எல்லைப் போராட்டத்தில் திராவிடம் துரோகம் இழைத்துவிட்டது என்று குதியோ குதி என்று குதிக்கிறார்கள் இங்கே சிலர். திராவிட இயக்கத்தைப்பற்றிய எந்தவிதமான அடிப்படை அறிவும் இவர்களிடம் இல்லை என்பதை நன்றாக எடுத்துக் காட்டுகிறது இவர்களின் இந்த குதியாட்டம். முதலில் பெரியார் ஏற்படுத்தியது நீதிகட்சியோ திராவிடர் கழகமோ அல்ல, சுயமரியாதைக் கழகமே. அதன் பின்னர் நீதி கட்சியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதன் தலைமையை ஏற்றுக் கொண்டார். பின்னால் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நீதிகட்சியை தேர்தல் அரசியலில் இருந்து விலக்கி திராவிடர் கழகம் என்ற அமைப்பாக மாற்றினார். 1938ல் சென்னை மாகாணமாக இருந்த பொழுதே தமிழ்நாடு தமிழர் என்ற முழக்கத்தை மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதி என்று அனைவருடன் இணைந்து முன்னெடுத்தார்.
இந்திய சுதந்திரத்தினை குறித்த காலகட்டங்களில் இந்தியாவிற்குள் இல்லாத சுதந்திர திராவிடஸ்தான் என்று தனி நாட்டையே வலியுறுத்தி வந்தார், இதற்காக சர். ஏ.டி.பன்னீர்செல்வம் லண்டன் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்கிற வழியில் விமானவிபத்தில் இறந்தார். சென்னை மாகணத்தை ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திர நாடாக தனி நாடாக பெற வேண்டும் என்றே விரும்பினார், இந்தியத்தின் அடிமைநாடாக இருக்க விரும்பவில்லை. அதன்பிறகு இந்திய சுதந்திரத்தின் ஊடாக சென்னை மாகாணம் இந்தியத்தின் அடிமையான பிறகு தொடர்ந்து சுதந்திரத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்தவர் தான் பெரியார்.
இந்த காலகட்டங்களில் தான் மொழிவழி மாநிலக் கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது காங்கிரஸ் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிவழி மாநிலக் கோரிக்கை நேரு பதவிக்கு வந்த பிறகு தள்ளி வைக்கப்படுகிறது. மொழிவழியாக இப்பொழுது மாநிலங்களை பிரித்தால் பிற்காலத்தில் நாட்டின் பிரிவினைக் கோரிக்கையாக வலுப்பெறக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களும் இதை விரும்பாமல் இருந்துள்ளனர். ஆனால் ஆந்திராவில் எழுந்த வீரமிகு போராட்டத்தின் விளைவாக ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது அதன் பிறகு மற்ற பகுதிகளை குறித்த மாநிலப் பிரிவினையையும் மத்தியில் ஆண்ட நேரு அரசாங்கம் தவிர்க்க தன்னாலன அனைத்து முயற்சிகளையும் செய்த்து. அப்பொழுது தட்ஷிணப் பிரதேசம் என்ற ஒரு திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அதாவது திருவனந்தபுரம், கொச்சி சமஸ்தான்ங்கள், சென்னை மாகனம், மங்களூர் பகுதிகள் என்று அனைத்தையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிப்பதற்கு முயற்சி நடந்தது. இதை பெரியார் முற்றிலுமாக மறுத்தார் தமிழ்நாடு என்று மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிகையையும் வைத்தார். இதை காமராஜரிடம் தெரிவித்து காமராஜரும் பெரியார் தட்சிணப்பிரதேசத்தை எதிர்க்கிறார் என்ற செய்தியை நேருவிடம் கொண்டு சேர்த்தார். ஆனால் தமிழக எல்லைப் போராட்ட வரலாறு என்று சொல்லப்படும் மா.பொ.சி புத்தகத்தில் இருந்து மற்ற அனைத்து புத்தகங்களிலும். தமிழக எல்லைப் போராட்ட வரலாற்றினுடாக இந்த தட்சிணப் பிரதேச வரலாறு மறைக்கப்பட்டே வருகிறது.
