நம் தமிழக கிராமங்களில் வீடுகளின் திண்ணையில் ஒரு மண்பானையில் தண்ணீரும் எடுத்து பருக ஒரு டம்ளரும் இருக்கும். யார் வீட்டு கதவை தட்டி தண்ணீர் கேட்டாலும் கொடுப்பார்களே ஏன் இப்படி வெளியில் வைத்திருக்கிறார்கள், இது எதற்காக என்ற கேள்வி சிறு பிள்ளையில் வந்த பொழுது எனது அய்யாவிடம்(தாத்தா) கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் நம்மை பிடிக்காதவர் நம் வீட்டை கடந்து செல்லும் பொழுது அவருக்கு தாகம் ஏற்பட்டால் வீட்டின் கதவை தட்டிக் கேட்க கூச்சப்படுவார், ஆனால் இப்படி வெளியில் வைத்துவிட்டோம் என்றால் அவரே எடுத்து குடித்துவிட்டு போகலாம், நம் வீட்டை கடக்கும் பொழுது அவர் தாகத்துடனே கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றார். இப்படி உலகிற்கே விருந்தோம்பலை கற்று கொடுத்த நமக்கு இன்று விருந்தோம்பல் கற்று கொடுக்கப்படுகிறது. ஆம் பிரசன்ன விதகனேவின் திரைப்படம் அதன் பின்னாலான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இன்றைய இந்துவில் விருந்தோம்பலைப் பற்றி நமக்கு வகுப்பு வேறு எடுத்திருக்கிறார்கள்.
பிரசன்ன விதகனேவின் With You With out you பற்றிய மதிப்பீடுகளை விட அந்த படத்தை வைத்து நடத்தப்பட அரசியலே மிகப் பெரும் அளவில் இருக்கிறது. இந்தபிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்தே இதை பார்த்துக் கொண்டிருந்தவன் என்பதால் இதை பற்றிய தகவல்களை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டியதுள்ளது. இந்த படம் PVR திரையரங்குகளில் 17 ஊர்களில் இந்தியா முழுவதும் ஜூன் 20ம் தேதி வெள்ளிக் கிழமை திரையிடப்பட்டது. சென்னையிலும் திரையிடப்பட்டது ஞாயிற்றுக் கிழமை வரை யாரும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை,
ஆனால் திடீரென்று தமிழ்தேசிய பாசிசவாதிகள் என்று ஒர் அவலக்குரல் பெருங்குரல் எடுத்துக் கூவியது என்ன படம்? ஏது படம்? யார் படம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே உடனே வளைத்து வளைத்து பாசிச முத்திரையை குத்தியது அந்த குரல். சரி இயக்குனரை அனுகுவோம் என்ன பிரச்சனை என்று பார்ப்போம் என்ற நிலையில் தான் சரவணன் குமரேசன் இயக்குனரை தொடர்பு கொண்டார் அப்பொழுது தான் திரப்படத்தை திரையிட அருண் என்பவர் முயல்வதாக அறிகிறார். அருணை நான் தொடர்பு கொண்டேன் அப்பொழுது இவர்கள் தனி சென்சார் நடத்துகிறார்கள் என்று அந்த அவலக்குரல் திரும்பவும் கூவியது. இது இவர்கள் நடத்தும் நாடகமாக தெரியக்கூடாது என்று இந்த கூக்குரல் அவ்வளவே இது. சரி திரைப்படத்தை பார்க்க போகலாம் என்று சென்றோம் படம் பார்த்தோம் அங்கு யாரும் யாரையும் அடிக்கவில்லை ஒரு சிறு விவாதம் தான் நடந்தது அதுவும் ஒரு தாந்தோன்றித் தனமாக தான் சொன்னால் அதை வேதவாக்கு என்பது போல் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஒருவர் தராதரம் இல்லாமல் குதித்ததாலேயே நடந்தது. அதில் முழுமையாக சம்பந்தப்பட்டவன் என்பதால் அதை முழுமையாகவே எழுதுகிறேன், படத்தை குறித்த அனைத்து சர்ச்சைகளிலில் இதுவும் ஒன்று என்பதால் நான் நேரிடையாகவே திரு. ஜெயபாலனை எதிர்த்து திட்டினேன் என்பதால்.
