நோக்கியா நோக்கு நோக்குனு நொக்குயா ஊழியர்களை...
ஆம் இது தான் இன்று நோக்கியா என்ற நிறுவனம் செய்து கொண்டிருப்பது, 2006ம் வருடம் நோக்கியாவின் உற்பத்தி பிரிவு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும். நமது பிள்ளைகள் பலருக்கு வேழைவாய்ப்பு கிடைக்கும் என்று.
இன்று ஆரம்பிக்கப்பட்டு 4 வருடங்களே கடந்த நிலையில் எத்தனை வேதனைகள் அதுவும் குறிப்பாக கடந்த 6 மாதங்களுக்குள். நோக்கியா நிறுவனம் என்றால் ஸ்ரீபெரும்பூதூரை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவணம் அல்ல. ஒரே இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல நிறுவனங்கள். நோக்கியா நிறுவனத்தின் கைபேசிகளில் உள்ள அனைத்து பாகங்களும் நோக்கியாவே தயாரிப்பது இல்லை. ஆமாக் ஸ்க்ரூ முதற்கொண்டு அவர்கள் தயாரித்தால் தேவையில்லாத வீண்செலவு ஆகும். அதனால் அவர்களுக்கு தேவையான கீபேட், அவுட்டர் கவர் போன்றவைகளை வெளி நிறுவனங்களுக்கு தேவையான மாதிரிகளை கொடுத்து தயார் செய்து தரச் சொல்லுவார்கள். அதே போல் தான் ஸ்ரீபெரும்பூதுருக்கு அடுத்துள்ள நோக்கியாவின் சிறப்பு பொருளாதர மண்டலத்திற்குள் இருக்கும் நிறுவனங்களூம். பாக்ஸ்கானில் இருந்து அனைத்து நிறுவனங்களூம் நோக்கியாவிற்கு உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள். மொத்தமாக அந்த சிறப்பு பொருளாதர மண்டலம் நோக்கியாவும் அதன் துணை நிறுவனங்களுக்குமானது.
கடந்த சில மாதங்களாக இந்த சிறப்பு பொருளாதமண்டலத்திலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பார்க்கும் முன் சிறப்பு பொருளாதர மண்டலம் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். SEZ Special Economic Zone என்று அழைக்கப்படும் சிறப்பு பொருளாதர மண்டலத்தில் 100% தயாரித்த பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே ஆரம்பிக்கலாம். தயாரித்த பொருளை உள்நாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கான சுங்கதீர்வையை கட்டிவிட்டு விற்பனை செய்யலாம். ஆனால் இத்தகைய மண்டலங்களின் முக்கிய நோக்கம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதே. இதற்காக இந்த மண்டலங்களில் இருக்கும் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான கச்சாப்பொருட்களில் இருந்து அவர்கள் வாங்கி உபயோகிக்கும் கணிணி பொருட்கள் வரை எந்தவிதமான வரிகளும் கிடையாது.
இப்படி எந்தவிதமான வரியும் கட்டாமல் அவர்கள் தங்கள் உற்பத்தியை பல்மடங்காக பெருக்கிக்கொண்டு, அவர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய அரசு செய்து கொடுத்த ஒரு வசதியாகும். ஆனால் இவர்கள் அத்தனை வரிவிலக்குகளையும் பயன் படுத்திக் கொண்டு அவர்களின் நிகர இலாபத்தை தான் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே ஒழிய மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் செய்வதில்லை.
இவர்கள் வேலைவாய்ப்பு கொடுத்து இளைஞர்கள் அங்கு வேலைக்கு சென்றால், உயிருடன் திரும்பிவருவது கேள்விகுறியாகியுள்ளது. அதுவும் அதிக சம்பளம் எல்லாம் கொடுப்பதில்லை 3500 ரூபாயிலிருந்து 10,000ரூபாய் வரை தான் சம்பளமாக கொடுக்கிறார்கள். அந்த கிராமத்து இளைஞர்களுக்கு இது அதிகமான சம்பளமாக இருக்கலாம், மேலும் நோக்கியாவில் வேலைபார்க்கிறேன் என்று பெருமைக்கு எருமையை மேய்ப்பதாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் இந்த ஊதியம் எந்த விதத்திலும் சரிவிகிதம் கிடையாது, அந்த நிறுவனங்களின் நிகர லாபத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால். பூசணிக்காயை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுத்து சமைத்தபிறகு மிஞ்சும் புசணிவிதைகளையே இவர்களுக்கு சம்பளமாக கொடுக்கின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு போன்றவைகளுக்கு வேலைநிறுத்தம் செய்து இப்பொழுது தான் ஒய்ந்தனர். இவர்கள் தொழிலாற் சங்கம் அமைக்கவும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனைவரும் மிஞ்சிப்போனால் 19லிருந்து 23வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள்.
