Monday, March 30, 2015

தமிழ்த் திரையுலகமும் தமிழினமும்..தமிழ்த் திரையுலகம் இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு என்னற்ற பங்காற்றியிருக்கிறது இதை தோழர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு புத்தகத்தில் விரிவாக எழுதியிருப்பார். திரையுலகின் மூலமாகத் திராவிடக் கருத்தியலை பரப்பி பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு என்று தமிழ்த் திரையுலகம் தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால் இதே திரையுலகம் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு வருகிறது.

1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த அண்ணா மாணவர்களை சந்தித்தார். இதன் காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் அன்று சென்னையில் இந்தி படங்களை திரையிட்டு வந்த பல திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி திரைப்படம் இந்தியில் தயாரித்து வெளிவர வேண்டிய சூழ்நிலையில் வெளியிட முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டது. அப்பொழுது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்கள் மத்திய மாநில அரசுகளின் உறுதிமொழிகளின் கீழாக போராட்டத்தை விலக்கிக் கொண்டதாக அறிவித்திருந்த நேரம். எனவே தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முதல்வரான அண்ணாவை சந்தித்து தங்கள் படங்கள் வெளியிட இருக்கும் தடையை உடைத்து திரையிட அனுமதி கேட்டனர்.

அண்ணா அப்பொழுது சொன்னது “மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட ஒப்புக் கொண்டதால் தான் தமிழகத்தில் நிலவிய கொந்தளிப்பு அடங்கி அமைதி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மிகவும் உணர்ச்சிகரமான விசயத்தால் மீண்டும் பிரச்சனை கிளம்பிவிடக் கூடாது. எனவே, நீங்கள் மாணவர்களை முதலில் சந்தித்து அமைதிப்படுத்துங்கள். பிறகு படங்களை வெளியிடுவது பற்றி யோசிக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். அதாவது போராடும் மாணவர்களை நீங்கள் சந்தியுங்கள் அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று திரையுலகத்தினருக்கு சொல்லியிருக்கிறார் அண்ணா.

பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த தமிழ்த் திரையுலகத் தரப்பினரும் ஏ.வி.எம் வளாகத்தில் அன்றைய மாணவத் தலைவர்களை சந்தித்தனர். சென்னை மாணவத் தலைவர்களில் துரைமுருகன், நாவளவன், ஜனார்த்தனம், ஜீவா கலைமணி, செஞ்சி ராமச்சந்திரன், இராமநாதன், உடையப்பன், முகில், பச்சையப்பா, நடராசன், துரைசாமி, வீராச்சாமி, மாநிலக் கல்லூரி நட்ராசன், செல்வராசு எனப் பல மாணவர்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

திரையுலகில் இருந்து ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், அவரது மகன் சரவணன், பஞ்சு அருணாச்சலம், ஸ்ரீதர், கவிதாலயா பாலச்சந்தர், தேவர் பிலிம்சார், நாகிரெட்டி,  பி.எஸ்.வீரப்பா முதலானோர் கலந்து கொண்டனர். அங்கு இந்தி எதிர்ப்பால் எங்களது படங்கள் வெளியிடப் படவில்லை எங்களுக்கு பெருத்த நட்டம். இந்தி நடிகர்கள் எங்கள் படங்களில் நடிக்க மறுக்கிறார்கள் என்று சொல்லி ஒப்பாரி வைத்துள்ளனர் தமிழ் திரையுலகத்தினர். இதனால் தமிழகத்தில் இருந்து பணி புரியும் “டெக்னிசியன்கள்” பலர் துன்புறுகிறார்கள் அவர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை அதனால் ஊதியம் கிடைக்காமல் வருந்துகின்றனர் என்று செக்மேட் வைத்துள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த் சசிகலாவின் கணவர் ம.நடராசன் 1967ல் எங்கே போனீர்கள் மாணவர்கள் நூற்றுக்கணக்காக கொல்லப்பட்டனர் அப்பொழுது எல்லாம் நீங்கள் வாய் திறக்க வில்லை அமைதியாக இருந்தீர்கள். இந்த தமிழ்ச் சமூகத்தின் அங்கத்தினராக அன்று நீங்கள் உணரவில்லையா என்று கேட்டிருக்கிறார். அங்கு ஏகப்பட்ட த்ள்ளுமுள்ளுகள், ஏ.வி.எம் இராஜேந்திரனை நாங்கள் வளர்த்து எடுத்துள்ளோம் என்று கூற நீங்கள் கூறுவது எஸ்.எஸ். ஆரைப் பற்றி ஆனால் நாங்கள் கேட்பது அண்ணாமலை பல்க்லை மாணவன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாணவனைப் பற்றி என்று சென்று, கடைசியாக மாணவர்களில் ஒருவர் எங்களிடம் பணம் வாங்கினார் என்று மாணவர் ஜனார்த்தனம் என்பவரின் மீது குற்றச்சாட்டு வைக்கு அளவிற்கு போனது.

