Saturday, January 29, 2011

விலைவாசி குறைந்துவிட்டது

நான் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவன். இன்று சனிக்கிழமை இந்த வாரம் முழுவதும் ஓவ்வொரு கடையில் ஒரு விலை சொன்னார்கள் சிகரெட்டுக்கு. எனது அலுவலகத்துக்கு அருகே உள்ள கடையில் நேற்று ஒரு சிகரெட் 6 ரூபாய் என்றார்கள் அதற்கு முதல் நாள் 5ரூபாய் 50காசு அதாவது வழக்கமாக 5 ரூபாய்க்கு விற்க்கப்படும் சிகரெட் கோல்ட்பிளாக் கிங்ஸ் இரண்டு நாட்களில் ஆறு ரூபாய் ஆனது..

நமக்கு எங்கே இந்த விலையேற்றத்தை பற்றிய கவலை இருக்கிறது, தேவை என்றால் எவ்வளவு காசு கொடுத்து வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவோமே. சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான வெங்காயமே 8 ரூபாயில் இருந்து 80 ரூபாய் ஆன பொழுது அசராமல் எனக்கு இரண்டு கிலோ வெங்காயம் கொடு என்று கேட்டு வாங்கியவர்கள் இந்த ஒரு ரூபாய் ஏற்றத்திற்கா அஞ்ச போகிறோம். நேற்று காலையில் இருந்து மதியம் 3 மணிவரை சிகரெட் வாங்கி ஊதி தள்ளினேன். சிகரெட் குடிப்பதை குறைக்க வேண்டும் என்று கையில் வாங்கி வைத்துக் கொள்வதில்லை வேண்டும் எனும் பொழுது கடைக்கு சென்றே வாங்குவேன் ஒவ்வொரு சிகரெட்டாக.

மாலை 3 மணிக்கு பிறகு சென்றால் கிங்ஸ் தீர்ந்துவிட்டது என்றார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது எனும் பொழுது ஊதிய வாய் மட்டும் சும்மாவா இருக்கும் சரி இருப்பதை கொடு என்று வில்ஸ் வாங்கி புகைத்தேன் நேற்று. இன்று காலையிலும் இது தொடர்ந்தது. மாலை சென்று சிகரெட் கேட்டால் கிங்ஸும் இருந்தது ஆனால் விலையும் 50 பைசா குறைந்து 5.50 ஆகிவிட்டது.

இப்ப சொல்லுங்க விலைவாசி குறைந்துவிட்டதா இலையா. ஏன் வெங்காயம் கூட 80 ரூபாயில் இருந்து குறைந்துவிட்டது இரண்டு நாட்களாக தங்கம் விலை கூட குறைந்து வருகிறது. பெட்ரோல் மூச்சுவிடக் கூடாது.. எனது முதல் பதிவுகளை படித்து பெருமூச்சு விட்டுக்கோங்க..


யாருப்ப அது மனிதவள மேம்பாட்டாளர் நீ இந்த பதிவை படிக்காதே நீ வேற விலைவாசி குறைந்துவிட்டது என்று என் சம்பளத்தையும் குறைத்துவிட போகிறாய்..

Friday, January 28, 2011

இணைய புலிகளின் பாய்ச்சல்

என்னடா இவன் இணைய புலிகளின் பாய்ச்சல் என்று சொல்லியிருக்கிறானே இவனும் ஒரு கருணாவின் சொம்பு தூக்கியா என்று நினைத்துவிட வேண்டாம். எப்படியும் ஒரு திராவிட திம்மி வந்து நம்மை இணையபுலி என்று சொல்ல தான் போகிறது அதை முதலில் சொன்ன பெருமை என்னை சார்ந்ததாக இருக்கட்டுமே அதையும் அந்த திராவிட திம்மிகளுக்கு ஏன் விட்டு கொடுக்க வேண்டும்..

தமிழக மீனவர்களுக்காக இதுவரையில் இல்லாத ஒர் எழுச்சி இன்று நடந்து கொண்டுள்ளது இதை சரியான நோக்கத்துடன் கொண்டு செல்வதே இப்பொழுது நமது கடமை. இதில் நமது தாயாதி சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் துற்றட்டும் என்று நம் வழியை நாம் தொடர்வேதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும்..

இதை சொல்ல காரணம் ஒரு ட்வீட்டில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று மீனவர்களை கிண்டல் செய்திருந்தார் அவருக்கு பதிலளித்து ட்வீட்டில் நேரம் வீணடிக்க கூடாது நாம். இக்பால் செல்வன் என்பவர் கடந்த நாள் முழுவதும் கிட்டதட்ட 300க்கும் மேல் ட்வீட் செய்தார். இதேபோல் பலர் செய்து கொண்டுள்ளனர் இதை தொடர்ந்தாலே போதும். ஏன் குறை சொல்லி பதிவிட்டவரின் ட்வீட் கூட கணக்கில் தான் வரும் எனவே இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் ட்வீட் செய்யுங்கள்..

இது இணையபுலிகளான நமக்கு கிடைத்திருக்கும் ஒர் அருமையான வாய்ப்பு.. நமது குரலை பதிவு செய்ய. மேலும் இந்திய அரசிற்கு அனுப்பு பெட்டிசனிலும் கையெழுத்திட்டு உங்களின் வேதனையை அரசிற்கு தெரியபடுத்துங்கள்..



இது நமக்கு மட்டுமே என்று நினைக்காமல் முடிந்த அளவு ஆங்கிலத்தில் செய்யவும். அதுவே உலகளாவிய அளவில் நமது வேதனையை கொண்டு போய் சேர்க்கும்..

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுங்கள்

Thursday, January 27, 2011

நன்றி கலைஞரே நன்றி!!



முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... ஆரோக்கியமான வணக்கம். நான்தான் சென்னை அரசு பொது மருத்துவமனை பேசுகிறேன்!

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் சுட்டுக் கொல்லப்பட்டு அவரது உடல் என்னில் வைக்கப்பட்டிருந்ததால் எனக்கு ராஜீவ் பெயரை சூட்டுமாறு ஜனவரி 13-ம் தேதி பீட்டர் அல்போன்ஸ் சட்டசபையில் கோரிக்கை வைக்க, அதை உடனடியாக ஏற்றுக்கொண்டீர்கள். அடடா.. காங்கிரஸ்காரன் கேட்டால் சும்மா இருப்பீர்களா? 5-வது நாளே ஜனவரி 18-ம் தேதி என் வாசலில் ‘இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை’ என போர்டும் வைத்துவிட்டீர்கள்.

நேற்று காலை இரண்டு கம்பவுன்டர்கள் பேப்பரை வைத்து பேசிக்கொண்ட பேச்சு என் சுவர்களில் எதிரொலித்தது. அதையடுத்துதான் இந்தத் தகவலே எனக்குத் தெரியும்.

மணியரசன், சீமான் போன்ற சிலரின் எதிர்ப்பைத் தவிர மருந்துக்குக் கூட தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு வராததால் இதில் சம்பந்தப்பட்ட நானே பேசுவது என முடிவெடுத்திருக்கிறேன். ‘அம்பாள் என்றைக்கடா பேசினாள்?’ என நீங்கள் பராசக்தியில் கேட்டதுபோல், ‘கட்டடம் என்றைக்கடா பேசும்?’ என்று சிலர் கேட்கக் கூடும்.

ஏன் நீங்கள் கட்டிய வள்ளுவர் கோட்டம் தமிழ் பண்பாடு பேசவில்லையா? நீங்கள் எழுப்பிய பூம்புகார் சிற்பக் கூடம் தமிழன் தொன்மை பேச-வில்லையா? நீங்கள் எழுப்பிய திருவள்ளுவர் சிலை சுனாமியையே எதிர்த்து நின்று பேசவில்லையா? அந்தக் கல் படைப்புகள் எல்லாம் பேசும்போது... தினம் தினம் ரணங்களைக் காணும் வாய்ப்பு பெற்ற எனக்கு ஏன் பேச்சு வராது?

பேசுகிறேன் கேளுங்கள். நான் பேசுவதை விட உங்கள் அன்புக்கும், ஆசிக்கும் உரிய ஒருவர் பேசியதையே மீண்டும் பேசுகிறேன்.

சமீபத்தில் ‘அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் உங்களது இளவல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.

‘பேரறிஞர் அண்ணா சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அய்யா (பெரியார்) அண்ணாவை பார்க்க அங்கே வருகிறார். குன்றக்குடி அடிகளார் எல்லாம் வந்தார்கள். அவர்கள் எல்லாம் பார்த்துவிட்டுப் போன பின்பு, அண்ணாவை தனியாக சந்தித்த அய்யா, ‘நீங்க உடம்பைப் பாத்துக்கணும். அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... இந்தாங்க இத வச்சிக்கோங்க’ என்று கொஞ்சம் பணத்தை எடுத்து அண்ணாவிடம் நீட்டினார். எங்களுக்கே தெரியாது, அய்யா பணம் எடுத்து வந்திருந்தது.

அப்போது கண்கலங்கிய அண்ணா, ‘இல்லீங்கய்யா... அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. உங்க அன்பே போதும். வேணும்னா நானே வந்து அய்யாக்கிட்ட வாங்கிக்கிறேன்’ என்று பதில் சொன்னார். அந்த இடம் முழுவதும் உருக்கம் நிலவியது. அய்யா அவ்வளவு லேசாக யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார். இரண்டே பேருக்குத்தான் கொடுத்திருக்கிறார். ஒருவர் கலைவாணர், இன்னொருவர் அண்ணா...’’ என்று உங்கள் கருப்புச் சட்டைக் கண்மணி அன்று பேசியபோது கேட்டவர்களின் கண்கள் பனித்து; இதயம் கனத்தது.

அந்த வரலாற்றுப் பெருமை மிக்க சந்திப்பு என் மடியில்தானே நடந்தது! தமிழகத்தில் அறியாமை நோயை முற்றாக ஒழித்த இரண்டு சுயமரியாதை வைத்தியர்கள் அன்று என் மடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கு அவர்கள் பெயரை சுமக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே..? ஏன் கலைஞர் அய்யா?

