Friday, October 9, 2015

மெளனிக்கப்பட்ட ஆயுதங்களும் வாயடைக்கப்பட்ட தமிழர்களும்.

ஐ.நாவின் அநீதி - 1

2009 மே மாதம் தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று அடுத்த நகர்வுகளாக பாதிக்கப்பட்ட மக்களின் குரல் சர்வதேச மக்களுக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் மிகக்கவனமாக செயல்பட ஆரம்பித்துவிட்ட வல்லாதிக்க அரசுகளும், உலக அமைதிக்கான அமைப்புகளாக தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் வல்லாதிக்க அரசுகளின் அடிமை அமைப்புகளும் தொடர்ந்து தங்களின் நகர்வுகளை செய்து வருகின்றன. அதில் ஒன்று தான் சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணயத்தின் 30வது அமர்வில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையும் (OISL) அதன் பின்னால் நிறைவேற்றப் பட்ட தீர்மானமும். 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இவர்களின் சதி திட்டத்திற்கு எதிராக ஒழிக்க ஆரம்பித்த தமிழர்களின் குரல் அதன் பிறகும் தொடர்ந்து இன்று வரை தமிழீழ மக்கள் சுதந்திர வேட்கையை குறைந்துவிடாமல் கட்டிக் காத்து வருகின்றனர். மெளனிக்கப்பட்ட ஆயுதங்களுக்கு பதிலாக தங்களின் அறவழி மற்றும் சட்டப் போராட்டங்களின் மூலமாக தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டங்களையும் நமக்கு எதிரான சர்வதேச நகர்வுகளையும் நாம் உற்று நோக்க வேண்டிய தேவை உள்ளது,

2009ம் வருடம் மே 17ம் தேதி தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதிலிருந்து இன்று வரை கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழர்களின் வாயை அடைக்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம் மே 19ம் தேதி சிங்கள பேரினவாத இலங்கை அரசு தமிழர்களின் சுதந்திர போராட்டத்திற்கு எதிரான தனது வெற்றியை உலகிற்கு பறைசாற்றி அறிவித்தது.  அன்றிலிருந்து 7ம் நாள் மனித உரிமைகளை உலகில் இருக்கும் அனைத்து நாடுகளில் நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட உலக மனித நேயர்களால் நம்பப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் 2009ம் வருடம் மே மாதம் இலங்கை குறித்த ஒரு சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது, மே 26, 27ம் தேதிகள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 11வது சிறப்பு அமர்வு இலங்கை குறித்து விவாதித்தது, 27ம் தேதி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் ஓர் அவசரகதியில் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ற எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் போகிற போக்கில் இலங்கையை பாராட்டிவிட்டும் சென்றது. அந்த தீர்மானம் தான் 2009க்கு பிறகான தமிழர்களின் சுதந்திர தமிழீழ போராட்டத்திற்கு எதிரான முதல் படியாக வல்லாதிக்க அரசுகளுக்கு அமைந்தது. 

உலகில் எந்த மூலையிலும் இப்படி ஒரு போர் நிகழ்விற்கு பிறகு மனித அவலங்களை கணக்கில் எடுக்க வேண்டிய உலக மனித உரிமைகளை கட்டிக் காக்கும் ஓர் அவை இத்தகைய தீர்மானத்தை இயற்றியதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர்களின் வாயை அடைக்கும் முதல் கையாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையம். இலங்கையை பாராட்டி சீராட்டி தட்டிக் கொடுக்கும் வேலையை தொடங்கியது.

மனித உரிமைகளை கட்டிக்காக்கவும் மற்றும் வளர்த்தெடுக்கவும் இலங்கைக்கு உதவுவோம் என்பது தான் தீர்மானத்தின் தலைப்பு. இந்த தலைப்பே சொல்லி விடும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட எந்தவிதமான அநீதியையும் கணக்கில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்ட ஓர் தீர்மானம் என்பதை. எந்த ஒரு போரையும் இப்படி ஒருதலைப் பட்சமாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கணக்கில் எடுத்துச் செயல் பட்டதாக தெரியவில்லை. ஆனால் 2009ல் ஈழத்தின் சுதந்திரப் போராட்ட ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே இப்படி ஒரு தீர்மானத்தை இயற்றி உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவாக ஓரணியில் நிற்க ஐ.நாவின் மனித உரிமை ஆணையமே முதல் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கூட்டப்பட்ட 11வது சிறப்பு அமர்வில் தான் இலங்கையில் நடந்த போர் குறித்த முதல் தீர்மானம் இயற்றப்பட்டது. இதற்கு பிறகு பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன அவைகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒன்றை ஒட்டி ஒன்றாகவே அனைத்து தீர்மானங்களும் வந்தன. இந்த தொடர்புகள் என்பது சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் வர்த்தகம், அரசியல் மற்றும் இராணுவத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருந்து வருகிறது. அவைகளைப் பார்க்கும் முன்பாக போர் முடிந்த ஒரே வாரத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மிக முக்கியமான ஓர் இடத்தைப் பெறுகிறது. ஆம் சர்வதேச மக்களின் மனித உரிமைகளை கட்டிக் காக்கும் ஓர் அமைப்பு போர் முடிந்த பிறகு அங்கிருக்கும் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும் ஓர் தீர்மானம் என்று எடுத்துக் கொண்டால், இத் தீர்மானம் போருக்குப் பிறகு மக்களின் மீள் கட்டமைப்பிற்கு உதவும் ஒரே நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இத் தீர்மானம் சர்வதேச அளவில் 2002ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டப் பட்டு,
CFA (Cease Fire Agreement) மூலமாகவும், தமிழீழப் பகுதியினை தன்னாட்சி (De-Facto) அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்த்து என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதிகள் என்ற கண்ணோட்டத்துடனே அணுகுகிறது.  தன்னாட்சி அதிகாரத்தின் கீழ் ஓர் தனி இறையாண்மை கொண்ட ஆட்சி பிரதேசமாக அதன் நிர்வாகத்தினை கவனித்து வந்த ஒரு அமைப்பை அரசு நிறுவனமாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, சர்வதேச அரசியல் நகர்வுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒதுக்கிவிட்டு தமிழர்கள் சார்பாக யாரும் பங்கு பெற இயலாத ஓர் நிலையை உருவாக்கியுள்ளனர். இதன் பிறகான நகர்வுகளைப் பார்க்கும் முன்பு இந்த இலஙகை குறித்தான சிறப்புக் கூட்டம் நடைபெற்ற விவரங்களைப் பார்ப்போம்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் மே 26,27 இலங்கை குறித்தான் சிறப்பு அமர்வு அறிவிக்கப்பட்டவுடன் இலங்கையிலிருந்து 19 பேர் கொண்ட ஒரு குழு தயான் ஜெயதிலகேவுடன் இந்த அமர்வில் கலந்து கொள்ள சென்றது. ஜெர்மனி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது, கியூபா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது, ஐ.நா மனித உரிமைகள் அவையில் தயான் ஜெயதிலகே பொதுமக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை இந்த சிறப்பு கூட்டம் தேவையே இல்லாதது என்று பேசுகிறார். தீர்மான வரைவு முதலில் வைக்கப்பட்ட பொழுது மொத்தம் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்தன பிறகு சுவிட்சர்லாந்து மற்றும் சில நாடுகள் கொண்டுவந்த திருத்தங்களுக்கு பிறகு ஒட்டெடுப்பில் 29 ஓட்டுகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டது மொத்தம் 12 பத்திகள். இதில் பத்து பத்திகளில் இலங்கையை ஓக்குவிப்பதிலும் பாராட்டுவதிலும் செலவழிக்கிறார்கள். மிச்சம் இருக்கும் இரண்டு பத்தியும் இலங்கை அரசுக்கு எதிரானதா என்று பார்த்தால் அதுவும் இல்லை, ஒரு பத்தியில் ஒரே வாக்கியத்தில் இலங்கை அரசை சிறுபான்மையினர் அனைத்து உரிமைகளுடன் வாழும் வகையை மிகவிரவில் ஏற்படுத்துமாறு கூறுகிறது. மிச்சம் இருக்கும் இன்னொரு பத்தி இலங்கை அரசுக்கு மிகவிரைவில் பொருளாதாரரீதியாக உதவுமாறு சர்வதேச நாடுகளை கோருகிறது.

இப்படித்தான் 2009 மே மாத்த்தில் இருந்து ஐ.நா மன்றம் கொண்டுவரும் தீர்மானங்களில் இலங்கைக்கு எதிரானது என்று கட்டமைத்து, இலங்கைக்கு நிதி உதவிகளையும் இனப்படுகொலையையும் மறைக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன சர்வதேச உலக அமைதிக்கான அமைப்புகள். இவர்களைப் பொருத்தவரை செத்தவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவதைவிட சாகடித்தவர்களுக்கு நிதியைப் பெற்றுதருவதே முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

குறிப்பு - மே 26 மற்றும் 27ஆம் தேதி 2009ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் கீழ்கண்ட முகவரியில், மாற்றம் இல்லாமல் முதலில் வைக்கப்பட்ட தீர்மானம் அடுத்து மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்ட்ட தீர்மானம் இரண்டும் உள்ளது. 
http://www.tchr.net/PR_First_anniversary_HRC_ressolution.pdf
        

(மேலும் 2009லிருந்து நம் கண்களை கட்டிவிட்டு வாயை பொத்தும் தீர்மானங்களும், சர்வதேச சபைகள் நிர்பந்ததிற்கு உள்ளாகப்பட்டு அமைக்கப்பட்ட மனித உரிமை அமர்வுகளின் நடவடிக்கைகளையும் அடுத்த பகுதிகளில் தொடர்ந்து பார்ப்போம்
.)














Thursday, October 1, 2015

பிரபாகரன் மதிவதனி - போராட்டமே வாழ்க்கையாக


காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் திரியும் சிலருக்காக வரலாற்றை தெரிந்து கொள்ள வைக்கவே இந்த பதிவு.

பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது.  மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர். ப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர். மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார். இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோத்தியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோத்தியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.

இதன் பிறகு தனது கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்து பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி. மதிவதனியும் பிரபாகரனும் வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத் தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள், போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் ஆண்டனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும், ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேறு யாரும் அல்ல மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில் ஒருவர். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை சுதந்திர தமிழீழத்திற்காக கொடுத்த தமக்கையான மதிவதனி தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார்.

தம் மக்களின் சுதந்திரத்தையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே பிரபாகரனும் மதிவதனியும்.



Wednesday, August 5, 2015

சமணர் கழுவேற்றம்


சமணர் கழுவேற்றம் குறித்தான விவாதம் என்பது பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பது. இத்தகைய விவாதங்கள் நம்மை நமது வரலாற்றுடன் பொருத்தி பார்ப்பதற்கானது அல்ல, நாம் அந்த வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ளவே.

சமணர் படுகொலை என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை என்று கூறி பலர் மறுத்து வருகின்றனர். இவர்களுக்கு எத்தனை சான்றுகள் கொடுத்தாலும் இல்லை என்று தான் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதற்கு காரணம் தங்களை மேல்நிலையில் வைத்துக் கொண்டு நாங்கள் சமணர்களை கழுவிலேற்றும் அளவிற்கு கொடுமையானவர்கள் இல்லை என்று தங்களின் இந்து பரம்பரையை தூக்கிப்பிடிப்பது இல்லாமல் வேறு எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகம் தான் செய்த தவறுகளை உணர்ந்து அதிலிருந்து திருத்திக் கொள்ளமல் தன்னை போலி அடையாளங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறதோ அந்த சமூகம் என்றும் பண்பட்டதாக மாறும் வாய்ப்பு இல்லை. வேண்டுமென்றால் ஹிடலர் ஆரிய இனத்தை வலுவுள்ளதாக ஆக்குகிறேன் என்று சொல்லி, அவர் காலத்தில் தன் இனத்தில் இருந்த ஊனமுற்றவர்கள், வலிமையில்லாதவர்கள் அனைவரையும் கொன்று குவித்த பாசிச மனப்பான்மையை தங்களுடையதாக மாற்றிக் கொள்ள மட்டுமே இவர்களால் முடியும். 

ஐரோப்பிய அறிஞர்கள் தமிழர்கள் வரலாறு இல்லாதவர்கள் என்று ஓரு காலத்தில் குறிப்பிட்டதை உடைத்து உலகில் பழமையான வரலாறு தமிழர் வரலாறு எனபதை நமது இலக்கிய, மற்றும் கல்வெட்டு சான்றுகளின் மூலமாகவும் நிருபித்துள்ளோம். இதில் எந்த மன்னனும் தான் தோல்வியடைந்த போர்களைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிடவில்லை, தான் வெற்றி பெற்றவைகளையே பறைசாற்றும் வகையில் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு மன்னன் தோல்வியுற்றதை மற்றொரு மன்னனின் வெற்றி குறித்தான கல்வெட்டுகள் மூலமாகவே அறிந்து வருகிறோம். பாரி வள்ளலை மூவேந்தர்கள் இணைந்து முறியடித்ததையும் அவர் மரணத்தையும் இவ்வாறாகவே நம்மால் இலக்கிய ஆதாரங்களின் கீழ் அறிந்து கொள்ள முடிகிறது. அதே போல் தான் சமண கழுவேற்றம் என்பதை சைவ சமய ஸ்தாபித வரலாறாக நமக்கு கிடைக்கிறது.

