Sunday, December 22, 2013

சூனா பானா வீணா போனவரின் மடலுக்கு பதில்...



சூனா பானா வீணா போனவர் அப்பா மணியரசனுக்கு மடல் எழுதியுள்ளார் பொதுவெளியில், அதற்கான பதிலை கொடுக்க தகுதியானவர் அப்பா மணியரசன் தான் ஆனால் எனக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றுகிறது காரணம்.. நான் கேட்கும் சுதந்திர போராட்டத்தை பேசும் அதாவது தமிழ் நாட்டின் சுதந்திர போராட்டத்தை பற்றி மட்டும் பேசுபவர் அதற்காக உழைப்பவர் எத்தனை பேர் தன் பின்னால் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் எத்தனை பேரை தன் பின்னால் கொண்டு வந்து தமிழ்நாட்டின் சுதந்திரபோராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று போராடி வருபவர் என்பதால்...

சூனா பானா வீணாவின் கட்டுரையை படியுங்கள் முதலில்...
http://subavee.com

சூனா பானா வீணா போனவர் எழுப்பிய ஏழு கேள்விகளுள் ஏழாவது கேள்விக்கு நான் பதில் அளித்துவிட்டேன்.. எனது முதல் பத்தியிலேயே அதாவது என்னால் சுதந்திர போராட்டத்தை பற்றி பேச முடியாது என்னுடன் இருப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தனது ஆற்றாமையை ஒத்துக் கொண்டதாக தோணலாம் சூனா பானாவின் பதில் ஆனால் அது அல்ல பதில் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று தொடங்கியது என்ற வரலாறு தெரியாமல் அது மிகப்பெரும் கூட்டமாக மாறிய பிறகு நடந்த போராட்டங்களை வைத்தே இந்திய சுதந்திர போராட்டத்தை படித்து வந்த சூனா பானா வீணா போனவர் சுதந்திர போராட்டத்தின் விதை ஒட்டுமொத்த மக்களின் கூடலில் நிறைவடைகிறது ஆனால் தொடக்கம் கருத்தியல் என்பதை உணராதவராகவே தெரிகிறது..

சரி ஏழு கேள்வியில் கடைசிக் கேள்விக்கு பதில் அளித்தாகிவிட்டது மற்ற கேள்விகள் என்ன செய்வது. ஆமாம் அதுவும் முக்கியம் தான் அந்த கேள்விகளின் அடிப்படை முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றியே இருக்கிறது. முதலில் இவர் புரிந்து கொள்ள வேண்டியது முள்ளிவாய்க்கால் முற்றத்தை மக்களின் பார்வைக்காக திறந்தது ஒரு விழா அல்ல என் வீட்டில் ஈழவு விழுந்திருக்கிறது வாருங்கள் என்று சொன்ன கருமாதி பத்திரிக்கை. அதாவது சூனா பானா எதிர்பார்ப்பது என்னவென்றால் ஈழவு வீட்டிற்கு கருமாதி பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டும் என்பது.. அப்படி அழைக்காவிடில் அதில் அது குற்றம் இது குற்றம் என்று சொல்வது..

குற்றம் கண்டுபிடித்தே வாழும் இனத்திற்கு மாறாக இவர் செயல் பட முடியுமா என்ன அதை தொடரத்தானே வேண்டும்.. நான் இனம் என்று சொன்னது திருவிளையாடல் என்ற கட்டுக்கதையில் வந்த நக்கீரன் இனத்தைப் பற்றி. கட்டுகதைகளை நம்பி ஏமாந்து இன்று பகுத்தறிவாளனாக இருந்தாலும் மற்றொரு பகுத்தறிவாளருக்கு கட்டுகதையை தான் உதாரணமாக கொடுக்க வேண்டியதுள்ளது எனென்றால் சூனா பானா வீணாப்போனவர் அதற்கு தான் தகுதியாக இருக்கிறார். அதாவது ஈழவு வீட்டுக்கு அழைப்பு வேண்டும் போராட்டம் நடந்தால் அதற்கு வர அழைப்பு வேண்டும் என்ற நினைப்பின் கீழ். இப்படி அழைப்பு விட்டுத் தான் நீங்கள் தமிழின மீட்சிக்காக பாடுபடுவீர்கள் என்றால் போராளியாக அறிமுகப்படுத்திக் கொள்ளாதீர்கள், மிஞ்சிப்போன சொந்தமாக விலகி நில்லுங்கள்..

