Saturday, May 17, 2014

2014 தேர்தல் ஓர் பார்வை

2014 தேர்தலுக்கு முன்பாகவும் சரி அதன் பின்னும் சரி யாரும் இப்படி ஒரு முடிவு வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அனைத்து கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆதிமுகவிற்கு 20, 25, 27 தொகுதிகள் என்று தான் கூறிவந்தன. ஆனால் அனைத்தையும் தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்தமாக 37 தொகுதிகளில் ஆதிமுக வெற்றிப் பெற்றுள்ளது என்றால் அதன் பின்னான கரணங்கள் ஆராயப்பட வேண்டும். முதலில் அனைத்து கட்சிகளும் வாங்கிய வாக்கு சதவீதம் 

ஆதிமுகவின் ஓட்டு சதவீதம் 44%
திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 26.3%
பாஜக கூட்டணி 20.6%.

மேலே குறிப்பிட்டு இருப்பது 2014ன் வாக்கு விகிதம். ஆனால் எப்பொழுதுமே திமுகவின் வாக்கு வங்கி 26% ஆதிமுகவின் வாக்கு வங்கி 29% இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக தமிழக தேர்தலில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு சதவீதம். இதில் இந்த வாக்கு வங்கியை சேராத மக்கள் ஒவ்வொரு முறையும் தங்களது வாக்குகளை அடுத்து நமக்கு யார் நல்லது செய்வார் என்று முடிவெடுத்து வோட்டுபோடுவார்கள் அதனடிப்படையில் வெற்றி பெறுபவர் மாறி மாறி வந்தனர். ஆனால் இந்த முறை ஆதிமுக எந்த கூட்டணியும் இல்லாமல் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. திமுகவும் மிகப்பெரிய கூட்டணி என்ற ஒன்றில்லாமல் போட்டியிட்டது.

இதில் ஆதிமுகவின் வாக்கு வங்கி என்பது 29% தான் ஆனால் அதை தாண்டி 44% வாக்கு வாங்கி வெற்றி பெற்றுள்ளார். இது வாக்கு வங்கி சேராத மக்களின் வாக்குகள். மேலும் சட்டசபை தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் பெரும்பாலும் ஆட்சிகலைப்பு போன்றவைகள் நடைபெற்றால் ஒழிய 1996வரை ஒரே சமயத்தில் தான் வரும். ஆனால் அது உடைந்து இரண்டும் வெவ்வேறு காலங்களில் நடக்க ஆரம்பித்த பிறகு ஆளும் மாநில அரசின் செயல்பாட்டை வைத்து தேர்தலில் வாக்குகள் மாறி வந்தது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக   1991-96ல் ஜெயலலிதாவின் ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கருணாநிதி 96ல் பெரும்பான்மை பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். அதே சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் United Front எனும் கூட்டணியாக திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), மற்றும் சிபிஐ ஆகியோர் அடங்கிய கூட்டணியில் தமிழக பாரளுமன்ற தொகுதிகள் 39 இடங்களையும் கைப்பற்றினர். ஆனால் 1996 இவர்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தேவகவுடா தலைமையிலான அரசு ஒரு வருடம் அதன் பிறகு ஐ.கே குஜ்ரால் தலைமையில் ஒருவருடமும் ஆட்சியில் இருந்து, அதன் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டது. 1998ல் பாராளுமன்ற தேர்தல் மறுபடியும் நடந்தது. 1996க்கு பிறகு சட்டமன்றம் பாராளுமன்ற தேர்தல்கள் இருவருட இடைவெளியில் தான் நடக்கிறது. 

1996 தேர்தலில் ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழாக தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தார், அதாவது போட்டியிட்ட 160 தொகுதிகளில் 4 தொகுதிகள் மட்டுமே வெற்றியடைந்தார். இப்படி மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து நின்ற ஜெயலலிதா இரண்டே ஆண்டுகளில் 1998 பாராளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் வெற்றிபெற்றார், இதன் காரணம் அன்று ஆண்டு கொண்டிருந்த திமுக அரசின் மீதான வெறுப்பு. 1998 தேர்தலில் ஜெயலலிதா இருந்த பிஜேபி கூட்டணி ஆட்சி அமைத்து ஜெயலலிதாவாலேயே கவிழ்க்கப்பட்டது, மறுமுறை 1999ல் தேர்தல் நடந்தது இதில் திமுக, பாஜக ஒரே கூட்டணியில் நின்றன இதில் 26 இடங்கள் பிஜேபி, திமுக கூட்டணியும் 13 இடங்கள் அதிமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும் கிடைத்தது. இதன் பிறகு தேர்தல் என்பது மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அது 2001ம் ஆண்டு நடைபெற்றது இதில் ஜெயலலிதாவின் ஆதிமுக கட்சி ஆட்சியை கைப்பற்றியது.


2004ல் பாராளுமன்ற தேர்தல் இதில் கருணாநிதி 40ம் நமக்கே என்று பாண்டிச்சேரிஉட்பட அனைத்து எம்பி தொகுதிகளையும் அறிவித்து. 40 இடங்களில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தமாஅன் 39 தொகுதிகளை வெற்றி பெற்றார். இதற்கு அன்றைய ஆளும் அதிமுகவின் மீதான வெறுப்பே காரணம்.  அதாவது 2001 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சியின் மீதான வெறுப்பாக 2004 தேர்தலில் அதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சர் பதவியெல்லாம் வகித்த திமுக அந்தர் பல்டி அடித்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 2004 தேர்தலில் 39 தொகுதியையும் கைப்பற்றியது. இப்படி தொடர்ந்து ஆளும் மாநிலக் கட்சியின் வெற்றியாக இல்லாமல் எதிர்கட்சியாக இருப்பவர்களே 1998லிருந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் மத்தியில் யார் ஆட்சி என்பதை தமிழக மக்கள் கவலைப்படுவதில்லை தமிழகம் சார்பாக யார் பாராளுமன்றம் போவது என்பதையே பார்த்து வருகின்றனர்.

2009 தேர்தலிலும் இதே தான் நடந்தது அதற்கு முதல் தேர்தலில் 40ம் நமக்கே என்று வெற்றி பெற்றவர்கள் இப்பொழுது 2006 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது, அதற்கு முதல் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தக்கவைத்திருந்த கட்சி மிக எளிதாக 2009 தேர்தலில் அதே நிலையில் வெற்றிபெற்று இருக்கலாம் ஆனால் இந்த தேர்தலில் 27 இடங்கள் திமுகவிற்கும் 12 இடங்கள் அதிமுகவிற்கும் என்று மாறியது. இப்படி ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மை ஏற்படுவதும் அதன் கீழாக பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பொறுத்து அமையும் ஆனால் அதை ஒட்டுமொத்தமாக உடைத்து கூட்டணிகள் என்பது கூட முக்கியம் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் ஒரே கட்சி தமிழக வரலாற்றில் இது வரை யாருமே பெறாத வெற்றியை தமிழக மக்கள் கொடுக்க என்ன காரணம் என்பது கவனிக்க பட வேண்டிய ஒன்று.

                                                         
எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் மக்களின் மனதில் நிறைந்து இருந்த காலத்தில் கூட இவ்வாறான ஒரு முடிவு எப்பொழுதும் மக்கள் கொடுத்தது இல்லை, 1980ம் ஆண்டு சரண் சிங்கின் அரசு கவிழ்ந்து நடந்த தேர்தலின் போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார் ஆனால் அப்பொழுது நடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பிறகு ஆட்சி அமைத்த காங்கிரஸை வைத்து மக்களின் நம்பிக்கையை எம்.ஜி.ஆர் இழந்துவிட்டார் என்று 1980ல் தமிழக எம்.ஜிஆரின் ஆட்சியை கருணாநிதியும் இந்திரா காந்தியும் கலைத்தனர். ஆனால் காமராஜருக்கு பின்னர் மறுபடியும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர் ஆனால் அவர்கூட இப்படி தனியாக நின்று பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களை கைப்பற்றியதாக எந்த சரித்திரமும் இல்லை.

2014 தேர்தல் என்று இல்லை எந்த தேர்தலிலும் தமிழக மக்களைப் பொறுத்த வரையில் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்து வாக்களித்தது இல்லை. தமிழ்நாட்டில் இருந்து யார் போகவேண்டும் யார் பேசினால் போதும் என்று நினைக்கிறார்களோ அவர்களையே தேர்ந்து எடுக்கிறார்கள் அதுவும் தங்களின் மாநிலத்தில் நலனை சார்ந்து மட்டுமே. இங்கு ஆட்சியில் இருக்கிறவர் அங்கு போய் பேச வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை எதிர்கட்சியாக நின்றவர்களை வெற்றி பெறச்செய்து அனுப்பியுள்ளனர்.

இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கு மேலும் ஒரு வேலையைக் கொடுத்துள்ளது, இது தமிழர் நலன் சார்ந்து தமிழக சட்டசபையில் தமிழக மக்களின் தீர்மானமாக இயற்றப் பட்ட தீர்மானங்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது இது வரை மத்திய அரசில் பங்கு பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை இனி தமிழகத்தில் தமிழ் மக்களின் தீர்மானங்களை பேசும் பெரும் பொறுப்பையும் கொடுத்து அனுப்பியதாகவே தோன்றுகிறது. 

Wednesday, May 14, 2014

ஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்




ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் ஒரு தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையில் எப்படி சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் இருந்ததோ அப்படியே பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளதை அறியலாம். பூலித்தேவரையும் ஒண்டிவீரனையும் தனித்தனியாக பார்க்கமுடியாது ஒருவர் இல்லாமல் மற்றவரின் வரலாறு என்பது இங்கில்லை. முதலில் பூலித்தேவர் யார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவர் முன்னோர்கள் அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள் அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.

அந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவ இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள் அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.

பூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்தவர் ஒண்டிவீரன். அந்த காலகட்டத்தில் தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் வரிகேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலி ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார், அதுவரை நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் அதாவது செம்மண் நிலத்தில் மிகவும் அதிகமான நெல்லை விளைவித்ததால் நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் நெற்கட்டான் செவ்வலாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.


வரி கொடுக்க மறுத்ததையொட்டி ஆங்கிலேயர்கள் தென்மலைக்கு வந்து முகாமிட்டு பூலித்தேவரிடம் தங்கள் தூதுவர் ஒருவரை அனுப்புகிறார்கள். தூதுவர் ஆங்கிலேயரின் படை பலம் மிகவும் அதிகம் அவர்களுடன் சமாதானமாக போகும் படி கூறுகிறார். அவ்வாறு சமாதானம் வேண்டாம் என்றால் போர் என்பதை முடிவெடுப்பதாக இருந்தால் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருக்கும் பட்டத்து வாளையும் குதிரையையும் கடத்திக் கொண்டு வரவேண்டும் அதே சமயத்தில் போர் தொடங்கும் அடையாளமாக அங்கிருக்கும் நகராவையும் முழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். பூலித்தேவர் இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டு தனது தளபதிகளை கூப்பிட்டு ஆலோசனையில் இறங்குகிறார்.

பூலித்தேவனின் தளபதிகளை குறிக்கும் நாட்டுப்புறப்பாடல்

”சின்னான் பகடை பெரியான் பகடை
சிவத்தசொக்கன் கருத்தச் சொக்கன்
அண்ணன் தம்பிமார் அழகிரியுடன் 
அஞ்சாறு பகடையுடன் ஒண்டியாம்...

      இத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்
      அத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்
      வலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்
      வேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”

பூலியின் படையில் ஒண்டிவீரன் பகடை, சின்னான் பகடை, பெரியான் பகடை, சிவத்தசொக்கன், கருத்தசொக்கன், ஓடிக் குத்துவான் பகடை என்று பல அருந்ததியர்கள் இருந்தனர். ஆங்கிலேயரின் நிபந்தனையை தனது தளபதிகளுக்கு விளக்குகிறார் பூலித்தேவர். அப்பொழுது ஒண்டிவீரன் பட்டத்து வாளையும் குதிரையையும் கவர்ந்து வரும் வேலையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஒண்டிவீரனின் திறமையை அறிந்த பூலித் தேவரும் அதற்கு ஒத்துக் கொள்கிறார். 

ஒண்டிவீரன் மாறுவேடம் இட்டு செறுப்பு தைப்பவர் போல் ஆங்கிலேயர் தங்கியிருந்த தென்மலை சென்று தனக்கு சூ, செறுப்பு, குதிரை சேனம் போன்றவைகள் தைக்க தெரியும் என்று வேலை கேட்கிறார். ஆங்கிலேயருக்கும் தேவை இருந்ததால் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். தனது நேரத்திற்காக காத்திருந்து பட்டத்துவாளை வைத்திருந்த இடத்தில் இருந்து திருடிக்கொண்டு பட்டத்து குதிரை கட்டியிருந்த இடத்தை நோக்கி செல்கிறார். கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும் பொழுது குதிரை பலமாக கனைத்து ஆங்கில சிப்பாய்கள் முழித்துக் கொள்கின்றனர். உடனடியாக அருகில் குதிரைக்காக போடப்பட்டிருந்த புல் குவியலுக்குள் படுத்துக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்கிறார் ஒண்டிவீரன்.

குதிரையை வந்து பார்த்த வீரர்கள் கயிறு அவிழ்ந்திருப்பதை பார்த்து கட்ட முயலும் பொழுது முளைகாம்பு ஆடியதை கவனித்து அதை தரையில் இருந்து பிடிங்கு மற்றொரு இடத்தில் அடிக்கின்றனர். அங்கு ஒண்டிவீரனின் கை புல்லுக்குள் மறைந்து இருக்கிறது அதன் மீதே அடித்துவிடுகின்றனர், ஒண்டிவீரன் அத்தனை வலியையையும் தாங்கி கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் அமைதியாக இருக்கிறார். புதிதாக அடித்த முளைகாம்பில் குதிரையை கட்டிவிட்டு சென்று விடுகின்றனர் வீரர்கள். அவர்கள் சென்ற பிறகு ஆராவரம் அடங்குவரை காத்திருந்து வலியையும் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு எழுந்தார் ஒண்டிவீரர். முளைக்காம்பை உறுவி கையை விடுவிக்க மற்றொரு கையால் முயல்கிறார் ஆனால் முடியவில்லை, தான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முளைக்காம்பில் மாட்டியிருந்த கையை வெட்டிவிட்டு, இரத்தம் சொட்ட சொட்ட குதிரையை அவிழ்த்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்.

வெளியேறும் பொழுது நெற்கட்டான் செவ்வலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கில சிப்பாய்களின் கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்துவிட்டு அங்கிருந்த நகராவை அடித்து போர்முழக்கம் இட்டு குதிரையை விரட்டிக் கொண்டு நெற்கட்டான் செவ்வலை நோக்கி பறந்தோடுகிறார். நகராவின் ஒலி கேட்டு எழுந்த ஆங்கிலப்படை அவசர அவசரமாக அந்த் இரவின் இருட்டில் பீரங்கிகளை உபயோகிக்க அது அவர்களின் கூடாரத்தையே தாக்கி பலத்த சேதத்தை உருவாக்குகிறது. குதிரையில் சென்ற ஒண்டிவீரன் பத்திரமாக பூலித்தேவரை சென்றடைகிறார். ஒண்டிவீரனின் வீரத்தை மெச்சியவர் ஒரு கையை ஒண்டிவீரன் இழந்திருப்பதை பார்த்து கவலைப்படுகிறார். அப்பொழுது ஒண்டிவீரன் ஒரு கை போனால் என்ன அதற்கு பதிலாக எனக்கு நீங்கள் தங்கத்தில் ஒரு கை செய்து கொடுப்பீர்களே நாம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கவனம் செலுத்துவோம் என்று கூறுகிறார்.

இந்த படையெடுப்பின் ஆதாரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்கள் வழியாக உறுதி செய்ய முடிகிறது. 1755ல் படையெடுப்பு நடந்ததும் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த படையில் ஆற்காடு நவாப் முகமது அலியின் படையும் அதன் தளபதியாக ஆற்காடு நவாப்பின் அண்ணன் மகபூஸ்கானும், ஆங்கிலேயரின் சுதேசிப் படையும் அதன் தளபதியாக கான் சாகிப்பும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. பூலித் தேவனின் கோட்டையை தகர்க்க 18 பவுண்ட் பீரங்கிக் குண்டுகள் தேவை ஆனால் ஆங்கிலப் படையிடம் 12 பவுண்ட், 14 பவுண்ட் குண்டுகளே இருந்திருக்கின்றன. இதனால் ஹெரான் பூலித்தேவரை பயமுறுத்தி கப்பத்தை வசூலிக்கும் எண்ணத்துடன் தான் முதலியார் துபாஷை அனுப்புகிறார். அந்த பயமுறுத்தலுக்கு பயப்படாமல் விதித்த நிபந்தனையை நிறைவேற்றி போரிடுகிறார் பூலித்தேவரும் அவரது தளபதி ஒண்டிவீரனும்.

அதன் பிறகு கோட்டையை தகர்க்க ஹெரான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிகிறது 1755ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கோட்டையை தகர்க்க முடியாமல் முற்றுகையை முடித்துக் கொண்டு மதுரையை நோக்கி திரும்புகிறது ஆங்கிலப்படை. இதன் பிறகு ஒண்டிவீரனின் மரணத்தைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை ஆனால் பூலித்தேவரின் மறைவிற்குப் பின்னும் அவரின் மகன்களின் படையில் இருந்து சண்டையிட்டதும் தெரிய வருகிறது. ஆனால் ஒண்டிவீரனின் மரணம் பற்றிய தகவல் இல்லை ஆனால் மக்கள் ஒண்டிவீரனை தங்களது தெய்வமாக வழிபடுகின்றனர்.

