Thursday, January 13, 2011

தேவரடியார்கள்

சிவனடியார் என்றால் அனைவரும் மரியாதையாக சொல்லுவோம். அதே அடியார் என்ற பட்டம் கொண்ட தேவரடியார்கள் என்றால் அனைவரும் முகம் சுழிக்கிறோம். ஏன் தமிழ் சமுதாயத்தின் மிகப்பெரிய கேடாக இதை நாம் கருதுகிறோம். பெண்களை தெய்வமாகவும், மதிப்பும் மரியாதையும் கொடுத்த இனம் இப்படி ஒரு பிரிவினரை கோயிலில் வைத்திருந்தோம் என்பதே அவலமானதாக நினைக்கும் நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் தேவரடியார்களாக வாழ்ந்தவர்கள் கொடுக்கும் நிலையிலேயே தான் பல காலம் இருந்து இருக்கின்றனர்.

நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்
அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப் பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு பதர்க பாலிகள்

தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.

இந்த பாடல் ஏழாம் நூற்றாண்டில் திருவாரூரில் திருவாதிரை திருநாள் திருவிழாவில் பாடிய பாடல். இதன் விளக்கம்

விலை உயர்ந்த மணிகளாலாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வாரோடு, கோயில் பணி செய்பவர்கள். ஆதி சைவர்கள், சிவகணத்தார், விரிந்த சடையை உடைய, விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே !

ஆதி சைவர், அந்தணர், சிவகணத்தார், பாசுபதர் என்று ஒவ்வொருவரையும் ஒரு வார்த்தையில் குறிக்கும் நாவுக்கரசர், தேவரடியார்களை வர்ணித்திருக்கிறார். திருநாவுக்கரசரின் மனைவியின் பெயர் பரவை நாச்சியார் இவர் ஒரு தேவரடியார்.

தேவரடியார்கள் இருவகையாகயனவர்களாக இருந்து இருக்க வேண்டும், திருமணம் செய்து கொள்ளாமல் கடவுளையே தனது கணவனாக ஏற்று கொண்டவர்கள், மற்றொரு பிரிவினர் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களை தமிழ் இலக்கியங்கள் மாணிக்கம், பதியிலாள், தளிச்சேரி பெண்டுகள் என்று குறிப்பிடுகின்றன.

கி.பி 11ம் நூற்றாண்டில் திருவாவூர் ஆலயத்தில் தேவரடியாராக இருந்த பறவைநாச்சியார் நன்கொடையாக 428 முத்துகள், பலகோடி ரூபாய் மதிப்புடைய 7 ரத்தினங்கள், 36 வைரங்கள், 1500 சவரன் தங்கை நகைகளை தியகராசர் ஆலயத்திற்கு கொடுத்ததாக கல்வெட்டு சான்று உள்ளது. இப்படி அவர்கள் விருப்பத்தின் பேரில் தேவரடியார்களாக சேவை செய்து கொண்டிருந்தவர்கள் பிற்காலத்தில் தானமாகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.

மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றனர் தேவரடியார்கள், மாண் என்பது பூசைகளில் உதவி புரியும் பரிசாகர் பொறுப்பை குறிக்கும் கல்வெட்டு சொல். மாணிக்கம் என்பது தீபாரதனையை காண்பிக்கும் தேவரடியாரை குறிக்கும் பெயர். மாணிக்கம் முன் நிற்க பின்னால் பக்தர்கள் நிற்க வேண்டும் என்பதை கல்வெட்டில் பதிந்து வைத்துள்ளனர். (கி.பி 1145ம் ஆண்டை சார்ந்த புதுகோட்டையில் உள்ள கல்வெட்டு) இது 20ம் நூற்றாண்டுவரை திருவாரூரில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஒருவர் தேவரடியராக மாறியபின் அவருக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது அந்த நிலம் மணிக்கத்தாள் நிலம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் என்ற பெயர் போல் தேவரடியார்களுக்கு பல பெயர்கள், பலபட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன இதனால் தெளிவாக கல்வெட்டுகளை ஆராய முடியவதில்லை. தேவரடியார்களாக பெண்கள் தானம் செய்யப்பட்டதை குறிக்கும் கல்வெட்டுகள் 11ம் நூற்றாண்டில் இருந்து இருக்கின்றன.

கி.பி.1119இல் பெரும்பாணப்பாடி நாட்டுப் பாணபுரத்து கணபதி நம்பியாகிய அழகிய பாண்டியப்பல்லவரயன் என்பவன் திருவல்லங்கோவிலுக்குத் தானமாகத் தேவரடியார் சிலரை அளித்துள்ளான்.

கி.பி. 1098-99இல் அமுதன் பள்ளிகொண்டான், அமுதன் வேளான், அமுதன் உய்யவந்தான் என்ற வேளாளர் மூவரும் தென்னாற்காடு மாவட்டத் திலுள்ள திருவக்கரை ஊரிலுள்ள சந்திரமெளலீசுவரர் கோவிலுக்கு அங்காடி என்பவளையும் அவள் மகள் பெரங்காடியையும் அவள் மக்களையும் தேவரடி யாராகத் தானமளித்துள்ளனர்.

இதனை,

எங்களடியாள் அங்காடியும் இவள்

மகள் பெரங்காடியும், இவள்

மக்களும் திருவக்கரையுடைய

மாதேவற்கு தேவரடியாராக

நீர்வார்த்துக் குடுத்தோம்1

என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

கி.பி. 1175இல் திருவாலங்காட்டுக் கோவிலுக்கு நான்கு பெண்கள் எழுநூறு காசுகளுக்கு தேவரடியாக விற்கப்பட்டனர்.

