கொளத்தூர் மணி தோழரை முழுதாக அறிந்தவன் இல்லை, அவர் செய்த சில விசயங்கள் மட்டும் தான் எனக்கு தெரியும். காரணம் அவர் என்றும் தான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று எங்கும் தன்னை விளம்பரப் படுத்திக் கொண்டதில்லை.
ஈழ விடுதலைப் போராட்டமும் அதில் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பங்கும் அனைவரும் ஒரளவு அறிந்ததே. பொன்னம்மான் பயிற்சியின் தலைவராக இருந்து கொளத்தூரில் நடந்த முகாமை பற்றியும் இன்றும் அந்த ஊர் மக்கள் பொன்னமானுக்கும் புலிகள் அமைப்பிற்கும் அளித்து வரும் மரியாதையும். ஆம் புலியூர் என்று பெயரை தாங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளை தொடர்ந்து நடத்தி வருபவர்கள் அவர்கள் என்பது நாம் அறிந்ததே. இப்படி தன் இடத்தை கொடுத்து பயிற்சி முகாம் நடத்திக் கொள்ள அனுமதி அளித்தவர் தான் கொளத்தூர் மணி தோழர். இதை விட அதிகமாக என்னால் எதுவும் சொல்ல இயலாது இதற்கு மேல் சொல்ல வேண்டியது இயக்கம் தான், இயக்கமே இவரை அங்கீகரித்து இவரைப் பற்றி வெளியில் சொல்ல வேண்டும் அது தான் சரியான ஒரு மரியாதையாக இருக்கும்.
வீரப்பன் பிரச்சனையில் நக்கீரன் கோபால் பேச்சு வார்த்தை நடத்த சென்ற பொழுது இவரையும் அழைத்து சென்றார்கள். அது மட்டுமே ஊடக வாயிலாக இவரைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட ஒரே நடவடிக்கை. ஆனால் அப்பொழுது வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிரடிப் படையினரால பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை, எவையும் ஊடகங்களால் நமக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டதில்லை.
அரசு இயந்திரத்தினால் மனித உரிமை மீறல்கள் நடக்கும் பொழுது அதற்கு எதிர்த்து குரல் கொடுத்து வெற்றி பெறுவது என்பது மிகவும் சொற்பமாகவே நடக்கும். அதுவும் அதிரடைப்படையின் அட்டகாசங்களுக்கு எதிராக போராடி வெல்வது என்பது மிகப்பெரிய சாதனை, அப்படி 1983 ஜூன் மாதம் கொளத்தூர் பகுதியில் இருந்து விரப்பனின் கூட்டாளிகள் என்று பதினோரு பேர்கள் காவல்துறையினரால் கடத்த்ப்பட்டனர். காவல் துறை கைது செய்திருந்தால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும் ஆனால் காவல் துறையினரால் கைது என்று சொல்லி அழைத்து செல்லப்பட்டவர்கள் எங்கே என்று தெரியாத அளவிற்கு எந்த சட்ட நடைமுறையும் பின்பற்ற படவில்லை எனில் அதை காவல்துறையினர் நடத்திய கடத்தலாகவே நாம் பார்க்க முடியும். அப்பொழுது சென்னை உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்து, கடத்தப்பட்ட 11 பேரில் 9 பேரை உயிருடன் மீட்க காரணமாக இருந்தவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தான். இது தான் அதிரடிப்படையின் மனித உரிமை மீறலுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற முதல் போராட்டம் ஆகும்.
இதைப் போல் தொடர்ந்து அதிரடிப்படையின் அனைத்து மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொணரும் அனைத்து களத்திலும் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் முன்னின்று போராடியுள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத்தால் சதாசிவம் கமிசன் அமைக்கவும் காரணமானவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தான். தமிழக கர்நாட கூட்டு அதிரடிப்படையின் மனித உரிமை மீறல்கள், வன்புணர்ச்சிகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர தமிழ்நாடு பழங்குடியினர் சங்கம், தமிழ்நாடு சிவில் உரிமை கழகம், கர்நாடக மக்கள் சிவில் உரிமை கழகம், சோகோ அறக்கட்டளை, மக்கள் கண்காணிப்பகம் மற்றும் தோழர் கொளத்தூர் மணி இணைந்து முதன் முதலாக அதிரடைப்படையினரால் பாதிக்கப்பட்டோர் மாநாட்டை 27.4.1998 அன்று நடத்தினர். இதை தொடங்கி வைத்தவர் தமிழக மனித உரிமை கழகத்தின் அன்றைய உறுப்பினர் இரத்தினசாமி.
இதன் பிறகே தேசிய மனித உரிமை ஆணையம் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி ஒய்வுபெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் விசாரணை கமிசன் ஆரம்பித்தது. இந்த கமிசனின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு இது வரை அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை, தொடர்ந்து இதற்கான முன்னெடுப்புகளை நடத்தி வருபவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள். இன்று கர்நாடக சிறையில் தூக்கு கயிற்றின் நிழலில் வாடிக் கொண்டிருக்கும் சைமன், பிலவேந்திரன், ஞானசேகரன், மற்றும் மாதையன் அவர்களின் தூக்கு கயிற்றை அறுத்து எரியும் போராட்டத்தில், இங்கு எப்படி மூவர் உயிர் காக்கும் போராட்டத்தில் முன்னின்று போராடிக் கொண்டிருக்கிறாரோ அதே போல் கார்நாடகத்தில் இருக்கும் தமிழர் நால்வர் உயிர்காக்கவும் தன்னால் இயன்ற அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருப்பவர் தான் தோழர் கொளத்தூர் மணி.
எனக்கு தெரிந்து இவர் செய்த பணியை பட்டியலிட்டிருக்கிறேன், இதை தவிர அவர் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் ஒருங்கிணைப்பது, மூவர் விடுதலை போராட்டங்களில் ஒருங்கிணைப்பது என்று அனைத்து தலைவர்களையும் எந்த பேதமும் இன்றி ஒரிடத்தில் ஒருங்கிணைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருபவர். அனைவரையும் ஓரணியில் திரட்டி போராட தொடர்ந்து முயன்று வருபவர் தொடர்ந்து போரடி வருபவர்.
No comments:
Post a Comment