ஒரு பகுதி மக்களின் பண்பாடு என்பது அவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து தெரியும், சைவ சமய கோட்பாடுகளின் சைவ சமய மக்கள் தங்களின் வெற்றியாக சைவ சமய ஸ்தாவித வரலாற்றை கொண்டாடுகிறார்கள். இதை கழுவேற்றம் என்ற பெயரிலேயே இது வரை கொண்டாடி வருகின்றனர்.

மதுரையின் பெரும் திருவிழாக்களில் ஒன்று சித்திரைத் திருவிழா இதன் தோற்ற காலத்தை நம்மால் அறிய இயலாவில்லை ஆனால் இந்த திருவிழாவில், அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்து நடக்கும் சித்திரை திருவிழாவில் ஆறாம் நாள் விழாவாக சிவனும் மீனாட்சியும் கோயிலுக்குள்ளேயே இருக்கும் சிவகங்கை ஜமீன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்கள். அப்பொழுது அங்கே சைவ சமய ஸ்தாபித வரலாறு பாடலாக ஓதப்படும். இந்த நிகழ்விற்கு பெயர் “கழுவேற்றம்”

இது மட்டுமல்ல திருப்பரங்குன்றத்தில் தெப்ப திருவிழாவின் போது இதே போல் ஆறாம் நாள் சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானையும் 16 கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள், இவர்களுடன் திருஞான சம்பந்தரும் எழுந்தருளுவார். அப்பொழுதும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று பாடல்கள் ஓதுவார்களால் ஓதப்படும்.

இந்து மதத்தின் உள்ளடக்கிய சிவன், மீனாட்சி, முருகன், தெய்வானை சம்பந்தப்பட்ட திருவிழாவில் இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவது சாதரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிறு தெய்வ வழிபாடு முறை என்பது இந்து மத சம்பிராதயங்களுக்குள் அடங்காது ஆனால் திருமங்கலம் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயில் 18ம் நூற்றாண்டில் எளிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இதையும் பார்ப்பனியத்தின் பிடியில் இன்று விட்டுவிட்டோம். காளியம்மன் ஸ்ரீ பத்திரகாளியம்மனாக உருவெடுத்துவிட்டார்.

சரி சமணர் கழுவேற்ற வரலாறுக்கும் இந்த கோயில் திருவிழாக்களுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நின்றசீர் நெடும் பாண்டியன் சமணத்தை போற்றி வளர்த்து வருகிறார், அவருடைய மனைவி மங்கையற்கரசி சைவத்தை போற்றுகிறார். ராணி மங்கையற்கரசி வேண்டுகோளின் கீழ் சம்பந்தர் மதுரை வருகிறார். அப்படி மதுரைக்கு வந்த சம்பந்தரை மதுரையில் கொலை செய்ய சமணர்கள் முயல்கிறார்கள். அதில் இருந்து தப்பிய சம்பந்தர் மன்னனுக்கு ஏற்பட்டிருந்த வெக்கை நோயை சமணர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை எனும் பொழுது திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனை நோயிலிருந்து விடுவிக்கிறார் இது தான் கதை.

“மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே”

இந்த கதை பெரியபுராணத்தில் இருக்கிறது, திருநீற்றுப் பதிகமும் நம் கையில் இருக்கிறது. இதைப் போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைந்த ஒவியமும் இருக்கிறது பல கோயில்களில் சிற்பங்களாகவும் இந்த கழுவேற்றம் நமக்கு ஆதாரங்களாக இருக்கிறது. சமணத்தை வென்று சைவம் தலைத் தோங்கியதை குறிக்கவே இன்று வரை பல கோயில்களில் திருவிழாக்களில் இந்த நிகழ்வை சைவ சமய தோற்ற நிகழ்வாக கழுவேற்றம் என்ற பெயரில் இன்று வரை கொண்டாடியும் வருகிறோம். ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அவர்களின் பண்பாட்டில் அன்றாட நடவடிக்கையிலும் இருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சமூகத்தின் நாகரீகம் என்பது அவர்களின் பல நூற்றாண்டு காலமாக கடைபிடித்து வரும் பழக்கவழக்கங்கள் தான்.

இத்தகைய ஒன்று தான் சமணர் கழுவேற்றத்திற்கான ஆதாரங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் போன்றவற்றில் மட்டுமில்லாமல் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சமணர் கழுவேற்றம் அந்த அந்த கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடந்து வருகிறது. இதையெல்லாம் மறுப்பது என்றால் இந்த சமணர் கழுவேற்றம் நடக்கவில்லை என்றோ கூறுபவர்கள். மொட்டையாக இதற்கான ஆதாரம் இல்லை ஆனால் இன்று வரை சமணக் குன்றுகள் இருக்கின்றன என்ற ஆதாரத்தை மட்டும் கொடுக்கிறார்கள் ஆனால் இவ்வாறு மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்ட திருவிழாக்களில் கண்ணுக்கு முன்பாக சமணர் கழுவேற்றத்திற்கு ஆதாரமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் நிகழ்வை மறந்துவிடுகிறார்கள்.

இப்படி மறுப்பவர்கள் சைவத்தையும் இந்துத்துவா தத்துவத்தை குற்றமற்றவர்களாக சித்தரிக்கும் மதவாதிகளாகவே இருக்கின்றனர். இந்து மதத்தின் குற்றங்களை மறைத்து அதனை தன் மதமாக தூக்கிப் பிடிப்பதே இவர்களின் நோக்கம். எவ்வாறு இன்று இந்து மத கூறான ஆர்.எஸ்.எஸ் இப்பொழுது அம்பேத்காரை தூக்கி வைத்துக் கொண்டு நால் வர்ண பேதத்தை பாதுகாக்க முயல்கின்றனரோ அவ்வாறே தான் இவர்களும். அம்பேத்காரும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து மதத்தை தூக்கி எறிய காரணமே நால் வர்ணத்தில் ஓரு இடம் கூட கொடுக்காமல் பஞ்சமர்களாக ஒதுக்கியதுடன் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஒரு மனித இனத்தின் கூறுகளாக கூட அவர்களை பார்க்கவில்லை என்பது தான் ஆனால் இன்று அம்பேத்கர் படத்தை தாங்கி பிடித்துக் கொண்டு வரும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் தமிழ் மன்னர்கள் செய்த தவறுகளை மறைத்து வெறும் பழம்பெருமை பேசும் இந்த கூட்டமும் ஒன்றே.

எந்த ஒரு கருத்தியலும் தன் தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த கருத்தியல் மட்டுமில்லை அதைச் சார்ந்த சமூகமும் விழ்ந்துவிடும் 

Monday, April 20, 2015

எது திராவிடம் - கருப்புச் சட்டை



சத்தியமூர்த்தி அய்யர் சென்னை கடற்கரையில் சர். முகமது உஸ்மான் அவர்களைப் பற்றி பேசிய அதே இடத்தில் மேடை போட்டு எரிமலை எம்.கே. குப்தா “சர். முகம்மது உஸ்மானைப் பற்றி சத்தியமூர்த்தி பேசிய வர்த்தைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் சத்தியமூர்த்தி வாபஸ் வாங்க வேண்டும் இல்லையென்றால் சத்தியமூர்த்தியின் காலிலே போட்டிருக்கின்ற பூட்சை அல்ல என்னுடைய காலிலே போட்டிருக்கின்ற பூட்சை கழற்றி அடித்து சத்தியமூர்த்தியை வாபஸ் வாங்க வைப்பேன்” என்று எம்.கே.குப்தாவும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியும் முழங்கினார்கள். இதன் பின்னர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

தமிழக காங்கிரஸின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் சத்தியமூர்த்தி அவர்களின் தொண்டர் படைபலமும் கணக்கிலடங்காதது, அதுவும் இந்த நிகழ்வு நடந்த காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் அப்பொழுது காங்கிரஸின் ஒரு தலைவரை நோக்கி சவால் விட்டு அவர் பேசியதற்கு மன்னிப்பு கோர வைத்தார்கள் என்றால் எத்தகைய நெஞ்சுரம் இருந்து இருக்க வேண்டும் இந்த பெரியார் தொண்டர்களுக்கு. கருப்புச் சட்டைக்காரன் என்றாலே ஒர் மக்களிடையே ஓர் மரியாதையும், எதிரிகளின் மனதில் ஒரு பயமும் என்றும் குடிகொண்டிருக்கும். அப்படியான கருப்புச் சட்டை அணிந்து கொள்ளும் பழக்கம் ஆரம்பிக்கப்பட்டது எப்பொழுது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

1930 களில் தீபாவளி நமது மன்னன் நரகாசுரனின் மரணமடைந்த தினம் இதை நாம் கொண்டாடக் கூடாது, அது நமக்கு துக்க தினம் என்று அறிவித்து கருப்புச் சட்டை அணிந்தார்கள் முதலில். அது தான் 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29, 30ம் நாட்களில் திருச்சியில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தொண்டர்கள் நிரந்தரமாக கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்றும் அதற்கான காரணத்தை வலியுறுத்தியும் பெரியார் பேசினார். 

“நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம், பெண்டிரும் கருப்புத் துணியில் புடவை ரவிக்கை அணியலாம். கூட்டங்களில் இனி மாலைக்கு பதில் கருப்புத் துணிகளே போடலாம். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை, நீலச்சட்டை இந்துஸ்தான் சேவதள் இருப்பது போல் இங்கும் கருப்புச் சட்டைப்படை தமிழ்நாடு முழுவதும் இருக்கும்.”

இதன் பிறகே கருப்புச் சட்டைப்படை உருவாக்கப்பட்டது, 1946ம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரையில் முதல் கருப்புச்சட்டை மாநாடு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மாநாட்டின் முதல் நாள் மிகவும் அமைதியாக நடந்தது ஆனால் மே 11ம் தேதி மாநாட்டு பந்தலுக்கு தீ வைக்கபப்ட்டது, பெரியாரின் தொண்டர்கள் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநாட்டு பந்தலை தாக்க முயன்ற இந்துமத காங்கிரஸ் வெறியர்களுக்கு  “கொடியே தடியாகவும் தடியே கொடியாகவும்*” பதிலடி கொடுக்கப்பட்டது. இப்படித் தான் கருப்புச்சட்டையும் அதன் கீழாக ஒரு படையாகவும் பெரியாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து கொள்ள ஆரம்பித்தனர். இந்து மத வெறி பிடித்த காங்கிரஸ் காரர்களுக்கு எதிராக கொடியை தடியாக மாற்றிய பிறகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்த் துறை காங்கிரஸ் அடியாட்களை கைது செய்தது.

மதுரையில் இப்படி கருப்புச் சட்டைப் படைக்கு எதிர்ப்பு தெரிவித்தது யார் என்று பார்த்தோம் என்றால், இன்றைய தமிழ்நாட்டு ஆலய நுழைவுப் போராட்ட வரலாற்றில் கதாநாயகனாக சித்தரிக்கப்படும் ‘வைத்தியநாத அய்யர்’ தான் கருப்புச் சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்த முற்போக்கு பிராமணன். ஆம் கக்கனை தன் மகன் போல் வளர்த்தவர், ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர் என்று எல்லாம் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ள இவர் இராஜகோபாலச்சாரியாரின் ஒரு கைப்பொம்மை. இராஜகோபாலச்சாரியின் விரலசைவுக்கு ஆடும் ஒரு பொம்மையாகவே ஆலாய நுழைவுப் போராட்டம் என்ற கண் துடைப்பு நாடகத்தை நடத்தினார், அரசாங்க அதிர்காரிகள் வருகிறார்கள் என்று சொல்லி கக்கன் உட்பட மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார், அங்கிருந்த அய்யர்களும் விமர்சையாக வரவேற்பு அளித்தனர்.

ஆலய நுழைவுப் போராட்டம் முடிந்த பிறகே அய்யர்களுக்கு விசயம் தெரிந்தது, வந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அதன் பிறகு கிட்டத்தட்ட 10 நாட்கள் கோயிலை இழுத்து மூடினர். கோயில் தீட்டு பட்டுவிட்டது என்று பரிகார பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டு அதன் பிறகே கோயில் திறக்கபப்ட்டது. இவ்வாறான ஒரு நுழைவுப் போராட்டம் எதற்கு என்று தெரியவில்லை, ஆனால் இதே முற்போக்குவாதியாகவும் புரட்சியின் அடையாளமாகவும் வரலாற்றில் சித்தரிக்கப்பட்ட வைத்தியநாத அய்யர் தான் மதுரையில் கருப்புச் சட்டை மாநாடு கூடாது என்று தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்தார். மதுரை கீழ்பாலத்தின் அருகில் கருப்புச் சேலை கட்டி வந்த பெண்களை அடித்து உதைத்தார்கள் இந்த வைத்தியநாத அய்யர் கூட்டம். இப்படி 10ம் தேதி மற்றும் 11ம் தேதி என்று மாநாடு நடந்த இரண்டு நாளும் மிகப்பெரும் கலவரங்களை நடத்திவிட வேண்டும் என்று முயன்றனர்.

ஆனால் பெரியார் தன் தொண்டர்களை கட்டுக்குள் வைத்து எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் பார்த்துக் கொண்டார். இப்படியான கருப்பு சட்டைப் படை ஆரம்பித்த இரண்டாவது வருடத்தில் 1948ம் ஆண்டு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சுப்புராயன் காலத்தில் தடை விதிக்கப்பட்டது. கருப்புச் சட்டைப் படை என்பது தமிழகத்தை ஆண்டவர்களைவிடவும், காவல்துறையை விடவும் பெயர் பெற்றிருந்த காலம் அது. மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் இல்லை காவல் துறையினரால் பிரச்சனை என்றாலும் அவர்கள் அணுகியது கருப்புச் சட்டைகளையே. இந்த நிலை 1990கள் வரை நீடித்தது.