ரொம்ப காலம் ஆகிவிடவில்லை அய்யா... உங்கள் அருமைப் புதல்வர், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6&ம் தேதி என் வளாகத்தில் இதய ஊடுருவி ஆய்வகத்தை திறந்துவைத்தார். அப்போதுகூட மிசா காலத்தில் தானும் தன் தோழர்களும் இந்திராகாந்தி அரசாங்கத்தால் பட்ட இன்னல்களையும் அதையடுத்து என் மடியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட தருணங்களையும் உருக உருகப் பகிர்ந்துகொண்டார். கல்லால் ஆன என் இதயம் கூட சிலிர்த்தது. இது அண்ணாவிடம் இரவல் பெற்ற உங்கள் இதயத்தில் ஊடுருவவில்லையா அய்யா?

தி.மு.க. என்ற இயக்கத்தின் அடி உரமாக இன்றும் திகழும் அந்த மிசா தியாகிகளில் ஒருவரின் பெயரைக் கூட சுமக்க அருகதை அற்றுப் போய்விட்டேனா நான்?

அன்று ஈழப் பகுதிகளுக்கு ராஜீவ் காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை... சுமார் 12 ஆயிரம் தமிழச்சிகளின் கற்பை சூறையாடியதாகவும் அதைவிட பலரது உயிர்களை துப்பாக்கிக் குழல்களால் குடித்ததாகவும் செய்திகள் வந்தன. அப்போது உங்கள் தமிழ் குருதி கொதித்தது. ‘தமிழனின் ரத்தக் கறை பூசிவரும் இந்திய ராணுவத்தை வரவேற்கப் போகமாட்டேன்’ என்று தமிழ் கர்வத்தோடு செயல்பட்ட நீங்கள்... இன்று அந்த அமைதிப்படையை அனுப்பிய ராஜீவின் பெயரையா எனக்கு சூட்டுகிறீர்கள்? ஐயகோ...

அந்த ஈழத்து தமிழச்சிகள் எப்படி துடித்திருப்பார்கள் என்று இந்த மருத்துவமனைக்குத் தெரியாதா என்ன? பெரியார், அண்ணா, கக்கன் என தமிழ் சமுதாயத்தை ஆரோக்கியப்படுத்திய தலைவர்களை நான் ஆரோக்கியப்படுத்தியிருக்கிறேன். இன்றோ..?

அதிகாலை வேளையில் என் வளாகத்தில் பார்த்தீர்களானால் நாட்டு வைத்தியத்தையும் தாண்டி மஞ்சள் காமாலை நோய்க்கு ஊசிபோட நிறைய பேர் வருவார்கள். அவர்களையாவது நான் குணப்படுத்திவிடுவேன். ஆனால் உங்களுக்கு காங்கிரஸ் காமாலை பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்களே? அந்த நோயை நான் எப்படி குணப்படுத்துவேன்?

ஒரு குழந்தை, ‘எனக்கு இன்ன பெயரை வைக்காதே’ என்று தாய் தந்தையிடம் சொல்லத் தெரிவதில்லை. ஆனால், அதே குழந்தை விவரம் தெரிந்தபிறகு தனக்கு இந்த பெயர் முரணாக இருக்கிறது என்று தெரிந்தால் அதை தூக்கி எறிந்து பொருத்தமான புனைப் பெயர் சூட்டவும் தயங்குவதில்லை. இது தங்கள் பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்த வரலாறு!

எத்தனையோ பெயர் சூட்டுதல்கள் மூலம் வரலாற்றை மீட்டெடுத்த தாங்கள், இந்த பெயர் சூட்டுதல் மூலம் வரலாற்றை மறைத்துவிட்டு கூட்டணியை மீட்டெடுக்க பிரயத்தனப்பட்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இனி ‘திராவிட சாஸ்திரிகள்’ என்று தங்களுக்கு காங்கிரஸ் சார்பில் பட்டமளிப்பு விழா நடக்கலாம். அதில் தங்கபாலுக்கள் கோரிக்கை வைத்தால் புதிய தலைமைச் செயலகத்துக்குக் கூட சோனியாவின் பெயரை நீங்கள் சூட்டலாம்.

ஆனாலும், நல்லவேளையாக எனக்கு ராஜபக்ஷே பெயரை சூட்டாமல் போனீர்களே? அதுவரைக்கும் உங்களுக்கு நன்றி கலைஞரே..!

சமீபத்தில் படித்த கட்டுரைகளில் மிகவும் பிடித்தது நன்றி தமிழகரசியல்

Monday, January 17, 2011

ஒடுக்கப்பட்டதை மறந்துவிட்டார்களா?? இன்று..





வைக்கம் போராட்டத்திற்கு முன்பாகவே தீண்டாமையை எதிர்த்து திருவனந்தபுரம் சமஸ்தானத்தை எதிர்த்து நடந்த மிகப்பெரிய பாட்டாளி மக்கள் போராட்டமே தோள்சீலை போராட்டம். தீண்டாமை தான் நாம் கேள்விபட்டது எல்லாம் ஆனால் காணாமை என்பதும் இருந்துள்ளது(உலகில் எந்த மூளையிலு நடக்காத கொடுமை). பரையைனை தொட்டலே தீட்டு சாணாரை பார்த்தலே தீட்டு என்று வாழ்ந்த காலம். மிக அதிக தூரமில்லை நமக்கும் அதற்கும். இது நடந்தது 1800ம் ஆண்டுகளில் இருந்து. திருவனந்தபுரம் சமஸ்தானம் சட்டமே இயற்றியது இந்த பாகுபாடுகளை வைத்து..

யார் இந்த சாணர்கள், இவர்களை இந்த பெயர் சொல்லிக்கூப்பிடகூடாது என்று பெயரை கூட மாற்றிவிட்டனர் நாடார்கள் என்று. ஆனால் இவர்களின் பெயர் சான்றோர் நாடாள்வர் என்பதே. திருத்துறை பூண்டி வடகாடு கோயிலில் உள்ள கல்வெட்டில் நாடாவன் என்று இவர்களை நாடாள்வான் என்று குறிப்பிடுகிறது, இது 12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு. தூத்துகுடியில் சாத்தான்குளம் கல்வெட்டும் நாடாள்வன் என்றே குறிப்பிடுகிறது இந்த கல்வெட்டு கி.பி. 1644ம் ஆண்டு கல்வெட்டு. இப்படி சான்றோர் நாடாள்வான் என்ற குறிப்பிட பட்ட இனம். சான்றோர் என்று அழைக்கப்பட்டு அதன் பிறகு சாண்றார், சாணார் என்று மருவி வந்ததை பல அறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இப்படி வாழ்ந்த மக்களையே அதாவது நாடாண்ட ஒரு பரம்பரையை பார்த்தலே தீட்டு என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

18ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் திருவனந்த சமஸ்தானம் கொண்டுவந்த சட்டத்தில் பறையர், புலையர், ஈழவர் போன்றவர்கள் இத்தனை அடி தூரத்தில் இருந்து பேச வேண்டும் சானார் போன்றோர்கள் கண்ணில் கூட படக்கூடாது (உலகத்தில் இன்று வரை பார்த்த தீண்டாமைகளின் உச்சகட்டம் இது, பார்க்க கூட கூடாது) இதை மீறினால் தண்டனை என்று வகுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல கீழ் சாதிமக்கள் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கவும் வைக்கப்பட்டனர் சட்டத்தின் மூலமாக 1814ம் ஆண்டு.

சமூகத்தின் இப்படிபட்ட கொடூரங்கள் எத்தனை காலம் தான் தொடரும் இவர்களுக்காக குரல் கொடுத்தவர் தான் வைகுண்ட சாமி (ஜெயலலிதா இவரின் பூஜைக்கு தான் போயிட்டு இப்பவந்தாங்க) இவர் மக்களை முழுவதுமாக ஒன்று சேர்த்தார். இவரின் காலத்தில் இவருக்கு பெருமாள் என்று பெயர் வைத்தபொழுது சமஸ்தானத்தில் இருந்து எதிர்ப்பு வந்து முத்துகுட்டி என்று பிறகு பெயர் மாற்றினார்கள். இவர் வளர்ந்து தன் இன மக்களுக்காக போராடினார். இவர் துறவரம் மேற்கொண்டவர் சாமியாக பார்க்கப்பட்டவர், இவர் இட்ட முதல் கட்டளையே தன்னை பார்க்கவரும் பெண்கள் மேலாடை அணிந்து வர வேண்டும் என்பது தான். ஆம் கீழ்சாதி மக்கள் மேலாடை அணியக்கூடாது, மார்பை மறைக்க கூடாது. அதாவது உயர்ந்த மனிதர்கள் முன் திறந்த மார்புடனே இருக்க வேண்டும். இவராலும் வேலுதம்பியாலும் இந்த சமூகத்தினர் ஒரளவு ஒன்றினைந்தனர். வைகுண்டசாமி கைது செய்யப்பட்டார் அதன் பிறகு இனி ஊர் ஊருக்கு சென்று பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். திரும்பிவந்தவர் தனது பனந்தோப்புக்குள் சென்றவர் மறைந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். எத்தனை கத்திகள் அவர் உடலை தடவியதோ யாருக்கு தெரியும்..



17ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலேயேன் இந்தியாவிற்குள் வந்துவிட்டான், நாஞ்சில் நாட்டையும் அவர்களின் கிருத்துவ மிஸினரிகள் அடைந்திருந்தனர். இவ்வளவு அடக்குமுறைகளையும் கண்ட மக்கள் தனக்கு இந்து மதமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு கிருத்துவமததிற்கு மாறினார்கள். அங்கு சென்றாலும் அவர்களுக்கு விமோசனம் இல்லை என்று நீ மதம் மாறினாலும் தாழ்ந்த சாதி தான் என்று மதம் மாறிய பெண்களின் மேலாடை கிழிக்கப்பட்டது அடித்து நொறுக்கப்பட்டனர். பாதிரியார் பிட் அவர்கள் தொடுத்த வழக்கில் பத்மநாபபுரம் நீதிமன்றம் கிருத்துவர்களாக மாறிய நாடார் இன பெண்கள் மார்பில் துணி அணியலாம் என்று உத்தரவிட்டார். இதன் பிறகே பலர் மொத்தமாக கிருத்துவ மதத்திற்கு மாறினார். மானம் முக்கியமா கடவுள் முக்கியமா என்று கேட்டால் இன்று கூட சொல்லலாம் மானம் தான் முக்கியம். சமூகத்தில் அடக்கி ஒடுக்கி வைக்க பட்ட மக்கள் என்ன செய்வார்கள் இதுவரை கடைபிடித்த மதத்தை தூக்கி கடாசிவிட்டு கிருத்துவத்திற்கு மாறினார்கள்.