இந்த தகவல்களை அந்த பகுதியில் வசிக்கும் பிற சமூகமக்களும் உறுதி செய்கின்றனர். இன்று அருந்ததிய மக்கள் அந்த பகுதியில் எந்த நிலத்திற்கும் சொந்தகாரர்களாக இல்லை ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிலம் வைத்திருந்து விவசாயமும் செய்திருக்கின்றனர் என்பதை ஒண்டிவீரனின் வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது. 

Sunday, May 11, 2014

மதுரை வீரன் வரலாறும் திரிபுகளும் ஏன்??



மதுரைவீரன் குறித்த வரலாறுகள் பல அவரின் பிறப்பினைப் பற்றி பேசுவதில்லை ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் அவரை ஒரு அரசிளங்குமரனாக தான் சித்தரித்தார்கள். தமிழ் திரைப்படத்தை ஆதாரமாக சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம் பதில் என்ன என்று அருந்ததிய மக்களே சொல்லியதை பின்னால் சொல்கிறேன்.

திருச்சி மாவட்டத்தின் ஒரு பாளையத்தை பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார் அந்த மாவட்டத்தில் சின்னான் மற்றும் செல்லி என்ற அருந்ததிய தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த மகன் தான் வீரன் ஆம் தாய் தந்தையர் வைத்த பெயர் வெறும் வீரன் என்பது மட்டும் தான். வீரன் பெயருக்கு ஏற்றார் போல் வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குகிறான். அப்பொழுது பொம்மண்ணன் மகள் பொம்மி பூப்பெய்துகிறாள், கம்பளத்தார் வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே மந்தையில் குடிசையிட்டு அங்கு தங்க செய்கின்றனர். இப்படி வைக்கப்படும் பெண்களை இரவில் காவல் காப்பது அருந்ததியர்களே, அவ்வழக்கத்தின் படி சின்னான் வயதான காரணத்தால் உடல்நிலை ஒத்துழைக்காததாலும் வீரனை காவலுக்கு அனுப்புகிறார். அங்கு வீரனை கண்ட பொம்மியும், பொம்மியை கண்ட வீரனும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர்.

இந்த விசயம் பொம்மண்ணனுக்கு தெரிய வரும்பொழுது வீரனும் பொம்மியும் பாளையத்தை விட்டு வெளியேறுகின்றனர். பொம்மண்ணன் தனது படை வீரர்களுடன் இருவரையும் துரத்துகிறார் அப்பொழுது நடந்த சண்டையில் பொம்மண்ணன் கொல்லப்படுகிறார். அதன் பிறகு பொம்மியை அழைத்துக் கொண்டு திருச்சி செல்கிறார் திருச்சியில் அப்பொழுது விஜய ரங்க நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். அவரது படையில் வீரனாக இணைந்து தனது திறமையினால் பல பதவிகளை பிடித்து வருகிறார். இதே காலத்தில் தான் திருமலை நாயக்கர் (1623- 1659) மதுரையில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு நடக்கும் திருட்டு வழிப்பறி போன்றவைகளை அடக்க ஒரு நல்ல தளபதி வேண்டும் என்று விஜய ரங்க நாயக்கரிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையை ஏற்று விஜய ரங்கரும் வீரனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்.

பொம்மியுடன் மதுரைக்கு வந்த வீரன் தனக்கு ஒதுக்கப்பட்ட வீரர்களுடன் இணைந்து மதுரையை சுற்றி நடந்த திருட்டு வழிப்பறி கும்பல்களை அடக்குகிறார். இதைக் கண்டு மகிழ்ந்த திருமலை நாயக்கர் மதுரைவீரன் என்று பட்டம் அளித்ததாக சொல்கின்றனர். இந்த வேளையில் தான் திருமலை நாயக்கரின் 200 காமகிளத்திகளில் ஒருவரான வெள்ளையம்மாவை சந்திக்கிறார். இது அரசனின் காதுகளை சென்றடைகிறது அவர் மதுரை வீரனை மாறு கால் மாறு கை வாங்க உத்தரவிடுகிறார். கை கால் வெட்டப்பட்ட மதுரைவீரன் உயிரும் பிரிகிறது இதைக் கேளிவிப்பட்டு வந்த பொம்மியும் வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறுகின்றனர். இது தான் மதுரை வீரன் வரலாறு. இது மதுரை வீரன் குறித்த நாட்டுப்புற பாடல்களில் மட்டும் தொகுக்கப்பட்ட வரலாறு.


ஆனால் இந்த வரலாறு திரிக்கப்பட்டது வீரன் காசிராஜனுக்கு பிறந்ததாகவும் அவன் இருந்தால் நாட்டுக்கு ஆகாது அதாவது கொடி சுற்றி பிறந்த குழந்தை என்று ஆற்றில் விட்டதாகவும் அந்த குழந்தையை எடுத்து சின்னானும் செல்லியும் வளர்த்ததாகவும் சொல்கிறார்கள். இதில் பொம்மண்ணனின் பெண் வீரனுடன் வாழ்ந்தாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சனாதன தர்மத்தினர் அதை உடைக்கும் விதமாக பொம்மியை விட உயர்ந்த சாதியை சேர்ந்தவர் வீரன் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் ஒரு விசயம் என்னவென்றால் காசி ராஜன் காசி ஆற்றில் விட்ட குழந்தை திருச்சி மாவட்ட ஆற்றுக்கு எப்படி வந்தது என்று கேட்க கூடாது, அன்றே இன்று நாம் பேசும் நதி இணைப்புக்கான அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது என்று நாமாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மதுரவீரனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட இடம் இருக்கிறது என்ன இடம் மட்டும் கோயில் சுற்று சுவருக்கு வெளியே. இதே போல் அருந்ததிய மக்களின் பல தெய்வங்கள் பல பிற்படுத்தப் பட்ட மக்களின் கோயிலிலும் இடம் உண்டு ஆனால் கோயிலுக்குள்ளே கிடையாது கோயிலுக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டி தான் சுற்று சுவரே இல்லாவிடினும் கோயில் எனும் பகுதியை தாண்டியாவது தான் வைப்பார்களே தவிர கோயிலுக்குள் இந்த அரச மகன் மதுரை வீரனுக்கு அனுமதி பல இடங்களில் மறுக்கப்பட்டே உள்ளது ஒன்றிரண்டு இடங்களைத் தவிர ஆனால் அது மதுரைவீரன் வாழ்ந்த பகுதியாக இல்லாமல் மிகவும் தள்ளி இருக்கும் பகுதியாக இருக்கும்.
சாதியம் என்பது தனக்கு கீழான சாதியை மட்டும் தான் ஏற்றுக் கொள்ளாது ஆனால் தனக்கு மேற்பட்ட சாதியுடன் உறவு கொள்ள என்றுமே தயராக இருக்கும், அது தான் மதுரைவீரன் கதையில் ஏற்பட்ட திரிபுகள் ஊடாக நமக்கு தெரிவது, அதாவது பொம்மியின் கணவன் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்வது.  ஆனால் இதைப் பற்றி அருந்ததிய மக்களின் நிலை என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்வது "எம்.ஜி.ஆர் பொய் சொல்வாரா, அவர் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்” என்கின்றனர். அருந்ததிய மக்கள் என்றுமே இப்படித்தான் யாரோ என்றோ கொடுத்த வாக்கிற்காக இன்று வரை மற்றொரு சாதியினர் தங்கள் கிராமத்திற்கு வந்தால் அவர்கள் ஊரில் தங்கும் அத்தனை நாளும் அவர்களுக்கு உணவளித்து, அவர்கள் ஊரை விட்டு செல்லும் பொழுது வீட்டுக்கு வரி போட்டு அவர்கள் செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்புவார்கள்.

Friday, May 9, 2014

அருந்ததியினரும் மபொசியுடன் தமிழ் தேசியமும்


மா.பொ.சிவஞானம் தாம் முதன் முதலில் பாளையக்காரர் கட்டபொம்மன் வரலாற்றை தமிழ்நாட்டுக்கு எடுத்துரைக்கிறார். கட்டபொம்மனின் தாய்மொழி தெலுங்கு என்றபொழுதும் ஒரு தமிழ்தேசியக்காரர் அவரை வெளிக்கொணருகிறார் போற்றுவோம். மா.பொ. சிவஞானம் சொல்லும் கதையில் கட்டபொம்மு ஒரு மிகப்பெரிய அரசன், ஆனால் கட்டபொம்முவைப் பற்றி வேறு கதைகளும் உண்டு அது அவன் ஒரு கொள்ளைக்காரன் என்றும். இங்கு கருப்பொருள் கட்டபொம்மன் யார் என்பது இல்லை, ஆனால் இந்த கட்டபொம்முவின் படையில் இருந்தவர்கள் யார் என்பது தான், அவர்கள் எப்படி மறைக்கபப்ட்டார்கள் என்பது தான். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கிறது. மா.பொ.சிவஞானம் எங்கிருந்து கட்டபொம்முவை கண்டுபிடித்தாரோ அதே நாட்டுப்புற பாடல்கள் மற்றும் ஆங்கிலேயே ஆவணங்களில் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. 

