Friday, April 25, 2014

ராஜிவ் மரணமும் அரசியலும் - காங்கிரஸ்


ராஜிவ் காந்தியின் மரணம் 1991ம் ஆண்டு நடந்தது ஆனால் அன்றிலிருந்து அதன் பின்னான அரசியல் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த அரசியலில் ஒவ்வொரு முறையும் ஒருவர் தனது அரசியல் பிழைப்பிற்காக பயன்படுத்தியே வருகின்றனர். சிலப்பதிகார வரி ஒன்று

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”

அதாவது அரசியலை மக்கள் நலனுக்காக இல்லாமல் அதை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துபவர்களுக்கு அறமே எமனாக மாறும் என்று சொல்கிறது. ஆனால் நாம் வாழ்வது சிலப்பதிகார காலமில்லை. சிலப்பதிகாரத்தை தனக்காக வளைத்துக் கொள்ளும் வஞ்சகர்கள் வாழும் காலம். இதில் செங்கோல் வளைந்தால் மன்னன் உயிர்வாழ்தல் நன்று அன்று என்று சொல்லும் காலமா இது. இவர்களுக்கு அறம் கூற்றானால் என்ன ஆகவிட்டால் நமக்கென்ன ராஜிவ் மரணத்தில் யாருக்கு அரசியல் என்பதை பார்ப்போம் முதலில் காங்கிரஸ். காங்கிரஸ் இந்த மரணத்தை வைத்து அன்றிலிருந்து இன்று வரை செய்து கொண்டிருக்கும் அரசியல் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

காங்கிரஸ்

ராஜிவின் மரணத்திற்கு பிறகு அவரின் மரணம் யாருக்கு பயன்பட்டதோ இல்லையோ அரசியல் வாதிகளுக்கு பயன் பட்டது. 1991ல் தேர்தல் காலத்தில் தான் ராஜிவ் மரணம் நிகழ்கிறது, அதற்கு முன்பாக 211 தொகுதிகளில் தேர்தல் முடிந்திருந்தது. மிச்சம் இருக்கும் 334 தொகுதிக்களுக்கான தேர்தல் ஒரு மாதம் தள்ளிப்போடப்பட்டது இதில் பஞ்சாப்பும், ஜம்மு காஷ்மீரும் அடங்காது, அந்த மாநில தேர்தல்கள் 1992ல் தான் நடைபெற்றது. அதாவது இந்தியா முழுமைக்குமான ஒரு தேர்தலில் இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடக்காமல் மற்ற மாநிலங்களில் தேர்தல் நடந்தி இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுத்த அவலம் 1991ல் தான் நடந்தது. 


இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடக்கவில்லை ராஜிவின் மரணத்திற்கு முன்பாகவே 211 தொகுதிகளில் தேர்தல் நடந்துவிட்டது. சரி மிச்சம் இருக்கும் தொகுதிகளில் தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடக்காமல் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டது. ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறந்துவிட்டால் அவரின் தொகுதியில் மட்டும் தான் தேர்தல் தள்ளிவைக்கப்படும் ஆனால் மீதம் தேர்தல் நடக்க வேண்டிய இடங்களில் தேர்தல் நடக்கும் ஆனால் இங்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் தள்ளிவைக்கப் பட்டது அடுத்து நடக்க வேண்டிய தேர்தல்கள் ஜூன் 12 மட்டும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதாவது அன்று அமைச்சராகவோ இல்லை எதிர் கட்சியின் கொரடாவாகவோ இல்லாத ஒருவர் இறந்தார் என்பதற்காக ஒட்டுமொத்த இந்தியாவின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது இதற்கு காரணம் அவர் மிகப்பெரிய ஆள் என்பது அல்ல, இந்திராகாந்தி இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ராஜிவின் முட்டாள் தனமான செயல்பாடுகளால் தனது மக்கள் செல்வாக்கை இழந்திருந்தார், போபர்ஸ், பஞ்சாப் சீக்கிய படுகொலை, போபால் என்று எங்கு அவர் கைவைத்தாலும் வினையாக முடிந்தது. அப்படி அவர் கை வைத்த இடம் தான் ஈழப்பிரச்சனையும் அதிலும் பன்னாட்டு அரங்கில் தானும் ஒரு ரவுடி என்று காட்டிக் கொள்ள முயன்று ஒரு நாட்டின் இராணுவத்தை அதுவும் இவர்கள் அவர்கள் முன்னால் பீலாவெல்லாம் விட்டார்கள். ஜே.என்.திக்சித் சொன்னான் ஒரு விடுதலைப் போராட்ட குழுவின் தலைவரான பிராபாகரனிடம் உங்கள் குழுவை இந்த சிகெரெட் குடிக்கும் நேரத்தில் அழித்துவிடுவேன் அத்தகையது எனது இராணுவத்தின் பலம் என்று ஆனால் ஈழத்திற்கு அவர்கள் அனுப்பிய இராணுவத்தில் அரசாங்கப் பூர்வ தகவலாக தரும் 1155 பேருக்கு அவர்கள் சண்டையில் ஈடுபட்ட இடத்தில் நினைவிடம் எழுப்ப முடியாமல் கொழும்புவில் சிங்களன் பகுதியில் தான் நினைவுத் தூண் எழுப்பினார்கள். இவ்வளவு கேவலமாக தானும் ஒரு ரவுடி என்று நிருபிக்க முயன்று தோற்ற ஒரு மனிதனை நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க விரும்ப மாட்டார்கள் என்பது காங்கிரஸுக்கு தெரியும் அந்நிலையிலேயே ராஜிவின் மரணம் நிகழ்கிறது.

