Monday, April 20, 2015

எது திராவிடம் - கருப்புச் சட்டைசத்தியமூர்த்தி அய்யர் சென்னை கடற்கரையில் சர். முகமது உஸ்மான் அவர்களைப் பற்றி பேசிய அதே இடத்தில் மேடை போட்டு எரிமலை எம்.கே. குப்தா “சர். முகம்மது உஸ்மானைப் பற்றி சத்தியமூர்த்தி பேசிய வர்த்தைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் சத்தியமூர்த்தி வாபஸ் வாங்க வேண்டும் இல்லையென்றால் சத்தியமூர்த்தியின் காலிலே போட்டிருக்கின்ற பூட்சை அல்ல என்னுடைய காலிலே போட்டிருக்கின்ற பூட்சை கழற்றி அடித்து சத்தியமூர்த்தியை வாபஸ் வாங்க வைப்பேன்” என்று எம்.கே.குப்தாவும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியும் முழங்கினார்கள். இதன் பின்னர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

தமிழக காங்கிரஸின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் சத்தியமூர்த்தி அவர்களின் தொண்டர் படைபலமும் கணக்கிலடங்காதது, அதுவும் இந்த நிகழ்வு நடந்த காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் அப்பொழுது காங்கிரஸின் ஒரு தலைவரை நோக்கி சவால் விட்டு அவர் பேசியதற்கு மன்னிப்பு கோர வைத்தார்கள் என்றால் எத்தகைய நெஞ்சுரம் இருந்து இருக்க வேண்டும் இந்த பெரியார் தொண்டர்களுக்கு. கருப்புச் சட்டைக்காரன் என்றாலே ஒர் மக்களிடையே ஓர் மரியாதையும், எதிரிகளின் மனதில் ஒரு பயமும் என்றும் குடிகொண்டிருக்கும். அப்படியான கருப்புச் சட்டை அணிந்து கொள்ளும் பழக்கம் ஆரம்பிக்கப்பட்டது எப்பொழுது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

1930 களில் தீபாவளி நமது மன்னன் நரகாசுரனின் மரணமடைந்த தினம் இதை நாம் கொண்டாடக் கூடாது, அது நமக்கு துக்க தினம் என்று அறிவித்து கருப்புச் சட்டை அணிந்தார்கள் முதலில். அது தான் 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29, 30ம் நாட்களில் திருச்சியில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தொண்டர்கள் நிரந்தரமாக கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்றும் அதற்கான காரணத்தை வலியுறுத்தியும் பெரியார் பேசினார். 

“நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம், பெண்டிரும் கருப்புத் துணியில் புடவை ரவிக்கை அணியலாம். கூட்டங்களில் இனி மாலைக்கு பதில் கருப்புத் துணிகளே போடலாம். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை, நீலச்சட்டை இந்துஸ்தான் சேவதள் இருப்பது போல் இங்கும் கருப்புச் சட்டைப்படை தமிழ்நாடு முழுவதும் இருக்கும்.”

இதன் பிறகே கருப்புச் சட்டைப்படை உருவாக்கப்பட்டது, 1946ம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரையில் முதல் கருப்புச்சட்டை மாநாடு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மாநாட்டின் முதல் நாள் மிகவும் அமைதியாக நடந்தது ஆனால் மே 11ம் தேதி மாநாட்டு பந்தலுக்கு தீ வைக்கபப்ட்டது, பெரியாரின் தொண்டர்கள் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநாட்டு பந்தலை தாக்க முயன்ற இந்துமத காங்கிரஸ் வெறியர்களுக்கு  “கொடியே தடியாகவும் தடியே கொடியாகவும்*” பதிலடி கொடுக்கப்பட்டது. இப்படித் தான் கருப்புச்சட்டையும் அதன் கீழாக ஒரு படையாகவும் பெரியாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து கொள்ள ஆரம்பித்தனர். இந்து மத வெறி பிடித்த காங்கிரஸ் காரர்களுக்கு எதிராக கொடியை தடியாக மாற்றிய பிறகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்த் துறை காங்கிரஸ் அடியாட்களை கைது செய்தது.