அத்துடன் நிற்கவில்லை கொடுமை ஆங்கிலேயேன் தான் ஒவ்வொரு பிரேதசத்துக்கும் ஏற்றார்போல் சட்டம் கொண்டுவந்து மக்களை ஒன்று சேரவிடாமல் தடுத்தானே. திரும்பவும் அடக்கு முறை வ்ந்தது தோள் சீலையை அகற்ற உத்தரவிடப்பட்டது 1829ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால். திரும்பவும் அடிதடிகள் இந்த முறை பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன எதிர்த்தவர்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர். மன்னன் கை கட்டி வேடிக்கை பார்த்தான். ஆனால் மக்கள் இம்முறை தொடர்ந்து போராடினர் இவர்களுக்கு ஆதரவாக பிற சமூக மக்களும், கிருத்துவ மிசினரிகளும் போராட்டத்தில் குத்தித்தன. சென்னையில் இந்த முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது 1847ம் வருடம் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அவர்கள் கிருத்துவத்திற்கு மாறி இருந்தாலும் தோள் சீலை அணிய உரிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கூட சாட்சிகளாக வந்த நாடார் இனமக்களை 64 அடி தூரம் தள்ளியிருந்தே சாட்சி அளித்தனர். பறையர் இனமக்கள் 32 அடி தள்ளி நின்று சாட்சி அளித்தனர்.



இதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது. பாதிரியார் பீட்டும் அவரது மனைவியும் இந்த இன மக்களுக்காக பெரும் தொண்டு புரிந்தனர். கிருத்துவ பெண்களுக்காக தனியாக அடை வடிவமைத்தும் கொடுத்தனர். இந்த நாடார் இனமக்களின் தொடர் போராட்டத்திற்குமுன் ஒன்றும் செய்ய இயலாமல் 1855ம் ஆண்டு திருவிதாங்கூர் சம்ஸதானம் அடிமை முறையை முற்றிலும் ஒழித்து சட்டம் இயற்றியது. இதன் பிறகும் தோள் சீலை உரிமை மறுக்கப்பட்டு 1859ல் ஜூலை 26ம் நாள் தான் மன்னரிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது, தோளுக்கு சீலை அணிவது மறுக்கப்பட்ட பெண்கள் சீலை அணிந்து கொள்ளலாம் ஆனால் மேல் சாதி பெண்கள் அணிவது போல் அணியக்கூடாது என்று உத்தரவு வந்தது. இது தான் தோள்சீலை போராட்டம்.

ஆனால் இன்று மக்களின் போராட்டம் வேறுவழியில் சென்று கொண்டிருக்கிறது, தென்மாவட்டத்தின் இன்றைய சாதிகொடுமைகளுக்கு இவர்களும் காரணம் என்று அறியும்பொழுது எப்படி இப்படிபட்ட ஒரு வரலாற்றினை மறந்தார்கள் இம்மக்கள் என்பது புரியவில்லை??? ஏன் இந்த போராட்டத்தை பற்றி தெரியாத அந்த இன மக்கள் பலர் உள்ளனர். எனது நண்பர் ஒருவரிடம் கேட்டபொழுது அவருக்கும் இதை பற்றி தெரியவில்லை..

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்
வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும்

என்பது போல் ஒரு காலத்தில் தாங்கள் ஒடுக்கப்பட்டதை மறந்து அதுவும் 1847ல் சென்னையில் நீதிமன்றத்தில் யாரால் இவர்கள் 64 அடி தள்ளி நிற்கவைக்கப்பட்டர்களோ அவர்களே 1899ல் கமுதி கோயில் வழக்கில் இவர்களும் கோயிலுக்குள் வரலாம், நால்வர்ண சாதியில் மேல் வர்ணத்தை சேர்ந்தவர்கள் தான் சான்றோர் நாடார் என்று சாட்சி சொன்ன தில்லைவால் திட்சீதர்களுக்கு பிறகு இவர்களுக்கும் வந்துவிட்டதா ஆதிக்க சாதி எண்ணம்..

அரசியல் மற்றும் ரவுடியிசத்தில் சம்பந்தமில்லாத சாதாரண மக்கள் சிலரும் இதையே செய்வதனால் வந்த வெளீப்பாடே ஒட்டு மொத்த ஒரு சமூகத்தை நோக்கி நான் எழுப்பிய கேள்வி.. மற்றவகையில் நாடார்களில் பெரும்பாண்மையாக சாதி பார்க்காத மக்கள் மேல் எந்த வெறுப்பும் இல்லை எல்லா இடத்திலும் சில புல்லுறுவிகள் இருக்க தான் செய்கின்றனர், அவர்களை களை எடுக்க வேண்டியதும் நமது பொறுப்பே..

நன்றி
1. அய்யாவழி மக்கள்
2. திருவிதங்கூர் சம்ஸ்தான ஆவணங்கள் Trivadrum.
3. தென் குமரியின் கதை - அ.கா. பெருமாள்
4. பண்பாட்டு வேர்களை தேடி - பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி

Thursday, January 13, 2011

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு




விருதுநகர்: விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.

உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.

இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும். டூவீலர்களால் ஏற்படும் விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்.

நன்றி - தினமலர்

பலநாட்கள் கழித்து இந்த் செய்தியை படித்ததும் மனம் துள்ளி குதித்தது. விருதுநகர் இந்த மணிகண்டனால் விருது பெருகிறது..

தேவரடியார்கள்

சிவனடியார் என்றால் அனைவரும் மரியாதையாக சொல்லுவோம். அதே அடியார் என்ற பட்டம் கொண்ட தேவரடியார்கள் என்றால் அனைவரும் முகம் சுழிக்கிறோம். ஏன் தமிழ் சமுதாயத்தின் மிகப்பெரிய கேடாக இதை நாம் கருதுகிறோம். பெண்களை தெய்வமாகவும், மதிப்பும் மரியாதையும் கொடுத்த இனம் இப்படி ஒரு பிரிவினரை கோயிலில் வைத்திருந்தோம் என்பதே அவலமானதாக நினைக்கும் நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் தேவரடியார்களாக வாழ்ந்தவர்கள் கொடுக்கும் நிலையிலேயே தான் பல காலம் இருந்து இருக்கின்றனர்.

நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்
அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப் பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு பதர்க பாலிகள்

தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.

இந்த பாடல் ஏழாம் நூற்றாண்டில் திருவாரூரில் திருவாதிரை திருநாள் திருவிழாவில் பாடிய பாடல். இதன் விளக்கம்

விலை உயர்ந்த மணிகளாலாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வாரோடு, கோயில் பணி செய்பவர்கள். ஆதி சைவர்கள், சிவகணத்தார், விரிந்த சடையை உடைய, விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே !

ஆதி சைவர், அந்தணர், சிவகணத்தார், பாசுபதர் என்று ஒவ்வொருவரையும் ஒரு வார்த்தையில் குறிக்கும் நாவுக்கரசர், தேவரடியார்களை வர்ணித்திருக்கிறார். திருநாவுக்கரசரின் மனைவியின் பெயர் பரவை நாச்சியார் இவர் ஒரு தேவரடியார்.

தேவரடியார்கள் இருவகையாகயனவர்களாக இருந்து இருக்க வேண்டும், திருமணம் செய்து கொள்ளாமல் கடவுளையே தனது கணவனாக ஏற்று கொண்டவர்கள், மற்றொரு பிரிவினர் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களை தமிழ் இலக்கியங்கள் மாணிக்கம், பதியிலாள், தளிச்சேரி பெண்டுகள் என்று குறிப்பிடுகின்றன.

கி.பி 11ம் நூற்றாண்டில் திருவாவூர் ஆலயத்தில் தேவரடியாராக இருந்த பறவைநாச்சியார் நன்கொடையாக 428 முத்துகள், பலகோடி ரூபாய் மதிப்புடைய 7 ரத்தினங்கள், 36 வைரங்கள், 1500 சவரன் தங்கை நகைகளை தியகராசர் ஆலயத்திற்கு கொடுத்ததாக கல்வெட்டு சான்று உள்ளது. இப்படி அவர்கள் விருப்பத்தின் பேரில் தேவரடியார்களாக சேவை செய்து கொண்டிருந்தவர்கள் பிற்காலத்தில் தானமாகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.

மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றனர் தேவரடியார்கள், மாண் என்பது பூசைகளில் உதவி புரியும் பரிசாகர் பொறுப்பை குறிக்கும் கல்வெட்டு சொல். மாணிக்கம் என்பது தீபாரதனையை காண்பிக்கும் தேவரடியாரை குறிக்கும் பெயர். மாணிக்கம் முன் நிற்க பின்னால் பக்தர்கள் நிற்க வேண்டும் என்பதை கல்வெட்டில் பதிந்து வைத்துள்ளனர். (கி.பி 1145ம் ஆண்டை சார்ந்த புதுகோட்டையில் உள்ள கல்வெட்டு) இது 20ம் நூற்றாண்டுவரை திருவாரூரில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஒருவர் தேவரடியராக மாறியபின் அவருக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது அந்த நிலம் மணிக்கத்தாள் நிலம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் என்ற பெயர் போல் தேவரடியார்களுக்கு பல பெயர்கள், பலபட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன இதனால் தெளிவாக கல்வெட்டுகளை ஆராய முடியவதில்லை. தேவரடியார்களாக பெண்கள் தானம் செய்யப்பட்டதை குறிக்கும் கல்வெட்டுகள் 11ம் நூற்றாண்டில் இருந்து இருக்கின்றன.

கி.பி.1119இல் பெரும்பாணப்பாடி நாட்டுப் பாணபுரத்து கணபதி நம்பியாகிய அழகிய பாண்டியப்பல்லவரயன் என்பவன் திருவல்லங்கோவிலுக்குத் தானமாகத் தேவரடியார் சிலரை அளித்துள்ளான்.

கி.பி. 1098-99இல் அமுதன் பள்ளிகொண்டான், அமுதன் வேளான், அமுதன் உய்யவந்தான் என்ற வேளாளர் மூவரும் தென்னாற்காடு மாவட்டத் திலுள்ள திருவக்கரை ஊரிலுள்ள சந்திரமெளலீசுவரர் கோவிலுக்கு அங்காடி என்பவளையும் அவள் மகள் பெரங்காடியையும் அவள் மக்களையும் தேவரடி யாராகத் தானமளித்துள்ளனர்.