அதுவும் 211 தொகுதிகளில் வாக்கு பதிவு நடந்து முடிந்துவிட்டது மிச்சம் இருக்கும் தொகுதிகளில் தான் வாக்கு பதிவு நடக்கவேண்டும். அதிலும் விபி.சிங் இன்னொரு பிரதம வேட்பாளராகவும் வாஜ்பாய் இன்னொரு பிரதம் வேட்பாளாராகவும் நிறுத்தப்பட்டிருந்த நேரம் அது அந்நிலையில் ராஜிவின் மீதான நம்பிக்கை இம்மியளவும் இல்லாத நிலை. ஆம் ராஜிவின் மரணத்திற்கு முன்பாக நடந்த 211 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது வெறும் இரண்டிலக்க தொகுதிகளில்தான். ஆனால் ராஜிவ் மரணத்தை வைத்து அதை காட்சிப் பொருளாக்கி ராகுல் கொள்ளி வைப்பது ஊர்வலம் நடப்பது என்று காட்டி ராஜிவின் பிணத்தை காட்டி மக்களின் பரிதாபத்தை தேடினர். அதுவும் அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் அதில் மிக முக்கியமானது ஒரு வருடம் கழித்து நடப்பட்ட பஞ்சாப் மற்றும் காஷ்மீர தேர்தல் உட்பட ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை பெறவில்லை. அதாவது ராஜிவ் செத்த பிறகு மொத்தம் 334 தொகுதிகளில் தேர்தல் நடந்தது ராஜிவின் பிணத்தை வைத்து அனைத்து தொகுதிகளை கைப்பற்றிவிடலாம் என்று மனப்பால் குடித்தார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக ராஜிவ் மரணத்திற்கு முன்பும் பின்பும் சேர்த்து கூட ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்கவில்லை. வெறும் 244 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றார்கள். அதுவரை 60வது தொகுதியிலேயே அதிகபட்சமாக வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா அந்த தேர்தலில் 120 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையிலேயே இன்று வரை ராஜிவ் தான் அடுத்த பிரதமராக வர இருந்தார் அவரை கொலை செய்து விட்டனர் என்று விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.

1991ல் தேர்தலில் மைனாரிட்டியாக அனைவரின் உதவியையும் பெற்று ஆட்சி அமைத்தனர் எனென்றால் அதற்கு முன்பாக 2 வருடங்களுக்கு முன்பாகத் தான் ஒரு தேர்தல் நடந்திருந்தது அடுத்த தேர்தலை நடத்த இந்தியாவின் பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பதால் ஒரு சமரசத்திற்கு வந்து பிரதமராக மாற்றப்பட்டவர் தான் நரசிம்ம ராவ், இன்றைய மன்மோகன் சிங்கை வர்ணிப்பதைவிட இவரை அன்று ஆற்றல் இல்லாத ஒரு பிரதமர் என்று விமர்சித்துள்ளனர். அதுவும் தன் நாட்டிற்கு உட்பட்ட பழம்பெரும் கட்டிடம் இடிக்கப்பட்ட பொழுது அதுவும் பல மாதங்களுக்கு முன்பாகவே அங்கு புதுக்கட்டிடம் கட்ட போகிறோம் என்று அறிவிக்கப்பட்ட பொழுதே பழைய கட்டிடம் இடிக்கப்பட போகிறது என்பதை உணராத அல்ல உணர்ந்து அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்க இயலாத செயலிழந்த பிரதமராக செயல் பட்டார். இவர் இறப்பிற்கு முன்னால் பிரதமர் என்ற மரியாதை கூட இந்திய அரசு கொடுக்கவில்லை அது தனிக் கதையல்ல, மகாபாரதம் போல் கதைக்குள் ஒரு கதை, அதைப் பின்னர் பார்ப்போம்.


1991ல் அழிய வேண்டிய ஒரு கட்சிக்கு இப்படித்தான் உயிர் கொடுக்கப்பட்டது, அதாவது அவர்கள் தலைவரின் ஒருவரின் மரணத்தை வைத்து அதன் மூலமாக அரசியல் செய்து பதவிக்கு வந்தார்கள் அங்கும் எதையும் சாதிக்கவில்லை அதனாலேயே அரசியல் மாற்றம் ஏற்பட்டது 1996ல். அதாவது மக்கள் உணர்ந்தார்கள் அதுவும் வெறும் சொற்ப ஓட்டுகளே போட்ட மக்கள் உணர்ந்து காங்கிரஸை துரத்தினார்கள் 1996ல். இப்படி தங்களுடைய தகுதி என்பது அழிக்கப்பட்டதை உணர்ந்து அதன் பிறகு தங்கள் அரசியலால் அதுவும் இவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட வர்மா கமிசன் அதுவும் இவர்களின் தலைவர் செத்த வழக்கில் ஏற்ப்பட்ட பாதுகாப்பு குறித்த குறைபாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட ஒரு கமிசனின் அறிக்கையை தொலைத்து விட்டோம் என்று சொல்கிறார்கள். இது 1991 முதல் 1996 வரையிலான காங்கிரஸ் ராஜிவ் மரணத்தை வைத்து அடைந்த ஆதாயங்கள் மட்டுமே. அதற்கு பிறகும் 2014 வரை ராஜிவ் மரணத்தை வைத்து நிறைய ஆதாயங்கள் அடைந்துள்ளனர் அதை அடுத்து எழுதுகிறேன்.

ஆனால் இந்த கட்டுரையில் எழுப்பபட்டுள்ள மிக முக்கியமான விசயங்கள் ராஜி இறந்த பிறகும் கட்சி ஆரம்பித்து மூன்றாவது தேர்தலில் 120 இடங்களில் பாஜக எப்படி வெற்றி பெற்றது அதுவும் ஒரு நாட்டின் வருங்கால பிரதம என்று சொல்லப்படுபவர் இறந்த பிணத்தை வைத்து ஓட்டு கேட்ட பொழுதும், அமேதிக்கு மட்டும் தள்ளிவைக்காமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேர்தலை தள்ளி வைத்து இந்தியா முழுவதும் ஒரு பிணத்தை காட்டி மக்களின் பரிதாபத்தை பெற முயற்சித்தவர்களுக்கு ஏன் மக்கள் ஓட்டு போடவில்லை. இதே தேர்தலில் விபி.சிங்கின் ஜனதா தளம் 64 இடங்களை கைப்பற்றியது...

இப்படி மைனாரிட்டியாக வரத்தான் 334 தொகுதிகளுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதா, ராஜிவ் இவர்கள் சொல்வது போல் மிகப்பெரிய தலைவன் என்றால் ராஜிவின் மரணத்திற்கு பின்பு நடந்த 334 தொகுதிகளிலும் பிணத்தை பார்த்து ஓட்டு போட்டு பரிதாப அலையில் காங்கிரஸ் வெற்றி பெற்று மெஜாரட்டி அரசாக இருந்து இருக்க வேண்டுமே ஆனால் 1991லிருந்து 1996 வரை மைனாரிட்டி அரசாக தொடர்ந்த காரணம் என்ன??????????

