சாகித் உத்தம் சிங் இந்த பெயரை கேட்டால் யார் அது நம்ம ஹிந்திபட கதாநாயகன் சாகித்தா என்று தான் கேட்போம். ஆனால் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னுமொரு தியாகி என்றே சொல்லலாம்.
உத்தம் சிங் 1899ல் பஞ்சாப்பில் உள்ள ஒரு சுனம் எனும் கிராமத்தில் தலால் சிங்க்குக்கு மகனாக பிறந்தார். தலால் இரயில்வே கேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தந்தை வைத்த பெயர் சேர் சிங். சேர் என்றால் இந்தியில் சிங்கம் என்று அர்த்தம், அவர் அப்பாவிற்கு தன் மகன் பிறந்தபொழுதே தெரிந்துவிட்டது இவன் பெரிய ஆளாக வருவான் என்று. ஆனால் சேர் சிங் இரண்டு வயதில் தன் தாயை இழந்தார், 8 வயதில் தந்தையையும் இழந்து. அமிர்த்சரில் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தார். அனாதை விடுதியில் இவரது பெயரை உத்தம் சிங் என்று மாற்றினார்கள். இவரது அண்ணனும் 1917ல் இறந்துவிட்டார் இவருக்கு 18 வயதாகும் பொழுதே. அதன் பிறகு இந்த இந்திய நாடே இவருக்கு இருந்த ஒரே சொந்தமாகி போனது. அதன் பிறகு தனது சொந்தமான இந்தியாவுக்காக வாழ்ந்தார் உத்தம் சிங். 1919ல் தனது பள்ளி படிப்பை முடித்து அனாதை விடுதியில் இருந்து வெளியில் வந்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.
ஆனால் அன்று அவர் தொடங்கிய வாழ்க்கை அந்த வருடம் ஏப்ரல் மாதம் வேறு வடிவம் எடுக்கும் என்பது அவருக்கு தெரியவில்லை. 1919ம் வருடம் ஏப்ரல் மாதம் 13ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கூட்டத்தில் 20000 அப்பாவி மக்களுக்கு வெயிலின் தாக்குதலை குறைக்க தண்ணீர் கொடுத்து கொண்டிருந்தார். மாலை 5.15 க்கு அனைத்தும் தலைகீழானது ஜெனரல் ரெஜினாலட் டயர் இவர்கள் அனைவரும் கூடியிருந்த மைதானத்திற்கு இருந்த ஒரே வழியினை அடைத்துக்கொண்டு வந்து நின்று. எந்தவித முன்னறிவுப்பும் இன்றி கூடியிருந்த 20000க்கும் அதிகமான மக்களின் மீது குண்டு மழை பொழிந்தான். இதுவே இந்திய சுதந்திர போராட்டத்தில் நாம் அனைவரும் படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை. இதில் தப்பி பிழைத்தவர் தான் இந்த உத்தம் சிங்.
இந்த படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் கணக்கு 379 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் 337 பேர் ஆண்கள், 41 சிறுவர்கள், ஒரு ஆறுவார கை குழந்தை என்றும் கணக்கு காட்டியது அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். குண்டுகளில் இருந்து தப்பிக்க மைதானத்தில் இருந்த கிணற்றில் குதித்தவர்களில் இறந்து போனவர்களின் உடல்களின் எண்ணிக்கையே 120யை தொட்டது. பிரிட்டிஷ் அரசாங்க கணக்கின் படி மொத்தம் 1500 குண்டுகள் சுடப்பட்டதாக சொல்கிறது.
இந்த சம்பவத்தை பற்றி சொல்லும் பண்டிட் மதன் மோகன் மாலவிய, லாலா கிரிதரி லால் போன்றவர் சொல்லுவது 1000த்துக்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டனர் என்று. ஏன் அப்பொழுது அமிர்த்சர் மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக இருந்த மருத்துவர் ஸ்மித் சொல்லுவது இவர்கள் சொல்லுவதை விட அதிகம். 1800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்கிறார். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் இதில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியவில்லை அதனால் மேலும் உயிர் சேதம் அதிகமானதாக சொல்லுகிறார்கள். இன்று வரை ஜாலியன் வாலாபாக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கையோ இல்லை காயம்பட்டவர்களின் எண்ணிக்கையோ முழுமையாக தெரியவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஒருவர் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை நிருபித்தவர்தான் இந்த உத்தம் சிங்.
1919ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பலிவாங்குவது என்று முடிவெடுத்திருக்கிறார் உத்தம் சிங். இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெனரல் டயர் இங்கிலாந்து திரும்பினார் அவருக்கு ஒரு மணிபர்ஸில் 26000 ஸ்டெர்லிங்க் பரிசாக கொடுக்கப்பட்டது. அப்பொழுது பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக இருந்தவர் மைக்கேல் டயர் இவர் ஜெனரல் ரெஜினாலட் டயரின் நடவடிக்கையை ஆதரித்தவர் மேலும் இவரும் சேர்ந்து தான் இந்த படுகொலைக்கு திட்டம் தீட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இருவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர் பழிவாங்க முடிவெடுத்த உத்தம் சிங் தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் இறங்கினார்.
1920ல் நைரோபி சென்றார் அங்கிருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்து முடியாமல் 1921ல் இந்தியா திரும்பினார். அதன்பிறகு இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராட தொடங்கினார் 1924ல் அமெரிக்கா சென்று மூன்று வருடங்கள் அங்கிருந்து புரட்சிக்கு வித்திட்டார். 1927 ஜூலை மாதம் மேலும் 25 பேர்களுடன் இந்தியா திரும்பினார், அப்பொழுது அமெரிக்காவில் இருந்து ரிவால்வார்களும் குண்டுகளும் பெருமளவு வாங்கி வந்துள்ளார். 1927 ஆகஸ்ட் மாதம் ஆயுதங்களுடன் பிரிட்டிஸ் அரசிடம் மாட்டி சிறைச்சாலை சென்றார். இவருக்கு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைசாலையில் இருந்தார்.