படம் ஆரம்பித்து விளக்குகள் எல்லாம் அனைத்த பிறகு தான் இவர் திரையரங்கிற்குள் வந்தார் அப்பொழுது நானும் சரவணனும் அருகிலேயே அமர்ந்திருந்தோம். அதன் பிறகு படம் முடிந்தது, திரையரங்கில் சிலர் கை தட்டினார்கள் மற்றவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர் அப்பொழுது ஒரு அவலக்குரலுடன் கூக்குரலிட்டு இயக்குனரை பெயர் சொல்லி அழைத்து படம் சூப்பர் சூப்பர் என்று கூவினார் ஜெயபாலன். இதன் அரசியல் காரணம் உணர்ந்தவனாக அதை விமர்சிக்க கடமைப்பட்டுள்ளேன், அதாவது இவர் படம் நன்றாக இருக்கிறது என்று அங்கு வந்திருந்த அனைவரும் முன்னாலும் அங்கீகரிக்கிறாராம் அதன் பிறகு யாரும் பேசத் தேவையில்லை என்பது போல் ஒரே குரலாக கத்தினார்.
அதன் பிறகு இயக்குனருடன் கலந்துரையாடல் தொடங்கியது, அப்பொழுது இயக்குனரிடம் முதலில் ஒருவர் பாராட்டை தெரிவித்தார், அடுத்து ஒருவர் படத்தின் பின்னனி இசையில் தமிழ் பாடல்களே ஒலிப்பதுபோல் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு இது மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டது என்று ஜெயபாலன் பதில் கொடுத்தார். யார் இந்த உரிமையை கொடுத்தது இயக்குனரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் அதைவிடுத்து இவர் யார், இந்த படத்தில் லைட் பாய் வேலை பார்த்தாரா இல்லை உதவி இயக்குனராக பணிபுரிந்தாரா.
இயக்குனருடன் கலந்துரையாடல் எனும் பொழுது இயக்குனர் பேசட்டுமே என்று இல்லாமல் இவர் உள்ளே புகுந்து பதில் அளித்தார். அடுத்த கேள்வியை இன்னொரு தோழர் கேட்ட பொழுது மீண்டும் தனது அவலக்குரலை உயர்த்திக் கொண்டு பதில் அளிக்க முற்பட்ட பொழுது தோழர் சரவணன் குமரேசன் இது இயக்குனருடனான கலந்துரையாடல் அவர் பதிலளிக்கட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்றார். அதற்கு நீ யார் வாயை மூடிக்கொண்டு உட்கார் என்றார் இந்த பிதாமகர். இவர் தான் அது ஜனநாயகம் இல்லை இது ஜனநாயகம் இல்லை என்று புலிகள் இயக்கத்தை நோக்கி விமர்சனங்களை வைத்தவர். இவரின் ஜனநாயகம் என்ன என்ற கேள்வி இங்கு பல்லிளித்தது.
ஒரு திரையிடல் நிகழ்வில் இவரும் படத்தை பார்க்க ஒரு பார்வையாளராக வந்துள்ளார், நாங்களும் சென்று இருக்கிறோம் ஜனநாயகப்பூர்வமாக இயக்குனர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கின்றனர் இத்தகைய ஒரு இடத்தில் தான் தோன்றித் தனமாக நான் சொல்வேன் நீங்கள் எல்லாம் கேட்டே ஆகவேண்டும் விட்டேத்தியாக குதித்த ஜெயபாலனை மிகவும் காட்டமாக திட்டினேன். உடனே என்னை ரவுடி மாதிரி பேசுகிறாய் என்றார், கவனிக்கவும் அனைத்து வாதங்களும் பிரதி வாதங்களும் ஆங்கிலத்திலேயே நடந்தது நான் எந்த நாகரீகமற்ற வார்த்தைகளையும் உபயோகிக்கவில்லை. இந்த சமயத்தில் அதுவரை ஜெயபாலனுடன் நின்ற லீனா காணாமல் போனார் சிறிது நிமிடங்கள், அப்புறம் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் அருண் ஜெயபாலனை உட்காரச் சொன்னார் அப்பொழுது பின்னால் திரும்பி இவரின் சொந்த கதை சோகக் கதை எதையோ குறிப்பிட்டு அதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்டீர்களா என்றார். அதை இங்கு விவாதிப்பது என்றால் விவாதிக்கலாம், உங்கள் சொந்த பிரச்சனையை பேசவா நாங்கள் வந்திருக்கிறோம் என்று சரவணன் பதில் சொன்னவுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்.