Friday, April 18, 2014

போர்க்கள நீதிமான்கள் - விடுதலைப் புலிகள்

போர் நடக்கும் காலகட்டத்தில் போரில் ஈடுபடும் இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வரையறுக்கப் பட்டுள்ளது. இது பெரும்பாலும் அனைவரும் சிறிதளவாது மீறுவார்கள் ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் அத்தகைய விதிமுறை மீறல்களை அனுமதித்தது இல்லை. அப்படி தவறுகள் நடந்தால் உடனடியாக அதற்காக தங்களது தவறு செய்த வீரர்களை தண்டிக்க தவறியதும் இல்லை. இப்படி போர்க்களத்தில் நீதிமான்களாக திகழ்ந்தவர்கள் தான் விடுதலைப் புலிகள் இயக்கம். 



அக்டோபர் 10, 1987ம் வருடம் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான போர் தொடங்குவதாக இந்திய இராணுவம் அறிவிக்கிறது. அதன் பிறகு நடந்த சண்டைகளில் கைது செய்யப்பட்ட இந்திய இராணுவ விரர்கள் விடுதலைப் புலிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள், நெருப்பினால் சுடுகிறார்கள் என்று பல கட்டுக் கதைகள் இந்திய ஊடகங்களுக்கு இராணுவத்தினரால் கொடுக்கப்பட்டு அதுவும் மக்களை சென்றடைகிறது.

இத்தகைய தருணத்திலேயே இந்திய இராணுவத்தினை புலிகள் இயக்கத்தில் இருந்து வயர்லஸ் மூலமாக தொடர்பு கொள்கிறார்கள். தொடர்பு கொண்டவர்கள் தங்களிடம் கைதிகளாக இருக்கும் 18 இந்திய வீரர்களை ஒப்படைக்க விரும்புவதாக தெரிவிக்கின்றனர். ஆம் இந்த 18 பேரும் போர் கைதிகள் என்ற போர்க்கால சட்டவிதிமுறைகளின் கீழ் வருபவர்கள் அவர்களை ஒப்படைக்கும் முடிவை தன்னிச்சையாக எடுத்து யார் தங்களுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களிடம் நேரிடையாக ஒப்படைக்க தயார் என்று அறிவிக்கிறது விடுதலைப் புலிகள் இயக்கம். களத்தில் சண்டையிடுவதலாகட்டும் சமாதன காலத்தில் போர் நிறுத்த உடன் படிக்கைகளை பின்பற்றுவதிலாகட்டும் புலிகள் இயக்கத்தினர் மிகவும் கவனமாக எந்த தவறும் தங்கள் தரப்பில் இருந்து ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள். அதே போன்ற நடவடிக்கை தான் (POW)போர்க் கைதிகளை ஒப்படைக்கும் இந்த நடவடிக்கையும்.

அதன் பிறகு கைதிகள் ஒப்படைப்பு இடம் நேரம் நாள் அனைத்தும் குறிக்கபப்டுகிறது, ஆனால் புலிகள் தரப்பில் இருந்து அதைச் செய்யவேண்டும் இதைச் செய்யவேண்டும் என்ற எந்த கோரிக்கையும் இல்லை. எந்த நிபந்தனைகளும் இன்றி இந்திய வீரர்களை ஒப்படைப்பதைப் பற்றி மட்டுமே பேச்சுக்கள் நடந்து இடம் நேரம் அனைத்தும் முடிவு செய்யப்படுகிறது. நவம்பர் 19ம் தேதி காலை 11மணிக்கு உடுவில்லில் 9 இந்திய வீரர்களையும் 1.30க்கு சாகவச்சேரியில் 9பேரையும் ஒப்படைப்பதாக முடிவாகிறது. இந்தியாவில் இருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அழைத்து வரப்பட்டு அனைவரும் தயாராக இருந்தனர். காலை 11மணிக்கு தொடங்கிய காத்திருப்பு பல மணி நேரங்கள் ஆனது இந்திய இராணுவத்தினர் புலிகள் ஏமாற்றுகிறார்கள் அவர்களை என்றுமே நம்பக்கூடாது என்று பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள்.

ஆனால் புலிகள் இயக்கத்தில் இருந்து தகவல் தரப்படுகிறது மாலை 5.30 சாகவச்சேரியில் இந்திய இராணுவ வீரர்களை ஒப்படைப்போம் என்கிறார்கள். அனைவரும் சாகவச்சேரிக்கு சென்று தங்கள் காத்திருப்பை தொடர்கின்றனர், இந்திய இராணுவம் அனைவரையும் சாகவச்சேரி வரை அழைத்து வந்திருந்தது, இந்திய இராணுவத்திற்கு தலைமை தாங்கி ஜே.எஸ். திலான் அவர்கள் இருந்தார். யாழ்ப்பாணத்தின் விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொருப்பாளர் யோகி அழைத்துவருவார் என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்கள், ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான மாத்தையா ஒரு வாகனத்தில் புலிக்கொடியும் வெள்ளைக்கொடியும் பொருத்தியிருக்க சாகவச்சேரி வந்து சேருகிறார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இராணுவத்தினர் மாத்தையா சண்டையில் காயம் அடைந்தார் என்று செய்தியை கசியவிட்டிருந்தது. ஆனால் மிக முக்கிய தளபதி இப்படி இந்திய இராணுவத்தினரின் இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்க நிலையில் வந்து நின்றார். அப்பொழுது மாத்தையாவிற்கு இந்திய தளபதி திலான் அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப் படுகிறார். பத்திரிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திலானுடன் கை குழுக்கிய படி புகைப்படம் எடுத்துக் கொள்ள நின்றார் மாத்தையா அவர்கள். மாத்தையாவுடன் மற்றொரு தளபதி சங்கர் அவர்களும் வந்திருந்தார்.


சில நிமிடங்களில் சுற்றியிருந்த வெற்று மைதானத்தில் திடிரென்று 9 பேர் தோன்றுகின்றனர், அவர்கள் இந்திய படை இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தனர். அவர்கள் சாதரண மக்கள் அணியும் சட்டை கைலியுடன் வந்தனர் அவர்கள் தான் கைது செய்து வைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ வீரர்கள் 18 பேரில் 9 பேர். மற்ற 9 பேரும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவார்கள் என்ற தகவலை மாத்தையா பகிர்ந்து கொள்கிறார். வந்து நின்றவர்கள் யாருக்கும் எந்தவிதமான காயங்களோ எதுவும் இல்லை மிகவும் சிறந்த ஆரோக்கியத்துடனே நடந்து வந்து நின்றார்கள். மாத்தையா அப்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார் புலிகள் இயக்கத்தை கொச்சைப் படுத்தவேண்டும் என்பதற்காக போர் கைதிகளை துன்புறுத்துகிறோம் என்று கதைகள் கட்டி விடப்பட்டுள்ளன ஆனால் நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை நீங்களே வேண்டுமென்றாலும் விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் இந்திய  இராணுவத் தளபதி திலான் அதற்கு அனுமதி மறுக்கிறார். இதனிடையில் சற்று தள்ளி நின்றவர்களிடம் உரத்த குரலில் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் துன்புறுத்தப்பட்டீர்களா என்று உரத்த குரலில் விணாவியபொழுது அவர்களில் ஒருவர் இல்லை என்று பதிலளித்தார்.

