அன்பார்ந்த திரையுலக நண்பர்களே.....
உங்களை நான் என்றும் மறக்கமாட்டேன், என்றும் எங்களுக்கு தோளோடு தோள் நின்ற தோழர்கள் தாங்கள். ஒவ்வொரு முறையும் நமது அரசியல் கட்சிகள் வந்து எங்களின் கைகளை பலப்படுத்தியதோ இல்லையோ தாங்கள் வந்து நின்றீர்கள். இன்று நமக்கிடையே கருத்துகள் மாறிகொண்டு வருகின்றன, நான் அதை தவறாக நினைக்கவில்லை.
நீங்கள் தொழில் நிமித்தமாகவோ இல்லை சொந்தவிசயமாகவோ இலங்கை செல்வதை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அசின் போல் பலிகடாவாகி விடுவீர்களோ என்பதுதான் எங்கள் வருத்தம்.
நீங்கள் அங்கு செல்வதால் நம் சொந்தங்கள் மகிழ்ச்சி அடைவார்கள், இத்தனை அடி வாங்கியவர்களுக்கு நீங்கள் அவர்களை சென்று சந்திப்பதால் கிடைக்கும் சந்தோசத்தை வேண்டாம் என்று நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அசின் போன்று நம் இனத்தை கொன்று குவித்த ஒருவரின் மனைவியுடன் சென்று அவர்களின் உலக அரசியலின் சதுரங்கத்தில் நீங்களும் பலிகடாவாகி விடாதீர்கள்.
என்று ஈழத்திற்கு(இலங்கை என்று சொல்லவில்லை) தங்கு தடையின்றி யாருடைய தலையீடும் இல்லாமல் நாம் சுதந்திரமாக செல்லமுடியுமோ அன்று நாம் போவது தான் சரி. நமது மக்களுக்கு இந்த சந்தோசத்தை கொடுக்கமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும். வேறுவழியில்லை இன்றைய உலக சதுரங்கத்தில் நாம் ஒரு பகடைகாயாக மாற்றப்பட்டு பகடியாக எள்ளி நகையாடப்படாமல் இருக்க வேண்டும் என்றால் இது தான் சரியான முடிவாக இருக்கும்.
ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு விசயத்தை தடை செய்வதால் எந்தவிதமான உபயோகமும் இல்லை ஒரு நாட்டை ஆள்பவன் எப்படி வேண்டுமானாலும் அதை எதிர்கொண்டு சாமர்த்தியமாக சாமாளித்து தனது தேவையை நிவர்த்தி செய்து கொள்வான். ஆனால் நாம் செய்யவேண்டியதை அதே சாமர்த்தியத்துடன் அவர்களின் கையை கட்டிபோட்டுவிட்டு செய்வதே சாலசிறந்தது. இன்று நம் மக்களுக்கு அங்கு தேவை மருத்துவ பணியாளர்கள் இது இன்று மட்டும் அல்ல நாளைய தேவையும் கூட நீங்கள் அதற்கு உதவி செய்யவேண்டும்.
முதல்வர் அவர்களால் தொழிநுட்ப கல்வி கற்க, நம் அகதி மாணவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதே போல் மருத்துவ படிப்புக்கும் அனுமதி வாங்க வேண்டும். மேலும் செவிலியர் படிப்பு படிக்கவும் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு துணைபுரியவேண்டும். அவர்களை இங்கேயே கட்டிவைப்பது என்பது சரியல்ல, என்ன இருந்தாலும் தாய்மண் என்பது என்றுமே ஒரு வலி தான், அதைவிட்டு வெளியே வாழ்பவர்களுக்கு எனவே அவர்கள் திரும்பும் பொழுது அவர்களுக்கு சுயமாக வாழ தேவைகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். இங்கு அகதிகளாக வாழும் மக்களுக்கு முதலில் உதவுவோம் பின்னர் ஈழத்தில் இருக்கும் நம் ரத்தசொந்தங்களுக்கு தேவையானதை செய்வோம்.
கருணாஸ் அவர்களே உங்களுக்கு உங்கள் தாய்மண்ணை பார்க்கும் ஆசை இருப்பது நியாயம் ஆனதே. ஆனால் ஒன்றை மட்டும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் தாய் மண்ணை பார்க்க செல்வதை யாரும் தடுக்க முடியாது அனால் இலங்கை அரசாங்கம் அதை விளம்பரம் செய்யவிடாமல் தடுக்க முடியுமா என்று பாருங்கள். தாங்கள் சுதந்திரமாக அங்கு சென்று வரமுடியும் என்றால் சந்தோசம் சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்!!!
இப்படிக்கு
எந்த அரசியல் அமைப்பையும் சேராத தறுதலை தமிழன்.
No comments:
Post a Comment