Friday, October 9, 2015

மெளனிக்கப்பட்ட ஆயுதங்களும் வாயடைக்கப்பட்ட தமிழர்களும்.

ஐ.நாவின் அநீதி - 1

2009 மே மாதம் தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று அடுத்த நகர்வுகளாக பாதிக்கப்பட்ட மக்களின் குரல் சர்வதேச மக்களுக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் மிகக்கவனமாக செயல்பட ஆரம்பித்துவிட்ட வல்லாதிக்க அரசுகளும், உலக அமைதிக்கான அமைப்புகளாக தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் வல்லாதிக்க அரசுகளின் அடிமை அமைப்புகளும் தொடர்ந்து தங்களின் நகர்வுகளை செய்து வருகின்றன. அதில் ஒன்று தான் சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணயத்தின் 30வது அமர்வில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையும் (OISL) அதன் பின்னால் நிறைவேற்றப் பட்ட தீர்மானமும். 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இவர்களின் சதி திட்டத்திற்கு எதிராக ஒழிக்க ஆரம்பித்த தமிழர்களின் குரல் அதன் பிறகும் தொடர்ந்து இன்று வரை தமிழீழ மக்கள் சுதந்திர வேட்கையை குறைந்துவிடாமல் கட்டிக் காத்து வருகின்றனர். மெளனிக்கப்பட்ட ஆயுதங்களுக்கு பதிலாக தங்களின் அறவழி மற்றும் சட்டப் போராட்டங்களின் மூலமாக தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டங்களையும் நமக்கு எதிரான சர்வதேச நகர்வுகளையும் நாம் உற்று நோக்க வேண்டிய தேவை உள்ளது,

2009ம் வருடம் மே 17ம் தேதி தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதிலிருந்து இன்று வரை கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழர்களின் வாயை அடைக்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம் மே 19ம் தேதி சிங்கள பேரினவாத இலங்கை அரசு தமிழர்களின் சுதந்திர போராட்டத்திற்கு எதிரான தனது வெற்றியை உலகிற்கு பறைசாற்றி அறிவித்தது.  அன்றிலிருந்து 7ம் நாள் மனித உரிமைகளை உலகில் இருக்கும் அனைத்து நாடுகளில் நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட உலக மனித நேயர்களால் நம்பப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் 2009ம் வருடம் மே மாதம் இலங்கை குறித்த ஒரு சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது, மே 26, 27ம் தேதிகள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 11வது சிறப்பு அமர்வு இலங்கை குறித்து விவாதித்தது, 27ம் தேதி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் ஓர் அவசரகதியில் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ற எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் போகிற போக்கில் இலங்கையை பாராட்டிவிட்டும் சென்றது. அந்த தீர்மானம் தான் 2009க்கு பிறகான தமிழர்களின் சுதந்திர தமிழீழ போராட்டத்திற்கு எதிரான முதல் படியாக வல்லாதிக்க அரசுகளுக்கு அமைந்தது. 

உலகில் எந்த மூலையிலும் இப்படி ஒரு போர் நிகழ்விற்கு பிறகு மனித அவலங்களை கணக்கில் எடுக்க வேண்டிய உலக மனித உரிமைகளை கட்டிக் காக்கும் ஓர் அவை இத்தகைய தீர்மானத்தை இயற்றியதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர்களின் வாயை அடைக்கும் முதல் கையாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையம். இலங்கையை பாராட்டி சீராட்டி தட்டிக் கொடுக்கும் வேலையை தொடங்கியது.

