Monday, September 24, 2018

முன்னால் நீதிபதிகளை எங்கே தேடப் போகிறோம்?


மானுவேல் வேல்ஸ் 9வருட சிறைவாசத்திற்கு பிறகு 2014இல் விடுதலை செய்யப்பட்டார். 2009இல் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பொழுது, பிராயன் ஸ்டெல் எனும் மனித உரிமைகள் போராளி  சொன்னது தான்.

“ஒரு நிரபராதி தூக்குதண்டனையின் முன் நிறுத்தப்படுகிறான் என்றால், அந்த நாட்டின் மொத்த சட்டதிட்டமும் செத்துவிட்டது என்று அர்த்தம். மேலும் குற்றம் சுமற்றப்பட்டவரைக் காப்பாற்ற வேண்டிய வழக்குரைஞர் தோற்றுவிட்டார் என்றும், சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அரசு தரப்பு வழக்குரைஞரும் தனது வேலையில் இருந்து தவறிவிட்டார் என்றும். ஏன் நீதிபதி கூட தவறிவிட்டார் தவறான ஒரு வழக்கில் தவறாக தீர்ப்பளித்து” என்றார்


மானுவேல் வேல்ஸ் ஒரு கட்டிடத் தொழிலாளி ஸ்பானிஷை தாய்மொழியாக கொண்டவர், அவருக்கு இரண்டு மகன்கள் மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்தார், அப்பொழுது அசீலா மாரீனோ எனும் மெக்சிகன் பெண் நண்பருடன் இணைந்து வாழ முடிவெடுத்து அசீலாவின் வீட்டில் சென்று தங்குகிறார். அவர் சென்று தங்க ஆரம்பித்த 2 வாரங்களில் அசீலாவின் 11மாதம் கைக்குழந்தை மகன் ஏஞ்சல் மாரீனோ உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையின் அனுமதிக்கப்படுகிறார். ஏஞ்சல் 4 நாட்கள் கழித்து மருத்துவ சிகிச்சை பயனில்லாமல் இறந்துவிடுகிறார். மரணத்திற்கு காரணம் குழந்தை ஏஞ்சலின் தலையை பலமாக சுவற்றிலோ தரையிலோ மோதியதால் தான் ஏற்பட்டது என்று பிரதேப்பரிசோதனை அறிக்கையில் கூற்ப்பட்டு, ஏஞ்சல் மரணம் கொலைவழக்காக மாற்றப்பட்டு மானுவேல் மற்றும் அவரது பெண் நண்பர் அசீலாவும் கொலைக் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மானுவேலிடம் பெறப்பட்ட இரண்டு வாக்குமூலங்களின் கீழாக அசீலா மற்றும் மானுவேலுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகள் மானுவேல் ஸ்பானிஷை தாய்மொழியாக கொண்டவர், மேலும் 7வது கிரேடில் தோல்வியுற்றவர். அவருக்கு ஸ்பானிஷும் முழுமையாக தெரியாது ஆங்கிலமும் பேச்சு வழக்கு மட்டுமே இந்த நிலையில் அவரிடம் இரண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாக்குமூலங்களை கொடுத்து கையெழுத்து வாங்கி அவரை குற்றவாளி ஆக்கியிருந்தனர். மேல் முறையீட்டிற்கு இந்த வழக்கு போன பொழுது அசீலாவை அப்ரூவராக மாற்றி அவரது வாக்குமூலத்தின் கீழாக மானுவேலை குற்றவாளியாக்கினர். அசீலாவின் வாக்குமூலத்தில் மானுவேல் தனது வீட்டிற்கு வந்த பிறகு தான் ஏஞ்சலின் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்ற வாக்குமூலத்தின் கீழாக மானுவேலுவின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அசீலாவிற்கு 10 வருட தண்டனை அளிக்கப்பட்டது 2010இல் அவர் 5 வருட தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு அவரின் தாய்நாடான மெக்சிக்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அனைத்து வகையிலும் வஞ்சிக்கப்பட்டவராக ஒரு நிரபராதியான மனுவேல் நிராதரவாக நின்றார். ஆனால் தனது சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். அதன் பிறகான போராட்டத்தில் அரசு தரப்பின் வாதங்களை உடைக்கும் வகையில் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன, ஏஞ்சலின் தலையில் காயம் பட்ட பொழுது அவர் டெக்சாஸ் மாகணத்திலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் இருந்த டென்னஸில் கட்டிடவேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டது. அதன் பிறகு குற்றவாளியாக்கப்பட்ட மானுவேலுக்கு தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற முதலில் இருந்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது. அதன் கீழாக விசாரணை திரும்பவும் நடத்தப்பட்டு மானுவேல் குற்றவாளியில்லை என்று நிருபிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இடையில் 9 வருடங்கள் தூக்குகயிற்றின் கீழும் சிறையிலும் அவர் அடைந்த மன உலைச்சலுக்கான பதில்கள் இன்னும் சட்டத்தையும் அதன் நேர்மையும் மதிக்கும் யாராலும் விடை கூறவியலாது. 