கட்டபொம்முவின் படை மிகப்பெரும் விசயங்களை கொண்டது கட்டபொம்முவின் தானதிகாரி சுப்பிரமணியம் ஒரு பிள்ளை, தளபதி வெள்ளையத் தேவன் ஒரு தேவர், மற்றொரு தளபதி சுந்தரலிங்கம் ஒரு பள்ளர்(தேவேந்திரகுல வெள்ளாளர்) மற்றும் இவர்களைத் தவிர மேலும் நான்கு தளபதிகள் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை இவர்கள் நால்வரும் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஒரு நாயக்க மன்னனின் படையில் எந்த சாதிய வேறு பாடும் இன்றி பிள்ளை, தேவர், பள்ளர் மற்றும் அருந்ததியர் என்று அனைத்து சமூகத்தினரும் இருந்திருக்கின்றனர். வீரபாண்டியன் ஒருங்கிணைத்தாரா இல்லை இவர்களே ஒன்றிணைந்தார்களா என்பது அல்ல. ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தனர் என்பது உண்மை. ஆனால் மா.பொ.சி தான் கட்டபொம்மனை பற்றிய முதல் நூலை கொண்டு வருகிறர் இதில் சுந்தரலிங்கம் கூட சிறு இடம் பிடித்துவிடுகிறார் ஆனால் ஒரு தளபதியாக இல்லாமல், அதாவது அரண்மனை வேலையாளாக மேலும் மன்னருடன் அனைத்து இடங்களுக்கும் செல்பவராக. 


அருந்ததியர்களான பொட்டி, முத்தன், கந்தன் மற்றும் தாமன் எங்குமே கண்ணிற்கு படமாட்டார்கள், இன்னுமொறு விந்தை என்னவென்றால் கட்டபொம்மனின் கீழாக இருந்த 72 பாளையங்களுள் அவைகள் கவணி என்றும் அழைக்கப்பட்டுள்ளது, இதில் நான்கு பாளையங்களுக்கு தலைவர்கள் தான் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை மற்றும் தாமன் பகடை ஆனால் இவர்களை மறைத்துவிட்டு ஒரு வரலாற்றை எழுதியிருக்கிறார். இவர்களை மறைத்தது மட்டும் எழுதினால் பத்தாது இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற வரலாறும் முக்கியமானது. 

முத்தன் பகடை பொட்டி பகடை இருவரும் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள், மதுரையில் கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது ஒரு கோபுரம் மட்டும் கட்டும்பொழுதே இடிந்து கொண்டிருந்தது ஒரு ஜோசியர் நரபலி கொடுத்தால் தான் கோபுரத்தை முடிக்க முடியும் என்று சொல்ல சில அருந்ததியர்களை பிடித்து பலிகொடுப்பதற்காக அடைத்துவிட்டு நல்ல நாள் குறித்து காத்திருந்தனர். இதை கேள்விப்பட்ட முத்தனும் பொட்டியும் கோபமடைந்தனர், கட்டபொம்முவும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார்கள். அரசவை நடந்து கொண்டிருந்தபொழுது உள்ளே சென்று பாடியாட ஆரம்பித்தார்கல். கட்டபொம்மு அவர்களை நிறுத்தி என்ன என்று கேட்டபொழுது மதுரையில் நடக்கும் அநியாயத்தை சொல்லிய பொழுது சரி என்று கட்டபொம்மு நரபலி கொடுப்பதை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்புகிறார் அதுவும் நிறுத்தாவிடில் படையெடுப்பு நடக்கும் என்று. நரபலி நிறுத்தப்பட்டு அறுந்ததியர்கள் விடுவிக்கப்பட்டனர். 

முத்தன் பகடையும் பொட்டி பகடையும் இப்படி தங்களது புத்திசாலித் தனத்தை உபயோகித்து உயிர்களை காப்பாற்றியது மட்டுமில்லை. தங்களின் பராக்கிரமத்தால் பல எதிரிகளை அழித்தவர்கள். ஜாக்சன் துறையை சந்திக்க சென்றபொழுது தானாதி சுப்பிரமணியப்பிள்ளையும் வெள்ளையத் தேவனின் குதிரையும் ஆங்கிலேயரிடம் பிடிபட்டது. இருவரையும் மீட்டு வர சென்றார்கள் மச்சான்கள் இருவரும் ஆனால் இவர்கள் செல்லும் முன்பாக தானாதிப்பிள்ளையை சென்னை சிறைக்கு மாற்றிவிட்டனர், ஆனால் அங்கிருந்த வெள்ளையத் தேவனின் வெள்ளை குதிரையை கைப்பற்ற முடிவெடுத்தனர். தங்களுக்கு குதிரை பாசை தெரியும் என்றும் குதிரைப் பராமறிப்பவர்கள் என்று கூறி வெள்ளையத்தேவன் குதிரையிடம் சென்றனர். இவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு குதிரையும் இவர்களை பார்த்து துள்ளியது, இதை பார்த்த ஆங்கிலேயே வீரர்களிடம் நாங்கள் குதிரையின் மொழி தெரியும் என்று சொல்லி சமாளித்துவிட்டு. வேலைக்கு சேர்ந்து குதிரை பராமரிப்பவர்களா வேலை பார்த்தனர், நேரம் பார்த்து காத்திருந்த இருவரும் ஒரு நாள் வீரர்கள் அசந்திருந்த சமயமாக குதிரையை ஓட்டிக் கொண்டு பாஞ்சாலம் குறிச்சி வந்து சேர்ந்தனர்.

இதைப் போன்று தங்களது வேலைகளை மிகவும் சாமர்த்தியமாகவும் நேர்த்தியாகவும் செய்யக் கூடியவர்கள் தான் மச்சான்கள் இருவரும். ஆங்கிலேயர் படையெடுப்பும் ஆரம்பமாகிறது முதலில் மக்காளித் துரையின் தலைமையில் பாஞ்சாலகுறிச்சியின் மீது படையெடுப்பு ஆரம்பமாகிறது. முதல் நாள் சண்டையில் வெள்ளையத் தேவர் மரணம் ஏய்துகிறார். எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு தாக்குதலை நடத்துவது என்று முடிவாகிறது, அதற்கு சுந்தரலிங்கம் தேவேந்திரனார், அதிவீர மல்லு சேர்வை மற்றும் கந்தன் பகடை மூவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மூவரும் இரவில் ஆங்கிலேயே படை மூகாமை நோக்கி செல்கிறார்கள். அங்கு காவல்காரர்கள் இருக்க ஆங்கிலேயே படை வீரர்கள் மது அருந்திக் கொண்டும் ஆடிப் பாடிக் கொண்டும் இருக்கின்றனர், இது தாக்குதவதற்கு சரியான சமயம் இல்லை என்று மூவரும் முடிவு செய்து அருகில் இருக்கும் புதர்க்குள் பதுங்கிக் கொள்கின்றனர். விடியகாலை வரை ஆங்கிலேயேர்களின் விருந்து கொண்டாட்டம் தொடர்கிறது, கோழி கூவியபிறகு படுக்க செல்கின்றனர். பாரா இருந்த காவல்காரர்களும் தூங்க செல்கின்றனர்.

இது தான் சரியான சமயம் என்று விழித்திருந்த ஒரு பாராக்காரனை சுந்தரலிங்கம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொலை செய்துவிடுகிறார். பின்னர் வீரர்கள் தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்து அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு வீரர்களை தாக்க ஆரம்பிக்கின்றனர். தாக்கபப்ட்ட வீரர்களின் கூக்குரலை கேட்டு மற்ற வீரர்கள் எந்திரித்து தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டு அவர்களும் தாக்க ஆரம்பிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள்ளாகவே தாக்கிக் கொண்டு பலர் உயிரிழக்கின்றனர். அடுத்த கூடாரத்தில் இருந்த மாக்காளித் துரை சத்தம் கேட்டு வருகிறார் அப்பொழுது அவர் கந்தன் பகடையை பார்த்து சுட்டுக் கொள்கிறார். சுந்தரலிங்கமும் அதிவீர மல்லு சேர்வையும் தங்களால் இயன்ற அளவு சேதத்தை ஏற்படுத்திவிட்டு. இறந்தவர்கள் போல் நடித்து, இறந்துகிடந்த வெள்ளை வீரர்களின் உடையை அணிந்து கொண்டு வெள்ளை வீரர்கள் போல் அங்கிருந்து தப்பித்து கோட்டைக்கு திரும்பிவிடுகின்றனர். இந்த தாக்குதலில் 100 வீரர்களும், 50 பாராக் காரர்களும் மற்றும் 7 வெள்ளையர்களும் இறந்தனர். பாஞ்சாலகுறிச்சி தரப்பில் ஒரே ஒரு உயிரை கொடுத்து 157 பேரை கொன்று குவித்தனர்.

கோட்டை திரும்பியவர்கள் கட்டபொம்மனிடம் கந்தன் பகடையின் மரணத்தை தெரியப்படுத்துகின்றனர். 

கந்தன் பகடை மடிந்த சமாச்சாரங்
        கட்டபொம்மு துரை தான் கேட்டுச்
சிந்தை கலங்கி மனது நொந்தான் அய்யோ!
       சொந்தம் பாராட்டி வளர்த்தே னென்றான்
தன்னிமை யாகவே வளர்த்தேனே வெகு
        சமத்துக் காரப் பகடை யென்றான்
அநியாய மாகவே முடிந்தானே அவன் 
         அவன் சொன்ன சபதம் முடிப்பானே
எதிரிகள் வந்து யெதிர்த்து விட்டால் அதற்
          கேத்தக் கத்திகள் சுத்திவிட்டால்
எதிரிச் சவாலுஞ் சாய்ந்திடுமே நான்
           எடுத்த சவால் கெலித்திடுமே
கந்தன் பகடையைத் தோற்றோமென்றான் இனிக்
            கண்ணாலே யென்றைக்கு காண்போமென்றான்..

இத்தகைய பாடல்கள் வழியாகவே கட்டபொம்முவின் சரித்திரம் எழுதப்பட்டது ஆனால் அவைகளில் கூறப்பட்ட பகடைகள் மற்றும் சுந்தரலிங்கம் போன்றவர்களை மறைத்து வரலாறு எழுதப்பட்டது.

இதன் பின்னர் பொட்டிப் பகடையும், முத்தன் பகடையும் மாறுவேடம் பூண்டனர் தார்ப்பாய்ச்சி வேட்டியை கட்டிக் கொண்டு உடலெல்லாம் திருநீறு இட்டுக் கொண்டு கையில் கைப்பந்தங்கள் ஏந்திக்கொண்டு, அதனுள் வாளை மறைத்துவைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் கூடாரம் நோக்கி சென்றனர். அப்பொழுது ஆங்கிலேயே வீரர்கள் இவர்களை பிடித்து தளபதியிடம் கொண்டு சென்றனர். அவர் இவர்களிடம் பாஞ்சாலகுறிச்சி கோட்டைக்குள் செல்லும் ரகசிய வழி இருக்கிறதா என்று கேட்டனர், இல்லை என்று சொன்னவர்கள் ஆனால் கட்டபொம்மன் முருக பக்தன் எங்களைப் போல் வேடம் அணிந்து கொண்டு சென்றால் கோட்டைக்குள் நுழையலாம் என்று கூறினர். அந்த திட்டம் பிடித்திருந்ததால் வீரர்களை இவர்களைப் போல வேடம் அணிந்து கொண்டு இருவருடன் செல்ல கூறினார் தளபதி. வந்த வீரர்களை கூப்பிட்டுக் கொண்டு கோட்டை நோக்கி சென்றவர்கள் சிறிது தூரம் தாண்டிய பிறகு தங்களது வாட்களை வெளியில் எடுத்து வீரர்கள் சிலரை கொலை செய்தனர், இவர்களின் தீப்பந்தமும் கிழே விழுந்து அணைந்துவிட்டதால் இருட்டில் இவர்கள் என்று நினைத்து வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் வெட்டிக் கொண்டனர். தங்களை முழுவதும் உணர்ந்து சண்டையை நிறுத்தும் முன் மச்சான்கள் இருவரும் தப்பி வெளியேறி கோட்டைக்கு திரும்பிவிட்டனர். 

இப்படி தொடர்ந்து பல வழிகளில் ஆங்கிலேயேர்களை தாக்கினர் மச்சான்கள் இருவரும். 

முத்தன் பகடையும் பெட்டிப் பகடையும்
      மைத்துன மார்களிருபேரும்
கத்தி வீசிக்கொண்டு எமன் காலன் போலே
      காங்கு கூடாரத்தில் நுழைந்திட்டான்
கத்தி யடித்தல்லோ பார்க்கிறான் துரை
      கத்தியைப் பார்த்தல்லோ வெட்டுகிறான்
எத்தனை சீமைச் சாராயக் குப்பிகள் 
      அத்தனையும் பூசையும் உடைத்திட்டான்
தேசுகி வாசுகி படுத்திட்டான் முன்னே 
       சீமைத் துரைகளும் முடித்திட்டான்

இப்படி தீவிரமாக போரிட்டாலும் போரில் வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்த கட்ட பொம்மன் கோட்டையிலிருந்து வெளியேறுவது என்று முடிவெடுத்தார். கோட்டையை விட்டு வெளியில் வந்த கட்டபொம்மன், ஊமைத் துரையும் வேறு வேறு பக்கம் சென்றனர். கட்ட பொம்மன் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டரிடம் அடைக்கலம் புகுந்தார். அங்கு தொண்டைமானால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதே சமயத்தில் ஊமைத்துரையும் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் கன்னிவாடி காட்டுக்குள் மறைந்திருந்தனர். அக்னீசு துரை காட்டை முற்றுகையிட்டான் ஆனால் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் ஆங்கிலப் படையை பச்சைமலை கோட்டை வரை எதிரிகளை துரத்தி அடித்தனர். இதே சமயத்தில் கோட்டையில் இருந்த சுந்தரலிங்கம் தேவேந்திரனார் தனது முறைப்பெண் வள்ளியுடன் சென்று தங்களது உயிரைக் கொடுத்து ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிக்கின்றனர்.

கட்டபொம்மன் சிறைபட்டிருந்த நேரத்தில் ஊமைத் துரையை பார்கக் விரும்புவதாக கட்டபொம்மனின் கடிதம் வருகிறது, ஊமைத்துரையும் தன் மறைவிடத்தை விட்டு அண்ணனை பார்க்க கிளம்பி ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்படுகிறார். அங்கு அவருடன் சேர்த்து பொட்டி பகடையும் இருக்கிறார். ஊமைத்துரைக்கு உதவுவதற்காக பொட்டி பகடை நியமிக்கப்படுகிறார். ஊமைத் துரைக்கு தேவையானவைகளை வெளியில் சென்று வாங்கி வரும் பொறுப்பு பொட்டி பகடைக்கு அளிக்கப்படுகிறது. ஊமைத்துரை கடிதம் கொடுக்க அதை தன் செறுப்புக்குள் வைத்து தைத்து எடுத்துக் கொண்டு புலிக்குத்தி நாயக்கரிடம் கடித்தத்தை சேர்க்கிறார் அதே போல் புலிக்குத்தி நாயக்கர் கொடுத்த கடிதத்தையும் ஊமைத் துரையிடம் கொண்டு வந்து சேர்க்கிறார். ஊமைத் துரையின் திட்டத்தின் படி விறகு சுமப்பவர்களாக கோட்டைக்குள் நுழைந்த வீரர்கள் உதவியுடன் ஊமைத் துரை பாளையங்கோட்டையில் இருந்து தப்பித்து வெளியில் வந்து பாஞ்சாலக் குறிச்சி கோட்டையில் தனது அரசை நிறுவுகிறார்.

அக்னீசு துரை பாஞ்சால குறிச்சி மீது படையெடுக்கிறார், மக்காளித் துரையும் படைகளுடன் வந்து அக்னீசு துரையுடன் இணைந்து கொள்கிறார். கோட்டைக்கு வெளியே முற்றுகையிடுகின்றனர் ஆங்கிலேயர்கள் பொட்டிப் பகடையும் கிடுகிட்டி நாயக்கரும் மாறுவேடம் அணிந்து ஆங்கிலேயர் முகாம் சென்று ஆடல் பாடல்களை நடத்தி ஆங்கிலேயரை மகிழ்விக்கின்றனர். அப்பொழுது 50 படைவீரர்களுடன் வந்த ஊமைத் துரை வெள்ளையர்களை தாக்கி நிலைகுலையச் செய்து அங்கிருந்த பட்டத்து குதிரை, பட்டாக் கத்தி, பீரங்கி, உணவுப் பொருட்கள் சாராயம் போன்றவற்றை கொள்ளையடித்து கோட்டைக்கு திரும்புகின்றனர். இதில் பெரும் பங்கு வகிக்கிறார் பொட்டி பகடை. ஊமைத் துரை பொட்டிப் பகடையையும் முத்தான் பகடையையும் கோட்டை காவலுக்கு தளபதிகளாக நியமிக்கிறார். ஏட்டையபுரக் காரர்களின் யோசனையின் படி கோட்டையைச் சுற்றி பஞ்சு மற்றும் மிளகாய் மூட்டைகளை அடுக்கி தீ வைத்துவிட்டு தொடர்ந்து ஆங்கிலேயர்கள் தாக்குதலை செய்கின்றனர். இதில் மிளகாய் நெடியின் காரம் தாங்க முடியாமல் வீரர்கள் கலைகின்றனர். இந்த சண்டையில் பொட்டி பகடையும் முத்தன் பகடையும் வீரமரணம் அடைகின்றனர். கோட்டையிலிருந்து வெளியேறிய ஊமைத்துரை மருதுபாண்டியர்களிடம் அடைக்கலமடைந்தார். 