இதனை,

எங்களடியாள் அங்காடியும் இவள்

மகள் பெரங்காடியும், இவள்

மக்களும் திருவக்கரையுடைய

மாதேவற்கு தேவரடியாராக

நீர்வார்த்துக் குடுத்தோம்1

என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

கி.பி. 1175இல் திருவாலங்காட்டுக் கோவிலுக்கு நான்கு பெண்கள் எழுநூறு காசுகளுக்கு தேவரடியாக விற்கப்பட்டனர்.

இந்த முறையில் பெண்களை விற்கும் கேடு கெட்ட பழக்கமும் ஆரம்பித்துள்ளது. ஒரு பெரும் தனக்காரர் தனது மகளை தேவரடியராக மாற்ற விரும்பாமல் வருமையில் வாழ்பவர்களிடம் இவ்வாறு வாங்கி தனது குடும்பத்தின் சார்பாக கொடுத்திருக்கின்றனர். ஏன் வாழவழியில்லாமல் இப்படி தேவரடியார்களாக விற்கும் பழக்கம் சோழர்களின் காலம் முடிந்த 15ம் நூற்றாண்டின் பிறகு இருக்கும் கல்வெட்டுகளில் இருந்தே தெரிகிறது. பொன்னமரவாதியில் 2 கல்வெட்டுகள், அதில் ஒன்றில் ஒரு பெண் தனது மகளுடன் சேர்ந்து கடன் தொல்லை தாங்காமல் தேவரடியாராக ஆனதாக் குறிக்கப்பட்டுள்ளது.

சிவனடியார் போன்று இருந்த தேவரடியார்கள் பிற்காலத்தில் பாலியல் தொழிலாளராக மாற்றப்பட்டுள்ளுனர். மேலும் தேவரடியார்கள் இல்லாத கோயில் என்றால் கேவலமாகவும் கருதப்பட்டிருக்கிறது. ஆனால் எப்பொழுது தேவரடியார்களுக்கு மார்பிலும் பாதத்திலும் திரிசூலம் முத்திரை பதிக்கப்படும் பழக்கம் ஆரம்பமானது என்பது தெரியவில்லை.

ஏன் சென்னையில் முதன் முதலில் வேலைநிறுத்தம் செய்து போராட்டம் செய்தவர்கள் யார் என்றால் இதே தேவரடியார்கள் தான். திருவெற்றியூர் கோயிலில் இருந்த தேவரடியார்கள் 15ம் 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் தங்களின் முறை குறித்த பிரச்சனைக்காக வேலைநிறுத்தம் செய்துள்ளனர். ஒரு முறை அல்ல மூன்று முறை வேலை நிறுத்தம் செய்துள்ளனர், அப்பொழுதைய விஜயநகர அரசர் ஹரிஹரா என்பவர் தலையிட்டு பிரச்சனையை தீர்த்துவைத்ததாக கல்வெட்டு கூறுகிறது.

முத்துக்கள் வைரங்கள் என்று தானமாக கொடுக்கும் அளவுக்கு தேவரடியார்கள் செல்வத்தில் திளைத்திருக்கின்றனர். ஒவ்வொரு தேவரடியாருக்கும் தானமாக கோயில் நிலங்கள் குடியிருக்க மனை என்று வழங்கப்பட்டிருக்கிறது. ஏன் கருவறை வரை செல்ல கூடிய உரிமைகளுடன் 19ம் நூற்றாண்டுவரை தொடர்ந்து இருக்கின்றனர் (திருச்செந்தூர் மற்றும் திருவாரூரில்) இப்படி வாழ்ந்த ஒரு மேம்பட்ட பெண்கள் நிலை கல்வெட்டுகளில் இருந்து தெரியவருவது 15ம் நூற்றாண்டிற்கு பிறகே கீழ்நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.

கேட்கப்படவேண்டிய கேள்வி தேவரடியாரும் தேவதாசியும் ஒருவரையே குறிக்குமா என்பது. பொட்டு கட்டும் முறை என்பது தேவரடியார் முறையாக எடுத்துக்கொள்ள முடியுமா. கர்நாடாகவிலும் ஆந்திராவிலும் இந்த பொட்டுகட்டுமுறை சமீபகாலம் வரை தொடர்ந்து கொண்டுள்ளது இதில் முக்கியமாக 8 வயதே ஆகும் சிறு பெண்குழந்தைகளை பொட்டு கட்டி தாசிகளாக மாற்றுகின்றனர். அவர்களில் வயதுக்கு வரும் முன்பே பொட்டுகட்டவேண்டுமென்பது ஒரு விதியாகவே வைத்துள்ளனர்.

தஸுக்கள் என்று சிந்து சமவெளி நாகரீக மக்களை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தஸூ என்ற சொல்லில் இருந்தே வருவது தாசன் எனும் சொல் தாசன் என்றால் அடிமை என்ற பொருள் கொள்ளப்படுகிறது. அடியார் என்றால் ஒரு கோட்பாட்டுக்கு தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் என்று பொருள்படும்.

இந்த வேற்றுமையை முழுமையாக ஆராய்ந்தாலே தேவரடியார் முறையின் உண்மையான வரலாறு தெரியும். அதைவிடுத்து தேவதாசி முறை தடை சட்டம் கொண்டுவரப்பட்ட 1947 க்கு முன்பாக இருந்த முறையை வைத்து தேவரடியார் முறை பாலியல் தொழில் என்று கூறுவது சரியான ஆய்வறிக்கையாக இருக்க முடியாது.

எனக்கு தோன்றுவது தேவரடியார்களில் மாதவியில் இருந்து ஒளவையார், மற்றும் காரைகால் அம்மையாரும் வருவார்கள்...

Monday, January 10, 2011

சோழர் களப்பிரர் பார்ப்பனீயம் - பகுதி 2

சோழர் களப்பிரர் பார்பனீயம் பகுதி 1

இன்று தோழர்கள் வலங்கை இடங்கை சாதி பிரச்சனைகளை ஏற்படுத்தி தமிழர்களை பிரித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கல்வெட்டுகள் சிலவற்றிலும் சரபோஜி மன்னர்கள், நாயக்கமன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த வலங்கை இடங்கை சாதி பிரச்சனைகளை தான்.

வலங்கை இடங்கை சாதி பிரச்சனை என்பது ஆரம்பித்தது சோழர் காலத்தின் 11ம் நூற்றாண்டின் இறுதியில் தான், அதன் பிறகு இருக்கும் கல்வெட்டுகளே இந்த வலங்கை இடங்கை பிரச்சனைகளை பற்றி குறிப்பிடுகின்றன. இந்த போராட்டம் 18ம் நூற்றாண்டு தாண்டியும் நடந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் இந்த சாதிபிரசனைகள் நடந்துள்ளன. மிகப்பெரிய அளவிளான பிரச்சனைகள் என்பவை 17 நூற்றாண்டில் தான் நடந்துள்ளது.

வலங்கை இடங்கை சாதிகள் என்பதற்கும் ஒரு கதை சொல்லுகிறார்கள். ஒரு முறை இருபிறிவினர்கிடையே பிரச்சனை வந்ததாம் அப்பொழுது அரசனிடம் முறையிட சென்றவர்கள் எதிர் எதிர் தரப்பினர், ஒரு தரப்பினர் வலப்புறம் நின்றார்களாம், மற்றவர்கள் இடப்புறம் நின்றார்களாம். அரசர் இவர்களை தனது வலப்பக்கம் இருந்தவர்களை வலங்கை சாதியினர் என்றும் இடப்பக்கம் நின்றவர்களை இடங்கை சாதியினர் என்றும் அழைத்தாராம் அதனால் இவ்ர்களின் சாதிகளுக்கு இந்த பெயராம்.

மேலும் சில வரலாற்றியலார்கள் நிர்வாகத்திற்காக இப்படி பிரிவுகளை வைத்திருந்தனர் சோழர்கள் அது சில காலம் கழித்து வரி கொடுப்பவர்களுக்கும் வரி கொடுக்காமல் இருப்பவர்களுக்கும், வரி வாங்குபவர்களுக்குமான பிரச்சனையாக உருவாகி பின் சாதி பிரச்சனையாக உருவானது என்கிறார்கள்.

வலங்கை சாதியினர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பார்த்தால் "வலங்கை இடங்கை சாதி வரலாறு" என்று எழுதப்பட்ட ஒரு ஒலைச்சுவடி இன்று சென்னை பல்கலைகழகத்தில் உள்ளது அதன் கூற்றின் படி. வலங்கை சாதியினர் எனப்படுபவர்கள் ஒரிடத்தில் இருந்து வேளாண்மை செய்த வேள்ளாளர், பறையர் போன்றவர்கள் என்றும், இடம் விட்டு இடம் பெயர்ந்து கைவிணை தொழில்கள், வணிகம் சார்ந்த தொழில்களை செய்த கம்மாளர்கள், கோமுட்டி, சக்கிலியர்கள் ஆகியோர் இடங்கை சாதியினர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

இதில் எங்கு இன்று இருக்கும் சாதீயம் வந்ததென்று தெரியவில்லை வெள்ளாளனும் பறையர்களும் ஒரே பிரிவில் இருந்திருக்கின்றனர். கோமுட்டியும் சக்கிலியனும் ஒரே பிரிவில் இருந்திருக்கின்றனர். இதில் எங்கு ஏற்ற தாழ்வு வந்தது, வெள்ளாளனும் பறையனும் இன்று இரு வேறு துருவங்களாக இருக்கின்றனர். ஆனால் அன்று அவர்கள் ஒன்றாகவே இருந்திருக்கின்றனர். அதிலும் வலங்கை சாதியினர் இடங்கை சாதியினர் தனி தனி தெருக்களில் வாழ்ந்திருக்கின்றனர் அடுத்தவர் பிரிவு சடங்குகளுக்கு செல்வதில்லை அவர்கள் பிரிவிற்கே சென்றனர் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் வெள்ளாளர்கள் பறையன் வீட்டு திருமணத்திற்கு சென்று இருக்க வேண்டும். ஆசாரிகள் சக்கிலியன் வீட்டு காது குத்துக்கு சென்று இருக்க வேண்டும். இன்று நடந்து கொண்டிருக்கும் சாதி சண்டை இதற்க்கு முற்றிலும் மாறாகவே அல்லவா இருக்கிறது.