மதுரையில் இப்படி கருப்புச் சட்டைப் படைக்கு எதிர்ப்பு தெரிவித்தது யார் என்று பார்த்தோம் என்றால், இன்றைய தமிழ்நாட்டு ஆலய நுழைவுப் போராட்ட வரலாற்றில் கதாநாயகனாக சித்தரிக்கப்படும் ‘வைத்தியநாத அய்யர்’ தான் கருப்புச் சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்த முற்போக்கு பிராமணன். ஆம் கக்கனை தன் மகன் போல் வளர்த்தவர், ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர் என்று எல்லாம் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ள இவர் இராஜகோபாலச்சாரியாரின் ஒரு கைப்பொம்மை. இராஜகோபாலச்சாரியின் விரலசைவுக்கு ஆடும் ஒரு பொம்மையாகவே ஆலாய நுழைவுப் போராட்டம் என்ற கண் துடைப்பு நாடகத்தை நடத்தினார், அரசாங்க அதிர்காரிகள் வருகிறார்கள் என்று சொல்லி கக்கன் உட்பட மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார், அங்கிருந்த அய்யர்களும் விமர்சையாக வரவேற்பு அளித்தனர்.

ஆலய நுழைவுப் போராட்டம் முடிந்த பிறகே அய்யர்களுக்கு விசயம் தெரிந்தது, வந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அதன் பிறகு கிட்டத்தட்ட 10 நாட்கள் கோயிலை இழுத்து மூடினர். கோயில் தீட்டு பட்டுவிட்டது என்று பரிகார பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டு அதன் பிறகே கோயில் திறக்கபப்ட்டது. இவ்வாறான ஒரு நுழைவுப் போராட்டம் எதற்கு என்று தெரியவில்லை, ஆனால் இதே முற்போக்குவாதியாகவும் புரட்சியின் அடையாளமாகவும் வரலாற்றில் சித்தரிக்கப்பட்ட வைத்தியநாத அய்யர் தான் மதுரையில் கருப்புச் சட்டை மாநாடு கூடாது என்று தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்தார். மதுரை கீழ்பாலத்தின் அருகில் கருப்புச் சேலை கட்டி வந்த பெண்களை அடித்து உதைத்தார்கள் இந்த வைத்தியநாத அய்யர் கூட்டம். இப்படி 10ம் தேதி மற்றும் 11ம் தேதி என்று மாநாடு நடந்த இரண்டு நாளும் மிகப்பெரும் கலவரங்களை நடத்திவிட வேண்டும் என்று முயன்றனர்.

ஆனால் பெரியார் தன் தொண்டர்களை கட்டுக்குள் வைத்து எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் பார்த்துக் கொண்டார். இப்படியான கருப்பு சட்டைப் படை ஆரம்பித்த இரண்டாவது வருடத்தில் 1948ம் ஆண்டு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சுப்புராயன் காலத்தில் தடை விதிக்கப்பட்டது. கருப்புச் சட்டைப் படை என்பது தமிழகத்தை ஆண்டவர்களைவிடவும், காவல்துறையை விடவும் பெயர் பெற்றிருந்த காலம் அது. மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் இல்லை காவல் துறையினரால் பிரச்சனை என்றாலும் அவர்கள் அணுகியது கருப்புச் சட்டைகளையே. இந்த நிலை 1990கள் வரை நீடித்தது.

பேரறிவாளன் 1991ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் தேதி சிபிஐயிடம் தந்தை ஞானச்சேகரன் என்ற குயில் தாசனாலும், அவரது அம்மா அற்புதம் இருவரும் சேர்ந்தே ஒப்படைத்தனர். மறுநாள் காலையில் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்று சொன்ன சிபிஐ அதிகாரிகள் 15நாள் பெற்ற தாய் தந்தைக்கும் பிள்ளையை கண்ணில் காட்டவில்லை, ஏன் சட்டப்பூர்வமாக 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க அனுமதிக்க கோர வேண்டும் என்ற சட்ட விதிமுறையையும் பின்பற்றாமல் 15 நாட்கள் சட்டவிரோதமாக கடத்தி வைத்து இருந்தனர். அந்த சமயத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு பேரறிவாளனை அழைத்து வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது, அதற்கு முன்பே பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது உலகிற்கே தெரியும். பேரறிவாளனை நீதி மன்றத்திற்கு அழைத்து வரும்பொழுதாவது பார்க்கலாம் என்று பேரறிவாளன் குடும்பத்தினர் செங்கல்பட்டு நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தனர்.