பேரறிவாளன் 1991ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் தேதி சிபிஐயிடம் தந்தை ஞானச்சேகரன் என்ற குயில் தாசனாலும், அவரது அம்மா அற்புதம் இருவரும் சேர்ந்தே ஒப்படைத்தனர். மறுநாள் காலையில் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்று சொன்ன சிபிஐ அதிகாரிகள் 15நாள் பெற்ற தாய் தந்தைக்கும் பிள்ளையை கண்ணில் காட்டவில்லை, ஏன் சட்டப்பூர்வமாக 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க அனுமதிக்க கோர வேண்டும் என்ற சட்ட விதிமுறையையும் பின்பற்றாமல் 15 நாட்கள் சட்டவிரோதமாக கடத்தி வைத்து இருந்தனர். அந்த சமயத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு பேரறிவாளனை அழைத்து வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது, அதற்கு முன்பே பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது உலகிற்கே தெரியும். பேரறிவாளனை நீதி மன்றத்திற்கு அழைத்து வரும்பொழுதாவது பார்க்கலாம் என்று பேரறிவாளன் குடும்பத்தினர் செங்கல்பட்டு நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தனர்.

ஆனால் அவர்களுடன் ஜோலார்பேட்டை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் அதிகமானவர்கள் ஒன்றிணைந்தனர் நாங்களும் வருகிறோம் என்று சொல்லி. பேரறிவாளன் சம்பந்தப்பட்ட வழக்கு ராஜிவ் கொலை வழக்கு என்ற பொழுதிலும் 200 ஊர்க்காரர்கள் பேரறிவாளன் குடும்பத்துடன் இணைந்து நீதிமன்றம் வந்தனர் என்றால் பேரறிவாளன் தந்தை குயில்தாசனின் கருப்புச்சட்டையும் அந்த சட்டையுடன் அவரும் அவர் குடும்பமும் ஆற்றிய தொண்டே. 1990கள் வரை ஒருவரை காவல்துறை கைது செய்துச் சென்றால் என்ன ஏது என்று விசாரிக்க ஒரு கருப்புச் சட்டைகாரரை கூப்பிட்டுக் கொண்டு ஒட்டுமொத்த தெருவே காவல் நிலையம் செல்லும். ஆனால் 1991க்கு பிறகு இந்த நிலையை தலைகீழாக மாற்றியது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு, பேரறிவாளனையும் அவர் குடும்பத்தையும் திராவிடர் கழகத்தையும் பிரித்து நிறுத்தியது. ஒட்டுமொத்தமாக தன் இயக்கத் தோழர் ஒருவரை கைகழுவினர் திராவிடர் கழகத்தில் பெயருக்கு கருப்புச் சட்டை போட்டு உலாவருபவர்கள்.

உண்மையான கருப்புச் சட்டைக் காரர்கள் பலர் பெரியார் காலத்திலேயே வெளியேறிவர்களும், பேரறிவாளன் கைதுக்கு பிறகு வெளியேறியவர்களும் தொடர்ந்து கருப்புச் சட்டையுடன் களத்தில் நின்றனர், 26 பேருக்கு தூக்கு கொடுக்கப்பட்டபொழுதும் அதில் 26 பேரின் தூக்கு கயிறை அறுத்து எறியும் வரையில் தொடர்ந்து நின்றனர். ஆனால் திராவிடர் கழகம் கருப்புச் சட்டையை ஒரு சீருடையாக மாற்றிவிட்டது.

அது இன்று கருப்புச் சட்டை என்பது ஓர் அடையாளம் அல்ல என் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவிற்கான எதிர்ப்பு என்பதை மிகத் தெளிவாகவும் ஆணித் தரமாகவும் சொல்லும் விதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அணுகு முறையே. ஆனால் இதை அறியாத சிலர் இன்று பச்சைத்துண்டையும் கருப்புச் சட்டையையும் ஒருங்கே அணிந்து கொண்டு பண்பாட்டுப்புரட்சி கலாச்சார புரட்சி என்று கிளம்பிவிட்டனர். பெரியார் காலத்தில் இருந்து இன்று வரை கருப்புச் சட்டை என்பது எதிர்ப்பின் அடையாளமாக பின்பற்றபப்டுவது. சமூகத்தின் இழிவை துடைக்கும் வரை உண்மையான கருப்புச் சட்டைகள் ஏ.ஜி.கே, சுவரெழுத்து சுப்பையா போன்றவர்களாய் பயணிக்க இன்னும் பல கருப்புச் சட்டைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர், மேலும் புதிதாய் பல கருப்புச் சட்டைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.


முதல் பகுதி
http://kumarikantam.blogspot.in/2015/04/blog-post_16.html



Thursday, April 16, 2015

எது திராவிடம் - எம்.கே.குப்தா



திராவிடம் என்றால் என்ன? என்பதை அறியாத சிலர் வீரமணியும், கருணாநிதியும் தான் திராவிடத்தின் அடையளமாக நினைத்துக் கொண்டு, அவர்களை அளவுகோளாக எடுத்துக் கொண்டு திராவிடம் தான் எங்களை அழித்தது என்ரு பிதற்றித் திரிகிறார்கள். ஆனால் 1973 பெரியார் இறந்தபின் பெரியாரின் சொத்தை தமிழனுக்காக இல்லாமல் தனக்காக என்று ஒரு வியபார நிறுவனமாக மாற்றிக் கொண்டவர் வீரமணி. பெரியார் இருக்கும் பொழுதே திமுக மேடைகளில் பெரியாரையும், மணியம்மையையும் “மைனர்” மற்றும் “கிளியோபட்ரா” என்று அசிங்கமாக திமுக மேடையில் விபூதி வீரமுத்து, தீப்பொறி ஆறுமுகம் போன்று பேசினவர் தான் கருணாநிதி. இவர்கள் தான் திராவிடத்தின் அடையாளம் என்று நினைத்தால் நினைப்பவர்களின் தவறு.

சரி எது திராவிடம்? சென்னை தி.நகர் வந்தவர்கள் அனைவரும் அறிந்தது இரண்டு ஒன்று ரங்கநாதன் தெரு அடுத்து உஸ்மான் ரோடு. இதில் உஸ்மான் ரோடு யார் பெர்யரால் அழைக்கப்படுகிறது என்பது இங்கு பலருக்கு தெரியாது. ஒரு காலத்தில் சென்னை மாகணத்தின் கவர்னராக இருந்த சர். முகமது உஸ்மான் அவர்களின் நினைவாகவே தி.நகர் உஸ்மான் ரோட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பார்ப்பனியம் கோலோட்சி தமிழனை ஆட்டிப்படைத்தப் பொழுது நீதிக்கட்சி  “பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே, மதத்திலே அவன் தரகு வேண்டாம்,. கல்வியிலே அவன் போதனை வேண்டாம், சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே, அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே, திராவிட வீரனே, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு” என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொழுது ஆரம்பித்தவர்களுள் ஒருவராக நின்றவர் தான் சர். முகமது உஸ்மான்.

அவரது சமகாலத்தில் தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியில் கோலோட்சியவர் தீரர் சத்தியமூர்த்தி என்று அழைக்கப்பட்ட சத்தியமூர்த்தி அய்யர். இவர் ஒரு தீவிர இந்திய தேசியவாதி என்பதைவிட தீவிர இந்துத்துவவாதி என்பதே சரியாக இருக்கும். ஆம் தேவதாசி முறை இருக்க வேண்டும் ஆண்களுக்கு பொழுது போக்க ஒரு இடம் வேண்டும் அதற்கு தேவதாசி முறையை நீக்க கூடாது என்று வாதிட்டவர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபொழுதே சத்தியமூர்த்தி இவ்வாறு கூறினார். மேலும் “பெண்கள் சொர்கத்திற்கு செல்ல இது ஒன்று தான் வழி” என்றார். அதற்கு டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியார் எங்கள் சமூகப் பெண்கள் நிறையபேர் சொர்க்கம் சென்றுவிட்டனர் இனிமேல் உங்கள் சமூகப் பெண்களை சொர்க்கத்துக்கு அனுப்புங்கள் என்று சொன்னபிறகே வாயை மூடினார்.

இது மட்டுமல்ல இன்று பார்ப்பனியம் இந்திய தேசியத்தை மறைமுகமாக இந்து தேசியமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது என்றால் இவர் சென்னை மைலாப்பூர் கோயிலில் இந்திய தேசிய கொடியை ஏற்ற முயன்று, இந்தியா இந்துக்களுக்கானது என்பதை சொல்லாமல் சொன்ன மாகனுபாவர். சென்னை மாகணத்தின் ஆளுகைக்குள் இல்லாமல் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயே ஆட்சியில் தனித்தே செயல்பட்டு வந்தது அப்பொழுது புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக இருந்த மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானுக்கு ஆஸ்திரேலிய மனைவி வழிப் பிறந்த இளவரசுக்கு வாரிசு உரிமை தரக்கூடாது எனவும் போராட்டம் செய்தார். சுத்தரத்தம் பார்த்து வாரிசுரிமை அரசியல் பேசினார், அதாவது இந்து ரத்தத்துடன் அந்நியரத்தம் கலந்தவர் புதுக்கோட்டையின் மன்னராக வரக்கூடாது என்று பேசினார்.

தமிழக காங்கிரஸில் மட்டுமல்ல தேசிய அளவிலும் காங்கிரஸில் மிகச் செல்வாக்கு படைத்தவர் சத்தியமூர்த்தி. அதாவது இந்தியாமுழுவதும் காங்கிரஸின் அடையாளம் காந்தி என்றால் தமிழ் நாட்டின் அடையாளம் சத்தியமூர்த்தியும், ராஜகோபாலச்சாரியும்.. அதில் ராஜகோபலச்சாரியை வெற்றிகொண்டவர் சத்தியமூர்த்தி. சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜ்ரை தேர்ந்துடுக்க வைத்து அவருக்கு கீழாக செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டவர். இவர் முகமது உஸ்மான் தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டவுடன் சொன்னார் “எனது சூ கயிறை கட்டக்கூட தகுதியற்றவன் உஸ்மான்” என்று.

ஆனால் அந்த சூ கயிறைகட்டக்கூட தகுதியில்லாதவன் என்று சொன்ன வார்த்தைகளுக்காக ஒரே ஒரு கூட்டம் தான் போடப்பட்டது, அதில் எம்.கே.குப்தா என்ற பெரியார் தொண்டர் பேசினார். அவர் சொன்னது இது தான் உஸ்மான் சூவை கழட்டி அல்ல என் சூவை கழட்டி உன்னை அடிப்பேன் என்று பகிரங்கமாக பொது மேடையில் அறிவித்தார்.. வாலைச் சுருட்டிக் கொண்டு சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டார். இது நடந்தது எல்லாம் திராவிடர் கழக மேடையில். நடந்த கால கட்டம் 1930களில் ஆனால் இன்று திராவிடர் கழகத்தில் இபப்டி யாராவது இருக்கிறார்களா.. எம்.கே குப்தா போல் காந்திக்கும் இந்தியத்திற்கும் சவால் விடக்கூடியவர் எங்கே என்று தேடுவோமா...

இன்னும் வரும் எம்.கே.குப்தாவைப் பற்றியும் திராவிடர் கழகம் வீரமணி என்ற வியபாரியின் கீழ் சோரம் போனதைப் பற்றியும்..

Monday, March 30, 2015

தமிழ்த் திரையுலகமும் தமிழினமும்..



தமிழ்த் திரையுலகம் இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு என்னற்ற பங்காற்றியிருக்கிறது இதை தோழர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு புத்தகத்தில் விரிவாக எழுதியிருப்பார். திரையுலகின் மூலமாகத் திராவிடக் கருத்தியலை பரப்பி பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு என்று தமிழ்த் திரையுலகம் தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால் இதே திரையுலகம் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு வருகிறது.

1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த அண்ணா மாணவர்களை சந்தித்தார். இதன் காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் அன்று சென்னையில் இந்தி படங்களை திரையிட்டு வந்த பல திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி திரைப்படம் இந்தியில் தயாரித்து வெளிவர வேண்டிய சூழ்நிலையில் வெளியிட முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டது. அப்பொழுது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்கள் மத்திய மாநில அரசுகளின் உறுதிமொழிகளின் கீழாக போராட்டத்தை விலக்கிக் கொண்டதாக அறிவித்திருந்த நேரம். எனவே தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முதல்வரான அண்ணாவை சந்தித்து தங்கள் படங்கள் வெளியிட இருக்கும் தடையை உடைத்து திரையிட அனுமதி கேட்டனர்.

அண்ணா அப்பொழுது சொன்னது “மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட ஒப்புக் கொண்டதால் தான் தமிழகத்தில் நிலவிய கொந்தளிப்பு அடங்கி அமைதி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மிகவும் உணர்ச்சிகரமான விசயத்தால் மீண்டும் பிரச்சனை கிளம்பிவிடக் கூடாது. எனவே, நீங்கள் மாணவர்களை முதலில் சந்தித்து அமைதிப்படுத்துங்கள். பிறகு படங்களை வெளியிடுவது பற்றி யோசிக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். அதாவது போராடும் மாணவர்களை நீங்கள் சந்தியுங்கள் அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று திரையுலகத்தினருக்கு சொல்லியிருக்கிறார் அண்ணா.

பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த தமிழ்த் திரையுலகத் தரப்பினரும் ஏ.வி.எம் வளாகத்தில் அன்றைய மாணவத் தலைவர்களை சந்தித்தனர். சென்னை மாணவத் தலைவர்களில் துரைமுருகன், நாவளவன், ஜனார்த்தனம், ஜீவா கலைமணி, செஞ்சி ராமச்சந்திரன், இராமநாதன், உடையப்பன், முகில், பச்சையப்பா, நடராசன், துரைசாமி, வீராச்சாமி, மாநிலக் கல்லூரி நட்ராசன், செல்வராசு எனப் பல மாணவர்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

திரையுலகில் இருந்து ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், அவரது மகன் சரவணன், பஞ்சு அருணாச்சலம், ஸ்ரீதர், கவிதாலயா பாலச்சந்தர், தேவர் பிலிம்சார், நாகிரெட்டி,  பி.எஸ்.வீரப்பா முதலானோர் கலந்து கொண்டனர். அங்கு இந்தி எதிர்ப்பால் எங்களது படங்கள் வெளியிடப் படவில்லை எங்களுக்கு பெருத்த நட்டம். இந்தி நடிகர்கள் எங்கள் படங்களில் நடிக்க மறுக்கிறார்கள் என்று சொல்லி ஒப்பாரி வைத்துள்ளனர் தமிழ் திரையுலகத்தினர். இதனால் தமிழகத்தில் இருந்து பணி புரியும் “டெக்னிசியன்கள்” பலர் துன்புறுகிறார்கள் அவர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை அதனால் ஊதியம் கிடைக்காமல் வருந்துகின்றனர் என்று செக்மேட் வைத்துள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த் சசிகலாவின் கணவர் ம.நடராசன் 1967ல் எங்கே போனீர்கள் மாணவர்கள் நூற்றுக்கணக்காக கொல்லப்பட்டனர் அப்பொழுது எல்லாம் நீங்கள் வாய் திறக்க வில்லை அமைதியாக இருந்தீர்கள். இந்த தமிழ்ச் சமூகத்தின் அங்கத்தினராக அன்று நீங்கள் உணரவில்லையா என்று கேட்டிருக்கிறார். அங்கு ஏகப்பட்ட த்ள்ளுமுள்ளுகள், ஏ.வி.எம் இராஜேந்திரனை நாங்கள் வளர்த்து எடுத்துள்ளோம் என்று கூற நீங்கள் கூறுவது எஸ்.எஸ். ஆரைப் பற்றி ஆனால் நாங்கள் கேட்பது அண்ணாமலை பல்க்லை மாணவன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாணவனைப் பற்றி என்று சென்று, கடைசியாக மாணவர்களில் ஒருவர் எங்களிடம் பணம் வாங்கினார் என்று மாணவர் ஜனார்த்தனம் என்பவரின் மீது குற்றச்சாட்டு வைக்கு அளவிற்கு போனது.

அப்பொழுது பி.எஸ்.வீரப்பா எழுந்து ”நான் கட்டிய வேட்டி துண்டோடு சிறு வயதில் பிழைக்க சென்னைக்கு வந்தவன், தமிழ் ரசிகர்களாகிய உங்களின் நல்லாதரவால் நான் தயாரித்த ஆலயமணி 100 நாள்களுக்கு மேல் நன்றாக ஓடியதால் இந்தியில் எடுத்தேன். இந்திப் போராட்டத்தால் அதில் நடித்த இந்தி நடிகர் காஷீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். எப்படியோ வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்பட்டு ஒருவாறு படத்தை முடித்தேன். இந்திப் படங்கள் வெளிவராமல் தடுக்கப்படுவதால் நான் வாங்கிய கடன் வட்டிக்கு மேல் வட்டி ஏறி வாட்டுகிறது” என்று ஒப்பாரி வைத்தார். 

இந்தப்படம் வெளியிட நீங்கள் அனுமதிக்காவிட்டால் என் குடி கோவிந்தா குடிதான், அப்படி அழிந்துவிடும் என்று குய்யோ முறையோ என்று அவலக்குரல் எழுப்பினார். அந்த நேரத்தில் கலைஞரின் பட நிறுவனத்தை சேர்ந்த ஒருவர், இந்தித் திரைப்படம் காட்டுவதை நாங்கள் தடுக்க மாட்டோம், மாணவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கருணாநிதி சொன்னதாக சொன்னார். பி.எஸ்.வீரப்பாவின் ஓப்பாரியை பார்த்து இலகியிருந்த மாணவர்கள், கருணாநிதியின் வேண்டுகோளையும் ஒரு சேர ஏற்று இந்திப் படத்தை திரையிடலாம் என்று அனுமதித்தனர். இனிமேல் தமிழ்நாட்டில் இருந்து எவரும் இந்திப்படம் தயாரிக்க கூடாது என்று நிபந்தனை விதித்து, தமிழ்த் திரையுலகினர் தயாரித்த இந்தி திரைப்படங்களை திரையிட அனுமதித்தனர்.

ஆம் இது 1968ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது நடந்தது இதற்கு முன்பு நடந்த போராட்டத்தின் கீழாகத் தான் திமுக ஆட்சியை பிடித்து இருந்தது, அவர்கள் திருடர்கள் ஆனாதை அறிந்து கொள்ள 2009 வரை நாம் காத்திருக்க வேண்டியதிருந்தது. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி தமிழ்த் திரையுலகினர் தங்களின் காசுக்கு மட்டும் வேலை பார்க்கும் புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை. இவர்களுக்காக தமிழர்களான நாம் போராட வேண்டும் என்று கூக்குரல் இடுவார்கள், சொத்தை விற்றுவிட்டு அந்நிய நாடு போகிறேன் என்று போக்கு காட்டுவார்கள். உண்மையான தமிழர் பிரச்சனைக்கு இவர்கள் என்றும் ஒன்று கூட மாட்டார்கள், அவர்களின் தொழில் தான் அவர்களுக்கு முக்கியம்.

இந்த உண்மையான நிகழ்வுகள் நடந்தது 1968ம் ஆண்டு அன்றும் சரி இன்றும் சரி தமிழ்த் திரையுலகத்தினர் தமிழர்களுக்கு ஆதரவாக நின்று போராட்டங்கள் செய்வது என்பது அரிதினும் அரிதாகிவிட்டது. ஆம் இதை கடந்த ஒரு வருடமாக ஈழத்தில் நம் இனம் படுகொலையான அவலத்தை சொல்லி தனக்கான கட்சியையும் சுற்றுவட்டாரத்தையும் வளர்த்துக் கொண்ட சீமான் இன்று புலிப்பார்வை, கத்தி போன்ற படங்கள் மட்டுமல்ல இனம் படத்தை எதிர்ப்பதாக காட்சி தந்தாலும் அதிலும் லிங்கு சாமி அப்படிப்பட்டவர் இல்லை என்று நற்சான்றிதழ் வாசித்தவர். இப்பொழுது கொம்பன் படத்திற்கும் மகுடி வாசிக்க ஆரம்பித்துள்ளார். ஆம் இவருக்கு தேவையானது இன நலமா இல்லை தன் நலமா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய தேவை நமக்கு உள்ளது. எனென்றால் இன நலம் என்றால் கொம்பன் படத்தை பார்த்துவிட்டு அதைக் குறித்து கருத்து தெரிவித்து இருக்க வேண்டும், ஆனால் அதை பார்க்கமலேயே தோழர். கிருஷ்ணசாமியுடன் விவாதங்களை கிளப்பியுள்ளார், அதுவும் தோழர் கிருஷ்ணசாமியுடன் தானும் படம் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லி, இதில் இவரின் தொழில் பற்று தான் தெரிகிறது.

ஒரு தவறான தொழிலுக்கு புரோக்கராக நின்று நுகர்வோரை அழைத்துவருபவருக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. இவரின் திரைத் துறை செழித்தோங்க வேண்டும் என்றால் அதற்குள் நின்று போராடட்டும் தமிழினத்தின் பெயரைச் சொல்லி, தமிழினத்த பகடைக் காயாக மாற்றி தனது தொழில் துறையினருக்காக அவலக் குரல் எழுப்பவது தான் இவரின் வாடிக்கை என்றால், தமிழ் கூறும் நல்லுலகம் இவரையும் புறம் தள்ளும்... 

Friday, March 20, 2015

தோழர் மணியரசனின் அவதூறுகளுக்கான பதில்கள்



16-02-2015ம் ஆண்டு திராவிடமா? தமிழ்தேசியமா? விவாதத்தில் தோழர் மணியரசன் அவர்கள் தான் ஏற்றுக்கொண்ட தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக திராவிடத்தின் மீது பல அவதூறுகளை விட்டெறிந்தார். ஆனால் ஒன்றை மறந்து விட்டார் வரலாறுகள் முன்பு போல் இல்லாமல் பலரால் பலவிதமாக பதிவு செய்யப்பட்டே வந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டார். இப்படிப் பட்ட அவதூறுகள் அவரைப்பற்றிய மதிப்பீட்டை இங்கு பல தோழர்களிடம் இழக்க நேரும் என்பதை மறந்துவிட்டார். முதலில் தலைப்பின் கீழாக தமிழ்த்தேசியத்தின் தேவையையும் அதை முன்னெடுக்க வேண்டிய முறையையும் பேசியிருந்தார் என்றால் நன்றாக இருந்திருக்க வேண்டும் அதை விடுத்து திராவிடத்தின் மீதும் பெரியாரின் மீது அவதூறுகளை அள்ளி வீசும் களமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் அவதூறாக ஆதிதிராவிடர் என்ற பதத்தை அயோத்தி தாசர் கைவிட்டார்.


அயோத்திதாச பண்டிதரும் ஆதி திரவிடர் பதமும்


முதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 1861லிருந்து 1881 வரையும் எடுக்கப்பட்டது, அதன் பிறகு சாதிவாரியாக மிகவும் குறிப்பாக ஒடுக்கபப்ட்ட மக்களின் கணக்கெடுப்பை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் 1910ம் ஆண்டும் முன்னெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் அதுவும் குறிப்பாக அன்றைய சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தனது அரசியல் போராட்டமாக பயன் படுத்திக்கொண்டவர் என்றால் அது அயோத்தி தாசராக தான் இருக்க முடியும். ஆம் 1861ல் இருந்து 1881 வரை ஒரு கணக்கெடுப்பில் கிருத்துவர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்துக்கள் என்று வலிந்து திணித்து ஒரு கணெக்கெடுப்பு எடுக்கபப்ட்ட பொழுது தாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லும் விதமாக 1881ம் ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது “சாதியற்ற தமிழர்கள்” என்று பதிவிடச் சொல்லி அரசாங்கத்திடம் மனு கொடுத்தார், ஆனால் 1910ம் ஆண்டு “சாதிபேதமற்ற திராவிடர்களென்று” பதிவிடக் கோரினார். 

“இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தாகளுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டுருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)

சரி தோழர் மணியரசன் 1881ல் “சாதியற்ற தமிழர்கள்” என்று அயோத்தி தாசர் மனு அளித்ததை வைத்து, அயோத்தி தாசர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் என்று கூறுகிறார். ஆனால் வரலாறு என்ன கூறுகிறது என்றால் 1881க்கு பிறகு தான் திராவிட என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்கிறார். 1881க்கு பிறகு பாதிரியார் ஜான் பாண்டியன் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது, ஜான் பாண்டியன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தலித்துகள் மட்டும் படிக்க கூடிய பள்ளியை நடத்தி வந்தார் அவருடன் இணைந்து 1886 ல் திராவிட பாண்டியன் என்ற இதழை பாதிரியார் ஜான் பாண்டியனுடன் இணைந்து ஆரம்பிக்கிறார். அதில் உதவி ஆசிரியராகவும் பணி புரிகிறார். 1907ம் ஆண்டு தனியாக “ஒரு பைசாத் தமிழன்” “தமிழன்” போன்ற பத்திரிக்கைகளை ஆரம்பிக்கிறார் ஆனால் 17-12-1910ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பாக “சாதி பேதமற்ற திராவிடர்கள்” என்று பதிவிட கோருகிறார்.

1881ல் சொன்னதை 1910ல் மாற்றிக் கொண்டார் என்றால் “சாதியற்ற தமிழர்கள்” என்பதில் இருந்து  1910ல் “சாதியற்ற திராவிடர்கள்” என்று தங்களை திராவிடர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார் இதை தலைகீழாக மாற்றியே தோழர் மணியரசன் வருட வித்தியாசங்களை மறைத்து அயோத்தி தாசர் தூக்கி எறிந்த திராவிடர் அடையாளத்தை பெரியார் வலுவில் திணித்தார் என்று குறிப்பிடுகிறார்.