இதிலும் இராஜரான் தான் இந்த இடங்கை வலங்கை பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லுகிறார்கள், பிரச்சனை ஆரம்பித்ததாக இருக்கும் கால கட்டம் அதற்கான கல்வெட்டுகள் 11ம் நூற்றாண்டில் இறுதியில் 10 நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி புரிந்த ஒரு மன்னன் இதற்கு எவ்வாறு காரணம் ஆவான் என்றால். கல்வெட்டு ஆதரங்களில் குறிக்கப்படும் சில பெயர்கள் தான் அவை

வலங்கை பழம்படைகளிலார்
பெருதனத்து வலங்கை பெரும்படையினகள்
அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைகார படைகள்
ராஜராஜன் தெரிந்த வலங்கை வேளைக்காரர்

இவைகள் அனைத்தும் இராஜராஜனின் படைகள் ஆகும். இராஜராஜன் காலம் வரை யாரும் நிரந்தரமாக படைகளை வைத்து இராணுவமாக நடத்தியதாக செய்திகள் இல்லை. தேவைப்படும் பொழுது படைகளை திரட்டியதாகவே செய்திகள் அனைத்தும் தெரிவிக்கின்றன. இராஜராஜன் நிரந்தரமாக திரட்டிய படைகளுக்கு அவைகளின் வெற்றிகளுக்கு ஏற்ப மெய்கீர்த்திகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன. அப்படிபட்ட பட்டங்களே இந்த படைகளின் பெயரில் சேர்ந்தது. இதில் வலங்கை இடங்கை என அழைக்கபட்ட படைகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினரே இருந்திருக்க முடியும் என்பது நம்பதகுந்ததாக இல்லை.

மேலும் வேளைகாரர் என்பது படைவீரர்களை குறிக்கும் ஒரு சொல், இது வேளார்களை அல்லது வெள்ளாளர்களை குறிக்கும் சொல்லாக எடுத்துக்கொள்ளமுடியாது. இப்படி இருந்த படைப்பிரிவுகள் அவர்களுக்குள் இருந்த படைதலைவனால் பிரிந்து சண்டையிட்டிருக்கலாம். அதுவே பின்னர் வலங்கை இடங்கை சாதி சண்டையாக மாறி இருக்கலாம். இதனால் இப்படி சாதி பிரிவை வளர்த்தது இராஜராஜன் தான் என்று சொல்லும் கூற்று சரியாக இருக்காது. மேலும் இந்த வலங்கை இடங்கை சாதி சண்டைகள் 11ம் நூற்றாண்டின் இறுதியில் தான் ஆரம்பித்திருக்கின்றன அதாவது இராஜேந்திர சோழனின் காலத்திற்கு பிறகு. இதற்கும் காரணம் இராஜராஜன் தானா???

இவை எல்லாம் கிடக்கட்டும் விடுங்கள் அந்தகாலத்தில் சாதி சண்டை இருந்திருக்கிறது என்று. ஆனால் இன்று நாம் வாழும் நாளில் யாரும் யாரையும் சாதி கேட்டு பழகுவதில்லை, யாரும் சாதி கேட்டு கை கொடுப்பதில்லை. ஏன் இந்தியா முழுவதும் சாதிபெயரை பின்னால் சேர்த்துக்கொண்டு சர்மா குருமா என்று கூறும்பொழுது நாம் மட்டும் தான் சாதி அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு வாழ்கிறோம்.

பெரியார் போன்ற சான்றோர்களுக்கு இதற்காக நாம் நன்றி செலுத்த வேண்டும். இன்றைய தேவையான சாதி ஒழிய வேண்டுமென்றால் என்ன வேண்டும் என்பதை தான் பார்க்கவேண்டும் எவன் நம்மிடையே சாதியை கொண்டுவந்தான் என்று பார்ப்பது தேவை இல்லாதது. அதை விடுத்து ஆக்கபூர்வமான விசயங்களில் கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்கும் கொடுமைகளை அழித்தொழிக்க முயல்வதே இன்றைய காலகட்டத்தில் தேவையான அடுத்த நிலைப்பாடாகும்.

Sunday, January 9, 2011

சோழர் களப்பிரர் பார்ப்பனீயம்


களப்பிரர் காலம் இருண்டகாலம் என்று சிலர் சொல்லி சென்றுவிட்டார்கள், அதை வைத்துக்கொண்டு இன்று பலர் களப்பிரர்கள் காலம் தான் பொற்காலம், சோழர் காலம் தான் பார்ப்பனீயத்திற்கு கொடி பிடித்தது என்று கிளம்பிவிட்டார்கள். களப்பிரர்களுக்கு பின் சாம்ராஜ்யமாக இருந்த பல்லவர்களையும் விட்டுவிட்டார்கள் அவர்கள் வடித்த அர்ஜுனன் தபசு என்ற சிற்ப குவியலையும் விட்டுவிட்டார்கள்.

எனென்றால் தமிழனை தமிழன் தானே காலை வாறிவிடவேண்டும், கிடைத்தான் ஒரு கேணைப்பயல் என்ற கணக்காக இராஜராஜனை சந்தியில் இழுத்துவிடுகிறார்கள் இதற்காக. பார்ப்பனர்கள் என்பவர்கள் அப்புறம் எப்பொழுது தான் வந்தார்கள் நமக்குள்ளே கேள்வி எழும். அதற்கும் விடை களப்பிரர்கள் பார்ப்பனர்களின் அடாவடிகளை நிறுத்தினார்கள் என்று சொல்லும் வேள்விக்குடி செப்பேட்டிலேயே இதற்கான பதில் இருக்கிறது.

வேள்விகுடி செப்பேட்டின் சாரம் இது தான். கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னனிடம் ஒரு பார்ப்பனர் தன்னுடைய குறையாக களப்பிரர் காலத்தில் பிரம்மோதய நிலங்கள் எங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டுவிட்டன அவைகளை திரும்ப வழங்க ஆவன செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். அதை ஏற்று பாண்டிய மன்னன் பிரம்மோதய நிலங்களை திரும்பவும் பார்ப்பனர்களுக்கு வழங்குகிறார் என்று சொல்லுகிறது செப்பேடு.

அதாவது பார்ப்பனர்களை ஒழித்தார்கள் என்று சொல்லப்படும் களப்பிரர்கள் ஆண்டகாலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரை, இந்த செப்பேடு எழுதப்பட்டது எட்டாம் நூற்றாண்டு. அதாவது 200 வருடங்களுக்கு முன் பிடுங்கப்பட்டது என்று கூறுகிறார். இறையிலி நிலங்கள் பிடுங்கப்பட்டன என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால் அது இந்த செப்பேடு மட்டுமே. மேலும் சங்க காலத்திலேயே இந்த பிரம்மோதய நிலங்கள் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அதாவது களப்பிரர் காலத்திற்கு முன்பாகவே அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது என்றால் அது சங்ககாலத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதைதான் களப்பிரர்கள் பிடுங்கிவிட்டனர் என்ற கூற்று உள்ளது. அப்படி என்றால் சங்ககாலத்தில் கொடுக்கப்பட்ட ஒரு நிலத்தை அதனால் உருவாகிய பிரச்சனைகள அனைத்தையும் இராஜராஜன் மேல் ஏன் திணிக்க வேண்டும்.



பூலாங்குறிச்சி கல்வெட்டில் இதே களப்பிர மன்னர்களில் ஒருவர் பிரம்மோதய கிழார்களை ஆதரித்ததாக கூற்றுகள் இருக்கின்றன. இவர்கள் கூறும் செப்பேடு 8ம் நூற்றாண்டு ஆனால் களப்பிரர்கள் காலமான சம காலத்தில் 5ம் நூற்றாண்டு கல்வெட்டில் களப்பிரர்கள் பிராமணர்களுக்கு பிரம்மோதய நிலங்கள் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது ஆனால் களப்பிரர்கள் நல்லவர்கள், இராஜராஜன் கெட்டவன். ஏன் மதுரையில் இருக்கும் உலகத்தியன் குளத்தின் அருகில் இருந்த ஆசிவகப்பள்ளியினுள் பெருமாள் கோயிலை கட்டியவர்கள் களப்பிரர்கள் ஆனால் இவர்கள் உத்தமர்கள்...

நான் களப்பிரரை கன்னடன் என்றோ தெலுங்கன் என்றோ குற்றம் சாட்டவில்லை, எருமையூரும் (இன்றைய மைசூர்) தமிழன் ஆண்ட ஒரு ஊரே பாரியின் நண்பன் கபிலன் பாரியின் மரணத்திற்கு பின் பாரியின் பெண்களான அங்கவை சங்கவை கூட்டிகொண்டு சென்று காவிரி நதியின் அருகில் 49 தலைமுறையாக வசிக்கும் தமிழ் மன்னர்களை சந்தித்தாக எழுதியுள்ளார்..

`இவர் யார்?` என்குவை ஆயின்,
இவரே ஊருடன் இரவலர்க்கு
அருளித் தேருடன் முல்லைக்கு
ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின்
கோமான் நெடுமாப் பாரி மகளிர்;
யானே தந்தை தோழன்;
இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள்
தோன்றிச் செம்புபுனைந்து
இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழிமுறை
வந்த வேளிருள் வேளே!
விறற்போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன்
ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான்தர இவரைக் கொண்மதி;
வான்கவித்து இருங்கடல் உடுத்தஇவ்
வையகத்து அருந்திறல் பொன்படு
மால்வரைக் கிழவ, வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல்அருங் குரைய நாடுகிழ வோயே!

எருமையூர் என்று அழைக்கப்பட்டடு மைசூர் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் இப்பாடலின் மூலமாக. மகிசம் என்பது எருமையை குறிக்கும் அதிலிருந்தே மைசூர் என்ற பெயர் வந்திருக்கலாம்.

சித்தன்ன வாசல் கல்வெட்டில் உள்ள ஒரு வரி மேலும் எருமையூரை பற்றி சொல்லும்.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"

களப்பிரர்கள் காலம் இருண்டகாலம் என்று சொல்லுபவர்களின் கூற்றான கர்நாடகவில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னதை எடுத்துக்கொண்டால் கூட அவர்களும் தமிழர்களே.

