Sunday, February 27, 2011

ஜால்ரா சத்தம் காது ஜவ்வை கிழிக்கிறது

ஒரு தொலைகாட்சிகாரன் இந்தியாவிலேயே சிறந்தமாநிலமுனு சொல்லிப்புட்டானு வரிந்து கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடுவது சகிக்கலை. ஊருக்குள்ளே இருந்துகிட்டே ஒன்னுமே நடக்கவில்லை என்பது போல் காலரை தூக்கிவிட்டுக்குட்டு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்று பீத்திக்கொள்வது அதுவும் கலைஞரின் ஆட்சியில் தான் தமிழகமும் தமிழனும் முன்னேறியிருக்கிறான் என்று மார்தட்டிக் கொள்வது.

தமிழ்நாடு காவல்துறை இணையத்தில் குற்றங்களின் புள்ளிவிவர பட்டியல் போட்டு இருக்கிறார்கள் அதை பார்த்தால் வருடா வருடம் குற்றங்கள் அதிகமாகி கொண்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் சாதனை படைத்துக்கொண்டுதான் உள்ளது தமிழகம். பாலியல் குற்றங்களான கற்பழிப்பு, பாலியல் தொந்தரவு போன்ற குற்றங்கள் குறைந்திருந்தாலும். பெண்கள் கடத்தல் குற்றங்கள் மிக அபரிமிதமான வளர்ச்சி பெற்றிருக்கிறது. என்ன செய்வது வெட்கப்பட வேண்டிய விசயத்தை கூட உங்களை போன்றவர்களுடன் வாழ்வதால் அபரிமிதமான வளர்ச்சி என்று சொல்ல தான் தோன்றுகிறது.

மேலே இருக்கும் புள்ளிவிவரங்கள் 2009 மற்றும் 2010 க்கும் உள்ள குற்றங்களின் வித்தியாசம். இதில் ஆதாயத்திற்காக கொலை செய்யும் குற்றமும், திருட்டு குற்றமும் மட்டும் தான் குறைந்துள்ளது. அதை தவிர ஆட்கடத்தல், வழிப்பறி போன்ற பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் குற்றங்கள் குறையவில்லை. அதிலும் வழிப்பறி கொள்ளை 36% வளர்ச்சி அடைந்துள்ளது, குழுவாக சேர்ந்து கொண்டு ரவுடி கூட்டங்கள் செய்யும் குற்றங்களும் அதிகமாகி உள்ளது(Dacoit). வீட்டை விட்டோ வெளியிலோ அல்லது வீட்டிற்குள்ளோ தமிழக மக்கள் தைரியமாக வாழலாம் என்று பாதுகாப்பில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லவில்லை..

வேண்டுமென்றால் மற்ற மாநிலங்களின் குற்றங்களை விட தமிழ்நாட்டில் குறைவாக இருக்கலாம் அதனால் ஐபிஎன் தொலைகாட்சி பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லிவிட்டது போலும். ஆனால் அதே ஐபிஎன் சுற்றுசூழல் பாதுகாப்பில் பெரிய மாநிலங்கள் யாருக்கும் விருதை வழங்கவில்லை. எல்லா மாநிலங்களும் அதில் பின் தங்கியிருப்பதால் சுற்றுபுறசூழல் விருதை யாருக்கும் தரவில்லை போலும். இந்த தொலைகாட்சி கொடுத்திருக்கும் இந்த விருதுகள் இருக்கும் சாக்கடையில் எந்த சாக்கடையில் கொசு உற்பத்தி, நாற்றம் குறைவாக இருக்கிறது என்று பார்த்து அந்த சாக்கடைக்கு விருது கொடுத்திருக்கிறது இதை பெருமையாக எடுத்துக் கொள்ள முடியாது சாக்கடை சாக்கடை தான்.

மேலும் ஒரு மாநிலத்தின் அத்தியாவசிய தேவைகளான முன்னேற்றங்களை நீண்ட நெடுங்காலத்துக்கு பலன் கொடுக்க கூடிய அதாவது சில துறைகளில் முன்னேற்றம் என்பது இன்றைய தேவைகளையும் பின்னாளிலும் பலன் தரக்கூடிய மற்றும் என்றும் அந்த மாநிலத்தை எப்பொழுதும் முன்னிலையில் வைக்க கூடிய கட்டமைப்பு வசதிகள் (குஜராத்), கல்வி (கேரளா), வேலைவாய்ப்பு (ஆந்திரா) போன்றவற்றில் ஒன்றில் கூட தமிழகம் விருதை பெறவில்லை. இவைகள் இன்று மட்டுமல்ல பிற்காலத்திற்கும் மிகவும் பயன் தரக்கூடிய விசயங்கள்.

ஏன் உங்கள் தலைவரின் இலட்சியமான குடிசைவீடுகளே இல்லாத தமிழ்கத்தை அமைப்பது அதாவது ஏழ்மையை ஒழிப்பது என்பதில் கூட சட்டீஸ்கர் எனும் மாநிலம் தான் முன்னிலை வகிக்கிறது. குடிசைகளை எடுத்துவிட்டு இலவசமாக காங்கிரீட் வீடுகளை கட்டி கொடுப்பதால் ஏழ்மை ஒழிந்துவிட்டது என மார் தட்டிக்கொள்ள முடியாது. வேண்டுமென்றால் பல்லு போன கிழவிக்கு அலங்காரம் பண்ணி மணமேடையில் ஏற்றிவைத்தால் போல் இருக்கும் அவ்வளவே.

உங்கள் தலைவர் எதற்கு ஏழ்மையை ஒழிக்க போகிறார், ஏழைகள் அவருக்கு என்றும் வேண்டுமே அப்பொழுது தானே "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்" என்று வசனம் பேச முடியும். அவர் பெயரில் இருக்கும் கருணையால் கிடைக்கும் நிதியான பிச்சை காசு அவருக்கு மன திருப்தியையும் மகிழ்வையும் தரலாம். ஆனால் வள்ளுவன் சொன்னது போல்

தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்.

அதாவது தன் உழைப்பில் சம்பாதித்து தான் சமைத்து உண்ணும் கூழ் தெளிந்த நீர் போல் இருந்தாலும் தன் உழைப்பினால் கிடைத்த அந்த உணவை உண்ணுவதை போல் இனிமை ஏதும் இல்லை என வாழ விரும்பும் தமிழனுக்கு இல்லை. இதை உங்களின் வாழும் வள்ளுவனுக்கு நீங்களாவது எடுத்து சொல்லி புரியவையுங்கள்.

ஆமாம் ஆரிய திராவிட போர் என்று இப்பொழுது தான் வட இந்திய ஊடகங்களை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் போது ஒரு பிடி பிடித்தார், அதில் ஒரு ஊடகமான ஐபிஎன் எதோ விருது கொடுக்கிறது என்றவுடன் வாலை ஆட்டிக்கொண்டு சென்று வாங்கி வருகிறாரே ஏன்?? ஆரிய திராவிட போர் முடிந்துவிட்டதா?? இல்லை ஆரியர்கள் திருந்தி விட்டார்களா?? இல்லை இவருக்கு மானம் மரியாதை என்ற ஒன்று கிடையாதா??