19 வயது தனது பதின்ம வயதின் இறுதி கால கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இளம் வாலிபன். இன்று 20 வருடங்களாக தனிமைச் சிறையில். இவர் செய்த குற்றம் என்ன?? கொலை செய்ய உதவியாக இருந்தார், என்று அரசு தரப்பு வாதிட்டு இவருக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. அப்படி என்ன உதவி செய்தார் என்றால் பேட்டரி செல் வாங்கி கொடுத்தாராம், குற்றம் செய்தவரை விட குற்றம் செய்ய தூண்டியவருக்குத் தான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற நாட்டில் குற்றம் செய்வதற்கு உடந்தையாக பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பதற்காக மரண தண்டனை. பேட்டரி வாங்கி கொடுத்தவருக்கு அதை எதற்கு பயன் படுத்தப் போகிறார்கள் என்பது தெரியுமா என்ற விசாரணை நடந்ததா எனபது தெரியவில்லை. ஒரு நண்பர் வீட்டுக்கு போகும் பொழுது அவர் வரும் பொழுது இதை வாங்கி வா அதை வாங்கி வா என்று சொன்னால் வாங்கி கொண்டு செல்வோம் அதைப் போல் பேரறிவாளன் ஒரு பேட்டரி வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் அது அவருக்கு பரிசாக மரணத்தை தண்டனையாக கொடுக்கும் என்பது இந்த இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
படிப்பை முடித்து திராவிடர் கழகத்தின் பெரியார் திடலில் விடுதலை இதழில் வேலைபார்த்துக் கொண்டு இருந்தவர் தான் இந்த பேரறிவாளன். இவர் ஒரு பகுத்தறிவு பாசறை குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆனால் இவருக்காக குரல் கொடுக்க சாதரண அறிவு படைத்தவர்கள் கூட யாரும் தயாரில்லை. இவரை பெரியார் திடலில் வைத்து இவரது பெற்றோர்கள் சிபிஐ வசம் ஜூன் மாதம் 11 தேதி இரவு 10.30 மணிக்கு ஒப்படைத்தனர். பெரியார் திடலில் அப்பொழுது கூடவே சிலரும் இருந்தனர். அதன் பிறகு இவரை விசாரணைக்கு என்று அழைத்து சென்றனர், மறுநாளே விசாரித்து விட்டு அனுப்பிவிடுவதாக கூறி. இவரை விசாரிக்க வேண்டிய அவசியம் என்னவென்றால், இவரின் சொந்த ஊர் ஜோலார்பேட்டை வேலூருக்கு அருகில், குற்றம் நடந்த ஊருக்கு அருகில் என்பதால் இங்கு இருக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்களை விசாரித்துள்ளனர். முக்கியமாக திரவிட கழகத் தொண்டர்களை, அப்பொழுது இவரின் வீட்டிற்கும் சென்றுள்ளனர். இவரின் தாய் தந்தை பேரறிவாளன் சென்னையில் பெரியார் திடலில் தங்கி விடுதலை பத்திரிக்கையில் வேலைபார்ப்பதை கூறி இருக்கின்றனர், அதன் பின்னரே ஒப்படைப்பு படலம் நடந்தேறியுள்ளது.
அப்படி பேரறிவாளனின் தாயும் தந்தையும் புலனாய்வுத் துறையிடம் தாங்களே ஒப்படைத்த பிறகு மல்லிகை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளன் வெளியுலகை இன்று வரை பார்க்க முடியவில்லை. இடையில் அவர் இந்த உலகை பார்த்த நேரங்கள் என்றால் ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்ட வர், திரும்பவும் வெளியுலகைப் பார்த்தது 19ம் தேதி ஜூன் மாதம், அதுவும் நீதிமன்றத்தில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு. அன்று இவரை கைது செய்ததாக புலனாய்வுத்துறை குறிப்பிட்ட தேதி 18ம் தேதி ஜூன் மாதம் என்று சொல்லி ஒருமாதம் காவலில் வைத்திருக்க உத்தரவு பெற்றனர். ஆனால் பேரறிவாளனை அவரது தாய் தந்தை இருவரும் ஜூன் 11ம் தேதியே சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளனர், நடுவில் இருந்த 8 நாட்கள் இவர் எங்கு வாழ்ந்தார் என்பது வெளியுலகிற்கு மறைக்கப்பட்டது. ஒரு குற்றவாளியை கைது செய்து 24மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவேண்டும் என்பது சட்டவிதி. அதையெல்லாம் மீறி 8 நாட்கள் சட்டவிதிமுறைகளை மீறி முறையற்ற காவலில் வைத்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் காவலில் வைத்து விசாரிக்க கொடுத்த அனுமதியின் கீழாக ஜூலைமாதம் 18ம் தேதிவரை திரும்பவும் மல்லிகை கட்டிடமே இவருக்கு விதியாகிப்போனது.