இதே களப்பிரர் காலத்தில் தான் பல்லவர்களும் வட தமிழகத்தில் தோன்றி மேலே வர ஆரம்பித்தனர். இந்த பல்லவர்களின் நாணயங்களில் இருந்து மாமல்லபுரம் கோயில் வரை எங்கும் சமஸ்கிருதம் நிறைந்திருக்கிறது இதை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக இவர்கள் குற்றம் சாட்டுவது இராஜராஜனை. என்ன காரணம் என்றால் களப்பிரர் ஒழித்த பிரம்மோதய நிலங்களை இராஜராஜன் கொடுத்ததாக. ஏன் பல்லவன் நாணயத்திலிருந்து அனைத்திலும் வடமொழி வந்துவிட்டது. நரசிம்மன் என்று என்று சொல்லும் பொழுதே வைணவமும் தலைத்தோங்கிவிட்டது எனும்பொழுது எப்படி இவர்கள் இராஜராஜனை குற்றம் கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.

பல்லவனும், களப்பிரர்களில் சில மன்னர் பிரம்மோதய நிலங்களை வழங்கியுள்ளனர் அவர்களும் பல நூற்றாண்டுகளாக செய்த வேலையை இராஜராஜனும் செய்திருக்க கூடாதா, பல்லவர்கள் தங்களை பரத்வாஜ குலத்தில் தோன்றியவர்கள் என்று அழைத்துக்கொண்டனர். மேலும் தெலுங்கையும் சமஸ்கிருதத்தையுமே ஆட்சிமொழியாக கொண்டு ஆட்சி புரிந்தனர் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு இராஜராஜன் மேல் மட்டும் ஏன் இந்த காழ்புணர்ச்சி என்பது புரியாத புதிர் இல்லை.

அடுத்த குற்றசாட்டு இராஜராஜன் மேல் ஆதிக்க வாதி அடுத்த நாடுகளை அபகரித்தான் என்பது. முதலாம் சோழர்கள் ஆண்டபகுதிகள் குறுகி விஜயாலயச்சோழர்கள் ஆட்சியை ஆரம்பிக்கும் முன் குறுநில மன்னர்களாக இருந்தனர் ஏன் அடுத்த சாளுக்கிய இராட்டிரகூட மன்னர்களின் ஆக்கிரமிப்பினால் தானே. ஏன் கரிகாலன் காலத்து சோழ சாம்ராஜ்யம் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை இந்த விஜயாலயசோழர்களுக்கு வரகூடாதா அப்படி வந்தால் தவறா. மேலும் கரிகாலன் போல் கங்கைவரை செல்லவில்லை இராஜராஜன் ஆனால் அவன் கைப்பற்றிய பகுதிகளை பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும். கடாரம் வரை வென்றான் அதாவது கடற்கரையோர பகுதிகளை வென்றிருக்கிறான் எதற்காக கடல் வணிகத்தை பெருக்குவதற்காக ஏன் இருந்து இருக்க கூடாது.

தன் நாட்டில் விளையும் பொருள்களை வணிகம் செய்ய ஒரு சூமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது ஒரு அரசின் கடமையே அதற்காக செய்த போர்கள் இவர்களுக்கு ஆதிக்கத்தின் உச்சகட்டமாக தெரிகிறது. சரி போர் செய்து அடுத்த நாட்டை எக்காரணத்திற்காக பிடித்தாலும் அது ஆதிக்கமே என்று கூட எடுத்துக்கொள்ளலாம் இவர்களின் வாதத்தை. ஆனால் தமிழில் ஒரு கூற்று உண்டு "நிர்வாணமாக திரியும் ஒரு ஊரில் கோமணம் கட்டியவன் கோமாளி" அன்றைய ஆட்சிகாலத்தில் மற்ற அரசுகள் அடுத்தவர் மேல் படையெடுத்தது போல் இவரும் படைஎடுத்துவிட்டாரப்பா. நீங்கள் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்திருந்தால் இவர் கோமணம் கட்டியிருக்க மாட்டார் அம்மணமாகவே திரிந்து இருப்பார்.

அடுத்த குற்றசாட்டு தேவதாசி முறை தமிழிக்கியங்கள் அல்லது கல்வெட்டுகள் எதுவும் தேவதாசி என்று கூறுவதில்லை ஆனால் தேவரடியார்கள் என்று கூற்று உள்ளது. அடியார்கள் என்பது என்றும் தமிழகத்தில் மிக சிறந்த மனிதர்களை இன்று வரை குறிப்பிடும் ஓர் சொல். ஆனால் தாசி எனும் சொல்லும் விஜயநகர பேரரசில் இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் முறை. இங்கிருந்த தேவரடியாரை தேவதாசி என்று மாற்றியவர்கள் ஏன் விஜயநகர பேரரசாக இருக்க கூடாது. அனைத்து இவர் தவறு என்று சொல்ல பிரம்பாலடித்தான் கோயிலின் அடிமையாக்கினான் என்று எத்தனை கூற்றுகள்.

பிரம்மராயரே ராஜராஜனின் தளபதி எனும் கூற்று பிரம்மராயன் இராணுவமந்திரியாகவே இருந்தான் ஒழிய மாதண்ட நாயகனாக எந்த படைக்கும் தலைமை தாங்கி சென்றதாக எந்த கூற்றும் இல்லை. சோழப்படையில் மாதண்டநாயகன் தான் படையின் தளபதி.

நான் இங்கு கூறியது அனைத்தும் இராஜராஜானை காப்பாற்றுவதற்காக அல்ல, ராஜராஜனும் தவறுகள் செய்துள்ளார் மறுக்க முடியாது. ஆனால் வரலாற்றை அவர் தேவைக்கு ஏற்றார்போல் வளைப்பது தான் இன்றைய பிரச்சனை. வரலாற்றின் மறுபக்கமும் வெளியில் தெரியவேண்டும் என்பதே எனது நோக்கம்.

Saturday, January 8, 2011

வினவின் இராஜராஜ சோழனுக்கு எதிர் வினை

வினவு நான் விரும்பி பார்க்கும் தளங்களில் ஒன்று.. நான் ஒரு ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று நம்புவன். வினவில் பகுத்தறிவுவாதம் மிக அழகாக கூறப்பட்டும் வந்திருக்கிறது அதனால் அதை நான் பார்க்க மாட்டேன் என்று இருந்தது இல்லை. சந்தனமுல்லை விவகாரத்தினை கையாண்டவிதம் தவிர வினவிற்கு என்றுமே நான் ஆதரவாளனாக தான் இருந்திருக்கிறேன். பகுத்தறிவுவாதிகள் என்பதற்காக மூடிமறைக்காமல் சக பகுத்தறிவுவாதிகள் தவறு செய்தால் தவறு என்று சொல்லுபவர்கள். ஆனால் தீடிரென்று என்ன ஆனது என்று தெரியவில்லை வரலாற்றை பற்றி எழுதும் பொழுது கேட்ட தகவல்கள், படித்த தகவல்கள், படிக்காத தகவல்கள் என்று அனைத்து கருத்துகளையும் எடுத்துக்கொண்டு எழுத வேண்டும், ஆதரித்தும் எதிர்த்தும் என்று வரலாற்றியலாளர்கள் பல எழுதி உள்ளனர். அதை விடுத்து ஒரு சாரார் எழுதியதை வைத்து அது தான் உண்மை என்று எடுத்துக்கொள்ளுவது வரலாறாக கொள்ள முடியாது..

வினவு // பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது // வினவு

இராஜ ராஜனின் ஆட்சி கட்டிய கோயிலினால் பொற்காலம் என்று அழைக்கப்படுவதில்லை, ஆட்சிமுறை, மக்கள் எதிரி மன்னர்களின் பயமின்றி வாழ்ந்ததால் பொற்கால ஆட்சி என்றழைக்கப்படுகிறது. பிரமிடு, சீனச்சுவர் கட்டியதால் யாருடைய ஆட்சியையும் பொற்காலம் என்பதில்லை. குடவோலை முறையில் கிராம தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் நடந்தது இன்னும் நாட்டார்கள் வாழும் கிராமங்களில் நாடு எனப்படும் முறை பின்பற்ற பட்டு வருகிறது இன்று அது வாரிசுரிமையாகிவிட்டது ஆனால் இராஜ ராஜன் ஆட்சியில் அது வாரிசுரிமையால கிடைப்பதாக இருந்தது இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தலைவர்களாக இருந்தனர். ஒரு மன்னனின் ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிர்வாகத்தில் இருந்தார்கள், மன்னன் என்பவன் சர்வாதிகாரி எனும் பொழுதும் மக்களால் அவர்களின் நிர்வாகியை தேர்ந்தெடுக்கவைத்தவரை ஆதிக்க சக்தி மன்னன் என்று கூறும் கூற்று மிகவும் முட்டாள்தனமானது.

வினவு // முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?

அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரியகோவில்!

ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. // வினவு

இராஜராஜன் புத்தவிகாரங்களின் பிரம்மாண்டத்தை பார்த்த பிறகு அதைவிட பெரிய கோயில்கள் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டு இருக்க கூடாது. தான் சார்ந்த சமயத்தின் மான்பை உயர்த்த எந்த ஒரு மனிதனும் விரும்புவான் அதையே இராஜராஜனும் செய்திருக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்கள். இராஜராஜனுக்கு முன்பாக நடுக்கல் வழிபாடு என்று எழுதியிருக்கிறீர்கள், பள்ளிபடை கோயில் என்பதை விட்டுவிட்டீர்களே. அதை அடுத்த கட்டுரையில் சேர்ப்பதாக உத்தேசமா.

நடுகல் - போரில் இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பபடுவது. அந்த வீரனை சிறு தெய்வமாக வழிபட்டோம்

பள்ளிபடை - இறந்த அரசனின் நினைவாக எழுப்பபடுவது இது சிறு கோயில் அமைப்புடனே இருக்கும்.

இவைதான் தமிழர்கள் வணங்கிய கடவுள்கள் என்று நீங்கள் கூறும் கூற்றை படித்த பிறகு குத்த வைத்து கும்மியடித்து சிரிப்பதா இல்லை எல்லாம் என் தலையெழுத்து என்று எண்ணி தலையிலடித்துக்கொள்ளுவதா என்று தெரியவில்லை.

