Wednesday, March 19, 2014

அரசியல் இல்லாத அரசியல் - Beating around the bush


Beating around the Bush

இது ஒரு ஆங்கில பழமொழி, இதன் அர்த்தம் ஓர் விவாதத்தில் நேரடியாக கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெவ்வேறு விசயங்களைப் பேசிக்கொண்டு சுற்றி திரிவதை குறித்து, நேரடியாக விவாதக் கருத்தின் கீழாக பேசச் சொல்லிக் குறிப்பது. ஆனால் இந்த Beating around the Bush என்பது மிகவும் பழமையான ஒரு விசயம் அதுவும் வேட்டையாடும் சமூகமாக மனித இனம் இருந்த பொழுதிலிருந்து பயன்படுத்திய ஒரு நடைமுறை. ஒரு காட்டு புதருக்குள் இருக்கும் மிருகங்களை வெளியில் கொண்டு வர புதரை சுற்றி கட்டைகளாலும் குச்சிகளாலும் புதரை சுற்றி அடிப்பார்கள் அப்பொழுது உள்ளிருந்து பயத்தில் வெளியில் வரும் மிருகத்தை வேட்டையாடுவார்கள். இப்படி வேட்டைக்கு உதவிய ஒரு முறை ஆனால்  இன்று வாத பிரதி வாதங்களில் இந்த முறை பயன்படுத்தப் படுகிறது. கேட்கப்படுகின்ற கேள்வி என்ன என்பது புரிந்தாலும் அதன் கீழான விவாதங்களை கொண்டு செல்லாமல் சுற்றி சுற்றி மற்ற விசயங்களை பேசித் திரிவது என்பது தான் நடந்து கொண்டுள்ளது ஐ.நா குறித்த விவாதங்களில்.

இதில் பலர் வாதங்களில் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள்கள் அதன் கீழான வாதங்கள்.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், டப்ளின் தீர்ப்பில் பேர் குற்ற விசாரணை என்று சொல்லிய பொழுது அதை தூக்கி திரிந்த தோழர்கள் இப்பொழுது போர் குற்ற விசாரணை என்ற பதத்தையே எதிர்க்கிறார்கள். 

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், டப்ளின் அமர்வு நடந்தது 2010ம் ஆண்டு, 2009ம் ஆண்டு மிகப்பெரும் உயிர்பலிகளை கொடுத்த தமிழ் சமூகமாக நின்றோம் அப்பொழுது சர்வதேச அரங்கில் இருந்து எதோ ஒரு குரல் வராதா என்ற காலகட்டத்தில் தான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் மிகப்பெரும் அவலம் நடந்திருக்கிறது அதைப் பற்றிய விசாரணை வேண்டும். போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது அது மட்டுமல்ல இனப்படுகொலை நடந்து இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது என்று சொன்னது. (பக்கம் 13, 3வது பத்தியில்) (1)   அன்றைய நமக்கான குரலாக அதை எடுத்துக்கொண்டோம் ஆனால் அன்றும் நாம் சொன்னது தான் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை தான் அதை இன்று வரை தொடர்ந்து சொல்லி வருகிறோம். 

ஏன் அன்று FICCI விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்திற்கான பத்திரிக்கையாளர் செய்தியில் டப்ளின் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளவைகள் என்று குறிப்பிட்டு  சொல்லியிருப்பவை யாவை என்று நீங்களே பார்த்துக் கொள்ளலாம்..  (2)


அன்று டப்ளின் தீர்ப்பாயம் இனப்படுகொலை என்றும் சொல்லியிருக்கிறது என்று வலியுறுத்தியவர்கள் இன்று போர்குற்றம் என்று மட்டும் தான் பேசியதாக டப்ளின் தீர்ப்பாயத்தின் மீது பலி போடுவது என்ன குணமோ. அது சரி விடுங்கள் மக்கள் மன்றத்தில் பேசுவது வேறு அரசியலாகவும் நாம் பேசுவது வேறு என்ற அவர்களின் சித்தாந்ததின் அடிப்படையாக இருக்கலாம். 

ஆனால் அவர்களின் கூற்றின் படியே டப்ளின் தீர்ப்பாயம் போர்குற்றத்தை வலியுறுத்தியதை அதைத் தூக்கிக் கொண்டு சுற்றினோம். அதே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அடுத்தகட்டத்திற்கு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு இனப்படுகொலை நடந்தமைக்கான ஆதாரங்களை சமர்பித்து அடுத்த அமர்வில் பெர்மன், ஜெர்மனியில் இனப்படுகொலை நடந்தமைக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன, இனப்படுகொலைக்கான விசாரணை வேண்டும் என்று 2013, டிசம்பரில் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கியது.(3) இன்றைய கால கட்டத்தில் இனப்படுகொலை என்பதற்கான விசாரணையை வலியுறுத்தியுள்ள சர்வதேச சமூகம் நாம் கையறு நிலையில் நின்ற பொழுது எந்த தீர்ப்பாயம் நமக்கு ஒரு வெளிச்ச கீற்றை கொடுத்து நம் பயணத்தை ஆரம்பித்து வைத்ததோ அதே தீர்ப்பாயம் அடுத்து ஒரு தீப் பந்தத்தத்தை நம் கையில் கொடுத்திருக்கிறது. அதை ஏந்துவது தானே முறை ஆனால் அதை விடுத்து இன்னும் டப்ளின் தீர்ப்பாயம் மட்டுமே போதும் என்கிறீர்கள்.  பெர்மன், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தூக்கி குப்பையில் எரிந்தது போல் தெரிகிறதே இவர்களின் நகர்வுகள்.