இழவு வீடு இழவு வீடு தான் அதற்கு அழைப்பு வைப்பது அனைவருக்கும் முடியாது, அழைக்காமல் வந்த ஆயிரக்கணக்கான சொந்தங்களுடன் கலந்து கொண்ட எம்மை போன்ற பொதுமக்களுக்கு அது போதுமானது..         

Thursday, December 12, 2013

சீக்கிய சகோதரர்களின் தளராத பதிலடி


உலகில் சிலர் மட்டும் தங்கள் தனி தன்மையை விட்டுக் கொடுத்தது இல்லை, தமிழ் மொழி பேசும் நாம் எங்கிருந்தாலும் நம் மொழியை நமது பண்பாட்டை விட்டுக்கொடுத்தது இல்லை. அதன் தனித் தன்மையுடனேயே இயங்கி வருகிறோம் அதே போல் தான் சீக்கிய சகோதரர்களும் அவர்களும் தங்கள் தனிதன்மையுடன் தொடர்ந்து வருபவர்கள் உலகின் எந்த மூளையில் இருந்தாலும். அவர்களின் மிகமுக்கியமான ஒரு இடம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் என்று நம்மால் பொதுவில் கூறப்படும் குருதுவாரா ஸ்ரீ ஹரிமிந்தர் சாகிப், எத்தனையோ மன்னர்கால படையெடுப்புகளையும், ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார தாக்குதலையும் தாண்டி இன்றும் உயர்ந்து நிற்கும் ஒரு கோயில் தான் பொற்கோயில்.


தங்களின் குருத்வாராவிற்கு எந்த ஆபத்து வந்தாலும் அதை சகித்துக் கொள்வதில்லை இவர்கள் இதை மதவெறியாக நமக்கு தெரிந்தாலும். சீக்கியர் எனும் இனமே ஒரு மதத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களையும் இந்துக்களாக மாற்றுவதற்கு பல்லாண்டு காலமாக முயற்சிகள் நடந்து கொண்டுள்ளது. ஆனால் இவர்களின் தனித்தன்மை என்றும் அந்த முயற்சிகளுக்கு பணிந்து போய்விடவில்லை.

1700களில் முகலாயர்களின் படையெடுப்புகளின் போது குருத்துவரா பெரிதும் தாக்குதலுக்கு உள்ளானது அப்படி ஒவ்வொரு முறை தாக்குதலுக்கு உள்ளன பொழுதெல்லாம் யார் தாக்குதல் நடத்தினார்களோ அவர்களை திரும்பவும் தாக்கி அழித்திருக்கின்றனர். 

தமிழர்களான நமக்கு எதிரான எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதற்கான ஜனநாயக எதிர்நிலையைக் கூட நாம் உடனடியாக காட்டுவதில்லை.. 

Wednesday, December 11, 2013

எது தமிழ்த் தேசியம்..



வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூன்றாவது நான்காவது சரத்துகள் சிலருக்காக.. 

(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.

(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதில் சொல்வது ஒன்று தான் தமிழீழத்தில் வாழும் மக்கள் சிங்கள அரசின் கீழ் வாழும் தமிழ் மக்களைப் போன்று இல்லாமல் எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது. அதாவது தமிழீழத்தில் காலம் காலமாக வாழும் சிங்களவர்கள் அவர்களின் முழு மொழி மற்றும் மத உரிமையுடன் வாழ வழி வகை செய்ய வேண்டும் என்பது. அதாவது தமிழீழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு என்ன உரிமை உண்டோ அத்தனையுடனும் சிங்களர்களுக்கும் வாழும் வகையை ஏற்படுத்திக் கொடுப்பது. 

இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழீழ சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. ஆனால் அந்த தமிழீழ சுதந்திரப் போராட்டம் நசுக்கப்பட்ட பொழுது அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் இப்பொழுது பேசுவது இனவாதமாக மாறிக் கொண்டுள்ளது. எப்படி சிங்கள பெளத்த பேரின வாதம் தமிழர்களை ஒடுக்கியதோ அதே போன்ற கருத்தியலாக்க்கங்கள் உருவாக்கப்பட்ட வருகிறது.  தமிழன் தான் தமிழனை ஆள வேண்டும் என்பது அல்ல தமிழ் தேசியம் தமிழ் தேசிய இனம் எப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளானதோ அந்த ஒடுக்குமுறைகளை உடைத்து எரிந்து மேல் வருவதும். ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் அந்த ஒடுக்கு முறையை உணர்ந்து மற்றவர்களையும் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்காமல் அமையும் இறையாண்மையே தமிழ்த் தேசியம். 

தமிழ்த் தேசியம் என்பதன் வரையறை திராவிடத்தை எதிர்ப்பதிலோ இந்தியத்தை எதிர்ப்பதிலோ இல்லை. தமிழ்த் தேசியத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்டமைகக்பட வேண்டும். அப்படி ஒரு அடிப்படை கட்டமைப்பு அதன் அடிப்படை கருத்தியலாக்கம் அனைவருக்குமான உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் அமையவேண்டும். அதைவிடுத்து ஆழ்ந்த கருத்தாலமில்லாத தமிழனை தமிழன் ஆண்டால் போதும் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற மேம்போக்கான கருத்தியலாக்கம், நம்மையும் ஒரு பேரினவாதியாக கொண்டு நிறுத்தும். 

தமிழனை தமிழன் பல்லாண்டுகாலமாக ஆண்டு வந்துள்ளான், கிமு கிபி என்று ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் ஆட்சியில் தான் ஆரிய கட்டமைப்பு நமக்குள் செலுத்தப்பட்டு சாதியமாகவும் பிரிந்து நிற்கிறோம். வலங்கை இடங்கை சாதி சண்டைகளே கிமுவில் தொடங்கி கிபி வரை நீண்டு இருந்திருக்கிறது. இது வரி வசூழிக்கும் வேலை செய்தவர்களுக்கும் வரி கொடுப்போருக்கும் இடையிலான சண்டை, பின்னர் ஆண்டான் அடிமை சண்டையாக பிற்காலத்தில் வடிவமெடுத்தது அதில் அடிமையாக இருந்த சாதிகள் எல்லாம் மேலே வந்தும் இருக்கின்றன ஆண்ட சாதிகள் எல்லாம் கீழேயும் தள்ளப்பட்டு இருக்கின்றன. இப்படி நம்மை ஒடுக்க நமக்குள் பிரிவினைகள் தோற்றுவித்து அதை வளர்த்தெடுத்த பொழுது ஆண்ட மன்னர்களும் தமிழர்களே. 

கருத்தியலாக்கம் என்பது காலத்திற்கும் நிற்கும் கருத்துகளின் அடிப்படையில் அமைய வேண்டியதுள்ளது அதைவிடுத்து முதலில் தமிழனை தமிழன் ஆள வேண்டும் அடுத்து அடுத்த படி என்று செல்வது அல்ல. முதலில் முடிவெடுக்க வேண்டியது தமிழ்த் தேசியத்தின் அடிப்படை வரையறைகள். இவைகள் இல்லாமல் அடுத்தப்படியை பற்றி நாம் யோசித்தாலும் அதை நம்பி நம்மோடு இருப்பவரே வரத் தயங்குவர். தமிழ் தேசியம் என்பது தமிழர்களுக்கான தேசியம் அதை ஆள்பவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் தமிழனாக இருப்பது மட்டுமே முக்கியம் இல்லை. ஒரு தமிழன் ஆள வேண்டும் என்பதற்கு தமிழர்கள் ஆளவேண்டும் என்பதற்கு பல்வகை வேறுபாடுகள் உண்டு,

ஹிட்லரைப் மனப்பாங்கை கொண்ட ஒரு தமிழனும் ஆள வரலாம் என்பது அல்ல தமிழ்த் தேசியம், தமிழர்களுக்கானது தமிழ்த் தேசியம். அதில் ஒடுக்கப்பட்ட தமிழன் மற்றவர்களை ஒடுக்குவது அல்ல தமிழ் தேசியம் அனைவருக்குமான தமிழகத்தை கட்டி அமைப்பதே தமிழ்த் தேசியம்.. இதற்கான வரையறையை ஈழத்தமிழர்கள் 1976ம் ஆண்டே நமக்கான வழி காட்டியாக அளித்து இருக்கின்றனர். இதை விடுத்து யார் தமிழன் யார் திராவிடன் என்று தேடி ஒதுக்குவது அல்ல தமிழ் தேசியம். இன்று திராவிட இயக்கம் தன்னுடைய மேலான பணியை செய்திருக்கிறது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் முன்பாகவே, இன்றைய திராவிட இயக்கத்தின் கட்சிகளாக அடையாளம் காணப்படுபவை சந்தர்ப்பவாத கட்சிகள் திராவிடத்தை தன் பெயரில் மட்டும் தாங்கி நிற்பவை.