தோழர் மணியரசனின் இந்த அவதூறுக்கான மறுப்பை இத்துடன் நாம் கடந்து சென்றுவிடலாம் ஆனால் அவ்வாறு கடந்து செல்வது சரியான வரலாற்று பார்வையாக இருக்க முடியாது. இந்த பிரச்சனை குறித்து மட்டும் பேசுவதாக முடிந்துவிடும், இன்று ஆதி திராவிடர்கள் என்று தமிழகத்தில் சட்டப்பூர்வமாக இருக்கிறது இது எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. 1914ல் அயோத்திதாச பண்டிதர் அய்யா இறந்துவிடுகிறார், 1912ம் ஆண்டு திரு நடேசன் அவர்களால் திராவிடர் சங்கம் தொடங்கப்படுகிறது இந்த சங்கமானது பார்ப்பனரல்லதோர் சங்கம் என்ற நிலையிலேயே ஆரம்பிக்கிறது. இதன் பிறகே நீதிகட்சியும் ஆரம்பிக்கிறது. நீதி கட்சியினர் திராவிட மகாஜனசபையினருடன் இணைந்து பார்ப்பனரல்லாதவர்கள் அரசியலை முன்னெடுக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் தோழர் எம்.சி.ராஜா அவர்கள் 1918ம் ஆண்டு ஆங்கில அராசங்காத்திடம் ஆதி திராவிடர் என்று அங்கீகரிக்க கோரிக்கை வைக்கிறார். 1920ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது. 1922ம் ஆம் ஆண்டு ஆதி திராவிடர் என்ற பெயர் அதிகார்ப் பூர்வமாக சாதியப் பட்டியலில் இடம் பெருகிறது.

இவ்வளவு பிரச்சனை செய்து பெயரை மாற்றி முன்னிறுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது என்று பார்ப்பதும் முக்கியம் “சாதியற்ற தமிழர்” என்று சொன்னவர் “சாதியற்ற திராவிடர்” என்று மாற்றிக்கொள்ள காரணம் என்ன என்று ஆராய்ந்தோம் என்றால். இன்றைய காலகட்டம் போல் ஒடுக்கப்பட்ட மக்களை அன்று தமிழர்களாக பார்த்தது இல்லை சாதி இந்துக்கள், பார்ப்பனரல்லோதோர் என்று ஒன்றிணைந்தாலும் சரி, பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, ஒடுக்கபப்ட்ட மக்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் மனிதர்களாகக் கூட மதித்ததில்லை என்பதை சமீபத்திய பரமக்குடி படுகொலைகள்  வரையிலான வரலாறுகளை படித்தோம் என்றால் நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகப்பெரும் முன்னோடியாக திகழ்பவர் தோழர் திரு.வி.க அவர்கள் 1921ம் ஆண்டு பின்னி ஆலையில் கூலி உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் வேலைக்கு செல்வதை தடுக்க முயன்ற தொழிற்சங்கத்தினரை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிலர் மரணமடைகின்றனர். இதனால் ஏற்பட்ட துவேசம் சாதியக் கலவரமாக மாறி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த புளியந்தோப்பு பகுதியில் 100 குடிசைகளை எரித்தனர் தொழிற்சங்கத்தை சேர்ந்த சாதிய இந்துக்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரும் மரணமடைந்தனர். இதற்கு எதிர்வினையாக புளியந்தோப்பில் இருந்து மக்கள் கிளம்பி பார்ப்பனரல்லாதார் வாழ்ந்த பெரம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தினர். பின்னர் புளியந்தோப்பு மக்கள் கலவரத்தை அடக்கும் நோக்குடன் அங்கிருந்து அகற்றபப்ட்ட முகாம்களில் தங்க வைக்கபப்ட்டனர்.  இந்த கலவரத்தை தொழிற்சங்கவாதியும் நவசக்தி இதழின் ஆசிரியருமான திரு.வி.க எழுதும் பொழுது “ஹரிஜனங்கள் தமிழர்களை சாரி சாரியாக வந்து தாக்கினர்” என்று குறிப்பிடுகிறார்.

இதன் பொருள் ஹரிஜனங்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒரு மாபெரும் தொழிற்சங்கவாதியே தமிழ்ர்களாக பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்து தர்மம் இவர்களை பஞ்சமர்கள் என்று கூறி ஒதுக்கியது என்றால் சக தமிழினத்தை சேர்ந்தவர்கள் இவர்களை தமிழர்களாக பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையே சாதியற்றவர்கள் என்றும் தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும் மேலும் சாதியற்ற திராவிடர்கள் என்றும் ஆதி திராவிடர்கள் என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள காரணமாக அமைந்தது.

இன்று தோழ்ர் மணியரசன் போர்ன்றவர்கள் தமிழ்தேசியம் என்ற பெயரில் தமிழர் பெருமை என்று கூறி திராவிடத்தில் ஒரு சிலர் செய்த பிரச்சனையை பெரிது படுத்தி ஒட்டுமொத்தமாக திராவிடம் என்ற வார்த்தையையும் வடுகர்கள் என்ற இனத்தையும் தமிழர்களுக்கு எதிராக சித்தரிப்பது தான் நடந்து கொண்டுள்ளது. தமிழ் தேசியம் தமிழின விடுதலை என்று பேசும் பொழுது அந்த விடுதலை எவ்வாறு அமையவேண்டும் என்று பார்த்தோம் என்றால் நம் வரலாற்றினை நன்றாக புரிந்துகொண்டு யாருக்கும் கெடுதி நினைக்காத அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியலே சரியான பாதையாக இருக்கும். முன்னெப்பொழுதும் இல்லாத நிலையில் இன்று திராவிடத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக் அயோத்திதாச பண்டிதர் அவர்களால் முன்னெடுக்கபப்ட்டு, நடேசன் அவர்களால் பார்ப்பனரல்லோதருக்காக என்று அடுத்த அடிக்கு நகர்த்தப்பட்டு, பெரியாரால் அனைவருக்கும் பொதுவான சொல்லாக எந்த கீழ்மையும் மேன்மையும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் திராவிடம் இல்லாத பெருமை பேசும் தமிழ் தேசியம் தமிழக்த்தில் தமிழரல்லாதோரின் மீதான இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். தமிழ் தேசியம் என்பது திராவிடத்தை ஒதுக்கிவிட்டு முன்செல்வது என்பது பாசிசமே.

தோழர் மணியரசன் அயோத்தி தாசர் குறித்த வாதத்தில் வரலாற்றை திரித்து பகிர்ந்த அவதூற்றை இங்கே வரலாற்றுடன் இணைந்து பார்த்தோம். இதன் பிறகு தோழர் மணியரசன் திராவிடம் என்ற வார்த்தை ஆரியன் மட்டுமே பயன்படுத்தியது அதனால் அதை மறுக்கிறோம் என்று கூறினார், மேலும் திராவிடம் என்பது தமிழனை ஊனமாக்கியது என்றார். இது கடைந்தெத்த பொய் வரலாற்றை மறைக்கும் செயல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ்ச் சமூகத்தில் பன்னெடுங்காலமாக உபயோகத்தில் இருக்கும் வார்த்தையே. கிபி 7ம் நூற்றாண்டிற்கு பிறகு தமிழில் பக்தி இலக்கியங்கள் கோலோச்சிய காலம் இந்த காலகட்டங்களின் தான் சைவ, வைணவத் திருமுறைகள் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அளவில் இயற்றப்பட்டது. இதே காலகட்டம் தான் தோழர் மணியரசன் குறிப்பிட்ட ஆதிசங்கரர் இயற்றிய செளந்தர்யலஹரியின் காலகட்டமும், இதை திரித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிசங்கரர் வாழ்ந்தார் என்பது ஆரியத்தின் புரட்டு. ஆதிசங்கரர் திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரை குறிப்பிட்டார் என்றால் திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் என்பது கிபி ஏழாம் நூற்றாண்டே. திருஞான சம்பந்தரால் குணமாக்கப்பட்ட கூன் பாண்டியன் என்ற அரிகேசரி பாண்டியன் ஆண்ட காலம் கிபி 640 முதல் கிபி 670 வரை. இந்த காலத்தில் வாழ்ந்த திருஞான்சம்பந்தரைப் பற்றி ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார் என்றால் ஆதிசங்கரர் வாழ்ந்த காலமும் 7ம் நூற்றாண்டே, ஆதிசங்கரர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது ஆரியப் புரட்டு இந்த ஆரியப்புரட்டைப் போலவே அய்யா மணியரசன் அவர்கள் திராவிடம் என்ற வார்த்தை ஆரியர்கள் மட்டும் பயன்படுத்தியது என்கிறார்.

அதற்கு ஆதாரமாக ராகுல் திராவிட், மணி திராவிட் என்று இருவரின் பெயரை காட்டுகிறார், மேலும் பார்ப்பனர்களில் இருக்கும் சாதிய வேறுபாடான வட இந்திய பார்ப்பனரையும் தென்னிந்திய பார்ப்பனரை பிரிக்கும் சொல்லான பஞ்ச திராவிட என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எல்லம சரி ஆனால் ராகுல் திராவிட் என்று இல்லை வெறும் திராவிட் என்று கூட பெயர் வைத்திருக்கலாம் ஒரு பார்ப்பனன். ஆனால் அவன் என்ன இனத்தவனாக தன்னை உணருகிறான் என்பது தான் பிரச்சனை. ராகுல் திராவிட்டிடமும் மணி திராவிட்டிடமும் ஏன் இந்த் பஞ்ச திராவிட இனத்தில் பிறந்த ஒவ்வொரு பார்ப்பனரிடமும் அவர்கள் என்ன இனம் என்று கேட்டால் தன்னை ஆரியன் என்றே விளித்துக் கொள்வான். இதன் கீழாகவே திராவிடன் என்று கூறும் பொழுது தமிழனுடன் இணைய மாட்டான் என்பதை கொண்டே திராவிடம் என்ற வார்த்தை தமிழின மீட்சியின் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதை அறியாமல் இல்லை தோழர் மணியரசன் அவருக்கு நன்றாகவே தெரியும் தமிழ் என்பது மொழியையும் தமிழர் என்பது அவர்களின் மொழி, வாழும் இடம் மற்றும் பண்பாட்டை சார்ந்து குறிக்கப்படும் பெயர் என்பது. அதாவது தமிழர் என்பது பண்பாட்டு சொல், திராவிடம் என்பது அரசியல் சொல். இதை நன்றாக அறிந்து இருந்தாலும் தோழர் மணியரசன் இதை மறைத்துவிட்டு திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நான்கையும் உள்ளடக்குவதே என்ற நோக்குடன் பேசி வருகிறார். ஆனால் பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே இதை உள்ளடக்கி பேசியது இல்லை. ஏன் தேவநேயப்பாவணர் தமிழ் என்பதை வடமொழியினர் தங்களின் மொழியில் திரமிளம் என்றும் திராவிடம் என்று குறித்துள்ளனர் என்பதை விளக்கியுள்ளார்.

 “வடநாட்டு ஆரிய நூல்களில் திராவிடம் என்னும் சொல் முதலாவது திரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியில் இல்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து த்ர, ப்ர எனப் புணர் எழுத்துக்களாகத் திரிப்பது வடநூலார் வழக்கம் எ.டு : படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம், இதனால் தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம் எனத்திரிந்தது. ள-ட, ம, வ போலி, திரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திராவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது. எனத் தமிழம் என்பதே த்ரமிளம் - திராவிடம் எனத் திரிந்ததாக” குறிப்பார். {திராவிடத் தாய், தேவநேயப் பாவாணர், பக். - 8}

இதில் தமிழைக் குறிக்க தான் திராவிடம் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்பதை தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதை விடுத்து திராவிடத்தில் நான்கு மொழி அடக்கம் அஞ்சு மொழி அடக்கும் என்பதோடு பெரியார் தமிழுக்காக போராடவில்லை என்று புருடாவிடுகின்றனர். சரி 1705ம் ஆண்டு பிறந்து 1742ல் மறைந்த தாயுமானவர் சாமிகள் திராவிடம் என்ற வார்த்தையை தனது பாடல்களில் உபயோகிக்கிறார். இவருக்கும் கால்டுவெல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கால்டுவெல் 1850களில் தான் வருகிறார், அதாவது ஒரு நூற்றாண்டு கழித்தே கால்டுவெல் வருகிறார். தாயுமானவர் தனது பாடலில் திராவிடம் என்ற சொல்லை தமிழுக்கு நிகராகவே பயன்படுத்துகிறார்.

கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!
- சித்தர்கணம்

இதில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்,  “வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்று வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன் என்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிவது திராவிடம் என்ற வார்த்தை கால்டுவெல்லோ, இல்லை அயோத்திதாச பண்டிதரோ, இல்லை பெரியாரோ கண்டுபிடித்தது இல்லை. திராவிடம் என்பது பரவலாக தமிழைக் குறிக்க அனைவராலும் பயன்படுத்தப் பட்ட வார்த்தையே, இந்த வார்த்தையை தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் ஏன் மலையாளத்திற்கும் தாரை வார்க்கும் முயற்சியையே இன்றை தமிழ்தேசியர்கள் செய்து வருகின்றனர். பெரியாரும் திராவிடம் என்ற வார்த்தையை தமிழுக்கு நிகராகவே உபயோகித்தார் என்றும் ஆந்திரர்கள், கர்நாடகத்தவர்கள், மலையாளிகள் மீது நன் மதிப்பையோ கொண்டிருந்தவர் இல்லை.

