Monday, February 10, 2014

மரணதண்டனை என்பது மனித உரிமை மீறல்


மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துக்கு வாழ்த்துக்கள்..

இந்திய அரசும் ஊடகங்களும் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை ஒரு பகுதியில் நடப்பதை மற்ற பகுதிகளுக்கு தெரிய அனுமதிப்பதில்லை. அப்படி இருக்கும் பொழுது மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக தமிழகத்தில் சுவரொட்டி கொண்டு வந்தது மிகவும் பாராட்டுக்குறியது. தமிழக ஊடகங்கள் இந்த கிராமப் பஞ்சாயத்தைப் பற்றியும் அதில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை பற்றியும் பெரிதாக செய்திகளை வெளியிட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை. அத்தகைய நிலையில் சுவரொட்டிகள் மூலமாக சாதாரண மக்களுக்கும் செய்தி சென்றடையும் வகையில் நீங்கள் எடுத்த நடவடிக்கை முன்னுதாரணமாக திகழ்கிறது.

ஆனால் சுவரொட்டியில் தங்கள் கோரிக்கைகள் தான் தவறானதாக இருக்கிறது. மனித உரிமை பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அமைப்பு ஒரு மனிதனின் உயிரை பறிக்க நினைப்பது, அந்த மனிதனின் வாழும் உரிமையை பறிக்கும் செயல் என்பதை கவனிக்க தவறிவிட்ட்தாகவே தோன்றுகிறது. இந்த குற்றத்தின் தன்மையை கருதி அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று நீங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி மனிதர்களாக மாற்றுவது தான் மனித நேயத்தின் அடிப்படையிலான செயல். தங்களின் கோரிக்கையின் அடிப்படையில், தூக்கிலிடுவதால் இனிமேல் இப்படிப் பட்ட குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்குமா. எனென்றால் மேற்கு வங்கத்தில் வழக்கு நடத்தி தூக்கிலடப்படும் இவர்களைப் பற்றிய செய்தி ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களும் மக்களுக்கு கொண்டு சேர்க்காது. அவர்களுக்கு தேவையானது Sensational News.

நமது தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேன் கடத்தப்பட்ட பொழுது தான் தமிழக ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வட மாநிலங்களில் இந்திய அரசு பச்சை வேட்டையை பற்றிய எழுதினார்கள். இந்த பச்சை வேட்டையை தொடங்கியது ப. சிதம்பரம் என்பது கூட தெரியாமல் தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட பொழுது நம்ம வீட்டு பிள்ளையை யாரோ கடத்திவிட்டார்களாம்பா, என்று யார் கடத்தினார்கள் எதற்காக என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு தான் நம் மக்களை அரசுகளும் ஊடகங்களும் வைத்துள்ளது. ஏன் தமிழ்நாட்டு பிரச்சனையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனை என்ன என்பது வடமாநில மக்களுக்கு தெரியாது, காவிரி பிரச்சனை என்னவென்று தென் மாவட்ட மக்களுக்கு தெரியாது. இப்படித் தான் இங்கு செய்திகள் பகிரப்படுகின்றன.
மரண தண்டனை என்பதன் நோக்கம் குற்றம் செய்தவருக்கு கொடுக்கப்படும் இந்த தண்டனை இனி யாரும் அத்தகைய குற்றத்தை செய்யக் கூடாது என்பதற்காக. ஆனால் இங்கு முழுமையாக பகிரப்படாத தூக்கில் போட்ட செய்திகள் தெரியாமல், நீங்கள் நினைப்பது போல் பயம் வர வாய்ப்புகளே இல்லை, அப்படி இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பும் பிறகும் மரணதண்டனை வழங்கப்பட்டே வருகிறது  ஆனால் ஒவ்வொரு வருடமும் கொலைகளும் கற்பழிப்புகளும் அதிகரித்து தான் வருகிறது. இன்றைய தேதியில் தூக்கு தண்டனை அறிவிக்கபப்ட்டு தூக்குமர நிழலில் என்று நமக்கு மரணம் வரப்போகிறது என்று காத்திருப்பவர்கள் மட்டும் இந்தியாவில் 544 பேர்.


மேலே இருப்பது 1953ம் ஆண்டும் 2012ம் ஆண்டும் இந்தியாவில் நடந்த குற்றங்கள் இதில் பாலியல் குற்றங்களுக்கான தகவல்கள் 1971ல் இருந்து தான் NCRB (National Crime Record Bureau) பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது

1971ல் நடந்த பாலியல் குற்றங்கள் 2487,
2012ல் நடந்த பாலியல் குற்றங்கள் 24,923

அதாவது கிட்டத்தட்ட 900% பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. இதில் பாலியல் குற்றங்களுக்கு 7வருடம் கடுங்காவல் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட்டுள்ளது ஆனால் இந்த தண்டனைகள் எதுவும் குற்றவாளிகளுக்கு பயத்தை உருவாக்கவில்லை. இதைவிட முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இப்படி குற்றங்களின் எண்ணிக்கை ஏன் கூடியுள்ளது என்பதைத் தான். கூட்டமாக சேர்ந்து கொள்ளை அடிப்பதும், திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்களும் குறைந்துள்ளது, இது சமூகத்தின் மாற்றத்தினை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இன்று பொருளாதர நிலையிலும், கல்வியிலும் சில அடிகள் 1953யை விட முன்னால் வந்திருக்கிறோம் அதனாலேயே திருட்டு போன்ற குற்றங்கள் குறைந்திருக்கின்றன.

கொலைக்கு கொலை தான் தண்டனை என்று மரண தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது ஆனால் கொலை 1953க்கும் 2012க்கும் இடையில் 251.3% அதிகரித்துள்ளது. இது பாலியல் குற்றத்தின் அளவை விட குறைவு தான் ஆனால் இங்கு நடக்கும் கொலைகள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் நடப்பவை தான் அதிகம். அவர்கள் உணர்ச்சி வயத்தில் இருக்கும் பொழுது தண்டனைகளை பற்றி யோசிக்க மாட்டார்கள். திட்டமிட்டு நட்த்தப்படும் கொலைகளும் அரசியல் கொலைகளும் இங்கு பெரும்பாலும் மரணதண்டனைக்கு உட்படுவதில்லை. கொலை செய்துவிட்டு சரணடைந்தால் தூக்கு தண்டனை கொடுக்க கூடாது என்ற விதியின் கீழாக இவர்கள் தூக்கு கயிறில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். மரணதண்டனை கிடைக்கும் அதனால் குற்றம் செய்யவில்லை என்று எந்த குற்றவாளியும் சொல்வதில்லை, எந்த குற்றவாளியும் தண்டனை கிடைக்கும் என்பதால் குற்றம் செய்யாமல் இருப்பதில்லை மாட்டாமல் தப்பிவிடுவோம் என்ற நினைப்பில் தான் செய்கிறார்கள் திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள்.

மேற்கு வங்க பெண்ணிற்க்கு நடந்த கொடுமை என்பது, ஆணாதிக்க சமூகமாக வளர்க்கப்பட்ட ஆண்களால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் 900% அதிகரித்துள்ளது இதை குறைக்கவேண்டும் என்றால் இங்கு ஒட்டுமொத்தமாக சமூகத்தின் போக்கை மாற்றவேண்டும் வருங்கால சந்ததியினருக்கு பெண் ஒன்றும் போகப்பொருள் அல்ல, குழந்தை பெற்று தரும் இயந்திரமும் அல்ல, பெண் ஒரு சக மனிதப் பிறவி என்பதை உணரவைக்க வேண்டும். இதை நோக்கிய பயணமே மனித உரிமைகளை காக்கும் பயணமாக அமையும்.

சாதிவெறி ஆதிக்க மனப்பான்மையை அழித்தொழிக்க வேண்டும் என்று கூட நீங்கள் மரணதண்டனை வேண்டும் என்று வழியுறுத்தியிருக்கலாம். ஆனால்  சமூகத்தின் சிந்தனைகளை செயல்களையும் மாற்றும் பொழுது சாதியம் என்பதை அழித்தொழிக்க முடியும். சாதியத்தின் கூறுகளை அறுப்பது என்பது மிகவும் கடினமான விசயம் ஆனால் அதை நோக்கிய பயணத்தை தான் நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தான் ஒரு மனிதனின் பெயரை வைத்து அவன் இந்த சாதி என்று அடையாளப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது தான் இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருப்பதற்கான வழி.

மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது ஒரு மனிதன் இந்த சமுகத்தில் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது. இங்கு சாதிகளின் கீழாக மனிதனை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்து வைத்திருக்கும் கொடுமையை என்று உடைத்தெரிகிறோமோ அன்று தான் உண்மையான மனித உரிமையை நோக்கிய பயணமாக இருக்கும். இல்லாவிடில் ஆளும் வர்க்கம் அடிக்கும் பொழுது மட்டும் மனித உரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்று அரசை நோக்கி குரல் கொடுக்கும் ஒரு விசயமாகி விடும். அரசும் நமது குரலை உரிமைக் குரலாக பார்க்காது ஊடகங்கள் இங்கு அரசின் தயவில் தான் நடக்கிறது என்பதால், அரசும் ஊடகமும் நமது மனித உரிமை பறிப்பிற்கு எதிரான குரலை வெறும் வெற்றுக் கூச்சலாகவே கடந்து செல்லும்.

ஒரு மனித உயிரை தவறு செய்தான் என்பதற்காக பறிப்பதும் மனித உரிமை மீறல் தான். ஒரு தவறு செய்தவனை திருத்தி நல்வழிப்படுத்துவது தான் மனித நேயம் மிக்க செயல்.

வாருங்கள் கை கோற்போம் மரணதண்டனையை ஒழித்து மனித நேயம் காப்போம்.No comments:

Post a Comment