Monday, January 3, 2011

படியாத வீரம் பாஞ்சாலகுறிச்சி




இன்று பாஞ்சாலகுறிச்சியின் வீரதிருமகன் அவதரித்த 251ம் ஆண்டு தினம்.. 3ம் நாள் ஜனவரி 1760

வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த பெயரை கேட்டாலே இன்று நமக்கு நியபகம் வருவது.."நாற்று நட்டாயா, களை புடுங்கினாயா, மஞ்சள் அரைத்து கொடுத்தாயா" எனும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம் தான்..

இது நமது தமிழக திரைப்படத்துறையினரின் மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம், ஆனால் உண்மை ஒன்று தான் ஜாக்சன் துரை பேசவேண்டும் என்று வரசொன்னபொழுது சந்திக்க சென்றவரை அங்கு இங்கு என்று 23 நாட்கள் அலைகழித்து, கடைசியில் இராமநாதபுரத்தில் வைத்து சந்தித்தார். ஆங்கிலேயர்களை எதிர்ப்பது தனியொரு பாளையக்காரனாக தன்னால் மட்டும் முடியாது, மற்றவர்களின் உதவியும் வேண்டும், அவர்களை ஒன்று சேர்க்கும் கால அவகாசத்திற்காக கட்டபொம்மனும் ஜாக்சன் இழுத்த இழுப்புக்கெள்ளாம் ஒத்துழைத்தார். ஜாக்சனை இராமநாதபுரத்தில் சந்தித்தபொழுது கிட்டதட்ட 3 மணி நேரங்கள் கட்டபொம்மனையும், தானாதிபதி சுப்பிரமணிய பிள்ளையையும் நிற்க வைத்து விசாரணை என்ற பெயரில் விசாரித்துவிட்டு கைது செய்ய முயலும் பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலப்படை வீரர்களை தாக்கிவிட்டு தப்பித்தார். தானாதிபதி பிள்ளை ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு திருச்சி மலைக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வீரத்திற்கு மட்டுமல்ல விவேகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டே என்பது மேற்கொண்ட நிகழ்வில் நாம் உணரலாம். எதிர்க்கவேண்டும் என்று நினைப்பு மட்டும் இருந்திருந்தால் ஜாக்சனை சந்தித்திருக்க வேண்டிய தேவையே இல்லை ஆனால் அத்தனை அவமானங்களுக்கும் அலைக்கழிப்புக்கும் பிறகு சென்று சந்தித்தது. தனது வலிமையை பெறுக்கிக் கொள்ளவே. அதன் பிறகு தப்பிவந்த கட்டபொம்மனை பிடிக்கவோ பாஞ்சாலகுறிச்சியை படையெடுத்து வெல்லவோ கும்பினி படை முயலவில்லை. விளக்கம் கேட்டு மதராசப்பட்டினம் (சென்னை) வந்து விளக்கம் அளிக்கும்படி பணிக்கப்பட்டார். வீரபாண்டியகட்டபொம்மனும் சென்னை வந்து சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படமால் பதில் அளித்து திரும்பினார். இவரின் நல்லெண்ணம் பெற ஆங்கிலேயர்களும் தானாதிபதியை விடுதலை செய்தனர்.

