Tuesday, December 30, 2014

தந்தி டிவியில் ராஜபக்சேவின் பேட்டி அரசியல்


ராஜபக்சேவின் தனிப்பட்ட பேட்டி தந்தி டிவிக்கு என்பது இந்திய மத்திய அரசு நலன், மற்றும் சிங்கள பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் கீழாக பார்க்க வேண்டும். இந்த பேட்டிக்கு தந்தி டிவி அணுகியதைவிட இந்திய வெளியுறவுத் துறையே அனுமதி வாங்கி கொடுத்து இருக்க வேண்டும். பேட்டி எப்படி எடுக்கப்பட்டால் என்ன அவர்கள் செய்ய நினைத்ததை சாதித்துவிட்டார்கள். ஆம் இங்கு தமிழர் நலனுக்காக தொடர்ந்து போராடி வருபவர்களுக்கு இடையே இருக்கும் முரண்களை மேலும் வளர்த்து எடுத்து இருக்கிறார்கள். ராஜபக்சேவின் பேட்டியை ஒரு இந்திய மாநிலத்தின் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று பார்க்காமல். அந்த பேட்டியின் கீழான விவாதத்தில் தமிழர் நலனை பற்றி பேசும் ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார், அதே சமயத்தில் மற்ற கட்சிகள் இயக்கங்கள் என்று அனைவரும் ஒரணியில் ராஜபக்சேவின் பேட்டியை ஒளிபரப்பாதே என்ற கோரிக்கை வைக்கும் பொழுது இவர் சென்று அந்த பேட்டியின் கிழான விவாதத்தில் கலந்து கொள்கிறார், இது என்ன மாதிரி டிசைன் என்று தெரியவில்லை.

முதலில் இராஜபக்சேவின் பேட்டியின் கீழான வாதமாக ராஜபக்சே கூறியவைகளின் அடிப்படையில் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை நம்ப முடியுமா என்பது தான் அதற்கான நேரிடையான பதில் இராஜபக்சேவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் இலங்கையின் எத்தேச்சதிகார இனவெறி கொண்ட அரசியல்சாசனச் சட்டம் இருக்கும் வரை எந்த சிங்கள பேரினவாதத்தின் தலைமையையும் நம்ப இயலாது. இது தந்தை செல்வா பண்டாரநாயக ஒப்பந்தத்தில் இருந்து ஜெயவர்த்தனா ராஜிவ் ஒப்பந்தம் மட்டும் அல்ல, நார்வேயின் தலையீட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் வரை எல்லா இடத்திலும் அனைத்து காலத்திலும் சிங்கள பேரினவாத அரசியல் சாசனச் சட்டம் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிப்பதில் தான் இருந்திருக்கிறதே ஒழிய என்றும் ஒரு மனிதாபிமான அடிப்படையிலான அரசியலமைப்பாக தன்னை கட்டமைத்துக் கொள்ளவில்லை. இத்தகைய நிலையில் இலங்கையின் அதிபராக நெல்சன் மண்டேலாவை அமர வைத்தால் கூட தமிழர்களுக்கான தீர்வாக அவர் ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளி போட முடியாது, எனவே இலங்கையின் இனவெறி அரசியல் சாசனத்தை திருத்தாமல் வெறும் வாய்வார்த்தைகள் யார் சொன்னாலும் நம்ப இயலாது. 

அடுத்து ராஜபக்சேவின் பேட்டி எதற்காக எடுக்கப்பட்டது அது ஏன் இப்பொழுது என்று ஆராய்ந்தால் அனைத்தும் விளங்கும். இலங்கை தேர்தல் பிரசார நோக்கமா இது இல்லை... இலங்கை தேர்தல் பிரசாரத்திற்கு இலங்கையில் தான் ராஜபக்சே பேட்டி கொடுக்க வேண்டும் ஏன் தமிழகத்தில் இருக்கும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி, இலங்கையில் தொலைகாட்சி நிலையங்களே இல்லையா என்ன? மிக நேர்த்தியாக இந்திய வெளியுறவு துறையும் சிங்கள பேரினவாதமும் தன் காயை நகர்ந்தியுள்ளது. சரி ராஜபக்சேவின் பேட்டியின் கீழான விவாதம் எனும் பொழுது, ராஜபக்சே என்ன சொன்னாரோ அதன் கீழான விவாதமாக இருந்து இருக்க வேண்டும். ராஜ பக்சே போருக்கு பின்னான அபிவிருத்தி திட்டங்களை பற்றி பேசினார், மேலும் சில இடங்களில் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருப்பதாகவும் கூறினார். ஆனால் இதை குறித்த விவாதமாக இல்லாமல் இங்கே வேறு கருத்தாக்கங்கள் வைக்கப்பட்டது. அதில் முக்கியமானவை..

