா இரண்டே ஆண்டுகளில் 1998 பாராளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் வெற்றிபெற்றார், இதன் காரணம் அன்று ஆண்டு கொண்டிருந்த திமுக அரசின் மீதான வெறுப்பு. 1998 தேர்தலில் ஜெயலலிதா இருந்த பிஜேபி கூட்டணி ஆட்சி அமைத்து ஜெயலலிதாவாலேயே கவிழ்க்கப்பட்டது, மறுமுறை 1999ல் தேர்தல் நடந்தது இதில் திமுக, பாஜக ஒரே கூட்டணியில் நின்றன இதில் 26 இடங்கள் பிஜேபி, திமுக கூட்டணியும் 13 இடங்கள் அதிமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும் கிடைத்தது. இதன் பிறகு தேர்தல் என்பது மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அது 2001ம் ஆண்டு நடைபெற்றது இதில் ஜெயலலிதாவின் ஆதிமுக கட்சி ஆட்சியை கைப்பற்றியது.


2004ல் பாராளுமன்ற தேர்தல் இதில் கருணாநிதி 40ம் நமக்கே என்று பாண்டிச்சேரிஉட்பட அனைத்து எம்பி தொகுதிகளையும் அறிவித்து. 40 இடங்களில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தமாஅன் 39 தொகுதிகளை வெற்றி பெற்றார். இதற்கு அன்றைய ஆளும் அதிமுகவின் மீதான வெறுப்பே காரணம்.  அதாவது 2001 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சியின் மீதான வெறுப்பாக 2004 தேர்தலில் அதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சர் பதவியெல்லாம் வகித்த திமுக அந்தர் பல்டி அடித்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 2004 தேர்தலில் 39 தொகுதியையும் கைப்பற்றியது. இப்படி தொடர்ந்து ஆளும் மாநிலக் கட்சியின் வெற்றியாக இல்லாமல் எதிர்கட்சியாக இருப்பவர்களே 1998லிருந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் மத்தியில் யார் ஆட்சி என்பதை தமிழக மக்கள் கவலைப்படுவதில்லை தமிழகம் சார்பாக யார் பாராளுமன்றம் போவது என்பதையே பார்த்து வருகின்றனர்.

2009 தேர்தலிலும் இதே தான் நடந்தது அதற்கு முதல் தேர்தலில் 40ம் நமக்கே என்று வெற்றி பெற்றவர்கள் இப்பொழுது 2006 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது, அதற்கு முதல் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தக்கவைத்திருந்த கட்சி மிக எளிதாக 2009 தேர்தலில் அதே நிலையில் வெற்றிபெற்று இருக்கலாம் ஆனால் இந்த தேர்தலில் 27 இடங்கள் திமுகவிற்கும் 12 இடங்கள் அதிமுகவிற்கும் என்று மாறியது. இப்படி ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மை ஏற்படுவதும் அதன் கீழாக பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பொறுத்து அமையும் ஆனால் அதை ஒட்டுமொத்தமாக உடைத்து கூட்டணிகள் என்பது கூட முக்கியம் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் ஒரே கட்சி தமிழக வரலாற்றில் இது வரை யாருமே பெறாத வெற்றியை தமிழக மக்கள் கொடுக்க என்ன காரணம் என்பது கவனிக்க பட வேண்டிய ஒன்று.

                                                         
எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் மக்களின் மனதில் நிறைந்து இருந்த காலத்தில் கூட இவ்வாறான ஒரு முடிவு எப்பொழுதும் மக்கள் கொடுத்தது இல்லை, 1980ம் ஆண்டு சரண் சிங்கின் அரசு கவிழ்ந்து நடந்த தேர்தலின் போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார் ஆனால் அப்பொழுது நடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பிறகு ஆட்சி அமைத்த காங்கிரஸை வைத்து மக்களின் நம்பிக்கையை எம்.ஜி.ஆர் இழந்துவிட்டார் என்று 1980ல் தமிழக எம்.ஜிஆரின் ஆட்சியை கருணாநிதியும் இந்திரா காந்தியும் கலைத்தனர். ஆனால் காமராஜருக்கு பின்னர் மறுபடியும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர் ஆனால் அவர்கூட இப்படி தனியாக நின்று பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களை கைப்பற்றியதாக எந்த சரித்திரமும் இல்லை.

2014 தேர்தல் என்று இல்லை எந்த தேர்தலிலும் தமிழக மக்களைப் பொறுத்த வரையில் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்து வாக்களித்தது இல்லை. தமிழ்நாட்டில் இருந்து யார் போகவேண்டும் யார் பேசினால் போதும் என்று நினைக்கிறார்களோ அவர்களையே தேர்ந்து எடுக்கிறார்கள் அதுவும் தங்களின் மாநிலத்தில் நலனை சார்ந்து மட்டுமே. இங்கு ஆட்சியில் இருக்கிறவர் அங்கு போய் பேச வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை எதிர்கட்சியாக நின்றவர்களை வெற்றி பெறச்செய்து அனுப்பியுள்ளனர்.

இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கு மேலும் ஒரு வேலையைக் கொடுத்துள்ளது, இது தமிழர் நலன் சார்ந்து தமிழக சட்டசபையில் தமிழக மக்களின் தீர்மானமாக இயற்றப் பட்ட தீர்மானங்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது இது வரை மத்திய அரசில் பங்கு பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை இனி தமிழகத்தில் தமிழ் மக்களின் தீர்மானங்களை பேசும் பெரும் பொறுப்பையும் கொடுத்து அனுப்பியதாகவே தோன்றுகிறது. 

Wednesday, May 14, 2014

ஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்




ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் ஒரு தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையில் எப்படி சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் இருந்ததோ அப்படியே பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளதை அறியலாம். பூலித்தேவரையும் ஒண்டிவீரனையும் தனித்தனியாக பார்க்கமுடியாது ஒருவர் இல்லாமல் மற்றவரின் வரலாறு என்பது இங்கில்லை. முதலில் பூலித்தேவர் யார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவர் முன்னோர்கள் அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள் அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.

அந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவ இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள் அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.

பூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்தவர் ஒண்டிவீரன். அந்த காலகட்டத்தில் தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் வரிகேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலி ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார், அதுவரை நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் அதாவது செம்மண் நிலத்தில் மிகவும் அதிகமான நெல்லை விளைவித்ததால் நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் நெற்கட்டான் செவ்வலாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.


வரி கொடுக்க மறுத்ததையொட்டி ஆங்கிலேயர்கள் தென்மலைக்கு வந்து முகாமிட்டு பூலித்தேவரிடம் தங்கள் தூதுவர் ஒருவரை அனுப்புகிறார்கள். தூதுவர் ஆங்கிலேயரின் படை பலம் மிகவும் அதிகம் அவர்களுடன் சமாதானமாக போகும் படி கூறுகிறார். அவ்வாறு சமாதானம் வேண்டாம் என்றால் போர் என்பதை முடிவெடுப்பதாக இருந்தால் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருக்கும் பட்டத்து வாளையும் குதிரையையும் கடத்திக் கொண்டு வரவேண்டும் அதே சமயத்தில் போர் தொடங்கும் அடையாளமாக அங்கிருக்கும் நகராவையும் முழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். பூலித்தேவர் இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டு தனது தளபதிகளை கூப்பிட்டு ஆலோசனையில் இறங்குகிறார்.

பூலித்தேவனின் தளபதிகளை குறிக்கும் நாட்டுப்புறப்பாடல்

”சின்னான் பகடை பெரியான் பகடை
சிவத்தசொக்கன் கருத்தச் சொக்கன்
அண்ணன் தம்பிமார் அழகிரியுடன் 
அஞ்சாறு பகடையுடன் ஒண்டியாம்...

      இத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்
      அத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்
      வலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்
      வேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”

பூலியின் படையில் ஒண்டிவீரன் பகடை, சின்னான் பகடை, பெரியான் பகடை, சிவத்தசொக்கன், கருத்தசொக்கன், ஓடிக் குத்துவான் பகடை என்று பல அருந்ததியர்கள் இருந்தனர். ஆங்கிலேயரின் நிபந்தனையை தனது தளபதிகளுக்கு விளக்குகிறார் பூலித்தேவர். அப்பொழுது ஒண்டிவீரன் பட்டத்து வாளையும் குதிரையையும் கவர்ந்து வரும் வேலையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஒண்டிவீரனின் திறமையை அறிந்த பூலித் தேவரும் அதற்கு ஒத்துக் கொள்கிறார். 

ஒண்டிவீரன் மாறுவேடம் இட்டு செறுப்பு தைப்பவர் போல் ஆங்கிலேயர் தங்கியிருந்த தென்மலை சென்று தனக்கு சூ, செறுப்பு, குதிரை சேனம் போன்றவைகள் தைக்க தெரியும் என்று வேலை கேட்கிறார். ஆங்கிலேயருக்கும் தேவை இருந்ததால் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். தனது நேரத்திற்காக காத்திருந்து பட்டத்துவாளை வைத்திருந்த இடத்தில் இருந்து திருடிக்கொண்டு பட்டத்து குதிரை கட்டியிருந்த இடத்தை நோக்கி செல்கிறார். கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும் பொழுது குதிரை பலமாக கனைத்து ஆங்கில சிப்பாய்கள் முழித்துக் கொள்கின்றனர். உடனடியாக அருகில் குதிரைக்காக போடப்பட்டிருந்த புல் குவியலுக்குள் படுத்துக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்கிறார் ஒண்டிவீரன்.

