Friday, June 21, 2013

நான் ஏன் இனவெறியன் ஆனேன்

மன கன இன கன, 
புன மான இன முன, 
வின வின முன, 
புன ஜன தொன முன, 
பென வின முன  
யாரும் பதட்டப்படாதிங்க.... யாரையும் நான் திட்டவில்லை "ராஜபக்சேவை தண்டிப்பது"  என்று 30 பக்க புத்தகம் போட்ட இயக்கங்களின் பெயர்கள் தான் இவை... 

புத்தகத்தின் பதிப்புரையிலே தங்களது புரட்சிகர பார்வையின் கீழ் இங்கு ஈழத்திற்காக போராடும் இயக்கங்களை இனவாதிகள் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார்கள். அதனால் தான் "நான் ஏன் இனவாதி ஆனேன்" என்பதை சொல்ல வேண்டியதாகிறது. 



இந்த புத்தகம் இந்த இயக்கங்களின் நிறுவனத் தலைவர் (Founder & Managing Director) வழங்கிய ஒரு நேர்காணலாக தொகுக்கப்பட்டு இருக்கிறது. இவர் முதலில் இன்றைய கோரிக்கைகளாக திமுகவும் அதிமுகவும் வைக்கும் கோரிக்கைகளை இருவகையாக பிரித்து பேசுகிறது ஆனால் எதனால் இந்த புத்தகம் போட்டார்களோ அவர்களின் கோரிக்கையை கொஞ்சம் அராய்ந்தலேயே இந்த புத்தகம் போட வேண்டிய தேவை இல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள். அதுக்கு எங்கே அவர்களது புரட்சிகர சித்தாந்தங்கள் சிந்திக்க விடுகின்றன.... குற்றம் கண்டுபிடித்து வாழ்வரே வாழ்வர் என்பது தானே இவர்களின் புரட்சிகர சித்தாந்தமாக இருக்கிறது. அவர்களுக்காக மற்றுமொரு முறை மாணவர்கள் முன்வைத்து போராடும் கோரிக்கைகள். 

  1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நாவில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மான ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை.
  2. இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
  3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
  4. சிங்களஇனவெறி அரசின்துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
  5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
  6. உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
  7. ஆசியநாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது..
  8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
  9. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.
சர்வதேச போர்குற்ற விசாரணையை இந்தியா ஐநாவில் தீர்மானமாக கொண்டுவரக் கோருவது, இந்தியாவை தப்பிக்க வைக்கும் நோக்கம். இந்தியாவும் இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்பதை மறைப்பது என்று கூருகிறார். மாணவர்களின் போராட்டங்களுக்கு பிறகே கருணாநிதி தனது நிலைப்பட்டன அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதில் இருந்து மாறி, திருத்தங்கள் கொண்டுவரப் படவேண்டும் என்று பேசினார். ஜெயலலிதாவும் சர்வதேச போர்குற்ற விசாரணை வேண்டும் என்று சொன்னார். இதற்கு காரணமான மாணவர் போராட்ட கோரிக்கையை மறந்துவிட்டார்கள். 

ஒட்டுமொத்தமாக இந்த புத்தகத்தின் நோக்கம் என்பது இன்றைய மாணவர் போராட்டங்களை நொட்டை சொல்வதும், தமிழினத்தைப் பற்றி யோசிப்பவர்களை இனவாதிகளாக சித்தரிப்பதுமே. இதை படித்து முடிக்கும் பொழுது ஏன் நான் இனவாதியாக இருக்க கூடாது என்று தான் நினைக்க தோன்றுகிறது. 7வது கோரிக்கையாக ஆசியநாடுகள் எவையும் இந்த சர்வதேச போர் குற்ற விசாரணையில் பங்கு கொண்டு விசாரிக்க கூடாது என்று தெளிவாக சொல்லி இருக்கின்றனர். இது இந்தியா போன்ற ஆசிய நாடுகள் தப்பிக்க வைக்கும் நோக்கம் இல்லை அவைகளும் சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன். இதை கருணாவும் ஜெயாவும் மறப்பது அவர்களின் இந்திய பாசத்தால் ஆனால் இந்த கோரிக்கையை இந்த நிறுவனத் தலைவர் மறப்பது தான் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஏன் மாணவர்கள் பல கோரிக்கைகளுடன் இருக்கின்றனர் என்று சொன்னவர் இவர்களின் இயக்கம் சார்பாக தற்பொழுது முளைத்திருக்கும் புதிய காளான் ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி கோரிக்கையாக இல்லாததால், இன்றைய மாணவ போராட்டங்களின் முதல் நெருப்பு துண்டாக இருந்த லயோலா மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ  விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்  இந்த கோரிக்கைகளை மறந்தது ஏன்??? 


நீங்களே சொல்கிறீர்கள் மனித உரிமை என்ற பெயரில் தான் அமெரிக்கா அனைத்து இடங்களிலும் மூக்கை நுழைக்கிறது எனவே தான் கியூபா, வெனிசுலா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக இலங்கைக்கு அதரவாக வாக்களிக்கின்றன என்று, ஆனால் அதே சமயத்தில் புலிகள் இயக்கம் அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்பக் கூடாது என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா. அமெரிக்கா வந்ததால்  நீங்க குளத்திடம் கோவிச்சுக்கிட்டு குண்டி கழுவாம நீங்கள் போனா ஈழமக்களும் கழுவாம போக முடியுமா?? ஈழமக்களுக்கு தேவை அவர்கள் மக்களின்  பாதுகாப்பும் உரிமையும் அதற்காகவே ஆயுதம் தூக்கினர் போராடினர். உங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனைகளுக்காக அல்ல. 



அங்கிருந்த பாட்டாளி வர்க்கமான மலையக தமிழர்கள் வெளியேற்றப் பட்ட பொழுது உங்கள் பாட்டாளி வர்க்க தோழர்கள் தோள்  கொடுக்க வரவில்லை. தந்தை செல்வா மட்டுமே எதிர்த்து குரல் கொடுத்தார் பொன்னம்பலத்தின் கட்சியைவிட்டு வெளியேறி தனி கட்சி உருவாக்கி போராடினார். ஆனால் உங்கள் சிங்கள பாட்டாளிவர்க்க தோழர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்தனர் என்று சொல்வதை விட கொக்கரித்ததாகவே கருத முடியும். ஏனென்றால் குற்றம் செயல்படுத்தப் படும்பொழுது காக்கும் அமைதி அந்த குற்றம் செய்தவனை விட கொடும் குற்றமாகவே அந்த அமைதி கருதப்பட வேண்டும். 1950களில்  இருந்து இன்றுவரை நடத்தப் படும் அனைத்து கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் அந்த சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து தமிழர்கள் தங்களின் உரிமையை வென்று எடுக்க வேண்டும் என்று கூறுவது கேவலமாக இல்லையா. ஜெவிபி போன்ற இயக்கங்களில் சில ஆதரவு அளித்தாலும் ஒட்டுமொத்தமாக தமிழினத்திற்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாத கையாலாகத நிலையில் தான் நின்றனர். இன்று தமிழர்கள் இணைந்தால் அதன் பிறகு அவர்கள் பலம் கூடலாம், ஆனால் போராடிய தமிழர்களுடன் இணையாத அவர்களுடன் தமிழர்கள் இணைய வேண்டும் என்று ஆசைப்படும் நீங்கள் ஏன் 30 வருடமாக இயக்கம் நடத்தும் நீங்கள் தமிழர் போராட்டத்தில் அவர்களை இணைய சொல்லி வற்புறுத்தவில்லை.

இந்திய அரசாங்கமாக இருக்கும் காங்கிரஸ், பிஜேபி போன்ற பல கட்சிகள் பற்றி எல்லாம் இங்கு அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். உங்களுக்கு தான் இன்று உங்கள் மூளையில் கண்டுபிடித்த ரகசியம் போல் பேசுகிறிர்கள். அனால் இங்கு இருக்கும் தமிழினவாத அமைப்புகளும் சரி இன்று எழுச்சியுடன் போராடும் மாணவர்களும் சரி யாரும் ப.ஜ.கவை நம்பி இருக்கவில்லை. வரும் தலைமுறை அவர்களை அழித்தொழிக்கும் அனால் உங்களைப் போன்றவர்களை தான் அவர்கள் முதலில் அழித்தொழிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். எனென்றால் எதிரியை நேரடியாக களத்தில் சந்தித்து பகையை தீர்த்துக் கொள்ளலாம் உங்களை போன்றவர்கள் கூட இருந்து புரட்சி புண்ணாக்கு என்று கழுத்தை அறுப்பவர்கள்.  1,50,000 பேர் உயிர் போனபொழுது காப்பாற்ற வராத உங்கள் புரட்சிகர சித்தாந்தம் இப்பொழுது கப்பாற்ற வரும் என்று நினைக்க நாங்கள் முட்டாள்கள் இல்லை காங்கிரஸ், பாஜக போன்ற மதவாத கட்சிகளுடன் உதவாத உங்க கட்சிகளையும் இயக்கங்களையும் என்றிலிருந்தோ நாங்கள் ஒன்றாக பிஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் சேர்த்து ஒரே நேர்கோட்டில் இணைத்து தான் பார்க்கிறோம். 

குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க கோரும் உங்கள் புத்தகம், அதைவிட முக்கியமான பாதிக்கப் பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பேச எது தடுக்கிறது. புலிகளை பாசிசவாதிகள் என்று கூறி வந்த நீங்கள் இன்று அவர்களை புகழ முடியாது என்பதாலா, நாங்கள் தெளிவாக இருக்கிறோம்  போராடும் மாணவர்களும் தெளிவாக இருக்கிறார்கள் "விடுதலைபுலிகள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்கள்" என்பதில் 



நீங்கள் தான் விடுதலை போராட்டத்திற்கும் மற்ற இன வெறியாட்டங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றி திறிகிறீர்கள். 

ஒடுக்கப்பட்ட ஒரு இனம் தன் கால்களில் தானே எழுந்து நிற்க முயல்வது இனவாதம் என்றால் நாங்கள் இனவெறியர்களாகவே இருந்துவிட்டு போகிறோம் 

ஒடுக்கப்படுபவர்களுகாக குரல் கொடுக்க வேண்டிய புரட்சிகர இயக்கங்கள் குரல் கொடுக்காமல் உயிரையும் உடமையும் பறிகொடுத்தவர்களுகாக குரல் கொடுக்கும் எங்களை இனவெறியன் என்றால் நானும் இனவெறியனே.. 

தேசிய இனவிடுதலையை அங்கீகரிக்கும் கம்யுனிசம் அது கம்யுனிசமாக மட்டும் இருந்தால் தான் குரல் கொடுப்போம் மற்றவர்கள் மூலமாக என்றால் வாயை மூடிக் கொள்ளும் என்றால் நாங்கள் இனவெறியர்களாகவே எங்கள் மண்ணை மீட்டுக் கொள்கிறோம். 

ஆயிரம் முறை சொல்வோம் நாங்கள் எம் இன மக்களின் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க போராடும் இனவெறியனாகவே இருக்க விரும்புகிறேன். 

Thursday, June 20, 2013

சகோதர யுத்தம் எனும் பொய் பரப்புரை


ஈழம் தமிழ் மக்களுக்கு மாபெரும் போராளிகளை அடையாளம் காட்டி சென்று இருக்கிறது தமிழீழ விடுதலை போராட்டம், சிவகுமரனிலிருந்து, குட்டிமணி, தங்கதுரை என்று பலரை அவர்களின் வரிசையில் சபா என்ற சீரிசபாரத்தினமும் ஒருவர். இவர் தனது ஈழப்போராட்டத்தை டெலோ அமைப்பில் குட்டிமணி தலைவராக இருந்த பொழுது இணைந்து தொடங்கினார்.

டெலோவில் சபாவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள் பேபியும், தாஸும் இவர்களுக்கு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது. இதை பற்றி பேசுவதற்காக தமிழகத்தில் டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு இருந்த சபாரத்தினம் ஈழத்திற்கு சென்றார். அங்கு சென்றவர் பேபியுடன் சேர்ந்து கொண்டு தாஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். யாழ்ப்பாண மருத்தவமனையில் பேச்சு நடத்த இடம் முடிவு செய்யப்பட்டது, பேச்சுவார்த்தை நடத்த தாஸ் அவருடைய மெய்காவலர்கள் மோகன் (முல்லை தீவு), காளி (பருத்தி துறை), கிசான்(திரிகோணமலை) பீட்டர் (வதிரி) ஆகியோருடன் வந்தார், பேச்சுவார்த்தை பதிலாக தூப்பாக்கி குண்டுகள் பறந்தன இந்த சண்டையில் தாஸ் மற்றும் அவரின் தோழர்கள் சுட்டு கொல்லப் பட்டனர்.

இந்த சண்டையில் இடையில் மாட்டி ஒய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் குண்டடிபட்டு இறந்தார். இது அனைத்தும் நடந்தது 1986ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி. அதற்கு மறு நாள் இந்த கொலைகளை கண்டித்து மறுநாள் மார்ச் 12ம் தேதி பொதுமக்களும், மாணவர்களும் ஊர்வலம் நடத்தினர். அங்கு சென்ற டெலோ இயக்கத்தினர் பொதுமக்களையும், மாணவர்களையும் ஊர்வலம் நடத்த கூடாது என்று மிரட்டினர். ஆனால் அவர்களை மீறி ஊர்வலம் நடந்த பொழுது பொதுமக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதை போன்ற ஒரு விசயம் அது வரை ஈழபோராட்ட வரலாற்றில் நடந்தது இல்லை. எந்த மக்களுக்காக போராட தலைமறைவு, மற்றும் போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்களோ அந்த மக்களுக்கு எதிராகவே துப்பாக்கிகளை தூக்கிய அவலம் நடந்தேறியது.

இந்த துப்பாக்கி சூட்டில் வயோதிகர் ஒருவரும், ஒரு சிறுமியும் உயிர் இழந்தார்கள். மிகப்பெரும் தியாக உணர்வுடன் தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் விட்டு வெளியில் வந்து எந்த மக்களுக்காக கிடைத்த உணவை சாப்பிட்டு காடுகளில் வாழ்ந்தார்களோ அதே மக்களுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கினார்கள் போராளிகள். சபாரத்தினம் என்ற மாபெரும் போராளியின் போராட்ட வாழ்க்கையின் பெரிய கலங்கம் இந்த துப்பாக்கி சூடு தான்.

இதன் பிறகு புலிகள் இயக்க போராளிகளை கடத்தி சென்று சிறை வைத்துவிட்டு பணயத்தொகை கேட்டார்கள். சபாவின் ஊர்காரரான லிங்கம் என்பவரை பேச்சுவார்த்தைக்கு விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் லிங்கத்தின் பிணம் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் கட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் பிறகே 1986ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி டெலோவை நோக்கிய தங்களது முழுமையான சண்டையை புலிகள் இயக்கம் தொடங்கியது. இதில் 16 நாட்களில் டெலோ இயக்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மே 6ம் தேதி புகையிலை தோட்டம் ஒன்றில் சபா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஈழப்போராட்டம் என்று பேசும் பொழுது எல்லாம் சிலர் சகோதரசண்டை என்று சொல்கிறார்கள், ஏன் இந்த வார்த்தை பிரயோகம் என்பதை யாரும் புரிந்து கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள். உலகத்தின் பல மூளைகளில் இதே போன்று விடுதலைப் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன, அங்கும் பல குழுக்களாக போராடி வருகின்றனர், அவர்களை எல்லாம் சகோதர சண்டையிடுகிறார்கள் என்று யாரும் கூறுவதில்லை. அவர்களின் சித்தாந்தமும் கருத்தியலின் வேறுபாட்டின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றனர். ஆனால் தமிழர்களின் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களை மட்டும் சகோதர யுத்தம் என்று குறிப்பிடுகிறார்கள்.

பாலஸ்தீனத்தில் பதா, ஹமாஸ் என்ற இரண்டு குழுக்களுக்கு இடையே இருக்கும் வேறுபாட்டை முரண்பாடு (Conflict) என்றே கூறுகிறார்கள், சகோதர சண்டை என்று அழைக்கப்படுவதில்லை. நம்மிடையே மட்டும் தான் இந்த வார்த்தை பிரயோகம் உள்ளது இதற்கான காரணம் எது. ஒரு சமயத்தில் இந்திய அரசு இலங்கையில் விடுதலை போராட்ட குழுக்களை ஆதரித்து வந்தது அப்பொழுது மக்களும் பெருமளவு இந்த விடுதலை போராட்ட குழுக்களை ஆதரித்தனர். அரசு மற்றும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை தம் சகோதரர்களுக்கு உதவுவது தங்களது தார்மீக கடமையாக செய்துவந்தனர். இவர்கள் அனைவர் மனதில் ஒரு தவறான எண்ணத்தை உருவாகக் வேண்டும் என்பதற்காகவே இந்த வார்த்தை பிரோயகம் உபயோகிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தை சேர்ந்த புஸ்பராஜா ஆயுதங்களுடன் சேலத்தின் அருகே ஒரு காரில் சென்ற பொழுது காவல்துறையினரால் மறிக்கப்பட்டு சோதனை செய்ய முயன்றனர். அப்பொழுது நாங்கள் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னபொழுது அந்த காவல் துறையினர் சோதனை செய்யாமல் செல்ல அனுமதித்தனர் என்பதை மிகவும் தெளிவாக தனது புத்தகத்தில் புஸ்பராஜா பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் ஈழவிடுதலை போராட்ட போராளிகள் என்றாலே புலிகள் இயக்கம் மட்டுமே தெரியும், வேறு பெயர்களை பற்றி மக்கள் கவலைப்பட்டதில்லை அனைவரையும் புலிகள் என்றே அழைத்துவந்த காலம் அது.

இப்படி எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் புலிகளாக விடுதலை போராட்ட போராளிகளாக பார்த்த மக்களிடையே நஞ்சை விதைக்கும் விதமாகத் தான் சகோதர யுத்தம் என்ற வார்த்தை பிரயோகிக்கப் பட்டது. இதை இன்று வரை உபயோகிப்பவர்கள் புலிகள் இயக்கம் தான் சகோதர யுத்தம் நடத்தியது என்பது போல் பேசி வருகிறார்கள் ஆனால் சொந்த இயக்கத்தில் இருந்தவர்களை கருத்துவேறுபாட்டால் அழித்தொழித்ததையும், எந்த மக்களின் விடுதலைகாக போராட வந்தார்களோ அந்த மக்களின் மீது ஆயுதம் உபயோகித்ததையும் இவர்கள் திட்டமிட்டு மறைப்பது ஏன் என்ற காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.