Wednesday, December 29, 2010

சாதி ஒழிப்பு கலப்பு திருமணம் அங்கீகாரம் தேவை

கலப்பு திருமணங்கள், சாதி மறுப்பு திருமணம், சுயமரியாதை திருமணம் என்று சமூக முன்னேற்றத்துக்கு ஆதரமான திருமணங்களுக்கு அடிப்படை சாதியை ஒதுக்கி வைத்துவிட்டு செய்யப்படும் திருமணங்கள் என்ற ஒரு மிகப்பெரிய மணிமகுடம் உண்டு இந்த வகை திருமணங்கள் அனைத்திலும். ஆனால் இப்படி நடத்தப்படும் திருமணங்கள் அதன் முதல் நோக்கமான சாதி ஒழிப்பை சரியாக செய்கின்றனவா இல்லையா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டிய கதிக்கு தள்ளப்படுகிறோம்.

இப்படி பட்ட கலப்பு திருமணங்களை பற்றி பெரியாருக்கும் காந்திக்கும் இடையையே பற்பல சர்ச்சைகளை உருவாக காரணமாகவும் இருந்தது. காந்தியிடம் வருணாசிரமம் வேண்டுமா வேண்டாமா என்றால் வேண்டும் என்ற கருத்தை உடையவராகவே எடுத்து கொள்ள வேண்டியதாயிருக்கும். ஏற்ற தாழ்வு பார்க்ககூடாது என்று தான் வலியுறுத்தினார் ஆனால் அவரே மனித மலத்தை அள்ளுபவர்களை அந்த தொழிலை புனிதமாக கருதவேண்டும் என்று வலியுறுத்தினார், அந்த தொழிலை இல்லாதொழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்ததாக தெரியவில்லை.

பெரியார் அவர்கள் இந்த விசயத்தில் என்றும் விட்டு கொடுத்ததில்லை, ஏன் காந்தி சிலையை அகற்றும் போராட்டங்கள் வரை செய்தார். ஏன் 1946ல் காந்தி மகாத்மாவாக பார்க்கப்பட்ட காலகட்டம் அவருக்கு எதிரான கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. அப்பொழுது விடுதலையில் எழுதினார்


கலப்பு மணத்தைப் பற்றி ´வழ வழா´ என்று எழுதுகிறாரே தவிர, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவரும் கொடுமையை ஒரே சட்டத்தினால் மண்டையிலடித்து ஒழிக்க வேண்டும் என்று ஏன் தைரியமாகக் கூறக்கூடாது? பல நாட்களாகவே வேருன்றி விட்ட கொடுமைகளைக் கண்டு சிரிக்கக் கூடாது என்றும், பொறுமையினால் தான் வெல்ல வேண்டும் என்றும் கூறுவது வைதீக ஹிந்துக்கள் முதுகில் தட்டிக் கொடுப்பதற்காகத் தானே? “எந்தச் சீர்திருத்தமும் நத்தையின் வேகத்தில் முன்னேற வேண்டும்? என்று கூறுவது எதற்காக? உடன் கட்டை ஏறுதல் என்ற தீயபழக்கமானது அறிவாளி ஒருவர் நினைத்த மாத்திரத்திலேயே ஒழிந்து போகவில்லையா?” 2,000-ஆண்டுகளாக உள்ள ஒரு அக்கிரமத்தை நத்தை வேகத்தில் தான் மாற்றவேண்டும் என்றால், 150-ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆட்சி முறையை மட்டும் மான் வேகத்தில் மாற்ற வேண்டிய அவசியமென்ன? ´தீண்டாமை மெள்ளமெள்ளத் தான் ஒழியும்´ என்றால், வெள்ளைக்காரன் மட்டும் இந்த விநாடியிலேயே மூட்டையைக் கட்ட வேண்டிய அவசியமென்ன? – *[பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். ´விடுதலை´, 09.07.1946

