Wednesday, August 5, 2015

சமணர் கழுவேற்றம்


சமணர் கழுவேற்றம் குறித்தான விவாதம் என்பது பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பது. இத்தகைய விவாதங்கள் நம்மை நமது வரலாற்றுடன் பொருத்தி பார்ப்பதற்கானது அல்ல, நாம் அந்த வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ளவே.

சமணர் படுகொலை என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை என்று கூறி பலர் மறுத்து வருகின்றனர். இவர்களுக்கு எத்தனை சான்றுகள் கொடுத்தாலும் இல்லை என்று தான் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதற்கு காரணம் தங்களை மேல்நிலையில் வைத்துக் கொண்டு நாங்கள் சமணர்களை கழுவிலேற்றும் அளவிற்கு கொடுமையானவர்கள் இல்லை என்று தங்களின் இந்து பரம்பரையை தூக்கிப்பிடிப்பது இல்லாமல் வேறு எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகம் தான் செய்த தவறுகளை உணர்ந்து அதிலிருந்து திருத்திக் கொள்ளமல் தன்னை போலி அடையாளங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறதோ அந்த சமூகம் என்றும் பண்பட்டதாக மாறும் வாய்ப்பு இல்லை. வேண்டுமென்றால் ஹிடலர் ஆரிய இனத்தை வலுவுள்ளதாக ஆக்குகிறேன் என்று சொல்லி, அவர் காலத்தில் தன் இனத்தில் இருந்த ஊனமுற்றவர்கள், வலிமையில்லாதவர்கள் அனைவரையும் கொன்று குவித்த பாசிச மனப்பான்மையை தங்களுடையதாக மாற்றிக் கொள்ள மட்டுமே இவர்களால் முடியும். 

ஐரோப்பிய அறிஞர்கள் தமிழர்கள் வரலாறு இல்லாதவர்கள் என்று ஓரு காலத்தில் குறிப்பிட்டதை உடைத்து உலகில் பழமையான வரலாறு தமிழர் வரலாறு எனபதை நமது இலக்கிய, மற்றும் கல்வெட்டு சான்றுகளின் மூலமாகவும் நிருபித்துள்ளோம். இதில் எந்த மன்னனும் தான் தோல்வியடைந்த போர்களைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிடவில்லை, தான் வெற்றி பெற்றவைகளையே பறைசாற்றும் வகையில் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு மன்னன் தோல்வியுற்றதை மற்றொரு மன்னனின் வெற்றி குறித்தான கல்வெட்டுகள் மூலமாகவே அறிந்து வருகிறோம். பாரி வள்ளலை மூவேந்தர்கள் இணைந்து முறியடித்ததையும் அவர் மரணத்தையும் இவ்வாறாகவே நம்மால் இலக்கிய ஆதாரங்களின் கீழ் அறிந்து கொள்ள முடிகிறது. அதே போல் தான் சமண கழுவேற்றம் என்பதை சைவ சமய ஸ்தாபித வரலாறாக நமக்கு கிடைக்கிறது.

ஒரு பகுதி மக்களின் பண்பாடு என்பது அவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து தெரியும், சைவ சமய கோட்பாடுகளின் சைவ சமய மக்கள் தங்களின் வெற்றியாக சைவ சமய ஸ்தாவித வரலாற்றை கொண்டாடுகிறார்கள். இதை கழுவேற்றம் என்ற பெயரிலேயே இது வரை கொண்டாடி வருகின்றனர்.

மதுரையின் பெரும் திருவிழாக்களில் ஒன்று சித்திரைத் திருவிழா இதன் தோற்ற காலத்தை நம்மால் அறிய இயலாவில்லை ஆனால் இந்த திருவிழாவில், அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்து நடக்கும் சித்திரை திருவிழாவில் ஆறாம் நாள் விழாவாக சிவனும் மீனாட்சியும் கோயிலுக்குள்ளேயே இருக்கும் சிவகங்கை ஜமீன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்கள். அப்பொழுது அங்கே சைவ சமய ஸ்தாபித வரலாறு பாடலாக ஓதப்படும். இந்த நிகழ்விற்கு பெயர் “கழுவேற்றம்”

இது மட்டுமல்ல திருப்பரங்குன்றத்தில் தெப்ப திருவிழாவின் போது இதே போல் ஆறாம் நாள் சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானையும் 16 கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள், இவர்களுடன் திருஞான சம்பந்தரும் எழுந்தருளுவார். அப்பொழுதும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று பாடல்கள் ஓதுவார்களால் ஓதப்படும்.