மேலும் இங்கு பொத்தம் பொதுவான சென்னை மாகாணம் என்பது ஆந்திரா, கேரளம், கர்நாடகம் என்று அனைத்தும் இணைந்து இருந்ததாக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்கள், இது முற்றிலும் பொய். ஆந்திரத்தின் ஒரு பகுதியும் கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளும், கேரளத்தின் ஒரு சில பகுதிகளுமே சென்னை மாகாணத்தில் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் பங்கனப்பள்ளி சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், மைசூர் சமஸ்தான் தனித்தே இயங்கி வந்தன. இவர்களுக்கு என்று தனி காவல் மற்றும் நீதித் துறை இருந்தது என்பதை வரலாற்றை படித்தவர்கள் நன்கு உணர்வார்கள். ஆங்கிலேயர் தங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவே சென்னை மாகாணம் இருந்தது இதில் ஒரு கணக்கெடுப்பில் சென்னை மாகாணத்தில் வாழந்த மக்கள் தொகை 4,93,410 பேர் இது 1941ம் ஆண்டு கணகெடுப்பு. 17.9.1954ல் பெரியார் தனது பிறந்த நாள் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் வாழும் பிறமொழியினர் என்ற தகவலில் குறிப்பிடுகிறார் மலையாளிகள் 8 சதவீதம், கர்நாடகர்கள் 5ம் சதவீதமும் இதைத் தவிர கிருத்துவர்கள் 4 சதவீதமும், முஸ்லீம்கள் 5 சதவீதமும் என்கிறார். இதில் கிருத்துவர்களில் எத்தனை பேர் தமிழர்கள் எத்தனை பேர் மலையாளிகள் என்ற தெளிவான கணக்கு இல்லாமல் இருந்து இருக்கலாம். சென்னை மாகணத்தில் அதுவும் ஆந்திரா பிரிந்து சென்ற பிறகு சொல்லப்படும் கணக்கு இது ஆந்திரர்கள் இருந்திருந்தாலும் அவர்கள் ஒரு 10 சதவீதம் என்று எடுத்துக் கொண்டாலும் மலையாளி, கர்நாடகர், மற்றும் ஆந்திரர் சேர்த்து 23சதவீதமே. பெரியாரின் கருத்தியல் என்பது தனிமனிதனின் சுயமரியாதையும் அவர்களின் முன்னேற்றமே இதை 1925ல் குடியரசு இதழ் ஆரம்பித்து முதல் பத்திரிக்கையின் தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறார்.

“எமது பத்திரிக்கையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.

ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய......... அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நன்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ,  நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிக்கையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.”  - குடியரசு - தலையங்கம் - 02/05/1925

மேலே இருக்கும் பதிவே பெரியாரின் நோக்கம் என்ன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தேசம், தேசியம் என்பவைகள் கற்பிதமே என்பதை மிகச் சரியாக உணர்ந்தவர் பெரியார். தன் சமூக மக்களின் முன்னேற்றத்தை விரும்பியவர் என்பதும் தெளிவாக தெரிகிறது. இதே தலையங்கத்தில் இன்னொரு பத்தியில்

“ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குறியார். இவ்வருங்குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பதிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ......................... வலிமையால் இப்பத்திரிக்கை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925

என்று குறிப்பிடுகிறார் அதாவது 23 சதவீத வேற்று மொழிக்காரர்களை விட 77 சதவீதம் வாழ்ந்த சென்னை மாகணத்தில் இருந்த தமிழர்களை குறிப்பிட்டு இது தமிழுழகம் என்றே குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் திராவிடம் என்ற பெயரை தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை இணைத்தே குறிப்பிட்டார் என்று இங்கே கட்டுக் கதைகள் பரப்புகின்றனர் சிலர். பெரியாரின் ஆந்திரர் குறித்த பார்வை.

“இது அரசியல் போராட்டமல்ல, இனப்போராட்டம், மனிதத் தன்மைப் பாதுகாப்புப் போராட்டம், தென்னாட்டவரின் மனிதத் தன்மையை அழித்து ஆரியவர்க்கத்தோடு சேர்த்துக் கொள்ளச் செய்யப்படும் சூழ்ச்சியின் முதல்படி தான் கட்டாய இந்தி நுழைப்பு. ஆகவே நாம் இதை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். ஒரு வேளை ஆந்திரர்கள் ஆரியவர்க்கத்தில் சேர்ந்துவிடுவார்களோ என்று கூட நினைக்க வேண்டியிருக்கிறது. எவ்வகையானும் இதை எதிர்த்து போராடியே தீருவோம். இப்போராட்டம் தென்னாட்டுச் சரித்திரத்தில் திராவிட நாட்டுச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளில்ல் பொறிக்கப்பட வேண்டிய மகோன்னதப் போராட்டம். இப்போராட்டத்தில் வெற்றியின்றேல் தமிழ்நாடு போம். தமிழ்க்கொடி போம், தமிழன் சிறப்பெல்லாம் தகர்ந்துபோம். நியாயம் நமது பக்கத்தில் தான் இருக்கிறது. தமிழ்காக்க வாரீர்! எங்களுக்கு வயதாகிவிட்டது! நாங்களும் வெற்றிகாண ஆசைப்படுகிறோம். ஆகவே தன்மானத் திராவிடர்களா! தமிழர்காள்! வெற்றிக்காணப் போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். சாவேன் அல்லது வெற்றியோடு மீள்வேன் என்ற உறுதியோடு முன்வாருங்கள்.”

என்று குறிப்பிடுகிறார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது அடுத்து மலையாளிகளை பற்றி நிறையவே எழுதியும் பேசியும் இருக்கிறார் அதில் 1954ம் ஆண்டு தனது பிறந்த நாள் அறிக்கையில் “மலையாளிகளின் தொல்லையே பெருந்தொல்லையாகும்” என்று கூறுகிறார்

“குறிப்பாகக் கூறவேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும்;, ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மாலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.”

இதில் தெளிவாகவே மலையாளிகளை பற்றிய தன் நிலைப்பாட்டை பெரியார் கூறியுள்ளார் அவர்களை எங்கும் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. இதைத் தவிர தட்சிணப்பிரதேசம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வேலூரில்  29.1.1956ம் தேதி பொதுக் கூட்டத்தில் பேசிய பொழுது மலையாளிகளின் சூழ்ச்சி தான் தட்சிணப்பிரதேச திட்டம் என்பதையும் விளக்கி மலையாளிகளை சுயமரியாதையோ, சுதந்திர புத்தியோ இல்லாதவர்கள் என்றும் அவர்கள் உத்யோகத்தில் அடிக்கும் கொள்ளை, பார்ப்பான் - மலையாளி உறவின் கீழாக தமிழர்களுக்கு இழைத்தத் துரோகத்தனைத்தையும் விளக்கி இருப்பார். ஆனால் திராவிடம் என்றால் தெலுங்கர், கன்னடர், மலையாளி உட்பட என்று தொடர்ந்து கட்டுக்கதைகள் அமைத்து வருகிறார்கள் அந்த வேலையை பெரியாரை படித்த தோழர் மணியரசனும் செய்கிறார், பாவம் அவர் சார்ந்து நிற்கும் பார்ப்பனிய தமிழ்தேசியம் இவ்வாறு அவரை செய்ய வைக்கிறது போலும்.

இப்படி ஆரியச் சார்புடைய தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவர்களை அவர் என்றும் கண்டுகொண்டதில்லை தமிழை ஆரியத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடனே செயல்பட்டார். 1900 ஆரம்பங்களில் தமிழ் மொழி என்பது மணிபிரளாவ நடைமொழியில் முழுவதுமாக கலப்புற்று வடமொழி வார்த்தைகளுடனே பயின்று வந்தது அதை மாற்றவே தனி தமிழ் இயக்கம் காணப்பட்டது, மறைமலை அடிகள் மிகப்பெரும் வேலைகள் செய்தார், அவருடன் இணைந்து பெரியாரும் நின்றார். விடுதலை, குடியரசு போன்ற இதழ்களே மறைமலையடிகளின் மாற்றங்களை முன்னின்று செயல்படுத்தியவை. இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் என்றே இருந்த பெரியாரின் திராவிட இயக்கத்தை போகிற போக்கில் தமிழை ஊணமாக்கியது என்கிறார் தோழர் மணியரசன். பார்ப்பனரல்லாதவர்கள் கட்சி என்ற சொல்லி நீதிகட்சி போராடிய பொழுது அவர்களையும் விட்டுவைக்கவில்லை பெரியார். திராவிடம் என்று தன் இயக்கத்திற்கு பெயர் சூட்டியதற்கான காரணத்தை விளக்கும் இடத்தில் அதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“நாம் இந்தியர் என்பதை மறுக்கிற படியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் ‘திராவிடர்’ எனும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மை குறிக்க பார்ப்பனரல்லாதார் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக்கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நான் ஏன் அல்லாதார் ஆக வேண்டும்...

...மேலும் நமக்குத் ‘திராவிடர்’ என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெர்யராகும்? பார்ப்பனர் அல்லாதார் என்பதா? பார்ப்பனர் அல்லாதார் எனக் கூறிக்கொள்ளும் ஜஸ்டிஸ்கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்? நடை, உடை, பாவனைகளில், மதத்துறையில், வேஷத்தில், பார்ப்பனரைவிட இரண்டுமடங்காகவல்லவா இருக்கின்றார்கள்!...

திராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல், பெரிய வரலாறுகள் வரையில் எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. கலாச்சாரங்களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன” கோ-வேள்நம்பி, தமிழனை உயர்த்திய தலைமகன், பக்கம் - 21

இதில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார் திராவிடம் என்பது பலராலும் அன்றை காலகட்டத்தில் உபயோகிக்கப்பட்டு வரலாற்று சான்றுகளுடன் இருப்பதாலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறார், மேலும் பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மை மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட நீதி கட்சியினரின் நடை, உடை பாவனைகளை போட்டு கிழித்தெறிகிறார். பார்ப்பனர்களின் பழக்கவழக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட சமூகமாகவே அன்றை தமிழ்ச் சமூகம் இருந்து இருக்கிறது இதை உடைத்து தமிழ் பண்பாட்டையும் தமிழரையும் மீட்டு எடுத்தது பெரியாரின் திராவிடக் கொள்கையே அன்றி வேறெதுவும் இல்லை. ஆனால் ஆரியக் கொள்கையை ஏற்றுக் கொண்ட தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் மொத்தமாக வடமொழி தாக்கத்திற்குள் உள்ளாகி நிற்கிறது. தமிழ் தனித்து இயங்கிக் கொண்டு இருக்கிறது, இதில் மணிப்பிரளாவ மொழியின் தாக்கத்தை தோழர் மணியரசன் மறுக்கவும் முடியாது. இப்படி அத்தனை வகையிலும் தமிழுக்கு உதவிய திராவிடத்தை யாரோ இருவர் திராவிட் என்று பெயர் வைத்ததனால் நொள்ளை நொட்டை என்கிறார்.

கடைசியாக பெரியார் ஆங்கிலத்தையே தூக்கி பிடித்தார் என்கின்றார், பெரியார் மொழி குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் பேசியதையும் மறந்துவிட்டார். 1965க்கு முன்பாக இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது அப்பொழுது பெரியார் சொன்னதையும் மறந்துவிட்டார்.

‘வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்’.

தெளிவாக கூறுகிறார் சென்னை மாகாணம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் வாழும் இடம் என்று. மேலும் தமிழை மீட்டெடுக்கவே போராடினேன் என்பதை தெளிவாக கூறுகிறார். மேலும் ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை

1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது.

(பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)

ஆங்கிலத்தை அவர் ஏற்றுக் கொண்டது என்பது தமிழ் மொழியை அழிக்க என்பது போல் கதைகட்டுவது தான் இங்கு நடக்கிறது. அவரின் தமிழ், தமிழர் மீதான கவலை மேலே இருக்கும் பதிவுகளில் நன்றாக தெரியும், தன் பொது வாழ்வில் அவர் என்று தமிழ் மக்களுடனின் மேன்மையை குறித்தே சிந்தித்து வந்துள்ளார் என்பதும் புரியும். அவர் வீட்டு வேலைக்காரியுடன் தமிழில் பேசச் சொன்னார் என்பதால் அவர் தமிழை அழிக்க நினைத்தார் என்று கூறுகிறார்கள். பெரியார் காலத்தில் ஊடகங்கள் என்பது இன்று இருபப்து போல் இருந்தது கிடையாது, அதனாலே தனது கருத்துகளை நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதை கேட்டுவிட்டு செல்லும் ஒருவன் அடுத்தவனுக்கு எடுத்துக் கூறும் பொழுது அந்த நகைச்சுவையில் மேலும் மெருகேற்றி சொல்வார், இதனால் வெகு வேகமாக கருத்துக்கள் பரவும் என்ற நோக்கிலேயே அவர் செய்து வந்திருக்கலாம். இதே போன்று தான் வேலைக்காரியுடனும் தமிழில் பேசுங்கள் என்று சொன்னது அன்றைய காலகட்டத்தில் மட்டும் அல்ல இன்று வரை தனது வீட்டில் எத்தனை தமிழன் வேலைக்காரி வைக்கும் நிலையில் இருக்கிறார் என்பதை ஆராய்நதாலே புரியும். ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை உணர்த்துவதற்கு கூறினாரே ஒழிய தமிழை அழிக்கும் நோக்கத்துடன் கூறினார் என்பது எல்லாம் மொள்ளமாறித்தனம்.