அப்பொழுது சங்கர் அவர்கள் இந்த பதினெட்டு பேரில் ஒருவர் அக்டோபர் 11ம் தேதி யாழ்ப்பாண பல்கலையில் தாக்குதல் நடத்திய இந்தியப் படையைச் சேர்ந்த கூரா சிங்க், 13வது சீக்  லைட் இன்ஃபாண்ட்ரி அணியை சேர்ந்தவர். அவர் அக்டோபர் 11முதல் எங்களிடம் போர் கைதியாக இருக்கிறார். மீதம் இருக்கும் 17 பேரும் வட்டுக்கோட்டைக்கு அருகில் கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும் அக்டோபர் 16ம் தேதியிலிருந்து போர் கைதிகளாக இருக்கின்றனர். இவர்களை கைது செய்யும் பொழுது துப்பாக்கி குண்டுகள் அனைத்தும் தீர்ந்து போன நிலையில் கைது செய்தோம் என்பதை சொல்கிறார்ர். இந்திய தளபது ஜே.எஸ். திலான் அவர்களுக்கு ஆயுத சப்ளை செய்யமுடியாத நிலையில் கைது செய்யப்பட்டனர் என்று விளக்கம் அளித்தார். இதன் பிறகு மாத்தையா அவர்களிடம் கேள்விகளை எழுப்பினர் பத்திரிக்கையாளர்கள் அவர்களுக்கு பதில்களை சொன்னார். அப்பொழுது இது வரை அப்பாவி தமிழ் மக்கள் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், நான்கு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக முகாம்களில் இருக்கின்றனர் என்பதைச் சொல்கிறார்.

மேலும் இந்திய இராணுவ வீரர்களை விடுவிக்க நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை, எங்களுக்கு தேவை எங்கள் மக்களின் அமைதியான வாழ்க்கை. இதன் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டு இந்திய இராணுவம் தனது அக்டோபர் 10தேதியில் நிலை கொண்டிருந்த இருந்த இந்திய இராணுவ முகாம் இடங்களுக்கு திரும்பி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமானால் நாங்களும் ஆயுதங்களை ஒப்படைத்து பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறோம் என்பதையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இந்திய இராணுவத்தினரிடமும் தெரிவித்தார். அதன் பின்னர் நாங்கள் போர் கைதிகளை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை எங்கள் மீது அவதூறு பரப்ப படுகிறது என்று சொல்லி இது வரை சொன்ன அனைத்திற்கும் ஆதாரங்கள் என்று புகைபப்டங்களை பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்தார். ஆனால் இந்திய இராணுவத்தினர் அந்த புகைபடத்தை பிடுங்க முயற்சி செய்த பொழுதும் பத்திரிக்கையாளர்கள் தர மறுத்துவிட்டனர். அதன் பிறகு மாத்தையா அங்கிருந்து தனது வாகனத்தில் ஏறி சென்றுவிடுகிறார்.

அடுத்த ஒன்பது இந்திய விரர்கள் 6.30 மணிக்கு விடுதலை செய்யபப்ட்டனர் தளபதி சங்கரின் மேற்பார்வையின் கீழ். அதன் பிறகு பத்திரிக்கையாளர்கள் பலாலி இராணுவ முகாம் சென்றடைந்தனர், அங்கு இந்தியா செல்வதற்காக காத்திருந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் மாத்தையா கொடுத்த புகைப்படங்களை கொடுத்துவிடுமாறு மிரட்டினார் ஆனால் கொடுக்க மறுத்தபொழுது, இது இந்திய தேசிய இராணுவ ரகசியங்கள் அதன் கீழாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று மிரட்டினர். பத்திரிக்கையாளர் தங்களிடமிருந்த புகைப்படங்களை கொடுத்தனர். ஆனல் சிலர் புகைப்படங்களை தக்க வைத்துக் கொண்டனர். சென்னை வந்த பிறமு சென்னை பத்திரிக்கையாளர் தகவல் மையம் மூலமாக மாத்தையா கொடுத்த படங்களை வெளியிட்டால் உங்களை பிளாக் லிஸ்ட் செய்வோம் என்று தகவல் கொடுக்கப்பட்டது.


இப்படி ஒரு நாட்டின் இராணுவம் தனது அதிகாரத்தின் அத்தனை எல்லையை பயன்படுத்தி ஒரு விடுதலை போராட்ட இயக்கத்தை அதுவும் கனரக ஆயுதங்கள் பீரங்கிகள், ஹெலிகாப்டர், விமானம் என்று அனைத்து வழிகளின் மூலமாக இந்த வசதிகள் எதுவும் இல்லாத ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை ஒடுக்க முயன்ற நிலையில், எந்த வித நிபந்தனைகளும் விதிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் தங்களிடம் சிறைபட்டிருந்த இந்திய இராணுவ வீரர்களை நேர்மையான முறையில் அடுத்த கட்ட நகர்வுகள் நன்மையை நோக்கி இருக்க வேண்டும் என்று ஒப்படைத்த இயக்கத்தை தான் இந்தியா தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்தியது. அன்றும் சரி என்றும் சரி புலிகள் இயக்கம் சிங்கள இராணுவத்தை எதிர்த்து சண்டை போட்டாலும் ஈழத்தில் இருக்கும் சிங்கள் கிராமங்களை அழிக்க முயற்சி செய்தது இல்லை.