அதே சமயத்தில் ஜாக்சனின் ஊழல்களும் கண்டுபிடிக்கப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். சண்டை எதுவும் செய்யாமல் ஒரு ஆங்கிலேயே அதிகாரியின் பதவியை பறிபோக காரணமாக இருந்த கட்டபொம்மனின் புகழ் பாளையங்களிடையே பரவியது. பலர் கட்டபொம்மனின் பின்னே அணிதிரண்டனர், ஏன் மருதுபாண்டிய சகோதரர்கள் 500 வீரர்களை அனுப்பி வீரபாண்டியனின் கையை பலப்படுத்தினர். அன்றைய காலகட்டத்தில் மருது பாண்டியர்களுடன் உறவு வைத்துக்கொள்ளகூடாது என்பது ஆங்கிலேயேனின் கட்டளையாக இருந்தது. அப்பொழுது 1799ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு வீரமரணம் அடைந்தபிறகு. ஜாக்சனுக்கு பிறகு வந்த லூசிங்டன் கட்டபொம்மனை வந்து சந்திக்குமாறு கட்டளையிட்டான். அதற்கு முறையான அழைப்பு வேண்டும் என்று சொல்லி கடித போக்குவரத்துகளை நடத்திக் கொண்டே படை திரட்டும் பணியை தொடர்ந்தார் கட்டபொம்மன்.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை போன்ற திருநெல்வேலி சீமை பாளையக்காரர்களை தன்னுடன் சேர்த்துவிட்டார் கட்டபொம்மன். ஆங்கிலேயேனும் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மூலமாக் எட்டப்பனை வீரபாண்டியனின் கோட்டைக்குள்ளேயே பேரம் பேசி அனுப்பிவிட்டனர். தனதிபதி பிள்ளையின் சகோதரரையை ஓற்றரிய சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டு படைகளை தயார் செய்து கொண்டு கடிதம் எழுதி தாமதம் செய்து கொண்டிருந்தார் கட்டபொம்மன். ஆங்கிலேயேனும் தனது பீரங்கிகள் மைசூர் போரில் திரும்ப வருவதற்காக காத்து கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் திருவிழாவுக்காக ஊமைதுரை, தானாதிபதி, வீரன் சுந்தரலிங்கம் போன்றோர் திருச்செந்தூர் சென்ற சமயமான1799ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியில் ஆங்கிலேயே படை பாஞ்சாலகுறிச்சியை முற்றுகையிட்டது. இவ்வளவு விரைவில் படையெடுப்பை எதிர்பார்க்காத கட்டபொம்மன் மனம் தளராமல் திருச்செந்தூர் சென்றிருந்த படைகளை தவிர மீதம் இருந்த 1000 பேர் கொண்ட படையுடன் தீரத்துடன் போரிட்டார். பார்மென் தலைமையிலான ஆங்கிலேயே படை பீரங்கிகளுடன் போரிட்டாலும் பாஞ்சாலகுறிச்சியின் வீரத்திற்கு முன்னால் தோற்றது. விசயம் கேள்விபட்ட ஊமைதுரை விரைந்து வந்து பாஞ்சாலகுறிச்சியில் அண்ணனுடன் இணைந்து கொண்டார்.

பீரங்கிகளின் தாக்குதலால் கோட்டை சிதிலமடைந்தது. கோட்டை என்றால் மிகப்பெரிய கோட்டையெல்லாம் இல்லை இன்று மக்கள் நகரங்களில் ஒரு தோட்டத்துடன் அமைக்கு வீட்டின் அளவே பாஞ்சாலகுறிச்சியின் கோட்டை அளவு. வெற்றி பெற்றாலும் இனியும் அங்கிருந்தால் அடுத்த படையெடுப்பை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த கட்டபொம்மன் கோட்டையில் இருந்து வெளியேறினார். கோலார்பட்டியில் எட்டபனின் படையுடன் சண்டை நடந்தது இதில் தானாதிபதியும் நாகலாபுரம் பளையத்துக்காரர் செளந்திரபாண்டியும் சிறைபிடிக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரையும் தூக்கிலிட்டு கொன்றான் தளபதி பானர்மேன். அத்துடன் இல்லாமல் தானாதிபதியின் தலையை துண்டித்து பாஞ்சாலகுறிச்சியில் ஈட்டியில் குத்தி மக்களின் முன் வைத்தான். தன் மக்களுக்காகவும் தனது மன்னனுக்காகவும் தன் உயிரை இழந்த மாவீரர் தானாதிபதி சுப்பிரமணியபிள்ளை.

மனம் தளராத வீரபாண்டியன் சிவகங்கையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார், வழியில் தந்திரமாக விஜயரகுநாத தொண்டைமானால் சிறைபிடிக்கப்பட்டு ஆங்கிலேயனிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்பொழுது ஊமைதுரையும் பாஞ்சாலகுறிச்சியில் சிறைபிடிக்கப்பட்டு ஆங்கிலேயனின் சிறையில் இருந்தார். மரத்தடியில் விசாரணை என்ற பெயரில் விசாரிக்கப்பட்ட பொழுது கூட தன் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டுகளை மறுக்காமல் தலை நிமிர்ந்து ஆங்கிலேயப்படைகளை எதிர்த்ததை ஒத்துக்கொண்டார். தூக்கு மேடை ஏறும் பொழுது கூட சிறிது கூட வீரம் குறையாமல் நின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை என்பது பானர்மென் கம்பெனிக்கு எழுதிய கடிதங்களில் இருந்து தெரியவருகிறது. அவர் கவலைப்பட்ட ஒரே விசயம் தன் வாய் பேச முடியாத சகோதரனைப் பற்றி மட்டும் தான் என்பதையும் சொல்லியுள்ளார் பானர்மேன்.

