Friday, April 18, 2014

போர்க்கள நீதிமான்கள் - விடுதலைப் புலிகள்

போர் நடக்கும் காலகட்டத்தில் போரில் ஈடுபடும் இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வரையறுக்கப் பட்டுள்ளது. இது பெரும்பாலும் அனைவரும் சிறிதளவாது மீறுவார்கள் ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் அத்தகைய விதிமுறை மீறல்களை அனுமதித்தது இல்லை. அப்படி தவறுகள் நடந்தால் உடனடியாக அதற்காக தங்களது தவறு செய்த வீரர்களை தண்டிக்க தவறியதும் இல்லை. இப்படி போர்க்களத்தில் நீதிமான்களாக திகழ்ந்தவர்கள் தான் விடுதலைப் புலிகள் இயக்கம். 



அக்டோபர் 10, 1987ம் வருடம் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான போர் தொடங்குவதாக இந்திய இராணுவம் அறிவிக்கிறது. அதன் பிறகு நடந்த சண்டைகளில் கைது செய்யப்பட்ட இந்திய இராணுவ விரர்கள் விடுதலைப் புலிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள், நெருப்பினால் சுடுகிறார்கள் என்று பல கட்டுக் கதைகள் இந்திய ஊடகங்களுக்கு இராணுவத்தினரால் கொடுக்கப்பட்டு அதுவும் மக்களை சென்றடைகிறது.

இத்தகைய தருணத்திலேயே இந்திய இராணுவத்தினை புலிகள் இயக்கத்தில் இருந்து வயர்லஸ் மூலமாக தொடர்பு கொள்கிறார்கள். தொடர்பு கொண்டவர்கள் தங்களிடம் கைதிகளாக இருக்கும் 18 இந்திய வீரர்களை ஒப்படைக்க விரும்புவதாக தெரிவிக்கின்றனர். ஆம் இந்த 18 பேரும் போர் கைதிகள் என்ற போர்க்கால சட்டவிதிமுறைகளின் கீழ் வருபவர்கள் அவர்களை ஒப்படைக்கும் முடிவை தன்னிச்சையாக எடுத்து யார் தங்களுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களிடம் நேரிடையாக ஒப்படைக்க தயார் என்று அறிவிக்கிறது விடுதலைப் புலிகள் இயக்கம். களத்தில் சண்டையிடுவதலாகட்டும் சமாதன காலத்தில் போர் நிறுத்த உடன் படிக்கைகளை பின்பற்றுவதிலாகட்டும் புலிகள் இயக்கத்தினர் மிகவும் கவனமாக எந்த தவறும் தங்கள் தரப்பில் இருந்து ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள். அதே போன்ற நடவடிக்கை தான் (POW)போர்க் கைதிகளை ஒப்படைக்கும் இந்த நடவடிக்கையும்.

அதன் பிறகு கைதிகள் ஒப்படைப்பு இடம் நேரம் நாள் அனைத்தும் குறிக்கபப்டுகிறது, ஆனால் புலிகள் தரப்பில் இருந்து அதைச் செய்யவேண்டும் இதைச் செய்யவேண்டும் என்ற எந்த கோரிக்கையும் இல்லை. எந்த நிபந்தனைகளும் இன்றி இந்திய வீரர்களை ஒப்படைப்பதைப் பற்றி மட்டுமே பேச்சுக்கள் நடந்து இடம் நேரம் அனைத்தும் முடிவு செய்யப்படுகிறது. நவம்பர் 19ம் தேதி காலை 11மணிக்கு உடுவில்லில் 9 இந்திய வீரர்களையும் 1.30க்கு சாகவச்சேரியில் 9பேரையும் ஒப்படைப்பதாக முடிவாகிறது. இந்தியாவில் இருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அழைத்து வரப்பட்டு அனைவரும் தயாராக இருந்தனர். காலை 11மணிக்கு தொடங்கிய காத்திருப்பு பல மணி நேரங்கள் ஆனது இந்திய இராணுவத்தினர் புலிகள் ஏமாற்றுகிறார்கள் அவர்களை என்றுமே நம்பக்கூடாது என்று பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள்.

ஆனால் புலிகள் இயக்கத்தில் இருந்து தகவல் தரப்படுகிறது மாலை 5.30 சாகவச்சேரியில் இந்திய இராணுவ வீரர்களை ஒப்படைப்போம் என்கிறார்கள். அனைவரும் சாகவச்சேரிக்கு சென்று தங்கள் காத்திருப்பை தொடர்கின்றனர், இந்திய இராணுவம் அனைவரையும் சாகவச்சேரி வரை அழைத்து வந்திருந்தது, இந்திய இராணுவத்திற்கு தலைமை தாங்கி ஜே.எஸ். திலான் அவர்கள் இருந்தார். யாழ்ப்பாணத்தின் விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொருப்பாளர் யோகி அழைத்துவருவார் என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்கள், ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான மாத்தையா ஒரு வாகனத்தில் புலிக்கொடியும் வெள்ளைக்கொடியும் பொருத்தியிருக்க சாகவச்சேரி வந்து சேருகிறார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இராணுவத்தினர் மாத்தையா சண்டையில் காயம் அடைந்தார் என்று செய்தியை கசியவிட்டிருந்தது. ஆனால் மிக முக்கிய தளபதி இப்படி இந்திய இராணுவத்தினரின் இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்க நிலையில் வந்து நின்றார். அப்பொழுது மாத்தையாவிற்கு இந்திய தளபதி திலான் அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப் படுகிறார். பத்திரிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திலானுடன் கை குழுக்கிய படி புகைப்படம் எடுத்துக் கொள்ள நின்றார் மாத்தையா அவர்கள். மாத்தையாவுடன் மற்றொரு தளபதி சங்கர் அவர்களும் வந்திருந்தார்.


சில நிமிடங்களில் சுற்றியிருந்த வெற்று மைதானத்தில் திடிரென்று 9 பேர் தோன்றுகின்றனர், அவர்கள் இந்திய படை இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தனர். அவர்கள் சாதரண மக்கள் அணியும் சட்டை கைலியுடன் வந்தனர் அவர்கள் தான் கைது செய்து வைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ வீரர்கள் 18 பேரில் 9 பேர். மற்ற 9 பேரும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவார்கள் என்ற தகவலை மாத்தையா பகிர்ந்து கொள்கிறார். வந்து நின்றவர்கள் யாருக்கும் எந்தவிதமான காயங்களோ எதுவும் இல்லை மிகவும் சிறந்த ஆரோக்கியத்துடனே நடந்து வந்து நின்றார்கள். மாத்தையா அப்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார் புலிகள் இயக்கத்தை கொச்சைப் படுத்தவேண்டும் என்பதற்காக போர் கைதிகளை துன்புறுத்துகிறோம் என்று கதைகள் கட்டி விடப்பட்டுள்ளன ஆனால் நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை நீங்களே வேண்டுமென்றாலும் விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் இந்திய  இராணுவத் தளபதி திலான் அதற்கு அனுமதி மறுக்கிறார். இதனிடையில் சற்று தள்ளி நின்றவர்களிடம் உரத்த குரலில் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் துன்புறுத்தப்பட்டீர்களா என்று உரத்த குரலில் விணாவியபொழுது அவர்களில் ஒருவர் இல்லை என்று பதிலளித்தார்.

அப்பொழுது சங்கர் அவர்கள் இந்த பதினெட்டு பேரில் ஒருவர் அக்டோபர் 11ம் தேதி யாழ்ப்பாண பல்கலையில் தாக்குதல் நடத்திய இந்தியப் படையைச் சேர்ந்த கூரா சிங்க், 13வது சீக்  லைட் இன்ஃபாண்ட்ரி அணியை சேர்ந்தவர். அவர் அக்டோபர் 11முதல் எங்களிடம் போர் கைதியாக இருக்கிறார். மீதம் இருக்கும் 17 பேரும் வட்டுக்கோட்டைக்கு அருகில் கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும் அக்டோபர் 16ம் தேதியிலிருந்து போர் கைதிகளாக இருக்கின்றனர். இவர்களை கைது செய்யும் பொழுது துப்பாக்கி குண்டுகள் அனைத்தும் தீர்ந்து போன நிலையில் கைது செய்தோம் என்பதை சொல்கிறார்ர். இந்திய தளபது ஜே.எஸ். திலான் அவர்களுக்கு ஆயுத சப்ளை செய்யமுடியாத நிலையில் கைது செய்யப்பட்டனர் என்று விளக்கம் அளித்தார். இதன் பிறகு மாத்தையா அவர்களிடம் கேள்விகளை எழுப்பினர் பத்திரிக்கையாளர்கள் அவர்களுக்கு பதில்களை சொன்னார். அப்பொழுது இது வரை அப்பாவி தமிழ் மக்கள் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், நான்கு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக முகாம்களில் இருக்கின்றனர் என்பதைச் சொல்கிறார்.