இந்திய தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல், இலங்கை தமிழ் மீனவர்களே செய்கிறார்கள். காரணம் மன்னர் வளைகுடா வரை சென்று தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். இலங்கை இராணுவம் தாக்குவது இல்லை என்ற அடுத்த கட்டுக் கதையை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளார்கள். 

அடுத்து மலையகத் தமிழர்கள் இலங்கை அரசின் கீழ் தான் இருக்க விரும்புகிறார்கள், அவர்கள் என்றும் வடகிழக்கு தமிழர்களால் பாதுக்காக்கப் படவில்லை என்பது போன்ற வாதமாக இலங்கையின் மத்திய மாகணத்தின் முதலமைச்சராக இருக்கும் ராமசாமி அவர்களின் வாதம்.

கடைசியாக இலங்கை வாழ் தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்று தமிழக ஊடகத்தின் மூலமாக சொல்லி சென்று இருக்கிறார். 

முதலில் பகவான் சிங் சொன்ன இந்திய தமிழ் மீனவர்களை தற்பொழுது தாக்குவது இலங்கை தமிழ் மீனவர்களே, காரணம் இந்திய தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை தமிழ் மீனவர்கள் பகுதியான மன்னார் வளைகுடா வரை சென்று மீன் பிடிக்கின்றனர் அதனாலேயே அந்த மீனவர்கள் தாக்குகிறார்கள் என்ற கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார். இவரிடம் அடிப்படையாக கேட்கப்பட வேண்டிய கேள்வி எத்தனை தாக்குதல்களை பற்றிய தகவல் இருக்கிறது அதில் எத்தனை இலங்கை தமிழ் மீனவர்கள் தாக்கினார்கள், எத்தனை தாக்குதலில் இலங்கை இராணுவம் ஈடுபட்டது என்பதற்கான தெளிவான விவரங்கள் இருக்கா என்பது. மேலும் ஒரு ஊடகவியலாளராக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட 543 மீனவர்களுக்கான நீதியை மறந்துவிட்டு அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை மட்டும் எப்படி பேசுகிறீர்கள். செத்து போன 543 மீனவர்களுக்கான நீதியைப் பெற்று தரவேண்டியது ஊடகவியலாளரான உங்கள் கடமை இல்லையா. வருங்காலத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு கடந்தகால கொடூரங்களை எந்த சட்ட நியாயத்தின் அடிப்படையில் மறைக்கிறீர்கள்.

மேலும் இரண்டு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை கடைசியாக எப்பொழுது நடந்தது அதில் காலையில் இரு நிபந்தனை மதியம் ஒரு நிபந்தனை என்று மாற்றி மாற்றி பேசி, இலங்கை அரசு அந்த பேச்சுவார்த்தையை சீர்குலைத்தது ஒரு ஊடகவியலாளராக உங்களுக்கு தெரியுமா தெரியாதா. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து வந்து இங்கு பலரின் வயிற்றுக்கு சோறு போடுபவர்கள் மீது எந்த அடிப்படையின் கீழ் எல்லை தாண்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். உங்கள் இந்திய பாசத்தின் கீழாக இங்கு இருக்கும் தமிழ் மீனவர்களை சண்டையிடுவது போல் பிம்பந்தத்தை உருவாக்க முயல்கிறீர்கள், 1983 வரை பெண் கொடுத்து பெண் எடுத்தவர்கள் இலங்கை வாழ் ஈழ மீனவர்களும் தமிழக மீனவர்களும்,  கணவனும் மனைவியும் 1983க்கு பிறகு கச்சத்தீவு திருவிழாவில் சந்தித்து கர்ப்பம் ஆன கதைகள் எல்லாம் உண்டு, இதைப் பற்றி உங்கள் செய்தியாளர்களை வைத்து ஒரு முழுமையான செய்திக் கட்டுரையை எழுத முடியுமா தங்களால். 1968ல் அண்ணா இறந்த செய்தியை ஈழத் தமிழ் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களுக்கு சொல்லித் தான் தெரியும். இப்படி அமைதியாக தங்கள் இருவருக்கும் சொந்தமான கடலை அவர்களுக்கு உபயோகித்துக் கொள்ளத் தெரியும் நீங்களும் உங்கள் அரைவேக்காட்டு அரசியல் பார்வைகளும் விலகி நின்றால் அவர்களின் சொத்தை அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். 

