Saturday, November 10, 2012

க்யூ பிராஞ்ச் வயிறு வளர்க்க


தமிழ்நாட்டின் காவல்துறையின் ஓர் அங்கமாக இயங்கி வருவது க்யூ ப்ராஞ்ச், இவர்கள் வைத்தது தான் சட்டம் என்று சென்று கொண்டிருக்கிறது நமது நிலை. சமீப காலமாக பலரை கைது செய்கிறார்கள் பல காரணங்களை சொல்லி, நேற்று கூட ஒரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு ஆவணப்பட இயக்குனரை கைது செய்யப்பட்டதாக தகவல் வந்தது. இவர்கள் கைது செய்பவர்களை நக்சலைட் இந்தியாவுக்கு எதிராக சதி செய்தார்கள் என்று காரணம் சொல்லி தான் கைது செய்வது இவர்களின் வாடிக்கை. ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் சட்டபூர்வமாக பல வழிமுறைகள் உண்டு ஆனால் அவற்றை எல்லாம் கடந்து தங்கள் விருப்பபடி இவர்கள் யாரை வேண்டும் என்றாலும் கைது செய்வார்கள் இவர்களுக்கு இந்த உரிமை எப்படி வந்தது.

1973ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் தான் முதன் முதலில் இந்த பிரிவு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது, காரணம் நக்சல் பாரி இயக்கங்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இயக்கங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் க்யூ பிராஞ்ச். இது தனது முழு செயல்பாட்டை எம்.ஜி.ஆரின் ஆட்சிகாலத்தில் தமிழகத்தில் காட்டி பலரை ஒழித்துக் கட்டியது. மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்கவே உருவாக்கப்பட்ட பிரிவு தான் இது. ஆனால் இதே போன்ற ஒரு பிரிவு சட்டவிரோதமாக ரவுடிதனம் பண்ணும் சிலருக்கு எதிராக பயன்படுத்தியிருந்தால் இன்று அமைச்சர்களாக இருந்த இருக்கும் பலர் அமைச்சர்கள் ஆகாமல் என்றோ சவக்குழிக்குள் சென்றிருப்பார்கள். மக்களை மிரட்டி கொள்ளை அடிப்பவர்களுக்கு எதிராக இப் பிரிவு உருவாக்கப்படாமல் மக்களுக்கு ஆதரவாக போராடும் தோழர்களை ஒடுக்கும் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

70கள் 80களில் நக்சல் பாரி இயக்கங்கள் தமிழகத்தில் இருந்தன அதனால் இந்த பிரிவின் தேவை இருந்தது ஆனால் அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் படியான  இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை. மக்கள் அரசின் எந்த விதமான மக்கள் விரோத திட்டங்களையும் புரிந்து கொள்ளாமல் அதன் கீழாக வாழப் பழகிவிட்டனர், இந்த பிரிவு தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது ஆனால் அதன் பிறகு இந்த பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு என்று தனியாக அரசில் இருந்து பணம் ஒதுக்கப்படும் மேலும் எல்லையற்ற அதிகாராங்களும் இருந்தது இதை இழக்க விரும்பாத இவர்கள் 1991க்கு பிறகு ஈழத்தமிழர்களின் பெயரை சொல்லி பிழைக்க ஆரம்பித்தனர். ஆமாம் அவர்கள் இங்கு தீவிரவாதத்தை உருவாக்குகிறார்கள், ஆயுத கலாச்சாரத்தை உருவாக்குகிறார்கள் என்று கதை கட்டி தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொண்டனர்.



நமக்கு அனைவருக்கும் தெரியும் தங்களின் தேசிய விடுதலைகாக போராடிய தோழர்கள் அதற்கான பணத்தேவைகளை நிறைவு செய்துகொள்ளவே நிறைய சிரமப்பட்டார்கள் அவர்கள் பணம் செலவழித்து தமிழகத்தில் ஒரு போராட்டத்தை வளர்க்கும் நிலையில் இல்லை. ஆனால் அவர்கள் எதோ பெரும் பணக்காரர்கள் போலவும் அவர்கள் இங்கு ஒரு ஆயுதப்போராட்டத்தை ஊக்குவிக்க முயன்றனர் என்று சொல்லி க்யூ ப்ராஞ்ச் என்று பிரிவு தனது இயக்கத்தை தக்க வைத்துக் கொண்டது. ஒரு ஆயுதப்போராட்டத்தை ஒரு நாடே உருவாக்க முடியும் 1980களில் ஈழத்தில் ஆயுதப்போராட்டதை இந்தியா ஊக்குவித்தது போல்,  அமெரிக்கா பின்லேடனை தனது தேவைகாக ஆதரித்து ஊக்குவித்து விட்டு பின்னர் அவர் தங்களுக்கு எதிராக திரும்பியபொழுது அழித்தது. இவ்வாறு ஒரு நாடு தான் அடுத்த நாட்டில் ஆயுதப்போராட்டத்தை ஊக்குவிக்க முடியும். ஆனால் தமிழகத்தில் ஆயுதபோராட்டத்தை தனது தேசத்தின் விடுதலைகாக போராடிய விடுதலை போராளிகள் ஊக்குவித்ததாக சொல்லி தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது க்யூ ப்ராஞ்ச்.