மேலும் மிகவும் முக்கியமானது வர்ணபேதங்களினால் பிரிக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட மக்களை சரிநிகரில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய வரையறையும் இதில் வேண்டும். இவைகள் இல்லாமல் வெறும் தமிழன் தமிழனை ஆள வேண்டுமென்பதல்ல தமிழ்த் தேசியம் தமிழருக்காக அமைவதே தமிழ்த் தேசியம். இதைத் தான் சிங்களர்களுக்கும் முழு உரிமை கொடுத்து அமைந்தது வட்டுக்கோட்டை தீர்மானத்தில்... சிங்களவன் தமிழீழத்தை ஆளக்கூடாது என்று எங்குமே வரையறைக்கவில்லை வட்டுக்கோட்டை தீர்மானம். இதனடிப்படையிலேயே ஆயுதப் போராட்டம் தொடங்கியது தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டியது. சிங்களர்கள் பலரும் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவும் அளித்துள்ளனர் போராடவும் செய்துள்ளனர். இன்று இலங்கை நடத்தியது இனப்படுகொலை என்பதை வெளியுலகிற்கு தெரியவைத்துக் கொண்டிருப்பதும் சில சிங்களவர்களே..

தமிழ்த் தேசியத்தின் சண்டை நாம் போட வேண்டியது இந்திய தேசியம் என்ற இல்லாத ஒன்றை கட்டமைத்து அனைவரின் மனதிலும் வேருண்றி இருக்கும் கருத்தியலுடன் தானே ஒழிய, ஒன்றாக இருக்கும் சகோதர்களுடனானது இல்லை. இங்கு திராவிடத்தை பெயரில் மட்டும் தாங்கி நிற்கும் கட்சிகளில் சக தமிழனும் இருக்கிறான் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் பலநூற்றாண்டுகளாக நம்முடன் வாழ்ந்து தன் தாய்மொழியை எழுதப்படிக்க கூட தெரியாமல் இருப்பவர்களை நாம் வந்தேறிகள் என்று ஒதுக்கினால் உலகில் அனைத்து மூலைகளிலும் ஏன் தென்னிலங்கையில் தமிழகத்தில் இருந்து குடியமர்த்தப்பட்டு அந்த நாட்டின் வளத்திற்கு நூற்றாண்டுகளாக உழைத்த மலையகத் தமிழர்களையும் சேர்த்து அனைவரையும் அவர்கள் வந்தேறிகள் என்று சொல்வதை ஒத்துக் கொண்டு திரும்ப அழைத்து வரவேண்டும். இதற்கு நாம் தயராக இருக்கலாம் ஆனால் ஆண்டாண்டுகளாக தன்னுடைய இடம், மண் என்று பிறந்து வளர்ந்த அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

தமிழினம் என்பது மானுடத்தை மதிக்கும் இனமாக இருப்பது தான் தமிழுக்கான பெருமை... உலகிற்கு வாழக் கற்றுக் கொடுத்தவர்கள் இன்று தமிழர்கள் அவர்கள் வாழும் இடத்தில் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேசமாக உருவெடுப்பது தான் தமிழ்த் தேசியம் அதை செய்ய முன்னுதரணமாக தமிழகத்தில் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் சக மொழிபேசும் தமிழகத்தில் வாழ்பவர்களை தூற்றுவதல்ல தமிழ்த் தேசியம்.

முழுமையா வட்டுக்கோட்டை தீர்மனத்தை படிக்க கீழே இருக்கும் இணைப்பை உபயோகிக்கவும்...
http://www.tamilvalg.dk/tamil/?page_id=15


Sunday, November 17, 2013

இந்திய இராணுவம் இலங்கையின் அடியாள்..