ராமசாமி அவர்கள் போகிற போக்கில் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட பொழுது திரு. தொண்டைமான் அவர்கள் மட்டும் தான் எதிர்த்தார் அப்பொழுது இருந்து வடகிழக்கு தமிழர் தலைவர்கள் யாரும் மலையகத் தமிழர்களுக்கு உதவவில்லை என்று கூறினார். 1952ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மலையகத் தமிழர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்ட பொழுது அப்பொழுது தமிழ் காங்கிரஸ் தலைவராக இருந்த பொன்னம்பலத்தின் கட்சியில் இருந்த தந்தை செல்வநாயகம் பாராளுமன்றத்திலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் அந்த சட்டத்தை ஆதரித்த பொன்னம்பலம் கட்சியைவிட்டு விலகி தமிழரசு கட்சியை ஆரம்பித்து இலங்கை வாழ் தமிழர் நலன் காக்க அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தார், இதை எல்லாம் மறந்துவிட்டு வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது எப்படிக் குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்.

மேலும் 1950களில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் இடம் கொடுத்து அவர்களை தங்களில் ஒருவராக மதித்த வடக்கு கிழக்கு மக்கள் மீது எப்படி உங்களால் அபாண்டமான குற்றச்சாட்டை வைக்க முடிகிறது. மத்திய மாகணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மலையக மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தங்களின் சுதந்திரத்திற்காக போராடியது தங்களுக்கு தெரியாதா என்ன.

இதைவிட அதி முக்கியமானது வடக்கு கிழக்கு தலைவர்கள் இலங்கையின் மத்திய மாகணத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களான உங்களின் நலனின் அக்கறை கொள்ளவில்லை என்று கூறுவது, உங்களை ராஜபக்சேவின் ஆகச் சிறந்த ஜால்ரா விற்பன்னராகவே காட்டுகிறது. தமிழீழ சுதந்திர போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ”வட்டுக்கோடைத் தீர்மானம் - 1976” இல் நாலாவது சரத்தாக கீழ் வரும் தீர்மானம் இருக்கிறது 

“(ஈ). தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ்பேசும் சிறுபான்மைகள் பாதுக்காக்கப்படும் சரி எதிரீடான அடிப்படையில் பாதுகாப்படவேண்டும். ”

ஆதாவது சுதந்திர தமிழீழத்தில் வாழப்போகும் சிங்களவர்களின் உரிமைகள் சிங்கள தேசத்தில் வாழும் தமிழ் சிறுபான்மையினரை எவ்வாறு சிங்கள அரசு நடத்துகிறதோ அதற்கு நேர் எதிரீடான அடிப்படையில் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் உங்களின் உரிமைகளை நலன்களை பேணுவதிலும் அக்கறை கொண்டிருந்தே வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் உங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக மறந்துவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக ராஜபக்சேவிற்கு பக்கவாத்தியமாக இருக்கிறீர்கள், தமிழர்களுக்கு ஜால்ரா சத்தங்களை சுரம் பிரித்து அறிந்து கொள்ளும் சங்கீத ஞானம் உண்டு..

ஒட்டுமொத்தத்தில் இந்த பேட்டி என்பது இந்திய மத்திய அரசாலும் இலங்கை இனவெறி அரசாலும் தமிழர்களை கூறு போடும் திட்டமே, தமிழக மீனவர்கள், ஈழத்து மீனவர்கள் என்று பிரித்து அவர்களுக்கிடையேயான சிறு முரண்களை பெரும் பிரச்சனைகளாக உருவகப்படுத்துவதும், மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் முரண்களை பெரிது படுத்தி காட்டி தமிழகத்தில் எழுந்திருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான அனுதாபத்தை குழப்பி அந்த குழம்பிய குட்டையில் தங்களின் அரசியல் லாபக் கணக்கை எழுதும் முயற்சியே.. 

No comments:

Post a Comment