இந்திய வீரர்களை ஒப்படைத்த ஆறாம் நாள் நவமர் 23ம் தேதியே போர் நிறுத்தத்தை ரத்து செய்து மீண்டும் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கியது என்று தன்னிச்சையாக அறிவித்தது இந்தியா. ஆனால் கடைசி வரையில் போரின் விதிகளை மிகவும் அமைதியாக கடைபிடித்து போரிட்ட இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம், என்றும் மக்கள் வாழும் பகுதியில் குண்டுகள் போட்டதில்லை மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து இந்திய இராணுவத்தினர் போல் அராஜகம் செய்தது இல்லை புலிகள் இயக்கம். ஒரு விடுதலைப் போராட்டத்தை அதுவும் ஒடுக்கபப்ட்ட மக்களின் விடுதலை போராட்டத்தை எதிரியை ஒடுக்கி பெறுவது அல்ல விடுதலை என்பதை உணர்ந்து, எதிரியுடன் சரிநிகர் சமானமாக நின்று தம் இனத்தின் விடுதலைக்காக போரிட்ட இயக்கமே புலிகள் இயக்கம். 

Thursday, April 17, 2014

ராஜிவின் கூலிப்படை


இந்தியாவில் இருந்து அமைதிப்படை என்பதை பாமர ஈழத்து மக்கள் தங்களுக்கு பயிற்சி கொடுத்து உதவிய நாட்டின் ராணுவம், நம் தொப்புள் கொடி உறவுகளின் இராணுவம் என்று வரவேற்றனர். ஆனால் பின்னர் தான் தெரிந்தது இது இராணுவம் அல்ல நாசகாரப்படை என்பது. ஆம் அன்று 1987ல் இந்திய இராணுவம் எப்படியெல்லாம் போரை நடத்தியதோ அதே முறையில் தான் 2009ல் இலங்கையும் சர்வதேச அமைப்புகள் நாடுகளின் கண்களை கட்டிவிட்டு இனப்படுகொலையை செய்தது. 2009ல் இலங்கை செய்தது மட்டும் இனப்படுகொலை அல்ல இந்திய நாசகாரப் படை செய்ததும் இனப்படுகொலை தான். 

முதலில் இந்திய அமைதி ஒப்பந்தம் நடந்தது என்ன என்று தேதி வாரியான விவரங்கள் தொடக்கத்திலிருந்து கடைசியாக புலிகள் இயக்கதுட்டன் போர் அறிவிப்பு வரை. 

ஜுலை 19, 1987
இலங்கைக்கான இந்திய தூதுவர் பிராபகரனை சந்திக்க யாழ்ப்பாணம் வருகிறார். ராஜிவ் அவரை சந்திக்க விரும்பும் விசயத்தை தெரிவிக்கிறார்.


ஜூலை 23, 1987
யாழ்ப்பாணம் சுதுமலைக்கு இரண்டு  இந்திய இராணுவ ஹெலிகாப்டர்கள் வருகின்றன. அதில் பிராபகரன் அவர்கள் சென்னைக்கு செல்கிறார் அங்கு ஆண்டன் பாலசிங்கமும் இணைந்துகொள்ள டில்லிக்கு செல்கிறார். டில்லி அசோகா ஹோட்டலில் அறை எண் 513ல் தங்கவைக்கப் படுகிறார். வெளியில் உலாவுவது முதற்கொண்டு அனைத்தும் தடை செய்யப்படுகிறது இந்திய அதிகாரிகள் மட்டும் சந்தித்து பேசுகின்றனர். ஒரு முறை வைகோ அவர்கள் ஹோட்டலின் ரிசப்சனினிலிருந்து பிராபகரன் அவர்களின் அறைக்கு தொடர்பு கொண்டு பேசமட்டும் அனுமதிக்கப்படுகிறார்.


ஜூலை 29ம் 1987
இந்தியா இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்த்த்திற்கு எம்.ஜி.ஆர் அழைக்கப்படுகிறார் அவர் உடல்நிலையை காரணம் காட்டி ஒப்பந்த நிகழ்விற்கு செல்ல மறுக்கிறார். ஒப்பந்தம் சரியானதாக இருந்தால் தனது அரசியல் ஆதாயத்திற்காக கண்டிப்பாக எம்.ஜி.ஆர் சென்று இருப்பார் ஆனால் நிகழ்வில் கலந்து கொள்ள மறுக்கிறார்.


ஜுலை 30, 1987
இந்திய அமைதிப்படை ஒப்பந்தம் கையெழுத்தான 24மணி நேரத்தில் சென்னையிலிருந்து கப்பல்கள் மூலமாக பாயிண்ட் பெட்ரோ, யாழ்ப்பாணம் வந்தடைகிறார்கள். ஆயுதங்களை ஒப்படைக்க அதாவது இந்திய அமைதிப்படை வந்த 72 மணிநேரங்களில் அதாவது 3 நாட்களுக்குள் அனைத்து இயக்கங்களும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சரத்து. ஆயுத ஒப்படைக்கு அமைதிப்படை அனைத்து இயக்கங்களையும் வலியுறுத்துகிறது. புலிகள் இயக்கம் அவர்கள் தலைவர் பிராபாகரன் வராமல் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்துவிடுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானபொழுதும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை டில்லி அசோகா ஓட்டலில் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் தலைவர் பிராபகரனை நேரிடையாக சந்தித்தவர் அனிதா பிரதாப் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் இந்திய அதிகாரிகள் அதட்டல்கள் மிரட்டல்கள் என்று தான் சென்றன.



ஜூலை 23, 1987லிருந்து ஜூலை 3ம் தேதி வரை
அசோகா ஹோட்டலில் பிராபகரனுடன் பேச்சுவார்த்தைகள் நட்த்தப்பட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்பந்தப்படுத்தப்படுகிறார். புலிகள் இயக்கம் முழுமையாக மறுக்கிறது, இயக்கத்திலிருந்து யோகி, திலீபன், ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்களும் தலைவர் பிராபகரனுடன் இருக்கிறார்கள். ஒப்பந்த்த்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய எம்.ஜி.ஆர் முதற்கொண்டு அனைவரின் மூலமாகவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எம்.ஜி.ஆரிடம் ஒப்பந்தத்தின் சரத்துகள் தமிழருக்கு எதிராகவும், ஏற்றுக் கொள்ள முடியாத்தாகவும் இருப்பதை விளக்குகின்றனர். அவரும் புலிகள் இயக்கத்தினருடன் உடன்படுகிறார். ராஜிவிடம் தெரிவித்த விவரங்கள் தெரியவில்லை இதனிடையில் ராஜிவ் தலைவர் பிராபகரன் இடையே ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் நடைபெறுகிறது. ஆயுத ஒப்படைப்பில் இருந்து அனைத்தின் கீழாகவும், ஆனா இது எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழியான உத்திரவாதம் மட்டுமே.