இந்தியாவும் இலங்கையும் இனப்படுகொலை பங்காளிகள் என்பதை 2009ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால் இவர்களின் கூட்டு படுகொலைகள் 1971ம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆம் ஜனதா விமுக்தி பெரமுனா எனும் பொதுவுடமை அமைப்பு இலங்கையில் தோன்றி பொதுவுடமை தத்துவத்தை மக்களிடம் பரப்பி வெகு வேகமாக வளர்ந்த அமைப்பு. இந்த அமைப்பினர் தான் முதன் முதலில் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தவர்கள். அப்படி இவர்கள் 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென் இலங்கை பகுதியின் பெரும்பாலன இடங்களை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒரு மாபெரும் புரட்சியை நடத்தினார்கள். 


ஜெவிபி யை துவக்கியவர் விஜயவீரா இவர் முதலில் சிலோன் பொதுவுடமை கட்சியில் இருந்தார். ரஸ்யாவில் மருத்துவம் படிக்க ஸ்காலர்சீப் கிடைத்து சென்று படித்தார், ஆண்டு விடுமுறைக்கு இலங்கை வந்து திரும்ப முயன்ற பொழுது விசா மறுக்கப்பட்டது. இவரது சீன கம்யூனிச ஆதரவின் காரணமாக. படிப்பை தொடர முடியாது என்று தெரிந்த பிறகு புதிதாக் ஆரம்பிக்கப்பட்ட சிலோன் பொதுவுடமை கட்சி சண்முகநாதன் தலைமையில் தொடர்ந்து முழு நேரப் பணியாக தொடர்ந்தார். அதிலிருந்து வெளியேறியே ஜெவிபியை ஆரம்பித்தார். புரட்சிகர போராட்டங்களும் புரட்சியுமே இலக்கை அடைய உண்மையான சாதனங்கள் என்று பெரிதும் நம்பியவர். அதற்காக மக்களையும் தயார் படுத்தியவர் தான் விஜயவீரா...

1971ல் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 37 காவல் நிலையங்களை கைப்பற்றினர், ஜெவிபியினர் தென் இலங்கையில் ஒரு குறிப்பிடதக்க இடங்களில் மிகப்பெரும் புரட்சியை உருவாக்கி அரசிற்கு எதிராக மக்களை நிறுத்தியிருந்தனர். இந்த புரட்சியை ஒடுக்குவது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது, இலங்கையிட சொல்லி கொள்ளும் அளவிற்கு இராணுவ பலம் அப்போது இல்லை, காவல்துறையினர் தான் பெருமளவு இருந்தனர் இராணுவத்தை விட. அதனால் இந்தியாவின் உதவியை நாடினர், அணிசேரக் கொள்கையை தனது நாட்டின் கொள்கையாக கொண்ட இந்தியா இலங்கை இராணுவத்துடன் இணைந்து அவர்களின் நாட்டு மக்களை படுகொலை செய்ய துணை போனது. அரசு இந்த புரட்சியில் 5000 மக்கள் வரை கொல்லப்பட்டனர் என்று தகவல் சொல்கிறது. ஆனால் புரட்சி முடிந்து கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமே 15000க்கும் மேலானோர். கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45000ல் இருந்து 50000 இருக்கும் என்று கணக்கிடுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

1971ல் இந்திய இராணுவ உதவியுடன் ஜெவிபியை நசுக்கினார்கள் என்றும் புரட்சிகர கருத்தகளோ போராட்டங்களோ ஒய்வதில்லை என்பதற்கு சான்றாக மறுபடியும் புரட்சி தொடங்கியது 1980களில் 1987ம் ஆண்டு இந்தியாவை அமைதி படை என்ற பெயரில் கொண்டு வந்து ஈழவிடுதலைகாக போராடியவர்களுடன் சண்டையிடச் செய்துவிட்டு இலங்கை இராணுவம் திரும்பவும் ஜெவிபியினரை மிருக வேட்டையாடியது. 1971ல் இந்தியா இலங்கை ஒரு குழுவாக நின்று மக்களை படுகொலை செய்தனர், 1988 -89 களில் இரு குழுக்களாக நின்று தங்கள் மக்களை கொலை செய்தனர். இந்திய அமைதிப்படை ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொண்று குவித்தது அதே சமயத்தில் தென் இலங்கையில் இலங்கை இராணுவம் ஜெவிபியினரை கொண்று குவித்தது. 