இந்த தூக்குடன் பாஞ்சாலகுறிச்சியின் வீரம் மடிந்துவிடவில்லை, தொடர்ந்தது வீரன் சுந்தரலிங்கம் தன்னுடன் இருந்த சிறு படையுடன் ஆங்கிலபடையின் கட்டுபாட்டில் இருந்த பாஞ்சாலகுறிச்சியை தாக்கி கைப்பற்றி ஊமைதுரையையும் விடுவித்தான். அதன்பிறகு கோட்டையுள் இருந்து ஆங்கிலபடையுடன் போரிட்டு அவர்களை பின்வாங்கவும் வைத்தான். ஊமைத்துரை சிவகங்கை அடைந்தான் அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்று ஆங்கிலபடைகளிடம் பிடிபடாமல் திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். பாஞ்சாலகுறிச்சி சுந்தரலிங்கத்தின் வீரத்தால் அடிபணியாமல் நின்றது. திருச்சியில் இருந்து ஆயுதங்கள் வந்து சேர்ந்தன, சுந்தரலிங்கம் இனி தாக்குபிடிப்பது கடினம் என்பதை உணர்ந்து தனது அக்காள் மகள் வள்ளியுடன் ஆடு மேய்ப்பவன் போல் சென்று ஆயுதகிடங்கை அடைந்தான். ஆங்கிலப்படை சுற்றிவளைத்த பொழுது வள்ளியும் உள்ளே சென்றபிறகு இனி கிடங்கை அழிக்க ஒரே வழிதான் என்று தன்னையும், தன் முறைப்பெண் வள்ளியையும் சேர்த்து அழித்து கிடங்கையும் அழித்தான் வீரன் சுந்தரலிங்கம். இவன் தான் உலகின் முதல் தற்கொலைப்படை வீரன் என்றும் சொல்லாம்..

இத்தகைய வீரனைப்பற்றி இன்றளவும் நமக்கு தெரியவில்லை, ஏன் வீரபாண்டிய கட்டபொம்மனையே மா.பொ.சி என்பவர் எழுதும்வரை திருநெல்வேலி சீமையை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் தான் இருந்தார், அதுவும் நம் காலகட்டம் வரை. இன்று கூட நமக்கு கட்டபொம்மனின் வீரம் தெரிகிறது என்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்தின் வாயிலாகவே. தானதிபதி சுப்பிரமணியபிள்ளை, நாகலாபுரம் செளந்திரபாண்டியன், வீரன் சுந்தரலிங்கம் போன்றவர்கள் என்று மக்கள் முன் தெரியபோகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஏன் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலே மூச்சுவிடாமல் பேசப்படும் திரை வசனத்தை பேசிய கணேசனைக் கூட சிவாஜி கணேசன் என்று ஒரு மாராட்டிய கதாபாத்திரன் பெயரலேயே அடையாளம் கண்டு கொள்கிறோம்... இவர்களை போன்றவர்களின் வீரகாவியத்தையா நாம் அடையாளம் காணப்போகிறோம்.. இன்னும் வேண்டும் என்றால் சிவாஜி ராவ் என்று வேறு ஆட்களைத்தான் அடையாளம் காட்டுவோம் வீராதி வீரனென்று.. வீரத் தமிழ்மகனென்று...

1 comment:

  1. வெள்ளையதேவன் பற்றி தாங்கள் எதுவும் சொல்ல வில்லை ? கட்டபொம்மு கூட்டம் மிக வியப்பானது ! கட்டபொம்மு ஒரு கம்பளத்து நாயக்கன், தானதி ஒரு பிள்ளை, சுந்தரலிங்கம் ஒரு குரும்பரக இருக்கலாம், வெள்ளையத்தேவன் ஒரு மறவர் - எப்படி பல சாதி கூட்டணி ஏற்பட்டது என்று தெரிய வில்லை. நான் தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் வாழ்ந்தவன். "என்னம்மா தேவி சக்கம்மா" என்று படும் கிராமிய கலைஜர்கள் பாடல்களை நேரில் பார்த்து கேட்டு இருக்கிறேன். பாஞ்சாலகுறிச்சியின் கதையை இது போன்ற பாடல்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete