Friday, March 28, 2014

இனம் - The mob



முதலில் நன்றி சொல்வது தான் எப்பொழுதும் நமக்கான பாரம்பரிய தமிழின குணத்தின் கடமை என்பதால் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன் சந்தோஷ் சிவனுக்கும் லிங்கு சாமிக்கும். ஒரு இனப்படுகொலை நடந்தது இன்று திட்டமிட்ட இன அழிப்பு நடந்தேறி வருகிறது இந்த சூழ்நிலையில். 2009ல் நடந்த இனப்படுகொலையை இது வரை இந்த அளவு நேர்த்தியாக பொதுமக்களை சென்றடையும் ஊடகம் வழியாக யாரும் சொல்லவில்லை என்பதற்காக. ஆம் ஐ.நா அலுவலகத்தை சிங்கள அரசு ஈழப்பகுதியில் இருந்து வெளியேற சொல்லியது 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்பொழுது வெளியேறிய ஐ.நா ஊழியர்கள் பேசிக் கொண்டதை மிகவும் அருமையாக சித்தரித்து இருக்கிறீர்கள். அதில் பின்னால் நின்று தொலைபேசியில் பேசுபவர் தனது மேலதிகாரிக்கு இங்கு நடப்பது இனப்படுகொலை இதை நாம் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அவர் பின்னால் நிற்காமல் முன்னால் நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஏதோ இந்த அளவிற்காவது உங்களுக்கு செய்யனும் தோன்றியதற்காக நன்றிகள்.

இனம் ஒரு வரி விமர்சனமாக சொல்வதென்றால் படத்தின் பெயரிலேயே ஆரம்பித்துவிடுகிறது.. “இனம்- The Mob" இனம் என்றால் ஒரு கூட்டமாம். The Ethnicity என்று குறிப்பிட்டிருக்கலாம் ஆனால் ஒரு கூட்டமாக சித்தரிக்கிறார்கள். அடுத்து இனம் படத்தின் கதை ஈழத்தில் கடைசிகட்ட போர்காலத்தின் ஊடக அங்கு நடந்த கொடூரங்களை காட்டும் ஒரு முயற்சி, ஆனால் யார் செய்த கொடூரங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதில் தான் சிக்கல். ஒவ்வொரு காட்சியும் நகரும் பொழுது தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை காட்டுவது போல் இருந்தாலும் ஒட்டுமொத்த கட்டமைப்பில் உடைத்து எறிந்து இருக்கிறார்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை.

முழுகதையும் சிலவரிகளில் முடித்துவிட்டு அடுத்து நமக்கு எதிரான கட்டமைப்புகள் எவை என்று பார்க்கலாம். ரஜனி கதையின் நாயகி (இந்த பெயர் ரஜனி திரணகாமவை நியாபகப்படுத்தும் ஒரு சொல்லாடல்) சிறு வயதில் பெற்றோரை இழந்தவர் சுனாமி அக்கா என்பவர் நடத்தும் ஒரு காப்பகத்தில் வளர்கிறார் இவருடன் ரவி, முத்து, ஆயிசா, சாவித்திரி, ரூபன் போன்ற பல குழந்தைகளும் வளர்கின்றன, அங்கு ஒரு பாடசாலை அதில் ஸ்டீபன் எனும் வாத்தியார் மற்றும் அவரின் மனைவி வசிக்கிறார்கள். இதில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இனக்கலவரத்தில் பாதிக்கபப்ட்டவர்கள். கடைசி போர் காலகட்டத்தில் இவர்கள் பயணித்து பல்வேறு துன்பங்களை தாண்டி அங்கிருந்து தப்பி அகதியாக ஒரு முகாமுக்கு வந்து சேர்வதாக முடிகிறது கதை.

ஸ்டிபன் வாத்தியார் பாடம் எடுக்கிறார் இது ஒரு காட்சி, இதில் வாத்தியாராக நடித்திருப்பவர் கருணாஸ், மொழி என்பதைப் பற்றி பாடம் எடுக்கிறார், அதில் ஒரு வரி கூட அவர் தமிழில் பேசவில்லை ஆனால் ஆங்கிலத்தில் சொல்வது என்னவென்றால் உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மொழி தான் அழுகும் சிரிக்கும் இது மட்டும் தான் மொழி, ஆனால் இந்த உலகத்தில் வாழ முக்கியம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று பாடம் எடுக்கிறார், மேலும் உலகத்தில் அதிகமானவர்கள் பயன் படுத்தும் மொழி என்ன என்று கேள்வி கேட்டு ரஜனி அதற்கு மாண்ட்ரீன் என்று பதில் சொல்வதையும் சேர்த்து மொழியின் கீழாக பெருமைப் பட்டுக்கொள்வது என்ன என்ற கேள்வியுடன் நம்மை தொங்க விடுகிறார்கள். இதில் படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலில் செம்மொழி என்று குறிப்பிட்டுவிட்டு உள்ளே தமிழினம் என்பது மொழியின் கீழாக அமைவதை கேலிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