சட்டவிரோத காவல் என்பது மனித உரிமையின் கீழ் மட்டுமல்ல எந்த உரிமையின் கீழாகவும் அனுமதிக்கப் படக்கூடாத ஒன்று. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி இராகோத்மன் வாக்குமூலத்தின் படி இவர் கைது செய்யப்பட்டது 19-6-1991 அன்று காலை பெரியார் திடல் அருகில் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய வாக்குமூலத்திலேயே இன்னொரு இடத்தில் 11.6.1991 அன்று ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் வீட்டில் எட்டுபொருட்களை கைபற்றியதாக குறிப்பிடுகிறார். மேலும் பேரறிவாளன் கொடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தில் 18ம் தேதி கைது செய்த்தாக கூறப்பட்டுள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கைது செய்யப்பட்ட தேதி யாருக்கு சரியாக தெரியும் என்பதே தெரியவில்லை.
இந்த கேள்விக்கு விடையை சட்டத்தின் கீழாக யார் தருவார்கள்..
பேரறிவாளன் கைது செய்யப்பட்டது
11ம் தேதியா??
18ம் தேதியா???
இல்லை 19ம் தேதியா????
ஆனால் 13.6.1991 அன்று மாற்றுடையுடன் வந்த பேரறிவாளன் தாயாரை அவரின் மகனை சந்திக்க மறுப்பு தெரிவித்து ஆடைகளை மற்றும் பெற்றுக்கொண்டதையும் யாரும் மறுக்கவில்லை. (மல்லிகை பதிவேட்டை தேடித் தான் பார்க்கவேண்டும், இந்நேரம் அதையும் தொலைத்து இருப்பார்கள், மக்களை பாதுகாக்கும் பணியில் அல்லும் பகலும் ஒழைப்பதால், ஆவணங்களை பாதுகாக்கும் பணியை பார்ப்பது இல்லை நமது அரசாங்கமும் காவல் துறையும்)
சரி நமக்கு எழும் இயல்பான கேள்வி, 18ம் தேதி காலையில் கைது செய்யப்பட போகிறவருக்கு 13ம் தேதி மாற்றுடை எதற்கு பெற்றுக் கொண்டனர் என்பது தான்? ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். 11ம் தேதியில் இருந்து 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் வரை 8 நாட்கள் என்ன நடந்தது பேரறிவாளன் தலைமறைவாக இருந்தாரா இல்லை செத்து அதற்கு பிறகு மறுபிறப்பு எடுத்து வந்தாரா என்று கேட்பதற்கு இங்கு யாருமே இல்லை.
நீதிபதிகள் விசாரணை அறிக்கையை முழுமையாக படித்து தான் எந்த தீர்ப்பும் வழங்குகிறார்கள், இது தான் நமது எண்ணம். இந்த வழக்கின் தீர்ப்பில் தண்டனை கொடுக்கப்பட்ட யாரும் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் இல்லை என்று அனைத்து நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் இவர்களை கைது செய்தது தடாசட்டத்தின் கீழ், வாக்குமூலம் பெறப்பட்ட பொழுது இவர்கள் தடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தனர். தடாசட்டத்தின் கீழ் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்ற பொழுது அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் வாங்கிய வாக்குமூலம் எப்படி செல்லுபடியாகுமா? இதை தீர்ப்பு வழங்கிய நீதிபதியும் கவனித்ததாக தெரியவில்லை வேறு யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, எனென்றால் தடா சட்டத்தின் கீழாக ஒரு எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முன்னால் வாக்குமூலம் கொடுத்தாலே அதை ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள், ஆனால் குற்றவியல் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் முன்பு கொடுக்கப்படும் எந்த வாக்குமூலமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இங்கே தடாசட்டத்தின் கீழ் காவல் துறையினர் முன்பு வாங்கிய வாக்குமூலங்களை வைத்தே தீர்ப்பு வழங்கபப்ட்டுள்ளது.