அப்பொழுது பி.எஸ்.வீரப்பா எழுந்து ”நான் கட்டிய வேட்டி துண்டோடு சிறு வயதில் பிழைக்க சென்னைக்கு வந்தவன், தமிழ் ரசிகர்களாகிய உங்களின் நல்லாதரவால் நான் தயாரித்த ஆலயமணி 100 நாள்களுக்கு மேல் நன்றாக ஓடியதால் இந்தியில் எடுத்தேன். இந்திப் போராட்டத்தால் அதில் நடித்த இந்தி நடிகர் காஷீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். எப்படியோ வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்பட்டு ஒருவாறு படத்தை முடித்தேன். இந்திப் படங்கள் வெளிவராமல் தடுக்கப்படுவதால் நான் வாங்கிய கடன் வட்டிக்கு மேல் வட்டி ஏறி வாட்டுகிறது” என்று ஒப்பாரி வைத்தார். 

இந்தப்படம் வெளியிட நீங்கள் அனுமதிக்காவிட்டால் என் குடி கோவிந்தா குடிதான், அப்படி அழிந்துவிடும் என்று குய்யோ முறையோ என்று அவலக்குரல் எழுப்பினார். அந்த நேரத்தில் கலைஞரின் பட நிறுவனத்தை சேர்ந்த ஒருவர், இந்தித் திரைப்படம் காட்டுவதை நாங்கள் தடுக்க மாட்டோம், மாணவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கருணாநிதி சொன்னதாக சொன்னார். பி.எஸ்.வீரப்பாவின் ஓப்பாரியை பார்த்து இலகியிருந்த மாணவர்கள், கருணாநிதியின் வேண்டுகோளையும் ஒரு சேர ஏற்று இந்திப் படத்தை திரையிடலாம் என்று அனுமதித்தனர். இனிமேல் தமிழ்நாட்டில் இருந்து எவரும் இந்திப்படம் தயாரிக்க கூடாது என்று நிபந்தனை விதித்து, தமிழ்த் திரையுலகினர் தயாரித்த இந்தி திரைப்படங்களை திரையிட அனுமதித்தனர்.

ஆம் இது 1968ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது நடந்தது இதற்கு முன்பு நடந்த போராட்டத்தின் கீழாகத் தான் திமுக ஆட்சியை பிடித்து இருந்தது, அவர்கள் திருடர்கள் ஆனாதை அறிந்து கொள்ள 2009 வரை நாம் காத்திருக்க வேண்டியதிருந்தது. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி தமிழ்த் திரையுலகினர் தங்களின் காசுக்கு மட்டும் வேலை பார்க்கும் புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை. இவர்களுக்காக தமிழர்களான நாம் போராட வேண்டும் என்று கூக்குரல் இடுவார்கள், சொத்தை விற்றுவிட்டு அந்நிய நாடு போகிறேன் என்று போக்கு காட்டுவார்கள். உண்மையான தமிழர் பிரச்சனைக்கு இவர்கள் என்றும் ஒன்று கூட மாட்டார்கள், அவர்களின் தொழில் தான் அவர்களுக்கு முக்கியம்.

இந்த உண்மையான நிகழ்வுகள் நடந்தது 1968ம் ஆண்டு அன்றும் சரி இன்றும் சரி தமிழ்த் திரையுலகத்தினர் தமிழர்களுக்கு ஆதரவாக நின்று போராட்டங்கள் செய்வது என்பது அரிதினும் அரிதாகிவிட்டது. ஆம் இதை கடந்த ஒரு வருடமாக ஈழத்தில் நம் இனம் படுகொலையான அவலத்தை சொல்லி தனக்கான கட்சியையும் சுற்றுவட்டாரத்தையும் வளர்த்துக் கொண்ட சீமான் இன்று புலிப்பார்வை, கத்தி போன்ற படங்கள் மட்டுமல்ல இனம் படத்தை எதிர்ப்பதாக காட்சி தந்தாலும் அதிலும் லிங்கு சாமி அப்படிப்பட்டவர் இல்லை என்று நற்சான்றிதழ் வாசித்தவர். இப்பொழுது கொம்பன் படத்திற்கும் மகுடி வாசிக்க ஆரம்பித்துள்ளார். ஆம் இவருக்கு தேவையானது இன நலமா இல்லை தன் நலமா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய தேவை நமக்கு உள்ளது. எனென்றால் இன நலம் என்றால் கொம்பன் படத்தை பார்த்துவிட்டு அதைக் குறித்து கருத்து தெரிவித்து இருக்க வேண்டும், ஆனால் அதை பார்க்கமலேயே தோழர். கிருஷ்ணசாமியுடன் விவாதங்களை கிளப்பியுள்ளார், அதுவும் தோழர் கிருஷ்ணசாமியுடன் தானும் படம் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லி, இதில் இவரின் தொழில் பற்று தான் தெரிகிறது.

ஒரு தவறான தொழிலுக்கு புரோக்கராக நின்று நுகர்வோரை அழைத்துவருபவருக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. இவரின் திரைத் துறை செழித்தோங்க வேண்டும் என்றால் அதற்குள் நின்று போராடட்டும் தமிழினத்தின் பெயரைச் சொல்லி, தமிழினத்த பகடைக் காயாக மாற்றி தனது தொழில் துறையினருக்காக அவலக் குரல் எழுப்பவது தான் இவரின் வாடிக்கை என்றால், தமிழ் கூறும் நல்லுலகம் இவரையும் புறம் தள்ளும்... 

No comments:

Post a Comment