இப்படி வீரஞ்சொறிந்த படைத் தளபதிகளை அருந்ததியினர் என்பதற்காகவும் தேவேந்திரர்கள் என்பதற்காகவும் மறைத்தும் இழிவுபடுத்தியும் ஒரு வரலாற்றை எழுதி அதை மக்களையும் நம்பவைத்த மா.பொ.சிவஞானம் தான்.  

சாதி ஒழிப்பே தமிழ் தேசியம் - தோழர் பொன்பரப்பி தமிழரசன்


வழி நிற்போம், களைகளை களைந்திடுவோம்.. 

Thursday, May 8, 2014

மாட்டுப் பொங்கல் எனும் திட்டி சுத்துதல்


காரைக்குடி பக்கத்தில் கண்டனூர் கிரமம் என்று சொல்ல முடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு ஊர். எனென்றால் கிராமம் என்பதற்கு அடையாளமாக நமக்கு மனதில் பதிந்து இருப்பது எல்லாம் ஓட்டுவீடுகளும் குடிசைவீடுகளும் நிறைந்த சாலைகள் தான் ஆனால் இந்த காரைக்குடியில் கிராமங்கள் என்று அழைக்கப்படும் அத்தனை ஊரிலும் மச்சுவிட்டில் இருந்து குச்சுவீடு வரை அனைத்தும் இருக்கும், அதிலும் ஒவ்வொன்றும் அரண்மனை போன்ற தோற்றத்தடுன் மூன்று கட்டு வீடுகள் என்பது குறைந்த பட்ச அளவீடாக இருக்கும் இதை கிராமம் என்ற சொல்ல முடியும் இருந்தாலும் கிராமமே இவைகள். முதன் முறையாக நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது தான் ஊருக்கு கூட்டிச் சென்றார்கள், தரையோடு இருக்கும் கிணறுகளின் தயவால், அது வரை ஊருக்கு கூட்டிச் சென்றது இல்லை.  ஒரு பொங்கல் அன்று மதுரையில் வீட்டில் பொங்கல் வைத்து மதியம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மாலைக்குள் ஊர் போய் சேர்ந்தோம் சின்ன ஆயாவின் வீட்டில் தான் இரவு தங்கல் அது ஒரு குடிசை வீடு, சாணி மொழுகுவது என்றால் என்ன என்று அந்த வீட்டில் தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.


இரவு வீட்டின் வாசலிலேயே பாய் போட்டு படுத்து உறங்கினார்கள் என்னை மட்டும் வீட்டுக்குள் படு, காலை பனி உனக்கு ஆகாது என்று வீட்டுக்குள் தள்ளிவிட்டனர், வீட்டுக்கு கடைகுட்டியா பிறந்தால் இது ஒரு தொல்லை. மின்விசிறியோ மின் விளக்கோ எதுவும் இல்லாத ஒரு வீடு, ஆனால் காற்றோட்டத்திற்கு எந்த குறையும் இல்லை. காலையில் 5 மணிக்கு எல்லாம் உருட்டும் சத்தங்கள் எழுந்து உட்கார்ந்தேன், பல்லு விளக்கும் முன்பே காப்பிதண்ணி குடி என்று கையில் டம்ளரை திணித்தார் அழகு சித்தி. குடித்துக் கொண்டிருக்கும் பொழுது சீக்கிரம் கிளம்பு கம்மாயில் குளிக்க போகலாம் என்றார் அம்மா. முதல் முறை கம்மாய் குளியல் நீச்சல் தெரியாது அம்மா நீச்சல் அடிப்பதை வேடிக்கை பார்த்தேன். அம்மாவே நீச்சலும் கத்து கொடுத்தார் கைகளில் படுக்கப் போட்டு, கற்றுக் கொண்டேனோ இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் நல்லா தண்ணி குடிச்சேன். அதன் பிறகு வீட்டிற்கு வந்தோம் அதற்கு முன்பாக அங்கு எல்லாம் தயராக இருந்தது. வெத்தெலை பாக்கு தட்டு தாம்பாளம், தேங்காய் என்று, ஆயா ஒரு பசு மாடு வளர்க்கிறார் மேலும் அது ஈன்ற காளை கன்னுகுட்டி வேறு இருந்தது. அவைகளை சித்தியும் ஆயாவும் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தனர் கிணற்றில் நீரிறைத்து. சரி கிணத்தில் நீர் இறைக்கலாம் என்று போனால் அந்த பசு மாடு முட்ட வந்தது தான் மிச்சம், நானும் ஓடி தள்ளி வந்து நின்று கொண்டேன்.


அப்புறம் தெருவில் மூன்று வீட்டிலோ நான்கு வீட்டிலோ தான் மாடு வளர்த்தார்கள் ஒவ்வொரு வீடாக திட்டி சுத்த போகிறோம் என்று சிறுவர்கள் இளைஞர்கள் என்று ஒரு கூட்டமாக கிளம்பினார், என்னை அவர்களுடன் போகச் சொன்னார்கள் முதல் நாள் மாலையே எதிர்த்த வீட்டில் இருந்த செல்லப்பன் நட்பாகிவிட்டான், சரியென்று அவனுடன் ஒட்டிக் கொண்டேன் முதலில் ஒரு விட்டுக்கு சென்றோம் அவர்கள் சூடம் கொளுத்தி மாட்டிற்கு காட்டினார்கள் அப்புறம் அங்கு வைத்திருந்த பொங்கப்பானையில் இருந்து கூட்டாஞ்சோறை மாட்டிற்கு கொடுத்தார்கள் அதன் பிறகு அனைவரும் கையில் வைத்திருந்த தப்படித்துக் கொண்டு, சங்கு ஒன்றை ஊதிக்கொண்டு மாடுகளை சுற்றி வந்தோம் அப்பொழுது மாடுகள் மிரண்டு கொழுவில் இருந்து அறுத்துக் கொள்ள முயன்றன் வீட்டினர் மூன்று சுற்றுகள் முடிந்ததும் மாட்டை அவிழ்த்துவிட்டனர். மாட்டின் கழுத்தில் கரும்புத் துண்டுகள், பனங்கிழங்கு துண்டுகள் போன்றவை கட்டி விடப் பட்டிருக்கும் வாசல் வழியை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் சுற்றி நின்ற பொழுது வாசலை நோக்கிய மாட்டின் கழுத்தில் இருந்த இந்த பனங்கிழங்கு மாலையை பறித்தெடுத்தனர் அத்தனை பேரும் நானும் எங்கிட்டு ஓடுவது என்று தெரியாமல் ஓடி வந்த கன்னுகுட்டி கழுத்தில் இருந்து உருவினேன். அடுத்து சின்ன ஆயா வீட்டில் அங்கு திட்டி சுத்தி முடிச்சு மாட்டை அவிழ்த்து விடும் பொழுது பலர் விலகினர், ஒருத்தர் வேறு டே அதுகிட்ட போகாதீங்கடா முட்டி தூக்கிப்புடும் மூணு நாளைக்கு எந்திரிக்க முடியாது என்று வேறு குரல் கொடுத்தார். அப்படியும் ஒரு பையன் வாசலில் நின்று கழுத்தில் இருந்த பனங்கிழங்கு மாலையை உருவிட்டான்.

பிறகு கடைசியாக செல்லப்பன் வீட்டில் திட்டி சுற்றினோம், ஆரம்பிக்கும் முன்பே செல்லப்பன் காதை கடித்தான் ஏய் ஹரி ஜாக்கிரதை திட்டி சுத்தி முடிச்சவுடனே சிட்டாக் கிளம்பிடும் மஞ்சள் தண்ணி ஊத்த ஆரம்பிச்சுடுவாளுகடா ஜாக்கிரதை என்றான். அன்று நான் வேற அழகா வெள்ளை டீசர்ட் வேறு போட்டிருந்தேன் என் வீட்டுக்கு ஓடிறலாம் என்று பார்த்தால் அங்க என் சித்திகள் அண்டவை தூக்கிட்டு வந்து வாசலில் வைத்தார்கள், பார்த்தவுடன் புரிந்தது முடிந்தது நம்ம கதை போய் சட்டையை மாத்த கூட நேரம் இல்லையே என்று யோசிக்கும் பொழுது நண்பனின் தங்கை அண்ணே இன்னைக்கு என்னிடம் மாட்டினீங்க என்று நின்று கொண்டிருந்தவள் கிழே குணிந்து ஒரு சிறிய பானையை எடுத்து காண்பித்தாள் முடிஞ்சது நம்ம டீசர்ட் கதி அதோ கதி தான் என்று நினைத்தேன். மூன்றாவது சுத்து சுத்தும் பொழுதே செல்லம்மா பானையை எடுப்பதை பார்த்தவன் விவரமாக மெதுவாக பசங்க பின்னாடி தங்கி மாட்டை அவிழ்த்து விட்டவுடன் மாடு ஓடியாதா இல்லையா என்று எனக்குத் தெரியாது வயக்காட்டில் இருக்கும் பிள்ளையார் வடத்தை நோக்கி ஓடினேன் அப்படியும் யார் மீதோ ஊற்றிய தண்ணீர் என்னை குளிப்பாட்டியது சரிடா ஹரி விடு என்று மனசை தேத்திக் கொண்டாகிவிட்டது.