அதன்பிறகு அங்கு போராளிகள் வருவதாகவும் அவர்கள் படம் போட்டு காட்ட விரும்புவதாகவும் சொல்லி கரும்பலகையை மறைத்து வெள்ளைத்திரை போட்டு போராட்ட காட்சிகளை மாணவர்களுக்கு காட்டுவதாகவும், அதை பார்த்த மாணவர்கள் சந்தோசப் படுவதாகவும் காட்டுகிறார்கள். மாணவர்களிடையே போர் குறித்த ஒரு மாயை உருவாக்கும் கட்டமைப்பு இந்த காட்சியில் ஆனால் இவர்கள் யாரும் இந்திய தேசிய மாணவர் படையில் 13 வயது பையன் கையில் துப்பாக்கி கொடுத்து சுடப் பயிற்சி கொடுப்பதை தப்பென்று சொல்லி இது வரை ஒரு படமும் எடுக்கவில்லை என்பது நிதர்சனம். 

ஒவ்வொரு காட்சியின் பிண்ணனியிலும் தங்களுக்கான அரசியலை செய்தே வந்திருக்கின்றனர், ஒட்டுமொத்த கதையமைப்பில் தமிழர்கள் தரப்பில் சிங்களவன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சிறுவர் போராளி, மக்களுடன் இருந்து கொண்டு கேடயமாக பயன்படுத்தினர் என்று ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் காட்டியவர்கள். இரண்டு சிங்களவர்களை ரொம்ப நல்லவர்களாக காட்டியிருக்கிறார்கள். அதுவும் ஐ.நா அதிகாரிகள் வெளியேறிய பின் காப்பகத்தின் மீது குண்டு விழுந்து சுனாமி அக்காவின் வீடு இடிந்துவிடுகிறது ஒரு குழந்தையும் பழியாகிறாள். அப்பொழுது அனைவரையும் பாதுகாக்க சுனாமி அக்கா ரஜனி, முத்து, ஆயிசா, நந்தன் ஆகியோரை பக்கத்தில் இருக்கும் இன்னொரு வீட்டுக்கு போகச் சொல்கிறார் போகும் வழியில் அவர்கள் ஒரு புத்த பிக்குவை பார்க்கிறார்கள், அவர் ஓடையில் துணியின் மூலமாக தண்ணீர் சேகரிப்பது போலவும் அப்பொழுது மாட்டும் மீனை திரும்பவும் ஓடையில் விடுவது போலவும், ஒரு மாதுளையை இவர்கள் நால்வருக்கும் தருவது போலவும் சித்தரித்து இருக்கிறார்கள். போர் நடக்கும் அந்த பகுதியில் எதற்கு அந்த புத்த பிக்கு வந்தார், எப்படி வந்தார் என்பது எல்லாம் இல்லை. சும்மா போற போக்கில் அவரை திணித்து அதிலும் அவர் போல் நல்லவர் உலகில் வேறு யாருமே இல்லை என்பது போல சித்தரித்துள்ளனர். 

அடுத்து இராணுவ வீரர் ஒருவர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது போலவும், கடைசியில் ரஜனியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொண்டு இருக்கும் தங்கள் சக வீரர்களை பார்த்து, இவர்கள் என் நண்பர்கள் ஆனால் போர் அவர்களை மிருகமாக்கிவிட்டது என்கிறார். ஆம் சிங்களவர்கள் எல்லோரும் நல்லவர்கள் பொது பல சேன, மஹா போதி சொசைட்டியில் இருக்கும் புத்த பிக்குகள் என்றுமே யாரையும் அடித்ததும் இல்லை அடிக்க சொன்னதும் இல்லை, ஏன் இராணுவ வீரர்களும் மிக மிக நல்லவர்கள் போர் அவர்களை மிருகமாக்கிவிட்டது என்றும் சொல்லி சிங்கள காடையர்களின் அந்தியந்த தோழர்களாகிவிட்டனர் நம்ம சாமியும் சிவமும். 