1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பொழுது இவரும் அதே சிறைச்சாலையில் தான் இருந்து இருக்கிறார். சிறை தண்டனைக்கு பிறகு வெளியில் வந்து விளம்பர பலகை வரைபவராக வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் இவரை பிரிட்டிஷ் காவல்துறை கண்காணித்துக்கொண்டே இருந்தது 1933ல் அனைவரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு காஷ்மீர் வழியாக இத்தாலி சென்று அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்துவிட்டு 1934ல் இலண்டன் சென்றடைந்தார். இதனிடையில் 1927ல் ரெஜினால்ட் டயர் மரணமடைந்துவிட்டார். ஆனால் மைக்கல் டயரை விடுவதில்லை என்ற ஒரே குறிக்கோளுடன் இலண்டன் அடைந்த உத்தம் சிங் காலம் கனிவதற்காக காத்திருந்தார்.
அந்த நாளும் வந்தது மார்ச் 13ம் தேதி 1940 இலண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இஸ்ட் இந்தியா கம்பெனியும் ராயல் சென்ட்ரல் ஆசியாவும் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் முடிந்த பிறகு அங்கு பேச வந்திருந்த மைக்கேல் டயரை சுட்டு கொன்றார். மேலும் அப்பொழுது இந்தியாவிற்கான ஸ்டேட் செகரட்டரியாக இருந்த லார்ட் ஜெட்லான்ட்டையும் சுட்டார். ஜெட்லான்ட் காயத்துடன் தப்பிவிட்டார் உத்தம் சிங் சுட்டுவிட்டு தப்பிக்க முயற்சிக்காமல் அங்கேயே நின்றார். காவலர்கள் வந்து அவரை பிடித்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு வந்த பொழுது உத்தம் சிங் நான் செய்த செயலுக்காக வருத்தப்படவில்லை, மேலும் இந்த தண்டனை மைக்கேல் டயருக்கு கொடுக்க படவேண்டியதே என்று தெரிவித்தார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு ஜூலை மாதம் 31ம் தேதி 1940ல் துக்கிலடப்பட்டு இலண்டனிலேயே கொல்லப்பட்டார்.
மைக்கேல் டயர் கொலை செய்யப்பட்டது இந்தியாவிலும் அரசியல்வாதிகளால் விவாதிக்கப்பட்டது காந்தி முதற்கொண்டு அனைவரும் இதற்கு கண்டணம் தெரிவித்தனர் 1940ல். நேரும் அதே சமயத்தில் இந்த சம்பவத்திற்கு மைக்கேல் டயர் கொல்லப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் என்றார். ஆனால் அவரே 1962ல் இவரே முழுவதுமாக மாறி சொன்னார் அதுவும் சிறந்த சுதந்திர போராட்ட வீரகள் பகத்சிங், ராஜ்குரு போன்றவர்களுக்கு வழங்கப்படும் பட்டமான சாகித் என்ற பட்டத்தை வழங்கி. சாகித் உத்தம் சிங்கின் எதிரியின் மூக்கின் கீழ் சென்று நடத்திய போராட்டமே இந்தியாவின் விடுதலைக்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும் என்றார்.
இத்துடன் முடிந்துவிடவில்லை 1940ல் தூக்கிலடபட்டு இலண்டனில் புதைக்கப்பட்ட சாகித் உத்தம்சிங்கின் உடல் 1974 பஞ்சாபை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் முயற்சியாலும் இந்திய அரசின் முயற்சியாலும் இந்தியா கொண்டு வந்து சேர்க்கப்பட்டது அப்பொழுது அந்த மாவீரனின் உடலை வரவேற்க அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சங்கர் தயாள் சர்மா, அப்போதைய பஞ்சாப் மாநில முதல்வர் ஜெயில் சிங் (இருவரும் பின்னாளில் ஜனதிபதியாக பதவி வகித்தார்கள்) அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியும் விமானநிலையம் வந்து வரவேற்றார்கள்.
சாகித் உத்தம் சிங் ஜாலியன் வாலாபாக்கில் தனது மக்களை சுட்டு கொன்ற ஜெனரல் டயர் எந்தளவுக்கு எதிரியோ அதே போல் அன்று கவர்னராக இருந்த மைக்கேல் டயரும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பொறுப்பு என்றே நினைத்தார். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்பது தமிழில் நாம் அறிந்த ஓர் பழமொழி அதையே சாகித் உத்தம் சிங் செய்தார். அதாவது அம்பான ஜெனரல் டயர் கொல்லப்படுவது எவ்வளவு முக்கியமோ அதற்கு காரணமான கவர்னர் மைக்கேல் டயருக்கு தண்டனை கொடுப்பதே அதைவிட முக்கியம் என்று முடிவெடுத்தார் அவரை முடிக்கும் வரை தொடர்ந்து போராடி வெற்றியும் கண்டார்.
இப்படி தன் நாட்டில் செய்யப்பட்ட படுகொலைக்காக மற்றொரு நாட்டுக்கு சென்று காரணமான கவர்னரை சுட்டு கொன்றவருக்கு மரியாதை கொடுத்தது தான் இந்திய இறையாண்மை.. ஒருவனின் மரணத்திற்காக ஒரு இனமே அழிக்கப்படுகிறது வாழ்க பொந்திய பொறையாண்மை..
No comments:
Post a Comment