ஆகஸ்ட் 4 1987
ஈழத்தில் களத்தின் பொறுப்பில் இருந்த மாத்தையா தலைவர் பிராபகரன் வந்தால் தான் ஆயுதங்களை ஒப்படைப்போம், என்று சொன்னதால் ஹர்கிரத்சிங் தகவலை கல்கத்திடம் சொல்கிறார், அதன்பிறகு பிராபகரன் விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படுகிறார். விடுவிக்கப்பட்ட பிறகு ஒரே நாளில் சுதுமலையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. முதன் முதலாக மக்கள் முன்னாள் ஒரு பொது மேடையில் தலைவர் தோன்றுகிறார். அப்பொழுது பேசும் பொழுது நமக்கு மேலான் சக்தி நமது பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறது, அதனால் நாம் இதற்கு கட்டுப்படுகிறோம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்என்று கூறுகிறார்.


ஆகஸ்ட் 5, 1987
புலிகள் இயக்கம் சார்பில் யோகரத்தினம் என்ற யோகி ஆயுத ஒப்படைப்பை தொடங்கி வைக்கிறார்.


1987 ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 10, வரை
ஆயுத ஒப்படைப்பு நடக்கும் பொழுதே மற்ற இயக்கங்களுக்கு இந்திய உளவு அமைப்பான ரா ஆயுதங்களை கொடுக்கிறது, நவீன ரக ஆயுதங்களும் அவர்களுக்கு கையளிக்கப்ப்டுகிறது. இதை புகைப்பட ஆதாரங்களுடன் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் புகார் அளிக்கிறார் தலைவர் பிராபாகரன். அதை ஏற்று தனது மேலதிகாரிகளிடம் தகவலை சொல்கிறார். ஆனால் மேல் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் போகிறது உடனடியாக ஆயுதங்கள் ஒப்படைப்பதை நிறுத்துகிறது புலிகள் இயக்கம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டால் பாதுகாப்பு இல்லாமல் போக நேரிடும் எனப்தால் புலிகள் இயக்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.


செப்டம்பர் 16ம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி திக்சித்துக்கும் புலிகள் இயக்கதிற்கும் இடையில், ஹர்கிரத் சிங் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்க்கு முதல் இரண்டு நாட்கள் 14ம் தேதியும் 15ம் தேதியும் பேச்சுவார்த்தைக்கு வரும் தலைவர் பிராபகரனை கைது செய்து கொலை செய்யும் உத்தரவினை கொடுக்கிறார் திக்சித். ஆனால் அதை மறுத்துவிடுகிறார் ஜெனரல் ஹர்கிரத் சிங் அவருடைய மேலதிகாரிகளுக்கும் தனது மறுப்பை தெரிவிக்கிறார். ஆனால் திக்சித் இது ராஜிவ் காந்தியின் ஆணை என்று கூட மிரட்டுகிறார். பேச்சுவார்த்தைக்கு வரும் ஒருவரை சுட்டுக் கொல்ல முடியாது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறார் ஹர்கிரத் சிங்.  


இதன் பிறகு இந்திய இராணுவத்தினர் சில இடங்களில் அத்துமீறும் பொழுது சிறு கைகலப்புகள் நடக்கின்றன. அக்டோபம் மாதம் 11ம் தேதி புலிகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிப்பதாக சொல்லியது இந்திய இராணுவம் ஆனால் 10ம் தேதி இரவே தலைவர் பிராபகரன் அவர்களை பிடிக்க ஒரு கமொண்டோ படை அனுப்பி வைக்கப்பட்டு அதில் வந்த ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் சண்டையில் இறந்துவிடுகின்றனர். இதன் பிறகே புலிகள் இயக்கத்திற்கும்  இந்திய இராணுவத்திற்கும் இடையிலான போர் தொடங்குகிறது.


ஏன் அமைதிப்படை????
ராஜிவ் காந்தி தனது தாயார் இறந்த பிறகு 1984ல் பதவிக்கு வருகிறார், அப்பொழுது பஞ்சாப் விடுதலைப் போராட்டம் பிந்த்ரன் வாலே தலைமையில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அதை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திராகாந்தி தனது இராணுவ பலத்தை பிரயோகித்து பொற்கோயிலின் மீது தாக்குதல் தொடுக்கிறார். பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டுவிடுகிறார் ஆனால் அவரின் பின் வந்தவர்களும் பொற்கோயிலின் மீதான தாக்குதலும் சீக்கிய இன மக்களிடையே கொழுந்துவிட்டெறிகிறது. இந்த அடக்கு முறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுவிட்டனர். அதுவும் சேர்ந்து தான் இந்திராகாந்தியின் கொலை நடக்கிறது. அதன் பிறகு பதவிக்கு வந்த ராஜிவ் ஒரு கத்துக் குட்டி அவருக்கான அரசியல் பாதை எதுவும் இலலை சீக்கியர்களை மேலும் ஒடுக்குகிறார். போராட்டங்கள் வெடிக்கிறது எனவே அவர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார் அதுவும் தோல்வியில் முடிகிறது.

இப்படி சென்று கொண்டிருக்கும் பொழுதே போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வெளியில் வருகிறது ஒட்டுமொத்தமாக ராஜிவின் அரசியல் வருங்காலம் கேள்விக்குள்ளாகிறது. இந்த சமயத்தில் தான் ஏற்கெனவே இலங்கையில் இருந்த தமிழீழ போராளிக் குழுக்களுக்கு இந்திரா உதவியிருந்தார் அதை வைத்து தனது அரசியல் அங்கீகாரத்தை தேடும் விதமாக எடுத்த முயற்சி தான் இந்தியா இலங்கை ஒப்பந்தம். அதை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் ராஜிவிற்கு இருந்தது மேலும் அமெரிக்காவின் எதிர்ப்பு என்ற கொள்கையின் கீழும் தன்னால் இயன்றதை செய்கிறேன் என்று இறங்கி, ஒரு நாட்டின் ராணுவமாக இருந்த இந்திய ராணுவத்தை ஜெயவர்த்னாவின் அடியாட் கூலிப்படையாக மாற்றினார் ராஜிவ் காந்தி.

எப்படி 2009ல் ராஜபக்சே இந்தியாவின் போரை நாங்கள் நடத்தி வெற்றி பெற்றோம் என்று தனது பாராளுமன்றத்தில் அறிவித்தாரோ, அதே போல் அப்பொழுது எங்களது சண்டையை இந்தியாவை வைத்து போடுகிறோம் என்று இந்திய இராணுவத்தை கூலிப்படையாக சித்தரித்து பேசினார் ஜெயவர்த்தனே. இது மட்டுமல்ல ஒற்றுமைகள் இன்னும் இருக்கிறது. இப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டு ஒரு இனப்படுகொலையை நடத்தியவன் தான் ராஜிவ் காந்தி.