இப்படி அனைவராலும் போற்றி வளர்க்கப்பட்ட இந்த கலப்பு திருமணம் இன்றைய நிலை என்ன. தமிழக அரசு கலப்பு திருமணம் செய்பவர்களை இருவகையாக பிரிக்கிறது. முதல் வகை மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவில் இருந்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள். இரண்டாம் வகை பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டவர்களை மணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர் என்று. இதில் முதலாவது பிரிவில் திருமணம் செய்து கொள்ளுபவர்களுக்கு 20000ரூபாய் நிதியுதவி. இரண்டாவது பிரிவினருக்கு 10000ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதை தவிர அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி இப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் குழந்தை எந்த பிரிவு என்ன முன்னுரிமை என்று பார்த்தால் வேதனையே. திரும்பவும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக தாய் தந்தை இருவரில் ஒருவரின் சாதியை வைத்து அவர்களின் வாரிசுக்கு படிப்பிலிருந்து வேலைவாய்ப்பு வரை கருத்தில் கொண்டு சாதி சான்றிதழ் வாங்கப்படுகிறது. இப்பொழுது எங்கு சாதி ஒழிந்தது என்று தெரியவில்லை, திரும்பவும் அந்த குழந்தை வளர்க்கபடும் முறை போன்றவைகளில் சாதி இல்லாமல் இருந்தாலும் அரசின் கணக்கின்படி அதுவும் ஒரு சாதியை சார்ந்த உறுப்பினராகவே கணக்கில் வருகிறது.

எந்த திருமணங்கள் சாதியை ஒழித்துவிடும் என்று நம்பி வருகிறோமோ அவைகள் திரும்பவும் சாதியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் அவர்களை சொல்லி தப்பில்லை. தப்பாக இருப்பது நமது அரசின் சட்டம், பள்ளியில் சேர்க்கும் பொழுது முதலில் கேட்க்கப்படும் கேள்வியே எந்த சாதி என்பது தான். ஏன் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு தனியாக சாதி சான்றிதழை கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். இத்தனை வருடமாக போற்றி வரும் இந்த கலப்பு திருமணங்களுக்கு அங்கிகாரம் இருபதாயிரம் பத்தாயிரம் என்ற ஊக்க தொகையா இல்லை அவர்களும் அவர்கள் சந்ததியும் வாழ அமைத்து கொடுக்க வேண்டிய பாதையா.

ஏன் இன்றைய காலகட்டம் வரை எவ்வளவோ கலப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன இன்னும் சொல்லப்போனால் 60 ஆண்டுகளில் பலாயிரக் கணக்கான திருமணங்கள் நடந்து இன்று அவர்கள் சந்ததியுடன் சேர்த்து லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகை அடைந்திருக்க வேண்டும் ஆனால் எங்கிருக்கிறார்கள் அந்த மக்கள்?? இவர்களும் தனியாக அங்கிகரிக்க படவேண்டும். முக்கியமாக தமிழகஅரசாணையான கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் தாய் அல்லது தகப்பன் இருவரின் ஒருவரின் சாதிப்பிரிவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை நீக்க வேண்டும். இது திரும்பவும் சாதியை தான் வளர்க்கும்..

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கும் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். இத்தனை வருடமாக சாதி ஏற்றதாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று இடஒதுக்கீடு கொடுத்து அடித்தளத்துக்கு அடித்து தள்ளப்பட்ட மக்களை முன்னேற்ற பாடு படும் அரசு இப்படிபட்ட கலப்பு திருமணம் செய்து அரசின் தோளோடு தோள் கொடுத்த புரட்சியாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் போற்றி பாராட்டினால் போதும். இன்னும் சிறிது காலத்தில் சாதி என்பதிருக்காது.. இனிவரும் அரசுகளாவது இவர்களை அங்கிகரித்து தனி இட ஒதுக்கீடு கொடுக்குமா??

No comments:

Post a Comment