இப்பொழுது 2009க்கு பிறகு அந்த பிரச்சனையும் இல்லை என்று ஆன பிறகு இந்த க்யூ ப்ராஞ்ச் தொடருவதற்காக உருவாக்கப்பட்டதே ஈழ அகதிகள் சிறப்பு முகாம். இவர்கள் மேல் பதியப்படும் வழக்குகள் ஒன்றுக்கும் உதவாத விசா, பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பது. உலகில் இல்லாத எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை இது அகதியாக அதாவது தனது சொந்த நாட்டில் வாழ வழி இல்லை என்று அரசியல் தஞ்சம் கேட்டு வருபவர்களிடம் ஆவணங்களுடன் வரவேண்டும் என்று கேட்கும் கொடுமை. எந்த அரசு தன்னை அழிக்க முயல்கிறதோ அந்த அரசிடம் அனுமதி பெற்று வரவேண்டும் என்று சொல்கிறது இந்த க்யூ ப்ராஞ்ச் நீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்தாலும் இவர்கள் மீது வேறு வழக்குகள் பதிவு செய்து திரும்பவும் இந்த சிறப்பு சிறைகளிலேயே வைக்கின்றனர். இதை தவிர நமது ஊரில் பலருக்கு போடப்படும் பொய் வழக்கான கஞ்சா கடத்தினார்கள் என்ற வழக்கும் போடப்பட்டுள்ளது, ஏன் உயிர்காக்கும் மருந்துகளை கடத்தினார்கள் என்று கூட வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஒரு தோழர் 2010ம் ஆண்டு ஈழத்திலிருந்து தமிழகம் வருகிறார் அவரை கைது செய்து ஆவணங்கள் இல்லாமல் வந்தார் என்று இந்த சிறப்பு சித்திரவதை முகாமுக்கு அனுப்புகிறார்கள். வழக்கு நடக்கிறது வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராது என்பதை உணர்ந்து கேரளாவில் ஆஸ்த்ரேலியாவுக்கு செல்ல முயன்ற பொழுது பிடிக்கப்பட்ட அகதிகளுடன் கொண்டு சேர்த்து கேரளாவில் போலிஸிடம் ஒப்படைக்கிறார்கள், அங்கும் நீதிமன்றத்தில் எதிராக தீர்ப்பு வந்தபின் விடுதலை செய்யபப்ட்டவரை சிறை வாசலில் திரும்பவும் கைது செய்து கொண்டு வந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கிறார்கள். இப்படி சட்டபூர்வமில்லாத கட்டுபாட்டில் சிறப்பு முகாமில் வைக்கிறார்கள். இந்த சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு என்று தனியாக இவர்களுக்கு நிதி ஆதராமும் கேட்டு அதை இவர்கள் உபயோகித்து வருகிறார்கள்.

தங்களுடைய எல்லையற்ற அதிகார போதைகாகவும், நிதி ஆதாரங்களில் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், மேலும் ஈழ விடுதலை போராட்ட வீரர்கள் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இந்தியாவில் தடை செய்வதற்கு வழிவகை செய்யவே இந்த சிறப்புமுகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பொழுது அரசு உத்தரவின்படி செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்கள் மூடப்பட்டு அவைகள் இரண்டையும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் மாற்றும் ஆணையையும் பெற்று விட்டார்கள். இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்பது ஒன்று தான் க்யூ ப்ராஞ்ச் எனும் அதிகாரிகள் தங்களின் பிழைப்பிற்காக ஈழத்தமிழ் அகதிகளை கொடுமைப்படுத்தி தங்களின் வயிற்றை வளர்ப்பது தான்.


No comments:

Post a Comment