Thursday, April 10, 2014

மாணவர் போராட்டம் - வெணின்சுலா


வெணின்சுலா சாவேஸ் அவர்களின் மறைவிற்கு பின் உலக மக்களின் முன்னால் இருந்த கேள்வி, அமெரிக்காவின் ஆதிக்கத்தை இனி எதிர்த்து நிற்கும் முதுகெலும்பு உள்ள ஒரு தலைவர் யார் என்பதாக இருந்தது. ஆனால் இன்று வெணின்சுலாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, மற்றுமொரு சர்வாதிகார நாடாக மாறிவருகிறது. வெணின்சுலாவில் கடுமையான உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதன் விளைவாகவே மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் இதற்கு பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருகிறது. சென்ற மாதம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் ஒன்று கூடி போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக வைத்திருக்கும் 13 போராளிகளை விடுவிக்க சொல்லி அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் முடிந்து அனைவரும் வீடுகளுக்கு திரும்பிய நிலையில் கடைசியாக இருந்த சில போராட்டக் காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நடந்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

                                      

இதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டங்கள் நடந்து வருகிறது, இத்தகைய நிலையிலேயே அரசுக்கு ஆதரவானவர்களும் காவல்துறையினரும் கைகோர்க்க ஆரம்பித்துள்ளனர். அப்படி ஒரு சமயத்தில் தான் ஒரு போராட்டத்தில் ஏப்ரல் 3ம் தேதி தனியாக கிடைத்த ஒரு மாணவரை நிர்வாணப் படுத்தியிருக்கின்றனர் காவல்துறையினருடன் வந்த அரசு ஆதரவாளர்கள். இதற்கு எதிர்வினையாக தற்பொழுது மாணவர்கள் எடுத்திருக்கும் போராட்டம் தான் மிகப்பெரிய போராட்ட வழிமுறையாக மாறியுள்ளது. ஆம் சமூக இணைய தளங்களின் ஊடாக இன்று நடந்து கொண்டிருக்கும் போராட்டம் வெணின்சுலாவின் பிரச்சனைகளை உலக அரங்கில் நிர்வாணப்படுத்தி இருக்கிறது எனலாம். ஆம் மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து எடுத்து இருக்கும் இந்த போராட்ட வழிமுறை உலக அரங்கில் அனைவராலும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


காவல்துறையும் அரசும் அதன் ஆதரவாளர்களும் இணைந்து போராடுபவர்களின் மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அடக்கு முறையை மிகவும் அமைதியாக ஆனால் அதன் வலியை உலகிற்கு உணர்த்தும் விதமாக மிகவும் நேர்த்தியாக ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த அரசாங்கம் எங்களை நிர்வாணப்படுத்தி பார்க்க விரும்புகிறது என்பதை தங்களின் ஆடைகளை கலைந்து ட்விட்டரில் தங்களது படங்களை பதிந்து வருகின்றனர். இதில் இரண்டு குழந்தைகளின் தாயார் கூட தனது படத்தை பதிந்து நான் இரண்டு மாணவர்களுக்கு தாய் நானும் இவர்களுடன் போராட்டத்தில் இணைகிறேன் என்று தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் முதன் முதலில் வெணின்சூலாவைச் சேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலதிகாரி முன்னெடுக்க அவரின் 16 நண்பர்களிடமும் ஆதரவு திரட்டி அவர்களையும் இணைத்து #ConcluUCV பதிவிட்டுள்ளனர். இது மிக விரைவில் பெரிய அளவு ஆதரவைப் பெற்று மேலும் பல ஹாஸ்டாக்குகள் உபயோகிக்கப்பட்டு பலத்த ஆதரவை பெற்றுள்ளது.



#MejorDesnudosQue (Better Naked Than) கிட்டதட்ட 180,000 முறையும், #DesnudosConLaUCV (Naked with the Central University of Venezuela) கிட்டதட்ட 113,000 முறையும் மேலும்  #MejorDesnudosQueSinLibertad (Better Naked Than Without Liberty) என்ற பதிவின் கீழ் 3,000 முறையும் பதியப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று வெணின்சுலாவின் அதிபருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

இதைப் போன்ற மக்கள் பங்கு பெரும் போராட்ட வழிமுறைகளே வருங்காலத்தில் அரசுகளுக்கு மக்களின் தேவையை அரசுகளுக்கு உணர்த்தும் மிகவும் வலுவான போராட்ட முறைகளாக இருக்க முடியும். 

Wednesday, April 9, 2014

நீதியை கையாள்பவர்கள் மகாத்மாக்கள் இல்லை!!!

உலக அளவில் நீதித் துறையும் காவல்துறையும் தனி மனிதர்களாலேயே கையாளப்படுகிறது, அப்படி நீதியை கையாளும் இத்துறையினர் மகாத்மாக்கள் இல்லை சாதரண மனிதர்களே என்பதற்கு ஓர் அடையாளம்....


இவயோ ஹக்கமோடா...

ஹக்கமோடோ ஒரு தொழில்முறை குத்துச் சண்டை வீரர் தன் பதின்ம வயதில் குத்துச்சண்டையை தேர்ந்தெடுத்து அதில் தனது வாழ்க்கையினை வடிவமைத்துக் கொண்டவர். அனைத்து குத்துச்சண்டை வீரர்களைப் போலவே தனது 30வது வயதில் குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து விலகி தனக்கென அடுத்த வாழ்க்கையை வடிவமைக்க ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். இதன் பிறகே இவருடை வாழ்க்கை சிறைக்கு என்று எழுதப்பட்டதாக மாறிவிடுகிறது. 1966ம் ஆண்டு ஜப்பானில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்படுகிறார்கள், குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை ஒரு வருடமாக திணறுகிறது. அப்பொழுது தான் அந்த கொலையை செய்தவர் ஹக்கமோடோ என்று அடையாளம் காட்டப்பட்டு நீதியின் முன் காவல்துறையினரால் நிறுத்தப்படுகிறார். இதற்கான சாட்சியங்களாக ஏற்கெனவே காவல்துறையின் அடவாடிகளின் கீழ் வாக்குமூலங்கள் வாங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்ட ஜப்பான் காவல்துறை வாங்கிய ஹக்கமோடோவின் வாக்குமூலமும், கொலைசெய்யும் பொழுது ஹக்கமோடோ அணிந்திருந்த ஆடைகளும் அதில் இருந்த ரத்த துளிகளும் என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தூக்கு கயிறும் பரிசாக அளிக்கப்படுகிறது.