மேலும் இந்திய இராணுவ வீரர்களை விடுவிக்க நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை, எங்களுக்கு தேவை எங்கள் மக்களின் அமைதியான வாழ்க்கை. இதன் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டு இந்திய இராணுவம் தனது அக்டோபர் 10தேதியில் நிலை கொண்டிருந்த இருந்த இந்திய இராணுவ முகாம் இடங்களுக்கு திரும்பி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமானால் நாங்களும் ஆயுதங்களை ஒப்படைத்து பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறோம் என்பதையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இந்திய இராணுவத்தினரிடமும் தெரிவித்தார். அதன் பின்னர் நாங்கள் போர் கைதிகளை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை எங்கள் மீது அவதூறு பரப்ப படுகிறது என்று சொல்லி இது வரை சொன்ன அனைத்திற்கும் ஆதாரங்கள் என்று புகைபப்டங்களை பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்தார். ஆனால் இந்திய இராணுவத்தினர் அந்த புகைபடத்தை பிடுங்க முயற்சி செய்த பொழுதும் பத்திரிக்கையாளர்கள் தர மறுத்துவிட்டனர். அதன் பிறகு மாத்தையா அங்கிருந்து தனது வாகனத்தில் ஏறி சென்றுவிடுகிறார்.

அடுத்த ஒன்பது இந்திய விரர்கள் 6.30 மணிக்கு விடுதலை செய்யபப்ட்டனர் தளபதி சங்கரின் மேற்பார்வையின் கீழ். அதன் பிறகு பத்திரிக்கையாளர்கள் பலாலி இராணுவ முகாம் சென்றடைந்தனர், அங்கு இந்தியா செல்வதற்காக காத்திருந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் மாத்தையா கொடுத்த புகைப்படங்களை கொடுத்துவிடுமாறு மிரட்டினார் ஆனால் கொடுக்க மறுத்தபொழுது, இது இந்திய தேசிய இராணுவ ரகசியங்கள் அதன் கீழாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று மிரட்டினர். பத்திரிக்கையாளர் தங்களிடமிருந்த புகைப்படங்களை கொடுத்தனர். ஆனல் சிலர் புகைப்படங்களை தக்க வைத்துக் கொண்டனர். சென்னை வந்த பிறமு சென்னை பத்திரிக்கையாளர் தகவல் மையம் மூலமாக மாத்தையா கொடுத்த படங்களை வெளியிட்டால் உங்களை பிளாக் லிஸ்ட் செய்வோம் என்று தகவல் கொடுக்கப்பட்டது.


இப்படி ஒரு நாட்டின் இராணுவம் தனது அதிகாரத்தின் அத்தனை எல்லையை பயன்படுத்தி ஒரு விடுதலை போராட்ட இயக்கத்தை அதுவும் கனரக ஆயுதங்கள் பீரங்கிகள், ஹெலிகாப்டர், விமானம் என்று அனைத்து வழிகளின் மூலமாக இந்த வசதிகள் எதுவும் இல்லாத ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை ஒடுக்க முயன்ற நிலையில், எந்த வித நிபந்தனைகளும் விதிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் தங்களிடம் சிறைபட்டிருந்த இந்திய இராணுவ வீரர்களை நேர்மையான முறையில் அடுத்த கட்ட நகர்வுகள் நன்மையை நோக்கி இருக்க வேண்டும் என்று ஒப்படைத்த இயக்கத்தை தான் இந்தியா தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்தியது. அன்றும் சரி என்றும் சரி புலிகள் இயக்கம் சிங்கள இராணுவத்தை எதிர்த்து சண்டை போட்டாலும் ஈழத்தில் இருக்கும் சிங்கள் கிராமங்களை அழிக்க முயற்சி செய்தது இல்லை.

இந்திய வீரர்களை ஒப்படைத்த ஆறாம் நாள் நவமர் 23ம் தேதியே போர் நிறுத்தத்தை ரத்து செய்து மீண்டும் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கியது என்று தன்னிச்சையாக அறிவித்தது இந்தியா. ஆனால் கடைசி வரையில் போரின் விதிகளை மிகவும் அமைதியாக கடைபிடித்து போரிட்ட இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம், என்றும் மக்கள் வாழும் பகுதியில் குண்டுகள் போட்டதில்லை மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து இந்திய இராணுவத்தினர் போல் அராஜகம் செய்தது இல்லை புலிகள் இயக்கம். ஒரு விடுதலைப் போராட்டத்தை அதுவும் ஒடுக்கபப்ட்ட மக்களின் விடுதலை போராட்டத்தை எதிரியை ஒடுக்கி பெறுவது அல்ல விடுதலை என்பதை உணர்ந்து, எதிரியுடன் சரிநிகர் சமானமாக நின்று தம் இனத்தின் விடுதலைக்காக போரிட்ட இயக்கமே புலிகள் இயக்கம். 

No comments:

Post a Comment