ஒரு புறம் இந்த பேச்சுகள் நடக்கும் பொழுதே இயக்குனருடனான கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது யாரும் அவரை அடிக்கவோ இல்லை அவரை திட்டவோ செய்யவில்லை தங்களிடம் தோன்றிய ஐய்யப்பாடுகளையே கேள்வியாக கேட்டுக் கொண்டு இருந்தன்ர். இயக்குனர் கெளதமன் சக இயக்குனராக ஒரு கேள்வி இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டார், அதற்கு நான் சிங்களவனாக எனது பார்வையை சொல்லியுள்ளேன், ஆனால் அரசு தமிழ் மக்களின் பார்வையில் நின்று அவர்களுக்காக யோசித்தால் தான் மீள் கட்டமைப்பு என்பது சாத்தியமாகும் என்றார். கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பிரசன்ன அளித்த பதில் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சொன்ன பதிலில் இனப்படுகொலை என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்காமல் இனி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே. இதன் அரசியல் சர்வதேச அரங்கில் Genocide எனும் வார்த்தையை G Word என்றே உபயோகிப்பார்கள், அதைப் போன்றே இயக்குனர் பிரசன்னாவின் பதிலும் அமைந்தது.
இதன் பிறகு மேலும் சில தோழர்கள் கேள்விகள் கேட்க முயன்ற பொழுது நேரம் இல்லை என்று விலகிச் சென்றார்கள். அப்பொழுது பின்னால் இருந்து பெண்ணின் கூக்குரல் என்னவென்று பார்த்தால் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர் ஒரு சிலரிடம் என்ன என்று பார்க்கலாம் என்று சென்ற பொழுது அதில் ஒரு பெண் நான் ஜெயபாலனின் மனைவி என்று கூறினார். சரி இதற்கு மேல் அங்கு செல்வது தேவையில்லாதது என்று நானும் சரவணனும் வெளியேறிவிட்டோம். இந்த சமயத்தில் இயக்குனர், லீனா மணிமேகலை, ஜெயபாலனும் வெளியில் வந்தார்கள் சில தோழர்கள் கேள்விகள் எழுப்பினர் அதற்கு பதில் சொன்னாரா இல்லையா என்பது தெரியவில்லை. அனைவரும் கிளம்பிச் செல்வதில் ஈடுபட்டார்கள். வைக்கப்பட்ட கோரிக்கை என்பது புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லும் சப்டைட்டிலை மட்டும் நீக்க முடியுமா என்பது தான் இது படத்தில் இரண்டு இடங்களில் வருகிறது என்பது மட்டும் தான் இது கோரிக்கையாக தான் வைக்கப்பட்டது. அப்படி நீக்காவிட்டால் நாங்கள் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற வசனங்கள் எல்லாம் வரவும் இல்லை.
