Friday, February 28, 2014

முற்றுகை போராட்டமும் காங்கிரஸின் பூஸ்வா மனப்பான்மையும்


இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் என்பது ஜனநாயக வழிப் போராட்டமா என்ற கேள்வியும், எப்படி நீங்கள் அடுத்தவர்களின் அலுவலகத்தின் முன் நின்று போராடலாம் இது தவறல்லவா என்ற அறிவுறுத்தலும், எல்லாவற்றையும் தாண்டி முற்றுகை போராட்டம் என்பது வன்முறை போராட்ட வடிவம் என்று சித்தரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணம் தமிழில் இந்த போராட்டத்திற்கான சரியான சொல் வடிவம் இல்லாமல் போனதே. ஆங்கிலத்தில் இந்த போராட்டத்தை Picket என்றும் நடத்துபவர்களை Picketers என்றும் அழைப்பார்கள். ஆனால் தமிழில் இது முற்றுகை என்றே அழைக்கப்படுகிறது முற்றுகை என்பது இராணுவத்தில் சொல்லப்படும் ஒரு வடிவம் Siege என்பது ஆனால் தமிழில் அரசியல் ரீதியாக் ஜனநாயக வழிமுறையில் ஒர் அமைப்பு அல்லது நிறுவனம் எடுத்திருக்கும் நிலைப்பாடு தவறானது என்பதை அவர்களுக்கு சொல்ல அந்த அமைப்பு அல்லது நிறுவனத்தின் முன்பாக நின்று எதிர்ப்பை தெரிவிக்க சரியான வேறு ஓர் சொல் இல்லாததாலேயே முற்றுகை என்று வார்த்தையை பயன் படுத்துகிறோம். 

(1930ல் அந்நிய துணிகள் எதிப்பிற்காக துணிக்கடையை முற்றுகைக்கு கிளம்பும் பெண்கள்)

தமிழகத்தில் இத்தகைய முற்றுகை போராட்டங்கள் பல நடந்துள்ளன சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே. அயல் நாட்டு துணிகளை வியாபாரம் செய்யும் கடை முன்னால் நின்று முற்றுகையிட்ட சம்பவங்களும் உண்டு. ஆனால் அன்று கடைகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தான் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த ஒதுக்கப்படும் இடங்களில் தான் போராட வேண்டும். மற்ற இடங்களில் செய்யக் கூடாது முற்றுகை போராட்டம் என்பது ஜனநாயக வழிப் போராட்டம் இல்லை என்கிறது. 1947ல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக இவர்கள் தான் அறிவிக்கிறார்கள் ஆனால் தனது உரிமை மறுக்கப்படும் பொழுது மக்கள் எதிர்த்து நின்று போராட ஒரு குறிப்பிட்ட இடத்தை தான் உபயோகிக்க வேண்டும் என்று மக்களின் போராட்ட உரிமையை பறித்துவிட்டு என்னவோ போராட உரிமை கொடுக்கிறோம் சுதந்திரமாக போராடுங்கள் என்று டில்லியில் ஜந்தர் மந்தர், மும்பையில் ஆசாத் மைதானம், பெங்களூரில் டவுன் ஹால், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கலெக்டர் ஆபிஸ் என்று ஒதுக்கிவிட்டு அங்கு தான் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று சொல்வது தான் சுதந்திர இந்திய நாடாம்.. ஆங்கிலேயன் ஆட்சிகாலத்தில் கள்ளுக் கடைகளுக்கு முன்னால் போராடியது, துணிக் கடைகளுக்கு முன்பு போராடியது எல்லாம் சுதந்திரம் இல்லாமல் செய்தார்களாம் இவர்கள், சரி விடுங்க நம்ம முற்றுகை போராட்டத்திற்கே வருவோம். 


இங்கு முற்றுகை போராட்டம் என்பது உலக அளவில் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு போராட்ட வழிமுறையே அதுவும் ஜனநாயக வழிமுறையே. தங்களது எதிர்ப்பை தெரிவிக்க இத்தகைய போராட்டத்தை செய்யலாம் என்று பல நாடுகளில் அனுமதியுள்ளது அதுவும் நிபந்தனைக்கு உட்பட்டது தான் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நடத்துவது மட்டும் தான் அந்த நிபந்தனை. இதே போன்று தான் இந்தியாவிலும் இந்த முற்றுகை போராட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது அதன் கீழாக முற்றுகை போராட்டங்கள் நாடு முழுவது நடைபெற்று வருகிறது. இதில் விதிமுறைகளை மீறாமல் செயல்படும் வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது ஆனால் விதிமுறைகள் மீறினால் அதிகபட்ச தண்டனையாக 6 மாதம் சிறைத் தண்டனையும் அல்லது அபராதத் தொகையும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

சரி முற்றுகை போராட்டத்தின் விதிகள் என்ன குறிப்பிட்ட அலுவலகம் வீடு முன்பாக கூடி ஒரு எல்லைக்குள் நின்று அவர்களின் எதிர்ப்பை பதிவு செய்வது தான் முற்றுகை போராட்ட வழிமுறை. இதை யார் எதிர்க்கப்படுகிறார்களோ அவர்கள் அதற்கான தீர்வை சொல்வது தான் ஜனநாயக நடைமுறை அதை விடுத்து முற்றுகை இட்டு போராடுபவர்களை நோக்கி நீ முற்றுகை இடக் கூடாது என்று சொல்வதோ இல்லை அவர்களை விரட்ட முற்படுவதோ தான் வன்முறை. ஜனநாயக ரீதியாக போராடும் மக்களின் குரல்களுக்கு செவிமடுக்காமல் அவர்களின் குரல்வளையை நெறிக்கும் முயற்சிகளை வன்முறையாகவே கருத வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் ராஜாஜியின் வீடு முற்றுகையிடப்பட்டது ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட குழுக்களாக வந்தவர்கள் தனித்தனியாக கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. 



அது போன்றது தான் நாம் தமிழர் அமைப்பு அழைத்த சத்திய மூர்த்தி பவன் முற்றுகை போராட்டமும் இதில் நாம் தமிழர் அமைப்பினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முற்றுகை போராட்டத்தை நடத்தினர் அப்பொழுது சத்திய மூர்த்தி பவனுக்குள் இருந்து எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர் காங்கிரஸார் வன்முறையாக நாம் தமிழர் அமைப்பின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல். அதன் பிறகு நாம் தமிழர் அமைப்பினர் கைது செய்யப்பட்டு சென்ற பிறகு அங்கு தாமதமாக வந்த நாம் தமிழர் அமைப்பினரின் ஒரு வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள். அந்த வாகனத்தையும் அதில் இருந்தவர்களையும் காவல்துறையினர் காப்பாற்றி ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து சமூகநலக் கூடத்தில் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.



இதன் பிறகே அடுத்த இயக்கமான தமிழர் முன்னேற்றப் படை இயக்கம் வந்திருக்கின்றனர் அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் ஆனால் காங்கிரஸ் காரர்கள் உள்ளே இருந்து கூச்சல் போடுவதும் ஏற்கெனவே ஒரு காரை தாக்கியதில் ஏற்பட்ட்ட களிப்பில் இவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். தனியாக வந்த ஒரு காரை அடித்து வீரத்தை காட்டியவர்கள் இப்பொழுது தங்கள் அலுவலக சுற்று சுவருக்குள் இருந்து கொண்டு கற்களை வீசியுள்ளனர். இதை பொறுத்துக்கொள்ளாத தமிழர் முன்னேற்ற படையினரில் சிலர் திரும்ப தாக்க முயல காவல் துறை அவர்களை தடுத்திருக்கிறது இந்த வேளையில் தான் காங்கிரஸினர் வெளியில் வந்தும் தாக்குதலை தொடுத்துள்ளனர் அவர்களை தடுக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டது. 

இங்கு வன்முறை என்பது முற்றுகை போராட்டம் என்ற ஜனநாயக வழியில் ஒரு கட்சியின் அலுவலகத்தின் முன்பு தங்களின் எதிர்ப்பை முழக்கங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் இல்லை. ஜனநாயக ரீதியாக கோரிக்கை முழக்கங்கள் இட்ட தோழர்களின் குரல் வளையை நெறிக்க முயன்ற காங்கிரஸினரே வன்முறையாளர்கள். இதை உணராமல் இங்கு ஊடகத்தை சேர்ந்த சிலர் இந்த போராட்ட அறிவிப்பே வன்முறையை தூண்டுகிறது என்று பேசுகிறார்கள். இது வரை 2009ல் இருந்து மூன்று முறை மே 17 இயக்கம் சத்திய மூர்த்தி பவனை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தியுள்ளது இதில் இரண்டு போராட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். கடைசியா சென்ற வருடம் மார்ச் மாதம் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தி நின்று கோசங்கள் கூட போடாமல் இருந்த பொழுதே காங்கிரஸினர் உள்ளிருந்து ஓடிவந்தனர் எங்களை அடிக்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் எங்களுடன் நின்ற தோழர்கள் உணர்ச்சி வசப்பட்ட பொழுது அதை தடுத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தி முழக்கங்கள் இட்டு காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தோம்.

ஆனால் அங்கு வைக்கப்படும் கோரிக்கைகளை கேட்க கூட மனமில்லாமல் ஜனநாயகரீதியாக போராடுபவர்களை அடிக்கத் தான் காங்கிரஸினர் முயன்றனர் இவர்கள் தான் வன்முறையாளர்கள். முற்றுகை போராட்டம் என்பது ஜனநாயகரீதியான போராட்டமே அதை வன்முறை போராட்டமாக சித்தரிப்பது தவறான முன்னுதாரணம். இந்தியா என்பது சுதந்திர நாடு என்றால் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதியும் உண்டு அதற்கான தண்டனை சட்ட வரையறையும் உள்ளது இதை மறுத்துக் கொண்டு தவறான போராட்ட வழிமுறை என்று பிதற்றுபவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடத்திய முற்றுகை போராட்டங்களை தாங்கள் நடத்தவில்லை என்று சொல்லிவிட்டு முற்றுகை போராட்டம் ஜனநாயக போராட்டம் இல்லை என்று கூவட்டும்..  முற்றுகை போராட்டத்தை வன்முறை அரசியல் என்று சொல்வதில் காங்கிரஸின் பூஸ்வா மனப்பான்மை தெள்ளத் தெளிவாக தெரிகிறது.. 

No comments:

Post a Comment