அன்புள்ள கலாம் தாத்தாவிற்க்கு,
இடிந்தகரை சார்ந்த சுள்ளான் எழுதுவது. நான் வளர்ந்து பெரியவனாகி ஒரு விஞ்ஞானி ஆக ஆசை படுகிறேன், தாங்கள் சொன்னது போலவே கனவும் காண்கிறேன், ஆனால் அது மெய்ப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இப்பொழுது சிறிதளவும் இல்லை.
கடலில் மீன் பிடிக்க அப்பா செல்லும்போது, நானும் அம்மாவும் கரையில் அமர்ந்து கடலின் நீல நிறத்தில் சூரிய கதிர் பட்டு எழும் வெள்ளி அலைகளை ரசித்திருப்போம். படகு திரும்பி வரும் சத்தம் கேட்டதும், என் தாய் கண்களில் ஒரு சந்தோஷ களை பீரிட்டு வெளிப்படும், மனதில் மீன்களை எப்படி விற்கலாம்? வீட்டிற்கும் எனக்கும் என்ன என்ன வாங்கலாம் என்று எண்ணி கொண்டே அவள் நடை போடுவாள்.
இப்படி இருந்த துள்ளி விளையாடி திரியும் எம் போன்ற சுள்ளான்களை ஒரு நாள் தீடிரென ஓடச் சொன்னார்கள், அணு உலை வர இருக்கிறதாம், அதிலிருந்து முதல் முறை அபாய மணி அடித்தால் பக்கதில் எந்த வீடு இருக்கிறதோ அதில் நுழைய வேண்டுமாம், இரண்டாவது மணிக்கு ஈர துண்டை மூக்கில் கட்ட வேண்டுமாம், மூன்றாவது அபாய மணி அடிக்கையில் நாங்கள் கிராமத்தை விட்டே ஓடிப்போய் விட வேண்டுமாம்.
இந்த செய்முறை விளக்கத்தின் போது எனக்கு மனதில் சாவு மணி அடிப்பது போல் பயம் வருகிறது தாத்தா. அத்தகைய அணு உலையை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் ஓப்பியது?
கல்லணை இடிஞ்சா அப்பொழுது ஏற்படும் வெள்ளத்தில் மாட்டிக்கொள்ளும் மக்களுக்கு மட்டும் தான் பாதிப்பு ஆனால் அணு உலை வெடிச்சா பல வருடங்கள் பின்னால் வரும் சந்ததிக்கும் பாதிப்பு. இது தங்களுக்கு தெரியும் தானே கலாம் தாத்தா???
தஞ்சாவூர் கோயில் இடிய வேண்டாம் கலாம் தாத்தா, காளகஸ்தி கோயில் கோபுரம் இடிந்தது அது போதும், அதில் செத்தது இரண்டு குரங்கு தான் ஆனால் நீங்க நல்லதுனு சொல்லுற அணு உலை வெடிச்சா ஏன் கொள்ளு பேரன் வரைக்கும் பாதிக்கப்படுவானே என்ன செய்யலாம் கலாம் தாத்தா???
1983ல் இருந்து 2002 வரை பத்தொன்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டை சேர்ந்த 112 மீனவர்கள் தான் கொல்லப்பட்டார்கள் ஆனால் நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற 2002 க்கு பிறகு இன்று வரை ஒன்பது ஆண்டுகளில் 432 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் ஜனாதிபதி என்பது முப்படைகளின் தளபதி என்று சொல்வார்கள். ஆனால் அடுத்த நாட்டு இராணுவத்திடம் இருந்து உங்கள் சொந்த மாநிலத்து மக்களை கூட காப்பாற்ற நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபொழுது எதுவும் செய்யவில்லை. இதில் இந்தியாவின் வருங்காலத்தை பற்றி எப்படி வல்லரசு கனவு காண்கிறீர்கள்.
கனவு காண சொன்னது எங்களை ஒரேடியாக உறக்கத்தில் ஆழ்த்தத்தானா??
இளைஞர்களை கிராமங்களுக்கு போக சொன்னது இது போன்ற விஷமகரமான தொழில்நுட்பத்தால் எங்களின் வாழ்வாதாரங்களை சிதைபதற்கா???
நீங்கள் காணும் கனவில் நாங்கள் எல்லோரும் ஊனமாகவும், முடமாகவும், பார்வையற்றவர்களாகவும், புற்று நோயாளிகளாகவும் தெரிகிறோமா என்ன???
நானும் ஒரு நாள் விஞ்ஞானி ஆவேன். மக்களின் உயிருக்கு மதிப்பு கொடுக்கும், வாழ்கை தரத்தை மேம்படுத்தும், துன்பம் தராத தொழில் நுட்ப முறையை கண்டு பிடிப்பேன்!!!! உங்களை போல் மக்களை பாதிக்கும் ஏவுகணையும், அணுகுண்டும் வெடிக்க மாட்டேன்..
அரசியல் சாத்தான் சொன்ன படி சலாம் போடாத கலாமாகி காட்டுவேன்.
தயவு செய்து எங்கள் கனவு மெய்பட எங்களை உயிர் வாழ விடுங்கள்!!!!
இப்படிக்கு
இடிந்தகரை சுள்ளான்..
நன்றி - பார்கவி தீலிப்குமர்...