                                          

இது அமெரிக்காவில் நடந்தது மிகவும் கடுமையாக காவல்துறையினர் தங்கள் மீதான விதிமுறைகளை பின்பற்றும் இடத்தில் நடந்தது. அமெரிக்காவில் தவறாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு வழக்கு அல்ல இது, 35 வருடங்களுக்கு பிறகு ஒருவர் நிரபராதி என்று 2009 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளார். 1974இல் அன்று 18 வயதான ஜேம்ஸ் பெய்ன் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து 9வயது சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறையில் ஆயுள் தண்டனை கொடுத்து அடைக்கப்பட்டார். அவர் தான் நிரபராதி என்பதை போராடி நிருபிக்க 35 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 2009ஆம் ஆண்டு டி.என்.ஏ டெஸ்ட் மூலமாக நிருபித்து விடுதலை ஆனார். அவருக்கு ஃப்ளோரிடா மாகணத்தின் தவறாக குற்றம் சாட்டப்பட்டவருக்காக நஷ்ட ஈட்டுத் தொகையாக 10 கோடியே 20 லட்ச ரூபாய்  வழங்கப்பட்டது. இது ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்ததால் ஜேம்ஸ் பெய்னுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஈழப்பீடு இல்லாத மாகணங்கள் அமெரிக்காவில் பல உள்ளது. இழப்பீடு கிடைத்ததால் ஜேம்ஸுக்கு நியாயம் கிடைத்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது 18 வயதில் சிறைக்கு சென்று 53 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார், அவரின் ஒட்டுமொத்த இளமைக் காலத்தையும் சிறையில் கழித்துவிட்டார். இதை எதைக் கொடுத்து சரி செய்ய முடியும்.

இதைப் போன்று ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன 40 வருடங்கள் செய்யாத குற்றத்திற்கு உள்ளே இருந்த ரிக்கி ஜாக்சன், வில்லி பிரிட்ஜ்மேன் உட்பட பலர் அமெரிக்காவில் உள்ளனர். இது அமெரிக்கா மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் நடக்கும் தவறு தான், ஏன் ஜுரிகள் என்று சிலர் நியமிக்கப்பட்டு நீதிபதிக்கு உதவ நியமிக்கப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே நீதி சிலருக்கு அநீதியாகியுள்ளது. நீதிபதிகளோ அல்லது சட்டமோ தவறே இழைக்காதவர்கள் அல்ல. இந்தியாவிலும் இத்தகைய நீதித் தவறுகள் நடந்து கொண்டே வருகின்றன. ஆறுமுகம் என்பவர் ஒரு சிறு பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தார் என்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார் மும்பையில் அவரின் மீது குற்றம் சாட்டிய ஆய்வாளர், பல வருடங்கள் கழித்து தான் செய்த தவறை நினைத்து வருந்தி தற்கொலை செய்து கொண்ட பொழுது தான் ஆறுமுகம் நிரபராதி என்று உலகிற்கு தெரியவந்தது.