வினவு // கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். // வினவு

இந்த கூற்றில் என்ன சொல்லவருகிறீர்கள், சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் சமணர்களை கழுவேற்றினார்கள் என்று இது உண்மையா இல்லையா எனபதற்கு ஆதாரங்கள் இல்லை. கோயில்களில் இருக்கும் ஓவியங்களை தவிர. அப்பர் பெருமான் சமணமதத்தை சார்ந்தவர் அவர் சைவத்தை தழுவியபொழுது கல்லில் அவரை கட்டி கடலில் போட்டது, தீ வைத்து கொழுத்த பார்த்ததும் இதே சமண மாண்புகள் தான் என்பதையும் எடுத்து சொல்லலாமே. அதை சொல்ல ஏன் உங்களால் முடியவில்லை. சமணர்களின் கொல்லாமை உங்களின் வாயை அடைத்துவிடுகிறதோ. அவர்களின் கொல்லாமை எனும் தத்துவத்தால் தான் கல்லை கட்டி விட்டெறிந்தார்களோ, அவர்கள் கொல்லவில்லை கல் தான் கொண்றுவிட்டது என்று சொல்ல வசதியாக இருக்குமென.

இன்னும் கழுவேற்றுதல் என்பது கேரளாவில் நடந்து கொண்டுள்ளது, உண்மையை தான் சொல்லுகிறேன் அய்யா வேண்டுமென்றால் சென்று விசாரித்து பாருங்கள் விளக்குவார்கள். கழுவேற்றுதல் என்றால் என்ன என்று வாதங்கள் நடைபெரும் பொழுது வாதத்தில் தோற்றவர் தன் மேல் தூண்டை எடுத்து பக்கத்தில் இருக்கும் மரக்கழியின் போட்டுவிட்டு செல்லுவாராம் அதன் பெயர் கழுவேற்றுதலாம். திராவிட ஓப்பிலக்கியத்தின் மூலம் இதையும் ஆராய்ந்து கழுவேறுதலுக்கு சரியான அர்த்தத்தை கண்டுபிடித்து சொல்லுங்க்ள் அய்யா.

வினவு // மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின. // வினவு

சாளுக்கியன் இவர் படையெடுத்து செல்லும் முன் தமிழகத்தில் படையெடுத்து வந்து பிடிக்கவில்லையா இங்கிருந்து பொண்ணும் பொருளும் கொண்டு செல்லவில்லையா. அப்படி அவர்கள் செய்யாமல் இருந்து இவர் மட்டும் தனது கோயிலை கட்டிமுடிக்க பணம் பொருள் வேண்டுமென்றா வம்படியாக சென்று வலுச்சண்டைக்கு இழுத்து கொள்ளையடித்து வந்தார். என்னவொரு கூற்று வாழ்க உங்கள் தமிழ் பற்று. உங்களுக்கு தேவையானது போல் தமிழை வளைக்கலாம் ஆனால் அதை மிகவும் அதிகமாக வளைத்தால் உடைந்துவிடும்.

வினவு // ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ // வினவு

காந்தளூர்சாலை என்பது திருவனந்தபுரம் அருகில் இருப்பது என்பதை பெரும்பாலான வரலாற்றாசிரியகள் ஒத்துக்கொண்டுள்ளனர். கலமறுத்தருளி என்பதற்க்கு என்ன அர்த்தம். கலம் என்றால் கப்பல் என்று பொருள் கொள்ளலாம் திருவனந்தபுரம் அருகே எங்கு துறைமுகம் உள்ளது. எங்கு சேரனுடைய கப்பல் படை இருந்தது அந்த கப்பல்படையை இராஜ ராஜன் முறியடித்தான். களமறுத்தருளி என்றால் கூட ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இங்கு கூறப்பட்டிருப்பது கலமறுத்தருளி இதன் அர்த்தம் என்ன. கலம் என்பது ஆயுதங்களையும் குறிக்கலாம். ஏன் சில வரலாற்றாசிரியர்கள் பார்வதிகேசவபுரம் கல்வி சாலை காந்தளூர்சாலையினை முன் மாதிரியாக கொண்டு நிறுவப்பட்டது என்கிறார்கள்.

இந்த பார்வதிகேசவபுரம் கல்விசாலை பார்ப்பனர்களுக்கானது என்பது மிகவும் தெள்ளதெளிவாக வரலாற்றில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பார்ப்பன கல்விசாலையை அழித்தொழித்தற்கு பெருமைதானே பட வேண்டும் தாங்கள். ஏன் இதை எதிர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. பார்வதிகேசவபுரத்தை பற்றியும் காந்தளூரைப்பற்றியும் இன்னும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதன் பிறகு வந்து பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தியவன் இராஜராஜன் என்று வந்து சொன்னாலும் சொல்லுவீர்கள்.

வினவு // ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. // வினவு

இவைகளை நான் இல்லை என்று சொல்லவில்லை இதே காலத்தில் தான் ஆசாரகோவையும் தமிழுக்கு கிடைத்தது. திருக்குறளிலும் பார்ப்பனர்களை போற்றும் குறள்கள் உள்ளது ஆசாரகோவையை படித்தீர்கள் என்றால் மொத்தமாக தெரியும் எவன் ஆட்சிகாலத்தில் பார்ப்பனியம் வளர்ந்தது என்று.

யாப்பருங்கால விருத்தி

களப்பிர்ர் பிராமண்ருக்குத் தானங் கொடுத்து ஆதரரித்ததை ‘அகலிடமும் அமருலகும்’ எனத் தொடங்குகிற செய்யுள் கூறுகிறது.

பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து
அருபுரி பெரும் அச்சுதர் கோவே’ என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது’
(களப்பிர்ர் காலத் தமிழகம் / மயிலை சீனி.வேங்கடசாமி / குயிலோசை 2005/பக்72,73)

ஆசார கோவை

- கீழ்மக்கள் உடல் தொட்டுவிட்டால், குளித்துவிட வேண்டும் (ஆசாரக் கோவை – 10)
· பார்ப்பாரை இகழ்வோருக்கு ஐம்பூதமும் கெட்டுக் கேடு செய்யும் (15)
· கல்யாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி ஆகியவற்றின் பொருட்டு தானம் செய்ய வேண்டும் (48)
· பெரியவர்கள் எதிரே – சிரிப்பு, கொட்டாவி, எச்சில் காறுதல், தும்மல் ஆகியவை செய்தால் பழி சேரும் (73)
· நான்குவேதங்களைக் கற்ற பிராமணரைத் தம் குருவாக ஏற்க வேண்டும் என்பதுதான், கற்றோர் அறிவாளர் முடிவு (61)

இப்படியான பிராமணர்களின் ஆசாரங்களைக் கொண்ட நூல்தான் ஆசாரக் கோவை. ’இந்நூல், வடமொழி ஸ்மிருதிக் கருத்துகளைப் பின்பற்றி எழுதப்பட்ட்து என்பதைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் பகுதி தெரிவிக்கிறது’ என்றார் முனைவர் ச.வே.சுப்ரமணியன். (பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் / மெய்யப்பன் பதிப்பகம் 2007 / பக் 153)

தமிழரின் பல்வேறு குலத்தவரை, ’தீண்ட்த்தகாதோர்’ என்றாக்கிய முதல் நூல் ஆசாரக்கோவைதான் என்பதை மறந்துவிடலாகாது. தீண்டாமைக்கான கருத்து வடிவத்தை ஆசாரக்கோவைக்கு முன், எந்த்த் தமிழ் நூலிலும் காண இயலாது. ஏனெனில், தமிழர்ளின் மரபில் சாதி இல்லை, ஆகவே தீண்டாமையும் இல்லை.

இப்படி எழுதப்பட்ட களப்பிரர் காலம் பொற்காலம் என்ற தங்களின் கூற்று மிகமிக அருமை. உங்களின் சேவை இந்நாட்டிற்கு தேவை தொடருங்கள்.

சாதி வேண்டாம் சாதி வேண்டாம் என்று கூறிக்கொண்டே இங்கு நீங்கள் சாதியை தூக்கிபிடிப்பதும் தெரிகிறது வேளார்களையும் பார்ப்பனர்களுடன் சேர்த்து அவர்களை தாக்கும் நோக்கத்துடனே எழுதப்பட்டதாக தோன்றுகிறது இந்த கட்டுரை. இடை இடையே மரூர் சோழனை இழுப்பதால் எந்த பயனும் இல்லை கருணாநிதியை தாக்க வேண்டும் என்பதற்காக சோழனை இழுத்தீர்களா இல்லை சோழனை தாக்கும் பொழுது கருணாவையும் துணைக்கு இழுத்தீர்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் வரலாற்றை திரிக்க வேண்டியவர்கள் பலவாறாக திரித்து வைத்திருக்கிறார்கள் அதில் அனைத்தையும் படித்து எது உண்மை என்று தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

அதைவிடுத்து மேலும் சுவையாக பல கதைகளை வடித்து வருங்கால தமிழ் சந்ததியை சந்தியில் நிற்க வைத்துவிடாதீர்கள்.

இந்த கட்டுரையை மேலும் தொடருகிறேன், இன்னும் பதிலளிக்க வேண்டிய கூற்றுகள் உள்ளன. இப்பொழுது இது போதுமானது இன்னும் தங்கள் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு கூற்றையும் தனிதனியாக பிரித்து அவைகளுக்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.

Monday, January 3, 2011

படியாத வீரம் பாஞ்சாலகுறிச்சி




இன்று பாஞ்சாலகுறிச்சியின் வீரதிருமகன் அவதரித்த 251ம் ஆண்டு தினம்.. 3ம் நாள் ஜனவரி 1760

வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த பெயரை கேட்டாலே இன்று நமக்கு நியபகம் வருவது.."நாற்று நட்டாயா, களை புடுங்கினாயா, மஞ்சள் அரைத்து கொடுத்தாயா" எனும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம் தான்..