சரி திரும்பவும் விசாரணை கால கட்டத்துக்கே வருவோம். இந்த நீதிமன்றம் அனுமதித்த ஒருமாத விசாரணை காலம் என்பது, எப்பொழுது என்பது எல்லாம் நேரம் காலம் பார்ப்பது இல்லை நடு இரவில் கூட எழுப்பி விசாரணை நடக்கும். நமது லோக்கல் காவல் நிலையத்தில் கூட எந்தவிதமான குற்றத்துக்காகவும் போய் பழக்கம் இல்லாத ஒரு இளைஞன் ஒரு மாதம் சிபிஐயின் பிடியில் அடி உதை கொடுக்கப்பட்டது என்று சொன்னாலும் வெளியில் இல்லை என்று மருத்துவ சான்றிதழை கொடுப்பார்கள் நம்ம ஊர் உள்ளூர் காவல்துறையே, இவர் அடைபட்டிருப்பதோ தேசத்தின் மிகப்பெரிய ஒரு புலனாய்வு நிறுவனத்தின் பிடியில். இவர் சித்திரவதை செய்யப்பட்டதை வெளியில் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஒருமாதம் மல்லிகை மனத்தை சுவாசித்து மல்லிகைபூ என்றாலே வெறுப்போடு பார்க்கும் அளவுக்கு சென்று விட்டிருப்பார் பேரறிவாளன், திரும்பவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு குற்றப்பத்திரிக்கை நகல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது, அதன் படி இவர் திரும்பவும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார், வாக்குமூலங்கள் துன்புறுத்தி கையெழுத்து பெறப்பட்டன அவற்றை ஏற்க கூடாது என்று. அந்த மனுவும் கு.ப. மனு எண். 582/92 என்று தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் மகுடம் சூடியது போல் நீதிபதி வாத்வா அவர்களின் தீர்ப்பில் பக்கம் 87ல் குறிப்பிட்டுள்ளார்.
“ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”
இரண்டு முறை மனு அளிக்கப்பட்டு விசாரணையும் மேற்கொண்ட பிறகும் குற்றவாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாரும் தாங்கள் கொடுத்த வாக்குமூலத்தை மறுக்கவில்லை அதை எதிர்த்து எந்த விதமான முறையீடும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் ஒரு உச்சநீதிமன்ற நீதியரசர். வாழ்க நீதி.
வாக்குமூலத்தில் உள்ள குற்றங்கள் ஒன்றா இரண்டா அடுக்கி கொண்டே போகலாம். குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் இரண்டுமாதங்கள் மூன்று மாதங்கள் என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரின் வாக்குமூலமும் ஒரே நாளில் 15.8.1991 அன்று பெறப்பட்டுள்ளது. அதாவது போலீஸ் காவல் முடியப்போகும் ஒரு நாள் முன்பு, இது எப்படி சாத்தியமாகும், அனைத்து குற்றவாளிகளுக்கும் அன்று தீடிரென்று ஞானம் பிறந்துவிட்டதா, அப்படி பிறந்த ஞானத்தின் கீழாக அனைவரும் ஒரே நாளில் ஒப்புக் கொண்டார்களா? அப்படி ஞானம் பிறக்க காவலின் கீழ் வைத்து விசாரணையில் தியான வகுப்பு எதுவும் நடத்தினார்களா என்ன காவல் துறையினர்.