இதே சமயத்தில் தான் காங்கிரஸில் உறுப்பினராக இருந்து கொண்டே ராஜாஜியின் வழிகாட்டுதலின் கீழ் 1948ல் ஆரம்பிக்கப்பட்ட “தமிழரசு கழகம்” தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழ்நாடு சுதந்திர நாடாக்கியே தீர்வோம் என்று குரல் எழுப்புகிறது. இப்படியான ஒரு அமைப்பை துவங்க வேண்டிய தேவை அவர்களுக்கு வந்த காரணம், பெரியார் எனும் ஆளுமையால் காங்கிரஸ் மற்றும் ராஜாஜியின் தமிழர் விரோதப் போக்கு மக்களிடையே தோலுரிக்கப்பட்டிருந்தது. தமிழர் உணர்வு சென்னை மாகாணம் முழுவதும் வளர்த்தெடுக்கப்பட்டு இருந்தது. இந்த தமிழர் உணர்வை காங்கிரஸுக்கு சாதகமாக அறுவடை செய்யும் நோக்கத்துடனேயே “தமிழரசு கழகம்” தொடங்கப்பட்டது. தமிழரசு கழகம் எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்தது போல் வரலாறு கட்டமைக்கப் பட்டுள்ளது. தமிழக எல்லை போராட்டத்தை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். தெற்கெல்லைப் போராட்டம், வடக்கெல்லை போராட்டம் என்று இதில் இரண்டு போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள், அந்த பகுதியை சேர்ந்தவர்களே.
தெற்கெல்லைப் போராட்ட்த்தில் நதானியல், நேசமணி போன்றோர்களாலும், வடக்கெல்லைப் போராட்டம் மங்களக் கிழார் போன்றோராலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் மா.பொ.சி போன்றவர்கள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவது என்று பெரியாரிடம் பேச ஆரம்பிக்கிறார்கள். பெரியார் சுதந்திரத் தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், ஒரு இந்திய தேசியத்திற்குள் ஒரு அடிமை மாநிலமாக இருப்பதற்கான எல்லைப் போராட்டத்தை குறித்து மறுத்திருக்க வேண்டும் ஆனால் எல்லைப் போராட்ட கோரிகையையும் ஏற்றுக் கொண்டார் ஆனால் தனது கோரிக்கைகளையும் கூறி அதையும் சேர்த்துக் கொண்டு போராட்ட்த்தை முன்னெடுக்கலாம் என்று 19/01/1956ம் ஆண்டு பெரியாரும் மபொசியும் சந்தித்த பொழுது முடிவெடுக்கின்றனர். அப்பொழுது ஐந்து கோரிக்கைகளின் கீழ போராடலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது அந்த 5 கோரிக்கைகள்...
- எல்லைக்கமிஷன் என்பது எல்லையை வரையறுப்பதில் தமிழ் மக்களுக்கு செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.
- இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும் இந்திய தேசிய மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு பலவழிகளிலும் அரசாங்கம் முயற்சிப்பதை தடுப்பது
- யூனியன் ஆட்சி என்பதில் படை போக்குவரத்து, வெளிநாடு உறவு இவை தவிர்த்த மற்ற ஆட்சியின் உரிமைகள் அனைத்தும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். {மாநில சுயாட்சி}
- தமிழ்நாட்டுக்கு தமிழில் சென்னை என்றும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்று பெயரிட்டிருப்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரையே இருக்கும்படி செய்ய வேண்டும்.
- தமிழ்நாட்டை தென்மண்டலம் {தட்சிணப் பிரதேசம்} என்ற அமைப்பு முறையின்படி மற்ற நாடுகளுடன் இணைக்க திட்டமிட்டிருப்பதை எதிர்ப்பது.
இந்த ஐந்து கோரிக்கைகளில் மாநில சுயாட்சியை தந்தை பெரியார் வலியுறுத்தியிருப்பதே அவரின் அதுவரையிலான கொள்கைக்கு முரணானது ஆனால் அனைவருடன் இணைந்து செல்ல வேண்டும் என்ற வகையில் தனது கொள்கையில் ஒன்றைமட்டும் விட்டுக் கொடுத்து மாநில சுயாட்சிக்கு இணங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம். இந்த ஐந்து கோரிக்கைகளையும் பெரியார் மற்றும் மபொசியும் ஒத்துக் கொண்டு போராடுவது என்று முடிவெடுத்தனர். இந்த போராட்ட்த்தில் மேலும் திராவிட பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் சுயம்பிரகாசம், ஜஸ்டிஸ் கட்சி சர்.பி.டி. ராஜன், கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சித் தோழர்களையும் இணைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள். அப்பொழுது மபொசி கண்ணீர் துளிகளை {திமுக} இணைக்கலாமா என்ற பொழுது தேவையில்லை அவர்களால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை, கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக அவர்களை இணைத்துக் கொள்வதில் பயனில்லை, வேலை செய்யக் கூடிய திறமையுள்ளவர்களை மட்டும் இணைத்துக் கொள்ளலாம் என்று பெரியாரும் சொல்லியிருக்கிறார். இப்படி மொழிப் போராட்டம் அனைவரையும் இணைத்து நடைபெற வேண்டிய அடித்தளம் போடப்பட்டது.
