Saturday, July 6, 2013

கொலைவெறி கருத்தியலாக்கம்


அநாகரீக தர்மபாலா இவர் தான் ஆரிய சிங்கள பேரினவாத கருத்தியலால் இன்று வரை நடந்து வரும் அனைத்து கொடுமைகளுக்கும் காரணமானவர். இவரின் இயர் பெயர் டான் டேவிட் ஹெவரத்தினா என்பதாகும். இந்தியாவில் அதுவும் சென்னையில் அடையாறில் உள்ள தியாசிபிக்கல் சொசைட்டியில்  படித்தவர். இவர் தான் இன்றைய பெளத்த பேரினவாத சிந்தனைகளுக்கும் கருத்தியலாகத்திற்கும் விதை விதைத்தவர். பெளத்தத்தை கடைபிடித்த இவர் இலங்கையின் பிரிட்டிசாருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற வீரராகவும் சொல்லப்படுபவர். ஆனால் இவர் தான் "The Lion Race" எனும் ஆரிய சிங்கள பேரினவாத கருத்தியலை வளர்த்து எடுத்தவர். 

இவர் சொன்ன கருத்துகளில் அதி முக்கியமானது சிங்கள இனமானது உலகில் இருக்கும் ஆரிய இனத்தில் மிகவும் உன்னதமானது சிங்கத்தின் வழியில் தோன்றியவர்கள் என்று சிங்கள மக்களின் மனதில் பதிய வைத்தார். பிரிட்டிசார்களும் ஐரோப்பியர்களும் ஆரிய இனமாக இருந்தாலும் அவர்களை விட மிகச் சிறந்த இரத்தவழியில் சிங்கத்தின் வழிதோன்றலாக உருவகப்படுத்தினார். இவர்களுக்கு கீழ் தான் அனைத்து இனங்களும் என்று மக்களை நம்ப வைத்தார். இவர் வாழ்ந்த காலத்தில் இந்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இதில் இவர்கள் இருவரும் தமிழர்கள் தான். ஒரு சிங்கள இந்துவையோ இல்லை இஸ்லாமியரோ கிடையாது, எனவே இதை ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான கருத்தியலை உருவாக்கினார் என்று சொல்லலாம். அதே சமயத்தில் கிருத்துவ மதத்திற்கும் எதிராகவும் தனது விசகருத்துகளை பரப்பி வந்தார். 

அதில் மிகவும் முக்கியமானது 1915ம் ஆண்டு நடைபெற்ற முதல் பேரினவாத கலவரம். 1914ம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது அப்பொழுது உணவுப் பொருட்கள் தட்டுபாடு அதிகரித்தது. அதற்கு காரணம் கடைகள் நடத்திய தமிழ் இஸ்லாமியர்கள் தான் என்று கூறி ஒரு பெரும் கலவரம் நடைபெற காரணமாக இருந்தார். இதில் 35 பேர் உயிரிழந்தனர் 198 பேர் காயம் அடைந்தார்கள் இது மட்டுமல்ல 86 மசூதிகள் சேதப்படுத்தப் பட்டது. 4076 இஸ்லாமியர் கடைகள் சூறையாடப்பட்டன. இது தான் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்கள் தாக்கப்பட்ட முதல் சம்பவம். இதன் பிறகு பெளத்தத்தை தவிர மற்ற மதங்களுக்கு எதிரான கருத்தியல்களை தொடர்ந்து விதைத்து வந்தார். 

பெளத்த சமயத்தில் நாம் படித்த மகாயானம் ஹீனயானம் போன்ற பிரிவுகளை தவிர பல பிரிவுகளாக இருந்த அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் அவர்கள் அனைவருக்கும் எதிரிகளாக தமிழர்களையும் மற்றவர்களையும் சித்தரித்தார். பிரிட்டிசாரை கூட இதே கருத்தியலின் அடிப்படையில் தான் எதிர்த்தார் ஆனால் அது சுதந்திர போராட்டமாக சித்தரிக்கப்பட்டது. இங்கு வாஞ்சிநாதன் பார்ப்பனீயத்திற்கு எதிராக இருந்த கலெக்டரை அதுவும் ஒடுக்கப்பட்ட ஒருவரை உயிரை காப்பாற்ற அவரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உயர் சாதி இந்துக்கள் இருக்கும் பகுதி வழியாக அழைத்து சென்றார் என்ற காரணத்திற்காக கொலை செய்ததை. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டதாக சொல்வதை போல் இவரையும் சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்டார். 

இவரின் மற்ற மதங்களுக்கு எதிரான கருத்தியல் என்பது சிங்கத்தின் வழித் தோன்றல்களான சிங்கள மக்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்தியலின் அடிப்படையில் மற்றவர்கள் எதிரிகள் என்ற பாசிச அடிப்படையில் தொடர்ந்து தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். எப்படி இன்று வரை தமிழகத்தில் இருந்து சென்ற மலையக தமிழர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருவது போல் மலையாளிகளும் மலையகத் தோட்டங்களில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு எதிராகவும் இவர் கருத்தியலை வடித்தார், வேறு ஒன்றும் இல்லை "மலையாளிகள் சிங்கள் பெண்களை மயக்கி காதல் திருமணங்கள் செய்கிறார்கள்” என்று சிங்கள இனத்தை அழிக்கும் முயற்சி என்று கருத்தை பேசினார், இதனால் அங்கிருக்கும் மலையாளிகளை நாடுகடத்தும் வழிவகைகளை செய்தார். மலையாளிகளை பற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை தான் ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தியல் எந்த வகையில் எல்லாம் உருவாக்கலாம் என்பது இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

(உலக மதங்கள் மாநாட்டில் (இடமிருந்து வலமாக) வீர்சந்த் காந்தி, அநாகரீக தர்மபாலா, சுவாமி விவேகாநதர் உட்கார்ந்து இருப்பவர்கள். )

கொலைவெறி கருத்தியலாக்கம் அது இனம் சார்ந்ததாக இருந்தாலும் சரி சாதி மத அடிப்படையில் ஆனதாக இருந்தாலும் சரி அது ஒவ்வொரு காலகட்டத்திலும் இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி அதன் அடிப்படையின் கீழே கட்டமைக்கப் படுகிறது என்பதற்கு அநாகரீக தர்மபாலா ஒரு உதாரணம். 

No comments:

Post a Comment