இது தான் நான் பார்த்த முதல் மஞ்சுவிரட்டு, அன்று மதிய உணவின் போது பெரியய்யாவிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அவருக்கு ஊருக்குள் பெயர் சுள்ளான் அய்யா, சுள்ளான் என்றால் எறும்பு அவரை யாரும் எதுவும் சொல்ல முடியாது. சொல்வதற்குள் வேலையை முடித்துக் கொண்டு வந்து நிற்பார், ஆயா ஹரி வந்திருக்கான் நண்டு என்று பேச ஆரம்பிப்பார் அதற்குள் சைக்கிளை எடுத்திருப்பார் 3கி.மீ தள்ளியிருக்கும் சாலையை நோக்கிச் சென்றிருப்பார் அதனாலேயே அவருக்கு சுள்ளான் அய்யா என்று பெயர் வந்தது என்று செல்லப்பன் சொன்னான். மதியம் சாப்பிடும் பொழுது அய்யாவிடம் என்னய்யா இது தான் ஜல்லிக்கட்டா சினிமாவில் எல்லாம் என்னவோ ஹிரோவும் மாடும் மட்டும் நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதாக காட்டுவார்களே அந்த மாதிரி எல்லாம் கிடையாதா என்று கேட்ட பொழுது தான் சொன்னார். மாடு பிடிப்பதில் இருக்கும் வித்தியாசங்களை.


மஞ்சுவிரட்டு என்பது வீடுகளில் நம் உபயோகத்திற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தும் மாடுகளை அன்று அவை நமக்கு செய்த உதவியை நினைவு கூர்ந்து அவைகளை அலங்கரித்து வணங்கி, அவை சுதந்திரமாக திரிய விரட்டி விடுவது. இது பெரும்பாலும் மந்தைகளில் நடந்தது பிறகு ஒவ்வொரு வீட்டின் தொழுவத்தில் நடைபெற ஆரம்பித்தது. மாடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட பிறகு மாட்டுத் தொழுவத்திற்கு மாற்றிக் கொண்டனர். விவசாய உபகரணங்கள் அதிகரித்து மாடுகளின் தேவை குறைந்த பிறகு இத்தகைய நிலைக்கு சென்றது.

ஏறு தழுவுதல் இதற்கான மாடுகள் தனியாக வளர்க்கப்படுபவை இவைகள் பெரும்பாலும் பெண்களே வளர்ப்பார்கள், ஆண்களை அருகில் விடாமல் வளர்ப்பார்கள். இவை ஏறுதழுவுதல் என்ற விளையாட்டின் நோக்கிற்காக மட்டுமே வளர்க்கப்படுபவை இதை விவசாயத்திற்கோ அல்லது போக்குவரத்திற்கோ பயன்படுத்துவதில்லை. இவைகளை கோயிலுக்கு அருகே வாடிவாசல் என்ற பகுதி இருக்கு இலை அல்லது அமைப்பார்கள் அந்த வாடிவாசலை விட்டு வெளியில் வந்தால் ஒரு பெரிய தெரு ஊருக்கு வெளியே செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த வாடிவாசலை விட்டு வெளியில் வரும் காளைகளை இளைஞர்கள் அதன் திமிலை தழுவிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும் அப்படி சென்றார்கள் என்றால் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதையே ஏறு தழுவுதல் என்பார்கள்.

ஜல்லிகட்டு என்பது ஊர் மைதானத்தில் சுற்றிவர தடுப்புகள் அமைத்து அதில் காளையை அவிழ்த்து விடுவார்கள் அப்படி வரும் காளையை இளைஞர்கள் அடக்க வேண்டும் ஆனால் இந்த முறை இப்பொழுது பெரும்பாலும் குறைந்துவிட்டது பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் சிராவயலில் மட்டும் நடக்கிறது, மேலும் வேறு எந்த ஊரிலாவது யாராவது முன்வந்து இத்தகைய போட்டிகளை நடத்தினால் தான் உண்டு அது எப்பொழுதாவது நடைபெறும் என்றார். அது தான் உங்க சினிமாவில் வருவது ஆனால் அது ஒத்தைக்கு ஒத்தை எல்லாம் கிடையாது 10 பேருக்கு மேல் கூட களத்தில் சுற்றி நின்று காளையை விரட்டி அதன் திமிலை பிடிக்க முயற்சிப்பார்கள் திமிலை பிடித்து அது அந்த சுற்று அரணை தாண்ட வலியில்லாமல் பிடித்தவரை உதறித் தள்ள முயற்சிக்கும் அந்த முயற்சியை முறியடித்து காளை களைத்துப் போகும் வரை பிடித்து நிற்பவரே வெற்றிபெற்றவர் என்று அறிவிக்கப்படுவார் என்றார்.

இந்த விளையாட்டுகள் அனைத்தும் விவசாயத்தை முடித்துவிட்டு அறுவடையை வீட்டுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது மட்டுமில்லை தனக்கு இந்த விளைச்சலில் உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாகவும். உழைத்து உரமேறிய தனது தினவெடுத்த தோள்களை போருக்கு தயார் செய்யும் நோக்கிலுமே நடந்து வந்துள்ளது, அதாவது உழைப்பின் வேகத்தில் எதிரியுடன் மல்லுக்கட்டும் தைரியத்தை இழந்துவிட்டோமா இல்லை இன்னும் தைரியம் இருக்கிறதா என்பதை பரிசோதனையாக தெரிந்துகொள்வது, தன்னை விட பல மடங்கு ஆற்றல் வாய்ந்த காளையை தழுவிக்கொண்டு பயணிப்பது என்பது இதன் அடிப்படையிலேயே. அதன் ஆற்றலுக்கு ஈடுகொடுத்து விடாப்பிடியாக நிற்கும் தன் மனதைரியத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரு போருக்கான தயாரிப்பு முறையே ஜல்லிக்கட்டு என்று சொன்னார்.

ஆனால் இன்று நாம் ஜல்லி கட்டு என்று ஏறுதழுவுதலையே அழைத்துக் கொண்டிருக்கிறோம், அலங்காநல்லூர், பாலமேடு என்று அனைத்துமே ஏறு தழுவுதல் என்ற அடிப்படையிலேயே நடைபெறுகிறது. சிராவயலில் ஜல்லிகட்டு நடப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அரண் அமைத்து நடக்கிறதா இல்லை ஏறுதழுவுதல் முறையில் நடக்கிறதா என்பது தெரியவில்லை. 

Monday, May 5, 2014

திமுக டூபாக்கூர்களும் சபாரத்தினமும்..


மதுரையில் டெசோ மாநாடு நடந்தது அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று சொல்பவர்கள் மே 4ம் தேதி 1986ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் டெலோ இயக்கத்திற்கு இடையில் எதனால் பிரச்சனை என்பதை சொல்வதில்லை. 

1986ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி விடுதலை புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் நடந்த ஒரு சண்டையில் புலிகள் இயக்கத் தளபதி அருணன் மரணம் அடைந்துவிட்டார். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக் ஏப்ரல் 28ம் தேதி யாழ்குடாவில் கடையடைப்பு நடைபெற்றது. அதாவது மதுரையில் டெசோ மாநாடு கூடுவதற்கு சரியாக 7 நாட்கள் முன்பு நடந்தது அருணன் மரணம் அதை ஒட்டி 28ம் தேதி கடையடைப்பு நடந்தது. ஆனால் ஏப்ரல் 23ம் தேதி டெலோ அமைப்பை சேர்ந்த 11பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர். விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர் இறந்தமைக்காக கடையடைப்பு நடத்துகிறீர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள் மதிப்பு இல்லையா என்று சொல்லி, டெலோ அமைப்பினர் 29ம் தேதியும் கடையடைப்பு நடத்த சொல்கிறார்கள். அதில் பங்கு கொள்ளாத கல்வியங்காட்டு பகுதி மக்கள் மீது, அதாவது எந்த மக்களுக்காக போராட வந்தார்களோ அவர்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அப்பொழுது அங்கு இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்த மேஜர் பஷிர் காக்கா மற்றும் லெப்டினண்ட் முரளி டெலோ இயக்கத்தினரை தடுக்கின்றனர். அவர்களை கைது செய்து டெலோ முகாமிற்கு அழைத்துச் செல்கின்றனர். 