அப்படி தமிழை அழிப்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தால் 11/9/1938ம் ஆண்டு திருவல்லிக் கேணி கடற்கரையில் நாவலர் சோசுந்தர பாரதி, மறைமலை அடிகள் போன்றோரை அழைத்து நடத்திய கூட்டத்திலேயே தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பெரியாரின் பெருந்தொண்டர் திருச்சி உறையூரிலில் இருந்து கால்நடையாக இந்தி திணிப்பை எதிர்த்து அமைதியாக சென்னை வரை ஊர்வலமாக நடந்து வந்து இராஜியின் வீட்டை முற்றுகை இட்டனர். இந்த முற்றுகைகாக சென்னை வரை நடந்து வந்த தோழர்களை வரவேற்கவே திருவல்லிக் கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டினார். அதிலே தான் “தமிழ்நாடு தமிழருக்கு” என்று முழக்கம் வைக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட் 1,50,000 மக்கள் கலந்து கொண்டனர். இப்படி 1938லும் 1952லும் மிகவும் அமைதியான கிளர்ச்சிகள் மூலம் இந்தி திணிப்பை தடுத்தவர் தான் பெரியார், 1965ல் பெரும் உயிரிழப்புகளுடன் நடைபெற்ற கிளர்ச்சியை பார்த்து கண்டிப்பாக மணம் நொந்து தான் திமுகவை மிகவும் காட்டமாக சாடினார். தமிழை பிழைக்க உபயோகிக்கிறார்கள் என்றார் அதை விடுத்து தமிழை அழிக்க நினைக்கவில்லை அப்படி அழிக்க நினைத்திருந்தால் 1938லேயே இந்தி திணிப்பை அங்கீகரித்து அமைதியாய் இருந்து இருக்கலாம். ஏன் 7/03/1926லேயே இந்தி திணிப்பற்றிய கட்டுரையை சித்திர குப்தன் என்ற பெயரில் “தமிழுக்கு துரோகமும், இந்தி பாஷையின் இராகசியமும்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

11-09-1938அன்றே தமிழ்நாடு தமிழருக்கு என்பதை எப்படி முன்னெடுக்க வேண்டும் தனது தோழர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் வழியுறுத்தினார் இதை இது வரை பெரியாரின் திராவிட இயக்கத்தை சரியாக பின்பற்றும் இயக்கங்களும் அதன் தோழர்களும் செய்து வருகின்றனர். தமிழ் தேசியம் என்று சொல்லிக் கொண்டு பெரியாரின் மீது அவதூறு பரப்புபவர்கள் செய்வதில்லை..

“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை - இழிதன்மை - வேறு என்ன என சிந்தியுங்கள்.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!

தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழ்நாடு தமிழருக்கே!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!”

குடி அரசு - தலையங்கம் - 23.10.1938

இங்கே தமிழ் தேசியம் என்று பேசுபவர்கள் இது வரை 1000 பேரை கூட்டி ஒரு கூட்டத்தை போட்டதில்லை ஆனால் 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்களே 1000க்கும் மேலானவர்கள். அதுவும் பெண்கள் உட்பட குழந்தைகளுடன் சிறை சென்றவர்களும் 100க்கும் மேற்பட்டவர்கள். பெரியார் தமிழ் சமூகத்திற்காக தன் வாழ் நாள் முழுவதும் வேலை செய்தார் மக்களுடன் மக்களாக வாழ்ந்தார் அதனாலேயே அவர் பின்னால் இத்தனை ஆயிரம் மக்கள் திரண்டனர், ஏன் அவர் இறந்த பிறகும் கூட இன்னும் பெரியாரின் வழியில் சென்று கொண்டு இருக்கின்றனர். ஏன் பெரியார் வழியை ஏற்காத ஆத்திகர்கள் கூட பெரியாருக்கு முன்பு தாங்கள் கடைபிடித்த பழ மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழித்து கொஞ்சம் நாகரீகத் தன்மையையுடன் நடந்து வருகிறார்கள். இதில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்களே இன்று பெரியாரை தூற்றுவதே தமிழ்த்தேசியம் என்று பேசி வருகின்றனர்.

பெரியார் ஒரு சிந்தனைவாதி இல்லை அதனால் தான் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை என்ற அரும்பெரும் கருத்தை உதிர்த்து இருக்கிறார் தோழர் மணியரசன் பாவம் என்ன செய்வது தனது கருத்தான் பெரியார் தமிழருக்கு துரோகம் இழைத்தார் என்பதற்கு நேர் எதிரிடையான சாட்சியை அவரே கொடுத்துள்ளார். ஆம் பெரியார் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை தான் காரணம் அவர் தான் வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் இழிநிலையை போக்குவதற்காக சிந்தித்தார் செயல்பட்டார் அதனாலே தமிழ் நாட்டை விட்டு வெளியே போகவில்லை.

Sunday, February 8, 2015

சில்லுவண்டுகளுக்கு பதில் - தமிழக எல்லைப் போராட்டமும் பெரியாரும்


எல்லைப் போராட்டத்தில் திராவிடம் துரோகம் இழைத்துவிட்டது என்று குதியோ குதி என்று குதிக்கிறார்கள் இங்கே சிலர்.  திராவிட இயக்கத்தைப்பற்றிய எந்தவிதமான அடிப்படை அறிவும் இவர்களிடம் இல்லை என்பதை நன்றாக எடுத்துக் காட்டுகிறது இவர்களின் இந்த குதியாட்டம். முதலில் பெரியார் ஏற்படுத்தியது நீதிகட்சியோ திராவிடர் கழகமோ அல்ல, சுயமரியாதைக் கழகமே. அதன் பின்னர் நீதி கட்சியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதன் தலைமையை ஏற்றுக் கொண்டார். பின்னால் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நீதிகட்சியை தேர்தல் அரசியலில் இருந்து விலக்கி திராவிடர் கழகம் என்ற அமைப்பாக மாற்றினார். 1938ல் சென்னை மாகாணமாக இருந்த பொழுதே தமிழ்நாடு தமிழர் என்ற முழக்கத்தை மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதி என்று அனைவருடன் இணைந்து முன்னெடுத்தார்.

இந்திய சுதந்திரத்தினை குறித்த காலகட்டங்களில் இந்தியாவிற்குள் இல்லாத சுதந்திர திராவிடஸ்தான் என்று தனி நாட்டையே வலியுறுத்தி வந்தார், இதற்காக சர். ஏ.டி.பன்னீர்செல்வம் லண்டன் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்கிற வழியில் விமானவிபத்தில் இறந்தார். சென்னை மாகணத்தை ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திர நாடாக தனி நாடாக பெற வேண்டும் என்றே விரும்பினார், இந்தியத்தின் அடிமைநாடாக இருக்க விரும்பவில்லை. அதன்பிறகு இந்திய சுதந்திரத்தின் ஊடாக சென்னை மாகாணம் இந்தியத்தின் அடிமையான பிறகு தொடர்ந்து சுதந்திரத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்தவர் தான் பெரியார்.

இந்த காலகட்டங்களில் தான் மொழிவழி மாநிலக் கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது காங்கிரஸ் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிவழி மாநிலக் கோரிக்கை நேரு பதவிக்கு வந்த பிறகு தள்ளி வைக்கப்படுகிறது. மொழிவழியாக இப்பொழுது மாநிலங்களை பிரித்தால் பிற்காலத்தில் நாட்டின் பிரிவினைக் கோரிக்கையாக வலுப்பெறக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களும் இதை விரும்பாமல் இருந்துள்ளனர். ஆனால் ஆந்திராவில் எழுந்த வீரமிகு போராட்டத்தின் விளைவாக ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது அதன் பிறகு மற்ற பகுதிகளை குறித்த மாநிலப் பிரிவினையையும் மத்தியில் ஆண்ட நேரு அரசாங்கம் தவிர்க்க தன்னாலன அனைத்து முயற்சிகளையும் செய்த்து. அப்பொழுது தட்ஷிணப் பிரதேசம் என்ற ஒரு திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அதாவது திருவனந்தபுரம், கொச்சி சமஸ்தான்ங்கள், சென்னை மாகனம், மங்களூர் பகுதிகள் என்று அனைத்தையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிப்பதற்கு முயற்சி நடந்தது. இதை பெரியார் முற்றிலுமாக மறுத்தார் தமிழ்நாடு என்று மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிகையையும் வைத்தார். இதை காமராஜரிடம் தெரிவித்து காமராஜரும் பெரியார் தட்சிணப்பிரதேசத்தை எதிர்க்கிறார் என்ற செய்தியை நேருவிடம் கொண்டு சேர்த்தார். ஆனால் தமிழக எல்லைப் போராட்ட வரலாறு என்று சொல்லப்படும் மா.பொ.சி புத்தகத்தில் இருந்து மற்ற அனைத்து புத்தகங்களிலும். தமிழக எல்லைப் போராட்ட வரலாற்றினுடாக இந்த தட்சிணப் பிரதேச வரலாறு மறைக்கப்பட்டே வருகிறது.  

இதே சமயத்தில் தான் காங்கிரஸில் உறுப்பினராக இருந்து கொண்டே ராஜாஜியின் வழிகாட்டுதலின் கீழ் 1948ல் ஆரம்பிக்கப்பட்ட  “தமிழரசு கழகம்” தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழ்நாடு சுதந்திர நாடாக்கியே தீர்வோம் என்று குரல் எழுப்புகிறது. இப்படியான ஒரு அமைப்பை துவங்க வேண்டிய தேவை அவர்களுக்கு வந்த காரணம், பெரியார் எனும் ஆளுமையால் காங்கிரஸ் மற்றும் ராஜாஜியின் தமிழர் விரோதப் போக்கு மக்களிடையே தோலுரிக்கப்பட்டிருந்தது. தமிழர் உணர்வு சென்னை மாகாணம் முழுவதும் வளர்த்தெடுக்கப்பட்டு இருந்தது. இந்த தமிழர் உணர்வை காங்கிரஸுக்கு சாதகமாக அறுவடை செய்யும் நோக்கத்துடனேயே “தமிழரசு கழகம்” தொடங்கப்பட்டது. தமிழரசு கழகம் எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்தது போல் வரலாறு கட்டமைக்கப் பட்டுள்ளது. தமிழக எல்லை போராட்டத்தை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். தெற்கெல்லைப் போராட்டம், வடக்கெல்லை போராட்டம் என்று இதில் இரண்டு போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள், அந்த பகுதியை சேர்ந்தவர்களே.

தெற்கெல்லைப் போராட்ட்த்தில் நதானியல், நேசமணி போன்றோர்களாலும், வடக்கெல்லைப் போராட்டம் மங்களக் கிழார் போன்றோராலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் மா.பொ.சி போன்றவர்கள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவது என்று பெரியாரிடம் பேச ஆரம்பிக்கிறார்கள். பெரியார் சுதந்திரத் தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், ஒரு இந்திய தேசியத்திற்குள் ஒரு அடிமை மாநிலமாக இருப்பதற்கான எல்லைப் போராட்டத்தை குறித்து மறுத்திருக்க வேண்டும் ஆனால் எல்லைப் போராட்ட கோரிகையையும் ஏற்றுக் கொண்டார் ஆனால் தனது கோரிக்கைகளையும் கூறி அதையும் சேர்த்துக் கொண்டு போராட்ட்த்தை முன்னெடுக்கலாம் என்று 19/01/1956ம் ஆண்டு பெரியாரும் மபொசியும் சந்தித்த பொழுது முடிவெடுக்கின்றனர். அப்பொழுது ஐந்து கோரிக்கைகளின் கீழ போராடலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது அந்த 5 கோரிக்கைகள்...

  1. எல்லைக்கமிஷன் என்பது எல்லையை வரையறுப்பதில் தமிழ் மக்களுக்கு செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.
  2. இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும் இந்திய தேசிய மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு பலவழிகளிலும் அரசாங்கம் முயற்சிப்பதை தடுப்பது
  3. யூனியன் ஆட்சி என்பதில் படை போக்குவரத்து, வெளிநாடு உறவு இவை தவிர்த்த மற்ற ஆட்சியின் உரிமைகள் அனைத்தும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். {மாநில சுயாட்சி}
  4. தமிழ்நாட்டுக்கு தமிழில் சென்னை என்றும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்று பெயரிட்டிருப்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரையே இருக்கும்படி செய்ய வேண்டும்.
  5. தமிழ்நாட்டை தென்மண்டலம் {தட்சிணப் பிரதேசம்} என்ற அமைப்பு முறையின்படி மற்ற நாடுகளுடன் இணைக்க திட்டமிட்டிருப்பதை எதிர்ப்பது. 


இந்த ஐந்து கோரிக்கைகளில் மாநில சுயாட்சியை தந்தை பெரியார் வலியுறுத்தியிருப்பதே அவரின் அதுவரையிலான கொள்கைக்கு முரணானது ஆனால் அனைவருடன் இணைந்து செல்ல வேண்டும் என்ற வகையில் தனது கொள்கையில் ஒன்றைமட்டும் விட்டுக் கொடுத்து மாநில சுயாட்சிக்கு இணங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம். இந்த ஐந்து கோரிக்கைகளையும் பெரியார் மற்றும் மபொசியும் ஒத்துக் கொண்டு போராடுவது என்று முடிவெடுத்தனர். இந்த போராட்ட்த்தில் மேலும் திராவிட பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் சுயம்பிரகாசம், ஜஸ்டிஸ் கட்சி சர்.பி.டி. ராஜன், கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சித் தோழர்களையும் இணைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள். அப்பொழுது மபொசி கண்ணீர் துளிகளை {திமுக} இணைக்கலாமா என்ற பொழுது தேவையில்லை அவர்களால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை, கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக அவர்களை இணைத்துக் கொள்வதில் பயனில்லை, வேலை செய்யக் கூடிய திறமையுள்ளவர்களை மட்டும் இணைத்துக் கொள்ளலாம் என்று பெரியாரும் சொல்லியிருக்கிறார். இப்படி மொழிப் போராட்டம் அனைவரையும் இணைத்து நடைபெற வேண்டிய அடித்தளம் போடப்பட்டது.