ஆனால் இத்தனையும் பேசிவிட்டு சென்ற மபொசி அதன்பிறகு போராட்ட முன்னெடுப்பு குறித்தும் கோரிக்கைகளை வரையறுப்பது குறித்தும் முடிவெடுப்பதற்கு அனைவரும் இணைந்து பேசுவதற்கான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் ஒரு கடிதம் 20-1-1956 அன்று மபொசி அனுப்புகிறார், அப்படி கடிதம் அனுப்பியிருப்பது குறித்த ஒரு தந்தியும் அனுப்புகிறார் மபொசி. ஆனால் 20ம் தேதி தந்தி வந்து சேர்கிறது ஆனால் 21ம் தேதி கடிதம் வந்து சேரவில்லை. எனவே 21ம் தேதி அந்த கடிதம் வந்து சேரவில்லை என்பதை மபொசிக்கு பெரியார் தந்தியின் மூலம் தெரிவிக்கிறார். ஆனால் 22ம் தேதி மறுநாள் கடிதம் பெரியாரை வந்தடைகிறது. அந்த கடிதத்தில் 5 கோரிக்கைகள் மூன்றாக மாறியிருந்தது அதிலும் திருத்தங்களுடன் இருந்தது. கடித்த்தில் வரையறுக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் பின்வருமாறு.
- தமிழக எல்லை பகுதி வரையறுத்தல்
- தமிழகம் என்று பெயரிடுவது
- இந்தி திணிப்பை எதிர்ப்பது
இந்த கடிதம் மபொசியும் பெரியாரும் சந்தித்த 19-01-1956ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் கழித்து 22-01-1956 அன்று பெரியாரின் கைக்கு கிடைக்கிறது. மேலும் அதில் கையெழுத்து இடும் பகுதியில் ஐந்து பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் ம.பொ.சி கையெழுத்து போட்டிருந்தார். முதல் இடத்தில் பெரியாருக்கு ஒதுக்கியிருந்தார். மேலும் ‘கண்ணீர் துளி’ அமைப்பின் சார்பில் கையெழுத்து போட தங்களின் விருப்பத்தையும் கூறுமாறு மபொசி கேட்டிருந்தார். கூட்டம் நடக்கும் இடம் தேதியை பெரியார் முடிவு செய்து அறிவிக்க சொல்லி அந்த பகுதியை காலியாகவிட்டிருந்தார்.
இதற்கு நடுவில் சென்னையில் இருந்த குத்தூசி குருசாமி அவர்களை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து இன்று மாலை ஒரு ஆலோசனைக் கூட்டம் தாங்கள் வர இயலுமா என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் பெரியார் திருச்சியில் இருந்தே அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார், சென்னையில் நிரந்தரமாக தங்கியது இல்லை. குத்தூசி குருசாமி பெரியார் அவர்கள் சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் இணைத்தால் தான் பெரியார் ஏற்றுக் கொள்வார் என்று சொல்லியிருக்கிறார். 26-01-2015 அன்று மா.பொ.சியிடமிருந்து திருச்சிக்கு பெரியாருக்கு அடுத்து ஒரு அச்சிட்ட அழைப்பிதழ் வருகிறது அதில் 27-01-1956 அன்று மாலை 4 மணிக்கு மபொசியின் நண்பரின் உமா பத்திரிக்கை அலுவலகம், சென்னையில் சர்வகட்சிக் கூட்டம் என்று மா.பொ.சி மட்டும் கையெழுத்திட்ட அழைப்பிதழ் வந்து சேர்ந்தது.
முதலில் பெரியாரிடம் ஒத்துக் கொண்ட 5 கோரிக்கைகள் அடுத்து 3 கோரிக்கை ஆனது, கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக சர்வ கட்சிக் கூட்டம் “எல்லைப் பிரச்சனை” என்ற ஒரு கோரிக்கையின் கீழாக வந்து நின்றது. பெரியார் சுதந்திரம் தனிநாடு என்பதை விடுத்து மாநில சுயாட்சி என்பதை ஏற்றுக் கொண்டதே பெரிய விசயம் அதில் மாநில சுயாட்சியையும் தூக்கிவிட்டார்கள் அடுத்து தமிழ்நாடு என்பதை சுருக்கி தமிழகம் என்று மட்டுமே குறித்து அழைப்பிதழ் இருந்தது. பெரியாரின் கட்டுரைகள் படித்த அனைவருக்குமே தெரியும் தமிழர்கள் தமிழ்நாடு என்று குறிப்பிட்டே எப்பொழுதும் எழுதுவார்கள் ஆனால் இதெல்லாம் இல்லாத போராட்டத்தை முன்னெடுக்க பெரியார் மபொசியுடன் இணைந்து முன்வருவாரா என்ன. சரி தனியாக போராட்டத்தை முன்னெடுத்து இருக்கலாமே என்று சிலர் கேட்ப்பார்கள் அவர் எடுக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் நடந்த அரசியல் வரலாற்றை தெரியாதவர்கள் இன்று வந்து சில்லுவண்டுகள் போல் குதிக்கின்றனர் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம் இவர்களை.
முதலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றுடன் இன்று வரை இணைந்திருக்கும் தமிழர்கள் பகுதிகளை குறித்த பெரியார் என்ன பார்வை கொண்டிருந்தார் என்பதை அவரின் வழியாக தெரிந்து கொள்வது தான் சரியான பார்வை.
7-01-1953 மற்றும் 8-01-1953 அன்று விடுதலையில் பெரியார் ஆற்றிய உரையாக வெளியிடப்பட்டதில் இருந்து
”ஆந்திரமொழியைப் பேசுகின்ற மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்த்துக் கொள்வதில் நமக்கு ஆட்சேபமில்லை, தமிழ்மொழி பேசும் மக்களை பெருவாரியாகக் கொண்ட நாட்டை ஆந்திராவோடு சேர்க்கவேண்டும் என்பது எப்படி, மொழிவாரி மாகாணப் பிரிவினை என்று சொல்ல முடியும்?
அடுத்தாற்போல், அதுபோலவே இன்றைய அனுபவத்தில் தமிழ் மொழி அதிகமாகப் பேசும் மக்களின் பிரதேசம் ஆந்திர நாட்டிலே சேர்ந்தாலுங்கூட, அவர்களுக்கு மொழிவாரிப் பிரேதச உரிமையை உத்தேசித்து எந்த நிமிசத்திலும் விலகிக் கொள்ள கிளர்ச்சி செய்ய உரிமை உண்டு. அதை நாம் மறுக்கவில்லை; நம்மாலான உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால் நம்முடைய சொந்த பிழைப்பையோ, சுயநலத்தையோ, விளம்பரத்தையோ உத்தேசித்து இன்றைக்குத் தான் இந்த சங்கதி தெரிந்தது போல் பாவனை காட்டிக்கொண்டு கூத்தாட நமக்கு இஷ்டமில்லை.”
1956ல் மபொசி அனைத்துக் கட்சி கூட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார், அதற்கு மூன்று வருடம் முன்பாகவே மற்ற மாநிலங்களுடன் இருக்கும் தமிழ் அதிகம் பேசும் மக்கள் தமிழ்நாட்டுடன் இணைய கிளர்ச்சி செய்ய உரிமை பெற்றவர்கள் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று 1953ம் ஆண்டே சொன்னவர். இப்படி தமிழ்நாட்டினைப் பற்றியும் தமிழரைப்பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தவர் தான் பெரியார், மேலும் இதன் கீழாக விளம்பரம் செய்து கொள்வது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டியவர் பெரியார். இங்கே மபொசியை தூக்கி பிடித்துக் கொண்டு அவர் தான் ”முதலமைச்சு தமிழ்தேசியத்தின்” மண்ணுரிமைப் போராளி என்கிறார்கள். 1945ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சி மலைக்கோட்டையில் இலக்கியக் கூட்டத்தில் “புதிய தமிழகம்” என்ற சொற்பழிவை நிகழ்த்துகிறார். அன்றிலிருந்து 1956 வரை அவர் தமிழகம் என்ற சொல்லாடலையே உபயோகிக்கிறார். பெரியார் 1930களில் இருந்தே தமிழ்நாடு என்ற சொல்லாடலை உபயோகிக்கிறார். தமிழர் பகுதி என்பதில் நாடு என்ற வார்த்தையை தவிர்க்கவே மத்திய அரசும் மொழிவாரி பிரிவினையின் போது முயன்றது அதன் கீழாக சென்னை மாகாணம் என்று தமிழிலும் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு வந்தது. தமிழ் நாடு என்று பெயர் வைக்க சங்கரலிங்கம் உயிர்விட வேண்டியது ஆனது.
இதைப் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இங்கே தாந்தோன்றித் தனமாக சிலர் குதித்துக் கொண்டுள்ளனர், என்ன செய்வது அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்து அவர்களின் அறியாமை இருளில் இருந்து வெளிக்கொணர முயல்வோம். எல்லைப் போராட்டத்தில் மிகவும் முக்கியமானவராக மபொசியை காட்டினாலும் தெற்கெல்லை போராட்டத்தினை முன்னெடுத்து இன்று வரை குமரியின் தந்தையாக மதிக்கப்படும் மார்சல் நேசமணி அவர்களின் வரலாற்றை குறித்த “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்” என்ற புத்தகத்தின் முன்னுரையில் தெற்கெல்லை போராட்டத்தில் பங்கு கொண்ட அப்துல் ரசாக் M.A, LLB, இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட.
கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், திருவிதாங்கூர் காவல்துறை அடக்குமுறையின் கீழாக
““கண்ணில் கண்டவர்களை, “கண்டால் அறியும் பள்ளி” என்று கூறிக் கைது செய்தனர். நான் போலிசுக்கு பிடி கொடுக்காமல் வாழ்ந்தேன். திருவிதாங்கூரில் நடந்த தமிழகப் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறிச் செயல்பட்டது. பலரைத் துப்பாக்கிக்கு இரையாக்கியும் பலரை சித்திரவதை செய்தும் பலரை துன்புறுத்தியும் கைது செய்தனர். தமிழக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்ற வந்த ம.பொ.சி சொற்பொழிவு ஆற்றாமலேயே திரும்பிச் சென்றார்.
ஆனால் பெரியார் ஈ.வே.ரா மட்டும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் நிலைமையை மார்ஷல் நேசமணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதன் பின்னணியாகச் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு கூட்டத்தைப் போட்டு, “திருவிதாங்கூரில் போலீஸ் அடுக்குமுறையை உடனடியாக நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் வாழும் மலையாளிகளை நாங்கள் இங்கிருந்து அடித்து துரத்துவோம்” என்று பொதுக்கூட்டத்தில் அறிக்கை விட்டார். மலையாள அரசு தமிழனைத் துன்புறுத்தியதை நிறுத்தியது.
மார்ஷல் நேசமணி தன் கையால் மாலை அணிவித்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரும் மார்ஷல் நேசமணி மீது மிக்க மதிப்பு வைத்திருந்தார்””
இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் தான் தமிழகத்தின் எல்லைகளை விட்டுக் கொடுக்க காரணம் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் தனித் சுதந்திர தமிழ்நாட்டை கேட்டவர் அது ஒரு சிறுபகுதியாக இருந்தாலும் போதும் அந்த சுதந்திரத் தமிழ்நாட்டின் மானமுடன், சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்று நினைத்தவர். இவர்களுக்காக காவடி எடுத்து ஆட வேண்டிய வேலையை அவர் செய்ய இயலாது.
ஒரு நாட்டின் வரலாறு என்பது ஒரு பக்கமான பார்வையும் ஒரு பக்கமான படிப்பும் கிடையாது அனைத்து பக்கங்களிலும் இருந்து கிடைக்கும் தகவல்களை தொகுத்து படிப்பதே. எனென்றால் இங்கிருக்கும் வரலாற்றாசிரியர்கள் பலர் தாங்கள் சார்ந்த கருத்தியலின் கீழாகவே வரலாற்றை எழுதி வருகிறார்கள். ஆரியர் வருகை, மொகலாயர் படையெடுப்பு என்றே வரலாற்றில் உள்ளது மொகலாயர் படையெடுத்து வந்தால் படையெடுப்பாம், இந்த மண்ணுக்கு சொந்தமில்லாத ஆரியர் இந்த மண்ணுக்குள் படையெடுத்து வராமல் வெத்தலை பாக்குவைத்து அழைத்தது போல் ஆரியர் வருகை என்றே குறிப்பிடுகின்றனர். இனிமேலாவது அனைத்து பக்க தகவல்களையும் படித்து நமது வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் வருங்கால உண்மையாக தமிழ்த் தேசியம் பேச விரும்புபவர்கள்.
குறிப்பு – எல்லைப் போராட்டம் மட்டும் இல்லை தனி நாடு, அப்புறம் மாநில சுயாட்சி என்று ஏகப்பட்ட அந்தர்பல்டிகள் அடித்து கடைசியில் திமுகவினரின் காலில் விழுந்து மேலவை உறுப்பினர், மேலவை தலைவர் என்று பதவி பின்னால் அழைந்தது என்று இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்னொரு சமயம்.
குறிப்புக்கு உதவிய நூல்கள் -
1. திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு – பி. யோகிஸ்வரன்
2. தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம் – பெரியாரும் ம.பொ.சியும்
3. நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம் – ஏ.ஏ. ரசாக்
4. திருத் தமிழர் இயக்கம் – பி.எஸ். மணி
5. எனது போராட்டம் – மபொசி