Sunday, February 20, 2011

சுவத்தில் ஒட்டும் டீவி மாதம் ஒன்னு நாங்க தருகிறோம்

Posted Image

கடந்த 19-02-2011 சனிக்கிழமை அன்று தகவல்தொழில் நுட்பதுறையை சார்ந்தவர்களால் நடத்தப்படும் Savetamils அமைப்பின் மூலமாக தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க கோரியும் உண்ணாவிரதபோராட்டம் நடத்தினார்கள். சென்னையை சேர்ந்த கணிணி தொழில்நுட்பதுறையில் பணிபுரியும் தமிழுணர்வாளர்கள் எந்த கட்சியின் சார்பும் இன்றி நடத்திய போராட்டம். போராட்டத்திற்கு ஒரு 50லிருந்து 80 பேர் வந்திருந்த போதிலும் சென்ற வருடம் கடற்கரையில் ஒருவர் ஏர்கூலர் இரண்டை வைத்துக்கொண்டு நடத்திய போராட்ட நாடகம் போல் இல்லாமல் உண்மையான உணர்வாளர்கள் தங்களின் உணர்வுகளை வெளிபடுத்தும் வகையில் வெற்றிகரமாக நடந்தேறியது.

மிகவும் அற்புதமான விசயம் இராமேஸ்வரத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மீனவ சமூக மக்களை அழைத்துவந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை நேரடியாக சொல்ல கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது. உண்ணாவிரத போராட்டத்தை கவிஞர். இன்குலாப் தொடங்கி வைத்தார். திருமதி. இருதயமேரி, திருமதி. மோட்சம், திரு. ராயப்பன், திரு. பேட்ரிக், திரு. முருகானந்தம், திரு. அஞ்சப்பன் போன்ற இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதி மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். அவர்களின் பேசியபொழுது அறிந்து கொண்டவை..

ஒரு மீனவன் இறந்தால் இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது, இதற்கான வழிமுறைகள். அந்த மீனவன் இறந்த ஒருவருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் காவல் துறையினர் சான்றிதழ் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் காணமல் போனவர்கள் அதாவது இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்டோ இல்லை பிடித்து சென்றவர்கள் விசயத்தில் இம்முறைகளை பின்பற்ற முடியாது. ஒருவர் காணமல் போய் 7 வருடம் கழித்து தான் அவர் இறந்தவராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். ஆனால் ஒருவருடத்திற்குள் நிவாரணத்திற்கு விண்ணபிக்க வேண்டும். காணமல்போனவர்கள் விசயத்தில் இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஒருமுறை இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட ஒரு மீனவரின் வல்லத்தில் இருந்து 52 சுடப்பட்ட குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு சிறு வல்லத்தில் 52 குண்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றால் எந்த அளவுக்கு கண்மூடிதனமாக சுட்டிருக்கிறார்கள் என்பது புரியும். இப்படி கண்மூடிதனமாக சுடுவதற்கு காரணம் எதிராளி தன்னை தாக்க வருகிறான் அவனுக்கு முந்தி நாம் அவனை தாக்கி அளிக்கவேண்டும் என்ற நோக்குடன் சுடலாம். ஆனால் இங்கு மீனவர்கள் என்ன ஏ.கே 47 ஆயுதத்துடனா மீன் பிடித்து கொண்டிருக்கிறார்கள். வெறும் மீன்வலையும் மீனை அறுக்கும் சிறு கத்தியும் தானே வைத்திருப்பார்கள், ஒரு சில சிறு கத்திகளுக்கா இத்தனை குண்டுகளை வல்லங்கள் மேல் செலுத்துவார்கள்.

இது நாள் வரை நம் மீனவர்கள் மட்டும் தான் கடல் எல்லையை தாண்டிசெல்கிறார்கள் அவர்கள் வருவதில்லையா என்றால் இல்லை அவர்களும் எல்லை தாண்டி வரத்தான் செய்கிறார்கள் சென்னை காசிமேடு மீனவர்கள் சிலமாதம் முன் சென்னை அருகே 5 சிங்கள மீனவர்கள் படகு பழுதாகி கடலில் தத்தளித்தவர்களை காப்பாற்றி கொண்டு வந்து சேர்த்தனர். அது போல் சிங்கள மீனவர்கள் பலர் சென்னை சிறைசாலையில் இருக்கிறார்களாம். அவர்களுக்கு தினமும் பெட்டிபெட்டியாக பழங்கள் உணவுப்பொருள்கள் என்று இலங்கை தூதரகத்தில் இருந்து வருகிறதாம். இதே சிறைச்சாலையில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் இருந்தால் அவர்களுக்கு எதுவும் வருவதில்லை. ஆனால் நம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டால் நம் தூதரகம் இவ்வாறு எந்த உதவியும் செய்வதில்லை, மேலும் அங்கு சிறையில் கொடுக்கப்படும் உணவுகள் என்று பார்த்தால் வெறும் பன், வாழைப்பழம் என்று ஒரு நாளைக்கு ஒரு முறைதானாம். 9 மாதம் இப்படி சிறையில் இருந்த ஒருவர் இனிமேல் செத்துவிடுவார் என்று விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பி அனுப்பபட்டுள்ளார். மீன்பிடிக்க பீமன் போல் சென்றவர் எலும்புகூடாக திரும்ப வந்திருக்கிறார்.

மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட இந்த கடல் பகுதில் எல்லை தாண்டுவதற்கான பிரச்சனை ஏன் வருகிறது என்று தெள்ள தெளிவாக புரிந்தது. கடற்கரையில் இருந்து 3 நாட்டிகல் அளவுக்கு கட்டுமரங்களை தவிர இயந்திரங்கள் பொருந்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க கூடாது அதை தாண்டி தான் செல்ல வேண்டும். கச்சதீவிற்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான தூரம் 13 நாட்டிகல் மைல்கள் இதில் 3 மைல் கழிந்தால் 10 நாட்டிகல் தூரம் உள்ளது இதில் 3லிருந்து 4 நாட்டிகல் மைல்கள் பாறைகள் இருக்கும் பகுதி இதில் வலை விரித்தால் வலை பாறைகளில் மாட்டிக்கொள்கின்றன. எனவே 7 நாட்டிகல் மைலுக்கு அப்பால் தான் மீன் பிடிக்கிறார்கள். இந்த பகுதி நீரோட்டம் அதிகமான பகுதி மிச்சம் இருக்கும் 6 நாட்டிகல் மைலில் மொத்தம் 5000 இராமேஸ்வர்ம் மீன்பிடி படகுகள் மீன்பிடிக்க வேண்டும். வலை விரிப்பதற்கு கூட இடம் இருக்காது வரிசையாக 5000 படகை நிறுத்தினால் இலங்கை கடற்கரைவரை படகுகள் நெறுக்கி அடித்துக்கொண்டு நிற்க வேண்டிய நிலை வரும் இதில் வலை கூட விரிக்கமுடியாது அப்புறம் மீன் எங்கு பிடிப்பது.

மேலும் இந்தியா இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இரண்டுபக்க மீனவர்களும் எந்த எல்லை பாகுபாடும் இன்றி தான் மீன் பிடித்து வந்திருக்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் உணவுகளை பரிமாறிக்கொள்வது கைலிகளை மாற்றிக்கொள்வதென்று. ஏன் இலங்கை கடற்படை வீரர்கள் மீன் வாங்கி சாப்பிட்டுவிட்டு ஹார்லிக்ஸ் டின் போன்றவற்றை கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றனர். நெடுந்தீவு வரைக்கும் சென்று மீன் பிடித்தே வந்திருக்கின்றனர். 1970ம் ஆண்டு அண்ணா மறைந்தபொழுது இலங்கை மீனவர்களே தமிழக மீனவர்களுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். 1983க்கு பிறகு தான் எல்லை தாண்டுவது என்ற பிரச்சனை எழுந்துள்ளது. இது இனவெறி தாக்குதலா இலலை எல்லை தாண்டியதற்கான தாக்குதலா..

இதில் அரசியல் பேசப்படவில்லை என்று சொல்ல முடியாது. அரசியலும் பேசப்பட்டது கவிஞர். இன்குலாப் கடந்த வருடம் மனிதசங்கிலி போராட்டத்தின் போது மக்கள் எல்லாம் மழையில் கைகோர்த்து நிற்க அரசன் கலைஞரைவிட வயதான பேராசிரியர் மழையில் கைகோர்த்து நிற்க வயதான காரணத்தால் வாகனத்தில் பவனிவந்தார். அதே போல் இளவரசர் ஸ்டாலினும் வயதாக போகிறதென்ற காரணத்தினாலோ இல்லை என்ன காரணமோ தெரியவில்லை அவரும் ரதத்தில் பவனிவந்ததை நினைவு கூர்ந்தார்.

திருமதி. மோட்சம், இராமேஸ்வரத்தை சார்ந்தவர் இவர் அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் கடைக்கோடியில் இருக்கும் ஒரு குடிமகளாக பேசினார். கலைஞரிடம் எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம் இலவச டிவி வேண்டாம். கடலுக்கு போய் தொழில் செய்ய வழி செய்து கொடுங்கள் சுவத்தில் ஒட்டும் டிவி மாதம் ஒன்று நாங்கள் உங்களுக்கு வாங்கி தருகிறோம் என்றார்... இது ஒன்று போதும் இன்றைய தமிழக அரசியல்வாதிகளுக்கு மீன்குஞ்சுக்கு நீச்சல் சொல்லிதரவேண்டாம் அது வாழும் நீரைமட்டும் விட்டுவிடுங்கள் அவைகள் வாழ்ந்து கொள்ளும்..

4 comments:

  1. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. http://powrnamy.blogspot.com

    ReplyDelete
  3. நன்றி திரு அனானி அவர்களே..

    ReplyDelete