2012ஆம் ஆண்டு 14 முன்னாள் நீதிபதிகள் ஜனாதிபதிக்கு தனித்தனியாக கடிதம் எழுதினார்கள், அதில் 9 பேருக்கு தாங்கள் கொடுத்த தூக்குதண்டனையானது தவறானது என்று எழுதினார்கள். அதில் ஏற்கெனவே இருவர் சிறைச்சாலையில் இயற்கை மரணம் அடைந்திருந்தனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் அதாவது தனது முழுமையான மேல் முறையீடுகள் எல்லாம் முடிந்து உச்ச நீதிமன்றத்தாலும் குற்றவாளி என்று கடைசி வாய்ப்பிலும் தீர்ப்பளிக்கப்பட்டவர், சட்டத்தின் கீழாக தன்னை நிரபராதி என்று நிருபித்துக் கொள்ள சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால் இந்தியாவில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கடைசியாக உச்சநீதிமன்றம் என்ற மூன்றே வாய்ப்புகள் தான். அது முடிந்தால் அதன் பிறகு எந்த வாய்ப்புமே ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும் இந்தியனுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

இதில் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முதலில் இருந்தே அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பூந்தமல்லியில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த முறையீடும் செய்ய இயலாது, நேரடியாக உச்சநீதிமன்றம் தான் விசாரித்தது. இதில் கீழமை நீதிமன்றத்தில் தான் சாட்சியங்கள் நேரடியாக விசாரிக்கப்படும் மற்றவைகளில் ஆவணங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ராஜிவ் மரண வழக்கில் கீழமை நீதிமன்றம் அதற்கடுத்து உச்சநீதிமன்றம் என்பது மட்டுமே, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியும் மூன்று படிகளில் இருந்து இரண்டு படிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதில் மொத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 41 பேர் இதில் 12 பேர் தற்கொலை செய்துகொண்டனர் சிவராசன் உட்பட, 3 பேர் தலைமறைவானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு 26பேர் மீது தான் வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 19 பேரை உச்ச நீதிமன்றம் விடிவித்தது, இதில் இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உயர்நீதிமன்ற விசாரணையும் நடந்திருந்தால் இன்று அனைவரும் வெளியில் விடுதலை ஆகி இருந்து இருப்பார்கள்.

இவற்றை எல்லாம் மறைத்து இந்தியா ஒரு ஜனநாயக நாடு, சட்டத்தின் கீழ் செயல்படுகிறது என்று நமக்கு சொல்லிக் கொண்டுள்ளனர். இங்கு பார்த்த மிக முக்கியமான மானுவேல் வழக்கில் ஏற்பட்ட நீதிப்பிழைகளே இங்கேயும் ஏற்பட்டுள்ளது, இதில் உச்சநீதிமன்றம் தனது கடைசித் தீர்ப்பில் தடாசட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்தது தவறு என்று சொல்லிவிட்டு, தடாவின் கீழாக வாங்கப்பட்ட வாக்குமூலங்களையே சாட்சியமாக எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இதே நிலை தான் மானுவேலுக்கும் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையெழுத்திட்டதாலேயே தூக்குகயிற்றை முத்தமிட்டு திரும்பி வந்திருக்கிறார். சட்டம் என்பது தன்னை குற்றமற்றவராக ஆக்கிக் கொள்ள மிகக் கடுமையான விதிமுறைகளை தனக்கு தானே விதித்துக் கொள்ள வேண்டும் அதை விடுத்து நீதித் துறை சுத்தமானது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தவறுகளுக்கு உயிரிழப்புகளுக்கு நீதிபதிகள் தான் பொறுப்பாளிகள் ஆவார்கள்.

இங்கே ஆறுமுகத்திற்கு தண்டனை வாங்கி கொடுத்தமைக்காக தற்கொலை செய்து கொண்ட காவல்துறை ஆய்வாளர் போல் மனம் திருந்தி தற்கொலை செய்து கொள்வது என்றால் இந்தியாவில் முன்னாள் நீதிபதிகளை கல்லறைகளிலேயே தேட வேண்டிய நிலை ஏற்படும்.