இதுவே டெலோ அமைப்பிற்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் டெசோ மாநாடு மதுரையில் நடந்த பொழுது நடந்த பிரச்சனை. இந்த பிரச்சனையை முழுவதுமாக சொல்லாமல் மூடி மறைக்கின்றனர். இங்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதாக சொன்னவர்கள், ஈழத்தில் அதை கடைபிடிக்கவில்லை. சபாரத்தினத்தின் பழைய நண்பரான தளபதி லிங்கம் டெலோ இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றார். ஆனால் அவரை கொலை செய்தது மட்டுமில்லாமல் அவரின் கண்களையும் தோண்டி எடுத்துவிட்டனர். ஒரு சிங்கள இராணுவத் தளபதியை பிடித்து அவரின் கண்ணை நோண்டியிருந்தால் கூட குட்டிமணி, ஜெகன் படுகொலைக்கு பழிவாங்குவதாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் சகபோராளி இயக்கத்தின் தோழரை அதுவும் தங்கள் தலைவரின் நண்பரின் கண்களை இறந்த உடம்பிலிருந்து பிடுங்கும் சிங்கள இனவெறியர்கள் போன்று நடந்து கொண்டனர். இதன் பிறகே புலிகள் இயக்கமும் டெலோவுக்கும் இடையிலான மோதல் பெருமளவில் நடக்கிறது இதில் தான் சபாரத்தினம் கொல்லப்படுகிறார். 

இது ஒரு நடவடிக்கை புலிகள் இயக்கத்திற்கு எதிரானது, ஆனால் மக்களுக்கு எதிராக ஆயுதத்தை உபயோகித்ததை மறந்துவிடுகிறார்கள், மறைத்தும் விடுகிறார்கள். அதுவும் சக போராளி இயக்கத்தில் மரணம் அடைந்த ஒரு தோழருக்காக கடையடைப்பு நடத்தும் மகக்ளை, தங்கள் இயக்கத் தோழர்களுக்காக கடையடைப்பு நடத்தவில்லை என்ற பொறாமையின் கீழ் கோரிக்கை விடுத்து அதை செயல் படுத்தாத ஒரு பகுதி மக்களின் மீது தாக்குதலை நடத்தியதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். மேலும் டெலோ அமைப்பினர் சொந்த மக்கள் மீது ஆயுத பிரயோகம் செய்தது இது முதல் முறை அல்ல. 


டெலோ அமைப்பில் சபாரத்தினத்திற்கு அடுத்த கட்டத்தில் தாஸ் மற்றும் பாபி இருந்தனர், இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளினால் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர். இவர்களை சமதானப் படுத்தி ஒன்றிணைத்து போராட வைக்க வேண்டிய சபா ரத்தினம் பாபியுடன் இணைந்து தாஸை கொலை செய்தார். ஆம் ஏப்ரல் மற்றும் மேயில் நடந்த பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 1986ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி பேச்சுவார்த்தை என்று யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு வரச் செய்து, அங்கு பாபியுடன் சேர்ந்து சபா ரத்தினம் தாஸ், மோகன் (முல்லை தீவு), காளி (பருத்தி துறை), கிசான்(திரிகோணமலை) பீட்டர் (வதிரி) சுட்டு கொன்றார். மருத்துவமனை மக்கள் இருக்கும் இடம் என்ற நினைப்பு கூட இல்லாமல் இந்திய அமைதிப்படை 1987ல் செய்த அதே அக்கிரமத்தை மருத்துவமனையில் துப்பாக்கிகளை முழங்கசெய்து தங்கள் பகையை தீர்த்துக் கொண்டனர், அதுவும் உள் இயக்கப் பிரச்சனைக்காக. இந்த துப்பாக்கி சூட்டில் முன்னால் நீதிபதி கிருபாகரனும் ஒரு பதின்ம வயது சிறுமியும் மரணம் அடைந்தனர். இதை கண்டித்து மறுநாள் மார்ச் 12ம் தேதி பொதுமக்களும் மாணவர்களும் இணைந்து ஒரு அமைதி ஊர்வலம் நடத்தினர் அங்கு சென்று ஊர்வலம் நடத்தக் கூடாது என்று டெலோ இயக்கத்தினர் மிரட்டினர். தொடர்ந்து செல்ல முயன்ற மக்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தினர், மக்கள் காயங்களுடன் தப்பினர். இப்படி எந்த மக்களின் விடுதலைக்காக போராட வந்தார்களோ அவர்களின் மீதே போர் தொடுத்த இயக்கம் தான் டெலோ அமைப்பு. 


என்ன செய்வது சகவாச தோசம் கருணாநிதியுடன் இணைந்த பிறகு மக்களைப் பற்றி நினைக்க தோன்றுமா என்ன????

இதுமட்டுமல்ல 1985ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்தது டெலோ அமைப்பு தான். இதை அவர்களின் உறுப்பினரான பழனிவேல் தங்கராசா என்பவர் டெலோ புலிகள் மோதல் நடந்த 1986 மே மாதம் கைது செய்யப்படுகிறார். பாபி உத்தரவிட்டார், ஏன் என்று கேட்டபொழுது அரசியல் நகர்வு தலைமையின் உத்தரவு என்று மட்டும் சொல்லியிருக்கிறார். கொலை செய்ய செல்ல ஒரு பழுப்பு நிற மோரிஸ் கார் கொடுக்கப்பட்டுள்ளது சிட்டி பாபு, வாலண்டைன் மற்றும் ரஞ்சித் ஆகியோருடன் நானும் முதலில் ஆலாலசுந்தரம் வீட்டுக் சென்று அவரை பலவந்தமாக காரில் ஏற்றிக் கொண்டு அடுத்து தர்மலிங்கம் வீட்டிற்கு சென்று ஆலாலசுந்தரம் பேச விரும்புகிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றி சென்று முதலில் ஆலாலசுந்தரத்தை பின்னர் தர்மலிங்கத்தையும் சுட்டு கொலை செய்தோம் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். இந்த இரண்டு கொலைகள் நடந்த பொழுது புலிகள் இயக்கத்தின் மீது பலி சொல்லப்பட்டது. ஆனால் பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் புஸ்பராஜாவும் டெலோ இயக்கம் தான் இவர்களை கொலை செய்தது என்பதை தன் புத்தக வாயிலாக உறுதி செய்தார். 

புலிகள் இயக்கம் தாங்கள் செய்த அரசியல் கொலைக்களுக்கு உரிய நியாயத்தை சிறு புத்தகங்கள் இல்லை துணுடுபிரசுர அறிக்கைவடிவிலோ வெளியிடுவார்கள், அதில் அதற்கான காரணங்கள் அச்சிடப்பட்டிருக்கும், இது எந்த மக்களுக்காக போராடுகிறோமோ அவர்களுக்கு தங்களுடைய தரப்பு நியாயத்தை சொல்வதற்காக கடைபிடிக்கும் முறை. இதேபோல் டெலோ இயக்கத்தை அளித்தது ஏன் என்ற விளக்கம் ஈழமக்களுக்கு புத்தகமாக கொடுக்கப்பட்டது. அதன் பின்னரும் போராட்டம் தொடர்ந்தது, மக்களுடைய ஆதரவும் தொடர்ந்தது. ஆனால் இன்று கிளம்பியிருக்கும் சொம்புகள் சபாரத்தினத்தின் தாயர் அன்றுதொட்டு சாகும் வரை சென்னையில் தான் இருந்தார் என்பது கூட தெரியாது. அவரின் சவ ஊர்வலம் மிகவும் சொற்பான ஆட்களுடன் தான் நடந்தது தங்கள் தலைவர் ஏன் சபாவின் தாயார் ஊர்வலத்துக்கு கூட செல்லவில்லை என்று இது வரை கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை... போஸ்டர் மட்டும் ஒட்டுவார்கள் பிராபகரனின் அன்னைக்கு மருத்துவம் செய்துகொள்ள அனுமதித்த கருணாநிதிக்கு நன்றி நன்றி என்று.


இந்தியாவின் “ரா” அமைப்பு தான் போராளி இயக்கங்களுக்கு பயிற்சி அளித்தது, இந்திராவின் நேரடி காரியதரிசியாக இருந்த ஜி. பார்த்தசாரதி இருந்தவரை இந்திய அமைப்பின் நிலைப்பாடுகள் சரியாகவே இருந்தது. இந்திரா இறந்து அடுத்த மாற்றங்கள் வந்த பொழுது இந்திய அரசின் ஈழம் குறித்த நிலைப்பாடுகள் மாறுகிறது. இதில் போராளி இயக்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேலையை தொடர்ந்து “ரா” செய்துவந்தது, அதற்கு பழிகடாவானவர் பலர், ஈ.பி.ஆர்.எல்.எஃப் தான் கொஞ்சம் பலியாகமல் இருந்தது ஆனால் அதுவும் ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தியாவின் கைப்பாவையாகவே மாறியது, இவையெல்லாம் வரலாறு யாராலும் மறைக்க முடியாது. ஆனால் மேலே குறிப்பிட்ட எந்த மக்களுக்காக போராட வந்தார்களோ அந்த மக்களின் மீது ஆயுதங்களை பயன்படுத்திய அனைத்து சம்பவங்களின் போதும் சபாரத்தினம் ஈழத்தில் களத்தில் தான் இருந்தார் அனால் இந்த சம்பவங்களின் போது பிராபகரன் சென்னையில் தான் தங்கியிருந்தார். களத்தில் நடந்த அனைத்து கொலைகளின் போதும் களத்திலேயே நின்றவர் தான் சபாரத்தினம். இப்ப யார் இந்த சபாரத்தினம் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்..