மேலும் கேள்வி பதில்கள் நடக்கும் பொழுதே காவல்துறை உள்ளே வந்தது, ஒரு தனியார் இடத்தில் தனியாரின் அனுமதியில்லாமல் காவல்துறை நுழைய முடியாது அப்படியிருந்த பொழுதும் காவல் துறை உள்ளே வந்தது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இது நிகழ்வை நடத்தியவர்கள் அசம்பாவிதம் ஏற்படும் என்று நினைத்து காவல்துறையை அணுகி இருக்க வேண்டும், அல்லது வேண்டும் என்றே வந்திருந்தவர்களை மிரட்டும் நோக்கத்துடன் காவல்துறையை உள்ளே அனுமதித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்த நோக்கத்துடன் செய்திருந்தாலும் சரி இது வரை தமிழ் தேசியக் கூட்டங்களில் எங்கும் எந்த அடிதடியும் ஏற்பட்டதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் பல இடங்களில் பல இயக்கங்கள் ஒருவரின் கருத்துக்கு நேர் எதிராக நிற்கும் இயக்கங்கள் அனைவரும் ஓரிடத்தில் இணைந்து நின்று போராடி இருக்கிறார்கள் எங்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்தது இல்லை ஆனால் இந்த கலை, இலக்கியம், இலக்கணம் என்று வியாக்கியானம் பேசுபவர்கள் நடத்தும் கூட்டங்களில் மட்டும் தான் இத்தகைய கூத்துகள் நடைபெறும், ஏன் பொது மக்களுக்காக நடத்தப்படும் புத்தக கண்காட்சிகளில் கூட கட்டி பிடித்து உருண்டு சண்டை போட்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டு.
ஆனால் இங்கிருக்கும் பலர் இதை உணராமல் எதோ தமிழ் தேசியர்கள் தான் குற்றமிழைத்தவர்கள் போல் பிதற்றுகிறார்கள், இதை பார்த்து கலையை ஒரு போராட்ட வடிவமாக செய்து வரும் நமது தோழர்களும் இவர்களை நோக்கி எந்த கேள்வியையும் எழுப்பாமல் நம்மை நோக்கியே விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த நிகழ்வில் யாரும் யாரையும் அவமானப்படுத்த வில்லை, வேண்டுமென்றால் நான் ஒருவன் மிகவும் கோபமாக ஜெயபாலனை நோக்கி Who the hell are you to tell us to shut up, You are also guest, I am also a guest என்று கோபமாக கேட்டேன், இதற்கு தான் நான் ரவுடி மாதிரி பேசுகிறேன் என்றார். ஜனநாயகப் பூர்வமாக யாரிடம் கேள்வி கேட்கப்படுகிறதோ அவர் பதில் சொல்லட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று தான் சொல்லப்பட்டது. ஒரு பைத்தியம் போல் அன்றிலிருந்து இன்று வரை அவர் பிதற்றி திரிகிறார் கலை இலக்கிய நண்பர்கள் அவரின் பைத்தியத்திற்கு எதை தின்றால் தெளியும் என்று சொல்லிக் கொடுங்கள். தமிழ் தேசியம் பேசுபவர்கள் நாகரீகத்தையும் விருந்தோம்பலையும் தாங்கள் பேசும் தமிழுடனே வாழ்ந்து உணர்ந்து கொண்டவர்கள்.
கடைசியாக சொல்ல விரும்புவது அடாவடி சென்சார் என்று இவர்கள் கூறுவதற்கான பதில் “தேன்கூடு, எல்லாளன்” போன்ற படங்கள் இவர்களுக்கு கலைவடிவமாக தெரியவில்லையா இந்த படங்களை மக்களுக்கு திரையிடக் கூடாது என்று சென்சார் போர்டு சொல்கிறது அதற்கு எதிர்வினையாற்றுவதில்லை இவர்கள். ஆனால் இந்த அரசு எம் மக்கள் சார்பான தகவல்களை கலை வடிவில் சொன்னால் அனுமதி மறுக்கிறது ஆனால் அரசாங்கத்துக்கு ஆதரவான படங்களை எந்த வடிவில் சொன்னாலும் அனுமதிக்கிறது இந்த நிலை இருப்பதனாலே இங்கே சிலபடங்களை நோக்கியும் அதன் இயக்குனர்களை நோக்கியும் ஏன் எப்படி என்று கேள்வி எழுப்ப வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. உண்மையான கலையை நேசிப்பவர்கள் இதைப் போன்ற எத்தகைய படங்களும் வெளிவர எந்த சென்சாரும் அனுமதிக்க தேவையில்லை என்று போராடட்டும்.
குறிப்பு : ஊடகங்கள் கூறுவது போல் யாரும் யாரையும் அடிக்கவில்லை.