இந்த முறையில் பெண்களை விற்கும் கேடு கெட்ட பழக்கமும் ஆரம்பித்துள்ளது. ஒரு பெரும் தனக்காரர் தனது மகளை தேவரடியராக மாற்ற விரும்பாமல் வருமையில் வாழ்பவர்களிடம் இவ்வாறு வாங்கி தனது குடும்பத்தின் சார்பாக கொடுத்திருக்கின்றனர். ஏன் வாழவழியில்லாமல் இப்படி தேவரடியார்களாக விற்கும் பழக்கம் சோழர்களின் காலம் முடிந்த 15ம் நூற்றாண்டின் பிறகு இருக்கும் கல்வெட்டுகளில் இருந்தே தெரிகிறது. பொன்னமரவாதியில் 2 கல்வெட்டுகள், அதில் ஒன்றில் ஒரு பெண் தனது மகளுடன் சேர்ந்து கடன் தொல்லை தாங்காமல் தேவரடியாராக ஆனதாக் குறிக்கப்பட்டுள்ளது.

சிவனடியார் போன்று இருந்த தேவரடியார்கள் பிற்காலத்தில் பாலியல் தொழிலாளராக மாற்றப்பட்டுள்ளுனர். மேலும் தேவரடியார்கள் இல்லாத கோயில் என்றால் கேவலமாகவும் கருதப்பட்டிருக்கிறது. ஆனால் எப்பொழுது தேவரடியார்களுக்கு மார்பிலும் பாதத்திலும் திரிசூலம் முத்திரை பதிக்கப்படும் பழக்கம் ஆரம்பமானது என்பது தெரியவில்லை.

ஏன் சென்னையில் முதன் முதலில் வேலைநிறுத்தம் செய்து போராட்டம் செய்தவர்கள் யார் என்றால் இதே தேவரடியார்கள் தான். திருவெற்றியூர் கோயிலில் இருந்த தேவரடியார்கள் 15ம் 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் தங்களின் முறை குறித்த பிரச்சனைக்காக வேலைநிறுத்தம் செய்துள்ளனர். ஒரு முறை அல்ல மூன்று முறை வேலை நிறுத்தம் செய்துள்ளனர், அப்பொழுதைய விஜயநகர அரசர் ஹரிஹரா என்பவர் தலையிட்டு பிரச்சனையை தீர்த்துவைத்ததாக கல்வெட்டு கூறுகிறது.

முத்துக்கள் வைரங்கள் என்று தானமாக கொடுக்கும் அளவுக்கு தேவரடியார்கள் செல்வத்தில் திளைத்திருக்கின்றனர். ஒவ்வொரு தேவரடியாருக்கும் தானமாக கோயில் நிலங்கள் குடியிருக்க மனை என்று வழங்கப்பட்டிருக்கிறது. ஏன் கருவறை வரை செல்ல கூடிய உரிமைகளுடன் 19ம் நூற்றாண்டுவரை தொடர்ந்து இருக்கின்றனர் (திருச்செந்தூர் மற்றும் திருவாரூரில்) இப்படி வாழ்ந்த ஒரு மேம்பட்ட பெண்கள் நிலை கல்வெட்டுகளில் இருந்து தெரியவருவது 15ம் நூற்றாண்டிற்கு பிறகே கீழ்நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.

கேட்கப்படவேண்டிய கேள்வி தேவரடியாரும் தேவதாசியும் ஒருவரையே குறிக்குமா என்பது. பொட்டு கட்டும் முறை என்பது தேவரடியார் முறையாக எடுத்துக்கொள்ள முடியுமா. கர்நாடாகவிலும் ஆந்திராவிலும் இந்த பொட்டுகட்டுமுறை சமீபகாலம் வரை தொடர்ந்து கொண்டுள்ளது இதில் முக்கியமாக 8 வயதே ஆகும் சிறு பெண்குழந்தைகளை பொட்டு கட்டி தாசிகளாக மாற்றுகின்றனர். அவர்களில் வயதுக்கு வரும் முன்பே பொட்டுகட்டவேண்டுமென்பது ஒரு விதியாகவே வைத்துள்ளனர்.

தஸுக்கள் என்று சிந்து சமவெளி நாகரீக மக்களை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தஸூ என்ற சொல்லில் இருந்தே வருவது தாசன் எனும் சொல் தாசன் என்றால் அடிமை என்ற பொருள் கொள்ளப்படுகிறது. அடியார் என்றால் ஒரு கோட்பாட்டுக்கு தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் என்று பொருள்படும்.

இந்த வேற்றுமையை முழுமையாக ஆராய்ந்தாலே தேவரடியார் முறையின் உண்மையான வரலாறு தெரியும். அதைவிடுத்து தேவதாசி முறை தடை சட்டம் கொண்டுவரப்பட்ட 1947 க்கு முன்பாக இருந்த முறையை வைத்து தேவரடியார் முறை பாலியல் தொழில் என்று கூறுவது சரியான ஆய்வறிக்கையாக இருக்க முடியாது.

எனக்கு தோன்றுவது தேவரடியார்களில் மாதவியில் இருந்து ஒளவையார், மற்றும் காரைகால் அம்மையாரும் வருவார்கள்...

2 comments:

  1. சு.உலகநாதன்July 5, 2011 at 4:47 AM

    திருநாவுக்கரசர் மணமாகாத ஒரு துறவி. அவரின் மனைவியார் பரவை நாட்சியார் என்பது பிழையான செய்தி.

    ReplyDelete
  2. பரவை நாச்சியார் சுந்தரரின் மனைவி

    ReplyDelete