ஆனால் அவர்களுடன் ஜோலார்பேட்டை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் அதிகமானவர்கள் ஒன்றிணைந்தனர் நாங்களும் வருகிறோம் என்று சொல்லி. பேரறிவாளன் சம்பந்தப்பட்ட வழக்கு ராஜிவ் கொலை வழக்கு என்ற பொழுதிலும் 200 ஊர்க்காரர்கள் பேரறிவாளன் குடும்பத்துடன் இணைந்து நீதிமன்றம் வந்தனர் என்றால் பேரறிவாளன் தந்தை குயில்தாசனின் கருப்புச்சட்டையும் அந்த சட்டையுடன் அவரும் அவர் குடும்பமும் ஆற்றிய தொண்டே. 1990கள் வரை ஒருவரை காவல்துறை கைது செய்துச் சென்றால் என்ன ஏது என்று விசாரிக்க ஒரு கருப்புச் சட்டைகாரரை கூப்பிட்டுக் கொண்டு ஒட்டுமொத்த தெருவே காவல் நிலையம் செல்லும். ஆனால் 1991க்கு பிறகு இந்த நிலையை தலைகீழாக மாற்றியது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு, பேரறிவாளனையும் அவர் குடும்பத்தையும் திராவிடர் கழகத்தையும் பிரித்து நிறுத்தியது. ஒட்டுமொத்தமாக தன் இயக்கத் தோழர் ஒருவரை கைகழுவினர் திராவிடர் கழகத்தில் பெயருக்கு கருப்புச் சட்டை போட்டு உலாவருபவர்கள்.

உண்மையான கருப்புச் சட்டைக் காரர்கள் பலர் பெரியார் காலத்திலேயே வெளியேறிவர்களும், பேரறிவாளன் கைதுக்கு பிறகு வெளியேறியவர்களும் தொடர்ந்து கருப்புச் சட்டையுடன் களத்தில் நின்றனர், 26 பேருக்கு தூக்கு கொடுக்கப்பட்டபொழுதும் அதில் 26 பேரின் தூக்கு கயிறை அறுத்து எறியும் வரையில் தொடர்ந்து நின்றனர். ஆனால் திராவிடர் கழகம் கருப்புச் சட்டையை ஒரு சீருடையாக மாற்றிவிட்டது.

அது இன்று கருப்புச் சட்டை என்பது ஓர் அடையாளம் அல்ல என் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவிற்கான எதிர்ப்பு என்பதை மிகத் தெளிவாகவும் ஆணித் தரமாகவும் சொல்லும் விதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அணுகு முறையே. ஆனால் இதை அறியாத சிலர் இன்று பச்சைத்துண்டையும் கருப்புச் சட்டையையும் ஒருங்கே அணிந்து கொண்டு பண்பாட்டுப்புரட்சி கலாச்சார புரட்சி என்று கிளம்பிவிட்டனர். பெரியார் காலத்தில் இருந்து இன்று வரை கருப்புச் சட்டை என்பது எதிர்ப்பின் அடையாளமாக பின்பற்றபப்டுவது. சமூகத்தின் இழிவை துடைக்கும் வரை உண்மையான கருப்புச் சட்டைகள் ஏ.ஜி.கே, சுவரெழுத்து சுப்பையா போன்றவர்களாய் பயணிக்க இன்னும் பல கருப்புச் சட்டைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர், மேலும் புதிதாய் பல கருப்புச் சட்டைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.


முதல் பகுதி
http://kumarikantam.blogspot.in/2015/04/blog-post_16.htmlNo comments:

Post a Comment