ஏன் இன்றுவரை இடுப்பு பெல்ட் வெடிகுண்டை தாயாரித்து கொடுத்தவர் யார் என்பதை இந்த வழக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறது சிபிஐ தரப்பு, ஆனால் அதை வெடிக்க செய்வதற்கான பேட்டரியை பேரறிவாளன் வாங்கி கொடுத்தாராம். பேரறிவாளன் வாக்குமூலத்தின் படி இரண்டு பேட்டரிகளையும் சிவராஜன் வெடிகுண்டை வெடிக்க பயன்படுத்தியதாக உள்ளது.
இதிலும் மாறு படுகிறது அரசு சாட்சிகள் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டில் ஒரு பேட்டரி பொருத்தியிருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் சிபிஐ தரப்போ இரண்டு பேட்டரி பொறுத்தப்பட்டது என்கிறார்கள், அதை பேரறிவாளன் வாங்கி கொடுத்தார் என்கிறார்கள். பேரறிவாளன் வாக்குமூலத்தின் படி மே மாதம் முதல்வாரம் பேட்டரி வாங்கியதாக சொல்லி இருக்கிறார். பேட்டரி கடைக்காரர் மொய்தீன்(சாட்சி 91) மே இரண்டாம் வாரம் வாங்கியதாக கூறுகிறார்.
ஹரிபாபு என்ற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படமே முக்கிய சாட்சி அவருக்கு அந்த பிலிம் சுருள் வாங்கி கொடுத்ததாகவும் பேரறிவாளன் மீது குற்றசாட்டு, ஆனால் பாக்கியநாதன் என்பவரும் வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இராமமூர்த்தி (சாட்சி எண் 72) என்பவரின் சாட்சி படி சுபா சுந்தரம் வாங்கி கொடுத்ததாக இருக்கிறது, ஆனால் பிலிம் வாங்கி கொடுத்த குற்றம் பேரறிவாளன் மேல் கடைசியாக சொல்லப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு இரண்டு சகோதரிகள் மூத்த சகோதரிக்கு 1.9.1991 திருமணம் நடைபெற்றது வீட்டிற்கு ஒரே பையனான இவர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை நீதிமன்றத்தில் எவ்வளவோ போராடிய பின்னரும். இவரின் மற்றொருமொரு சகோதரி இவருக்கு இளையவர், அந்த இளைய சகோதரி இவரின் விடுதலைக்காக திருமணம் செய்துகொள்ளாமல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார், அதன் பிறகு சகோதரனின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணம் செய்து கொண்டாராம். எப்பொழுது விடியும் இவர்கள் சுதந்திரதாகம், 10ம் தேதி ஜூன்மாதம் வீட்டில் வந்து காவல்துறை விசாரித்ததால் 11ம் தேதி இவர்கள் பெற்றோர்களே முன் வந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு நியாம் கிடைக்கும் என்று ஏங்கி கிடக்கும் இந்த பெற்றோரின் நிலமை இனி யாருக்கும் வரவேண்டாம்...
தகவல்கள் சேகரிக்கப்பட்டது இரு கடிதங்கள்,
2007ல் எழுதப்பட்ட கடிதம்
2008ல் எழுதப்பட்ட கடிதம்
மற்றும் கொலைவழக்கினைப் பற்றிய செய்திகள்,
உச்சநீதிமன்ற தீர்ப்பு.
thappu seyyamala intha naayai police pidithullathu. Naatharingala arasukku othuzhaippu kodungada.
ReplyDeleteபெயரைக்கூட வெளியில் சொல்ல தைரியம் இல்லாதவர்கள். மற்றவர்களை விளிக்கும் வார்த்தையில் மட்டும் வீரம் புகுந்து விளையாடும்..
ReplyDeleteபெல்ட் வெடிகுண்டை தயாரித்தவர் யார் என்பது தெரியவில்லை எனும் பொழுது அதற்கு பேட்டரி வாங்கி கொடுத்தது மட்டும் இவர் என்று எப்படி சொல்லுகிறார்கள்.
திரும்பவும் வேண்டுமென்றால் படித்து பார்க்கவும் அத்தனை விவரங்களையும்..
சரியே
Delete