பள்ளி படிப்பு, பட்டய படிப்பு என்று முடித்த 19வயது இளைஞர்கள் தான் இவர்களின் குறிக்கோள். அவர்களை எடுத்து அடிமாட்டு சம்பளத்தில் வேலைக்கு வைத்து தின்று கொழுக்கின்றனர். அரசும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, ஒவ்வொரு பிரச்சனையின் போதும் காவல்துறையின் அடக்குமுறையில் அடிபட்டு ஒடுங்கி போய்விடுகிறார்கள் இங்கு வேலைபார்ப்பவர்கள். செய்தி நிறுவனங்களும் எந்த நடிகை யாருடன் இரவை கழித்தார் என வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் தான் குறியாக இருக்கின்றன. அப்படி இப்படி பட்ட நிறுவனங்களை பற்றி செய்திகளை வெளியிட்டால் விளம்பரம் கிடைக்காது. ஏன் அரசுக்கு எதிராகவே இதே விளம்பரங்களுக்காக தான் மண்டியிட்டு கிடக்கின்றன ஊடகங்கள். இப்படி பட்ட சமூக நோக்குள்ள மனிதாபிமான மற்ற முறையில் நடக்கும் கொள்ளைகளை எப்படி வெளிகொணரும்.
அனைத்துக்கும் அதிகமாக அம்பிகா அவர்களின் மரணம் இப்பொழுது நடந்தேறியுள்ளது. இதை அனைத்து ஊடகங்களும் எப்படி சொல்லுகிறது என்றால் "ரோபோ தாக்கி இளம் பெண் மரணம்", இந்த பொறுக்கிகளுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? எந்திரன் என்று ஒரு படம் வந்தது என்பதற்காக அதே போலா சொல்லுவது, ஒருவரின் மரணத்தைப்பற்றியும். இயந்திரத்தில் நிர்வாகத்தின் கவனக்குறைவால் அடிபட்டு இறந்தவரை இதைவிட கேவலமாக யாரும் சித்தரிக்க முடியாது.
பாக்ஸ்கானில் ஊழியர்கள் மயக்கமடைந்து விழுந்தனர் என்று செய்தி வந்தது அதற்கான காரணத்தை இன்று வரை யாரும் வெளியிடவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கிறேன் இந்தியாவின் நிகர உற்பத்தி திறனை அதிகரிக்கிறேன் என்று சொல்லி இங்கு பல இளைஞர்களின் வாழ்வு புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை, இதே பிரச்சனை நோக்கியாவின் சீன உற்பத்தி பிரிவில் நட்ந்து இருந்தால் இந்நேரம் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கும். இங்கு அனைவரும் சேர்ந்து இந்த பிரச்சனையை மூடிமறைக்க பார்க்கின்றார்களே தவிர. தரகட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பதற்கு யாரும் வழியுறுத்துவதாக தெரியவில்லை அதை செய்தாலாவது இன்னுமொரு அப்பாவி ஊழியரின் உயிர் போவதை தடுத்து நிறுத்தலாம். அப்படி தரகட்டுபாடுகளை கடைபிடிக்கபடவில்லை என்றால் அந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கையாவது எடுக்கவேண்டும்.
ஆனால் யாரும் இதை செய்யமாட்டார்கள் வேண்டுமென்றால் இன்னும் பிரச்சனை பெரிதாகி பல உயிர்கள் போனபின் ஸ்டிபன் எலோப்புக்கு இரத்தினகம்பளவ்ம் விரித்து வரவேற்று செத்து போனவர்களின் பிணத்தை காட்டி பேரம் பேசி விரித்த இரத்தினக்கம்பளத்திலேயே திரும்பவும் நடக்க வைத்து விமானம் ஏற்றி அனுப்பி வைப்பார்கள்.