குதிரையை வந்து பார்த்த வீரர்கள் கயிறு அவிழ்ந்திருப்பதை பார்த்து கட்ட முயலும் பொழுது முளைகாம்பு ஆடியதை கவனித்து அதை தரையில் இருந்து பிடிங்கு மற்றொரு இடத்தில் அடிக்கின்றனர். அங்கு ஒண்டிவீரனின் கை புல்லுக்குள் மறைந்து இருக்கிறது அதன் மீதே அடித்துவிடுகின்றனர், ஒண்டிவீரன் அத்தனை வலியையையும் தாங்கி கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் அமைதியாக இருக்கிறார். புதிதாக அடித்த முளைகாம்பில் குதிரையை கட்டிவிட்டு சென்று விடுகின்றனர் வீரர்கள். அவர்கள் சென்ற பிறகு ஆராவரம் அடங்குவரை காத்திருந்து வலியையும் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு எழுந்தார் ஒண்டிவீரர். முளைக்காம்பை உறுவி கையை விடுவிக்க மற்றொரு கையால் முயல்கிறார் ஆனால் முடியவில்லை, தான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முளைக்காம்பில் மாட்டியிருந்த கையை வெட்டிவிட்டு, இரத்தம் சொட்ட சொட்ட குதிரையை அவிழ்த்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்.

வெளியேறும் பொழுது நெற்கட்டான் செவ்வலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கில சிப்பாய்களின் கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்துவிட்டு அங்கிருந்த நகராவை அடித்து போர்முழக்கம் இட்டு குதிரையை விரட்டிக் கொண்டு நெற்கட்டான் செவ்வலை நோக்கி பறந்தோடுகிறார். நகராவின் ஒலி கேட்டு எழுந்த ஆங்கிலப்படை அவசர அவசரமாக அந்த் இரவின் இருட்டில் பீரங்கிகளை உபயோகிக்க அது அவர்களின் கூடாரத்தையே தாக்கி பலத்த சேதத்தை உருவாக்குகிறது. குதிரையில் சென்ற ஒண்டிவீரன் பத்திரமாக பூலித்தேவரை சென்றடைகிறார். ஒண்டிவீரனின் வீரத்தை மெச்சியவர் ஒரு கையை ஒண்டிவீரன் இழந்திருப்பதை பார்த்து கவலைப்படுகிறார். அப்பொழுது ஒண்டிவீரன் ஒரு கை போனால் என்ன அதற்கு பதிலாக எனக்கு நீங்கள் தங்கத்தில் ஒரு கை செய்து கொடுப்பீர்களே நாம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கவனம் செலுத்துவோம் என்று கூறுகிறார்.

இந்த படையெடுப்பின் ஆதாரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்கள் வழியாக உறுதி செய்ய முடிகிறது. 1755ல் படையெடுப்பு நடந்ததும் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த படையில் ஆற்காடு நவாப் முகமது அலியின் படையும் அதன் தளபதியாக ஆற்காடு நவாப்பின் அண்ணன் மகபூஸ்கானும், ஆங்கிலேயரின் சுதேசிப் படையும் அதன் தளபதியாக கான் சாகிப்பும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. பூலித் தேவனின் கோட்டையை தகர்க்க 18 பவுண்ட் பீரங்கிக் குண்டுகள் தேவை ஆனால் ஆங்கிலப் படையிடம் 12 பவுண்ட், 14 பவுண்ட் குண்டுகளே இருந்திருக்கின்றன. இதனால் ஹெரான் பூலித்தேவரை பயமுறுத்தி கப்பத்தை வசூலிக்கும் எண்ணத்துடன் தான் முதலியார் துபாஷை அனுப்புகிறார். அந்த பயமுறுத்தலுக்கு பயப்படாமல் விதித்த நிபந்தனையை நிறைவேற்றி போரிடுகிறார் பூலித்தேவரும் அவரது தளபதி ஒண்டிவீரனும்.

அதன் பிறகு கோட்டையை தகர்க்க ஹெரான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிகிறது 1755ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கோட்டையை தகர்க்க முடியாமல் முற்றுகையை முடித்துக் கொண்டு மதுரையை நோக்கி திரும்புகிறது ஆங்கிலப்படை. இதன் பிறகு ஒண்டிவீரனின் மரணத்தைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை ஆனால் பூலித்தேவரின் மறைவிற்குப் பின்னும் அவரின் மகன்களின் படையில் இருந்து சண்டையிட்டதும் தெரிய வருகிறது. ஆனால் ஒண்டிவீரனின் மரணம் பற்றிய தகவல் இல்லை ஆனால் மக்கள் ஒண்டிவீரனை தங்களது தெய்வமாக வழிபடுகின்றனர்.

இந்த தகவல்களை அந்த பகுதியில் வசிக்கும் பிற சமூகமக்களும் உறுதி செய்கின்றனர். இன்று அருந்ததிய மக்கள் அந்த பகுதியில் எந்த நிலத்திற்கும் சொந்தகாரர்களாக இல்லை ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிலம் வைத்திருந்து விவசாயமும் செய்திருக்கின்றனர் என்பதை ஒண்டிவீரனின் வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.