Thursday, April 10, 2014

மாணவர் போராட்டம் - வெணின்சுலா


வெணின்சுலா சாவேஸ் அவர்களின் மறைவிற்கு பின் உலக மக்களின் முன்னால் இருந்த கேள்வி, அமெரிக்காவின் ஆதிக்கத்தை இனி எதிர்த்து நிற்கும் முதுகெலும்பு உள்ள ஒரு தலைவர் யார் என்பதாக இருந்தது. ஆனால் இன்று வெணின்சுலாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, மற்றுமொரு சர்வாதிகார நாடாக மாறிவருகிறது. வெணின்சுலாவில் கடுமையான உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதன் விளைவாகவே மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் இதற்கு பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருகிறது. சென்ற மாதம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் ஒன்று கூடி போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக வைத்திருக்கும் 13 போராளிகளை விடுவிக்க சொல்லி அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் முடிந்து அனைவரும் வீடுகளுக்கு திரும்பிய நிலையில் கடைசியாக இருந்த சில போராட்டக் காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நடந்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

                                      

இதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டங்கள் நடந்து வருகிறது, இத்தகைய நிலையிலேயே அரசுக்கு ஆதரவானவர்களும் காவல்துறையினரும் கைகோர்க்க ஆரம்பித்துள்ளனர். அப்படி ஒரு சமயத்தில் தான் ஒரு போராட்டத்தில் ஏப்ரல் 3ம் தேதி தனியாக கிடைத்த ஒரு மாணவரை நிர்வாணப் படுத்தியிருக்கின்றனர் காவல்துறையினருடன் வந்த அரசு ஆதரவாளர்கள். இதற்கு எதிர்வினையாக தற்பொழுது மாணவர்கள் எடுத்திருக்கும் போராட்டம் தான் மிகப்பெரிய போராட்ட வழிமுறையாக மாறியுள்ளது. ஆம் சமூக இணைய தளங்களின் ஊடாக இன்று நடந்து கொண்டிருக்கும் போராட்டம் வெணின்சுலாவின் பிரச்சனைகளை உலக அரங்கில் நிர்வாணப்படுத்தி இருக்கிறது எனலாம். ஆம் மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து எடுத்து இருக்கும் இந்த போராட்ட வழிமுறை உலக அரங்கில் அனைவராலும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


காவல்துறையும் அரசும் அதன் ஆதரவாளர்களும் இணைந்து போராடுபவர்களின் மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அடக்கு முறையை மிகவும் அமைதியாக ஆனால் அதன் வலியை உலகிற்கு உணர்த்தும் விதமாக மிகவும் நேர்த்தியாக ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த அரசாங்கம் எங்களை நிர்வாணப்படுத்தி பார்க்க விரும்புகிறது என்பதை தங்களின் ஆடைகளை கலைந்து ட்விட்டரில் தங்களது படங்களை பதிந்து வருகின்றனர். இதில் இரண்டு குழந்தைகளின் தாயார் கூட தனது படத்தை பதிந்து நான் இரண்டு மாணவர்களுக்கு தாய் நானும் இவர்களுடன் போராட்டத்தில் இணைகிறேன் என்று தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் முதன் முதலில் வெணின்சூலாவைச் சேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலதிகாரி முன்னெடுக்க அவரின் 16 நண்பர்களிடமும் ஆதரவு திரட்டி அவர்களையும் இணைத்து #ConcluUCV பதிவிட்டுள்ளனர். இது மிக விரைவில் பெரிய அளவு ஆதரவைப் பெற்று மேலும் பல ஹாஸ்டாக்குகள் உபயோகிக்கப்பட்டு பலத்த ஆதரவை பெற்றுள்ளது.



#MejorDesnudosQue (Better Naked Than) கிட்டதட்ட 180,000 முறையும், #DesnudosConLaUCV (Naked with the Central University of Venezuela) கிட்டதட்ட 113,000 முறையும் மேலும்  #MejorDesnudosQueSinLibertad (Better Naked Than Without Liberty) என்ற பதிவின் கீழ் 3,000 முறையும் பதியப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று வெணின்சுலாவின் அதிபருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

இதைப் போன்ற மக்கள் பங்கு பெரும் போராட்ட வழிமுறைகளே வருங்காலத்தில் அரசுகளுக்கு மக்களின் தேவையை அரசுகளுக்கு உணர்த்தும் மிகவும் வலுவான போராட்ட முறைகளாக இருக்க முடியும். 

No comments:

Post a Comment