மனித உரிமைகளை கட்டிக்காக்கவும் மற்றும் வளர்த்தெடுக்கவும் இலங்கைக்கு உதவுவோம் என்பது தான் தீர்மானத்தின் தலைப்பு. இந்த தலைப்பே சொல்லி விடும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட எந்தவிதமான அநீதியையும் கணக்கில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்ட ஓர் தீர்மானம் என்பதை. எந்த ஒரு போரையும் இப்படி ஒருதலைப் பட்சமாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கணக்கில் எடுத்துச் செயல் பட்டதாக தெரியவில்லை. ஆனால் 2009ல் ஈழத்தின் சுதந்திரப் போராட்ட ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே இப்படி ஒரு தீர்மானத்தை இயற்றி உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவாக ஓரணியில் நிற்க ஐ.நாவின் மனித உரிமை ஆணையமே முதல் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கூட்டப்பட்ட 11வது சிறப்பு அமர்வில் தான் இலங்கையில் நடந்த போர் குறித்த முதல் தீர்மானம் இயற்றப்பட்டது. இதற்கு பிறகு பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன அவைகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒன்றை ஒட்டி ஒன்றாகவே அனைத்து தீர்மானங்களும் வந்தன. இந்த தொடர்புகள் என்பது சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் வர்த்தகம், அரசியல் மற்றும் இராணுவத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருந்து வருகிறது. அவைகளைப் பார்க்கும் முன்பாக போர் முடிந்த ஒரே வாரத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மிக முக்கியமான ஓர் இடத்தைப் பெறுகிறது. ஆம் சர்வதேச மக்களின் மனித உரிமைகளை கட்டிக் காக்கும் ஓர் அமைப்பு போர் முடிந்த பிறகு அங்கிருக்கும் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும் ஓர் தீர்மானம் என்று எடுத்துக் கொண்டால், இத் தீர்மானம் போருக்குப் பிறகு மக்களின் மீள் கட்டமைப்பிற்கு உதவும் ஒரே நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இத் தீர்மானம் சர்வதேச அளவில் 2002ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டப் பட்டு,
CFA (Cease Fire Agreement) மூலமாகவும், தமிழீழப் பகுதியினை தன்னாட்சி (De-Facto) அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்த்து என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதிகள் என்ற கண்ணோட்டத்துடனே அணுகுகிறது.  தன்னாட்சி அதிகாரத்தின் கீழ் ஓர் தனி இறையாண்மை கொண்ட ஆட்சி பிரதேசமாக அதன் நிர்வாகத்தினை கவனித்து வந்த ஒரு அமைப்பை அரசு நிறுவனமாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, சர்வதேச அரசியல் நகர்வுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒதுக்கிவிட்டு தமிழர்கள் சார்பாக யாரும் பங்கு பெற இயலாத ஓர் நிலையை உருவாக்கியுள்ளனர். இதன் பிறகான நகர்வுகளைப் பார்க்கும் முன்பு இந்த இலஙகை குறித்தான சிறப்புக் கூட்டம் நடைபெற்ற விவரங்களைப் பார்ப்போம்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் மே 26,27 இலங்கை குறித்தான் சிறப்பு அமர்வு அறிவிக்கப்பட்டவுடன் இலங்கையிலிருந்து 19 பேர் கொண்ட ஒரு குழு தயான் ஜெயதிலகேவுடன் இந்த அமர்வில் கலந்து கொள்ள சென்றது. ஜெர்மனி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது, கியூபா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது, ஐ.நா மனித உரிமைகள் அவையில் தயான் ஜெயதிலகே பொதுமக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை இந்த சிறப்பு கூட்டம் தேவையே இல்லாதது என்று பேசுகிறார். தீர்மான வரைவு முதலில் வைக்கப்பட்ட பொழுது மொத்தம் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்தன பிறகு சுவிட்சர்லாந்து மற்றும் சில நாடுகள் கொண்டுவந்த திருத்தங்களுக்கு பிறகு ஒட்டெடுப்பில் 29 ஓட்டுகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டது மொத்தம் 12 பத்திகள். இதில் பத்து பத்திகளில் இலங்கையை ஓக்குவிப்பதிலும் பாராட்டுவதிலும் செலவழிக்கிறார்கள். மிச்சம் இருக்கும் இரண்டு பத்தியும் இலங்கை அரசுக்கு எதிரானதா என்று பார்த்தால் அதுவும் இல்லை, ஒரு பத்தியில் ஒரே வாக்கியத்தில் இலங்கை அரசை சிறுபான்மையினர் அனைத்து உரிமைகளுடன் வாழும் வகையை மிகவிரவில் ஏற்படுத்துமாறு கூறுகிறது. மிச்சம் இருக்கும் இன்னொரு பத்தி இலங்கை அரசுக்கு மிகவிரைவில் பொருளாதாரரீதியாக உதவுமாறு சர்வதேச நாடுகளை கோருகிறது.

இப்படித்தான் 2009 மே மாத்த்தில் இருந்து ஐ.நா மன்றம் கொண்டுவரும் தீர்மானங்களில் இலங்கைக்கு எதிரானது என்று கட்டமைத்து, இலங்கைக்கு நிதி உதவிகளையும் இனப்படுகொலையையும் மறைக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன சர்வதேச உலக அமைதிக்கான அமைப்புகள். இவர்களைப் பொருத்தவரை செத்தவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவதைவிட சாகடித்தவர்களுக்கு நிதியைப் பெற்றுதருவதே முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

குறிப்பு - மே 26 மற்றும் 27ஆம் தேதி 2009ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் கீழ்கண்ட முகவரியில், மாற்றம் இல்லாமல் முதலில் வைக்கப்பட்ட தீர்மானம் அடுத்து மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்ட்ட தீர்மானம் இரண்டும் உள்ளது. 
http://www.tchr.net/PR_First_anniversary_HRC_ressolution.pdf
        

(மேலும் 2009லிருந்து நம் கண்களை கட்டிவிட்டு வாயை பொத்தும் தீர்மானங்களும், சர்வதேச சபைகள் நிர்பந்ததிற்கு உள்ளாகப்பட்டு அமைக்கப்பட்ட மனித உரிமை அமர்வுகளின் நடவடிக்கைகளையும் அடுத்த பகுதிகளில் தொடர்ந்து பார்ப்போம்
.)














No comments:

Post a Comment