இது நமது தமிழக திரைப்படத்துறையினரின் மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம், ஆனால் உண்மை ஒன்று தான் ஜாக்சன் துரை பேசவேண்டும் என்று வரசொன்னபொழுது சந்திக்க சென்றவரை அங்கு இங்கு என்று 23 நாட்கள் அலைகழித்து, கடைசியில் இராமநாதபுரத்தில் வைத்து சந்தித்தார். ஆங்கிலேயர்களை எதிர்ப்பது தனியொரு பாளையக்காரனாக தன்னால் மட்டும் முடியாது, மற்றவர்களின் உதவியும் வேண்டும், அவர்களை ஒன்று சேர்க்கும் கால அவகாசத்திற்காக கட்டபொம்மனும் ஜாக்சன் இழுத்த இழுப்புக்கெள்ளாம் ஒத்துழைத்தார். ஜாக்சனை இராமநாதபுரத்தில் சந்தித்தபொழுது கிட்டதட்ட 3 மணி நேரங்கள் கட்டபொம்மனையும், தானாதிபதி சுப்பிரமணிய பிள்ளையையும் நிற்க வைத்து விசாரணை என்ற பெயரில் விசாரித்துவிட்டு கைது செய்ய முயலும் பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலப்படை வீரர்களை தாக்கிவிட்டு தப்பித்தார். தானாதிபதி பிள்ளை ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு திருச்சி மலைக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வீரத்திற்கு மட்டுமல்ல விவேகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டே என்பது மேற்கொண்ட நிகழ்வில் நாம் உணரலாம். எதிர்க்கவேண்டும் என்று நினைப்பு மட்டும் இருந்திருந்தால் ஜாக்சனை சந்தித்திருக்க வேண்டிய தேவையே இல்லை ஆனால் அத்தனை அவமானங்களுக்கும் அலைக்கழிப்புக்கும் பிறகு சென்று சந்தித்தது. தனது வலிமையை பெறுக்கிக் கொள்ளவே. அதன் பிறகு தப்பிவந்த கட்டபொம்மனை பிடிக்கவோ பாஞ்சாலகுறிச்சியை படையெடுத்து வெல்லவோ கும்பினி படை முயலவில்லை. விளக்கம் கேட்டு மதராசப்பட்டினம் (சென்னை) வந்து விளக்கம் அளிக்கும்படி பணிக்கப்பட்டார். வீரபாண்டியகட்டபொம்மனும் சென்னை வந்து சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படமால் பதில் அளித்து திரும்பினார். இவரின் நல்லெண்ணம் பெற ஆங்கிலேயர்களும் தானாதிபதியை விடுதலை செய்தனர்.

அதே சமயத்தில் ஜாக்சனின் ஊழல்களும் கண்டுபிடிக்கப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். சண்டை எதுவும் செய்யாமல் ஒரு ஆங்கிலேயே அதிகாரியின் பதவியை பறிபோக காரணமாக இருந்த கட்டபொம்மனின் புகழ் பாளையங்களிடையே பரவியது. பலர் கட்டபொம்மனின் பின்னே அணிதிரண்டனர், ஏன் மருதுபாண்டிய சகோதரர்கள் 500 வீரர்களை அனுப்பி வீரபாண்டியனின் கையை பலப்படுத்தினர். அன்றைய காலகட்டத்தில் மருது பாண்டியர்களுடன் உறவு வைத்துக்கொள்ளகூடாது என்பது ஆங்கிலேயேனின் கட்டளையாக இருந்தது. அப்பொழுது 1799ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு வீரமரணம் அடைந்தபிறகு. ஜாக்சனுக்கு பிறகு வந்த லூசிங்டன் கட்டபொம்மனை வந்து சந்திக்குமாறு கட்டளையிட்டான். அதற்கு முறையான அழைப்பு வேண்டும் என்று சொல்லி கடித போக்குவரத்துகளை நடத்திக் கொண்டே படை திரட்டும் பணியை தொடர்ந்தார் கட்டபொம்மன்.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை போன்ற திருநெல்வேலி சீமை பாளையக்காரர்களை தன்னுடன் சேர்த்துவிட்டார் கட்டபொம்மன். ஆங்கிலேயேனும் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மூலமாக் எட்டப்பனை வீரபாண்டியனின் கோட்டைக்குள்ளேயே பேரம் பேசி அனுப்பிவிட்டனர். தனதிபதி பிள்ளையின் சகோதரரையை ஓற்றரிய சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டு படைகளை தயார் செய்து கொண்டு கடிதம் எழுதி தாமதம் செய்து கொண்டிருந்தார் கட்டபொம்மன். ஆங்கிலேயேனும் தனது பீரங்கிகள் மைசூர் போரில் திரும்ப வருவதற்காக காத்து கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் திருவிழாவுக்காக ஊமைதுரை, தானாதிபதி, வீரன் சுந்தரலிங்கம் போன்றோர் திருச்செந்தூர் சென்ற சமயமான1799ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியில் ஆங்கிலேயே படை பாஞ்சாலகுறிச்சியை முற்றுகையிட்டது. இவ்வளவு விரைவில் படையெடுப்பை எதிர்பார்க்காத கட்டபொம்மன் மனம் தளராமல் திருச்செந்தூர் சென்றிருந்த படைகளை தவிர மீதம் இருந்த 1000 பேர் கொண்ட படையுடன் தீரத்துடன் போரிட்டார். பார்மென் தலைமையிலான ஆங்கிலேயே படை பீரங்கிகளுடன் போரிட்டாலும் பாஞ்சாலகுறிச்சியின் வீரத்திற்கு முன்னால் தோற்றது. விசயம் கேள்விபட்ட ஊமைதுரை விரைந்து வந்து பாஞ்சாலகுறிச்சியில் அண்ணனுடன் இணைந்து கொண்டார்.

பீரங்கிகளின் தாக்குதலால் கோட்டை சிதிலமடைந்தது. கோட்டை என்றால் மிகப்பெரிய கோட்டையெல்லாம் இல்லை இன்று மக்கள் நகரங்களில் ஒரு தோட்டத்துடன் அமைக்கு வீட்டின் அளவே பாஞ்சாலகுறிச்சியின் கோட்டை அளவு. வெற்றி பெற்றாலும் இனியும் அங்கிருந்தால் அடுத்த படையெடுப்பை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த கட்டபொம்மன் கோட்டையில் இருந்து வெளியேறினார். கோலார்பட்டியில் எட்டபனின் படையுடன் சண்டை நடந்தது இதில் தானாதிபதியும் நாகலாபுரம் பளையத்துக்காரர் செளந்திரபாண்டியும் சிறைபிடிக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரையும் தூக்கிலிட்டு கொன்றான் தளபதி பானர்மேன். அத்துடன் இல்லாமல் தானாதிபதியின் தலையை துண்டித்து பாஞ்சாலகுறிச்சியில் ஈட்டியில் குத்தி மக்களின் முன் வைத்தான். தன் மக்களுக்காகவும் தனது மன்னனுக்காகவும் தன் உயிரை இழந்த மாவீரர் தானாதிபதி சுப்பிரமணியபிள்ளை.

மனம் தளராத வீரபாண்டியன் சிவகங்கையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார், வழியில் தந்திரமாக விஜயரகுநாத தொண்டைமானால் சிறைபிடிக்கப்பட்டு ஆங்கிலேயனிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்பொழுது ஊமைதுரையும் பாஞ்சாலகுறிச்சியில் சிறைபிடிக்கப்பட்டு ஆங்கிலேயனின் சிறையில் இருந்தார். மரத்தடியில் விசாரணை என்ற பெயரில் விசாரிக்கப்பட்ட பொழுது கூட தன் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டுகளை மறுக்காமல் தலை நிமிர்ந்து ஆங்கிலேயப்படைகளை எதிர்த்ததை ஒத்துக்கொண்டார். தூக்கு மேடை ஏறும் பொழுது கூட சிறிது கூட வீரம் குறையாமல் நின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை என்பது பானர்மென் கம்பெனிக்கு எழுதிய கடிதங்களில் இருந்து தெரியவருகிறது. அவர் கவலைப்பட்ட ஒரே விசயம் தன் வாய் பேச முடியாத சகோதரனைப் பற்றி மட்டும் தான் என்பதையும் சொல்லியுள்ளார் பானர்மேன்.

இந்த தூக்குடன் பாஞ்சாலகுறிச்சியின் வீரம் மடிந்துவிடவில்லை, தொடர்ந்தது வீரன் சுந்தரலிங்கம் தன்னுடன் இருந்த சிறு படையுடன் ஆங்கிலபடையின் கட்டுபாட்டில் இருந்த பாஞ்சாலகுறிச்சியை தாக்கி கைப்பற்றி ஊமைதுரையையும் விடுவித்தான். அதன்பிறகு கோட்டையுள் இருந்து ஆங்கிலபடையுடன் போரிட்டு அவர்களை பின்வாங்கவும் வைத்தான். ஊமைத்துரை சிவகங்கை அடைந்தான் அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்று ஆங்கிலபடைகளிடம் பிடிபடாமல் திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். பாஞ்சாலகுறிச்சி சுந்தரலிங்கத்தின் வீரத்தால் அடிபணியாமல் நின்றது. திருச்சியில் இருந்து ஆயுதங்கள் வந்து சேர்ந்தன, சுந்தரலிங்கம் இனி தாக்குபிடிப்பது கடினம் என்பதை உணர்ந்து தனது அக்காள் மகள் வள்ளியுடன் ஆடு மேய்ப்பவன் போல் சென்று ஆயுதகிடங்கை அடைந்தான். ஆங்கிலப்படை சுற்றிவளைத்த பொழுது வள்ளியும் உள்ளே சென்றபிறகு இனி கிடங்கை அழிக்க ஒரே வழிதான் என்று தன்னையும், தன் முறைப்பெண் வள்ளியையும் சேர்த்து அழித்து கிடங்கையும் அழித்தான் வீரன் சுந்தரலிங்கம். இவன் தான் உலகின் முதல் தற்கொலைப்படை வீரன் என்றும் சொல்லாம்..

இத்தகைய வீரனைப்பற்றி இன்றளவும் நமக்கு தெரியவில்லை, ஏன் வீரபாண்டிய கட்டபொம்மனையே மா.பொ.சி என்பவர் எழுதும்வரை திருநெல்வேலி சீமையை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் தான் இருந்தார், அதுவும் நம் காலகட்டம் வரை. இன்று கூட நமக்கு கட்டபொம்மனின் வீரம் தெரிகிறது என்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்தின் வாயிலாகவே. தானதிபதி சுப்பிரமணியபிள்ளை, நாகலாபுரம் செளந்திரபாண்டியன், வீரன் சுந்தரலிங்கம் போன்றவர்கள் என்று மக்கள் முன் தெரியபோகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஏன் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலே மூச்சுவிடாமல் பேசப்படும் திரை வசனத்தை பேசிய கணேசனைக் கூட சிவாஜி கணேசன் என்று ஒரு மாராட்டிய கதாபாத்திரன் பெயரலேயே அடையாளம் கண்டு கொள்கிறோம்... இவர்களை போன்றவர்களின் வீரகாவியத்தையா நாம் அடையாளம் காணப்போகிறோம்.. இன்னும் வேண்டும் என்றால் சிவாஜி ராவ் என்று வேறு ஆட்களைத்தான் அடையாளம் காட்டுவோம் வீராதி வீரனென்று.. வீரத் தமிழ்மகனென்று...