அணிசேரக் கொள்கை என்று சொன்ன இந்தியா இலங்கை இராணுவத்துடன் மட்டும் அணிசேருவது என்ன கொள்கை என்று யாரும் கேட்க கூடாது. இந்திய இராணுவத்தின் துணையுடன் 1971ல் 50000 மக்களை படுகொலை செய்துள்ளனர் இதில் சிங்களவன் தமிழர் என்பது எல்லாம் கிடையாது ஜனத விமுக்தி பெரமுனாவின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடை அளித்தவர்கள் என்று அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். இதற்கு இந்தியாவில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர்வில் இருந்து இராணுவத்தினரையும் 5 ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இங்கு இருந்து சென்ற ஹெலிகாப்டர்களும் வீரர்களும் காட்டுநாயகா விமான நிலையத்தில் தரையிறங்கி இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஒரு மனித படுகொலையை நடத்தியிருக்கின்றனர் 1971ல். 80களின் இறுதியில் இந்திய அமைதிபடை என்ற பெயரில் நடத்திய படுகொலை நாம் அறிந்ததே.. இந்திய இலங்கைக்கு ஒரு அடியாளாக செயல்பட்டு வருகிறது ஓவ்வொரு முறையும்... 

தன் சொந்த நாட்டு மக்களை கொலை செய்யும் இந்தியா மற்றும் இலங்கை போன்ற அரசுகள் மக்களுக்கான ஜனநாயக நாடுகள் என்று இறையாண்மை உள்ள நாடுகள் என்று கூறுவது அறுவெருப்பாக உள்ளது.

1971ல் இந்திய படை இலங்கைக்கு சென்றதற்கான ஆதாரம்
http://vayu-sena.indianmilitaryhistory.org/other-coin-1971-ceylon.shtml

Thursday, November 14, 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் நெறுஞ்சி முள்???


ராஜ ராஜன் ஒரு மாபெரும் கற்றாளியை உருவாக்கினான் கிபி 10ம் நூற்றாண்டில் அது விவாதத்தின் கருப்பொருளாக இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக உலகின் முன்னாள் தன் பணியை செய்கிறது. அதே போல் முள்ளி வாய்க்கால் முற்றம் எனும் ஈழத்தில் 2009ல் நடந்த இனப்படுகொலையை எடுத்து இயம்பும் சின்னத்தை நோக்கிய விமர்சனமும் நீண்டு கொண்டே செல்கிறது ஆனால் ராஜ ராஜனின் கற்றாளியைப் போல் முற்றமும் தன் பணியை செவ்வனே செய்து கொண்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் ஆள்பவர்களுக்கும் ஆண்டவர்களுக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்க போகிறது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை 1980களில் இருந்து ஆரம்பித்து இன்று வரை அனைத்தையும் தன்னுள்ளே வரித்துக் கொண்டுள்ளது அங்கிருக்கும் கலை ஆவணங்கள்.


ஈழத் தமிழ் சொந்தங்களின் அமைதியான இயற்கை சார்ந்த வாழ்க்கையை பனைமரக் காட்டினுடாக வடித்த சிற்பத்தில் தொடங்கி, 1983ம் ஆண்டு குட்டி மணி தன் கண்களுக்கு கொடுக்க விரும்பிய பாக்கியமான சுதந்திர தமிழீழத்தை பார்க்க கூடாது என்று நோண்டி எடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட கண்களை வடித்த சிற்பமாகட்டும் பேசாமல் பேசும் கதைகள் பல. யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பு சம்பவத்தையும் தமிழன் கறி இங்கு கிடைக்கும் என்று நடத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிகாட்டுவது ஆகட்டும் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக கலை ஆவணமாக வடிக்கப்பட்டுள்ளது.
(யாழ்ப்பாண நூலக எரிப்பு, தமிழன் கறி நிகழ்வுகள் கலை வடிவில்)

(முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் 2009ல்)

முள்ளிவாய்க்காலில் 2009ல் நடந்த கொடூரங்களை தனி தனி சிற்பங்களாக ஒரு சுவராக ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருந்தது. கொத்துக் குண்டுகள்,  மனித உரிமை மீறல்கள் மற்றும் முள்வேலி முகாம் என்று 2009ல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடத்திய அனைத்து கொடூரங்களையும் சிற்ப ஆவணங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பின்னால் முற்றத்தின் ஜோதியாக பாலச்சந்திரன் படுகொலையும் சார்லஸ் ஆண்டணியின் மரணமும் ஒரே சிற்பமாக இருவரின் உயிருடனான உருவமும் உயிரற்ற உடல்களும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
பாலசந்திரன், சார்லஸ் ஆண்டனி சிற்பங்கள்

ஈகியர்கள் சிற்பங்கள்

இதைத் தவிர முள்ளிவாய்க்கால் அவலங்களை சித்தரித்த சிற்பங்களுக்கு நேரெதிராக முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று தங்கள் இன்னுயிரை ஈந்து போராடிய தோழர்களின் சிற்பங்களும், மாவீரன் முத்துகுமார் நடுநாயகமாக இருக்க முருகதாஸன் வரை அனைவரும் சிற்பங்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.  


மாவீரர்கள் மண்டபத்தில் சிவகுமரன், சங்கர் தொடங்கி அனைத்து மாவீரர்கள் படங்களும் வைக்கப்பட்டுள்ளது அவர்களின் சிறு வரலாற்று குறிப்புடன். இதை படிப்பவர்கள் அனைவருக்கும் ஈழப்போராட்ட வரலாறு முற்றிலுமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் உள் மண்டபத்தில் அனைத்து தமிழறிஞர்கள் படங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. பெயர் மட்டுமே தெரிந்த பல அறிஞர்களின் புகைப்படங்கள் இங்கு அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முற்றத்தில் ஈழ வரலாறு பற்றி நிறைய சந்தேகங்கள் எழுப்பப்பட்டது என்னால் முடிந்த அளவிற்கு கேட்ட தோழர்களுக்கு விளக்கம் சொன்னேன்.. ஆனால் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத விசயம் மாணவத் தோழன் சிபி லெக்சுமணனிடம் வந்திருந்த ஒருவர் கேட்டிருக்கிறார். ”பாலச்சந்திரன் செத்துட்டானா?” என்று ஆம் இத்தனை வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை கூட அறியாதவராக ஒருவர் மட்டும் அல்ல இன்னும் பலர் உள்ளனர், இவர்களை தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். 2009க்கு பிறகு வந்த குபீர் உணர்வாளர்கள் என்று விமர்சிப்பவர்களும்,  திராவிட இயக்கம் என்று வியாக்கியானம் பேசி பலவருடங்களாக இயக்கம் நடத்துபவர்களும் தங்களின் திறமையை அனுபவத்தையும் வைத்து ஏன் பாலச்சந்திரன் மரணத்தை இந்த கடைசி குடிமகன் வரை கொண்டுசேர்க்க முடியவில்லை இத்தனை வருடமாக எப்படி மக்களை சென்றடைவது என்று யோசிப்பது இல்லை, தனக்கான அங்கீகாரத்தையும், தனக்கான மரியாதையையும் தான் எதிர் பார்க்கிறார்கள் இந்த பழம் திண்ணு கொட்டை போட்ட பழுத்த அரசியல்வியாதிகள்.

இந்த முற்றம் அமைய உதவியவர்கள் ம.நடராசனாகட்டும் அல்லது வேறு யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் ஆனால் முற்றம் தஞ்சையின் நட்டநடுவே உலகிற்கு தன் கதையை சொல்ல தொடங்கிவிட்டது முற்றமும் அதை பார்க்க வரும் மக்களும் சொல்லட்டும் என்ன தேவை என்று… முற்றம் இனி எட்டு திக்கும் முரசறிவிக்கும் ஈழத் தமிழ் சொந்தங்களின் விடிவிற்கு வழி வகுக்கும்.

முற்றம் நெரிஞ்சி முள்ளாக ஆளவிரும்பும், ஆண்டுகொண்டிருக்கும் அனைத்து ஆதிக்கவாதிகளுக்கும் ஆப்பாக இருக்க போகிறது. 

குறிப்பு :- முற்றத்தின் திறப்பு நிகழ்விற்கு பாஜகவை அழைத்தது தேவையில்லாத ஒன்று தவிர்த்திருக்கலாம்.

பாராட்டப்பட வேண்டிய விசயம் பெரியார், காமராஜர் படங்களை வாஞ்சிநாதன் படம் வைத்த முற்றத்தில் வைக்காமல் விட்டதற்கு கோடான கோடி நன்றிகள்.