ஒரு சின்ன பின்னூட்டமும் இங்கு அவசியம்.. 

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், டப்ளின் அமர்வு - ஜனவரி 2010
இதன் பிறகே பான் கீ மூன் இலங்கை விசயத்தில் தனக்கு ஆலோசனை சொல்ல ஒரு குழுவை நியமிக்கிறார். 
ஐ.நா நிபுணர் குழு நியமிப்பு                                  - ஜூன்  2010

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை                                - ஏப்ரல் 2011
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்கிறது அதில் குழு கேட்டிருப்பது என்னவென்றால், Sovereign right to every country to end terrorism. But the way had not justified. கடைபிடித்த மார்க்கம், வழி சரியில்லை என்று சொல்கிறது ஐ.நா.அறிக்கை. இதுதவிர, எந்தப் போரானாலும் மக்களை இலக்காக வைத்து தாக்கக்கூடாது என்று சொல்கிறது இந்தக் குழு. ஆனால், இந்தப் போரில் நடந்தது என்னவென்றால், மக்களை இலக்காக வைத்திருக்கிறீர்கள், பார்த்து பார்த்து குண்டு வீசியிருக்கிறீர்கள். மக்களுக்கும் போராளிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடத்தியிருக்கிறீர்கள். பொதுமக்கள் வாழும் பகுதிகள் தெரிந்தும் அவர்களை பசியிலும், பட்டினியிலும் வைத்திருந்திருக்கிறீர்கள். உணவு, தண்ணீர், மருத்துவம் எதுவும் சென்று சேராமல் தடுத்திருக்கிறீர்கள். கடைசி 9 மாதமாக இதனை கடைபிடித்திருக்கிறீர்கள்.
முதலாவது அமெரிக்க தீர்மானம்                      - மார்ச் 2012
இந்த அறிக்கையின் பின்னால் இலங்கை குறித்த விவாதங்கள் சர்வதேச அளவில் எழுகிறது. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்க இலங்கையை கண்டித்து தீர்மானம் கொண்டுவருவதாக கூறுகிறது.
பெட்ரி அறிக்கை                                                        - நவம்பர் 2012
ஐ.நாவின் நடவடிக்கைகளின் உள்விசாரணை செய்து குறைகளை பற்றிய அறிக்கை. இலங்கை விவகாரத்தில் ஐ.நா தவறிய விடயங்களை தெளிவாக எடுத்து சொல்கிறது. சில விசயங்களை மறைத்து வெளியிட்டது ஐ.நா.
இரண்டாவது அமெரிக்க தீர்மானம்                   - மார்ச் 2013
மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு செல்ல சொல்கிறது அவரின் அறிக்கையை கேட்கிறது. 
நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், பெர்மன் அமர்வு  - டிசம்பர் 2013
இது வரை நாம் மட்டுமே இனப்படுகொலை என்று பேசிக்கொண்டிருந்தோம், சர்வதேசம் போர்குற்றம் என்றே சொல்லிக் கொண்டிருந்தது. முதன் முதலில் சர்வதேச அரங்கில் ஆணித்தரமாக இனப்படுகொலை என்று பதியப்படுகிறது. 
மூன்றாவது அமெரிக்க தீர்மானம்                    - மார்ச் 2014
இரண்டாவது தீர்மானத்தில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கேட்டவர்கள், அறிக்கையில் போர் குற்ற விசாரணை என்று கூறப்பட்டிருப்பதன் கீழாக அடுத்த நடவடிக்கைகயை எடுக்காமல், இலங்கைக்கு இன்னும் 18மாதங்கள் கால அவகாசம் கொடுத்து தீர்மானத்தை வடிவமைக்கிறார்கள். இந்த தீர்மானமும் வெற்றி பெரும். 

2010ல் இருந்து சிறிது சிறிதாக நமது கோரிக்கைகள் நகர்த்தப்பட்டு வருகின்றன, இதில் நடுவில் தடைகளும் போடப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளது இதன் பிறகும் நான் 2010ல் உட்கார்ந்து அங்கிருந்து தான் என் அரசியலை தொடர்வோம் என்றால் அது அரசியல் அல்ல அவியல். 

இவைகள் எதுவும் தெரியாதவர்கள் இங்கு அமெரிக்காவை எதிர்ப்பது தவறு என்று சொல்லவில்லை, இவை அனைத்தையும் உணர்ந்தவர்களே தவறு என்கிறார்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல அல்ல இந்த பதிவு. இங்கு பார்த்துக் கொண்டிருக்கும் தோழர்கள், ஏன் இப்படி ஒரு வாதப் பிரதிவாதஙக்ள் நடந்து கொண்டுள்ளது என்று புரியாமல் இருக்கும் தோழர்களுக்கு இதன் பின்னாலான அரசியல் என்ன என்பதை புரிந்துகொள்ளவே.. 

எனென்றால் இதையெல்லாம் புரிந்து கொண்டே சிலர் Beating around the bush என்று புதருக்குள் பாம்பிருக்கிறது அதனால் அடிக்கிறேன் என்று அடித்துக் கொண்டே இருப்பார்கள். எனென்றால் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு தெரியவைக்க வேண்டிய கட்டாயநிலை. சும்மா இருக்கிறார்கள் என்று யாரும் குற்றம் சாட்டிவிடக் கூடாது என்ற நிர்பந்தம். நாமும் புதரை அடித்து பாம்பை அடிக்க வேண்டாம் பாம்பை பிடித்து அடிக்கும் வழிவகையை தேடுவோம். 

    






No comments:

Post a Comment