ஆனால் இத்தனையும் பேசிவிட்டு சென்ற மபொசி அதன்பிறகு போராட்ட முன்னெடுப்பு குறித்தும் கோரிக்கைகளை வரையறுப்பது குறித்தும் முடிவெடுப்பதற்கு அனைவரும் இணைந்து பேசுவதற்கான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் ஒரு கடிதம் 20-1-1956 அன்று மபொசி அனுப்புகிறார், அப்படி கடிதம் அனுப்பியிருப்பது குறித்த ஒரு தந்தியும் அனுப்புகிறார் மபொசி. ஆனால் 20ம் தேதி தந்தி வந்து சேர்கிறது ஆனால் 21ம் தேதி கடிதம் வந்து சேரவில்லை. எனவே 21ம் தேதி அந்த கடிதம் வந்து சேரவில்லை என்பதை மபொசிக்கு பெரியார் தந்தியின் மூலம் தெரிவிக்கிறார். ஆனால் 22ம் தேதி மறுநாள் கடிதம் பெரியாரை வந்தடைகிறது. அந்த கடிதத்தில் 5 கோரிக்கைகள் மூன்றாக மாறியிருந்தது அதிலும் திருத்தங்களுடன் இருந்தது. கடித்த்தில் வரையறுக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் பின்வருமாறு.

  1. தமிழக எல்லை பகுதி வரையறுத்தல்
  2. தமிழகம் என்று பெயரிடுவது
  3. இந்தி திணிப்பை எதிர்ப்பது


இந்த கடிதம் மபொசியும் பெரியாரும் சந்தித்த 19-01-1956ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் கழித்து 22-01-1956 அன்று பெரியாரின் கைக்கு கிடைக்கிறது. மேலும் அதில் கையெழுத்து இடும் பகுதியில் ஐந்து பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் ம.பொ.சி கையெழுத்து போட்டிருந்தார். முதல் இடத்தில் பெரியாருக்கு ஒதுக்கியிருந்தார். மேலும் ‘கண்ணீர் துளி’ அமைப்பின் சார்பில் கையெழுத்து போட தங்களின் விருப்பத்தையும் கூறுமாறு மபொசி கேட்டிருந்தார்.  கூட்டம் நடக்கும் இடம் தேதியை பெரியார் முடிவு செய்து அறிவிக்க சொல்லி அந்த பகுதியை காலியாகவிட்டிருந்தார்.

இதற்கு நடுவில் சென்னையில் இருந்த குத்தூசி குருசாமி அவர்களை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து இன்று மாலை ஒரு ஆலோசனைக் கூட்டம் தாங்கள் வர இயலுமா என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் பெரியார் திருச்சியில் இருந்தே அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார், சென்னையில் நிரந்தரமாக தங்கியது இல்லை. குத்தூசி குருசாமி பெரியார் அவர்கள் சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் இணைத்தால் தான் பெரியார் ஏற்றுக் கொள்வார் என்று சொல்லியிருக்கிறார். 26-01-2015 அன்று மா.பொ.சியிடமிருந்து திருச்சிக்கு பெரியாருக்கு அடுத்து ஒரு அச்சிட்ட அழைப்பிதழ் வருகிறது அதில் 27-01-1956 அன்று மாலை 4 மணிக்கு மபொசியின் நண்பரின் உமா பத்திரிக்கை அலுவலகம், சென்னையில் சர்வகட்சிக் கூட்டம் என்று மா.பொ.சி மட்டும் கையெழுத்திட்ட அழைப்பிதழ் வந்து சேர்ந்தது.

முதலில் பெரியாரிடம் ஒத்துக் கொண்ட 5 கோரிக்கைகள் அடுத்து 3 கோரிக்கை ஆனது, கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக சர்வ கட்சிக் கூட்டம் “எல்லைப் பிரச்சனை” என்ற ஒரு கோரிக்கையின் கீழாக வந்து நின்றது. பெரியார் சுதந்திரம் தனிநாடு என்பதை விடுத்து மாநில சுயாட்சி என்பதை ஏற்றுக் கொண்டதே பெரிய விசயம் அதில் மாநில சுயாட்சியையும் தூக்கிவிட்டார்கள் அடுத்து தமிழ்நாடு என்பதை சுருக்கி தமிழகம் என்று மட்டுமே குறித்து அழைப்பிதழ் இருந்தது. பெரியாரின் கட்டுரைகள் படித்த அனைவருக்குமே தெரியும் தமிழர்கள் தமிழ்நாடு என்று குறிப்பிட்டே எப்பொழுதும் எழுதுவார்கள் ஆனால் இதெல்லாம் இல்லாத போராட்டத்தை முன்னெடுக்க பெரியார் மபொசியுடன் இணைந்து முன்வருவாரா என்ன. சரி தனியாக போராட்டத்தை முன்னெடுத்து இருக்கலாமே என்று சிலர் கேட்ப்பார்கள் அவர் எடுக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் நடந்த அரசியல் வரலாற்றை தெரியாதவர்கள் இன்று வந்து சில்லுவண்டுகள் போல் குதிக்கின்றனர் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம் இவர்களை.

முதலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றுடன் இன்று வரை இணைந்திருக்கும் தமிழர்கள் பகுதிகளை குறித்த பெரியார் என்ன பார்வை கொண்டிருந்தார் என்பதை அவரின் வழியாக தெரிந்து கொள்வது தான் சரியான பார்வை.

7-01-1953 மற்றும் 8-01-1953 அன்று விடுதலையில் பெரியார் ஆற்றிய உரையாக வெளியிடப்பட்டதில் இருந்து

”ஆந்திரமொழியைப் பேசுகின்ற மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்த்துக் கொள்வதில் நமக்கு ஆட்சேபமில்லை, தமிழ்மொழி பேசும் மக்களை பெருவாரியாகக் கொண்ட நாட்டை ஆந்திராவோடு சேர்க்கவேண்டும் என்பது எப்படி, மொழிவாரி மாகாணப் பிரிவினை என்று சொல்ல முடியும்?

அடுத்தாற்போல், அதுபோலவே இன்றைய அனுபவத்தில் தமிழ் மொழி அதிகமாகப் பேசும் மக்களின் பிரதேசம் ஆந்திர நாட்டிலே சேர்ந்தாலுங்கூட, அவர்களுக்கு மொழிவாரிப் பிரேதச உரிமையை உத்தேசித்து எந்த நிமிசத்திலும் விலகிக் கொள்ள கிளர்ச்சி செய்ய உரிமை உண்டு. அதை நாம் மறுக்கவில்லை; நம்மாலான உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால் நம்முடைய சொந்த பிழைப்பையோ, சுயநலத்தையோ, விளம்பரத்தையோ உத்தேசித்து இன்றைக்குத் தான் இந்த சங்கதி தெரிந்தது போல் பாவனை காட்டிக்கொண்டு கூத்தாட நமக்கு இஷ்டமில்லை.”

1956ல் மபொசி அனைத்துக் கட்சி கூட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார், அதற்கு மூன்று வருடம் முன்பாகவே மற்ற மாநிலங்களுடன் இருக்கும் தமிழ் அதிகம் பேசும் மக்கள் தமிழ்நாட்டுடன் இணைய கிளர்ச்சி செய்ய உரிமை பெற்றவர்கள் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று 1953ம் ஆண்டே சொன்னவர். இப்படி தமிழ்நாட்டினைப் பற்றியும் தமிழரைப்பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தவர் தான் பெரியார், மேலும் இதன் கீழாக விளம்பரம் செய்து கொள்வது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டியவர் பெரியார். இங்கே மபொசியை தூக்கி பிடித்துக் கொண்டு அவர் தான் ”முதலமைச்சு தமிழ்தேசியத்தின்” மண்ணுரிமைப் போராளி என்கிறார்கள். 1945ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சி மலைக்கோட்டையில் இலக்கியக் கூட்டத்தில் “புதிய தமிழகம்” என்ற சொற்பழிவை நிகழ்த்துகிறார். அன்றிலிருந்து 1956 வரை அவர் தமிழகம் என்ற சொல்லாடலையே உபயோகிக்கிறார். பெரியார் 1930களில் இருந்தே தமிழ்நாடு என்ற சொல்லாடலை உபயோகிக்கிறார். தமிழர் பகுதி என்பதில் நாடு என்ற வார்த்தையை தவிர்க்கவே மத்திய அரசும் மொழிவாரி பிரிவினையின் போது முயன்றது அதன் கீழாக சென்னை மாகாணம் என்று தமிழிலும் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு வந்தது. தமிழ் நாடு என்று பெயர் வைக்க சங்கரலிங்கம் உயிர்விட வேண்டியது ஆனது.

இதைப் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இங்கே தாந்தோன்றித் தனமாக சிலர் குதித்துக் கொண்டுள்ளனர், என்ன செய்வது அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்து அவர்களின் அறியாமை இருளில் இருந்து வெளிக்கொணர முயல்வோம். எல்லைப் போராட்டத்தில் மிகவும் முக்கியமானவராக மபொசியை காட்டினாலும் தெற்கெல்லை போராட்டத்தினை முன்னெடுத்து இன்று வரை குமரியின் தந்தையாக மதிக்கப்படும் மார்சல் நேசமணி அவர்களின் வரலாற்றை குறித்த “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்” என்ற புத்தகத்தின் முன்னுரையில் தெற்கெல்லை போராட்டத்தில் பங்கு கொண்ட அப்துல் ரசாக் M.A, LLB, இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. 

கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், திருவிதாங்கூர் காவல்துறை அடக்குமுறையின் கீழாக 

““கண்ணில் கண்டவர்களை, “கண்டால் அறியும் பள்ளி” என்று கூறிக் கைது செய்தனர். நான் போலிசுக்கு பிடி கொடுக்காமல் வாழ்ந்தேன். திருவிதாங்கூரில் நடந்த தமிழகப் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறிச் செயல்பட்டது. பலரைத் துப்பாக்கிக்கு இரையாக்கியும் பலரை சித்திரவதை செய்தும் பலரை துன்புறுத்தியும் கைது செய்தனர். தமிழக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்ற வந்த ம.பொ.சி சொற்பொழிவு ஆற்றாமலேயே திரும்பிச் சென்றார்.

ஆனால் பெரியார் ஈ.வே.ரா மட்டும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் நிலைமையை மார்ஷல் நேசமணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதன் பின்னணியாகச் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு கூட்டத்தைப் போட்டு, “திருவிதாங்கூரில் போலீஸ் அடுக்குமுறையை உடனடியாக நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் வாழும் மலையாளிகளை நாங்கள் இங்கிருந்து அடித்து துரத்துவோம்” என்று பொதுக்கூட்டத்தில் அறிக்கை விட்டார். மலையாள அரசு தமிழனைத் துன்புறுத்தியதை நிறுத்தியது.

மார்ஷல் நேசமணி தன் கையால் மாலை அணிவித்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரும் மார்ஷல் நேசமணி மீது மிக்க மதிப்பு வைத்திருந்தார்””

இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் தான் தமிழகத்தின் எல்லைகளை விட்டுக் கொடுக்க காரணம் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் தனித் சுதந்திர தமிழ்நாட்டை கேட்டவர் அது ஒரு சிறுபகுதியாக இருந்தாலும் போதும் அந்த சுதந்திரத் தமிழ்நாட்டின் மானமுடன், சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்று நினைத்தவர். இவர்களுக்காக காவடி எடுத்து ஆட வேண்டிய வேலையை அவர் செய்ய இயலாது. 

ஒரு நாட்டின் வரலாறு என்பது ஒரு பக்கமான பார்வையும் ஒரு பக்கமான படிப்பும் கிடையாது அனைத்து பக்கங்களிலும் இருந்து கிடைக்கும் தகவல்களை தொகுத்து படிப்பதே. எனென்றால் இங்கிருக்கும் வரலாற்றாசிரியர்கள் பலர் தாங்கள் சார்ந்த கருத்தியலின் கீழாகவே வரலாற்றை எழுதி வருகிறார்கள். ஆரியர் வருகை, மொகலாயர் படையெடுப்பு என்றே வரலாற்றில் உள்ளது மொகலாயர் படையெடுத்து வந்தால் படையெடுப்பாம், இந்த மண்ணுக்கு சொந்தமில்லாத ஆரியர் இந்த மண்ணுக்குள் படையெடுத்து வராமல் வெத்தலை பாக்குவைத்து அழைத்தது போல் ஆரியர் வருகை என்றே குறிப்பிடுகின்றனர். இனிமேலாவது அனைத்து பக்க தகவல்களையும் படித்து நமது வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் வருங்கால உண்மையாக தமிழ்த் தேசியம் பேச விரும்புபவர்கள்.  

குறிப்பு – எல்லைப் போராட்டம் மட்டும் இல்லை தனி நாடு, அப்புறம் மாநில சுயாட்சி என்று ஏகப்பட்ட அந்தர்பல்டிகள் அடித்து கடைசியில் திமுகவினரின் காலில் விழுந்து மேலவை உறுப்பினர், மேலவை தலைவர் என்று பதவி பின்னால் அழைந்தது என்று இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்னொரு சமயம்.  

குறிப்புக்கு உதவிய நூல்கள் -
1.   திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு – பி. யோகிஸ்வரன்
2.   தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம் – பெரியாரும் ம.பொ.சியும்
3.   நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம் – ஏ.ஏ. ரசாக்
4.   திருத் தமிழர் இயக்கம் – பி.எஸ். மணி
5.   எனது போராட்டம் – மபொசி