1968ம் ஆண்டு தூக்கு தண்டனை கைதியாக மாறுகிறார் ஹக்கமோடோ தனிமைச்சிறையில் அடைகப்படுகிறார். இதில் சாட்சியங்களாக கொடுக்கப்பட்ட சட்டையில் இருக்கும் ரத்தக்கறை கொலை செய்யபப்ட்டவர்களுடையதும் மற்றும் ஹக்கமோடோவின் ரத்தக் கறையும் என்று சொல்லப்படுகிறது. அவர் அணிந்திருந்ததாக சொல்லப்பட்ட கால்சட்டை ஹக்கமோடோவால் அணியவே முடியாத அவரின் அளைவை விட மிகச் சிறிய கால்சட்டை. இந்த இரத்தகறையின் DNA இப்பொழுது ஆராயப்பட்டு அந்த ஆடையில் இருக்கும் இரத்தக்கறை ஹக்கமோடோவுடையது கிடையாது என்பதன் அடிப்படையிலேயே இப்பொழுது நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார் ஹக்கமோடோ. ஆனால் இதற்கு எடுத்துக் கொண்ட காலக்கெடு தான் மிகவும் அதிகமானது. மறுவிசாரணை வேண்டும் என்று ஹக்கமோடோ பதிந்த வழக்கு 27 ஆண்டுகள் கழித்து 2007ல் எடுத்துக் கொள்ளப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாம் முறையாக் 2008ல் மறுவிசாரணை தேவை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழாகத் தான் இப்பொழுது 2014ல் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.



ஆனால் இடையில் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தனது வாழ்க்கையை சிறைச்சாலையில் தொலைத்திருக்கிறார். இவருக்காக தொடர்ந்து போராடியவர் இவரது தமக்கை ஹிடேகோ ஹக்கமோடோ, இன்று அவருக்கு வயது 81 தொடர்ந்து தனது தம்பிக்காக போராடி இன்று தனது தம்பியின் விடுதலையை வென்று எடுத்திருக்கிறார். இந்த சட்டப் போராட்டத்தில் இவருக்கு ஒரு துணையாக பலர் இருந்து இருக்கின்றனர். மிகவும் முக்கியமாக ஜப்பான் வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் ஹக்கமோடோவுக்கு எதிரான சாட்சியங்களின் கீழான தங்கள் சந்தேகங்களை மிகவும் உரத்த குரலில் எழுப்பி இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படவும் ஹக்கமோடோவின் விடுதலைக்கும் பாடுபட்டுள்ளனர். 



தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கில் நியாயம் கிடைக்க தேவையான சட்ட வழிமுறைகள் ஜப்பான் சட்டத்தில் இருந்ததும், அந்த வழிமுறையின் கீழாக சட்டபோராட்டம் முன்னெடுக்கப்பட்டு இன்று நியாயம் கிடைத்துள்ளது. இது ஜப்பான் போன்ற நாடுகள் மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் தேவையான நடைமுறை. காவல்துறை என்பது பொய்யான சாட்சியங்களை உருவாக்குவதிலும் தனக்கு அளிக்கப்பட்ட பணியை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற நோக்கில் குற்றவாளிகளாக இல்லாதவர்களைக் கூட குற்றவாளிகளாக சித்தரிக்கும் அவலம் ஜப்பானில் மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளிலும் நடக்கும் ஓர் சாதரண நிக்ழ்வாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மரண தண்டனை என்பது ஒரு மிகவும் கொடூரமான தண்டனையே. ஜப்பானில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முறையும் மிகவும் கொடூரமானதே, ஆம் மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும் கைதிக்கு அவரை தூக்கிலிடும் ஒரு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே தண்டனை நிறைவேற்றப்பட போவதை அறிவிப்பார்கள். அவருக்கான தண்டனை நிறைவேற்றிய பிறகே கைதியின் குடும்பத்துக்கு அறிவிக்கப்படும். இப்படிப்பட்ட நடைமுறையுள்ள ஒரு நாட்டில் ஹக்கமோடோ என்றோ தனக்கான தண்டனையை சந்தித்து இருக்க நேரிட்டிருக்கலாம் அதன் பிறகு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தவறானது என்று தெரிந்து இருந்தால் இன்று ஹக்கமோடோ உயிருடன் நிரபராதி என்று விடுதலை செயய்பப்ட்டது போல் விடுதலை ஆகியிருக்க முடியாது.


ஒரு தவறான நீதியின் கீழ் 45 ஆண்டுகள் மரணத்தை எதிர்பார்த்து இருந்த கொடூரம், நிரபராதியாக இருந்தாலும் 50 ஆண்டுகளாக சிறையில் அடைக்கபப்ட்டு இழந்த வாழ்க்கை ஆகியவைகளை எந்த நாட்டு சட்டமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இன்று அந்த மரணதண்டனை நிறைவேற்றப் படாமல் இருந்ததால் தான் ஹக்கமோடோ நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார். இப்படி நீதித் துறையும் காவல்துறையும் தனிமனிதர்களின் கட்டுப்பாடுகளின் கீழ் தான் தன் பணியை செய்து கொண்டுளளது அதில் மனிதத்தவறு நேர வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கில் மரண தண்டனை அளித்த நீதிபதிகளுள் ஒருவர் தான் ஹக்கமோடோவை நிரபராதியாகத் தான் பார்த்தேன் ஆனால் மற்ற நீதிபதிகளின் கருத்து எதிராக இருந்ததால் அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது என்று கூறியுள்ளர். தவறு என்பது மனித இயல்பு அது குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல குற்றத்தை விசாரித்து நிலைநாட்டும் சட்டத்தின் பாதுகாவலர்களான காவல்துறையினருக்கும், நீதித் துறையை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். நீதியின் காவலர்கள் யாரும் குற்றம் செய்யாத மகாத்மாக்கள் கிடையாது. அனைவரும் மனிதர்களே, இப்படி தவறு நடக்கும் வாய்ப்புடைய உலகத்தின் எந்த நாடுகளிலும் மரணம் என்பது தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பளிக்காத ஒரு தண்டனை என்பதை உணரவேண்டும். மரணதண்டனை என்பது சட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டியது கண்டிப்பான தேவை.