இந்து மதத்தின் உள்ளடக்கிய சிவன், மீனாட்சி, முருகன், தெய்வானை சம்பந்தப்பட்ட திருவிழாவில் இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவது சாதரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிறு தெய்வ வழிபாடு முறை என்பது இந்து மத சம்பிராதயங்களுக்குள் அடங்காது ஆனால் திருமங்கலம் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயில் 18ம் நூற்றாண்டில் எளிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இதையும் பார்ப்பனியத்தின் பிடியில் இன்று விட்டுவிட்டோம். காளியம்மன் ஸ்ரீ பத்திரகாளியம்மனாக உருவெடுத்துவிட்டார்.

சரி சமணர் கழுவேற்ற வரலாறுக்கும் இந்த கோயில் திருவிழாக்களுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நின்றசீர் நெடும் பாண்டியன் சமணத்தை போற்றி வளர்த்து வருகிறார், அவருடைய மனைவி மங்கையற்கரசி சைவத்தை போற்றுகிறார். ராணி மங்கையற்கரசி வேண்டுகோளின் கீழ் சம்பந்தர் மதுரை வருகிறார். அப்படி மதுரைக்கு வந்த சம்பந்தரை மதுரையில் கொலை செய்ய சமணர்கள் முயல்கிறார்கள். அதில் இருந்து தப்பிய சம்பந்தர் மன்னனுக்கு ஏற்பட்டிருந்த வெக்கை நோயை சமணர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை எனும் பொழுது திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனை நோயிலிருந்து விடுவிக்கிறார் இது தான் கதை.

“மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே”

இந்த கதை பெரியபுராணத்தில் இருக்கிறது, திருநீற்றுப் பதிகமும் நம் கையில் இருக்கிறது. இதைப் போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைந்த ஒவியமும் இருக்கிறது பல கோயில்களில் சிற்பங்களாகவும் இந்த கழுவேற்றம் நமக்கு ஆதாரங்களாக இருக்கிறது. சமணத்தை வென்று சைவம் தலைத் தோங்கியதை குறிக்கவே இன்று வரை பல கோயில்களில் திருவிழாக்களில் இந்த நிகழ்வை சைவ சமய தோற்ற நிகழ்வாக கழுவேற்றம் என்ற பெயரில் இன்று வரை கொண்டாடியும் வருகிறோம். ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அவர்களின் பண்பாட்டில் அன்றாட நடவடிக்கையிலும் இருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சமூகத்தின் நாகரீகம் என்பது அவர்களின் பல நூற்றாண்டு காலமாக கடைபிடித்து வரும் பழக்கவழக்கங்கள் தான்.

இத்தகைய ஒன்று தான் சமணர் கழுவேற்றத்திற்கான ஆதாரங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் போன்றவற்றில் மட்டுமில்லாமல் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சமணர் கழுவேற்றம் அந்த அந்த கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடந்து வருகிறது. இதையெல்லாம் மறுப்பது என்றால் இந்த சமணர் கழுவேற்றம் நடக்கவில்லை என்றோ கூறுபவர்கள். மொட்டையாக இதற்கான ஆதாரம் இல்லை ஆனால் இன்று வரை சமணக் குன்றுகள் இருக்கின்றன என்ற ஆதாரத்தை மட்டும் கொடுக்கிறார்கள் ஆனால் இவ்வாறு மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்ட திருவிழாக்களில் கண்ணுக்கு முன்பாக சமணர் கழுவேற்றத்திற்கு ஆதாரமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் நிகழ்வை மறந்துவிடுகிறார்கள்.

இப்படி மறுப்பவர்கள் சைவத்தையும் இந்துத்துவா தத்துவத்தை குற்றமற்றவர்களாக சித்தரிக்கும் மதவாதிகளாகவே இருக்கின்றனர். இந்து மதத்தின் குற்றங்களை மறைத்து அதனை தன் மதமாக தூக்கிப் பிடிப்பதே இவர்களின் நோக்கம். எவ்வாறு இன்று இந்து மத கூறான ஆர்.எஸ்.எஸ் இப்பொழுது அம்பேத்காரை தூக்கி வைத்துக் கொண்டு நால் வர்ண பேதத்தை பாதுகாக்க முயல்கின்றனரோ அவ்வாறே தான் இவர்களும். அம்பேத்காரும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து மதத்தை தூக்கி எறிய காரணமே நால் வர்ணத்தில் ஓரு இடம் கூட கொடுக்காமல் பஞ்சமர்களாக ஒதுக்கியதுடன் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஒரு மனித இனத்தின் கூறுகளாக கூட அவர்களை பார்க்கவில்லை என்பது தான் ஆனால் இன்று அம்பேத்கர் படத்தை தாங்கி பிடித்துக் கொண்டு வரும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் தமிழ் மன்னர்கள் செய்த தவறுகளை மறைத்து வெறும் பழம்பெருமை பேசும் இந்த கூட்டமும் ஒன்றே.

எந்த ஒரு கருத்தியலும் தன் தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த கருத்தியல் மட்டுமில்லை அதைச் சார்ந்த சமூகமும் விழ்ந்துவிடும் 

No comments:

Post a Comment