இதில் ஒரு மூட நம்பிக்கையையும் விதைக்கிறார்கள் அதுவும் எப்படி என்றால் இறந்தவர்கள் கண்ணை மூடாமல் பார்த்துக் கொண்டே இறந்தார்கள் என்றால் திரும்ப வருவார்கள் என்று சுனாமி அக்கா சொன்னதாக சண்டையில் இறந்த போராளியையும் ஒரு இராணுவ வீரனையும் காட்டி ஒரு வசனம் இருக்கும் எதுக்குடா இந்த காட்சி என்று யோசித்திருக்க கூட மாட்டோம். ஆனால் பல காட்சிகள் கடந்து நந்தன் என்ற சிறப்பு குழந்தையின் (Special Children)  தம்பியை காயங்களுடன் மருத்துவமனையில் காட்டுகின்றனர், அவன் கடைசி போர் காலத்தில் லீடருடன் இருந்தேன் அவர் இறந்தபொழுது கண்களை மூடவில்லை என்கிறார். அப்பொழுது நந்தன் கண்களை மூடாமல் இறந்தவர்கள் திரும்ப வருவார்கள் என்கிறார். இதில் கூட ரவியும் இருப்பான் நந்தன் எனது சகோதரன் பெரிய வீரன் என்று சொல்லியிருப்பான் முன்பே அந்த சிறுவனைப் பார்த்து இவனா வீரன் என்று கேட்கும் பொழுதே லீடர் கடைசி போரில் இறந்துவிட்டார் என்பதை சொல்வான். அதாவது புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் போராளிகளாக இருந்தனர் அதிலும் தலைவரின் அருகில் கடைசி கட்டம் வரை மெய்க்காவல் படையாகக் கூட சிறுவர் போராளிகளை பயன் படுத்தியதாக காட்டியிருக்கிறார்கள். மேலும் தேசியத் தலைவரின் இறந்துவிட்டார் என்பதை ஆவணப்படுத்தும் ஓர் முயற்சி. இத சர்வதேச ஊடகங்களை கூப்பிட்டு அவர்கள் முன்னால் தலைவரின் உடலை காட்டியிருந்தால் அதிகாரப்பூர்வமாக ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இராணுவத்தினர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே உள்ளன.

கடைசியாக மருத்துவமனையில் தம்பியை பார்த்துவிட்டு ரஜனியை தம்பியிடம் காட்டுவதற்காக ரஜனியை கூட்டி போக ஓடி வரும்பொழுது தான் ஒரு சிங்களவன் ரஜனியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திகொண்டிருப்பான் அப்பொழுது சிறப்பு குழந்தையான நந்தன் தனக்கான உலகத்தில் மட்டுமே வாழும் அந்த குழந்தை கத்தியை எடுத்து அந்த சிங்களவனை கொலை செய்வான். ஏதும் அறியாத தனக்கென ஒரு உலகை அமைத்து அதில் வாழும் ஒரு சிறப்பு குழந்தையின் உணர்ச்சியை நன்றாக படம் பிடித்து காட்டியவர்கள் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கி சண்டை போடுவது சண்டைபிடிக்கும் மோகத்தினால் மட்டுமே எந்த உணர்வின் அடிப்படையிலும் இல்லை என்பது போல் சித்தரித்திருப்பது மிகப்பெரிய முரண்.

படம் ஆங்கிலத்தில் சிலோன் என்ற பெயரிலும் தயராகியுள்ளது, சர்வதேச திரைப்பட விழாக்களை குறிவைத்தும், சர்வதேச அரசியலில் இலங்கையில் நடந்தது ஒரு இனக்கலவரம் என்பதைவிட ஒரு தீவிரவாத இயக்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான ஒரு போர் என்பதாக சித்தரிக்கும் வகையில் உள்ளது. இதை தமிழில் நாம் தடை செய்தாலும் சர்வதேச அரங்கில் இந்த படம் தனக்குண்டான அரசியலை தாராளமாக செய்யும். அதை நம்மால் தடுக்க இயலுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டால் ஈழத்தில் நடந்த கொடூரங்களை காட்சிப் படுத்தும் ஒரு ஆவணமாகவும் மாற்றலாம்.

ஆகமொத்தம் இனம் - ஒரு சிங்கள ரவுடி கூட்டத்தினூடாக தமிழர் கதை பேசுவது போல் நடிக்கிறது.

1 comment: