Thursday, June 20, 2013

சகோதர யுத்தம் எனும் பொய் பரப்புரை


ஈழம் தமிழ் மக்களுக்கு மாபெரும் போராளிகளை அடையாளம் காட்டி சென்று இருக்கிறது தமிழீழ விடுதலை போராட்டம், சிவகுமரனிலிருந்து, குட்டிமணி, தங்கதுரை என்று பலரை அவர்களின் வரிசையில் சபா என்ற சீரிசபாரத்தினமும் ஒருவர். இவர் தனது ஈழப்போராட்டத்தை டெலோ அமைப்பில் குட்டிமணி தலைவராக இருந்த பொழுது இணைந்து தொடங்கினார்.

டெலோவில் சபாவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள் பேபியும், தாஸும் இவர்களுக்கு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது. இதை பற்றி பேசுவதற்காக தமிழகத்தில் டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு இருந்த சபாரத்தினம் ஈழத்திற்கு சென்றார். அங்கு சென்றவர் பேபியுடன் சேர்ந்து கொண்டு தாஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். யாழ்ப்பாண மருத்தவமனையில் பேச்சு நடத்த இடம் முடிவு செய்யப்பட்டது, பேச்சுவார்த்தை நடத்த தாஸ் அவருடைய மெய்காவலர்கள் மோகன் (முல்லை தீவு), காளி (பருத்தி துறை), கிசான்(திரிகோணமலை) பீட்டர் (வதிரி) ஆகியோருடன் வந்தார், பேச்சுவார்த்தை பதிலாக தூப்பாக்கி குண்டுகள் பறந்தன இந்த சண்டையில் தாஸ் மற்றும் அவரின் தோழர்கள் சுட்டு கொல்லப் பட்டனர்.

இந்த சண்டையில் இடையில் மாட்டி ஒய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் குண்டடிபட்டு இறந்தார். இது அனைத்தும் நடந்தது 1986ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி. அதற்கு மறு நாள் இந்த கொலைகளை கண்டித்து மறுநாள் மார்ச் 12ம் தேதி பொதுமக்களும், மாணவர்களும் ஊர்வலம் நடத்தினர். அங்கு சென்ற டெலோ இயக்கத்தினர் பொதுமக்களையும், மாணவர்களையும் ஊர்வலம் நடத்த கூடாது என்று மிரட்டினர். ஆனால் அவர்களை மீறி ஊர்வலம் நடந்த பொழுது பொதுமக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதை போன்ற ஒரு விசயம் அது வரை ஈழபோராட்ட வரலாற்றில் நடந்தது இல்லை. எந்த மக்களுக்காக போராட தலைமறைவு, மற்றும் போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்களோ அந்த மக்களுக்கு எதிராகவே துப்பாக்கிகளை தூக்கிய அவலம் நடந்தேறியது.

இந்த துப்பாக்கி சூட்டில் வயோதிகர் ஒருவரும், ஒரு சிறுமியும் உயிர் இழந்தார்கள். மிகப்பெரும் தியாக உணர்வுடன் தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் விட்டு வெளியில் வந்து எந்த மக்களுக்காக கிடைத்த உணவை சாப்பிட்டு காடுகளில் வாழ்ந்தார்களோ அதே மக்களுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கினார்கள் போராளிகள். சபாரத்தினம் என்ற மாபெரும் போராளியின் போராட்ட வாழ்க்கையின் பெரிய கலங்கம் இந்த துப்பாக்கி சூடு தான்.

இதன் பிறகு புலிகள் இயக்க போராளிகளை கடத்தி சென்று சிறை வைத்துவிட்டு பணயத்தொகை கேட்டார்கள். சபாவின் ஊர்காரரான லிங்கம் என்பவரை பேச்சுவார்த்தைக்கு விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் லிங்கத்தின் பிணம் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் கட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் பிறகே 1986ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி டெலோவை நோக்கிய தங்களது முழுமையான சண்டையை புலிகள் இயக்கம் தொடங்கியது. இதில் 16 நாட்களில் டெலோ இயக்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மே 6ம் தேதி புகையிலை தோட்டம் ஒன்றில் சபா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஈழப்போராட்டம் என்று பேசும் பொழுது எல்லாம் சிலர் சகோதரசண்டை என்று சொல்கிறார்கள், ஏன் இந்த வார்த்தை பிரயோகம் என்பதை யாரும் புரிந்து கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள். உலகத்தின் பல மூளைகளில் இதே போன்று விடுதலைப் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன, அங்கும் பல குழுக்களாக போராடி வருகின்றனர், அவர்களை எல்லாம் சகோதர சண்டையிடுகிறார்கள் என்று யாரும் கூறுவதில்லை. அவர்களின் சித்தாந்தமும் கருத்தியலின் வேறுபாட்டின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றனர். ஆனால் தமிழர்களின் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களை மட்டும் சகோதர யுத்தம் என்று குறிப்பிடுகிறார்கள்.

பாலஸ்தீனத்தில் பதா, ஹமாஸ் என்ற இரண்டு குழுக்களுக்கு இடையே இருக்கும் வேறுபாட்டை முரண்பாடு (Conflict) என்றே கூறுகிறார்கள், சகோதர சண்டை என்று அழைக்கப்படுவதில்லை. நம்மிடையே மட்டும் தான் இந்த வார்த்தை பிரயோகம் உள்ளது இதற்கான காரணம் எது. ஒரு சமயத்தில் இந்திய அரசு இலங்கையில் விடுதலை போராட்ட குழுக்களை ஆதரித்து வந்தது அப்பொழுது மக்களும் பெருமளவு இந்த விடுதலை போராட்ட குழுக்களை ஆதரித்தனர். அரசு மற்றும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை தம் சகோதரர்களுக்கு உதவுவது தங்களது தார்மீக கடமையாக செய்துவந்தனர். இவர்கள் அனைவர் மனதில் ஒரு தவறான எண்ணத்தை உருவாகக் வேண்டும் என்பதற்காகவே இந்த வார்த்தை பிரோயகம் உபயோகிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தை சேர்ந்த புஸ்பராஜா ஆயுதங்களுடன் சேலத்தின் அருகே ஒரு காரில் சென்ற பொழுது காவல்துறையினரால் மறிக்கப்பட்டு சோதனை செய்ய முயன்றனர். அப்பொழுது நாங்கள் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னபொழுது அந்த காவல் துறையினர் சோதனை செய்யாமல் செல்ல அனுமதித்தனர் என்பதை மிகவும் தெளிவாக தனது புத்தகத்தில் புஸ்பராஜா பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் ஈழவிடுதலை போராட்ட போராளிகள் என்றாலே புலிகள் இயக்கம் மட்டுமே தெரியும், வேறு பெயர்களை பற்றி மக்கள் கவலைப்பட்டதில்லை அனைவரையும் புலிகள் என்றே அழைத்துவந்த காலம் அது.

இப்படி எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் புலிகளாக விடுதலை போராட்ட போராளிகளாக பார்த்த மக்களிடையே நஞ்சை விதைக்கும் விதமாகத் தான் சகோதர யுத்தம் என்ற வார்த்தை பிரயோகிக்கப் பட்டது. இதை இன்று வரை உபயோகிப்பவர்கள் புலிகள் இயக்கம் தான் சகோதர யுத்தம் நடத்தியது என்பது போல் பேசி வருகிறார்கள் ஆனால் சொந்த இயக்கத்தில் இருந்தவர்களை கருத்துவேறுபாட்டால் அழித்தொழித்ததையும், எந்த மக்களின் விடுதலைகாக போராட வந்தார்களோ அந்த மக்களின் மீது ஆயுதம் உபயோகித்ததையும் இவர்கள் திட்டமிட்டு மறைப்பது ஏன் என்ற காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

1 comment:

  1. இது கருணாநிதி அண்ட் கோவின் திட்டமிட்டவாவார்த்தைப்பிரயோகம்தான் இந்த சகோதர யுத்தம்.

    ReplyDelete